உலகின் மையம் மக்காவா? குர்ஆன் – ஹதீஸ் – அறிவியல் வழி ஆய்வு!

Post image for உலகின் மையம் மக்காவா?  குர்ஆன் – ஹதீஸ் – அறிவியல் வழி ஆய்வு!

in சந்திர நாட்காட்டி

எஸ்.ஹலரத் அலி, திருச்சி-7 (+91 98 653 61068)
மக்காவில் உள்ள காபத்துல்லாஹ்வை நோக்கி ஒவ்வொரு தொழுகையிலும், உலகிலுள்ள அனைத்து திசை வாழ் முஸ்லிம்களும் கிப்லாவாக முன்னோக்க வேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளை. கிப்லாவை மையப்படுத்தியே முஸ்லிம்கள் தொழ வேண்டும்.

Qibla Direction - QTV ONLINE
ஆகவே நீர் இப்போது
(மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தை திருப்பிக் கொள்ளும்.( முஸ்லிம்களே!) இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின்போது) உங்கள் முகங்களை அந்த (கிப்லாவின்) பக்கமே திருப்பிக் கொள்ளுங்கள்.   அல் குர்ஆன். 2:144

மேற்கண்ட வசனப்படி மக்காவானது உலக முஸ்லிம்களின் ஆன்மீக மையமாக உள்ளது என்பதில் எவருக்கும் சந்தேகமில்லை. மக்கா முஸ்லிம்களுக்கு  மையமாக இருப்பது… முஸ்லிம்கள் அதனை முன்னோக்கி கிப்லாவாக்கித் தொழ வேண்டும் என்ற கட்டளைக்காகவே தவிர வேறில்லை. உலகிலுள்ள மற்ற மார்க்கத்தைப் பின்பற்றும் மக்களுக்கும் மக்காவை மையமாக்குவதில் எந்த பொருளும் இல்லை..

(இறை வணக்கத்திற்கென)  மனிதர்களுக்காக வைக்கப்பட்ட முதல் வீடு நிச்சயமாக பக்காவில் (மக்காவில்) உள்ளதுதான்; அது பாக்கியம் மிக்கதாகவும் உலக மக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது.  அல் குர்ஆன்.3:96.

உலகமக்கள் அனைவரும் ஓர் இறைவனை வணைங்கி வழி படுவதற்காக உலகில் அமைக்கப்பட்ட முதல் இறை இல்லம் காபத்துல்லாஹ்தான். ஆனாலும் இந்த சத்தியத்தை மறுக்கும் இணை வைப்பாளர்கள் இதனை மையமாக நோக்குவதில்லை. இதைத்தான் அல்லாஹ் சொல்கிறான்.,

அவர்கள் உம் கிப்லாவை பின்பற்றுபவர் அல்ல.! அல் குர்ஆன்.2:145

ஆயினும், புவியியல் ரீதியாக உலகின் மையமாக மக்காவே இருக்கிறது என்ற புதிய சிந்தனைகள் சிலரால் மார்க்கமாக இன்று முன் வைக்கப்படுகிறது. இவைகள் கடந்த காலங்களில் நபி (ஸல்) அவர்களால் முன்னறிவிக்கப்பட்ட சிறந்த நான்கு சமுதாய பெருமக்களான சஹாபாக்கள், தாபியீன்கள், தபஉ தாபியீன்கள், இமாம்கள் போன்றவர்களால் சொல்லப்படாத புதிய தவறான கருத்துக்களாகும்.

அக்கருத்துக்களில் ஒன்றுதான் உலகின் நடு மையமாக மக்கா உள்ளது. இந்த மக்காவை மையப்படுத்தி போடப்படும் காலெண்டரே அசல் இஸ்லாமியக் காலெண்டர். தற்போது புழக்கத்தில் உள்ள ஹிஜ்ரி கமிட்டி காலெண்டர் லண்டனை மையப்படுத்திய பிழையான ஆங்கிலக் காலெண்டராகும் என்பது சிலரின் கருத்தாக உள்ளது. தங்கள் கருத்துக்கு வலு சேர்க்க சில வசனங்களையும், ஹதீஸையும் ஆதாரமாக காட்டுகிறார்கள். இந்த ஆதாரங்கள் சரிதானா என்பதை ஆய்வு செய்வதே இக்கட்டுரையின் நோக்கம்!

மக்கா மையக் கொள்கைக்கு ஆதாரமாக அவர்கள் கொடுக்கும் இரு குர்ஆன் வசனங்கள்…..

நாம் காபத்துல்லாஹ் எனும் இந்த ஆலயத்தை மக்களுக்கு ஒரு மையமாகவும்,அமைதி அளிக்கும் இடமாகவும் ஆக்கினோம்.- குர்ஆன். 2:125

திண்ணமாக, மனிதர்களுக்காக கட்டப்பட்ட முதல் வணக்கஸ்தலம் மக்காவிலுள்ளதாகும். அருள் நலம் வழங்கப்பட்ட இடமாகவும், அகிலத்தார் அனைவருக்கும் வழி காட்டும் மையமாகவும் அது உள்ளது. – குர்ஆன்.-3:96

( மெளலானா மெளதூதி  (ரஹ்)அவர்களின் குர்ஆன் மொழி பெயர்ப்பு.- IFT )

ஜமாத்துல் இஸ்லாமி இயக்க குர்ஆன் மொழி பெயர்ப்பில்தான் மையம் என்ற சொல்லில் மொழி பெயர்த்துள்ளார்கள். காரணம் இவர்களின் இஸ்லாமிய கிலாபத் உருவாக்கும் கொள்கைக்கு கிப்லா மாற்றமே அடிப்படை என்று நம்புவதால் புவியியல் ரீதியாக மக்காவை மையப்படுத்தி கிப்லா ஒற்றுமையை காட்டி கிலாபத் அடையலாம் என்கிறார்கள்.

இவ்வியக்க நிறுவனர் மெளதூதியின் நம்பிக்கையின்படி, இந்தக் கிப்லா மூலம் கிலாபத்தை மீண்டும் கட்டமைக்கலாம். இவர்களின் சார்பு இயக்கமான “இக்வானுல் முஸ்லிமீன்” இக்கொள்கையின்படியே எகிப்தில் செயல்பட்டது. இவ்வியக்க ஆதரவாளரான ஷேக் யூசுப் கர்ளாவீ என்பவரும் கத்தார் தோஹாவில் “உலகின் மையம் மக்கா” என்ற தலைப்பில் 2008 ல் ஒரு மாநாடு நடத்தினார்.

இவர்கள் மொழி பெயர்த்த குர்ஆனிலேயே “உலகிற்கான அல்லது உலகத்தின்” மையம் என்ற வாக்கியம் இல்லை. “மக்களுக்கு மையமாகவும், மக்களுக்கு வழி காட்டும் மையம்” என்றுதான் உள்ளது. புவியியல் ரீதியில் மக்கா உலகின் மையமாக இருப்பது போன்று ஒரு கற்பனையில் குர் ஆனுக்கு விளக்கம் சொல்வது கூடாது. தீர்மானிக்கப்பட்ட அறிவியலுக்கு குர்ஆன் ஒருபோதும் முரண்படாது.

தன் சொந்தக் கருத்தின்படி குர்ஆனுக்கு விளக்கம் தருபவன் தன் இடத்தை நரகத்தில் கண்டு கொள்வான். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  நூல்:  திர்மிதீ.

நபி (ஸல்) அவர்களால்,” இந்த உம்மத்தின் ஈமானை ஒரு தட்டிலும், அபூ பக்கர் (ரலி) அவர்களின் ஈமானை மறு தட்டிலும் வைத்துப் நிறுத்துப் பார்த்தால் அபூ பக்கர் (ரலி) அவர்களின் தட்டே கனக்கும்.” என்று சிறப்பிக்கப்பட்ட அபூ பக்கர் (ரலி) அவர்கள் கூறினார்கள். “ நான் அல்லாஹ்வின் வேதத்தில் சுய புத்தியோடு பேசிவிட்டால் எந்த வானம் எனக்கு நிழல் தரும்?. எந்த பூமி எனக்கு இடம் தரும்?” என்று குர்ஆன் விசயத்தில் சுய விளக்கம் கொடுக்க அஞ்சினார்கள்.

  • இப்னு ஜரீர் தபரீயின் ஜாமிவுல் பயான் தாவீல் ஆயல் குர்ஆன்.

உலகின் மத்தியில் மக்கா இருக்கிறது என்ற புவியியல் கொள்கையை மேற்சொன்ன இரண்டு வசனங்களும் ( 2:125, 3:96 ) பேசவில்லை என்பதனை ஏராளமான எல்லா மொழி தர்ஜுமாக்களும் தெளிவாக்குகின்றன. உலக முஸ்லிம்கள் மக்காவை முன்னோக்குவதையே அவ்வசனம் குறிக்கிறதே தவிர, உலகின் புவியியல் மையம் மக்கா என்பதற்கு அதில் எந்தச் சான்றும் இல்லை.

அடுத்து மக்கா மையக் கொள்கைக்கு சான்றாக, ஒரு ஹதீஸை காட்டுகிறார்கள்.

கிப்லா கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையில் உள்ளது. என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), திர்மிதீ.

இந்த ஹதீஸின் படி மக்காவானது கிழக்கிற்கும், மேற்கிற்கும் நடுவில் இருப்பது மக்கா என்று சொல்கிறார்கள். ஆகவே, மக்கா உலகின் மையம் ஆனால் இந்த ஹதீஸை எப்படி விளங்கிப் பின்பற்ற வேண்டும் என்பதை உமர் (ரலி) அவர்கள் விளக்குகிறார்கள்

மதினாவில் வாழ்வோர் அவர்களின் வலது கையை மேற்குப் பக்கமாகவும் இடது கையை கிழக்குப் பக்கமாகவும் வைத்துக் கொண்டு கிப்லாவை நோக்கினால்….காபத்துல்லாஹ், கிழக்கிற்கும் மேற்கிற்க்கும் இடையில் இருக்கிறது. என்று கூறினார்கள்.  நூல்: மு அத்தா.

மக்காவில் இருந்தவரை காபத்துல்லாஹ் கண் முன்னே காணக்கூடியதாக இருந்ததால் கிப்லா அறிதலில் பிரச்சினை இருக்கவில்லை. ஹிஜ்ரத் செய்து மதீனா வந்தபின் கிப்லா திசை நோக்குதலில் சரியான புரிதல் ஏற்படுத்தவே நபி (ஸல்) அவர்கள் கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையில் கிப்லா இருக்கிறது என்று கூறினார்களே தவிர இன்று கொடுக்கும் “உலகின் மையம் மக்கா” என்ற தவறான கொள்கையை சொல்வதற்கு அல்ல.

மக்கா மையம் குறித்து மேலும் சில வசனங்களை சில இமாம்கள் குறிப்பிடுகிறார்கள். அதையும் பார்ப்போம்.

மேலும், இவ்வாறே முஸ்லிம்களான உங்களை நாம் உம்மத்தன் வஸத்தன் சம நிலையுடைய சமுதாயமாக ஆக்கினோம்.அல் குர்ஆன்.2:143

என்ற வசனத்திற்கு விரிவுரை கொடுத்த இமாம் குர்திபீ (ரஹ்) அவர்கள் காபத்துல்லாஹ்வை அல்லாஹ் பூமியின்  மையமாக்கியுள்ளதால் காபா கிப்லாவை முன்னோக்கும் முஸ்லிம்களையும் மத்திய சமுதாய மக்கள் என்று கூறுகிறான்.” என்று தமது “ஜாமிவுல் அஹ்காம் அல்  குர்ஆன்” தப்சீரில் குறிப்பிட்டாலும் இவ்விளக்கத்தை குர்ஆன் தப்ஸீர் கலையில் சிறந்து விளங்கும் ஆறுக்கு மேற்பட்ட இமாம்கள் இதற்கு மாறான விளக்கத்தை அளித்திருப்பது கவனிக்கத்தக்கது.

இமாம் இப்னு ஜரீர் தனது தப்ஸீர் தபரீயில் 3/141.ல் கொடுக்கும் விளக்கமானது “ நம் தூதர் (ஸல்) அவர்களை அனுப்பி வைத்து உங்களுக்கு நேர்வழி காட்டினோம். இப்ராஹீம் (அலை) அவர்களின் வழி முறைப்படி கிப்லாவை தொழுகை இடமாக கொடுத்தோம். மற்ற மார்க்கத்தவர்களை விட உங்களை மேன்மைப்படுத்தினோம். உங்கள் அனைவரையும் ஒன்று பட்ட சமுதாயமாக்கி,  மற்ற மார்க்கங்களை விட இந்த சமுதாயத்தை நடு நிலை சமுதாயமாக்கினோம்.” என்பதே சரியான பொருள் என்கிறார்.

தப்ஸீர் அல் குர்ஆன் அல் அஸீம். 1/454.   மபாவாத்தீ அல் கைப் -2/87, அத்-தூர் அல் மஸூன் – 2/134

மேலும் இமாம் குர்திபீ (ரஹ்) அவர்களே கூறுகிறார்கள். “ ஒருவன் தன் மனோ இச்சைப்படி குர்ஆனுக்கு விளக்கம் தந்தால் அது சரியாகவே இருந்தபோதிலும் அவன் குற்றம் செய்தவனாவான். இமாம் குர்திபீயின் ஜாமிவுல் அஹ்காம்

அடுத்து ஒரு வசனம் ஆதாரமாக வைக்கப்படுகிறது …….

மக்காவை தாய் நகரமாக்கியுள்ளோம் அல் குர்ஆன். 6:92 

உலகத்தில் முதன் முதலில் மக்காவைப் படைத்த பின்பே அது பின்பு படிப்படியாக விரிந்து பரந்து உலகமாயிற்று. எனவே உலகின் மையம் மக்காவாக உள்ளது.

-”அல்-ராகிப் அல் அஸ்பஹாணி அவர்களின் முப்ரத் அல் குர்ஆன்.”1/470,471..

அடுத்து ஒரு விளக்கமாக, “மக்கா என்ற சொல்லானது “மக்காகா” என்ற வேர்ச் சொல்லிலிருந்து வந்தது. மக்காகா என்ற சொல்லானது எலும்பின் நடுவில் உள்ள மஜ்ஜையை குறிக்கும் சொல்லாகும். எலும்புக்கு நடுவில் மஜ்ஜை இருப்பது போல உலகின் நடுவில் மக்கா உள்ளது.” என்ற விளக்கத்தை அல்-கலீல் அவர்கள் தமது நூலான “ மாபாத்தி வல் கைப்” 4/310  ல் விளக்கம் கொடுக்கிறார்.

இப்படி சில மார்க்க அறிஞர்களின் சொந்த விளக்கமாகவே மக்கா மையக்கொள்கை சொல்லப்படுகிறதே தவிர, குர்ஆனிலோ அல்லது ஸஹீகான ஹதீஸ்களிலோ தெளிவான ஆதாரம் இல்லை. இது சம்பந்தமான சில ஹதீஸ்களை இனி  பார்க்கலாம்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிப்பதாக ஒரு ஹதீஸ்…” அல்லாஹ் இப்பூமியை படைத்தபோது முதலில் காபத்துல்லாஹ்வை படைத்தான். பிறகு உலகின் முதல் மலையான ‘அபூ குபைஸை” படைத்தான். பிறகு அந்த மலையிலிருந்து பூமி விரிந்து பரவியது.   அல் மன்னாவியின் பயத் அல் கதீர் 3/108.

இந்த ஹதீஸானது அல் பைஹகி 1/1/111, இப்னு அஸாகீர், அல் ஹாக்கீம் போன்ற ஹதீஸ் நூல்களில் பதிவு செய்திருந்தாலும்…..இதில் வரும் அறிவிப்பாளர்களில் சுலைமான் இப்னு அப்துர்ரஹ்மான் என்பவர் யாரென அறியப்படாதவர் மூலமே அறிவிக்கப்படுகிறது. ஆகவே இது பலவீனமான ஹதீஸாகும்.இது போல் உள்ள ஹதீஸ்கள் எல்லாம் பலவீனமானவை என்று ஷேக் அல்பானீ அவர்கள் கூறுகிறார்கள்

 – ஷேக் அல்பானீ யின் ஸில்சிலா அல் லயீப்.5881.

ஹிஜ்ரி கமிட்டி காலெண்டருக்கு எதிராக வைக்கப்படும் “ மக்கா மையக்கொள்கை” என்னும் மாயக் கொள்கைக்கு அல் குர்ஆனிலும் அல் ஹதீஸ்களிலும் தெளிவான ஆதாரங்களில்லை என்பதைப் பார்த்தோம். இனி புவியியல் அறிவியல்படியாவது மக்காவின் நில அமைப்பு உலகின் மத்திய பாகத்தில் இருப்பதாக கூறும் கருத்துக்கு  (GEOGRAPHICAL  / PHYSICAL FACTS)  ஏதேனும் ஆதாரங்கள் உண்டா என்பதையும் ஆய்வு செய்து பார்ப்போம்.

உலகம் தட்டையானது என்று நம்பப்பட்டிருந்த அந்தக் காலத்தில் வேண்டுமானால் அதற்கு மையம் ஒன்று உள்ளது என்று சொன்னால் அகொள்கையை  கண்டிப்பாக மக்கள் ஏற்றுக்கொண்டுதான் இருப்பார்கள். ஏனெனில் தட்டையான ஒரு பரப்பிற்கு எளிதாக ஒரு மையப்புள்ளி  வைத்துவிட முடியும். ஆனால் அல்லாஹ் உலகத்தை தட்டை வடிவில் படைக்காமல் கோள வடிவத்தில் (Spherical) உருண்டையாக படைத்து விட்டான்.

ஒரு கோள வடிவ உருண்டையான மேற்பரப்பின் மையம் என்பது மேற்பரப்பிலுள்ள  ஒவ்வொரு புள்ளியுமே மையமாக முடியும் என்பதே அறிவியல் விதி. அதே சமயம் பூமியின் மையப்பகுதி என்பது மேற்பரப்பில் இல்லை. பூமிக்கு அடியில் 6371 கிமீ தூரத்தில் அதன் மையப்புள்ளி இருக்கிறது. உலகத்தின் மத்தியில் மக்கா இருக்கிறதென்று அல்லாஹ்வோ அல்லது அவனது தூதர் (ஸல்) அவர்களோ சொல்லியிருந்தால் இது இறைவனின் சொல் அல்ல என்று அன்றே மறுத்திருப்பார்கள்.

இயற்கை விதிக்கு முரணான ஒன்றை இஸ்லாம் ஒரு போதும் நம்பச்  சொல்வதில்லை. அல்லாஹ்வின் மார்க்கம் அறிவியல் வழியில் செல்லும் அழகிய மார்க்கம். இப்பூமியில் உள்ள ஒரு இடத்தை உலகின் மத்தியில் இருக்கிறதென்று பெருமை பேசுவது மனிதர்களின் சிற்றறிவின் வெளிப்பாடு. இவர்கள் எல்லா மார்க்கங்களிலும் இருக்கத்தான் செய்கிறார்கள். இஸ்லாத்திலும் இருக்கிறார்கள். தங்களின் கற்பனை கொள்கையை நிலைநாட்ட மக்காவை நடுவுக்கு கொண்டு வந்து நம்ப வைக்க முயற்சிக்கிறார்கள். இவர்களைப்பற்றித்தான் அல்லாஹ் கூறுகிறான்..

மனிதர்களில் சிலர் இருக்கின்றார்கள். அவர்கள் அறிவில்லாமல் வீணான பேச்சுக்களை விலைக்கு வாங்கி (அவற்றால் மக்களை) அல்லாஹ்வின் பாதையிலிருந்து வழி கெடுக்கவும், அல்லாஹ்வின் பாதையை பரிகாசமாக்கிக் கொள்ளவும் முயல்கிறார்கள். இத்தகையோருக்கு இழிவு தரும் வேதனை உண்டு. அல் குர்ஆன். 31:6

மனிதர்கள் நாம் அனைவரும் ஒரு வரம்புக்கு உட்பட்டவர்கள். நம்மைப் படைத்த இறைவன் வரம்புக்கு அப்பாற்பட்டவன். மக்காவை பூமிக்கு நடுவில் கொண்டு வந்து வைத்துத்தான் அதன் சிறப்பை நிலை நாட்ட வேண்டும் என்ற தேவை அவனுக்கு இல்லை. கிப்லா மாற்றம் என்பது அவன் நாட்டம். அவனுக்கு அடி பணிபவர்கள் யார்? அவனுக்கு மாறு செய்பவர்கள் யார்? என்பதை அறிவதற்கே கிப்லா மாற்றம்.

உலகின் புவியியல் மையமாக வைத்துத்தான் மக்காவுக்கு கண்ணியம் கொடுக்க வேண்டும் என்பது அல்லாஹ்வுடைய விருப்பமாக இருந்தால் முதல் கிப்லாவாக பைத்துல் முகத்தஸ் ஆலயத்தை ஆக்கியிருக்க வேண்டியதில்லை. அல்லாஹ்தான் ஆரம்பத்தில் பைத்துல் முகத்திசை முன் நோக்கி தொழ கட்டளையிட்டான். நபி (ஸல்) அவர்கள் சுய விருப்பத்தின்படி பைத்துல் முகத்திசை நோக்கித் தொழுகவில்லை.

(இதற்கு முன்பு) எந்தத் திசையை நோக்கி ( பைத்துல் முகத்தஸ்) நீர் தொழுது வந்தீரோ, அதனை நாம் கிப்லாவாக ஆக்கி வைத்திருந்ததெல்லாம் யார் இறைத் தூதரைப் பின்பற்றுகிறார்கள்; யார் மாறிச் சென்று விடுகிறார்கள்  என்பதை நாம் அறிவதற்காகத்தான்.     அல் குர்ஆன்.2:143                                                                                                                                                                                    

ஆகவே கிப்லா மாற்றம் என்பது, மக்கா உலகின் மையம் என்ற ஒரு பொய்யான புவியியல் கொள்கையை நிலை நிறுத்தி கிலாபத்தை கொண்டு வருவதற்காக சொல்லப்பட்டது அல்ல. மாறாக, அல்லாஹ்வின்  கட்டளைக்கு அடி பணிபவர்கள் யார்? மாருசெய்பவர்கள் யார்? என்று அறிவதற்காகவேயன்றி வேறில்லை.

அடுத்து மக்கா மையக் கொள்கைக்கு உதாரணமாக பூமியின் மின்காந்த ஓட்டமானது உலகின் மத்தியில் உள்ள  மக்கா வழியாக செல்வதாகக் கூறுகிறார்கள். பூமியின் ஈர்ப்பு விசைக்கு காரணமான புவிமின் காந்த மண்டலம் வட தென் துருவங்களுக்கிடையில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த புவி மின் காந்தமண்டலம் நிலையில்லாத ஒன்று அவ்வப்போது மாறிக்கொண்டே வரும். இதை வைத்தெல்லாம் மக்காவை மைய்யமாக்க இயலாது.

அறிவியலின் அடுத்த கட்டமாக, பொன் விகிதப்படி (GOLDEN RATIO) என்ற கருத்தியல் கொள்கை கணக்கீட்டின்படி உலகின் மையமாக மக்கா இருப்பதாக கூறுகிறார்கள். இந்த கோல்டன் ரேசியோ விகிதப்படி உலகின் பல நகரங்களை மையமாக்க முடியும். ஆகவே ‘மக்கா உலகின் புவியியல் மையம்’ என்பது அறிவியலுக்கு அப்பாற்பட்ட ஒன்று. ஆன்மீக அறிவியல்  (SPRITUAL INTELECTUAL)  என்ற சிந்தனைக்கே பொருத்தமானது. ஓர் இறைவனை வணங்குவதற்கு உலகில் கட்டப்பட்ட முதல் ஆலயம் உலக முஸ்லிம்களை ஒன்றுபடுத்தி கிப்லாவாக முன்னோக்க வைக்கும் ஒற்றுமை மையமே மக்கா! 

திண்ணமாக, மனிதர்களுக்காகக் கட்டப்பட்ட முதல் வணக்கஸ்தலம் மக்காவிலுள்ளதாகும்.அருள் நலம் வழங்கப்பட்ட இடமாகவும்;அகிலத்தார் அனைவருக்கும் வழி காட்டும் மையமாகவும் அது உள்ளது.  அல் குர் ஆன்.3:96

{ 1 comment… read it below or add one }

Anonymous March 17, 2021 at 9:33 am

இன்ஷா அல்லாஹ். இந்த பதிவை படிக்கும் போது என் உள்ளம் மகிழ்சி அடைகிறது. உலகின் மையப்பகுதி மக்கா இல்லை என்பதில் ஆய்வு அருமை. அற்கான கூலி அல்லாஹ்விடம் உண்டு. மேலும் உங்களுக்கு கல்வி ஞானத்தை அதிகரித்து தந்தருள்வானாக.

Reply

Leave a Comment

Previous post:

Next post: