திக்ரின் பல்வேறு கோணங்கள்

Post image for திக்ரின் பல்வேறு கோணங்கள்

in பிரார்த்தனை

ஈமான் கொண்டவர்களே! கலப்பற்ற(மனதோடு) அல்லாஹ்விடம் தவ்பா செய்து, பாவமன்னிப்புப் பெறுங்கள்; உங்கள் இறைவன் உங்கள் பாவங்களை உங்களை விட்டுப் போக்கி உங்களைச் சுவனச் சோலைகளில் பிரவேசிக்க செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் (சதா) ஓடிக் கொண்டே இருக்கும்; (தன்) நபியையும் அவருடன் ஈமான் கொண்டார்களே அவர்களையும் அந்நாளில் அல்லாஹ் இழிவுப்படுத்த மாட்டான்; (அன்று ஈடேற்றம் பெற்ற) அவர்களுடைய பிரகாசம் (ஒளி) அவர்களுக்கு முன்னும், அவர்களுடைய வலப்புறத்திலும் விரைந்துக் கொண்டிருக்கும்;

அவர்கள் “எங்கள் இறைவா! எங்களுக்கு, எங்களுடைய பிரகாசத்தை நீ முழுமையாக்கி வைப்பாயாக! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்” என்று கூறி(ப் பிரார்த்தனை செய்து) கொண்டு இருப்பார்கள். (66:8)

“நீங்கள் தவ்பா செய்து, நீங்கள் வெற்றிப் பெரும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்” (24:31)

“நீங்கள் உங்கள் இறைவனிடம் மன்னிப்பைத் தேடி அவனிடம் திரும்புங்கள்” (11:3)

இறையுணர்வு, மறுமை நம்பிக்கை, குற்றவுணர்வு, உள்ளுறுத்தல், பாவமன்னிப்புத் தேடல், அதன் பலன் பற்றிய சிந்தனை, அறிவு இருந்தால் மாத்திரமே இவ்வசனங்களின் கருத்தை திக்ரின் ஒரு பக்கமாக செயல்படுத்த முடியும்.
திக்ரு செய்யாதவர்கள் நஷ்டவாளர்கள்:

எவனொருவன் அர்ரஹ்மானின் நல்லுபதேசத்தை விட்டும் கண்ணை மூடிக் கொள்வானோ, அவனுக்கு நாம் ஒரு ஷைத்தானை ஏற்படுத்தி விடுகிறோம்; அவன் இவனது நெருங்கிய நணபனாகி விடுகிறான். (43:36)

இன்னும், அந்த ஷைத்தான்கள் அவர்களை நேரான பாதையிலிருந்து தடுத்து விடுகின்றான். ஆனால், தாங்கள் நேரான பாதையில் செலுத்தப்படுவதாகவே அவர்கள் எண்ணிக் கொள்கிறார்கள். (43:.37)

எதுவரையென்றால், (இறுதியாக அத்தகையவன்) நம்மிடம் வரும்போது (ஷைத்தானிடம்); “ஆ! எனக்கிடையிலும், உனக்கிடையிலும் கிழக்குத் திசைக்கும், மேற்கு திசைக்கும் இடையேயுள்ள தூரம் இருந்திருக்க வேண்டுமே!” (எங்களை வழிக்கெடுத்த) இந்நண்பன் மிகவும் கெட்டவன், என்று கூறுவான். (43:38)

“எவன் என்னுடைய உபதேசத்தைப் புறக்கிறானோ, நிச்சயமாக அவனுக்கு நெருக்கடியான வாழ்க்கையே இருக்கும்; மேலும், நாம் அவனை கியாம நாளில் குருடனாகவே எழுப்புவோம்” என்று கூறினான். (20:124)

(அப்போது அவன்) “என் இறைவனே! நான் பார்வையுடையவனாக இருந்தேனே! என்னை ஏன் குருடனாக எழுப்பினாய்?” என்று கூறுவான். (20:125)

(அதற்கு இறைவன்) “இவ்விதம் தான் இருக்கும்; நம்முடைய வசனங்கள் உம்மிடம் வந்தன; அவற்றை நீ மறந்து விட்டாய்; அவ்வாறே இன்றைய தினம் நீயும் மறக்கப்பட்டு விட்டாய் என்று கூறுவான். (20:126)

எவன் தன் இறைவனுடைய வசனங்களைக் கொண்டு உபதேசிக்கப்பட்டும் அவற்றைப் புறக்கணித்துத் தன்னிரு கரங்களும் செய்த குற்றங்களை மறந்து விடுகிறானோ அவனைவிடப் பெரிய அக்கிரமக்காரன் எவன் இருக்கின்றான்? நிச்சயமாக நாம் அவர்களுடைய இருதயங்களின் மீது, இதை விளங்கிக் கொள்ளாதவற்கு திரைகளையும், அவர்களுடைய செவிகளில் செவிட்டுத் தனத்தையும் ஏற்ப்படுத்தியிருக்கிறோம். ஆதலால் நீர் அவர்களை நேர்வழியின் பால் அழைத்தாலும், அவர்கள் ஒருபோதும் நேர்வழியடைய மாட்டார்கள். (18:57)

எனவே, மேற்குறிப்பிட்ட திக்ரு வகைகளை முறையாக, முழுமையாகக் கடைப்பிடிக்காதவர்கள் கண்ணிருந்தும் குருடராக, செவியிருந்தும் செவிடராக, வாயிருந்தும் ஊமையாக, இதயமிருந்தும் உணராதவராக, அறிவிருந்தும் சிந்திக்காதவராக ஆகிவிடுகிறார்கள். இஸ்லாத்தின் பார்வையில் தோல்வி, நஷ்டம் என்பது மறு உலக சம்பந்தப்பட்டதாகும். ஆகையினால் முஸ்லிம்களாகிய நாம் மேற்கண்ட வசனங்களில் எச்சரிக்கைகளைப் புறக்கணிக்காமல் இம்மையை விட சிறந்தது, நித்திய மறுமைச் சுவன வாழ்வைப் பெற இனியாவது திக்ரின் எல்லாக் கோணச் சாரங்களின் அடிப்படையில் வாழ முற்படுதல் வேண்டும்.

கீழ்க்கண்ட கட்டங்களில் தூய துதிச் சொற்களாக திக்ரையும் அதன் கிளைச் சொற்களையும் வணக்கமாகச் செயல்படுத்துகிறோம் என்பதில் ஐயமில்லை.

தூங்கல் – முன்பின் காலைக்கடன் – முன்பின் குளித்தல் – முன்பின் உண்ணல், பருகல்- முன்பின் பிரயாணம் – முன்பின் கல்வியில் – முன்பின் ஒளு – முன்பின் திருமணம் – முன்பின் தொழுகையில் – முன்-உள்ளே-பின் பள்ளியில் – நுழைதல் – வெளியேறுதல் வீட்டில் – நுழைதல் – வெளியேறுதல் புத்தாடை – அணியும் போது இன்ப -துன்ப – வேளையில் சக சகோதரரை – சந்திக்கும் போது /பிரியும் போது நோயாளியை – பார்க்கும் போது ஜனாஷா – பல நிலைகளில்

உண்மையில் இவையணைத்தும் திக்ரின் ஒருப் பக்கம் தான். இதையும் கூட நபி(ஸல்) அவர்கள் போல், நபி வழிப்படி முழுமையாக செயல்படுத்துகிறோமில்லை. அதனால் தான், இதனால் பெற வேண்டிய பலன் பெறாமலிருக்கிறோம். உதாரணத்திற்கு திக்ரின் ஒரு அங்கமான பிரார்த்தனையை எடுத்துக் கொள்வோம் அதில் எந்தளவு கெஞ்சித் தாழ்மையாக, பணிந்து கேட்டல், நடந்ததுப் பற்றி வருந்து உள்ளுறுத்தல் கொள்ளல், ஆர்வத்துடன் இறையுணர்வை நினைவில் வைத்திருத்தல் போன்ற தன்மைகள் கலந்துள்ளன? பின் எப்படி நம் உள்ளக்கிடக்கையை இயல்பாய் நாம் படைத்து, பரிபாலித்து பாதுகாக்கும் இறைவன் முன் வெளிப்படுத்த முடியும்?

அந்த மகத்தான, எல்லாம் வல்லவன் பார்த்துக் கொண்டு. கேட்டுக் கொண்டு இருக்கிறான் என்ற உணர்வ எப்படி ஏற்படும்? அவனின் அளவேயில்லா அருளில், கருணையில் நம்பிக்கை எப்படி ஏற்படும்?

யதார்த்தத்தில் பிரார்த்திக்கும் வேளையில் எந்த சாட்சியுமின்றி அல்லாஹ்வுடன் உரையாடுகிறோம். எந்தளவுக்கு எதற்காக, எப்படி பிரார்த்திக்கிறோமோ அந்தளவுக்கு நமக்கும் அல்லாஹ்வுக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்படுகிறது.
இறையுணர்வு அடியானின் உள்ளத்தில் வளர, வளர அவனின் பிரார்த்தனை தன்னிலை விளக்கமாகி விடுகிறது. இதுவே இனியாற்றும் அமல்களுக்கு அடித்தளமாகிறது. அதனால் தான் வணக்கங்களின் தலையாகப் பிரார்த்தனையைச் சொல்லப்படுகிறது.

நபி(ஸல்) அவர்கள், இப்பிரார்த்தனைகளில், வணக்கங்களில் மிக ஆழமான நம்பிக்கைக் கொண்டிருந்தார்கள். மிகச் சிரத்தையுடன், ஆர்வத்துடன் வேண்டிக் கொண்டார்கள். வெகு சிலரால் மட்டுமே அவர்களைப் பின்பற்றி அது போன்று பிரார்த்திக்க முடிகிறது.

நபி(ஸல்) அவர்களின் பிரார்த்தனைகளில் பின்னணி, பாங்கினை ஆயும் போது அல்லாஹ்வின் மீதிருந்த அளப்பரிய அன்பு, அவனின் அருளில், கருணையில் ஆழமான நம்பிக்கை, எதிர்ப்பார்ப்பு, அவனின் ஆளுமையின் மீது அசைக்க முடியாத உறுதி, அவன் திருமுன் தன்னை மிக மிகத் தாழ்த்திக் கொண்ட பாங்கு போன்ற அருங்குணங்களைப் பார்க்கலாம். உண்மையில் நபி(ஸல்) அவர்களின் பிரார்த்தனைகள் பல வண்ண மலர்களாகன ஓர் அழகிய ஆரம். இஸ்லாத்தில் தனியாகவோ, கூட்டாகவோ பிரார்த்திக்க ஏவப்பட்டுள்ளது. தனித்துப் பிரார்த்திருப்பது தொழுகைக்குப் பின் தான் என்றில்லாமல் தேவையேற்படும் எந்நிலையிலும் பிரார்த்திக்கலாம்.

பொதுவாக பிரார்த்தனை என்பது தன் இயலாமையை, தேவையை, சார்புத் தன்மையை, சுதந்திரமற்ற அடிமைத்தனத்தை உளமாற ஒப்புக் கொண்டு வெளிப்படுத்தும் அதே வேளை தன் எஜமானான எல்லாம் வல்லவனான தேவையற்றவனின் பெயரை அல்லது அவன் சிறப்பியல்புகளை முதலில் ஏற்றிப் போற்றிப் புகழ்தல் கொண்டு தன் பிரார்த்தனையை துவங்குதல் வேண்டும், உண்மையில் எந்நிலையிலும் நாம் ஓர் அடிமைதான் என்ற உள்ளுணர்வு நமக்கு மரணம் வரையில் மேலோங்கி நிற்க வேண்டும்.

நம் அனைத்துத் தேவைகளையும் துன்ப சூழலிருந்து மீளவாகட்டும், பாவ மன்னிப்பு கோரலாகட்டும். இம்மை-மறுமை தேவைகளாகட்டும், அடிமை எஜமானன் என்ற அந்தஸ்திலேயே நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். ஒரு முஸ்லிமினின் பிரார்த்தனையில் இன்னுமோர் குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் உள்ளது. அது எப்போதும் கேட்பவருக்காக மாத்திரம் செயல்படுவதில்லை.

தனித்து வேண்டும் போது கூட அனைத்தையும் தனக்காக மாத்திரமே கேட்பதில்லை. ஒரு முஸ்லிம் தன் போன்ற பிற முஸ்லிமிலிருந்து தன் குடும்பம், உற்றார், உறவினர், சமுதாயம், நாடு ஏன் ஒட்டு மொத்தமாக மனித குலம் வரையில் அனைத்து தரப்பாரரின் நல்வாழ்வுக்காகப் பிரார்த்திக்கிறான். தன் பிரார்த்தனையில் பெரும்பாலான இடங்களில் “நாங்கள்’ -‘எங்களுக்கு’ என்ற பதங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

நம் குடும்பம், கல்வி, சமூக அரசியல், நீதி நிர்வாகம், பொருளாதார முறைகள், மாற்று இன, மொழி,மத நாட்டவர்கள் மீது திக்ரின் இந்த பரந்த -விரிந்த வட்டத்தில் அதன் செயல்பாடுகளின் முழு தாக்கம், பிரதிபலிப்பு ஏற்படாத வரை நாம் ஈருலக வெற்றியாளர்களாக மாட்டோம்.

வல்ல அல்லாஹ் திக்ரின் எல்லா வகைக் கருத்துக்களையும் விளங்கி. செயல்பட்டு வெற்றி பெற்ற பிரிவினரில் நம்மை ஆக்கி வைக்க அருள்பாலிப்பானாக. ஆமின்.

அபூ முஹம்மத் சாதிக்

{ 1 comment }

A.ABDULRAJAK August 18, 2015 at 8:01 pm

2:198 لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَن تَبْتَغُوا فَضْلًا مِّن رَّبِّكُمْ ۚ فَإِذَا أَفَضْتُم مِّنْ عَرَفَاتٍ فَاذْكُرُوا اللَّهَ عِندَ الْمَشْعَرِ الْحَرَامِ ۖ وَاذْكُرُوهُ كَمَا هَدَاكُمْ وَإِن كُنتُم مِّن قَبْلِهِ لَمِنَ الضَّالِّينَ
2:198. (ஹஜ்ஜின் போது) உங்கள் இறைவனுடைய அருளை நாடுதல்(அதாவது வியாபாரம் போன்றவற்றின் மூலமாக நேர்மையான பலன்களை அடைதல்) உங்கள் மீது குற்றமாகாது; பின்னர் அரஃபாத்திலிருந்து திரும்பும்போது “மஷ்அருள் ஹராம்” என்னும் தலத்தில் அல்லாஹ்வை திக்ரு(தியானம்)செய்யுங்கள்; உங்களுக்கு அவன் நேர்வழி காட்டியது போல் அவனை நீங்கள் திக்ரு செய்யுங்கள். நிச்சயமாக நீங்கள் இதற்கு முன் வழிதவறியவர்களில் இருந்தீர்கள்.

2:200 فَإِذَا قَضَيْتُم مَّنَاسِكَكُمْ فَاذْكُرُوا اللَّهَ كَذِكْرِكُمْ آبَاءَكُمْ أَوْ أَشَدَّ ذِكْرًا ۗ فَمِنَ النَّاسِ مَن يَقُولُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا وَمَا لَهُ فِي الْآخِرَةِ مِنْ خَلَاقٍ
2:200. ஆகவே, உங்களுடைய ஹஜ்ஜுகிரியைகளை முடித்ததும், நீங்கள்(இதற்கு முன்னர்) உங்கள் தந்தையரை நினைவு கூர்ந்து சிறப்பித்ததைப்போல்-இன்னும் அழுத்தமாக, அதிகமாக அல்லாஹ்வை நினைவு கூர்ந்து திக்ரு செய்யுங்கள்; மனிதர்களில் சிலர், “எங்கள் இறைவனே! இவ்வுலகிலேயே (எல்லாவற்றையும்) எங்களுக்குத் தந்துவிடு” என்று கூறுகிறார்கள்; இத்தகையோருக்கு மறுமையில் யாதொரு நற்பாக்கியமும் இல்லை.
2:203 وَاذْكُرُوا اللَّهَ فِي أَيَّامٍ مَّعْدُودَاتٍ ۚ فَمَن تَعَجَّلَ فِي يَوْمَيْنِ فَلَا إِثْمَ عَلَيْهِ وَمَن تَأَخَّرَ فَلَا إِثْمَ عَلَيْهِ ۚ لِمَنِ اتَّقَىٰ ۗ وَاتَّقُوا اللَّهَ وَاعْلَمُوا أَنَّكُمْ إِلَيْهِ تُحْشَرُونَ
2:203. குறிப்பிடப்பட்ட நாட்களில் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள்; எவரும்(மினாவிலிருந்து) இரண்டு நாட்களில் விரைந்துவிட்டால் அவர் மீது குற்றமில்லை; யார்(ஒரு நாள் அதிகமாக) தங்குகிறாறோ அவர் மீதும் குற்றமில்லை; (இது இறைவனை) அஞ்சிக் கொள்வோருக்காக (கூறப்படுகிறது); அல்லாஹ்வை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள்; நீங்கள் நிச்சயமாக அவனிடத்திலே ஒன்று சேர்க்கப்படுவீர்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.

4:103 فَإِذَا قَضَيْتُمُ الصَّلَاةَ فَاذْكُرُوا اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَىٰ جُنُوبِكُمْ ۚ فَإِذَا اطْمَأْنَنتُمْ فَأَقِيمُوا الصَّلَاةَ ۚ إِنَّ الصَّلَاةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِينَ كِتَابًا مَّوْقُوتًا
4:103. நீங்கள் தொழுகையை முடித்துக் கொண்டால், நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும், விலாப்புறங்களின் மீது (படுத்திருக்கும்) நிலையிலும் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள்; பின்னர் நீங்கள் (ஆபத்தினின்று விடுபட்டு) அமைதியான நிலைக்கு வந்ததும், முறைப்படி தொழுது கொள்ளுங்கள் – ஏனெனில், நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது முஃமின்களுக்கு விதியாக்கப் பெற்றுள்ளது.

7:205 وَاذْكُر رَّبَّكَ فِي نَفْسِكَ تَضَرُّعًا وَخِيفَةً وَدُونَ الْجَهْرِ مِنَ الْقَوْلِ بِالْغُدُوِّ وَالْآصَالِ وَلَا تَكُن مِّنَ الْغَافِلِينَ
7:205. (நபியே!) நீர் உம் மனதிற்குள் மிக்க பணிவோடும், அச்சத்தோடும் (மெதுவாக) உரத்த சப்தமின்றி காலையிலும், மாலையிலும் உம் இறைவனின் (திருநாமத்தை) திக்ரு செய்து கொண்டு இருப்பீராக! (அவனை) மறந்து விட்டிருப்போரில் ஒருவராக நீர் இருக்க வேண்டாம்.
29:45 اتْلُ مَا أُوحِيَ إِلَيْكَ مِنَ الْكِتَابِ وَأَقِمِ الصَّلَاةَ ۖ إِنَّ الصَّلَاةَ تَنْهَىٰ عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ ۗ وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ ۗ وَاللَّهُ يَعْلَمُ مَا تَصْنَعُونَ
29:45. (நபியே!) இவ்வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்பட்டதை நீர் எடுத்தோதுவீராக; இன்னும் தொழுகையை நிலை நிறுத்துவீராக; நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்கும். நிச்சயமாக, அல்லாஹ்வின் திக்ரு (தியானம்) மிகவும் பெரிதா(ன சக்தியா)கும்; அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிகிறான்.

33:41 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اذْكُرُوا اللَّهَ ذِكْرًا كَثِيرًا
33:41. ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வை அதிகமதிகமான திக்ரைக் கொண்டு திக்ரு (தியானம்) செய்யுங்கள்.

Comments on this entry are closed.

Previous post:

Next post: