ஷிர்க் ஒழிப்பு மாநாடு என்னும் ஷிர்க் அழைப்பு மாநாடு

Post image for ஷிர்க் ஒழிப்பு மாநாடு என்னும் ஷிர்க் அழைப்பு மாநாடு

in பிரிவும் பிளவும்

எஸ்.ஹலரத் அலி-திருச்சி-7

அல்லாஹ்வின் பேரருளால் கடந்த மாதம் திருச்சி மாநகரில் ஒரு மாபெரும் மாநாடு நடந்து முடிந்த செய்தி தாங்கள் யாவரும் அறிந்ததே! இந்த புரட்சி மாநாட்டிற்காக கடந்த எட்டு மாதங்களாக, தமிழகம் எங்கு பார்த்தாலும் ஒரே விளம்பர களேபரம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. பட்டி தொட்டி எங்கும் பம்பரமாக சுழன்றனர் வசூல் ராஜாக்கள். இந்த ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்குப் பிறகு தமிழ்நாட்டில் தர்ஹா, தரீக்காக்கள் தடம் புரண்டு உருண்டு விழும் பூகம்பம் நடந்து விடும் என்ற நம்பிக்கை விதைக்கப்பட்டது.

இந்த மாநாட்டிற்க்குப்பிறகு தட்டு, தாயத்து, தகடு, முரீது போன்ற முஸீபத்துக்கள் எல்லாம் முடிவுக்கு வந்துவிடும் என்று நம்பும் அளவிற்கு கிராபிக் காட்சி மனநிலையை மக்களுக்கு உண்டாக்கியிருந்தனர். ஆனால் இந்த அரைநாள் கூத்தில் ஆடிய ஆட்டங்களைப் பார்த்து எல்லாம் புஸ்வாணமாகி  விட்டதை, போய்வந்த  ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள்  புரிந்து கொண்டனர். புலம்பிக் கலைந்தனர்.

 ஜாதுகர் மாயாஜால மேஜிக் காட்சியும், அல்லக்கை ஆலிம்களின் ஆலுமா….டோலுமா பட்டிமன்றமுமே பார்வையாளர்களுக்கு பரிசாக கிடைத்தது. ஆரம்பத்தில் பீஜை யுடன் பயணப்பட்ட ஆலிம்கள், அவரது ஷிர்க்கான கொள்கையை அறிந்து, அல்லாஹ்வுக்குப்  பயந்து அவரைவிட்டு வெளியேறி விட்டனர். தற்போது இருக்கும் ஆலிம்கள், பீர் கையில் புரட்டப்படும் முரீது சடலங்களைப் போன்று ,பீஜை கை சடலமாக புரட்டப்படுகின்றனர்.

 பீர் கையில் புரட்டப்படும் தவ்ஹீத் முரீத் சடலங்கள்.
ஈமானை சாமானுக்காக விற்ற சடலங்கள் நடத்திய பட்டி மன்றத்துக்கு தலைமை வகித்தது  ஒரு மையத் ஆலிம். கொடுத்த காசிற்கு மாறி, மாறி சத்தமாக கூவினார்கள். கொடுத்த தலைப்பு, “இணைவைப்பு பெரிதும் நுழைந்ததற்குக் காரணம் ஆலிம்களின் சுயநலமா? மக்களின் அலட்சியமா?” இணைவைப்பு நுழைந்ததற்கு இருவருமே காரணம்தான். இந்த இருவரில் பெரிதும் காரணாமாக இருந்தது, இருவரில் யாராவது ஒருவராகத்தான் இருக்க முடியும்.

  இந்த சிறிய விஷயம் கூட தலைமை தாங்கியதற்கு வெளங்கவில்லை. இணைவைப்பு  பெருகக் காரணம் ஆலிம்களின் சுயநலமும், மக்களின் அலட்சியமுமே, என்று ரெண்டாங்கெட்ட நாட்டாமை தீர்ப்பை வழங்கினார். இந்த தீர்ப்பு குர் ஆன் ஹதீஸுக்கு உட்பட்டதா? நிச்சயமாக இல்லை. சுயநல ஆலிம்கள் தங்கள் தப்பு, தகிடு தாளங்களை மறைக்க மக்களையும் சேர்த்துக்கொண்டு தப்பிகின்றனர். ஆதம்(அலை) அவர்கள் சந்ததிகளை வழிகெடுப்பேன், என்று அல்லாஹ்வுடன் சபதம் போட்டு வந்தவன் ஷைத்தான்.

