அல்லாஹ்விடம் அனைத்துமே ! துல்லியமான கணக்கில் உள்ளன

in அல்குர்ஆன்

“அல்லாஹ்விடம் அனைத்துமே !” துல்லியமான கணக்கில் உள்ளன”

☪  அளவற்ற அருளாளனாகிய அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களில் ஒன்று அல் – “ஹஸீப்” (கணக்கெடுப்பவன்) என்பதாகும். (04:06, 86, 33:39, 02:202, 284, 05:04, 58:06,) ஒவ்வொரு பொருளையும் அவன் எண்ணிக்கையால் (துல்லியமாக) அறிவான். (72:28) அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் (மிகத் துல்லியமாகக்) கணக்கெடுப்பவனாக இருக்கின்றான். 04:86) அல்லாஹ் விரைந்து (அனைத்து பொருட்களையும் துல்லியமாகக்) கணக்கெடுப்பவன். (ஆவான்.  02:202, 05:04) 

☪  அனைத்துப் பொருட்களின் மீதும் அல்லாஹ் (துல்லியமாகக்) கணக்கெடுப்பதற்கு ஆற்றலுடையவன்.(02:284) அல்லாஹ் (அனைத்து விஷயங்களையும் துல்லியமாகக்) கணக்கெடுக்கப் போதுமானவன். (33:39) அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் (துல்லியமாக) அறிந்தவனாக இருக்கின்றான். (33:40) அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் (துல்லியமாகக்) கண்காணிப்பவனாக இருக்கின்றான். கடலிலும், திடலிலும், உள்ள மரம், செடி, கொடிகளில் இருந்து ஓர் இலை உதிர்வதும் அவனது (துல்லியமான) கணக்கில் உள்ளது, அவன் அறியாமல் ஓர்இலை கூட உதிர்வதில்லை. (06:59) என்ற தொடருக்கு; 

☪  இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்; நிலத்திலும், நீரிலும், உள்ள ஒவ்வொரு மரத்திற்கும் ஒவ்வொரு வானவர் நியமிக்கப்பட்டுள்ளார். அம் மரத்திலிருந்து (உதிர்ந்து) கீழே விழுகின்ற (ஒவ்வொரு) இலைகளை (யும்) அவர் பதிவு செய்கிறார் என்று விளக்கம் அளித்துள்ளார்கள். (தஃப்ஸீர் இப்னு அபீஹாத்திம்,  தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம்  – 03: பக்கம்  – 460) எனவே; 

☪  நிலத்திலும் நீரிலும் உள்ளவற்றை (எல்லாமே) அவன் அறிகின்றான். அவன் அறியாமல் ஓர் இலை கூட உதிர்வதில்லை.  பூமியின் காரிருளில் உள்ள எந்த வித்தும், ஈரமான மற்றும் காய்ந்த எந்தப் பொருளும் தெளிவான பதிவேட்டில் (துல்லியமாக) இல்லாமலில்லை. (06:59) அதாவது தரையிலும், கடலிலும், வாழ்கின்ற அனைத்து உயிரினங்களையும், உயிரற்ற ஒவ்வொரு பொருட்களையும் முழுமையாக அல்லாஹ் அறிகின்றான்.  அவற்றில் எதுவும் அவனது (துல்லியமான) அறிவிலிருந்து தப்பிவிடாது. 

☪  கடலிலுள்ள, பூமியிலுள்ள, வானத்திலுள்ள, பால்வெளி மண்டலத்திலுள்ள, கோள்கள்,  கிரகங்கள், நட்சத்திரங்கள், அனைத்திலுமுள்ள ஓர் அணுகூட, ஏன் அணுவின் ஒரு துகள்கூட, அவனுடைய விசாலமான, துல்லியமான, அறிவிலிருந்து மறைந்து விடாது. மண்ணின் எண்ணிக்கையையும் அதன் துல்லியமான கணக்கையும் அறிந்தவன். மனிதர்கள் உட்பட ஒவ்வோர் உயிரினங்களின் உரோமங்களின் எண்ணிக்கையையும் அல்லாஹ் துல்லியமாக அறிந்தவன்.  (72:28, 03:05, 41:47, 06:59) 

☪  பூமியின் (ஆழத்தில் அடர்ந்த) காரிருளில் உள்ள எந்த வித்தும் ஈரமான, மற்றும் காய்ந்த எந்தப் பொருளும் (துல்லியமான கணக்கின் அடிப்படையில்) தெளிவான பதிவேட்டில் இல்லாமலில்லை. (06:59) பூமியிலுள்ள ஒவ்வொரு மரத்திற்கும்,  அதிலே ஊசி துளையிடும் (ஒவ்வொரு) துவாரத்திற்கும் கூட ஒவ்வொரு வானவர் நியமிக்கப் பட்டுள்ளார். மரம் ஈரப்பதத்துடன் இருக்கும் போதும் காய்ந்த நிலையில் இருக்கும் போதும் அதன் நிலைகளை எல்லாம் அந்த வானவர் அல்லாஹ்விடம் சமர்ப்பிப்பார். என்று அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ் (ரழி) அவர்கள் தெரிவிக்கின்றார்கள். (தஃப்ஸீர் இப்னு அபீஹாத்திம்  – தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம்  – 03:460)

☪  வானத்திலோ, பூமியிலோ, உள்ள எந்தப் பொருளும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கு (எண்ணிக்கை அளவில் துல்லியமாகத்) தெரியாமலில்லை. (03:05) அவன் அறியாமல் பழங்களில் எதுவும் அவற்றின் கிளைகளில் இருந்து வெளிப்படுவதில்லை. எந்தப் பெண்ணும் கர்ப்பம் அடைவதோ பிரசவிப்பதோ இல்லை. (41:47) வானங்களிலோ பூமியிலோ உள்ளவற்றில் ஓர் அணுவளவும் உமது இறைவனாகிய அவனை விட்டும் மறைந்து விடுவதில்லை. அதை விடச் சிறியதா (ன அணுவின் துகளா) யினும் அல்லது பெரியதாயினும் விளக்கமாக அவனது (லவ்ஹூல் மஹ்பூல் எனும்) ஏட்டில் (துல்லியமாகப்) பதிவு செய்யப்படாமல் இல்லை.  (34:03, 10:61, 54:53) வானங்களிலும், பூமியிலும், உள்ள அணுவின் அளவு அல்லது அதைவிடச் சிறியதான அணுவின் துகளளவு அற்பமான பொருளும் கூட அவனது அறிவில் இருந்தும் பார்வையில் இருந்தும் துல்லியமான அவனது கணக்கில் இருந்தும் தப்ப முடியாது. 

☪  அவனே எல்லாப் பொருட்களையும் படைத்து அவற்றை அதனதன் அளவுப்படி (துல்லியமாகக் கணக்கிட்டு) அமைத்தான். (25:02) ஒவ்வொரு பொருளையும் (துல்லியமாகக்) கணக்கிட்டு நாம் படைத்துள்ளோம். (54:49) ஒவ்வொரு பொருளுக்கும் அதற்கான அமைப்பை (க் கணக்கின் பிரகாரம் துல்லியமாக) வழங்கி பின்னர் வழிகாட்டி இருக்கின்றானே அவன்தான் எங்கள் இறைவன் என்று (இறைத்தூதரான மூஸா) கூறினார். (20:50) 

“வானங்களையும், பூமியையும்,  படைத்ததற்குத்  துல்லியமான  கணக்குண்டு”

☪  உங்கள் இறைவன் அல்லாஹ் ஆவான். அவனே வானங்களையும்,  பூமியையும், ஆறு நாட்களில் படைத்தான். (07:54, 11:07, 10:03, 25:59, 32:04, 50:38, 57:04, 50:49, 41:09, 10, 12) என்றும்; 

☪  இரண்டு நாட்களில் அல்லாஹ் வானங்களை ஏழாக அமைத்தான். (41:12) இரண்டு நாட்களில் அவன் பூமியைப்படைத்தான். (41:09) பூமியில் மலைகளையும் நிறுவி உயிரினங்களுக்குத் தேவையான வாழ்வாதாரங்களையும் இரண்டு நாட்களில் அவன் படைத்தான்.  (41:10) இதில்; ஞாயிறு,  திங்கள்,  ஆகிய இரு நாட்களில், பூமியையும், செவ்வாய், புதன், ஆகிய இரு நாட்களில் உயிரினங்களுக்குத் தேவையான வாழ்வாதாரங்களையும், வியாழன், வெள்ளி, ஆகிய இரு நாட்களில் ஏழு வானங்களையும், படைத்தான். சனிக்கிழமை அன்று படைக்கும் பணி நடை பெறவில்லை. ஏனெனில் அது வாரத்தின் இறுதி நாளாகும். இதை முன்னிட்டே சனிக்கிழமைக்கு அரபி மொழியில் “யவ்முஸ் ஸப்த்” என்று சொல்லப்படுகிறது “ஸப்த் என்றால் (இயக்கத்தை) நிறுத்துதல் என்பது பொருளாகும். (இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) முஜாஹித் (ரஹ்) தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம்  – 03: பக்கம்  – 779, பாகம்  – 04: பக்கம்  – 589, சிறு குறிப்பு 12 – ஆவது) 

“குகைவாசிகள்  அங்கு தங்கிய  நாட்களின்  துல்லியமாக  கணக்கும் அல்லாஹ்விடம்  மாத்திரமே”

☪  அவர்கள் முந்நூறு ஆண்டுகள் தமது குகையில் தங்கியிருந்தார்கள். மேலும் ஒன்பது ஆண்டுகள் கூடுதலாக இருந்தார்கள். (ஆனாலும் நபியே! ) அவர்கள் (அங்கு) தங்கியிருந்த (அந்தக் காலத்) தை அல்லாஹ்வே (துல்லியமாக) நன்கறிந்தவன். (18:19, 25, 26, ) ஆவான். 

“குகைவாசிகளின்  துல்லியமான  எண்ணிக்கையையும்  அல்லாஹ்  தான் சரியாக  அறிந்தவன்” 

☪  (குகைவாசிகள்) மூவர்: நான்காவது அவர்களின் நாய் என்று (சிலர்) கூறுகின்றார்கள்; (வேறு சிலர்; அவர்கள்) ஐவர் ஆறாவது அவர்களின் நாய் என்று கூறி மறைவானதை நோக்கிக் கல் எறிகின்றார்கள். (அவர்கள்) ஏழுபேர் என்றும், எட்டாவது அவர்களின் நாயாகும் என்றும் (இன்னும் சிலர்) கூறுகின்றார்கள். (ஆனாலும் நபியே!) அவர்களின் (துல்லியமான) எண்ணிக்கையை எனது இறைவனே நன்கறிந்தவன் என்று கூறுவீராக. (18:22) 

“உஸைர் (அலை) அவர்களை  இறக்கச்  செய்தது  நூறு  ஆண்டுகள்  என்பது அல்லாஹ்வின்  கணக்கு” 

☪  அல்லது ஒரு கிராமத்தைக் கடந்து சென்றவரை (நீர் அறிவீரா?”) அந்தக் கிராமம் எவருமே இல்லாத நிலையில் அடியோடு வீழ்ந்து கிடந்தது.  (மடிந்துவிட்ட இந்த ஊரை) அது மடிந்தபின் எவ்வாறு அல்லாஹ் உயிர்ப்பிக்கப்போகிறான்?” என்று அவர் கூறினார். அப்போது அவரை அல்லாஹ்  நூறு ஆண்டுகள் வரை இறக்கச் செய்தான். பின்னர் அவரை எழுப்பி “எவ்வளவு காலம் (இங்கே) தங்கியிருந்தீர்?” என்று கேட்டான். அதற்கு அவர். ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறிதளவு நேரம் தங்கியிருப்பேன்” என்று கூறினார்.  “இல்லை; நூறாண்டுகள் இங்கே நீர் தங்கிவிட்டீர். இதோ உமது உணவும் பானமும் கெட்டுப்போகாமல் இருப்பதைக் காண்பீராக. (செத்துப்போன) உமது கழுதையையும் பார்ப்பீராக. மக்களுக்கு உம்மை ஒரு சான்றாக நாம் ஆக்குவற்காகவே (இவ்வாறு செய்தோம்) இன்னும் (அந்தக் கழுதையின்) எலும்புகளை நாம் எவ்வாறு இணைத்து. பின்னர் அவற்றில் சதையை அணிவிக்கின்றோம் என்பதைக் கவனிப்பீராக” என்று அவன் கூறினான்.  அவருக்கு இது தெளிவானபோது. “அல்லாஹ் அனைத்துப் பொருள்கள்மீதும் பேராற்றலுடையவன் என்பதை நான் அறிகின்றேன்” என்று கூறினார். (02:259, அலீ பின் அபீதாலிப் (ரழி) இப்னு அப்பாஸ் (ரழி) கத்தாதா (ரஹ்) ஹஸன் அல்பஸ்ரி (ரஹ்) இப்னு ஜரீர் (ரஹ்) முஜாஹித் (ரஹ்) தஃப்ஸீர் மாஜிதீ, அல்முன்ஜித், தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம்  – 01: பக்கம்  – 843 – 847, 

“மூஸா (அலை) அவர்களுக்குத்  தவ்ராத்தை  வழங்குவதற்காக 
வாக்களித்த  அல்லாஹ்வின்  கணக்கு  நாற்பது  நாட்களாகும்”

☪  (ஸினாய் மலைக்கு வந்து “தவ்ராத்தை” பெற்றுச் செல்வதற்காக) மூஸாவுக்கு நாம் முப்பது நாட்களை வாக்களித்தோம். பின்னர் பத்தைச் சேர்த்து அவற்றை (நாற்பதாக) நிறைவு செய்தோம். எனவே அவருடைய இறைவன் நிர்ணயித்த கால அளவு மொத்தம் நாற்பது நாட்களானது. (07:142, 02:52) 

☪  எழுத்து வடிவிலான தவ்ராத்தை, முப்பது நாட்களில் வழங்குவதற்காகத் “தூர்” எனும் ஸினாய் மலைக்கு வருமாறு இறைத்தூதரான மூஸா (அலை) அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டான். பின்னர் மேலும் பத்து நாட்கள் அதிகமாக்கி நாற்பது நாட்களாக நிறைவு செய்தான். அந்த முப்பது நாட்களும் மூஸா (அலை) அவர்கள் உண்ணாது நோன்பு இருந்தார்கள். அந்தக் கால அளவு நிறைவடைந்ததும் ஓரு மரத்தின் குச்சியால் பல் துலக்கினார்கள். ஆனால் மேற்கொண்டும் பத்து நாட்கள் நோன்பு நோற்று நாற்பது நாட்களாக நிறைவு செய்யுமாறு அவர்களுக்கு அல்லாஹ் உத்தரவிட்டான். அந்த முப்பது நாட்கள் என்பது துல்கஃஅதா மாதம் என்றும், பின்னர் துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்கள் என்றும் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (தஃப்ஸீர் தபரீ.   தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம் – 03: பக்கம்  – 884,) மேலும் இவை குறித்து விவிலியம் பழைய ஏற்பாட்டில் பின்வருமாறு காணப்படுகிறது. அங்கே அவர் அப்பம் புசியாமலும் தண்ணீர் குடிக்காமலும் இரவும் பகலும் நாற்பது நாள் கர்த்தரோடே இருந்தார். யாத்திராகமம் 34:28, தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம்  – 01: பக்கம்  – 206) 

“மூஸா (அலை) அவர்கள்  மணமுடிக்க  மஹராக  எட்டு  ஆண்டுகள்  கூலி  வேலை செய்தார்கள்  என்று  அல்லாஹ்வின்  கணக்கு” 

☪  அதற்கு அவர் (மூஸாவிடம்) நீர் எனக்கு எட்டு ஆண்டுகள் வேலை செய்யவேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் என்னுடைய இவ்விரு புதல்வியரில் ஒருவரை நான் உமக்கு மணமுடித்துத் தர விரும்புகிறேன் நீர் பத்து ஆண்டுகளாகப் பூர்த்தி செய்தால் அது உமது விருப்பம் நான் உம்மைச் சிரமப்படுத்த விரும்பவில்லை. அல்லாஹ் நாடினால் நீர் என்னை நல்லவர்களில் ஒருவனாகவே காண்பீர் என்று கூறினார். (28:27, இப்னு அப்பாஸ் (ரலி) சயீத் பின் ஜுபைர் (ரஹ்)  புகாரி – 2684, ) 

“யூனூஸ் (அலை) அவர்களை  ஒரு  இலட்சத்திற்கும்  அதிகமானோருக்குத் தூதராக  அனுப்பியதாக  அல்லாஹ்வின்  கணக்கு”  

☪  அவரை ஒரு இலட்சம் அல்லது (அதைவிட) அதிகமானோருக்குத் தூதராக அனுப்பினோம். (37:147,) என்பதில்; 

ஒரு இலட்சத்தைவிட இருபதாயிரம் பேர் கூடுதலாக இருந்தனர். என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக, உபை பின் கஅப் (ரலி) அவர்கள் தெரிவித்துள்ளார்கள். (ஜாமிஉத் திர்மிதி – 3153, தஃப்ஸீர் தபரி,  தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம்  – 07: – பக்கம்  – 787 – 789) விரிவுரையாளர் இப்னு ஜரீர் (ரஹ்) அவர்களுடைய கருத்தும் இதுவேயாகும். 

ஒரு இலட்சத்து முப்பதாயிரம் பேர் இருந்தனர் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தெரிவித்துள்ளார்கள். 

ஒரு இலட்சத்து எழுபதாயிரம் பேர் இருந்தனர். என்று சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் தெரிவித்துள்ளார்கள். 

ஒரு இலட்சத்துப் பத்தாயிரம் பேர் இருந்தனர். என்று மக்ஹூல் (ரஹ்) அவர்கள் தெரிவித்துள்ளார்கள். (தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம்  – 07: – பக்கம்  – 787 – 789) ஆனாலும் அவர்களின் எண்ணிக்கையைத் துல்லியமாக அறிந்தவன் அல்லாஹ் மாத்திரமே. 

“பாகப்பிரிவினையின்  துல்லியமாக  பின்னல்  கணக்கு  அல்லாஹ்வின்  வசமே” 

☪  பாகப்பிரிவினை அல்லது சொத்துப் பங்கீடு என்பது குடும்பத்திலும், சமூகத்திலும், மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் முக்கியமானதொரு பிரச்சினை ஆகும்.  பாகப்பிரிவினை அவரவர்க்கு ஏற்ப நீதியோடும், நேர்மையோடும், இறை ஆணைப்படி  நடக்காவிட்டால் தலைமுறை தலைமுறைக்கு அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும். இந்த நேர்மையான, விரிவான, வினோதமான, பின்னல் கணக்கீட்டு முறையானது அல்லாஹ் இறுதியாக அருளிய குர்ஆனில் மாத்திரமே தவிர வேறு வேதங்களிலோ, மனிதர்கள் இயற்றிய சட்டங்களிலோ, முழுமையாகக் கிடையாது, தவிரவும் குர்ஆன் கூறும் இந்த பங்கீட்டு முறையை எல்லாம் வல்ல இறைவன் வகுத்த துல்லியமான விதியாகும், இதில் அல்லாஹ் அல்லாத வேறு எவரது தலையீடும் இல்லை, இது அவனது அற்புதப் பின்னல் கணக்கு. அல்லாஹ் ஜல்லஜலாலஹுவின் துல்லியமான கணக்கீட்டில் எவ்வித குளறுபடிகளும், குழப்பங்களும், சந்தேகங்களும், அறவே வராது. அவன் தீர்க்க ஞானமுடையவன். 1443, ஆண்டுகளாக புத்தி ஜீவிகளுக்கு இது சவாலான துல்லியமான கணக்கு முறையாகும். அவையாவன; 

☪  ஓர் ஆணுக்கு இரண்டு பெண்களின் பாகத்திற்குச் சமனானது கிடைக்கும் என உங்கள் பிள்ளைகள் விஷயத்தில் உங்களுக்கு அல்லாஹ் அறிவுறுத்துகின்றான். (இரண்டு,  அல்லது) இரண்டுக்கும் மேற்பட்ட பெண்கள் இருந்தால் (பெற்றோர்) விட்டுச் சென்ற (சொத்) தில் மூன்றில் இரண்டு பாகங்கள் அவர்களுக்குக் கிடைக்கும்.  ஒரே ஒரு பெண் (மட்டும்) இருந்தால் (சொத்தில்) பாதி அவளுக்குக் கிடைக்கும். (இறந்த) அவருக்கு மக்கள் இருந்தால் அவர் விட்டுச்சென்ற (சொத்) திலிருந்து அவருடைய பெற்றோர் ஒவ்வொருவரும் ஆறில் ஒரு பாகம் கிடைக்கும். அவருக்கு மக்களே இல்லாமலிருந்து அவருடைய பெற்றோர் (மட்டுமே) அவருக்கு வாரிசுகளாக இருந்தால் அவருடைய தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் கிடைக்கும் (ஆனால்) அவருக்குச் சகோதரர்கள் இருந்தால் அவருடைய தாய்க்கு ஆறில் ஒரு பாகமே கிடைக்கும். (இவ்வாறு சொத்துப் பங்கீட்டு செய்வதெல்லாம்) அவர் தெரிவித்த இறுதி விருப்பத்தையும் (அவரது) கடனையும் நிறைவேற்றிய பிறகுதான். உங்கள் பெற்றோர் மற்றும் உங்கள் பிள்ளைகளில் உங்களுக்குப் பலன் அளிப்பதில் யார் மிகவும் நெருக்கமானவர்கள் என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள் (துல்லியமான இந்தப் பங்கீட்டு முறையானது) அல்லாஹ்வினால் விதிக்கப் பட்டதாகும். அல்லாஹ் நன்கறிந்தவனாகவும் ஞானமிக்கவனாகவும் இருக்கின்றான். (04:112,) தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம்  – 02:403 – 424, புகாரி  – 4577, 5651, 5676, 6723, 6743, 7309, 2747, 4578, 6739, 2749 – துக்கு முன்னுள்ள குறிப்புரை. முஸ்லிம். திர்மிதி. அபூதாவூத். இப்னு மாஜா. முஸ்னத் அகமத். தஃப்ஸீர் இப்னு அபீஹாத்திம்.) 

☪  உங்கள் மனைவியருக்குக் குழந்தை (கள்) இல்லாவிட்டால் அவர்கள் விட்டுச் சென்ற (சொத்) தில் பாதி உங்களுக்குக் கிடைக்கும். அவர்களுக்குக் குழந்தை (கள்) இருந்தால் அவர்கள் விட்டுச் சென்ற (சொத்) தில் நான்கில் ஒரு பாகமே உங்களுக்குக் கிடைக்கும். (இந்தப் பங்கீடெல்லாம்) அவர்கள் தெரிவித்த அறுதி விருப்பம் மற்றும் (அவர்களின்) கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பிறகு தான். மேலும் உங்களுக்குக் குழந்தை (கள்) இல்லாவிட்டால் நீங்கள் விட்டுச் சென்ற (சொத்) தில் எட்டில் ஒரு பாகமே அவர்களுக்குக் கிடைக்கும். (இதுவும்) நீங்கள் தெரிவித்த இறுதி விருப்பம் மற்றும் (உங்களின்) கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பிறகுதான். (இறந்துவிட்ட) ஓர் ஆண் அல்லது ஒரு பெண் (தந்தை, பாட்டன் ஆகிய) மூல வாரிசுகளும் (மகன், பேரன், ஆகிய) கிளை வாரிசுகளும் இல்லாதவராக இருந்து இவருக்குச் சகோதரனோ அல்லது சகோதரியோ இருந்தால் அவ்விருவரில் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் கிடைக்கும். அதைவிட அதிகமானவர்களாக அவர்கள் இருந்தால் மூன்றில் ஒரு பாகத்தில் அவர்கள் பங்குதாரர்களாக ஆவார்கள். (இந்தப் பங்கீடெல்லாம்) அவர் தெரிவித்திருந்த இறுதி விருப்பம் மற்றும் (அவரது) கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பிறகுதான். (இது யாருக்கும்) பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் (அமைய) வேண்டும். இது அல்லாஹ்வின் (துல்லியமான) சாசனமாகும்.அல்லாஹ் நன்கறிந்தவனும் சகிப்புத் தன்மை மிகுந்தவனும் ஆவான். (04:12) மேலும்; (வரைபடங்களுடன் கூடிய மேலதிக முழுமையான விபரங்களுக்குப் பார்க்க;  தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம்  – 02:403 – 424, புகாரி  – 4577, 5651, 5676, 6723, 6743, 7309, 2747, 4578, 6739, 2749 – துக்கு முன்னுள்ள குறிப்புரை. முஸ்லிம். திர்மிதி. அபூதாவூத். இப்னு மாஜா. முஸ்னத் அகமத். தஃப்ஸீர் இப்னு அபீஹாத்திம்.) 

“படைப்பதற்கு  முன்னரே  விதிகள்  அனைத்தும்  அவனது  துல்லியமான கணக்கீட்டில்”

☪  படைப்புகளின் விதியை அல்லாஹ் வானங்களையும், பூமியையும், படைப்பதற்கு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதிவிட்டான். என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அம்ரு இப்னு ஆஸ் (ரழி) முஸ்லிம், திர்மாதி,) 

“காலங்கள்  அனைத்தும்  அவனது  துல்லியமான  கணக்கின்  அடிப்படையில்; 

☪  நிச்சயமாக அல்லாஹ்விடம் மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் வானங்களையும் பூமியையும் அல்லாஹ் படைத்த நாளிலேயே அவனது பதிவேட்டில் (இவ்வாறே பதியப்பட்டுள்ளது. (09:36) 

“புனிதமான  மாதங்கள்  அனைத்தும்  அல்லாஹ்வின்  துல்லியமான  கணக்கில் ” 

☪  …. அவற்றில் (ரஜப், துல்கஃஅதா, துல்ஹஜ், முஹர்ரம், ஆகிய) நான்கு (மாதங்கள்) புனிதமானவை (களாகும்) 09:36, நபித்தோழர்களான அபூபக்ரா (ரழி) இப்பனு உமர் (ரழி) ஆகியவர்கள் கூறியதாவது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தாம் செய்த) விடைபெறும் ஹஜ்ஜின் போது “அய்யாமுத் தஷ்ரீக்குடைய நாட்களின் இரண்டாவது நாளில் மினாவில் வைத்து (மக்களிடையே) உரை நிகழ்த்தினார்கள் அப்போது அவர்கள். 

☪  மக்களே காலம்  என்பது வானங்களையும், பூமியையும் அல்லாஹ் படைத்த (ஆதி) நாளில் எந்த நிலையில் இருந்ததோ, அதே (அசல்) நிலைக்கு இன்று (திரும்பி) வந்துவிட்டது. அல்லாஹ்விடம் மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை. அவற்றில் முந்தியது ஜமாதுல் ஆகிராவுக்கும் ஷஃஅபானுக்கும், இடையிலுள்ள, முளர் குலத்தாரின் “ரஜப்” ஆகும். அதையடுத்து துல்கஃஅதா, துல்ஹஜ், முஹர்ரம், ஆகியவையாகும். என்று குறிப்பிட்டார்கள். (புகாரி – 3197, 4406, 4662, 5550, 7447,முஸ்லிம், 3467, தஃப்ஸீர் தபரி,  தஃப்ஸீர் இப்னு மர்த்தவைஹி, தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம்  – 04″261 – 269) 

“சூரினும்,  சந்திரனும்,  அல்லாஹ்வின்  துல்லியமான  கணக்கின்  படியே இயங்குகின்றன”

☪  சூரியனும், சந்திரனும், (அவற்றுக்கு அல்லாஹ் நிர்ணயித்த துல்லியமான) கணக்கின்படியே இயங்குகின்றன. (55:05, 16:12, 17:12, 36:39, 40, 06:96, 10:05) 

“சூரியன்,  சந்திரனுடைய,  துல்லியமான  கணக்கின்  படியான  ஓட்டமே  மனித குலத்திற்கான  நாள்  காட்டியாகும்” 

☪  சூரியனையும், சந்திரனையும், காலம் காட்டியாகவும், (அல்லாஹ்) அமைத்தான்.  (06:96) ஆண்டுகளின் எண்ணிக்கையையும் (அதன் துல்லியமான காலக்) கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அவனே சூரியனை வெளிச்சமாகவும், சந்திரனை ஒளியாகவும், அமைத்தான். (அதற்காகவே) சந்திரனுக்குப் பல நிலைகளை (யும்) ஏற்படுத்தினான். தக்க காரணத்துடன் (தான்) அல்லாஹ் இதைப் படைத்துள்ளான். (10:55, 02:189, 06;96, 07:54, 13:02, 14:33, 16:12, 21:33, 29:61, 31:29, 35:13, 36:39, 40, 39:05, 55:05, 17:12)   

“அல்லாஹ்  துல்லியமாகக்  கணக்கிட்டு  வகுத்த  வட்ட  வரையறைக்குள் சூரியனும்,  சந்திரனும்,  சஞ்சரிக்கின்றன” 

☪  தமது (வட்ட) வரையறையில் ஒழுங்காகச் செல்லும் சூரியனையும், சந்திரனையும்,  அவன்தான் உங்களுக்கு வசப்படுத்தினான். (14:33, சூரியனையும், சந்திரனையும், அவனே தனது அதிகாரத்தில் வைத்துள்ளான். அவை தமது வட்ட வரையறையில் (மிக நேர்த்தியாக) சுழல்கின்றன. (13:02) சூரியன்,  சந்திரனை (நெருங்கிப்) பிடிக்க முடியாது. இரவு பகலை முந்த முடியாது. இவ்வாறே எல்லா (க் கோள்களுமே தமது) வட்ட வரைக்குள் (துல்லியமாக) நீந்திச் செல்கின்றன. (36:40) சூரியன் சந்திரனை எட்டிப் பிடிக்க முடியாது. அது தனது வட்ட வரையறைக்குள் சுழல்கின்றது. (39:05) சூரியன் அது தனது வரையறையில் சுற்றிக் கொண்டுள்ளது.  (36:38, 31:29) சூரியனும், சந்திரனும், சஞ்சரிக்கும் அதே பாதையில் அடுத்த நாள் சஞ்சரிப்பதில்லை. அவை சிறிது இடம் மாறியே! அல்லாஹ் துல்லியமாக வகுத்த கணக்கின் பிரகாரம் அதன் பாதைகளில் சஞ்சரிக்கிறது என்பது இன்று நிரூபிக்கப்பட்ட அறிவியல் உன்மையாகும். உதாரணமாக;

☪  இந்திய பெரு மண்ணில் “கன்னியாகுமாரி” காந்தி மண்டபத்தில் உள்ள காந்தியின் அஸ்தி வைக்கப்பட்டுள்ள கலசத்தில் வருடா, வருடம், அவரது ஜனன தினமான அக்டோபர் மாதம் இரண்டாம் நாளாகிய அன்று மாத்திரம் சூரியனின் ஒளி குறிப்பாக அதில் விழுமாறு கணக்கிட்டு அதற்கு ஏற்ற இடத்தில்  துவாரம் ஏற்படுத்தப்பட்ட விஷயம் சாத்தியமானது எவ்வாறு எனில் சூரியன் துல்லியமான கணக்கின் படி அதன் பாதைகளில் சஞ்சரிப்பதால் தான் என்பதை அறிவியலாளரகள் எவரும் மறுக்க முடியாது. காரணம் சூரியனுக்கும், சந்திரனுக்கும், அல்லாஹ் துல்லியமாக வகுத்துக் கொடுத்த கணக்கு நூற்றுக்கு நூறு துல்லியமானது. 

☪  சூரா அல் – கஃஹ்பில் அவர்கள் முன்னூறு ஆண்டுகள் தமது குகையில் தங்கியிருந்தார். மேலும் ஒன்பது ஆண்டுகள் கூடுதலாகத் தங்கியிருந்தனர். (18:25) என்பதானது சூரிய ஆண்டுக் கணக்கின்படி முன்னூறு ஆண்டுகளும், சந்திர ஆண்டுக் கணக்கின்படி முன்னூற்றி ஒன்பது ஆண்டுகளும் ஆகும். ஏனெனில்;

☪  சூரிய ஆண்டு; 365,25, நாட்களைக் கொண்டது (அதில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் லீப் ஆண்டு 366, நாட்களைக் கொண்டதாகும்) இதன்படி நூறு ஆண்டுகளுக்கு; 36, 525 (365, 25 × 100 = நாட்கள் ஆகின்றன. 

☪  சந்திர ஆண்டு; 354, 25, நாட்களைக் கொண்டதாகும் (அதாவது சூரிய ஆண்டைவிட 11, நாட்கள் குறைவு)     இதன்படி நூறு ஆண்டுகளுக்கு  (35, 425 (354, 25 × 100 = ) நாட்களாகின்றன. மொத்தம் 1100 (36525 – 35425 = ) நாட்கள் குறைவதைக் காணலாம். இந்த 110 நாட்கள் என்பது சந்திர ஆண்டில் (110 + 354,25 = ) 3 ஆண்டுகளும் 10 நாட்களுமாகும். எனவே 100 சூரிய ஆண்டுகள் 103 சந்திர ஆண்டுகள் ஆகின்றன. இதன்படி 300 ஆண்டுகள் 309 ஆண்டுகள் ஆகும். (தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம்  – 05 – பக்கம்-  418 – சிறு குறிப்பு  – 42 ஆவது.  & – பக்கம்   419 – சிறு குறிப்பு  – 43 ஆவது.) 

☪  ஆதிகால இச்சம்பவ விதியின் அடிப்படையில் வேதக்காரர்களின் ஏடுகளில் சூரிய ஆண்டுக் கணக்கின்படி வெறும் முந்நூறு ஆண்டுகள் என்றே காணப்படுகிறது. இதனால்தான் என்னவோ வேதக்காரர்கள் தொன்று தொட்டு வெறும் சூரிய ஆண்டுக் கணக்கையே பின்பற்றி வருகிறார்கள். எனினும், அல்லாஹ் இங்கே இரண்டு கணக்குகளையும் தெளிவாகக் குறிப்பிடுகின்றான். 

☪  ஆனாலும் நான்கு வருடங்களுக்கு ஒரு நாள் கூடுவதும் (கூட்டுவதும்) 127 வருடங்களுக்குப் பின்னர் ஒரு நாள் குறைவதும்; (குறைப்பதும்) ஏனெனில்; ஆதாரபூர்வமான ஹதீஸில் வரக்கூடிய ஒரு மாத்திற்கு குறைந்த பட்ச எண்ணிக்கை 29 என்பதை மீறி 28 ஆகவும், கூடிய பட்ச எண்ணிக்கை 30 என்பதை மீறி 31 ஆகவும்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கட்டளையை (புகாரி  – 1707 – 1710, 1913,) மீறியதாகவும், ஜனவரி, பெப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, மற்றும் ஜூன், ஆகிய மாதங்கள் கிரேக்க, ரோமானிய, கடவுள்களின் பெயரால் இருப்பதனாலும், துல்லியமான கணக்கிற்கு  அவசியமான; மூன்றாவது கோளாகிய சந்திரனைத் தவிர்த்து விட்டு; சூரியன், பூமி, ஆகி இரண்டு கோள்களின் ஓட்டங்களை மாத்திரம் எடுப்பதனாலும், மேலும் ஏராளமான குறைபாடுகள் இந்த சூரிய ஆண்டு கிறிஸ்தவ காலண்டர்களில் இருப்பதை தவிர்க்க இயலாது. மேலும்; 

☪  அல்லாஹ்வே இரவேயும், பகலையும், (துல்லிய) அளவாகக் கணக்கிடுகின்றான். அதை நீங்கள் சரியாகக் கணக்கிட்டுக் கொள்ள மாட்டீர்கள் (73:20) என்று சொல்வதனாலும், இஸ்லாத்திற்கு எதிரான இந்த கிரிகோரியன் கிறிஸ்தவ காலண்டரை நிராகரித்து அல்லாஹ் சொல்லும்; இஸ்லாமிய மாதங்களைத் துவங்குவது முதல், > குழந்தைகளுக்கு பாலூட்டும் காலம். (02:223, 46:15, 65:06, 07, 31:14. > இத்தாவின் மாதகாலக் கணக்கு, 02:234, 65:04, > கொடுக்கல் வாங்கல்களை திகதியிட்டு எழுதுவது, 02:282, 283, உட்பட ஃபர்ழான நோன்புகள், 02:183 – 185, சுன்னத்தான நோன்புகள்,  பெருநாட்கள், ஹஜ் கடமையை நிறைவேற்றுதல், 02:200, 02:197, 189, புனிதமான மாதங்களச் சரியாகப் பேணுதல். 09:36, லைலதுல் கத்ர் (97:01, ஹாஜிகள் குர்பானி கொடுத்தல், 02:203, புகாரி – 1710 – 1720, 1725 – 1730, 22:02, போன்ற வணக்கங்கள் வரை அனைத்து விஷயங்களையும், பிறைகளின் படித்தரங்களை வைத்து மாதக் கணக்கைத் தீர்மானிக்குமாறு முஃமின்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டுள்ளதுடன். (02:189, 09:36, 10:05, 06:96, 55:05, 07:54, 13:02, 14:33, 16:12, 21:33, 29:61, 31:29, 35:13, 36:39, 40, 39:05,) அவனது தூதராகிய முஹம்மத் (ஸல்) அவர்களும் வலியுறுத்ததிய 

☪  அல்லாஹ் நிச்சயமாக பிறைகளின் படித்தரங்களை மனித சமுதாயத்திற்கு திகதிகளாக ஏற்படுத்தியுள்ளான். எனவே அவற்றை நீங்கள் கவனிப்பதைக் கொண்டு நீங்கள் நோன்பு வைய்யுங்கள்.  அவற்றை கவனிப்பதைக் கொண்டு நிறைவு செய்யுங்கள், எனவே அவை உங்கள் மீது மறைக்கப்பட்டால் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். (இப்னு உமர் (ரழி) இப்னு ஹூஸைமா 1787, முஸன்னஃப் அப்துர்ரஸாக்) மேலும்; 

☪  நாம் உம்மி சமுதாயமாவோம்; எழுதுவதையும் அறியமாட்டோம் விண்கலையையும் அறியமாட்டோம்; மாதம் என்பது இப்படியும், அப்படியும், இருக்கும். அதாவது சில வேளை இருபத்தொன்பது நாட்களாகவும், சில வேளை முப்பது நாட்களாகவும் இருக்கும். (இப்னு உமர் (ரழி) புகாரி  – 1913, )  எனவே; 

☪  ஒரு மாதத்தின் ஆரம்பத்தைச் சரியாக அறிந்து துல்லியமாக அதனைத் தீர்மானிப்பதற்காக அதற்கு முந்திய மாதத்தின் பிறைகளையே அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் பார்த்துக் கணக்கிட்டு வந்துள்ளார்கள் என்பதை அவர்களின் நடைமுறையைக் கொண்டும்.  நபித்தோழர்களையும் அவ்வாறே பார்த்து வரும்படி கூறினார்கள். என்பதை அவர்களின் ஏவலைக்கொண்டும் காண்போம். குறிப்பாக.

☪  ரமழானின் ஆரம்பத்தைச் சரியாக அறிந்துகொள்வதற்காக  நபி (ஸல்) அவர்கள் ஷாஃஅபான் மாதத்தின் நாட்களை மட்டும்  (குறிப்பாகக் கவனித்துக் ) கணக்கிடக் கூடியவர்களாக இருந்தார்கள் மற்ற மாதங்களின் நாட்களை அப்படிக்  (குறிப்பாக அவர்கள் ) கணக்கிடவில்லை. பின்னர் அவர்கள்மீது மறைக்கப்படும்போது அதை அவர்கள் முப்பதாவது நாள் என்று எண்ணிக் கொள்வார்கள். பிறகு (ரமழானில்) நோன்பு வைப்பார்கள். ( ஆயிஷா  (ரலி) அபூதாவூத் -1993, அஹ்மத்,) மேலும்;”

☪  ரமழானின் ஆரம்பத்தை (ச் சரியாக) அறிந்துகொள்ள “ஷாஃஅபான் “ (மாதப்) பிறைகளைக் (கவனித்துக்) கணக்கிட்டு வாருங்கள் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் -அபூ ஹுரைரா ( ரலி) திர்மிதி -687, அஹ்மத்) போன்ற அறிவுறுத்தல்களுக்கு அமைவாக தினமும் பிறைகளின் படித்தரங்களைக் கவனித்து அதனை கணக்கிடுவதே குழப்பமில்லாத சந்தேகமற்ற உறுதியான நிலையாகும். பிறை விஷயத்தில் இதை விடச் சிறந்த வழிமுறை வேறு ஒன்று வருவதற்கு சந்தர்ப்பமே இல்லாதவாறு ஆதாரங்களின் அடிப்படையில் இவ்வாஷயம் முன்னிலை வகிக்கிறது. 

☪  உன்மையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு நபித்துவம் கிடைத்தது நாற்பதாவது வயதில் எனும் பிரபலமான செய்தியானது. தெளிவான சான்றுகளை ஆராயும் போது அது பிறைக் கணக்கின்படியே, ஆகும் என்பது தெளிவாகிறது,  நாற்பது ஆண்டுகள், ஆறு மாதங்கள், பன்னிரெண்டு நாட்களுமாகும், சூரிய கணக்கின்படி 39, ஆண்டுகளும், 03, மாதங்களும், 20, நாட்களும், மாத்திரமே எனபதை நாம் கவனத்தில் கொள்வோமாக! (அர்ரஹீக் அல்மக்தூம்  – 90,) மேலும்; 

☪  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தங்களுடைய விடைபெறும் ஹஜ்ஜின் போது துல்ஹஜ் 10, ஆவது நாள் அதாவது; ஹிஜ்ரி  – 10 – 12 – 10, வியாழக்கிழமை அன்று ஆற்றிய வரலாற்றுச் சிறபுமிக்க உரையில் “அல்லாஹ் வானங்களையும், பூமியையும்,  படைத்த நாளில் இருந்த பழைய அசல் நிலைக்கே காலம் திரும்பி விட்டது; (இப்னு உமர் (ரழி) புகாரி  – 3197, 4662, 5550, 7447, 4406, முஸ்லிம்  – 3467, 4477, தஃப்ஸீர் தபரீ,  தஃப்ஸீர் இப்னு மர்தவைஹி,  தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம் – 04: பக்கம் – 261 – 269) என அறிவித்து இஸ்லாமிய மாதங்களில் உள்ள நாட்கள் எவ்விதக் குழப்பங்களுக்கும், அப்பாற்பட்டுத் துல்லியமாக உள்ளதை உம்மத்தினருக்கு உணர்த்தினார்கள். 

☪  இதன் அடிப்படையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஹஜ்ஜத்துல் விதாவின் துல்ஹஜ் 10, ஆவது நாளான, 10 – 12 – 10, வியாழக்கிழமை என்ற அளவு கோலை வைத்துத் தற்போதைய சந்திர நாட்காட்டியின் திகதிகள் சரிவரப் பொருந்திப் போகிறது?” என்பதை எவரும் பின்னோக்கிச் சென்று கணக்கிட்டுப் பார்த்துப் புரிந்து கொள்ளலாம். 

☪  எனவே குறைபாடுகளற்ற அனைத்து கணக்கீடுகளின் உரிமையாளனாகிய அல்லாஹ் இந்த மனித சமுதாயத்துக்கு அருளியுள்ள தனித்தன்மையுள்ள தினமும் துல்லியமான திகதியைக் கண்டறியும் சந்திர நாட்காட்டியை பிறைகளுடன் ஒப்பீடு செய்து பார்த்து அதனை நாமும் பின்பற்றி இன்றைய காலகட்டத்தின் தேவையைக் கருத்தில் கொண்டு மற்றவர்களுக்கும் இதன் அவசியத்தை எடுத்துச் சொல்லி அறிமுகப் படுத்தக் கடமைப்பட்டுள்ளோம். மேலும்; 

☪  அல்லாஹ் அன்பை நூறாகப் பங்கிட்டு, அதில் 99, தைத் தன்னிடம் வைத்துக் கொண்டு (அவற்றில்) ஒன்றை மாத்திரமே பூமியில் இறக்கினான். இந்த ஓர் அன்பின் பங்கினால்தான் உயிரினங்கள் அனைத்தும் பரஸ்பரம் தமக்கிடையே அன்பு காட்டுகின்றன, என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா (ரழி) புகாரி  – 6000, 6469, முஸ்னது அஹ்மத்,  இதுபோன்றே துல்லியமாகக் கணக்கிடுவதில் வல்லவனான அல்லாஹ் அவ் அறிவில் சொற்பமானதை இவ் உம்மத்தினருக்கும் அருளியதன் காரணமாக இப்போது பல்லாயிரம் ஆண்டுகளுக்கான சந்திர ஓட்டங்களை மிகவும் துல்லியமாக அறிந்து கொள்ளக்கூடிய அதி நவீன விஞ்ஞான, அறிவியல், நிறைந்த உலகில் நாம் வாழ்ந்து வருகிறோம். “அல்ஹம்துலில்லாஹ்”  ஆனாலும் கைசேதம்! 

☪  நீங்கள் சரியாகக் கணக்கிட்டுக் கொள்ள மாட்டீர்கள் (73:20) என்று அல்லாஹ் சொல்லிய, மூன்றாவது கோளாகிய சந்திரன் விடுபட்டு, சூரியன், பூமி, ஆகிய இரண்டு கோள்களின் ஓட்டங்களை மாத்திரம் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்ட கூட்டுதல், குறைத்தல், போன்ற பலவித குறைபாடுகளையுடைய,  சூரிய ஓட்டத்தைப் பல வருடத்திற்கு முன்பே கணக்கிட்டுக் காலண்டர் அடித்து வைத்துக்கொண்டு. அதில் குறிப்பிடப் பட்டுள்ள நேரங்களின் பிரகாரம்; கடிகாரத்தைப் பார்த்து பாங்கு சொல்லி; அது ஏதோ வஹி மூலம் சொல்லப்பட்டது மாதிரியும்; கடமை மாதிரியும்; கடிகாரத்தின் முள்ளோ! அல்லது டிஜிட்டல் கடிகாரத்தின் இலக்கமோ குறித்த நேரமான  இலக்கத்தை அடைந்ததும். பாங்கு,  இகாமத், இஃப்தார், ஸஹர்…. போன்றவற்றைக் கண்ணுங்கருத்துமாக நிறைவேற்றுபவர்கள். எத்தனையோ; நூறு ஆயிரம் ஆண்டுகளுக்குக் கணக்கிட்டாலும் துளிகூடக் கூட்டுவது, குறைப்பது, கூடுவது, குறைவது, போன்ற தவறுகள், குறைபாடுகள், வராத,  குர்ஆனிலிலும்,  ஹதீஸிலும், அல்லாஹ் வலியுறுத்திய, சந்திர ஓட்டத்தை அடிப்படையாகக் கொண்டு துல்லியமாகக் கணக்கிட்டுக் கொண்ட, ஹிஜ்ரிக் காலண்டரை, மறுத்துரைப்பதன் மர்மம்தான் என்ன?”  

☪  அல்லாஹ்வும், அவனுடைய தூதரும், வலியுறுத்திய துல்லியமான கணக்கீட்டின் அடிப்படையில்; சூரியன்,  பூமி, சந்திரன்,  ஆகிய மூன்று கோள்களினதும் ஓட்டத்தை வைத்துத் தயாரிக்கப்பட்ட காலண்டரைத் தமது சொந்தச் செலவில்  அறிமுகப்படுத்துபவர்கள் வெறும் காலண்டரை மாத்திரம் கண்மூடிப் பின்பற்றும்படி எச்சந்தர்ப்பத்திலும் சொல்லவில்லையே!” மாறாக; தினமும் பிறைகளின் படித்தரங்களைப் பார்த்து காலண்டரை ஒப்பீடு செய்து பின்பற்றுங்கள் என்று தானே பிரச்சாரம் செய்கின்றார்கள். இதற்கு மார்க்கத்திலும் தடை இல்லை உலக நடைமுறையிலும் தடை இல்லையே;  

☪  ஆனாலும்; குர்ஆன் ஹதீஸின் நேரிய அடிப்படை ஆதாரம் எதுவுமின்றி, பெரும்பாலும் மூன்றாவது பிறையை முதலாவது பிறையாகக் கொண்ட, ஒரு திகதிக்கு மூன்று நாட்கள்,  ஒரு நாளைக்கு மூன்று திகதிகள், பிறை 12, இல் முழு நிலவு, மாதங்களை முன்னும் பின்னுமாக மாற்றுவது காரணமாக குஃப்ரை மேலும் அதிகப்படுத்துவது (09:37) போன்ற ஏராளமான குறைபாடுகளையுடைய போலியான;  ஹிஜ்ரிக் காலண்டர், இஸ்லாமியக் காலண்டர், பிறைக் காலண்டர்,  என்ற போர்வையில்; பள்ளிவாசல்களில், மத்ரஸாக்களில், வர்த்தக நிலையங்களில், கடைகளில், வீடுகளில்…. பக்தியோடு தொங்கவிடப்பட்டுள்ள போலியான காலண்டர்களைத் தூர எறிந்து விட்டுச் சந்தேகமற்ற, துல்லியமான, ஹிஜ்ரிக் காலண்டரைப் பின்பற்றி சரியான, பொருத்தமான, நாட்களில், நல்லமல்களைச் செய்து எல்லோரும் அல்லாஹ்வுடைய மன்னிப்பையும், மகத்தான நற்கூலியையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றுதானே சொல்கின்றார்கள் சிந்திக்க வேண்டாமா?”

எஸ்,எம், அமீர், நிந்தவூர், இலங்கை.

Leave a Comment

Previous post:

Next post: