பணமதிப்பு நீக்கத்தால் யாருக்கெல்லாம் லாபம்?

in பொதுவானவை

பணமதிப்பு நீக்கம் என்ற நடவடிக்கையால் பல்வேறு துறைகளிலும் ஏற்பட்டுள்ள விளைவுகள் பற்றிய செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன. கட்டுப்படியாகும் கொள்முதல் விலை கிடைக்காததால் விவசாயிகள் தங்களுடைய நிலங்களில் பாடுபட்டு விளைவித்ததை அப்படியே சாலையோரம் கொட்டுகின்றனர். வேலை தேடி லட்சக்கணக்கில் வெளிமாநிலங்களுக்குச் சென்ற தொழிலாளர்கள் வேலையிழந்து திரும்புகின்றனர். சாலையில் கூவி விற்கும் சிறு வியாபாரிகள் தங்களுடைய பொருட்களை வாங்குவாரின்றி முடங்கிவிட்டனர். வங்கிகளிலும் ஏ.டி.எம்.களிலும் பணம் எடுக்கக் கால்கடுக்க நின்றவர்களின் துயரம் இன்னும் தீர்ந்தபாடில்லை.

இவ்வளவு சேதங்களை ஏற்படுத்திய பணமதிப்பு நீக்க அறிவிப்புக்கு இன்னொரு பரிமாணமும் இருக்கிறது. வங்கி அமைப்பு கடுமையாகச் சீர்குலைந்திருக்கிறது. வங்கிகளில் இருக்கும் தங்களுடைய சொந்தப் பணத்தையே எடுக்கவிடாமல் அரசு அவ்வப்போது புதுப்புது விதிகளையும் கட்டுப்பாடுகளையும் விதிப்பதால் வாடிக்கையாளர்களுக்கு வங்கிகளின் மீதிருந்த நம்பிக்கையே போய்விட்டது. பணம் வழங்குவதில் வங்கி அதிகாரிகளுக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரத்தால், வேண்டியவர்களுக்குக் கறுப்பை வெள்ளையாக்குவதற்கு உதவுவதுதான் பல இடங்களில் நடந்திருக்கிறது. வரிசையில் நிற்பவர்களுக்கு ரூ.2,000-க்கு மேல் மறுக்கும் வங்கிகள், செல்வாக்கு உள்ளவர்களுக்குக் கட்டுக்கட்டாகப் பழைய நோட்டுகளுக்குப் பதில் புது நோட்டுகளைத் தந்துள்ளது தெரியவருகிறது. சமூகத்தின் பெரும் பகுதி ஏழைகளும் இத்தனை இடர்களைச் சந்தித்துவரும்போது, அதிகாரத்தில் இருப்பவர்கள் இந்த வேதனைகளையே பட்டியலிட்டு, தங்களுடைய சாதனையைப் போலப் பேசிப் பெருமிதப்படுவது அதிர்ச்சியாக இருக்கிறது.

இடையூறு மொழி

அரசின் இந்தச் செயல்படாத நிலை ஏன் என்று புரிந்துகொள்வதற்கு முன்னால், இந்த விஷயம் சில வட்டாரங்களில் எப்படி வரவேற்கப்படுகிறது என்று பார்க்க வேண்டும். தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு அதிலும் குறிப்பாக கணினிகளில் பயன்படும் மென்பொருள் தொழில்நுட்பக் கண்டுபிடிப்பாளர்கள் இதை வரவேற்கின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதம் ‘பிசினஸ் ஸ்டேண்டர்ட்’ என்ற பத்திரிகைக்குப் பேட்டியளித்த நந்தன் நிலகேணி, “வங்கி அமைப்பு ஒரு ‘இடையூறு’க்காகக் காத்திருக்கிறது. அப்படி நடந்தால் அது வரவேற்கப்பட வேண்டியது. அதன் பிறகு, வங்கி நிர்வாகத்தில் புதிய நிதித் தொழில்நுட்பங்கள் பெருமளவில் இடம்பெறும்” என்றார்.

இங்கே அவர் பயன்படுத்தும் ‘இடையூறு’ என்பதற்கான அர்த்தம் உங்களுக்குப் புரிகிறதா?

மென்பொருள் தயாரிப்பாளர்கள் மத்தியில் ‘இடையூறு’ என்ற வார்த்தைக்கு ஏன் இத்தனை மவுசு என்றால், அது ‘வலைப்பின்னல் விளைவு’களை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்புதான். லட்சக்கணக்கான மக்கள் ஒரு மென்பொருளைப் பயன்படுத்துவார்கள் என்றால்தான் அதை உருவாக்கியவருக்கு லாபம் கிடைக்கும். புதிய மென்பொருள் விற்கப்பட வேண்டும் என்றால், ஏற்கெனவே ஆக்ரமித்திருப்பதை அகற்றியாக வேண்டும். அப்படி அகற்றும்போது ‘இடையூறு’ ஏற்படத்தான் செய்யும். புரிகிறதா?

இடையூறுகளும் வாய்ப்புகளும்

அதாவது, தேடுபொறியான கூகுளை வெளியேற்ற வேண்டும் என்றால், வடிவமைப்பாளர்கள் அதைவிட விரைவாக, வேகமாகச் செயல்படும் ஒன்றைக் கண்டுபிடித்தால்தான் முடியும். ‘பேடிஎம்’, ‘மோபிக்விக்’ போன்ற ரொக்கமற்ற பணப் பரிவர்த்தனை மென்பொருட்கள் வேலை செய்ய வேண்டும் என்றால், கோடிக்கணக்கான மக்களின் கைகளில் புரளும் ரொக்கத்தை வற்றச் செய்தாக வேண்டும். இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, பணமதிப்பு நீக்க நடவடிக்கை என்பது ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனைத் துறைக்கு இயற்கையாகப் பார்த்து வழங்கிய வரமாக அமைந்திருக்கிறது. ஆன்-லைன் வர்த்தகத் துறை, ஆன்-லைன் மென்பொருள் பாதுகாப்புப் பிரிவு ஆகியவற்றுக்கும் தொழிலைப் பெருக்கிக்கொள்ள இது நல்ல வாய்ப்பு.

ஆக, ‘இடையூறு’ என்ற வார்த்தையானது அப்பாவி மக்கள் மீது கடுமையான சுமைகளை ஏற்றிவிடுவதற்கு நல்ல வாய்ப்பாக அமைந்துவிடுகிறது. அப்படி வாழ்வதுதான் தேச நலனை நாடுவோரின் கடமை என்றும் உபதேசிக்கப்படுகிறது. வங்கிகளுக்குள் நுழைய முடியாதபடிக்குக் கூட்டம் இருக்கிறதா, பிரமாதம்; ஏ.டி.எம்.களில் காத்திருக்கும் வரிசையின் நீளம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறதா, இது இப்படித்தான் இருக்க வேண்டும். மக்கள் வேலையிழக்கிறார்களா, நல்லது – பொது நன்மைக்கான இடையூறுகள் ஏற்படும்போது, இடையில் குறுகிய காலத்துக்குச் சிலர் இப்படிப் பலியாவது உண்டு! – இப்படித்தான் ஆட்சியாளர்கள் மனதில் நினைக்கின்றனர். இடையூறுகள் பெருகப் பெருக, புதிய தொழில்நுட்பத்தை நாடுவோர் எண்ணிக்கை வேகவேகமாக அதிகரிக்கும். புதிய தொழில்நுட்பக்காரர்கள்தான் இந்த இடையூறுகளை ஏற்படுத்துகிறார்கள் என்றோ, அவர்கள் இதை ஆரவாரத்துடன் வரவேற்கிறார்கள் என்றோ கூற மாட்டேன். ஆனால், அவர்கள்தான் அதிகபட்சப் பலன் அடைகிறார்கள் என்பதே உண்மை. இதனால்தான் பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் மோசமான விளைவுகள், மிகவும் லேசானதாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.

உலக சந்தைக்கான இடையூறு

புதிய தொழில்நுட்பத்துக்கு ஆதரவாக இருப்போரில் முதன்மை யானவர்கள் ‘இந்திய மென்பொருள் தொழில்துறை வட்டமேஜை’ என்ற அமைப்பினர். நந்தன் நிலகேணிதான் இதன் வழிகாட்டி. அவர்களுடைய இணையதளங்களுக்குச் சென்றாலே இது தெளிவாகத் தெரியும். இந்த அமைப்பில் உள்ளவர்கள் பெரிய மனிதர்கள், பெரிய திட்டங்களைத் தீட்டுபவர்கள், நல்ல சிந்தனையாளர்கள். இவர்களுடைய சிந்தனைகள் யாருக்காக? இந்திய மென்பொருள் துறைக்கு நல்ல தொழில்வாய்ப்புகளை இந்தியாவில் மட்டுமல்ல – வெளிநாடுகளிலும் ஏற்படுத்துவதுதான் இவர்களுடைய இலக்கு. புதிய தலைமுறை மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்களை உருவாக்கி, உலக சந்தைக்கும் ‘இடையூறு’ விளைவிப்பதுதான் இவர்களுடைய அடுத்த இலக்கு.

இந்த நோக்கத்தின் முதல் படிதான், கேட்போருக்கான மென்பொருள்களைத் தயாரித்துக் கொடுப்பது. இதை மறைத்து, “பணம் கையில் இல்லையா, ஆதார் எண்ணைப் பெற்று, அதன் மூலம் தேவையானவற்றை ரொக்கம் இல்லாமலே வாங்கிக்கொள்ளுங்கள்” என்று உதவி செய்வதைப் போல மென்பொருள் விற்பனை முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஒருமுகப்படும் சுயலாபங்கள் அரசாங்கத்தின் பணக் கொள்கையானது சில தொழில்நிறுவனங்கள் கோடிக்கணக்கில் ஆதாயம் பெறுவதற்கான வாய்ப்பாக மாறிவிட்டது. ரொக்கமற்ற பரிவர்த்தனையை எப்படி மேற்கொள்வது என்று அரசு செய்யும் விளம்பரங்கள், சில தனியார் நிறுவனங்கள் செய்யும் விளம்பரங்களைப் போலவே இருக்கிறது. இப்போது தனியார் நிறுவனங்கள் விளம்பரம் செய்வதைக் குறைத்துவிட்டன. காரணம், அரசாங்கம்தான் தனது சொந்த செலவிலேயே அதைச் செய்ய ஆரம்பித்துவிட்டதே?

– ஜான் ட்ரேஸ், ராஞ்சி பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையின் வருகைதரு பேராசிரியர்

சுருக்கமாகத் தமிழில்: சாரி

: ‘தி இந்து’ ஆங்கிலம்.

Leave a Comment

Previous post:

Next post: