கண்ணால் காண்பது பொய்!….கணக்கீட்டில் அறிவதே மெய்!

Post image for கண்ணால் காண்பது பொய்!….கணக்கீட்டில் அறிவதே மெய்!

in அறிவியல்,சந்திர நாட்காட்டி

பிஸ்மில்லாஹ்ஹிர்ரஹ்மானிர்ரஹீம்

எஸ்.ஹலரத் அலி, திருச்சி-7.

மாதத்தை துவக்குவதற்கான பிறை பார்த்தல், இன்று முஸ்லிம்களிடையே பல்வேறு குழப்பங்களை நிகழ்த்திக்கொண்டிருப்பதை பார்க்கிறோம். இதன் காரணம் என்னவென்று சிந்திக்கும்போது ஒரு ஹதிஸின் நோக்கத்தை எப்படி விளங்கி செயல்படுத்த வேண்டும் என்ற அடிப்படையை அறியாததே ஆகும்.பிறை பார்த்தலுக்கான ஹதீஸை பார்ப்போம்.

நீங்கள் பிறை கண்டதும் நோன்பு வையுங்கள்; (மறு) பிறை கண்டதும் நோன்பை விடுங்கள். மறைக்கப்பட்டால் நாள்களை எண்ணிக்கொள்ளுங்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர்  (ரலி)    புஹாரி. 1900,1906. முஸ்லிம்.1958.

இது போன்ற சொற்களுடன் இன்னும் சில ஹதீஸ்கள் உள்ளன, ‘”மறைக்கப்பட்டால் ஷபானின் எண்ணிக்கையை முப்பதாக பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.”

இந்த ஹதீஸ்கள் அனைத்தும் ஒரு நோக்கத்தை சுட்டிக் காட்டி அதற்கான சாதனமொன்றையும் குறிப்பிடுகிறது. ஹதீஸின் நோக்கத்தை பொறுத்தவரையில் அது தெளிவானது. அதாவது ரமலான் மாதம் முழுவதும் நோன்பு வைக்க வேண்டும். அதன் ஆரம்பத்திலோ  அல்லது இறுதியிலோ ஒரு நாளைக் கூட வீணாக்கக்கூடாது. அவ்வாறே ஷாபான் அல்லது ஷவ்வால் மாதத்தின் நாட்களில்  நோன்பு நோற்கக் கூடாது என்பதே அந்த ஹதீஸின் அசலான நோக்கம்.

Image result for moon crescentபெரும்பான்மை மக்களது சக்திக்குட்பட்ட, மார்க்க விசயத்தில் எவ்வித கஷ்டத்தையும், சங்கடத்தையும் உண்டு பண்ணாத சாதனமொன்றைக் கொண்டு, மாதத்தின் தொடக்கத்தையும் முடிவையும் உறுதிப்படுத்துவதன் மூலமே இந்நோக்கம் நிறைவு செய்யப்படும். வெற்றுக்கண்ணால் பார்ப்பதே அக்காலத்தில் சாத்தியமான, இலகுவான வழிமுறையாக இருந்ததாலே அதைக் குறிப்பிட்டு ஹதீஸ் வந்தது. எழுதவோ, கணக்கிடவோ தெரியாத சமூகத்தில் கணக்கீடு போன்ற வேறு வழிமுறை மூலமாகவே மாத துவக்கத்தை முடிவு செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டிருந்தால், அது அவர்களை கஷ்டத்தில் ஆழ்த்தியிருக்கும்.

அல்லாஹ், நபியவர்கள் உம்மத்திற்கு இலகுவை விரும்புகிறானே தவிர கஷ்டத்தை அல்ல. எனினும் இந்த ஹதீஸின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு புறக்கண்ணை விட பலமான மற்றொரு சாதனம் கிடைத்துவிடுமாயின், அச்சாதனம் எவ்வித தவறோ, அனுமானமோ, பொய்யோ இன்றி, உரிய மாதம் துவங்கி விட்டதை தெளிவாக காட்டக் கூடியதாகவும், முஸ்லிம் சமுகத்தின் சக்திக்குட்பட்டதாகவும் காணப்படுமாயின்; பழைய வழிமுறையை பிடிவாதமாக பற்றிப்பிடித்துக் கொண்டு, ஹதீஸின் அசலான நோக்கத்தை  ஏன் அலட்சியப்படுத்தக் வேண்டும்.?

அதிலும் இன்று முஸ்லிம் சமுகத்தில் பல வானவியல், புவியியல், இயற்பியல் விஞ்ஞானிகளும் தேர்ச்சி பெற்ற நிபுணர்களும் சர்வதேச அளவில் உருவாகிவிட்ட பின்னரும், மனிதன் சந்திரனுக்கு சென்று மீண்டு,அடுத்து செய்வாய் கோளுக்குச் செல்ல தயார் படுத்தும் சூழலில், முஸ்லிகளாகிய நாம் ஏன் இன்னும் அறிவியல் அணுகுமுறையில் தேங்கி நிற்க வேண்டும்.

வெற்றுக் கண்ணால் பார்ப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையில், ஓரிருவர் தாம் பிறையைக் கண்டதாக கூறும் செய்தியை வைத்து உரிய மாதம் துவங்கி விட்டதை ஏற்க முடியும் என்று ஹதீஸ் கூறும் போது, எவ்வித தவறோ,பொய்யோ, யூகமோ ஏற்பட முடியாததும், திட்டவட்டமான முடிவைத் தரக்கூடியதும், கிழக்கிலும்,மேற்கிலும் வாழுகின்ற ஒட்டு மொத்த முஸ்லிம் சமூதாயமும் ஒன்று பட்டு ஏற்கக்கூடியதும், நோன்பு திறப்பதிலும், விடுவதிலும்,பெருநாள் கொண்டாடுவதிலும் நிரந்தரமாக தீர்வு தரக்கூடிய ஒரு சாதனத்தை நாம் எவ்வாறு புறக்கணிக்க முடியும்?

ஒரு நாட்டிற்க்கும் அருகிலுள்ள மற்றொரு நாட்டிற்கும் இடையில் மூன்று நாட்கள் வித்தியாசப்படும் அளவுக்கு இன்று பிறை காண்பதில் முரண்பாடு உள்ளது. இது அறிவுப்பூர்வமான முரண்பாடு அல்ல. இதை மார்க்க ரீதியாகவோ,அல்லது அறிவியல் ரீதியாகவோ ஏற்கமுடியாது. இம்மூன்றில் ஒன்றில் மட்டுமே உண்மையிருக்க முடியும். ஏனையவை தவறானவை என்பதில் எவருக்கும் ஐயமில்லை. திட்டவட்டமான கணக்கீட்டு முறையை எடுத்துக் கொள்வதே மாதங்களின் சரியான துவக்கத்தை அறியும் வழிமுறையாக இன்று உள்ளது.

1400 ஆண்டுகளுக்கு முன்னால் வெற்றுக் கண்ணால் பார்க்கும் குறைந்த திறன் சாதனத்தை தந்தது அன்று சரியே. ஆனால் இன்று அதை விட திறன் மிகுந்த சாதனத்தை பயன்படுத்தி துல்லியமாக மாத துவக்கத்தை கணக்கிடுவதை நிச்சயமாக ஸுன்னா மறுக்காது. நோன்பை நோற்பதிலும் விடுவதிலும், உழ்ஹிய்யா கொடுக்கும் நாளை தீர்மானிப்பதிலும் காணப்படும் கருத்து வேறுபாட்டிலிருந்து முஸ்லிம் உம்மத்தை விடுவித்து….வணக்க வழிபாடுகளில் ஒன்றுபட்ட ஒரே நாளில் அனைவரும் அமல் செய்யும் ஆரோக்கியமான மாற்றத்தை கணக்கீட்டு சாதனமே தர முடியும். இந்த மாற்றம் குர் ஆன்  ஹதீஸ்களுக்கு உடன்பாடானதே.

சாதனங்கள் காலத்திற்கு காலம் மாறும்.சூழலுக்கு சூழல் மாறுபட முடியும்.அவ்வாறு மாறுவது அவசியமானதும் கூட .எனவே ஹதீஸ்கள், அச்சாதனங்களில் எதனையாவது குறிப்பிட்டு கூறுமாயின் அது யதார்த்தத்தை விளக்குவதற்காகவேயன்றி. அவற்றின் மீது நம்மை கட்டிப்போடுவதோ,அவற்றோடு நம்மை போதுமாக்கிக்கொள்வதற்கோ அல்ல.

உதாரணமாக, அல்லாஹ்வின் வழியில் போரிடுவதற்கு போர் சாதனங்களை தயார் செய்யச் சொல்கிறது அல் குர்ஆன்…

அவர்களை எதிர்ப்பதற்காக (ஆயுத) பலத்தையும், லாயத்தில் (திறமையான)  போர்க் குதிரைகளையும், உங்களுக்கு சாத்தியமான அளவு நீங்கள் (எந்நேரமும்) தயார் படுத்தி வையுங்கள்.இதனால் அல்லாஹ்வுடைய எதிரிகளையும் நீங்கள் பயப்படச் செய்யலாம்     அல் குர்ஆன்.8:60.

 

இந்த வசனத்தின் அசல் நோக்கம்,ஒரு முஸ்லிம் ஆட்சியாளர் ஒரு பலமான போர்ச் சாதனங்களை எப்போதும் தயார் நிலையில்  வைத்திருக்க வேண்டும். இந்த ஆயுத பலமே எதிரிக்கு அச்சம் ஏற்படுத்தும். அன்று குதிரைகளே போருக்கு விரைந்து செல்லும் உந்து சக்திகளாக இருந்தன.அதே குதிரைகளை இன்று ஒரு முஸ்லிம் ஆட்சியாளர், குர்ஆனில் குதிரை என்றுதான் சொல்லப்பட்டுள்ளது, எனவே எங்களுக்கு விமானம், ஏவுகணை, யுத்த டேங்க், தேவையில்லை என்று சொன்னால்… இது அறிவுக்குப் பொருத்தமாகுமா? எவரும் இப்படி அல்லாஹ்வின் வசனங்களை அனர்த்தமாக்குவதில்லை.

இதற்குக்காரணம், போர்க்குதிரைகளே அன்று அதிவிரைவு சாதனமாக இருந்தது.இன்று அதைவிட சக்தி வாய்ந்த ஒலி வேகத்தை விஞ்சிப் பறக்கும் விமானம்,ஏவுகணைகள் சாதனங்கள் இருப்பதால்..அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்ற இன்று குதிரைகள் தேவைப்படுவதில்லை.இதே நிலைதான் புறக்கண்ணில் பிறையைப் பார்ப்பதும்.நமது கண்ணை விட துல்லியமாக பார்க்க,கணக்கிட கணினிகள் வந்து விட்டதால்…இன்று புறக்கண்ணை புறக்கணித்து,  மாத துவக்கத்தை துல்லியமாக அறிந்து கொள்ள கணக்கீட்டு வழி முறையை கைக்கொள்வதே அழகிய ஸுன்னா. அல்லாஹ்வின் மார்க்கம் சொல்லும் கட்டளையும் இதுவே.

கணக்கீட்டு அறிவை பயன்படுத்து.

ரமலான் பிறையை நீங்கள் காணும்வரை நோன்பு நோற்காதிர்கள்; பிறையை காணும்வரை நோன்பை விடாதீர்கள்; உங்களுக்கு மறைக்கப்பட்டால் (முப்பது  நாள்களாக) அதைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். புஹாரி, முஸ்லிம், நஸாயி, இப்னுமாஜா, முஸ்னத் அஹ்மத், தாரமி,

ஏராளமான ஹதீஸ் நூல்களில் இச்செய்தி பதியப்பட்டுள்ளது.இதன் அரபி வாசகத்திற்கு ஆங்கில மொழி பெயர்ப்புகள் எப்படி பொருள் தருகின்றன என்றால்,

 

“அத்தரு“ என்னும் சொல்லானது “ கத்ர்” மற்றும் ‘தக்தீர்” என்னும் சொல்லிலிருந்து பிறந்ததாகும்.அதன் பொருள் கணக்கிடு (மதிப்பிடு), வேறோன்றோடு ஒத்திருக்கும் ஒருபொருள், அதிகாரமோ ஆதிக்கமோ வழங்குதல்,ஏதேனும் ஒன்றின் நேர்மை, அல்லது செல்லக்கூடிய தன்மை பற்றி சிந்தித்தல், குறிப்புகள் மற்றும் அடையாளங்கள் மூலமாக முடிவு காணல்., அல்லாஹ்வின் விதி அல்லது முடிவு.  – லிசானுல் அரப்.V.5.PP 74-75.

இப்படி பல பொருள் இருப்பதாலேதான் இந்த ஹதீசை அதாவது, மறைக்கப்பட்டால், தடையிருந்தால், உங்கள் அறிவையும், விவேகத்தையும் பயன்படுத்தவும். (is “use discretion or reasoning, if there is anything overcasts”) என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கிறார்கள். வெற்றுக்கண்ணில் மூன்றாம் நாள் பிறைப்பார்த்து அதை முதல் நாளாக கணக்கிடும் மூடத் தன்மையை விட்டு, அறிவை, அறிவியல் கணக்கீட்டை பயன்படுத்தச்  சொல்கிறார்கள்.

முதுபெரும் ஹதீஸ் துறை  அறிஞரான அல்லாமா செய்கு அஹமது ஷாகிர் (ரஹ்) அவர்கள், இவ்விவகாரத்தை வேறொரு கோணத்தில் அணுகுவதை பார்ப்போம்.

“பிறையை கண்ணால் பார்த்தல்” என்பது ஓர் “இல்லத்” எனும் காரணத்துடன் தொடர்பு பட்ட அம்சமாகும். அந்த “இல்லத்”தை ஸுன்னாவே குறிப்பிட்டு காட்டியுள்ளது. எனினும், இப்போது புறக் கண்ணால் மட்டுமே பார்க்க முடியும் என்ற நிலை மாறிவிட்டதால் அதன் அடிப்படையாக கொண்டுவந்த சட்டமும் இல்லாமல் போய்விடுவது அவசியமாகி விடுகிறது. எப்போதும் ஒரு சட்டம் அதற்குரிய “இல்லத்” உடன் சம்பந்தப்பட்டே வரும்.என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும்.

இந்த சிந்தனையின் அடிப்படையிலேயே வானவியல் கணக்கீட்டு மூலம் சந்திர மாதம் துவங்குவதை உறுதிப்படுத்த முடியும் என்ற கருத்துக்கு அவர் வருகிறார். பலமும் தெளிவும் கொண்ட அவரது கூற்றை அப்படியே இங்கு தருவது பொருத்தமாக அமையும். அவாயிலுஷ் ஷு ஹுர் அல் அரபிய்ய என்ற கட்டுரையில் அவர் கூறுவதை பார்ப்போம்.

“இஸ்லாத்திற்கு முன்னரும், இஸ்லாத்தின் ஆரம்ப காலத்திலும் வானவியல் கலைகளைப் பற்றிய விஞ்ஞான பூர்வமான அறிவை அரபிகள் பெற்றிருக்கவில்லை. என்பதில் எவ்வித ஐயமுமில்லை. எழுதவோ, எண்ணவோ தெரியாத உம்மீ சமூகமாகவே அவர்கள் இருந்தார்கள்.

.மாதம் என்பது இருபத்தொன்பதாகும் எனவே பிறையைப் காணும்வரை நோன்பு நோற்க வேண்டாம், அதனைக் காணும் வரை நோன்பு நோற்பதை நிறுத்த வேண்டாம். அது உங்களுக்கு தெரியாது போனால் அதனைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.’’— புஹாரி,முஸ்லிம்.

 

நமது ஆரம்ப கால அறிஞர்கள் இந்த ஹதீஸின் பொருளை சரியாக (தப்ஸீர்) விளக்கினாலும், இதற்கு வியாக்கியானம் (தக்வீல்) கொடுக்கும் விசயத்தில் தவறிழைத்து விட்டனர். இவ்விசயத்தில் அவர்கள் அனைவரது அபிப்பிராயத்தையும் மொத்தமாக வெளிப்படுத்தக் கூடியதாக அல் ஹாபிழ் இப்னு ஹஜ்ரின் கூற்று காணப்படுகிறது.

“கணிப்பீடு (அல்-ஹிஸாப்) என்பதன் மூலம் இங்கு நாடப்படுவது நட்சத்திரங்களையும் அவற்றின் அசைவுகளையும் பற்றிய கணிப்பீடாகும் அவர்கள் இவ்விசயம் பற்றி மிகக் குறைவாகவே அறிந்து வைத்திருக்கின்றனர். எனவேதான், நோன்பு மற்றும் ஏனைய வணக்கங்கள் பற்றிய தீர்ப்பு, பிறையை கண்ணால் பார்ப்பதோடு தொடர்பு  படுத்தப்பட்டது. நட்சத்திரங்களின் அசைவு பற்றி அறிந்து கொள்வதிலுள்ள சிரமத்தை நீக்குவதே இதன் நோக்கமாகும்.

பின்னர் இவ்வறிவு பெற்றோர் தோன்றினாலும், நோன்பு நோற்றல் தொடர்பான தீர்ப்பு பழையபடி தொடர்ந்தது  மட்டுமின்றி, ஹதீஸின் வெளிப்படையான வசனப்போக்கு, இத்தீர்ப்பை நட்சத்திரங்களின் கணிப்பீடுடன் தொடர்புபடுத்துவதை முற்றாக மறுப்பது போலவும் அமைந்திருக்கிறது. ஏற்கனவே குறிப்பிடப்பட்ட ஹதீசிலுள்ள “உங்கள் பார்வைக்கு அது தென்படாவிட்டால் எண்ணிக்கையை முப்பதாக பூரணப்படுத்துங்கள்.” என்ற பகுதி இதனை காட்டுவதாய் உள்ளது.

அல் பாஜி கூறுகிறார், “ பிறை பார்த்தலில் நட்சத்திரங்களை தொடர்பு படுத்துவது சஹாபா பெருமக்களின் கூற்றுக்கு முரணாக உள்ளது. இப்னு பஸீஸா கூறுகிறார்கள், “ இது பிழையான போக்காகும். நட்சத்திரக் கலையில் ஈடுபடுவதை ஷரியத் தடுத்துள்ளது. ஏனெனில் அது வெறும் யூகமும் அனுமானமும் ஆகும். அதில் திட்டவட்டமான தன்மையோ, சாத்தியப்பாட்டுத் தன்மையோ கிடையாது. ஆக இங்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டிய அம்சம் “கண்ணால் பார்த்தல்” என்பதே தவிர நட்சத்திர கணிப்பீடல்ல, என்ற இவ்விளக்கம் சரியாக இருப்பினும்,  இத்துறை பற்றி அறிந்தவர்கள் தோன்றிய பிறகும் கூட “கண்ணால் பார்த்தலின்” அடிப்படையிலேயே நோன்பு பற்றிய தீர்ப்ப  வழங்கப்பட வேண்டும் என்ற வியாக்கியானம் (தக்வீல்) தவறானதாகும்.

ஏனெனில் இவ்விசயத்தில் கண்ணால் என்னும் கட்புலனில் மாத்திரம் தங்கி இருக்கவேண்டும் என்ற கட்டளையானது குறிப்பிட்டதோர் “இல்லத்” உடன் இடம் பெற்றதாகும். சமூகம் எழுதவோ, எண்ணவோ தெரியாத உம்மீ சமூகமாக இருந்தது என்பதே அந்த “இல்லத்” (காரணம்) ஓர் காரணமும்,அந்த காரணத்தினால் உருவான சட்டமும் (மக்லூல்) எப்போதும் இணை பிரியாதவை.”இல்லத்” இருக்கும்போது “மக்லூல்” சட்டமும் இருக்கும். இல்லத் நீங்கி விட்டால் சட்டமும் நீங்கி விடும். அந்த வகையில், ஒரு உம்மீ சமூகம் தனது எழுத்தறிவற்ற நிலையிலிருந்து விடுபட்டு, எழுதவும், படிக்கவும், உடைய அறிவாற்றலை பெற்றுக்கொள்ளுமாயின், அதாவது முழு சமூகமும் வானியல் கலைகளைப் பற்றிய அறிவைப் பெற்று…

அதிலுள்ள படித்தவர்களும்,பாமரர்களும்,மாதத்தின் தொடக்கத்தை கணக்கிடுவதில் திட்டவட்டமான ஒரு நிலைப்பாட்டிற்க்கு வர முடியுமாயின், கண்ணால் பார்த்தல் என்ற தேவை இல்லாமல் போய்விடும் போது; பார்க்க வேண்டும் என்ற சட்டமும் போய்விடும். ஏனெனில் கண்ணால் பார்த்தலை விட கணினி மூலம் கணக்கீடும முறை பலமானது, நம்பத்தகுந்தது. ஆகவே கணக்கீட்டு முறைக்கு சமூகம் மாறுவது கடமையாகும். கணினி அறிவு கிடைக்கப் பெற்ற காலத்திலும் புறக்கண்ணை நம்புவதால் ஏற்படும் பிழைகளை இன்றும் நாம் கண்கூடாக கண்டு வருகிறோம்.

இவ்வருட ரமளான் பிறை 16-5-2018 அன்று புதன்கிழமை துவங்கி விட்டது, கண்ணில் பார்த்துத்தான் நாளை ஆரம்பிப்பவர்கள், புதன் கிழமை மாலை மறையும் முதலாம் பிறையைக் கண்டு அடுத்த நாள் வியாழக்கிழமையை முதல் பிறை என்று ரமலானை தொடங்கினர். புதன் கிழமை மாலையில் பிறையைப் பார்க்க இயலாத இலங்கை உலமாக்கள், பிறர் பார்த்ததை ஏற்றுக்கொள்ளாமல் வெள்ளிக்கிழமை நோன்பை தொடங்கினர்.

அந்த வெள்ளிக்கிழமை மூன்றாம் பிறை இலங்கை மவுலவிகளுக்கு முதல் பிறையாக தெரிகிறது. ஆகவேதான் சொல்கிறோம்,இவர்கள் காண்பதெல்லாம் பொய் பிறையே தவிர மெய்யான அந்தநாளுக்குரிய பிறையல்ல. இந்த ஆலிம் உலமாக்களின் பிற்போக்கான புறக்கண் பார்வையால், அல்லாஹ்வின்  அருள் வழங்கும் மாதத்தின் சிறப்பான நாட்கள், குறிப்பாக ஆயிரம் மாதங்களை விட சிறந்த லைலத்துல் கத்ரை இழப்பதுடன், ஹராமான நாளில் முஸ்லிம் சமுதாயம் நோன்பு நோற்ற குற்றத்திற்கும் ஆளாக நேரிடுகிறது. அல்லாஹ்  இம்மக்களுக்கு நேர்வழி காட்டுவானாக, இவர்களின் இதயத்தை விசாலப்படுத்துவானாக.

குறிப்பு: இக்கட்டுரையின் கருத்தாக்கம் – Dr.யூசுப் அல்-கர்ளாவீ யின் ஸுன்னாவை அணுகும் முறை அடிப்படைகளும் நியமங்களும்என்ற நூலிலிருந்து எடுத்தது.

Leave a Comment

Previous post:

Next post: