படைக்கப்பட்ட கணம் முதல் ஒவ்வொரு மனிதனும் இறைவன் ஒருவன் இருக்கிறான் எனும் உண்மையை, அவனது மனச்சான்று மற்றும் அறிவுமூலம் உணரும் ஆற்றல் அருளப்பட்டுள்ளான். இந்தப் பிரபஞ்சத்திலுள்ள ஒவ்வொன்றும், மிகச் சிறிய நுட்பமான கூறு வரை இறைவனின் படைப்பே என்பது தெளிவு. இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதற்கு நம்மைச் சுற்றிக் காணப்பெறும் ஒவ்வொன்றும் உறுதியான சான்று ஆகும். வான வீதியில் பறக்கும் பறவை, ஆழ்கடலில் நீந்தும் மீன்கள், பாலைவனங்களில் திரியும் ஒட்டகைகள், தென்துருவத்தில் வசிக்கும் பறக்கவியலாத ஆனால் நீந்தக்கூடிய கடற்பறவைகள், பென்குயின்கள், மனித உடலில் உள்ள கண்ணுக்குப் புலப்படாத நுண்கிருமிகள், பழங்கள், செடிகள், மேகங்கள், கோளங்கள், முழுமையாக நிறைவான நிலையில் சஞ்சரிக்கும் விண்மீன்கள், பால்மண்டலங்கள், ஆகிய யாவற்றையும் மிக நுண்ணிய அமைப்புகளோடும் மிகச் சிறந்த இயல்புகளோடும் இறைவன் படைத்தான்.
இதுபோலவே இந்தப் புவியில் உயிரினங்கள் வாழ்வதற்கு உறுதுணையாக அமைந்த எல்லா அமைப்புகளும் மிக நுணுக்கமான சமநிலை பேணும் வகையில் படைக்கப்பட்டுள்ளன. இந்த சமநிலையில் மில்லிமீட்டர் அளவு மாற்றம் அல்லது பிறழ்வு ஏற்பட்டாலும் புவியில் வாழ்வது சாத்தியமில்லாமல் ஆகிவிடும். அந்தச் சமநிலை பற்றிச் சிறிது உற்று நோக்கினால் மிகச் சிறந்த முறையில் அவை கணிக்கப் பெற்றிருப்பதும் அவை மிக நுணுக்கமாக வடிவமைக்கப் பெற்றிருப்பதும் புலனாகும். எடுத்துக்காட்டாக பூமி சற்றே குறைந்த வேகத்தில் சூரியனைச் சுற்றி சுழன்றால் பகலுக்கும் இரவுக்கும் இடையில் மிக அதிகமான அளவில் வெட்பநிலை வேறுபாடு உண்டாகும்; வேகமாகச் சுழன்றால் சூறாவளியும் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டு புவி வாழ்க்கையே பாதிக்கப்பட்டு விடும்
இதுபோல, இந்தப் புவியை உயிர்வாழ்வதற்கு ஏற்ற ஒரு கோளாக அமைய உதவும் பல நுண்ணிய சமநிலை பேணும் படைப்பினங்கள் உள்ளன. இவையாவும் எதேச்சையாக எழுந்தவை என்று கூறவியலாது. இத்தகைய நேர்த்தியான திட்டங்களும் சமநிலைகளும் எல்லாம் குருட்டாம் போக்கில் உண்டானவை என்று எந்த அறிவுடைய மனிதனும் கூறமாட்டான். ஒரு காரோ, கேமராவே – படம் பிடிக்கும் கருவியோ – அதை வடிவமைத்த விழிப்புடைய ஒருவரை நினைவூட்டுகிறது. இதுபோலவே, ஒன்றை ஒன்று சார்ந்துள்ள பல இணைப்பு முறைகள் நிறைந்த இந்தப் பிரபஞ்சம், தானாகவே உருவான தன்னைத்தானே நிர்வகித்துக் கொள்ளக் கூடிய ஒரு பருப்பொருள் என யாரும் முடிவு கட்ட முடியாது. இறைவன், இவையாவும் அவனால் படைக்கப்பட்டவை எனும் உண்மையை நமக்கு குர்ஆனில் அடிக்கடி நினைவுறுத்திக் கொண்டி ருக்கிறான்.
மேகத்திலிருந்து உங்களுக்கு மழையை பொழியச் செய்பவன் அவன் (இறைவன்)தான். அதிலிருந்து தான் நீங்கள் நீர் அருந்து கிறீர்கள்; நீங்கள் உங்கள் கால் நடைகளை மேய்க்கும் புற்பூண்டுகளுக்கு நீரும் அதிலிருந்தே பெறுகிறீர்கள். அதிலிருந்தே உங்க ளுக்காக பயிர்பச்சைகளையும், ஆலிவ் பழங்களையும் காய்க்கச் செய்கின்றான். சிந்தித்து அறியக் கூடிய மக்களுக்கு இதில் நிச்சயமாக அத்தாட்சி உள்ளது. இரவையும் பகலையும் உங்களுக்குப் பயன்படும் வகையில் படைத்துள்ளான். சூரியனையும் சந்திரனையும் விண்மீன்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் இணங்கிச் செயல்படும்படி படைத்திருக்கிறான். சிந்திக்கக்கூடிய மக்களுக்கு இதில் நிச்சயமாக அத்தாட்சி இருக்கின்றது. மேலும் விதவிதமான வண்ணங்கள், அவன் உங்களுக்காக படைத்தவை யாவற்றையும் கவனிப் பவர்களுக்கு அத்தாட்சி இருக்கின்றது. (அந்நஹ்ல் 16:10-13)
இவையாவைற்றையும் படைத்தவன் படைக்கும் ஆற்றல் இல்லாதவனுக்கு ஒத்தவனாவானா? நீங்கள் இதைக் கவனிக்க வேண்டாமா? (அந்நஹ்ல் 16 :17)
மேலே கூறப்பட்டவற்றை ஆழ்ந்து சிந்தித்தால், மார்க்க(மத) அறிவு அறவே இல்லாதவரையும் கூட இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதை உணரச் செய்து அவனுடைய வல்லமையையும் ஆற்றலையும் பாராட்டத்தூண்டும்; தன்னுடைய உடலைப் பற்றி சிந்தித்தால் ஒன்றோடு ஒன்று இணைந்து இயங்கும் மிகச் சிறந்த படைப்பை உணரத் தூண்டும்.
அகில உலகங்களையும் காத்தருளும் இறைவனே இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் இயற்கையையும், மனிதனையும் படைத்தவன் ஆவான். உயிரினங்கள், மனிதன் உட்பட யாவற்றுடையவும் தேவைகளை நன்கறிந்தவனும் அவனே ஆவான். அதனால் தான் மனிதனுக்கு மிகவும் பொருத்தமான வாழ்க்கை முறையாக இறைவன் வழங்கிய மார்க்கம் விளங்குகிறது. இஸ்லாம் மார்க்கத்தைப் பற்றிப் பிடித்தாலே மக்கள் அமைதியாக மகிழ்ச்சியுடன் வாழ முடியும்.
இறைவன் வழங்கி அருளிய நெறி நூலைப் பற்றி அறியாத மனிதன் கூடத் தன்னைச் சூழ்ந்துள்ளவற்றை, உற்று நோக்கிச் சிந்தித்தால், இறைவனை உணர்ந்து கொள்ள முடியும். புரிந்துகொள்ள கூடிய மக்களுக்கு உலகில் ஏராளமான சான்றுகள் உள்ளன. ( 3:191,192)
வானங்கள் மற்றும் பூமியின் படைப்பிலும் இரவு பகலின் மாற்றத்திலும் அறிவுடையோருக்கு நிச்சயமாக அத்தாட்சிகள் இருக்கின்றன. இத்தகையோர் நின்ற நிலையிலும் அமர்ந்திருக்கும் போதும், படுத்திருக்கும்போதும் அல்லாஹ்வை நினைந்து வானங்கள் மற்றும் பூமியின் படைப்பைப் பற்றிச் சிந்தித்தவர்களாக, “எங்கள் இறைவா! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை. நீ மிகத் தூயவன்; நரக நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக” என்று பிரார்த்திப்பார்கள். (3:191,192)
இந்தச் சந்தர்ப்பத்தில் மார்க்கத்தின் தேவை வெளிப்படுகிறது. இதற்குக் காரணம், படைத்தவன் ஒருவன் இருக்கிறான் என்பதை உணர்ந்த மனிதன் நிச்சயமாக அவனை நெருங்கவே விரும்புவான். அவனைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள விழைவான். அவனுடைய நேசத்தையும் கருணையையும் பெறுவதற்குரிய வழிகளைக் காண நாடுவான்; இதற்குரிய ஒரே வழி குர்ஆன் வலியுறுத்தும் பண்பாடுகளை நன்றாக அறிந்து கொள்வதுதான். குர்ஆன் அல்லாஹ்வின் வாக்கு, மாற்றம் ஏதும் இல்லாதது; இஸ்லாமின் வழிகாட்டும் நூல்; இஸ்லாம் தான் உண்மையான மார்க்கம்.
மூலம்: ஹாரூன் யஹ்யா, தமிழாக்கம்: H. அப்துஸ்ஸமது, என்ஜினீயர்.