அன்பு சால் ஆலிம் பெரும் மக்களே! சற்று நடுநிலை வகித்து இந்தக் கட்டுரையை ஆராய்ந்து படியுங்கள்.
நாமல்லோரும் மெளலவி என்ற பட்டமும் நம் பெயருக்கு முன் வரவேண்டும் என்பதற்காகவோ, அல்லது சாப்பாடு கிடைக்கின்றது என்பதற்காகவோ, மதரஸாக்களுக்குச் சென்று ஓதவில்லை. நம் பெற்றோர்களும் அப்படி நினைக்கவில்லை. யாரும் அப்படி நினைக்கவும் மாட்டார்கள். மாறாக நம்பிள்ளைகள் அல்லாஹ்வுடைய வேதத்தைக் கற்றுத்தேரவண்டும் நபி(ஸல்) அவர்களின் ஹதீதுகளைத் தெளிவாக உணர்ந்து மார்க்கத்தை அறிந்து, புரிந்து செயல்பட வேண்டும். பூரணமாக அறிஞர்களாகத் திகழ வேண்டும் என்று எந்தப் பெற்றோரும் அவாவுறுவார்கள். நம்முடைய ஆசையும் அதுதான்!
ஆனால், நமது அவா நிறைவேறியதா? என்றால் 100க்கு 95 சதவிகிதம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். காரணம் குர் ஆன், ஹதீதுகளைப் படிக்கச் சென்ற நமக்கு குர்ஆனை நேரடியாகக் கற்றுத் தந்தார்களா? ஆதாரப்பூர்வமான ஹதீதுகள் பதிவாகியுள்ள கிரந்தங்களை நமக்கு பாட நூலாகக் கற்பித்தார்களா? அவைகளை சனதுகளோடு விளக்கிக்கூறி மனனம் செய்ய வைத்தார்களா? இல்லை.
ஏதோ அஜ்மீரிலே காட்டி மக்களை ஏமாற்றுவார்களே வருடத்திற்கு ஒரு முறை காஜாபந்தே நவாஸ் அவர்களின் சட்டை என்று, அதுபோல் வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ புகாரி, முஸ்லிம், மிஷ்காத், அபூதாவூத், திர்மிதீ, பைஹக்கி, நஸயி போன்ற கிரந்தங்களை எடுத்து ஒரு சிலவற்றை வாசித்துவிட்டு, திரும்பவும் வைத்து விடுவார்கள். பாட நூல்களாக மேற்கூறியவற்றை போதித்தார்களா? மதஹபுகள் பேரால் யார்,யாரோ எழுதிய தூர்ருல் முக்தார், ரத்துல் முக்தார், ஷரகுல்விகாயா, பத்தவாயே ஆலம்கீரி போன்ற குப்பைகளை அல்லவா போதித்தார்கள். அதை வைத்துத் தானே (நம்பித்தானே) இது நாள் வரை அமல் செய்து வருகிறோம்.
அறிவு தேடச் சென்ற நம்மை, இருக்கும் அறிவையும் அல்லவா? காலிசெய்து அனுப்பி விட்டார்கள். இன்று நம்மில் யாருக்காவது 40 ஸஹீஹான ஹதீதுகளை அவற்றின் சனதுகளோடு முழுமையாக ஒப்புவிக்க முடியுமா? எந்த அளவிற்கு ஏமாற்றப்பட்டு விட்டோம் என்பதை உணருங்கள். இன்று நம் கண்முன்னே நடக்கும் அனாச்சாரங்களை, ஷிர்க்கான காரியங்களைத் தடுப்பதற்கு வேண்டிய சக்திகளை நபி(ஸல்) அவர்களின் கடுமையான கண்டனப் பொன்மொழிகளை நம்முடைய இதயங்களில் புகுத்தத் தவறிவிட்டார்கள். ஆனால், இன்று இஸ்லாத்தின் உண்மை நிலையை அல்லாஹ் அறியச்செய்து இருக்கின்றான். அல்ஹம்துலில்லாஹ்! உண்மையை உணர்ந்த பின்னும் நமது வரட்டுக் கெளரவங்களைக் கருதி, வயிற்றுப் பிரச்சனைகளைக் கருதி வாய்மூடி மெளனமாக இருந்தால் நாம் நபிமார்களின் வாரிசுகளாக முடியுமா?
சத்தியத்தை எடுத்துச் சொல்வதால், தனது குடும்பமே பாதிக்கப்படுகின்றது. ஏழ்மையால் வாட நேரிடும் என்பதைத் தெளிவாக அறிந்த நிலையிலும், தந்தை ஆஜரின் கடுமையான ஏச்சுப் பேச்சுக்கிடையிலும், கல்லால் அடித்துக் கொன்று விடுவேன் என்ற தந்தையின் மிரட்டலுக்கிடையிலும், நபி இபுறாஹீம் (அலை) அவர்கள் சத்தியத்தைச் சொல்லத் தயங்கினார்களா? சத்தியத்தை மறைத்தார்களா? மெளனம் சாதித்தார்களா?
சுமார் இரண்டரை வருடங்கள் பனூஹாஷிம் கோத்திரத்தார் அரபு மக்களால் பகிஷ்கரிக்கப்பட்டு அவர்கள் உண்ண உணவில்லாமலும், அவர்களின் பால் குடிக்கும் பச்சிளம் குழந்தைகள் எல்லாம் பசியால் அழுது துடிக்கும் பரிதாப நிலையிலும், நபி(ஸல்) அவர்கள் சத்தியத்தை மக்களுக்குச் சொல்லத் தயங்கினார்களா? சத்தியத்தை மறைத்தார்களா? மெளனம் சாதித்தார்களா? எந்தருமை ஆலிம் பெருமக்களே! சிந்தித்துப் பாருங்கள். இந்த நிைலயில் சத்தியத்தை அறிந்துக் கொண்ட பின்பும், நாம் மெளனம் சாதித்தால் யாருக்கு வந்த விருந்தோ? என்றிருந்தால் நாம் நபிமார்களின் வாரிசுகளாக திகழ முடியுமா? சிந்தியுங்கள்.
நம்மிலே பலர் கபுரு சம்பந்தப்பட்ட அனாச்சாரங்களையும் பாத்திஹாக்களையும் எதிர்த்துப் பேசிவிட்டால் போதும், சத்தியத்தைப் பேசி விட்டோம் என்று அவர்களே முடிவு செய்து கொள்கிறார்கள். உண்மை என்ன? குர் ஆனுக்கும், உண்மை ஹதீதுகளுக்கும் முரணாக எது காணப்பட்டாலும், அதை எடுத்துச் சொல்வதால் தலையே போய்விடும் என்ற நிலை வந்தாலும், தாங்கொன்னாத துன்பங்கள் அடுத்தடுத்து வந்தாலும், அவற்றை எல்லாம் அழகிய பொறுமையோடு சகித்துக்கொண்டு, குர்ஆனையும், ஹதீதுகளையும் (கற்பனைக் கட்டுக் கதைகளை அல்ல) மக்களுக்கு எடுத்துச் சொல்வதே ஆலிம்களாகிய நமது கடமையாகும். அப்போது தான் நபிமார்களின் உண்மை வாரிசுகளாக நாம் திகழ முடியும்.
ஆகவே எனதருமைச் சகோதர மெளலவிகளே! ஒன்று சேருங்கள். ஆலிம்களே! நபிமார்களின் உண்மை வாரிசுகளாகத் திகழுங்கள்.
மெளலவி A.அப்துந் நஸீர்(மன்பஈ)
Comments on this entry are closed.