  ஷைத்தானின் பிடியில் இருந்து மக்களை மீட்டு நேர்வழி காட்டவே அல்லாஹ் நபிமார்களை அனுப்பினான். நபிமார்களின் வாரிசான ஆலிம், உலமாக்கள் நபிமார்கள் செய்த, அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைக்கும் வேலையை மட்டுமே செய்யவேண்டும். ஆனால் நடந்தது என்ன? அல்லாஹ்வின் மார்க்கம் மறைக்கப்பட்டு, திரிக்கப்பட்டு, சொற்ப உலக ஆதாயங்களுக்காக விற்கப்பட்டது

 ஷிர்க்,பித் அத்,தனி இயக்கம், தனிப்பள்ளி, ஹதீஸ் குர்ஆனுக்கு முரண் என்று கூறி எல்லா முசீபத்தையும் மார்க்கமாக  காட்டி மக்களை வழிகெடுத்தவர்களான கூலி ஆலிம் புரோகிதர்களே இணைவைப்புக்கு பெரிதும் காரணம். மாநிலத் தலைமை சின்ன பீஜை அவர் பங்குக்கு ஷிர்காட்டம் ஆடினார். இறுதியில் அண்ணன் பீஜை அவர்கள் அவர் பங்குக்கு மாமூல் அம்மி கொத்தி விட்டு கூட்டத்தை கலைத்தார்.

 கலந்து கொண்ட முரீது சடலங்கள் பெரும்பாலும் ஜிலு ஜிலு ஜில்க்கான சிவப்பு  கலராடையையே கபனாக அணிந்து காட்சி தந்தனர். நபி (ஸல்)  அவர்கள் “ ஆடைகளில் சிறந்தது வெண்ணிற ஆடை” என்று கூறிய சுன்னத்தை செயல்படுத்த நபிமார்களின் வாரிசான உலமாக்கள் மனம் ஒப்பவில்லை. மாநில தலையே சுள்ளாப்பு செவப்பில் வரும் போது, வால்கள் வழிமொழியத்தானே செய்யும். நமக்கு புரிகிறது சுன்னத்தான வெண்ணிற ஆடை எப்பவும் அணியலாம். இப்ப மாநாட்டில் அணிய முடியுமா?

  என்ன கொடுமை இது….ஆயிரக்கணக்கான ஆண், பெண்கள் மத்தியில், பளபளப்பாக இருந்தால் தான் பார்வையாளர்களை கவர முடியும்… ஏனென்றால் மெசேஜ் போயி சேரனும்ல… அதான். அது மட்டுமல்ல பெரிய ஸ்கிரீனில் படம் காட்டும்போது ஒரு எபெக்ட் கிடைக்கும். இதற்கும் மேலே இன்டர்நெட் நேரலை… லைவ் கவரேஜ். இதுக்கு வெளுத்த சட்டை தோதுப் படுமா.. படாது. ஸஹீஹான ஹதீஸ் சுன்னத்துகளுக்கே சங்கு ஊதியவர்களுக்கு, வெண்ணிற…. ஆடையாவது, வெண்டைக்காயாவது… போங்க பாய்!… சும்மா காமெடி பண்ணாமே….சரி…சரி…

  தட்டழிந்து தடுமாறும் ஜமா அத்தான ததஜா, முஸ்லிம்களின் ஷிர்க்கை ஒழித்தார்களா? அல்லது ஷிர்க்கின் பக்கம் மக்களை அழைத்தார்களா? என்பதைப் பார்ப்போம். முஸ்லீம் மக்களிடம் மண்டிக்கிடக்கும் மூட நம்பிக்கைகளான தட்டு, தகடு, தாயத்து, தர்ஹா, போன்ற ஷிர்க்,பித்அத்கள் ஒழிக்கப்படவேண்டும் என்பதில் யாருக்கும் இரண்டு கருத்தில்லை. ஆனால் ஷிர்க் மாநாடு நடத்தியவர்களுக்கு இதற்கான தகுதி உள்ளதா?

