அல்லாஹ் கூறுகிறான்: ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காக முழுமைப்படுத்துங்கள் .(2:196)
மக்களில் அங்கு (மக்காவிலுள்ள கஅபாவுக்கு) சென்றுவரச் சக்தி பெற்றோர்,அல்லாஹ்வுக்காக அவ்வில்லத்தை ஹஜ் செய்வது கடமையாகும். (3:97)
நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் கூறினார்கள்: இஸ்லாம் (எனும் மாளிகை) ஐந்து (தூண்கள்) மீது நிறுவப்பட்டுள்ளது. (அவை) 1. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும், அவனுடைய தூதரும் ஆவார்கள் என்றும் உறுதிமொழி அளிப்பது. 2. தொழுகையை கடைப்படிப்பது. 3. ஸகாத் (கடமையானவர் அதை) வழங்குவது. 4. ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது. 5. (சக்தி பெற்றோர் ஆயுளில் ஒரு முறை மக்காவிலுள்ள) இறையில்லம் கஅபாவில் ஹஜ் செய்வது. (அறிவிப்பாளர் : இப்னுஉமர் (ரழி) நூல்கள் : புகாரி 8, முஸ்லிம் 21)
நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் கூறினார்கள்: மக்களே! அல்லாஹ் உங்கள் மீது ஹஜ்ஜை விதியாக்கிவிட்டான். எனவே ஹஜ் செய்யுங்கள்! (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரழி) நூல்: முஸ்லிம் 2599)
ஹஜ்ஜின் சிறப்புகள்:
நபிஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் கூறினார்கள்: (நற்)செயல்களில் சிறந்தது அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொள்வதாகும். பிறகு சிறந்தது, அல்லாஹ்வின் பாதையில் அறப் போர் புரிவதாகும். பிறகு சிறந்தது, (பாவச் செயல் எதுவும் கலவாத) ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜாகும்.(அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரழி) நூல்கள் : புகாரி 1519, முஸ்லிம் 135)
நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தீய பேச்சுக்கள் மற்றும் பாவச்செயல்களில் ஈடுபடாமல் கஅபாவிற்குச் சென்று ஹஜ் செய்தால், அவர் (தாயின் வயிற்றிலிருந்து) அன்று பிறந்த பாலகனைப் போன்று (பாவங்களிலிருந்து வெளியேறி) திரும்புகிறார். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரழி) நூல்கள்: புகாரி 1819, முஸ்லிம் 2625)
நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் கூறினார்கள்: முந்தைய பாவங்களை இஸ்லாம் அழித்துவிடும். (அதேபோல்) ஹிஜ்ரத்தும் முந்தைய பாவங்களை அழித்துவிடும். (அதேபோல்) ஹஜ்ஜும் முந்தைய பாவங்களை அழித்துவிடும்.(அறிவிப்பாளர் : அம்ர் இப்னு ஆஸ் (ரழி) நூல்: முஸ்லிம் 192)
நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ஓர் உம்ரா செய்வது மறு உம்ரா வரை (ஏற்படும் சிறு) பாவங்களுக்குப் பரிகாரமாகும். (பாவச் செயல் கலவாத) ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்குச் சொர்க்கத்தை தவிர வேறு கூலி இல்லை. (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரழி) நூல்கள்: புகாரி1773, முஸ்லிம் 2624)
நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் கூறினார்கள்: வயதானவர்கள், பலவீனமானவர்கள் மற்றும் பெண்கள் ஆகியோரது அறப்போர் ஹஜ் செய்வதாகும். (அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழி) நூல்: நஸயீ)
நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ஹஜ்ஜையும், உம்ரா வையும் சேர்த்துச் செய்யுங்கள். ஏனெனில் நிச்சயமாக அவையிரண்டும் வறுமையையும், பாவங்களையும் கொல்லனின் துருத்தி இரும்பு, தங்கம், வெள்ளி ஆகியவற்றிலுள்ள அசுத்தங்களை அகற்றுவது போல் அகற்றிவிடும். (பாவச் செயல் கலவாத) ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு சொர்க்கத்தைத் தவிர வேறு கூலி இல்லை. (அறிவிப்பாளர்: இப்னு மஸ்வூத் (ரழி) நூல்கள்: திர்மிதீ 738, நஸயீ, அஹ்மத், இப்னு குஸைமா, இப்னு ஹிப்பான்)
நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ஹஜ்ஜும், உம்ராவும் செய்பவர்கள் அல்லாஹ்வின் விருந்தினர்கள். அவர்களது பிரார்த்தனைகளுக்குப் பதிலளிக்கப்படும். பாவமன்னிப்பு ஏற்றுக் கொள்ளப்படும்.(அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழி) நூல்கள்: நஸயீ, இப்னுமாஜா, இப்னு குஸைமா, இப்னு ஹிப்பான்)
நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் கூறினார்கள் : ஹஜ்ஜில் செலவிடுவது அல்லாஹ்வின் பாதையில் அறப்போரில் செலவிடுவதற்கு ஒப்பாகும். அவர் செலவழித்த ஒவ்வொரு வெள்ளி நாணயத்திற்கும் ஏழுநூறு மடங்கு கூலி கொடுக்கப்படும். (அறிவிப்பாளர்: புரைதா (ரழி) நூல்கள்: அஹ்மத், இப்னு அபீஷைபா, தபரானீ, பைஹகீ)
நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் விருந்தினர்கள் மூன்று வகையினர். 1. அறப்போருக்குச் செல்பவர் 2. ஹஜ்ஜுக்குச் செல்பவர் 3. உம்ராவுக்கு செல்பவர். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரழி) நூல்கள்: இப்னு குஸைமா, இப்னு ஹிப்பான், இப்னு மாஜா)
நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ஹாஜி ஏழையாக மாட்டார். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரழி) நூல்கள்: தபரானீ, அஹ்மத்)
நபிஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் கூறினார்கள்: தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்விடம் “இறைவா! உனது இந்த (கஅபா) இல்லத்தை தரிசித்தவருக்கு என்ன கூலி கிடைக்கும்? என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ், “தாவூதே! அவர்கள் எனது விருந்தினர்கள். அவர்களது குற்றங்களையும், பாவங்களையும், இவ்வுலகில் நான் மன்னிப்பது அவர்களது உரிமையாகும். மறுமையில் அவர்கள் என்னைச் சந்திக்கும் போது நான் அதிகமாக மன்னிப்பேன் என்று கூறினான். (அறிவிப்பாளர் : அபூதர் (ரழி) நூல்: தபரானீ)
நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ஹஜ் செய்து வந்தவர்களைச் சந்தித்தால் அவருக்கு முகமன் கூறி கை கொடுக்கவும். அத்தோடு, அவர்கள் இல்லம் திரும்பும் முன் உங்கள் பாவ மன்னிப்புக்காகப் பிரார்த்தனை செய்யும்படி கோருங்கள். ஏனெனில் அவர் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நிலையில் திரும்பி இருக்கிறார்.(அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரழி) நூல்கள்: இப்னு அபீஷைபா, அஹ்மத்)
நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் கூறினார்கள் : ஒருவர் ஹஜ் அல்லது உம்ரா அல்லது அறப்போர் செய்வதற்காக வெளியேறி, செல்லும் வழியிலேயே மரணமடைந்தால், அல்லாஹ் அவருக்கு முறையே ஹஜ் அல்லது உம்ரா அல்லது அறப்போர் செய்த நன்மைகளை மறுமைநாள் வரை வழங்குகிறான். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரழி) நூல்கள்: பைஹகீ, அபீ யஅலா, தப்ரானீ)
நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் கூறினார்கள்: கஅபா என்னும் இறை இல்லம் இஸ்லாமின் தூணாகும். எவரொருவர் ஹஜ் அல்லது உம்ரா செய்யும் எண்ணத்துடன் அங்கு செல்கிறாரோ அவர் அல்லாஹ்வின் பாதுகாப்பில் இருக்கிறார். ஒருவேளை அவரது பயணத்தில் அவர் மரணித்து விட்டால், அவருக்கு சொர்க்கம் கூலியாகக் கிடைக்கும். நலமுடன் வீடு திரும்பினால், அவர் பலன்கள் மற்றும் இலாபங்களுடன் திரும்புகிறார். (அறிவிப் பாளர்: ஜாபிர் (ரழி) நூல்: இப்னு ஜுரைஜ்)
நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ரமழானில் செய்யப்படும் ஓர் உம்ரா ஹஜ்ஜுக்கு நிகரான (பலனுடைய) தாகும்; அல்லது என்னோடு ஹஜ் செய்வதற்கு நிகரானதாகும். (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரழி) நூல்கள்: புகாரி 1863, முஸ்லிம் 2409)
நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் கூறினார்கள் : ஹஜ்ஜே செய்யாத ஒருவர் ஹஜ்ஜுக்குச் செல்வது, நாற்பது முறை அறப்போர் புரிவதைவிடச் சிறந்ததாகும். (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரழி) நூல்: பஸ்ஸார்)
நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் கூறினார்கள் : இஹ்ராம் கட்டிய நிலை யில் இறந்தவரை தல்பியா கூறியவராக மறுமைநாளில் அல்லாஹ் எழுப்புவான். (அறிவிப்பாளர்: இப்னுஅப்பாஸ் (ரழி) புகாரி 1850, முஸ்லிம் 2281)
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறியதாவது: நான் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் யுத்தத்திலும் அறப்போரிலும் உங்களுடன் சேர்ந்து கொள்ளக் கூடாதா?’ எனக்கேட்டேன். நபிஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் (பெண்களுக்கு) சிறந்த அழகிய அறப்போர், பாவச் செயல் எதுவும் கலவாத (ஒப்புக் கொள்ளப்படுகின்ற) ஹஜ் ஆகும் என்றார்கள். (நூல்: புகாரி 1861)
முஆத் இப்னு ஜபல் (ரழி) அவர்கள் கூறியதாவது: நான் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களிடம் “சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் வணக்கத்தையும், நரகத்தை விட்டும் தூரமாக்கும் செயல்களையும் அறிவித்துத் தாருங்கள்’ என்று கேட்டேன்.அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள், “அல்லாஹ்வை (மட்டும்) வணங்குங்கள்; அவனுக்கு எவ்வகையிலும் இணைவைக்காதீர்; தொழுகையைக் கடைப்பிடியுங்கள்; ஸகாத் கொடுத்து வாருங்கள், ரமழானில் நோன்பு நோற்று வாருங்கள், ஹஜ்ஜும் செய்யுங்கள்’ என்றார்கள். (நூல்: திர்மிதீ)
ஹஸன் இப்னு அலீ (ரழி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் நபிஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களிடம் “நான் கோழையாகவும், பலவீன மானவனாகவும் இருக்கிறேன். நான் ஏதாவது செய்யலாமா?’ என்று கேட்டார். அதற்கு நபிஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் “நீ சண்டையில்லாத அறப்போருக்கு, அதாவது ஹஜ்ஜுக்குச் செல்! என்றார்கள். (நூல்: அப்துர்ரஸ்ஸாக், தபரானீ)
நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் கூறினார்கள் : எவரொருவர் தீய காரியங்களில் மற்றும் அருவருப்பான செயல்களில் ஈடுபடாமல் ஹஜ் செய்தால், அவரது முன்பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.(அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரழி) நூல்: திர்மிதீ 739)
ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்:
நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் கூறினார்கள்: மக்களுக்கு உணவளிப்பதும், நல்ல வார்த்தைகளைப் பரப்புவதும், ஹஜ்ஜை ஒப்புக் கொள்ளப்பட்டதாக ஆக்கும். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரழி) நூல்: அஹ்மத், இப்னு குஸைமா, தபரானீ, ஹாகிம், பைஹகீ)
நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் கூறினார்கள்: எந்த ஹஜ்ஜில் அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூறப்படுகிறதோ அதுவே சிறந்த ஹஜ்ஜாகும். (நூல்: தபரானீ)
ஹஜ் கடமை ஒருமுறைதான்:
புனித கஅபாவிற்குச் சென்று வர சக்தியுள்ள ஒவ்வொரு முஸ்லிமுக்கும், ஹஜ் வாழ்நாளில் ஒரே ஒரு முறை தான் கடமையாகும்.
அபூஹுரைரா (ரழி) அவர்கள் கூறியதாவது: நபிஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களிடம் ஒரு மனிதர், “ஒவ்வோர் ஆண்டிலும் ஹஜ் செய்யவேண்டுமா? அல்லாஹ்வின் தூதரே!’ என்று கேட்டார். அதற்கு, நபிஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் அமைதியாக இருந்தார்கள். அவர் மூன்று முறை அவ்வாறே கேட்டபோது, நபிஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் நான் “ஆம்’ என்று சொல்லி விட்டால், அது (ஒவ்வோர் ஆண்டிலும்) கடமையாகி விடும். பின்னர் உங்களால் அதை நிறைவேற்ற முடியாமலாகி விடும் (ஆக ஒரே ஒருமுறைதான் கடமை) என்றார்கள். (நூல்: முஸ்லிம் 2599)
எவரேனும் கூடுதலாக ஹஜ் செய்ய நேர்ச்சை செய்திருந்தால், அதைக் கட்டாயமாக நிறைவேற்ற வேண்டும். அதற்கு மேலதிகமாகச் செய்வது உபரி ஹஜ்ஜாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் கூறினார்கள். ஹஜ் (ஆயுளில்) ஒரு முறை தான் கடமையாகும். யார் அதிகமாகச் செய்கிறாரோ அது கூடுதல் (ஹஜ்) ஆகும். (அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரழி) நூல்கள்: அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா, அஹ்மத், தாரிமீ)
எப்போது ஹஜ் செய்வது?
புனித கஅபாவிற்குச் சென்றுவர தேவையான சக்தி பெற்றவுடன் விரைவாக ஹஜ்ஜை நிறைவேற்ற வேண்டும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் கூறினார்கள்: கடமையான ஹஜ்ஜை நீங்கள் விரைந்து நிறைவேற்றுங்கள். ஏனெனில் உங்களில் ஒருவர் தமக்கு என்ன நேரும் என்பதை அறியமாட்டார். (அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரழி) நூல்கள்: அபூதாவூத், இப்னு மாஜா, தாரிமீ, பைஹகீ, தஹாவீ)
நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் கூறினார்கள்: இஸ்லாமில் துறவறமும், கடமையான ஹஜ்ஜை காலம் தள்ளிப் போடுவதும் கிடையாது.(அறிவிப்பாளர்: இப்னுஅப்பாஸ்(ரழி) நூல்கள் : அபூ தாவூத், அஹ்மத்)
சக்தி பெற்றிருந்தும் ஹஜ் செய்யாதவருக்குக் கண்டனம்:
நபிஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “ஹஜ் செய்ய சக்தி பெற்றிருந்தும் யார் அதனைச் செய்யவில்லையோ அவர் யூதராகவோ கிறித்தவராகவோ இறந்து போகலாம். அதைப்பற்றி அல்லாஹ்வுக்கு எந்தப் பிரச்சனையுமில்லை. ஏனெனில் “மக்களில் அங்கு சென்றுவர சக்தி பெற்றோர் அல்லாஹ்வுக்காக அவ்வில்லத்தை ஹஜ் செய்வது கடமையாகும். யார் மறுத்தாரோ அல்லாஹ் அகிலத்தாரிடம் தேவையற்றவன் ஆவான்!’ என (3:97ல்) அல்லாஹ் கூறுகிறான். (அறிவிப்பாளர்:அலீ (ரழி) நூல்: இப்னு மர்தவைஹி)
உமர் (ரழி) அவர்கள் கூறியதாவது: நான் இந்த நகரங்களுக்கு ஆட்களை அனுப்பி, அங்கு யாரெல்லாம் வசதி வாய்ப்பைப் பெற்றிருந்தும் ஹஜ் செய்யாமல் உள்ளார்கள் என்பதைக் கண்டுபிடித்து, அத்தகையோர் மீது காப்புவரி விதிக்கச் சொல்லலாம் என்று கருதுகிறேன். ஏனெனில் அவர்கள் முஸ்லிம்கள் அல்லர்! அவர்கள் முஸ்லிம்கள் அல்லர். (அறிவிப்பாளர் : ஹஸன் (ரழி) நூல்கள்: நைலுல் அவ்தார், நஸ்புர் ராயா, அல் முன்தகா)
ஹஜ் செய்ய சக்தி பெற்றவர் என்பதன் விளக்கம்:
1. பருவமடைந்த, சுதந்திரமான முஸ்லிமாக இருக்க வேண்டும்.
2. நல்ல ஆரோக்கியமானவராக இருக்க வேண்டும்.
3. பயணத்திற்குத் தேவையான அனைத்து வசதிகளும் இருக்க வேண்டும். இதில் உணவு, உடை, உறைவிடம், வாகனம், மற்றும் பயண இடைநிகழ் செலவுகள் அனைத்தும் அடங்கும்.
அல்லாஹ் கூறுகிறான்: செலவு செய்வதற்கு பொருள் முதலிய வற்றைப் பெற்றுக் கொள்ளாதவரின் மீதும், ஏறிச் செல்வதற்குரிய வாகனத்தைப் பெற்றுக் கொள்ளாதவரின் மீதும் எவ்விதக் குற்றமுமில்லை. (9:91-92)
இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறியதாவது: ஒரு தடவை நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களிடம் “சக்தி பெற்றோர்’ என்பதற்கான விளக்கம் கேட்கப்பட்டது. அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள், “உணவு மற்றும் வாகனம் பெற்றோர்’ என்று பதிலளித்தார்கள். (நூல்கள்: தார குத்னீ, ஹாகிம்)
4. புத்தி சுவாதீனமாக இருக்கவேண்டும்.
“மூன்று பேர் விஷயத்தில் குற்றம் பதிவு செய்யப்பட மாட்டாது. பைத்தியக்காரன் புத்தி தெளிவடையும் வரை’ என்பது நபிமொழி. (நூல்: புகாரி)
5. பெண்ணுக்கு மஹ்ரமான ஆண் துணை வேண்டும்.
சிறுவர் மற்றும் அடிமை ஆகியோரின் ஹஜ்:
இவர்களுக்கு “ஹஜ்’ கடமையில்லையெனினும், ஹஜ் செய்தால் அந்த ஹஜ் செல்லும். ஆனால் கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றியதாக ஆகாது. எனவே பருவ வயது அல்லது சுதந்திரம் அடைந்த பிறகு ஹஜ் செய்யும் சக்தி பெற்றால், அப்போது சுயமாக ஹஜ் செய்வது அவர் மீது கடமையாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “ஹஜ்’ செய்த எந்த சிறுவரும் பருவமடைந்த பின் (சக்தி பெற்றிருப்பின்) மீண்டும் கட்டாயம் ஹஜ் செய்ய வேண்டும். ஹஜ் செய்த எந்த அடிமையும் உரிமை விடப்பட்டு சுதந்திரம் அடைந்தவுடன் (சக்தி பெற்றிருப்பின்) மீண்டும் கட்டாயம் ஹஜ் செய்ய வேண்டும். (அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரழி) நூல்கள்: இப்னு அபீ ஷைபா, பைஹகீ)
சாயிப் இப்னு யஸீத் (ரழி) அவர்கள் கூறியதாவது: எனது தந்தை என்னையும் அழைத்துக்கொண்டு நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களுடன் விடைபெறும் ஹஜ் செய்தார். அப்பொழுது நான் ஏழு வயதுடையவனாக இருந்தேன். (நூல்: புகாரி 1858)
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறியதாவது: (ஹஜ்ஜின் போது) ஒரு பெண்மணி தம் குழந்தையை உயர்த்திக் காட்டி “அல்லாஹ்வின் தூதரே! இவனுக்கும் ஹஜ் உண்டா? என்று கேட்டார். நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் “ஆம்!’உனக்கும் நற்பலன் உண்டு’ என்று பதிலளித்தார்கள். (நூல்: முஸ்லிம் 2596)
ஜாபிர் (ரழி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களுடன் ஹஜ் செய்தோம். எங்களுடன் ஏராளமான பெண்களும், சிறுவர்களும், இருந்தனர். (நூல்கள்: திர்மிதீ 849, இப்னு மாஜா, அஹ்மத்)
பெண்களின் ஹஜ்:
கணவன் இருக்கும்போது அவருடன் செல்வதே சிறந்தது. மார்க்கத்திற்காக அறப்போர் செய்யப் புறப்படும் வீரர் கூட உயர்ந்த அந்தப் பணியைக் கைவிட்டுவிட்டு, மனைவியைத் தனியாக அனுப்பாமல் தாமும் உடன் ஹஜ் செய்யப் புறப்பட வேண்டும்.
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறியதாவது: “ஒரு பெண் (மண முடிக்கத்தகாத) நெருங்கிய ஆண் உறவினருடன் தவிர பயணம் மேற்கொள்ள வேண்டாம்.’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் (தமது) சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள். அப்போது ஒரு மனிதர் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! என் மனைவி ஹஜ் செய்யப் புறப்பட்டு விட்டாள். இன்னின்ன போரில் என் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. (இந்நிலையில் நான் என்ன செய்வது?) என்று கேட்டார். நபிஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் “நீர் சென்று உம்முடைய மனைவியுடன் ஹஜ் செய்வீராக!’ என்று கூறினார்கள். (நூல்கள்:புகாரி 1862, முஸ்லிம் 2611)
ஒரு பெண் தனது கணவன் வராத பட்சத்தில் அவரது அனுமதியைப் பெற்று மஹ்ரமான ஆணுடன் கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றச் செல்லலாம்.
ஆயிஷா (ரழி) கூறியதாவது : விடைபெறும் ஹஜ்ஜில் மாத விடாயின் காரணமாக ஆரம்பத்தில் நான் உம்ரா செய்ய முடியாமல் போனதால், ஹஜ் முடிந்ததும் என்னை நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் எனது (உடன்பிறந்த) சகோதரர் அப்துர்ரஹ்மான் இப்னு அபூபக்கர் (ரழி) அவர்களுடன் “தன்ஈமு’க்கு அனுப்பி அங்கிருந்து இஹ்ராம் கட்டி உம்ரா செய்யச் சொன்னார்கள். (நூல்: புகாரி 1556, முஸ்லிம் 2298)
கணவன் இல்லாத பட்சத்திலும் மஹ்ரமான ஆணுடன் தான் செல்ல வேண்டும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் கூறினார்கள்: எந்தப் பெண்ணும் (மண முடிக்கத்தகாத) நெருங்கிய ஆண் உறவினருடன் தவிர, ஒருநாள் பயணத் தொலைவிற்குப் பயணம் மேற்கொள்ள அனுமதியில்லை. (நூல்கள்: புகாரி 1088, முஸ்லிம் 2607)
கடமையான ஹஜ் செய்ய நினைக்கும் மனைவியை கணவன் தடுக்கக் கூடாது. இருப்பினும் உபரி ஹஜ் செய்ய நினைக்கும் மனைவி கணவனின் முடிவுக்குக் கட்டுப்பட்டே ஆக வேண்டும்.
இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறியதாவது: செல்வச் செழிப்புள்ள ஒரு பெண் (மஹ்ரமான ஆணுடன்) உபரி ஹஜ் செய்ய அனுமதி கேட்டபோது கணவன் மறுத்து விட்டார். இச்செய்தி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களுக்குத் தெரிவிக்க ப்பட்ட போது, நபிஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் “அப்பெண் கணவனின் அனுமதியின்றி கண்டிப்பாக (உபரி) ஹஜ் செய்ய செல்லக் கூடாது’ என உத்தரவிட்டார்கள். (நூல்: தபரானீ)
மரணித்தவருக்காக ஹஜ்:
ஹஜ் கடமையான நிலையில் ஒருவர் மரணித்து விட்டால் அவரது வாரிசுகள் அவருக்குப் பதிலாக இன்னொரு வரை ஹஜ் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்கான அனைத்து செலவினங்களையும் வாரிசுகள் ஏற்க வேண்டும்.
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறியதாவது: ஜுஹைனா கூட்டத்தைச் சார்ந்த ஒரு பெண் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களிடம் வந்து, “என் தாய் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்து அதை நிறைவேற்றாமல் இறந்து விட்டார். அவர் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா? என்று கேட்டார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் “ஆம்! அவர் சார்பாக நீ ஹஜ் செய்!’ என்றார்கள். (நூல்: புகாரி 1852)
மற்றவர்களுக்காக ஹஜ்:
வசதியிருந்தும் நோயினாலோ அல்லது முதுமையினாலோ அல்லது ஊனமுற்றிருந்தாலோ, ஹஜ் செய்ய முடியவில்லையெனில் தன் சார்பாக தனது வாரிசு அல்லது உறவினரை ஹஜ் செய்ய அனுப்பி வைக்கலாம்.
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறியதாவது: “கஸ்அம்’ குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் (விடைபெறும் ஹஜ்ஜில்) நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதரே! முதியவரான என் தந்தை ஹஜ் கடமையானவர். அவரால் வாகனத்தில் அமர்ந்து செல்ல இயலாது. அவர் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா?’ என்று கேட்டார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் “ஆம்’ என்றார்கள். (நூல்கள் : புகாரி 1513, முஸ்லிம் 2594)
அபூரஸீன் (ரழி) அவர்கள் கூறியதாவது: நான் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களிடம் சென்று “என் தந்தை முதிர்ந்த வயதுடையவர். அவரால் ஹஜ், உம்ரா செய்யவோ பயணம் மேற்கொள்ளவோ இயலாது. (அவருக்காக நான் செய்யலாமா?) என்று கேட்டேன். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள், “உம் தந்தை சார்பாக நீர் ஹஜ்ஜும், உம்ராவும் செய்து கொள்வீராக’ என்று கூறினார்கள். (நூல்: திர்மிதீ 852)
பிறருக்காக ஹஜ் செய்பவர் அதற்கு முன் அவரது ஹஜ்ஜை நிறைவேற்றி இருக்க வேண்டும்.
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறியதாவது: (விடை பெறும் ஹஜ்ஜில்) ஒருவர் “யா அல்லாஹ்!! ஷுப்ருமாவுக்கு நீ விடுத்த அழைப்பை ஏற்று அவருக்காக நான் அடிபணிந்து இங்கு (ஹஜ் செய்ய) வந்துள்ளேன்’ என்றார். இதைக் கேட்ட நபிஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் “ஷுப்ருமா என்பவர் யார்?’ என்று கேட்டார்கள். அவர் “ஷுப்ருமா என் சகோதரர் என்றோ அல்லது என் உறவினர்’ என்றோ கூறினார். நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் “நீர் உமது ஹஜ்ஜை நிறைவேற்றிவிட்டீரா?’ என்று கேட்டார்கள். அவர் “இல்லை’ என்று பதிலளித்ததும், நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் “முதலில் உமக்காக ஹஜ் செய்யும்’ என்றார்கள். (நூல்கள்: அபூதாவூத், இப்னுமாஜா, பைஹகீ, இப்னு ஹிப்பான், இப்னு குஸைமா)
ஹஜ் செய்யக் கடன் வாங்கக் கூடாது:
இப்னு அபீஅவ்ஃபா (ரழி) அவர்கள் கூறியதாவது: நான் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களிடம் ஹஜ் செய்யாத ஒருவரைப் பற்றிக் கூறி அவர் கடன் வாங்கி ஹஜ் செய்யலாமா?’ என்று கேட்டேன். நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் “கூடாது’ என்றார்கள். (நூல்கள்: பைஹகீ)
ஹராமான பொருளில் ஹஜ் செய்தால் அது செல்லாது:
நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் தூய்மையானவன். அவன் தூய்மையானதைத் தவிர வேறெதையும் ஏற்றுக் கொள்ள மாட்டான். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரழி) நூல்: முஸ்லிம்)
நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் கூறினார்கள் : ஒருவர் தூய்மையான பொருட்களுடன் ஹஜ் செய்ய வந்தால் வானத்தில் இருந்து ஒரு அழைப்பாளர் அவரை அழைத்து “உனது வரவு நல்வரவாகட்டும். உனது பொருளும், வாகனமும் ஹலாலானவை. எனவே உனது ஹஜ்ஜும் பாவச்செயல் எதுவும் கலவாத ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக ஆகட்டும்’ என்று கூறுவார். அவர் ஹராமான பொருட்களுடன் ஹஜ் செய்ய வந்தால் அந்த அழைப்பாளர் “உனது வரவு நல்வரவாகாமல் போகட்டும். உனது பொருளும், வாகனமும் ஹராமானவை. எனவே, உனது ஹஜ்ஜும் பாவங்கள் களையப்படாத ஒப்புக் கொள்ளப்படாத ஹஜ்ஜாக ஆகட்டும்’ என்று கூறுவார். (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரழி) நூல்: தபரானீ)
ஹஜ் உம்ரா செய்ய நடந்தே செல்லக் கூடாது:
அனஸ் (ரழி) அவர்கள் கூறியதாவது: ஒரு முதியவர் தமது இரண்டு புதல்வர்களால் கால்கள் பூமியில் இழுபட (ஹஜ்ஜுக்கு) வந்து கொண்டிருப்பதைக் கண்ட நபிஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் “இவருக்கு என்ன நேர்ந்தது?’ என்று கேட்டார்கள். “நடந்து ஹஜ் செய்வதாக இவர் நேர்ச்சை செய்திருக்கிறார்’ என்று மக்கள் கூறினார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் “இவர் தம்மை (இவ்விதம்) வேதனைப்படுத்திக் கொள்வது அல்லாஹ்வுக்கு தேவையற்றது’ என்று கூறிவிட்டு அவரை வாகனத்தில் ஏறிச் செல்லுமாறு உத்தரவிட்டார்கள். (நூல்கள் : புகாரி 1865, முஸ்லிம் 3375)
உக்பா இப்னு ஆமீர் (ரழி) அவர்கள் கூறியதாவது: என் சகோதரி காலணி அணியாமல் இறையில்லம் கஅபாவிற்கு நடைப்பயணம் மேற்கொள்வதாக நேர்ந்து கொண்டார். (ஆனால் அதை நிறைவேற்ற அவருக்குச் சக்தி இருக்கவில்லை) அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் “உன் சகோதரியின் நடைப் பயணம் அல்லாஹ்வுக்குத் தேவையில்லை. அவர் வாகனத்தில் ஏறிச் செல்லட்டும்’ என்று கூறினார்கள். (நூல்கள் : புகாரி 1866, முஸ்லிம் 3377, அபூதாவூத்)
Dhisaikaati.com