ஹதீஸ்களைத் தேடிச்சென்ற நபித்தோழர்கள்

Post image for ஹதீஸ்களைத் தேடிச்சென்ற நபித்தோழர்கள்

in இஸ்லாம்

இஸ்லாத்தின் முதல் இரு கலீபாக்களான அபுபக்ரு(ரழி), உமர்(ரழி) இருவரின் காலத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் நபிவழிகளைத் தங்கள் நெஞ்சங்களில் பாதுகாத்து வைத்திருந்தனர். அக்காலத்தில் நபிமொழிகள் பல பாகங்கலிலும் பரவாமலேயே இருந்தன. காரணம், மிக மிக்கியமான நபித்தோழர்களைத் தவிர மற்ற நபித்தோழர்களை மதினாவின் வெளியே செல்வதை உமர்(ரழி) அவர்கள் தடை செய்திருந்தனர்.

கலீபா உதுமான்(ரழி) அவர்களுடைய காலத்தில் நபித்தோழர்கள் உலகின் பல பாகங்களிலும் பரந்து செல்ல அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டது. ஆங்காங்குள்ள மக்கள் நபிவழியைத் தெரிந்துகொள்ள இளைய நபித்தோழர்கள் பால் தேவைப்பட்டனர். காரணம், மூத்த நபித்தோழர்கள் இவ்வுலகைப் பிரிந்து கொண்டே இருந்தார்கள்.

நபிவழிகள் எதிர்கால மக்களுடைய பார்வைக்கு கிடைக்காமல் போய் விடுமோ என அஞ்சிய இளைய நபித்தோழர்கள் பல சிரமங்களை மேற்கொண்டும், பல ஊர்களுக்கும் பிரயாணம் செய்தும் முதிய நபித்தோழர்களிடமிருந்து நபிவழியைத் திரட்டினார்கள்.

நபித்தோழர்களில் ஒருவரான ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) கூறுகிறார்கள்:
நபி அவர்களிடமிருந்து நான் கேட்காத ஹதீஸ் ஷாம் நாட்டில் இருக்கும் அப்துல்லாஹ் இப்னு அனீஸ் அல்அன்ஸாரி என்ற நபித்தோழரிடம் இருப்பதாக அறிந்தேன். எனவே அந்த ஹதீஸைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்பதற்காக சுமார் ஒரு மாதகாலம் பிரயாணம் செய்து ஷாம் நாட்டிற்குச் சென்று அந்த ஹதீஸை அறிந்து வந்தேன் என்று கூறினார்கள். நூல்: புகாரி இமாமிம் ‘அல்அதபுல் மஃப்ரத்’

எகிப்தில் இருந்த உக்பத் இப்னு ஆமிர் அல்ஜுஹனி என்ற நபித்தோழரிடம் நபி அவர்களுடைய ஒரு ஹதீஸ் இருப்பதாக அறிந்த அபூ அய்யுபு அல் அன்ஸாரி என்ற நபித்தோழர் ஹதீஸை அறிய வேண்டுமென்பதற்காக பல மாதங்கள் பிரயாணம் செய்து அந்த ஹதீஸைப் பெற்று வந்ததாகக் கூறினார்கள். நூல்: ஜாமிவு பயானில் இல்ம்

இவ்வாறாக நபிவழி அறிவிப்புகள் நாலா பாகங்களிலும் பரவ ஆரம்பித்தது. காலம் செல்லச் செல்ல எஞ்சி இருந்த நபித்தோழர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. தாபியீன்கள் அவர்களைத் தேடிச் சென்று அவர்களிடத்திலுள்ள ஹதீஸ்களைச் சேகரித்தார்கள் ஒரு நபித்தோழர் ஏதேனும் ஒரு நகருக்குச் சென்றால், அவர்களைச் சூழ அந்நகர வாசிகள் ஒன்று திரண்டு மிக்க கண்ணியத்தோடும், மரியாதையோடும் நபி அவர்களுடைய அன்புத் தோழர் வந்திருக்கிறார் என்ற ஆவலோடு அவர் வாயிலாக நபிவழிகளைக் காது தாழ்த்திக் கேட்டுத் தெரியலானார்கள்.

சில நபித்தோழர்கள் அதிகமான நபிவழிகளை அறிவித்திருக்கிறார்கள். அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது(ரழி) என்பவர் இவர்களில் ஒருவாராவர். காரணம், அவர்களுக்கு நபி அவர்களுடன் ஏற்பட்ட தோழமை பழமையானதாகும். அனஸ் இப்னு மாலிக்(ரழி) அதிகமான ஹதீஸ்ளை அறிவிக்கக் காரணம், இல்லற வாழ்க்கையில் ஏற்படும் எல்லா நிகழ்வுகளையும் அறியும் வாய்ப்புப் பெற்றவர்களாக இருந்தார்கள்.

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரழி), அபூஹுரைரா(ரழி) போன்ற நபித்தோழர்கள் நபிவழியைத் தெரிவதிலும், அதைப் பிறருக்கு அறிவிப்பதிலும் பேரார்வம் கொண்டவர்களாக இருந்தமையால் அதிகமான நபிவழிகளை அறிவிக்கும் வாய்ப்பை பெற்றிருந்தார்கள்.

நபித்தோழர்கள் அறிவிக்கின்ற ஹதீஸ்களை எந்த சந்தேகமும் இல்லாமல் மக்கள் அப்படியே நம்பி ஏற்று வந்தனர். நபித்தோழர்களில் சிலர் வேறு சிலரிடமிருந்து, நபிவழியைப் பெற்று கொள்வார்கள். அவர்கள் எவ்வித பொய்யையும் நுழைப்பதில்லை. முஸ்லிம்கள் மத்தியில் அரசியல் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டபோது தான் நபிவழி அறிவிப்புகளில் பொய்கள் நுழைய ஆரம்பித்தன.

நபிவழியில் இடைச்செருகள்கள்
ஹிஜ்ரி 40ம் ஆண்டுவரை நபிவழி அறிவிப்புகளில் எந்த இடைச்செருகல்களும் இடம் பெறவில்லை. நபித்தோழர்கள் பொய்யான ஹதீஸ்களை அறிவிப்பதை விட்டும் தூய்மையானவர்களாக இருந்தார்கள். ஹதீஸ்களில் எந்தவித கையாடல்களும் 40ம் ஆண்டுவரை இடம் பெறவில்லை. அரசியல் நோக்கங்களுக்காகவோ, அல்லது சமூகத்தில் ஏற்பட்ட பிரிவினைகளுக்கு ஆதாரமாகவோ யாரும் நபிவழியைப் பயன்படுத்தவில்லை. ஹிஜ்ரி 40ம் ஆண்டு அலி(ரழி) அவர்களுக்கும், முஆவிய(ரழி) அவர்களுக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள், போராக மாறி அதன் மூலம் பல உயிர்கள் கொல்லப்பட்டு, இரத்த ஆறு ஓட்டப்பட்டது. ஆரம்பத்தில் அலி(ரழி) அவர்களுக்கு ஆதரவாக இருந்த காரிஜியாக்கள் என்போர் ஒரே நேரத்தில் அலி(ரழி) அவர்களையும், முஆவிய(ரழி) அவர்களையும் எதிர்த்து சதி செய்தார்கள். அலி(ரழி) அவர்கள் கொல்லப்பட்டபோது, அஹலுபைத்தைச் சார்ந்தவர்களில் (நபி குடும்பத்தாரில்) சிலர் தங்களுக்கும் கிலாஃபத்தில் பங்கு உண்டு என வாதாடினார்கள். இதனால் உமையாக்கள் ஆட்சியில் பிளவு ஏற்பட்டது.

இது போன்ற அரசியல் கருத்து வேறுபாடுகள் முஸ்லிம்களை பல பிரிவுகளாக ஆக்குவதற்குக் காரணமாக அமைந்தன. அதோடு மட்டும் நின்று விடாமல், இந்தப் பிரிவினைகள் மார்க்கத்திலும் தன் பலத்தைக்காட்ட ஆரம்பித்தன. இதனால் இஸ்லாத்தில் மார்க்க அடிப்படையிலான பிரிவுகள் தோன்ற ஆரம்பித்தன. ஒவ்வொரு பிரிவினரும் தங்கள் பிரிவின் கொள்கையை ஆதரிப்பதற்காக குர்ஆன், ஹதீஸை பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.

ஆனால் குர்ஆன், ஹதீஸ்கள் இவ்விரண்டும் ஒவ்வொரு பிரிவின் கொள்கைக்கும் வளைந்து கொடுப்பது அல்ல என்பதே உண்மை. குர்ஆன், ஹதீஸ் இவ்விரண்டும் ஏதாவது ஒன்றை ஆதரிக்குமேயல்லாமல், எல்லாப்பிரிவின் கொள்கைகளையும் ஒரு போதும் ஆதரிப்பதில்லை. இதனால் சில பிரிவைச் சார்ந்தவர்கள் குர்ஆனின் வசனங்கள் எந்த நோக்கத்திற்காக இறங்கியதோ அதைவிட்டு மாற்றுப் பொருள்கள் கொடுத்து விளக்கலானார்கள். நபிமொழி வாசங்கங்களுக்கு பொருத்தமற்ற வியாக்கியானங்கள் செய்ய ஆரம்பித்தார்கள். குர்ஆன் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களின் உள்ளத்தில் மாறாது பாதுகாக்கப் பட்டிருந்ததின் காரணத்தால் அதில் இடைச்செருகல்களை நுழைக்க இயலாமல் போனபோது, தங்கள் வாதத்தை நிலைநாட்டுவதற்காக நபி அவர்கள் சொல்லாதவற்றைச் சொன்னதாகப் புனைந்து கூற ஆரம்பித்தார்கள்.

உண்மையான நபிமொழியோடு தங்கள் சுய கருத்துக்களையும் இணைத்துக் கூறினார்கள். இதனால் சரியான நபிவழியோடு பொய்யானவையும் கலக்க ஆரம்பித்தன. இதுபோன்ற சூழ்நிலை ஏற்படும் என்பதை நபி அவர்கள் முன்னெச்சரிக்கை செய்துள்ளார்கள்.

”என் மீது யார் வேண்டுமென்றே பொய் சொல்கின்றானோ அவன் செல்லுமிடம் நரகம் தான்” என்று நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி)

நபி அவர்கள் தன் தோழர்களை எச்சரித்து, என்னைப் பற்றிய அறிவிப்புகளை ஏற்றுக் கொள்வதில் மிகக் கவனமாக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று உணர்த்தி விட்டார்கள். நபிவழிகள் தொகுப்பு வடிவில் எழுதிப் பாதுகாக்கப்படாமலிருந்த காரணத்தினால் நபிவழியில் இடைச்செருகல் செய்வது மிக எளிதாக இருந்தது. பொய்யாகப் புனையப்பட்ட ஹதீஸ்களை சர்வ சாதாரணமாக ஒவ்வொரு பிரிவினரும் நுழைக்க ஆரம்பித்தார்கள். இது ஹிஜ்ரி முதல் இரண்டு நூற்றாண்டுகளில் அதிகம் வளர ஆரம்பித்தது.

தனி மனிதர் சிறப்பு.
தனி மனிதர்களின் சிறப்புப் பற்றித்தான் முதல் முதலாக ஹதீஸ்களைப் புனைய ஆரம்பித்தார்கள். ஒவ்வாரு பிரிவினரும் தங்கள் தலைவரைப் பற்றிப் புகழ்ந்து ஹதீஸ்களை தயாரித்து அவற்றை நபி அவர்கள் கூறியதாகச் சொல்லலானார்கள். இதில் முதலில் ஈடுபட்டவர்கள் ஷியாக்கள். பல பிரிவுடைய இவர்களில் ஒவ்வொரு பிரிவினரும் தங்கள் தலைவரைப் பற்றி புகழ்ந்து பொய்யாக ஹதீஸ்களைச் சொல்வதைக் கண்ட சுன்னத் ஜமாஅத்தைச் சார்ந்தவர்களில் போதிய ஞானமற்றவர்கள் ஷியாக்களை எதிர்ப்பதற்காக இவர்களும் ஸஹாபாக்களில் சிலரைப் புகழ்ந்து ஹதீஸ்களை உருவாக்கினார்கள்.

ஷியாக்கள் பொய்யான ஹதீஸ்களை உருவாக்குவதில் முன்னணியில் இருக்கிறார்கள் என்று அறிந்ததினால்தான் இமாம் அபூ ஹனீபா (ரஹ்), அப்துல்லாஹ் பின் முபாரக் (ரஹ்), மாலிக் (ரஹ்) ஷுரைக் பின் அப்துல்லாஹ் (ரஹ்), யஸீது பின் ஹாரூன் (ரஹ்) போன்ற இமாம்கள் ஷியாக்கள் அறிவிக்கும் ஹதீஸ்களை ஏற்றுக் கொள்வதில்லை.

இடைச்செருகல்களின் ஆரம்பம்
இஸ்லாத்தின் மூன்றாவது கலீபாவான உதுமான் பின் அஃப்பான் (ரழி) அவர்களுடைய ஆட்சி காலத்தின் பிற்பகுதியில் முஸ்லிம்களுக்கிடையில் பெரும் பிளவுகளும், கருத்து வேறுபாடுகளும் ஏற்பட்டன. உதுமான் (ரழி) அவர்களைப் பழிவாங்க வேண்டுமெனத் திட்டம் போட்டு, அதனால் சமூகத்தில் ஒரு சாரார் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தினர், இறுதியாக உதுமான் (ரழி) அவர்களின் உயிரையே சூறையாடினார்கள். இந்நிகழ்ச்சி முஸ்லிம்களுக்கிடையில் பெரும் பரபரப்பையும், பாதிப்பையும் ஏற்படுத்தியது என்றாலும் இதற்காக நபிவழியை ஆதாரமாகப் பயன்படுத்த எவரும் முன் வரவில்லை. ஒரு சில பொய்யான ஹதீஸ்கள் மட்டுமே பரப்பப்பட்டிருந்தன.

‘அப்துர்ரஹ்மான் பின் அத்தீஸ்’ என்பவர்தான் முதன் முதலாக பொய்யான அறிவிப்பைப் புகுத்தியவராவார். இவர் உதுமான் (ரழி) அவர்களின் கொலையிலும் பங்கெடுத்துள்ளார். இவர் ஒருமுறை மிம்பரில் ஏறி ”அறிந்து கொள்ளுங்கள் உபைதா என்பவர் தன் வாகனத்தை விட்டும் வழி தவறியதை விட உதுமான் மிகப்பெரிய வழி தவறியாவார். என நபி அவர்கள் சொல்ல நான் கேட்டேன்” எனக் கூறினார். இதைச் செவியுற்ற உதுமான் (ரழி) அவர்கள் ”அல்லாஹவின் மீது ஆணையாக இப்னு அத்தீஸ் பொய் சொல்லி விட்டார்” என்று கூறினார்கள். நூல்:தாரிகுத்தபரி

இதன் மூலம் இப்னு அத்தீஸ் என்பவர்தான் உதுமான் (ரழி) அவர்கள் காலத்தில் முதன் முதலாக பொய்யான ஹதீஸைப் புனைந்து கூறியவர் என வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால் ஹிஜ்ரி 40ம் ஆண்டிற்குப்பின் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்குப் பின்னரே ஹதீஸில் இடச்செருகல்கள் அதிகமாகத் தொடங்கியது. உமய்யாக்கள் ஆட்சியில் உள்ளவர்கள் தங்கள் ஆட்சிக்குச் சாதகமாக ஹதீஸ்களை உருவாக்கிக் கூறினார்கள்.

‘இராக்’ நாடும், இடைச்செருகல்களும்

பொய்யான ஹதீஸ்களை உற்பத்தி செய்வதில் இராக் நாடு பிரசித்திப் பெற்றிருந்தது. குறிப்பாக அந்நாட்டின் முக்கிய பட்டணமான கூஃபா இந்த விஷயத்தில் முன்னணியில் இருந்தது. கூஃபாவில் உமையாக்களின் ஆட்சியை எதிர்த்து வந்த ஷியாக்கள், உமையாக்களை இழிவுபடுத்தி பல ஹதீஸ்களை உற்பத்தி செய்தனர்.

‘முக்தாருக் தகபி’ என்பவர் அன்ஸாரி நபித்தோழர் ஒருவரிடத்தில் ”நான்தான் நபி அவர்களுக்குப் பின்னால் கலீபாவாக வரவேண்டியவன்” என்பது பற்றி ஒரு ஹதீஸை உருவாக்கிச் சொல்லுமாறும் அதற்காக பத்தாயிரம் திர்ஹம்களும், ஒரு வீடும், ஒரு வாகனமும், ஒரு வேலைக்காரனும் தருவதாகக் கூறினார். ஆனால் அன்ஸாரி நபித்தோழர் அதை மறுத்து விட்டார்கள். நூல்: மீசானுல் இஃதிலால்

இராக் பொய்யான ஹதீஸ்களை அறிவிப்பதில் முதல் இடம் வகுத்த காரணத்தினால் இராக் அறிஞர்களுக்கு ஹதீஸ் கலை வல்லுனர்களிடத்தில் செல்வாக்குக் குறைந்தது. எனவே இராக்கை சார்ந்தவர்கள் அறிவிக்கின்ற ஹதீஸ்களை தீர ஆராய்ந்த பின்னரே அதை ஏற்றுக்கொண்டார்கள்.

அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறுகிறார்கள். ‘இராக்வாசிகளே’ ஷாம் நாட்டுக்காரர்கள் உங்களை விடச் சிறந்தவர்களாக இருக்கிறார்கள். காரணம் அங்கு அதிகமான நபித்தோழர்கள் சென்றார்கள், ஆனால் நாங்கள் அறிந்த விஷயங்களையே அறிவித்தார்கள். ஆனால் உங்களிடத்தில் மிகக் குறைந்த நபித்தோழர்களே வந்தார்கள், ஆனால் நாங்கள் அறிந்த விஷயங்களையும் அறியாத பல விஷயங்களையும் எங்களுக்கு அறிவித்தீர்கள். நாங்கள் அறியாத விஷயங்கள் உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது? நூல்: தாரீகுல்கபீர்

இராக்கிலிருந்து ஒரு கூட்டம் மக்காவிலிருந்த அப்துல்லாஹ பின் அம்ர் பின் ஆஸ் (ரழி) அவர்களிடம் வந்து ”எங்களுக்கு ஹதீஸ்களைச் சொல்லுங்கள்” என்று சொன்னர்கள். அதற்கு ”இராக்கில் ஒரு கூட்டம் இருக்கிறது, அவர்கள் பொய்யான ஹதீஸ்களைச் சொல்லிவிட்டு கேலி செய்வார்கள்” என்று கூறினார்கள். நூல்: தபகாத் இப்னு ஸஅத்

மார்க்கத் தீர்ப்புகளுக்கு இராக்கிலிருந்து கொடுக்கப்படும் தீர்ப்புகளை அறிஞர்களும், நாட்டுத் தலைவர்களும் ஏற்றுக் கொள்வதில்லை. ஷாம் நாட்டிலும், மதீனாவிலும் உள்ள மார்க்க அறிஞர்களின் தீர்ப்பையே ஏற்றுக் கொள்வார்கள். இராக்கிலிருந்து உருவாகும் ஹதீஸ்களை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று மற்ற நாட்டு அறிஞர்களை இமாம் மாலிக் (ரஹ்) எச்சரித்துள்ளார்கள்.

அப்துர்ரஹ்மான் பின் மஹதி என்பவர் ஒருமுறை இமாம் மாலிக் அவர்களிடம் ”மதீனாவில் நாற்பது நாட்களாகக் கேட்ட ஹதீஸ்களை ஒரே நாளில் இராக்கிலிருந்து கேட்கிறேன், இது குறித்து என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு ”உங்களிடம் உள்ளது போன்ற நாணய உற்பத்தி இயந்திரம் எங்களிடம் எங்கே இருக்கிறது? இரவிலே அச்சடிக்கிறீர்கள், பகலிலே செலவு செய்கிறீர்கள்” என இமாம் மாலிக் அவர்கள் கூறி இராக்கில் நடக்கும் பொய்யான ஹதீஸ் எவ்வளவு வேகமாகப் பரவியது என்பதற்கு ஒரு உதாரணத்தை முன் வைத்தார்கள்.

பொய்யான ஹதீஸ்கள் இராக் நாட்டில் அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டிருந்தாலும், அவைகளை தரம் பிரித்தறிகின்ற பல மார்க்க மேதைகள் அங்கு இருந்தனர். சுமார் முன்னுறுக்கும் மேற்பட்ட நபித்தோழர்கள் இராக்கின் முக்கிய நகரமான கூஃபாவிற்குச் சென்றுள்ளார்கள். அவர்களில் எழுபது பேர் பத்ருப் போரில் கலந்து கொண்டவர்களாவர். இவர்களில் அப்துல்லாஹ பின் மஸ்வூத் (ரழி) அவர்களும் ஒருவராவார்.

கதாதா, யஹயா பின் அபீகதீர், அபூ இஸ்ஹாக், அஃமஷ், அத்தவ்ரிய்யு, இப்னு உயைனா போன்ற பெரும் மேதைகள் கூஃபாவிலும், பஸராவிலும் வாழ்ந்திருக்கிறார்கள். எனவே இடைச்செருகல் செய்யப்பட்ட ஹதீஸ்களை மிக எளிதாகக் கண்டுபிடித்து பொது மக்களுக்கு உணர்த்துவதில் இவர்கள் பெரும் சேவை செய்துள்ளனர். இவர்களில் பலர் சரியான ஹதீஸ்களை அறிவிக்கும் நேர்மையாளர்களாக இருந்திருக்கிறார்கள். இவர்களில் ஒரு சிலரின் வாயிலாகக் கிடைக்கப் பெற்ற ஹதீஸ்களை இமாம் புகாரி (ரஹ்) இமாம் முஸ்லிம் (ரஹ்) தங்கள் ஹதீஸ் தொகுப்புகளில் இடம் பெறச் செய்துள்ளனர். இவர்களில் அப்துர்ரஸாக் அஸ்ஸன் ஆனி, ஜரீர் இப்னு அப்துல்ஹமீத், இஸ்மாயில் இப்னு அஃப்பான், அய்யுப்னுல் ஜஅது போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்களாவர்.

கமாலுத்தீன் மதனி

Leave a Comment

Previous post:

Next post: