மனிதனின் குடும்ப வாழ்வு நரக வாழ்வாக நீடிக்க வகையில்லாது ஒரு முடிவுக்கு கொண்டு வர அல்லாஹ் மனிதனுக்கு கொடுத்துள்ள சாதனம் ‘தலாக்’ விவாக விடுதலை. அந்த தலாக் இன்று சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டு விதவிதமான பிரதிவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அல்லாஹ் அளித்துள்ள இந்த அனுமதி ‘தலாக்’ – இதன் எதார்த்தமான நிலையை ஆராய்வோம்.
அல்லாஹ்வின் சட்டங்களை ஆராய்வதற்கு சிறந்த உரைகல் அல்லாஹ்வால் இறக்கப்பட்ட இறுதி வேதம் அல்குர்ஆன். அடுத்து அந்த அல்குர்ஆனுக்கு விளக்கவுரையாக அமைந்துள்ள அல்லாஹ்வின் இறுதித் தூதரின் நடமுறைகள். இதற்குமேல் முடிவு செய்யும் அதிகாரம் யாருக்குமில்லை. மக்கள் குறிப்பாக முஸ்லிம்கள் இன்று இந்த இரண்டு அடிப்படைகளை விட்டு மனித அபிப்பிராயங்களை முன்னோர்களின் பெயரால், இமாம்களின் பெயரால் மார்க்கத்தில் நுழைத்து அதை மதமாக்கியதாகும். அதே வரிசையில் தான் இந்த ‘தலாக்’ பிரச்னையிலும் முஸ்லிம் சமுதாயத்தின் பெருந்தொகையினர் மனித சட்டத்தை இறை சட்டமாக ஆக்கியுள்ளனர்.
குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் முரணாக மத்ஹபுகளையும், தரீக்காக்களையும் கடைபிடிக்கும் தங்களை அஹ்ல சுன்னத் வல்ஜமாஅத் என்று சொல்லிக் கொள்ளும் பெரும்பான்மை முஸ்லிம்களும், அவர்களை வழிநடத்திச் செல்லும் ஜமாஅத்துல் உலமா சபையினரும் அவர்கள் நடத்தும் வார, மாத இதழ்களிலும் தலாக் சட்டம் இறவனின் தீர்ப்பாகும். இதில் மாற்றம் செய்ய யாருக்கும் உரிமை இல்லை என்று ஏகோபித்து எழுதுகிறார்கள். ஆனால் “நபி(ஸல்) அவர்கள் காலத்தில் ஒரே சமயத்தில் சொல்லப்பட்ட 3 தலாக் ஒரே தலாக்காகவே கணக்கிடப்பட்டது” என்ற உண்மையான சட்டத்தை மாற்றி ‘ஒரே சமயத்தில் சொல்லப்பட்ட 3’தலாக்’ மூன்று தடவையாக கணக்கிடப்பட்டு விவாக முறிவு ஏற்படும்’ என்ற சட்டத்தை அல்லாஹ்வின் சட்டம் என்று சொல்கிறார்கள்.
அல்லாஹ்வின் சட்டத்தை மாற்ற யாருக்கும் அதிகாரமில்லை என்று சொல்லிக்கொண்டு மனித சட்டங்களை மார்க்கமாக்குவதில்தான் குறியாய் இருக்கிறார்கள். ஏனிந்த முரன்பாடோ தெரியவில்லை. தலாக் விஷயத்தில் மட்டுமல்ல, அவர்களது பெரும்பாலான நிலைகளில், மத்ஹபு, தரீக்கா, ரமழான் இரவுத்தொழுகை இப்படி எண்ணற்ற பிரச்னைகளில் நபி(ஸல்) அவர்கள் நடைமுறைப்படுத்தியதற்கு முரணாக நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்குப்பின் மனிதர்களால் நடமுறைப்படுத்தப்பட்ட மனித நடைமுறைகளையே இவர்களும் பக்தியுடம் கடைபிடிக்கின்றனர்.
இந்த தலாக் விஷயத்திலும் நபி(ஸல்) நடமுறைக்கு முரணாக ‘ஒரே சமயம் சொல்லும் மூன்று தலாக் செல்லும் என்ற தவறான சட்டத்தை பெரும்பான்மையினராக அவர்கள் சொல்லுவதால் அதுதான் சரி, குறைந்த எண்ணிக்கையினரான குர்ஆன், ஹதீஸ் வழியில் நடப்பவர்கள் சொல்லும் ‘ஒரே சமயத்தில் சொல்லப்படும் மூன்று தலாக் ஒரே தவணையாகவே கணக்கிடப்பட வேண்டும்” என்ற நபியின் நடமுறை ஏற்கத்தக்கதல்ல என்று வாதிடுகிறார்கள். பெரும்பான்மை கொண்டு சட்டம் வகுக்கிறார்கள். ஆனால் அல்லாஹ்.
பூமியில் உள்ளவர்களில் பெரும் பாலோரை நீர் பின்பற்றுவீரானால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுத்து விடுவார்கள். (ஆதாரமற்ற) வெறும் யூகங்களைத்தான் அவர்கள் பின்பற்றுகிறார்கள் இன்னும் அவர்கள் (பொய்யான) கற்பனையிலேயே மூழ்கிக்கிடக்கிறார்கள். (6:116)
நாங்கள் பெரும்பான்மையினர் நாங்கள் கூறுவதுதான் சரி என்று மார்தட்டும் சுன்னத் வல் ஜமாஅத்தினரின் நிலையை உற்று நோக்கும்போது இந்த 6:116 வசனம் அவர்களை அப்படியே படம் பிடித்து காட்டுகிறது. எனவே மத்ஹபு, தரீக்கா வழி செல்வோர் விஷயத்தில் உண்மை முஸ்லிம்கள் மிக எச்சரிக்கையாக இருக்கவேண்டும். காரணம் முன்னோர்களைப் கண்மூடிப் பின்பற்றும் மாற்று மதத்தினருக்கும், அதே போல் முன்னோர்களைப் கண்மூடிப் பின்பற்றி இஸ்லாமிய மார்க்கத்தையும் மதமாக்கியுள்ள முக்கல்லிதுகளுக்கும் பெருத்த வேறுபாடு இருப்பதாக அறிய முடியவில்லை. ‘ஒரே சமயத்தில் 3 தலாக் சொன்னால் அது செல்லுபடியாகும் என்ற தவறான சட்டத்தையே இந்த பெரும்பான்மை அஹ்லசுன்னத் வல் ஜமாஅத்தினர் கடைபிடிக்கின்றனர். இதை விரிவாக ஆராய்வோம்.
‘தலாக்’ அல்லாஹ்வின் கட்டளை என்ன?
தலாக் கூறப்பட்ட பெண்கள், தங்களுக்கு மூன்று மாதவிடாய்கள் ஆகும்வரை பொறுத்து இருக்க வேண்டும்டி அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்புவார்களாயின், தம் கர்ப்பக் கோளறைகளில், அல்லாஹ் படைத்திருப்பதை மறைத்தல் கூடாது. ஆனால் பெண்களின் கணவர்கள் (அவர்களைத் திரும்ப அழைத்துக் கொள்வதன் மூலம்) இணக்கத்தை நாடினால், (அத்தவணைக்குள்) அவர்களை (மனைவியராக)த் திருப்பிக்கொள்ள அவர்களுக்கு அதிக உரிமையுண்டு. கணவர்களுக்குப் பெண்களிடம் இருக்கும் உரிமைகள் போன்று, முறைப்படி அவர்கள்மீது பெண்களுக்கும் உரிமையுண்டு ஆயினும் ஆண்களுக்கு அவர்கள்மீது ஒருபடி உயர்வுண்டு. மேலும் அல்லாஹ் வல்லமையும் ஞானமும் மிக்கோனாக இருக்கின்றான். (2:228)
(இத்தகைய) தலாக் இரண்டு முறைகள் தாம் பின் (தவணைக்குள்)முறைப்படி கணவன், மனைவியாகச் சேர்ந்து வாழலாம் அல்லது நேர்மையான முறையில் பிரிந்து போக விட்டுவிடலாம் அவ்விருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நிறுத்த முடியாது என்று அஞ்சும் போது தவிர. நீங்கள் மனைவியருக்கு கொடுத்தவற்றிலிருந்து யாதொன்றையும் திருப்பி எடுத்துக் கொள்ளுதல் கூடாது – இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் வரம்புகளை அவர்களால் நிலை நிறுத்த முடியாது என்று அஞ்சினால், அவள் (கணவனுக்கு) ஏதேனும் ஈடாகக் கொடுத்து(ப் பிரிந்து) விடுவதில் குற்றமில்லை. இவை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள வரையறைகளாகும். ஆகையால் அவற்றை மீறாதீர்கள். எவர் அல்லாஹ்வின் வரையறைகளை மீறுகிறார்களோ, அவர்கள் அக்கிரமக்காரர்கள் ஆவார்கள். (2:229)
மீட்ட முடியாதபடி (அதாவது இரண்டு தடவை தலாக் சொன்ன பின்னர் மூன்றாம்) தலாக் சொல்லிவிட்டால் கணவன் அப்பெண்ணை மறுமணம் செய்து கொள்ள முடியாது. ஆனால் அவள் வேறு ஒருவனை மணந்து அவனும் அவளை தலாக் சொன்னால் அதன் பின் (முதற்) கணவன் மனைவி சேர்ந்து வாழ நாடினால் – அதன் மூலம் அல்லாஹ்வுடைய வரம்புகளை நிலைநிறுத்த முடியும் என்று எண்ணினால், அவர்கள் இருவரும் (மறுமணம் செய்து கொண்டு மணவாழ்வில்) மீள்வது குற்றமல்ல. இவை அல்லாஹ்வின் வரையறைகளாகும்டி இவற்றை அல்லாஹ் புரிந்து கொள்ளக்கூடிய மக்களுக்குத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறான். (2:230)
(மீளக்கூடிய) தலாக் கூறித் தவணை முடிவதற்குள் முறைப்படி அவர்களை(உங்களுடன்) நிறுத்திக் கொள்ளுங்கள் அல்லது (இத்தாவின்) தவணை முடிந்ததும் முறைப்படி அவர்களை விடுவித்து விடுங்கள். ஆனால் அவர்களை உங்களுடன் வைத்துக் கொண்டு அவர்களைத் துன்புறுத்தாதீர்கள். அவர்களிடம் வரம்பு மீறி நடவாதீர்கள். இவ்வாறு ஒருவர் நடந்து கொள்வாரானால், அவர் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொள்கிறார். எனவே, அல்லாஹ்வின் வசனங்களைக் கேலிக் கூத்தாக ஆக்கிவிடாதீர்கள். அவன் உங்களுக்கு அளித்த அருள் கொடைகளையும், உங்கள் மீது இறக்கிய வேதத்தையும், ஞானத்தையும் சிந்தித்துப் பாருங்கள். இவற்றைக்கொண்டு அவன் உங்களுக்கு நற்போதனை செய்கிறான். அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் நன்கறிபவனாக இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். (2:231)
இன்னும், பெண்களை நீங்கள் தலாக் செய்து, அவர்களும் தங்களுடைய இத்தா தவணையைப் பூர்த்தி செய்து விட்டால், அவர்கள் தாங்கள் விரும்பி ஏற்கும் கணவர்களை முறைப்படித் திருமணம் செய்து கொள்வதைத் தடுக்காதீர்கள். உங்களில் யார் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளார்களோ, அவர்களுக்கு இதைக் கொண்டு உபதேசிக்கப்படுகிறது. இ(தன்படி நடப்ப)து உங்களுக்கு நற்பண்பும், தூய்மையும் ஆகும் (இதன் நலன்களை) அல்லாஹ் அறிவான் நீங்கள் அறிய மாட்டீர்கள். (2:232)
முஸ்லிம் சமுதாயத்திற்கு ஏற்பட்டுள்ள பெரிய கைசேதம் என்னவென்றால் தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு தெள்ளத்தெளிவான குர்ஆனையும், ஹதீஸையும் ஏறிட்டுப் பார்க்க அவர்கள் விரும்புவதில்லை; முற்படுவதுமில்லை. மற்ற மதத்தினரைப் போல் இவர்களும் தங்களின் முன்னோர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பார்க்கத்தான் முற்படுகிறார்கள். இந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டு குர்ஆனையும், ஹதீஸையும் நோட்டமிட ஆரம்பித்தால் அவை அவர்களுடம் பேச ஆரம்பித்துவிடும். அல்லாஹ்வையும் அவனது ரசூலையும் விட தெளிவான விளக்கத்தை மற்றவர்கள் தரமுடியும் என்று நம்புகிறவர்கள் பெரும் வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்.
இப்போது நாம் எடுத்து எழுதியுள்ள இறைவாக்குகளை கவனமாகப் பாருங்கள். இந்த வசனங்களில் தலாக்கினுடைய எண்ணிக்கை சொல்லப்படவில்லை. ஒரு தலாக். இரண்டு தலாக், மூன்று தலாக் என்று சொல்லப்பட்டிருக்கின்றதா அல்லது முதல் தவணை அல்லது இரண்டாவ்து தவணை, மூன்றாவது தவணை என்று முறை, வேளை, சந்தர்ப்பம் என்று அவகாசம் கொடுப்பதையே உள்ளங்கை நெல்லிக்கனியாக எடுத்துக் காட்டுகிறது.
مَرَّتَانِ மர்தானி என்ற அரபி பதம் வெவ்வேறு அவகாசங்கள் இரண்டைக் குறிக்குமேயல்லாமல், ஒரே நேரத்தில் கூறப்படும் இரண்டு எண்ணிக்கையைக் குறிப்பிடாது. மூன்று வேளை சாப்பாடு, மூன்று வேளை மருந்து என்று சொல்லும்போது ஒரே வேளயில் மூன்று வேளை சாப்பாட்டையும், அல்லது மருந்தையும் சாப்பிடுவது என்று பொருள்படும் என்று கூறுபவர்களை அறிவாளிகள் என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.
எனவே கணவன் மனைவி என்ற உறவைப் பிரிக்க அல்லாஹ் வெவ்வேறு சந்தர்ப்பத்தை அளித்துள்ளானேயல்லாமல் ஒரே நேரத்தில் மூன்று தலாக்கைச் சொல்லி உறவைப் துண்டிக்கச் சொல்லவில்லை. காரணம் நினைத்த மாத்திரத்தில் உடனடியாக மனைவியை விரட்டிவிட மார்க்கம் அனுமதிக்கவில்லை. என்பதற்கு உங்களிடமிருந்து அவள் உறுதியான வாக்குறுதி பெற்று ஒருவர் மற்றவருடன் கலந்து விட்டீர்களே! (4:21) கணவர்களுக்குப் பெண்களிடம் இருக்கும் உhpமைகள் போன்று, முறைப்படி அவர்கள்மீது பெண்களுக்கும் உரிமையுண்டுடி (2:228) உங்களிடமிருந்து அவள் உறுதியான வாக்குறுதி பெற்று ஒருவர் மற்றவருடன் கலந்து விட்டீர்களே! (4:21) ஈமான் கொண்டவர்களே! மூஃமினான பெண்களை நீங்கள் மணந்து, பிறகு நீங்கள் அவர்களை முன்னமேயே ‘தலாக்” செய்து விட்டீர்களானால், அவர்கள் விஷயத்தில் நீங்கள் கணக்கிடக் கூடிய (இத்தத்)தவணை ஒன்றும் உங்களுக்கு இல்லை (33:49) என்ற வசனத்தையும் ஒப்பு நோக்கும் எவரும் மணந்து மனைவியுடன் வாழ்ந்தபின் அந்த மனைவி பிடிக்கவில்லை என்பதால் தவணைகளை புறக்கணித்து ஒரே சமயத்தில் மூன்று தலாக் கூறி அவளை மனைவி என்ற உறவிலிருந்து பிரித்து விட முடியாது. அது செல்லாது என்பதை எளிதில் விளங்கிக் கொள்ள முடியும்.
எனவே ஒரே சந்தர்ப்பத்தில் மூன்று தடவை அல்ல, முன்னூறு ‘தலாக்’ சொன்னாலும் அது ஒரே சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தியதாகவே பொருள்படும். இன்னும் இரண்டு சந்தர்ப்பங்கள் இருக்கவே இருக்கின்றன. ஆனால் அதற்கு மாற்றமாக ஒரே சந்தர்ப்பத்தில் ஒரே ‘தலாக்’ சொல்லி 3 தவனைகளுக்குறிய காலக்கெடு முடிந்து விட்டால் கணவன் மனைவி என்ற உறவு முறிந்துவிடத்தான் செய்கிறது. காரனம் தவனைகள் முடிந்து விட்டன. அதே சமயம் அந்தப் பெண் வேறொரு கணவனை அடைந்துகொள்ள உரிமை இருப்பதுடன், இதே கணவனை விரும்பினால் மீண்டும் மணமுடித்துக்கொள்ளவும் முடியும். மூன்று தவணைகளில் மூன்று தலாக் சொல்லி பிரிந்து விட்டால் மட்டுமே, வேறு கணவனுக்கு மனைவியாகி வாழ்ந்து பின் அவரிடமிருந்து முறைப்படி தவணைகளில் ‘தலாக்’ பெற்ற பின்பே முன்னைய கணவன் அவளை மீண்டும் மனைவியாகக் கொள்ள முடியும்.
தங்கள் மனைவியருடன் கூடுவதில்லையென்று சத்தியம் செய்து கொண்டு (விலகி) இருப்பவர்களுக்கு நான்கு மாதத் தவணையுள்ளது. எனவே, (அதற்குள்) அவர்கள் மீண்டு(ம் சேர்ந்துக்) கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனாகவும், மிக்க கருணையுடையோனுமாகவும் இருக்கின்றான். (2:226)
இந்த இறைவாக்கு சொல்வதென்ன? மனைவியுடன் சேர்வதில்லை என்று சத்தியம் செய்தவரே உடனடியாக மனைவியை விரட்டிவிட முடியாது. நான்கு மாதம் பொறுக்கவேண்டும். அதற்குள் சேர்ந்து கொள்ளவும் அல்லாஹ் வாய்ப்புத் தருகிறான்.
இந்த நிலையில் தவணைகளைப் புறக்கணித்து ஒரே சமயத்தில் மூன்று ‘தலாக்’ சொன்னவுடன் மண முறிவு ஏற்பட்டு விடும் என்று சட்டம் வகுப்பவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை மதிப்பவர்களா? சொல்லுங்கள். நபி(ஸல்) அவர்கள் காலத்தில் மூன்று தலாக் ஒரு தலாக்காகவே கருதப்பட்டு வந்தது என்ற ஹதீஸை பார்ப்போம்.
நபி(ஸல்) காலத்திலும், அபூபக்ரு(ரழி) காலத்திலும், உமர் (ரழி) அவர்களின் ஆரம்ப இரண்டு ஆண்டுகளிலும் ஒரே சமயத்தில் மூன்று தலாக் என்பது ஒரு ‘தலாக்’காகவே (தவணை) கருதப்பட்டு வந்தது; நிதானத்தை மேற்கொள்ள வேண்டிய விஷயத்தில் மக்கள் அவசரம் காட்டுவதைக்கண்ட உமர்(ரழி) அவ்வாறு நாம் அதைச் சட்டமாக்குவோம் எனக்கூறி சட்டமாக்கினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரழி), நூல்:முஸ்லிம்)
இந்த ஹதீஸ் தெள்ளத்தெளிவாக அல்லாஹ்வின் சட்டத்தை அதன் அடிப்படியில் நபி(ஸல்) நடைமுறையை உமர்(ரழி) மாற்றினார்கள் என்பதை தெளிவாக கூறுகிறது. இந்த நிலையில் தலாக் சட்டம் இறைவனின் தீர்ப்பு; இதில் மாற்றம் செய்ய யாருக்கும் உரிமையில்லை என்று சொல்கிறார்களே அதன் பொருள் என்ன? உமர்(ரழி) அவர்கள் மாற்றியமைத்தது தான் அல்லாஹ்வின் சட்டமா? நபி(ஸல்) அவர்களுக்கே இல்லாத, இறைவனின் சட்டத்தை மாற்றும் அதிகாரம் உமர்(ரழி) அவர்களுக்கு இருந்ததாக இவர்கள் நம்புகிறார்களா? ஏனிந்த முரண்பாடு?
மஹ்மூது இப்னு லபீத்(ரழி) அறிவிக்கும் ஹதீஸ் ஒருவர் தனது மனைவிக்கு ஒரே தவணையில் மூன்று ‘தலாக்’ கூறி விடுகிறார். இதனைக் கேள்வியுற்ற நபி(ஸல்) சினமுற்றவர்களாக எழுந்து விட்டனர். பின்னர், நான் உங்களுக்கு மத்தியில் இருக்கும்போதே அவர் அல்லாஹ்வின் வேதத்தோடு விளையாடுகிறாரா? என்றார்கள் என்று காணப்படுகிறது. இந்த ஹதீஸை ஆதாரமாகக் காட்டி, இங்கு மூன்று தலாக்கும் ஒரே நேரத்தில் சொல்லப்பட்டு மணமுறிவு ஏற்பட்டதால் தானே நபி(ஸல்) அவர்கள் ஆத்திரப்பட்டார்கள். இருக்கையை விட்டு எழுந்து குர்ஆனோடு விளையாடுகிறாரா என்று சுய விளக்கம் தருகிறார்கள். அவர்கள் கொடுக்கும் சுய விளக்கம் சரிதானா?
அல்லாஹ் மூன்று தவணை என்று வெவ்வேறு அவகாசத்தைக் குறிப்பிட்டிருக்க, மூன்று தலாக் ஒரே நேரத்தில் சொன்னவர் தவணை என்று இருப்பதை எண்ணிக்கையை கணக்கில் கொண்டது குர்ஆனோடு விளையாடுவதாக ஆகாதா? அதனால் நபி(ஸல்) அவர்கள் கோபப்பட்டிருக்க முடியாதா? தலாக் சம்பந்தப்பட்ட குர்ஆன் வசனத்தில் (பார்க்க 2:226-2:237) 2:231ல் “அல்லாஹ்வின் வசனங்களை கேலிகூத்தாக ஆக்காதீர்கள்” என எச்சரிக்கிறான். இந்த வசனத்தையும் இதர வசனங்களையும் ஆய்ந்து பார்க்கும்போது அல்லாஹ் மூன்று தவனை என்று சொல்லியிருப்பதை அந்த நபர் மூன்று எண்ணிக்கையாக ஆக்கி செயல்பட்டுள்ளதை அறிந்தே நபி(ஸல்) அவர்கள் வேகப்பட்டார்கள் என்று ஏன் கூற முடியாது? அவர்களின் சுய விளக்கத்தை விட இந்த விளக்கமே குர்ஆன் வசங்களுக்கு நெருக்கமாக இருக்கிறது.
“ஒரே சமயத்தில் சொல்லப்படும் மூன்று தலாக் ஒரே தவணையாகவே கொள்ளப்படும்” என்ற இறை சட்டத்தை மாற்றி ஒரே சமயத்தில் சொல்லப்படும் மூன்று தலாக் மூன்று தவணைகளாகக் கொள்ளப்பட்டு மணமுறிவு ஏற்பட்டுவிடும். கணவன் மனைவி பிரிந்தேயாக வேண்டும் என்ற மனிதச் சட்டத்தை இறைச் சட்டமாகப் பிரகடனம் செய்யும் அவர்கள் சேர்ந்து வாழ வேண்டிய பல குடும்பங்களை தங்கள் மனித சட்டத்தால் பிரித்து அக்குடும்பங்களை சிதறடித்த மாபெரும் குற்றத்திற்கு ஆளாகி மறுமையில் அல்லாஹ்வின் பெரும் சாபத்திற்கும், தண்டணைக்கும் ஆழாக வேண்டி வரும் என அவர்களை எச்சரிப்பது ஒவ்வொரு உண்மை முஸ்லிமின் கடமையாகும். எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு உண்மையிலேயே அடிபணிந்து நடக்க துஆச் செய்கிறோம்.
அபூஅப்துல்லாஹ்
{ 1 comment… read it below or add one }
Assalamu Alaikum am aysha.yenaku nikkah agi 4 yrs akirathu yenathu kanavar yenai vithu sentru 3yrs agirathu. anal yentha kasu panamum taravillai.talakum tara marukirar.yenaku 2 vayathio oru (male) ann kulanthai ullathu. atarkum yentha kadamaium seiyavillai ipothu nan yena seivathu.
yenaku vidai kurungal please.tamil il kuraum- Assalamu Alaikum