நபி (ஸல்) அவர்கள் ஸபர் மாதத்தில் நோய்வாய்ப் பட்டிருந்ததால் அந்த மாதம் பீடை மாதம் என்ற நம்பிக்கை தமிழக முஸ்லிம்களில் சிலரிடம் இருந்து வருகின்றது. இந்த மாதத்தில் திருமணம் போன்ற நற்காரியங்கள் செய்யக்கூடாது என்றும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். இப்படி நம்புவதற்கும் அதன் அடிப்படையில் செயல்படுவதற்கும் அனுமதி உண்டா என்று குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் ஆராய்வதற்கு முன் இது ஒரு மூட நம்பிக்கைதான் என்பதற்குறிய காரணங்களைப் பார்ப்போம்.
ஒரு நேரம், ஒரு நாள் ஒரு மாதம் எல்லோருக்கும் நன்மை செய்யக்கூடியது என்று நம்புவதும், அல்லது எல்லோருக்கும் கெடுதி செய்யகூடியது என்று நம்புவதும் இறைவன் ஏற்படுத்தியுள்ள நியதிக்கு மாற்றமாகும். ஒருவருக்கு மிகவும் நன்மைகள் வந்தடைந்த ஒருநாள் இன்னொருவருக்கு கேடுகள் வந்தடைந்த நாளாக இருப்பதைத்தான் நடைமுறையில் காண முடிகிறது. ஒரு நாளில் ஒருவருக்கு அழகான குழந்தை பிறந்திருக்கும். அதே நாளில் அவருக்கு பக்கத்து வீட்டில் உள்ள ஒருவர் மரணமடைந்திருப்பார். நல்ல நாள் என்று ஒன்று இருக்குமானால் உலகத்தில் வாழுகின்ற அனைவருக்கும் அந்த நாளில் வெறும் நன்மைகளாகவே நடக்க வேண்டும். ‘கெட்ட நாள் என்று ஒன்று இருக்குமானால் உலகத்து மாந்தர் அனைவருக்கும் அந்த நாளில் கெட்டவைகள் மட்டுமே சம்பவிக்க வேண்டும்.
எந்த நாளாக இருந்தாலும் அதில் சிலருக்கு நல்லவை ஏற்படுவதும், சிலருக்குக் கெட்டவைகள் ஏற்படுவதும் தான் நடைமுறை உண்மை. இதைப் புரிந்துகொள்ள பெரிய ஆதாரம் எதுவும் தேவையில்லை. தங்கள் வாழ்க்கையிலேயே அனைவரும் அனுபவ ரீதியாக உணர முடியும். முஹர்ரம் மாதம் பத்தாம் நாளை எடுத்துக் கொள்வோம். அந்த நாளில் ஹுஸைன்(ரலி) அவர்கள் படுகொலை செய்யப்பட்டதினால் அது கெட்ட நாள் என்று கூறினால் அதே நாள் மூஸா நபிக்கும் அவர்களைப் பின்பற்றிய மூமின்களுக்கும் நல்ல நாளாக அல்லவா இருந்துள்ளது. ரபீயுல் அவ்வல் பிறை 12ஐக் கவனியுங்கள் நபி (ஸல்) அவர்கள் அன்றுதான் பிறந்தார்கள் என்பதற்காக அது நல்ல நாள் என்று சொன்னால் அதே நாளில் தானே நபி (ஸல்) அவர்கள் மரணமடைந்திருக்கிறார்கள்.
மனிதர்களுக்கு அல்லாஹ் எதை விதித்திருக்கிறானோ அதுதான் நடக்கும். நாட்களால் அதில் எந்த மாறுதலையும் செய்ய முடியாது என்பதற்கு இவை தெளிவான சான்றுகளாகும். ஸபர் மாதத்தில் நபியவர்கள் நோய்வாய்ப்பட்டதினால் அந்த மாதமே பீடை மாதம் என்றால் (ஒரு கருத்துப்படி) ஸபர் மாதத்தில் அவர்கள் மேற்கொண்டுள்ள ஹிஜ்ரத் பயணம் மகத்தான வெற்றியை ஏற்படுத்தியுள்ளதே! அந்தப் பயணத்திற்குப் பின்புதான், இஸ்லாம் தனக்கென ஒரு நாட்டையே நிறுவ முடிந்தது.
பீடை மாதம் என்று ஒதுக்கிவிட்டு மற்ற நாட்களில் நம்மவர்கள் எல்லா நன்மையான காரியங்களையும் செய்கின்றனர் செய்தனர். தேர்ந்தெடுத்து நல்ல நாட்களில் நடத்தப்பட்ட பல திருமணங்கள் ஏன் ரத்து செய்யப்படுகின்றன? நாள் பார்த்து திருமணம் செய்த பல பெண்கள் விதவைகளாக இருப்பது ஏன்? நல்ல நாள் பார்த்துத் துவங்கப்பட்ட பல வியாபார நிறுவனங்கள் நஷ்டம் அடைந்தது ஏன்? நாள் பார்த்து அஸ்திவாரம் இட்டு நாள் பார்த்து திறப்பு விழா நடத்திய பல கட்டிடங்கள் இருந்த இடம் தெரியாமல் போனது ஏன்? அந்த நம்பிக்கையில் இருப்போர் பதில் சொல்ல வேண்டிய கேள்விகள் இவை.
சின்ன நகஸு, பெரிய நகஸூ என்றெல்லாம் கனித்துத் மக்களுக்குத் தொண்டு? செய்து வருகின்ற ஜோசியர்களை, பால்கிதாபு, மோர்கிதாபு என்று சொல்லி மக்களை மடமையிலேயே நீடித்திருக்க வைக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளவர்களைக் கொஞ்சம் கவனியுங்கள்! இவர்கள் தங்களுக்கு மிகச் சிறந்த நல்ல நாளாகக் கணித்து அந்த நாளில் தங்கள் காரியங்களைத் துவக்கி நல்ல நிலையில் இருக்கிறார்களா? குறைந்த பட்சம் நல்ல நாளில் ஒரு தொழிலைத் துவக்கி மிகப்பெரும் செல்வந்தர்களாக மாறியுள்ளார்களா? இல்லையே! மாறாக மக்களிடம் ஐந்தையும் பத்தையும் கேட்டுப் பெறுகின்ற நிலமையில் தானே அவர்கள் உள்ளனர். பால்கிதாபு என்பதும் நகஸு என்று சொல்வதும் பித்தலாட்டம் என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்?
இதே ஸபர் மாதத்தின் இறுதி புதனில் தான் நபியபவர்கள் குணமடைந்து குளித்தார்களாம். அதனால் நாமும் ஒடுக்கத்துப்புதனில் குளித்து நமது முஸீபத்தை நீக்க வேண்டுமாம். இந்த நம்பிக்கையின் பெயரால் நாட்டில் இன்னும் பல மடமைகளும் நாட்டில் நடக்கின்றன.
ஓலை, மாயிலை என்று பல பெயர்களால் சில வாசகங்களை எழுதி கரைத்துத் குடிக்க ஒன்று, தலையில் தெளித்துக் கொள்ள ஒன்று, வீடு வாசல்களில் தெளிக்க வேறொன்று என்று மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்க சிலர் போட்ட திட்டமே ஒடுக்கத்து புதன் என்பது. அன்றைய தினத்தில் கடற்கரைக்கு சென்று முஸீபத்தை நீக்குகிறோம் என்று நீராடி வருவதும் சில பகுதிகளில் நடந்து வருகிறது. அன்றைய தினத்தில் நிறைய முஸீபத்துகள் இறங்கிக் கொண்டிருக்கிறதாம்! கடலில் குளித்தால் அது நீங்குமாம். இது போன்ற சடங்குகளை அறவே வெறுத்து வருகின்ற எத்தனையோ நாடுகளில் முஸீபத்துக்குப் பதிலாக செல்வங்கள் குவிந்துள்ளது ஏன்? என்றெல்லாம் மக்கள் இன்று சிந்திக்கத் துவங்கிவிட்டார்கள்.
அன்றை அரபிகள் ஷவ்வால் மாதத்தைப் பீடை மாதமாகக் கருதி வந்தனர். அந்த நாட்களில் எந்த நல்ல நிகழ்ச்சியும் நடத்தாதிருந்தனர். இந்த மடமை எண்ணத்தைத் தகர்த்தெரியும் வகையில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் “நான் ஷவ்வாலில் தான் மணமுடிக்கப்பட்டேன். ஷவ்வாலில் தான் என் இல்லறத்தைத் துவங்கினேன். நபி(ஸல்) அவர்களுக்கு என்னைவிட உகந்த மனைவியாக யார் இருந்தார்கள்?” என்று கூறினார்கள். (முஸ்லிம், அஹ்மத்)
நீங்கள் பீடை எண்ணி இருக்கின்ற ஷவ்வாலில் திருமணம் முடித்த நான் எவ்வளவு மகிழ்ச்சியோடு வாழ்ந்திருக்கிறேன் என்று அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் கேட்டது இன்று ஸபரை பீடையாகக் கருதுவோர்க்கு பொருந்தாதா? சிந்தியுங்கள்!
S.கமாலுத்தீன் மதனி