  ஒரு குழியில் உள்ள ஒரு மையத் எப்படி உயிருள்ள மனிதனுக்கு வழி  காட்ட முடியாதோ, இரண்டு கண்ணும் தெரியாத ஒரு கபோதிகன் எப்படி பார்வையுள்ள மனிதனுக்கு வழி காட்ட முடியாதோ இதேபோல் ஷிர்க்கில் வீழ்ந்த இவர்கள் எப்படி முஸ்லிம்களுக்கு நேர் வழி என்னும்  தவ்ஹீதைக் காட்ட முடியும்?

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஜக்காத்தை மறுத்து, ஒருமுறை கொடுத்தால் போதும் என்று சொல்லி, ஏழைகள்  வயிற்றில்  அடித்த அன்றே இவர்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறி குப்ர் என்னும் கப்ரில் விழுந்து விட்டனர். இந்த குப்ராளிகள் நடத்தும் ஷிர்க் ஒழிப்பு நாடகம் யாரை ஏமாற்ற….அப்பாவி பொது மக்களைத்தானே…

  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.” நான் இரண்டை விட்டுச் செல்கிறேன். இவ்விரண்டையும் பற்றிப் பிடித்திருக்கும் காலம் எல்லாம் நீங்கள் வழி தவற மாட்டீர்கள். ஒன்று அல்லாஹ்வின் வேதம் திருக்குர் ஆன். மற்றொன்று  எனது வழிமுறையான சுன்னா.

 ஒரு முஸ்லிமானவன் குர்ஆனை மட்டும் ஏற்று ஹதீஸை மறுத்தால் அவன் காபிர் நிலைக்கு போய்விடுவான். ஏனென்றால் குர்ஆன் எங்கிருந்து வந்ததோ அங்கிருந்துதான் சுன்னாவும்  வந்தது. இரண்டுமே வஹியுடன் தொடர்பு கொண்டது. ஒன்றை ஏற்று மற்றொன்றை மறுக்க முடியாது. அப்படி மறுப்பவன் மக்கத்து காபிரான அபூ ஜஹ்ல், அபூ லஹப்புடன் நரகத்தில் கிடப்பான், இவர்கள்  அல்லாஹ்வை பாதிக்  கலிமாவை  ஏற்றுக்கொண்டு நபிகளின் போதனையை மறுத்தவர்கள்.

  இன்று ஷிர்க் மாநாடு நடத்தும் ஷிர்க்காலி  தவ்ஹீதுகள் ஒன்றை ஏற்று ஒன்றை மறுக்கும் ஷிர்க்கையே மக்களிடம் பரப்புகிறார்கள். ஆதாரபூர்வமான நூற்றுக்கணக்கான ஹதீஸ்களை குர்ஆனுக்கு முரணாக உள்ளது என்று கூறி பொய்யுரைக்கிறார்கள். மறுக்கிறார்கள். ஆதாரப்பூர்வமான ஹதீஸ் ஒருநாளும் குர்ஆனுக்கு முரண்படாது. இப்லீஸால் ஆட்கொள்ளப்பட்ட முனை மழுங்கிய மூளைகளுக்கு மட்டுமே முரண்பாடு தெரியும்.

  ஆதாரப்பூர்வமான ஹதீஸின் இலக்கணம்

  1. அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களாக இருக்கவேண்டும்.
  2. அறிவிப்பாளர்கள் சரியான நினைவாற்றல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
  3. அறிவிப்பாளர் தொடரில் எந்த முறிவும் இல்லாமல் ஒருவர் மற்றவரை சந்தித்த அடிப்படையில் நபி (ஸல்) அவர்கள் வரை சங்கிலித்தொடர் இணைப்பு  இருக்கவேண்டும்.
  4. நம்பகத்தன்மையில் தன்னைவிட மேல்நிலையில் உள்ளவருக்கு மாற்றமாக அறிவிக்கக் கூடாது.
  5. ஒரு செய்தியின் அனைத்து அறிவிப்பாளர் தொடர்களையும் நுணுக்கமாக  கவனிக்கும்போது மட்டுமே புலப்படும் “இல்லத்” என்ற நுட்பமான குறை கூட இருக்கக்கூடாது.

 நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெறும் ஒரு செய்தி மேலுள்ள  நிபந்தனைகளுக்கு உட்பட்டிருந்தால், அதுவே ஆதாரப்பூர்வமான செய்தியாகும். இந்த நிபந்தனைகளுக்கு உட்படாதது பலவீனமான செய்தி என முடிவு செய்யப்பட்டு நிராகரிக்கப்படும். இந்த அடிப்படையில், நபி (ஸல்) அவர்களின் சொல்,செயல் மற்றும் அங்கீகாரம் பாதுகாக்கப்பட்டுள்ளன.

 இந்த விதியின் அடிப்படையில்தான் இமாம்கள் ஹதீஸ்களை ஆதாரப்பூர்வமானது என்றும் பலவீனமானதென்றும் தரம் பிரித்துள்ளார்கள். ஆதாரப்பூர்வமான ஹதீஸிற்க்கு இந்த ஐந்து நிபந்தனைகளைத் தவிர வேறு எந்த நிபந்தனையும் இல்லை. கடந்த 1400  ஆண்டுகளாக அனைத்து மார்க்க  இமாம்களும் ஏகோபித்து ஏற்றுக்கொண்ட நிலை இதுவே. இமாம் ஷாபி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

 ‘நபி (ஸல்) அவர்களிடமிருந்து நம்பகமானவர்கள் அறிவிப்பதன் மூலமே அவை ஆதாரப்பூர்வமானவை என நிரூபணமாகிறது.”  நூல்: இக்திலாபுல் ஹதீஸ். பக்கம்.505.

  குர் ஆனுக்கு முரணாக இருந்தால் மறுக்க வேண்டும் என்ற விதியே ஹதீஸ் கலையில் இல்லை. விதி என்றால் அனைவருக்கும் பொதுவான அளவுகோலைக் கொண்டிருக்கவேண்டும். அதன்படி யார் முடிவு எடுத்தாலும் அந்த முடிவு ஒரே மாதிரியாகத்தான் அமையவேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முடிவு ஏற்படும் என்றால் அதை யாராலும் விதி என ஏற்கமுடியாது.

 இமாம் புஹாரி,இமாம் முஸ்லிம்,இமாம் ஷாபி போன்ற மார்க்க மேதைகளுக்கு முரணாகத் தெரியாத ஹதீஸ், நமது மூணாம் கிளாஸ்- மட்டுமே படித்த படிக்காத பேதை, பீ ஜை உலவிக்கு மட்டும் தெரிகிறது என்றால், கோளாறு யார் மூளையில் உள்ளது?

தம்பட்ட தவ்ஹீது பேசி,அரசியல் ஆதாயம் தேடும், அரைவேக்காடு ஆலிம் மூளையில் உதித்த இப்லீஸ்  சிந்தனையை பின்பற்றுவதா? அல்லது தம் வாழ்நாள்  முழுவதும் இஸ்லாத்திற்காக பாடுபட்ட இமாம்கள் தரம் பிரித்த ஹதீஸ்களை ஏற்பதா? சிந்தியுங்கள்  சகோதரர்களே!

 இமாம்களை பின்பற்றுவதா?அல்லது இப்லீஸ்ஸை பின்பற்றுவதா?

“ஆதாரப்பூர்வமான எந்த ஒரு ஹதீஸும் குர்ஆனுடன் முரண்படாது.மாறாக நபி(ஸல்) அவர்களின் ஹதீஸ்,அல்லாஹ் நாடிய  அர்த்தத்தை குறிப்பானது என்றோ,பொதுவானது என்றோ, மாற்றிய சட்டம் என்றோ, மாற்றப்பட்ட சட்டம்  என்றோ தெளிவுபடுத்தும்.

 நபி (ஸல்) அவர்கள் காட்டிய வழியியை மக்கள் அவசியம் ஏற்க  வேண்டும். அல்லாஹ் இதை கடமையாக ஆக்கியுள்ளான். நபி(ஸல்) அவர்கள் கூறியதை ஏற்பவர் அல்லாஹ் கூறியதையே ஏற்கிறார்.” என இமாம் ஷாபி (ரஹ்)அவர்கள் கூறினார்கள்.

 — நூல்: மிப்தாஹுல் ஜன்னா.பக்கம்.21.

“ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதாக அமைய ஐந்து நிபந்தனைகள் உள்ளன. ஒரு ஹதீஸில் இந்த நிபந்தனைகள் முழுமையாக இடம் பெற்றுவிட்டால், அதன்பிறகு அந்த ஹதீஸ் ஒரு போதும் குர் ஆனுக்கு முரண்படாது.” என இமாம் ஷாபி(ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

 “ஒரு ஹதீஸ் ஆதாரபூர்வமாக இருப்பதற்கான நிபந்தனைகள் முழுமையாக இருந்தால் அதை குர்ஆனோடு இணைத்துப் பார்ப்பது அவசியமா?” என இமாம் ஷாபி(ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது.

 “ அவசியமில்லை! ஏனென்றால் ஹதீஸின் நிபந்தனைகள் முழுமையடைந்து விட்டால் அது குர் ஆனுக்கு முரண்படாது.” என இமாம் ஷாபி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.   – நூல்: மஹ்சூல். பாகம்.4. பக்கம்.438.

  “ஹதீஸ் குர் ஆனுக்கு முரண்” என்னும் வாதத்திற்கு பின்னால் தனி மனித சிந்தனைதான் உள்ளது. தவறான மனிதச் சிந்தனை ஒருபோதும் வஹியாக- இறைச்செய்தியாக முடியாது. மனிதச் சிந்தனையை வைத்து இறைச்செய்தியை மறுக்கக்கூடாது. மனிதனுக்கு கொடுக்கப்பட்டது சொற்ப ஞானம் என்று அல்லாஹ் கூறுகிறான். (அல் குர்ஆன்.17;85) ஆதாரபூர்வமான ஹதீஸை மறுப்பவர்கள் நிச்சயமாக தவ்ஹீதாக இருக்கமுடியாது. வழிகேடர்களாகத்தான் இருக்க முடியும்.

  ஆதாரப்பூர்வமான ஹதீஸை குர் ஆனுக்கு முரண் என்று மறுத்த வழிகேடர்களை வரலாறு சந்தித்தே வந்துள்ளது. இவர்கள் தங்கள் தவறான கொள்கையை நியாயப்படுத்த ஹதீஸை மறுப்பார்கள். உதாரணமாக,முதலில் தவ்ஹீது பேசிய கவாரிஜ்கள், அறிவு சொல்வதை மார்க்கமாக்கிய ஜஹ்மியாக்கள், முத்தஷீலாக்கள், காதியானிகள் போன்ற கொள்கை குழப்பவாதிகள், இப்படி முரண்பட்டே, முஸ்லிம்களிடமிருந்து பிரிந்து, தனிக்கூட்டம், தனிப்பள்ளி தனித்தலைமை கண்டனர்.

 இவர்கள் தங்கள் வழிகேட்டுக் கொள்கைக்கு குர் ஆனையே ஆதாரமாக காட்டுவார்கள். அனைத்து ஹதீஸ்களையும் மறுக்கவேண்டும் என்பது இவர்கள் கொள்கை அல்ல.ஆனால் இவர்களின் கொள்கைக்கு எதிரான ஹதீஸ்களை மட்டும் குர் ஆனுக்கு முரண்படுகிறது என்று மறுத்து ஒதுக்குவார்கள். நமது தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத்தின் தானைத்தலைவர் பீஜை அவர்களும் முத்தஷீலாக்கள் வழியில் நடை போடுகின்றார்.

 கத்தம், பாத்தியா, கந்தூரி, மவ்லூதை கற்றுக் கொடுக்கும் மதரஸாவில் ஏழு வருடம்  ஓதி, உலவி சனதை பெற்றுவிட்டார். இந்த சனது தந்த தைரியத்திலும், தனது பக்தகோடிகளின் தக்லிதையும் நம்பி குர்ஆனை மொழிபெயர்த்து கலெக்சன் பார்த்தார். இவரது மனோ இச்சை அறிவு சொல்வதை அப்படியே குர்ஆனில் கொட்டினார். இவர் குர் ஆனுக்கு கொடுத்த சுய விளக்கத்தை  நியாயப்படுத்த, தொடர்ந்து ஹதீஸ்களை மறுத்து வருகிறார். ஜானுக்கு ஜான், முழத்துக்கு முழம், அடி பிறழாது அப்படியே முத்தஷீலா வழிகேடர்களின் அடிச்சுவட்டில் தடம் பதிக்கிறார்..

 இவரைப் பின்பற்றும் அண்ணனின் தம்பிகள்… அனைவருமே தங்கக் கம்பிகள். அண்ணன் எதை சொன்னாரோ அதை அப்படியே ஏற்பார்கள். அண்ணன் எதை மறுத்தாரோ அதை அப்படியே மறுப்பார்கள். அது ஆதாரபூர்வமான ஹதீஸாக இருந்தாலும் சரியே! இந்த வழிகேட்டில் இருப்பதற்கு அண்ணன் இட்ட பெயர் “கொள்கைப் பிடிப்பு.” இந்தக் கொள்கைபிடிப்பு கோமாளிகளைப் பற்றிய தீர்ப்பை இமாம்கள் கூறுகிறார்கள்.

 இமாம் அஹ்மது இப்னு ஹம்பல் (ரஹ்)
“நபிமொழிகளே குர் ஆனை தெளிவுபடுத்தும். அவையே குர் ஆனின் ஆதாரம்கள். அறிவைக்கொண்டோ, மனோ இச்சைக் கொண்டோ நபி மொழியை அணுகக்கூடாது. மனோ இச்சையை தூக்கி எறிந்து விட்டு ஹதீஸ்களைப் பின்பற்றுவதே சுன்னாவாகும்.

 மேலும் நபி மொழிகளை அப்படியே நம்ப வேண்டும். நம்பகமானவர்கள் வழியாக வந்த ஹதீஸ்களில் ஒரு எழுத்தைக்கூட மறுக்கக்கூடாது… ஹதீஸ்களில் தர்க்கம் செய்வதை தவிர்த்து ஹதீஸ்களை நம்பக்கூடியவரே அஹ்லுஸ் சுன்னாவைச் சார்ந்தவர் ஆவார்.” என இமாம் அஹமது இப்னு ஹம்பல் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

 — நூல்: உஸூலுஸ் ஸுன்னா.(பாகம்.1 பக்.14.)

 “நபி (ஸல்) அவர்களின் ஹதீஸை மறுகிறவன் அழிவின் விளிம்பில் இருக்கிறான்.” என்று இமாம் அஹமது இப்னு ஹம்பல் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.    — நூல்: ஷரஹூ இக்திஹாதி அஹ்லிஸ் சுன்னா வல் ஜமாஆ.பக்.40.

 இமாம் அபூ ஜாபர் தஹாவீ (ரஹ்)
நபி (ஸல்) அவர்களிடமிருந்து ஆதாரபூர்வமான அடிப்படையில் வந்த அனைத்து விளக்கங்களும், சட்டங்களும், உண்மையாகும். ஆதாரப்பூர்வமான ஹதீஸை புறக்கணிக்காமல் இருப்பதும்; அறிவைக்கொண்டோ, இன்னாரின் சொல்லைக்கொண்டோ, ஹதீசுடன் மோதாமல் இருப்பதும் அஹ்லுஸ் சுன்னாவினரின் வழிமுறையாகும்.” என இமாம் அபூ ஜாபர் தஹாவீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
— நூல்:ஷரஹுல் அகீதா தஹவியா. பக்கம்.228.

 இமாம் சுயூத்தி (ரஹ்)
“ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்குரிய நிபந்தனைகளுக்கு உட்பட்டு வரும் நபிமொழியை அது நபி(ஸல்) அவர்களின் சொல்லாக இருந்தாலும் அவை  ஆதாரம் இல்லை என மறுப்பவான் காபிராகி விட்டான்.அவன் இஸ்லாமிய வட்டத்தை விட்டும் வெளியேறி விட்டான்.அவான் யூதர்களுடனும்,கிறிஸ்துவர்களுடனும் அல்லது அல்லாஹ் நாடிய காபிரானா கூட்டங்களுடனும் எழுப்பப்படுவான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.” என இமாம் சுயூத்தி கூறினார்கள்.

 இமாம் ஷாபி (ரஹ்)
ஒருநாள் இமாம் ஷாபி (ரஹ்) அவர்கள் ஒரு ஹதீஸை அறிவித்து “இது ஆதாராப்பூர்வமானாது” எனக் கூறினார்கள். அப்போது  அவரிடம் ஒருவர் “அபூ அப்தில்லாஹ் அவர்களே! இதையா கூறுகிறீர்கள்?” எனக் கேட்டார்.

இமாம் ஷாபி (ரஹ்) அவர்கள் திடுக்கிட்டார்கள்.” இன்னாரே! நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என நான் ஹதீஸை அறிவித்து,  அதை ஏற்காமல் இருக்கும் கிறிஸ்துவன் என நீ என்னை நினைக்கிறாயா? நான் கிருஸ்துவ ஆலயத்திலிருந்து வெளியே வந்தவன் என  நினைக்கிறாயா? “ என்று கேட்டார்கள்.

  நூல்: மிப்தாஹுல் ஜன்னா. பக்கம்.5

 இமாம் இப்னு தைமியா (ரஹ்)
குர் ஆனுக்கு முரண் என்று கூறி ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மறுப்பது வழிகேடர்களின் வழிமுறை என்று இமாம் இப்னு தைமியா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

 “தர்க்கம்,மற்றும் சுய சிந்தனை ரீதியில்  மார்க்கத்தை அணுகுபவர்களே, நபி  வழியையும், நபி மொழிகளையும் குர் ஆனுக்கு முரண்படுகிறது எனக்கூறி மறுப்பார்கள்.”

என இமாம் இப்னு தைமியா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: அல்முசவ்வதா.பக்.11.-3/355

 கவாரிஜ்ஜுகள் தவறு செய்பவர்களை காபிர்கள் எனக் கூறுவார்கள். பாவமாக இல்லாத   விஷயத்தை இவர்களாகப் பாவம் என்று எண்ணிக்கொள்வார்கள். மேலோட்டமாக குர் ஆனுக்கு முரண்படுவது போன்ற தெரியும் நபிமொழியை புறக்கணித்து குர் ஆனை பின்பற்றுவதாகக் கருதிக் கொள்வார்கள். இவர்கள் மறுக்கும் அந்த நபிமொழி முதவாத்திர் என்ற உயர்ந்த நிலையில் இருந்தாலும் சரியே! இதுவே கவாரிஜ்ஜுகள் செய்த பித் அத்தின் அடிப்படையாகும்.”  என  இமாம் இப்னு தைமியா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
நூல்; மஜ்மூஉல் பதாவா.பாகம்.3. பக்கம்.355

எனக்குப்பின் உங்களில் வாழ்பவர் அதிகமான முரண்பாடுகளைக் காண்பர். அப்போது நீங்கள் என் சுன்னத்தையும் நேர் வழி பெற்று நேர் வழி காட்டும் ஆட்சியாளர்களின் வழியையும் பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள் அதனை கடைவாய்ப் பற்களால் பலமாகப்  பிடித்துக்கொள்ளுங்கள். புதுமையான விசயங்களை விட்டும் உங்களை எச்சரிக்கிறேன்.ஒவ்வொரு புதுமையும் பித் அத்தாகும்.ஒவ்வொரு பித் அத்தும் வழிகேடாகும்.எனு நபி (ஸல்) அவர்கள் கூறினர்.  –நூல்: அபூ தாவூது. 3991

இன்று பித்னா கொள்கையை தமிழகத்தில் தவ்ஹீது லேபிளில் பரப்பி வரும் P.ஜைனுலாப்தீன் அவர்கள், தன் அறிவுக்கு ஒத்துவரவில்லை என்பதால்,  சூனியம், மற்றும் கண்ணேறு தொடர்பான நபிமொழிகள் உட்பட பல ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மறுத்து வருவதுடன், நபிமொழிகளை நம்பக்கூடியவர்களை இணைவைப்பார்கள் என்றும் கூறுகிறார். இவருக்கு முன் வாழ்ந்த இஸ்லாமிய அறிஞர் பெருமக்களும் முஸ்லிம்களும் கூறாத கொள்கை குழப்பத்தை தவ்ஹீது பிராண்டில் மார்கெட்டிங் செய்து, ஷிர்க் ஒழிப்பு போர்வையில் முஸ்லிம்களை ஷிர்க்கின் பக்கம் அழைக்கிறார்.

 எனவே இவர் இவ்விசயத்தில் சுன்னாவை விட்டு விளக்கியதுடன் ஜமா அத்தை விட்டும் விலகி விட்டார். அஹ்லுஸ் வல் ஸுன்னா வல் ஜமா அத்தினருக்கு எதிராக செயல்பட்ட முத்தஷீலாக்களின் கொள்கையும் பீ ஜை யின் நிலைப்பாடும் ஒன்றாக அமைந்துள்ளது. எல்லாம் வல்ல அல்லாஹ், இது போன்ற பித்னா பேர்வழிகளிடமிருந்து நமது இளைஞர்களின் ஈமானையும், மறுமை வாழ்வையும் பாதுகாப்பானாக!

{ 8 comments… read them below or add one }

ABU EASA February 10, 2016 at 11:02 pm

நல்ல ஆக்கம்.
கேளி, கிண்டல்களைத் தவிர்த்திருக்கலாம்.
ததஜ பானி எழுத்து நடை அவசியமற்றது

Reply

NISAR AHAMED February 11, 2016 at 9:26 am

எவர்கள் தங்கள் மார்க்கத்தில் பிரிவினைகளை உண்டாக்கி (பல) பிரிவுகளாகப் பிரிந்து விட்டனரோ; (அவர்களில் ஆகி விட வேண்டாம். அவ்வாறு பிரிந்த) ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்களிடமிருப்பதைக் கொண்டே மகிழ்வடைகிறார்கள்.
(அல்குர்ஆன் : 30:32)

பிரிவினை என்ற பாவத்துக்குள் வீழ்ந்தவர்களுக்கு நாம் தரும் அறிவுரை: உங்கள் தலைவர்களின் கூற்றைக் கொண்டு குர்ஆன் சுன்னாவை அளக்காமல் குர்ஆன் சுன்னாவைக் கொண்டு உங்கள் தலைவர்களின் வார்த்தைகளை அளந்து கொள்ளுங்கள்

Reply

ABBASA ALI February 15, 2016 at 6:46 pm

SUPER WORK

Reply

jahir hussain A.M. March 1, 2016 at 3:46 pm

nikalum olugana markkathai solli kudukka mattiga sollheravarhalaium solla vidamattiga oruvarai oruvar kurai solvathai olugana markatthai nadai murai paduthi nal vale el vala allah kirubai saivanaha.

Reply

Mohamed March 3, 2016 at 2:27 pm

This writer is writing against Islam…WORST ARTICLE IN RECENT TIMES, I THINK THE WRITER OR THE AUTOUR OF THIS ARTICLE IS FALSLY ACCUSING EVERYTHING DONE BY TNTJ… This article has no vision and its trying to hide it’s wrong doings by accusing towheed jamaath.and futhur a cussing with false hadeed..BAD ARTICLE NOT WORTH A CENT;

Reply

ashak March 8, 2016 at 7:17 am

good article , even many not accepting it is fruitful worth one

Reply

shameed April 4, 2016 at 8:04 pm

முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறிதொரு சமூகத்தாரைப் பரிகாசம்செய்ய வேண்டாம் ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்) அவர் களை விட மேலானவர்களாக இருக்கலாம், (அவ்வாறே) எந்தப் பெண்களும் மற்ற எந்த பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) – ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்”. அல்குர்ஆன் 49:11

Reply

shameed April 4, 2016 at 8:15 pm

Please try to convey your messages without sarcasm.. in which case, The Almighty also would love it.

Reply

Leave a Comment

Previous post:

Next post: