ஹஜ்ஜுப் பெருநாள்!

Post image for ஹஜ்ஜுப் பெருநாள்!

in நோன்பு,ஜகாத்

லப்பைக் அல்லாஹும்ம லப்பைக், லப்பைக் லாஷரீ கலக லப்பைக்,
இன்னல் ஹம்த வன்னிஃ மத லக்க வல் முல்க் லாஷரீக்க லக்

பொருள்: இறைவா உன் அழைப்பிற்கிணங்கி இதோ வந்தேன்,வந்தேன் இறைவா.
உனக்கிணை யேதுமில்லை வந்தேன் இறைவா!! நிச்சயமாக சர்வ புகழும் எல்லா அருட்கொடையும் ஆட்சியும் உனக்கே உரியன.  உனக்கேதும் இணையில்லை.

அன்புடையீர்,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
இறைவா! முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களது கிளையார்கள் மீதும் அனுக்கிரகம் புரிவாயாக. நீ இபுறாஹீம் நபி மீதும் அவர்களது கிளையார் மீதும் அனுக்கிரகம் புரிந்தவாறு. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீதும்  அவர்கள் கிளையார்கள்மீதும் அபிவிருத்தி செய்வாயாக, நீ இபுராஹீம் நபி அவர்கள்மீதும் அவர்கள் கிளையார்கள்மீதும் அபிவிருத்தி செய்தவாறு நிச்சயம் புகழுக்குரியவனும் தலைமையுடையவனுமாக இருக்கின்றாய்.

இஸ்லாமிய மாதங்களில், வருடம் இரண்டு நாட்களை நாம் சங்கை பொருந்திய பெருநாட்களாக கொண்டாடி வருகிறோம். ஷவ்வால் மாதத்தின் முதல் பிறையை நோன்புப் பெருநாளாகவும், துல்ஹஜ் மாதத்தின் பத்தாவது பிறையினை ஹஜ்ஜுப் பெருநாளாகவும் நாம் கொண்டாடி மகிழ்கிறோம்.

ஹஜ்ஜுப் பெருநாள் என்றதுமே நமக்கு இரண்டு நபிமார்களைப் பற்றி நினைவிற்கு வரும். அல்லாஹ்வின் உற்ற தோழர் என்ற கருத்தில் அழைக்கப்படும் “கலீலுல்லாஹ்” என்ற பெயருக்கு சொந்தக்காரரான நபி இபுறாஹீம் (அலை) அவர்களும், அவர்களின் அருமை மகனார் அருந்தவப் புதல்வர் நபி இஸ்மாயீல் (அலை) அவர்களும் நம் நினைவில் நிற்கும் அந்த இரண்டு நபிமார்களாவர். அல்லாஹ்வின் அருள்மறையாம் திருகுர்ஆனை கருத்தூன்றி ஆராயும்போது நபி இபுறாஹீம் (அலை) அவர்களுடைய தியாகவாழ்வு பொன்னெழுத்தால் பொறிக்கப்பட வேண்டிய அற்புத வரலாறாகும். நபி இபுறாஹீம் (அலை) அவர்களுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட சோதனைகளையும் வேதனைகளையும், துன்ப துயரங்களையெல்லாம் அவர்கள் பொறுமையுடன் சகித்திருந்து இறைவனிடம் பிரார்த்தித்து வெற்றி பெற்ற வீர வரலாற்றையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது கட்டாய கடமையாகும். நபி இபுறாஹீம் (அலை) அவர்களுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட சோதனைகளை சுருக்கமாக பார்ப்போம்.

நபி இபுறாஹீம் (அலை) அவர்கள் தம் இளம் பிராயத்திலேயே ஓரிறை கொள்கையான இஸ்லாத்தை எடுத்து சொன்னதின் காரணத்தினால், அவருடைய தந்தையாராலேயே வீட்டைவிட்டும் விரட்டப்பட்ட சோதனை. அல்குர் ஆன் 19:46

கொடுங்கோல் ஆட்சி புரிந்த மன்னன் நம்ரூது என்பவனை எதிர்ததினால் நெருப்பு குண்டத்தில் எறியப்பட்ட சோதனை.அல்குர்ஆன் 21:68,69

திருமணமாகி பல்லாண்டு காலம் பிள்ளைப்பேறு இன்றி பரிதவித்த சோதனை. அல்குர்ஆன் 37:100,101

முதிர்ந்த பருவத்தில் உள்ள இபுறாஹீம் (அலை) அவர்களுக்கு நபி இஸ்மாயீல் (அலை) பிறக்கிறார்கள். சிறிது காலத்திற்கு பின்பு அல்லாஹ்வின் உத்தரவின் பேரில் தம் மனைவி ஹாஜிரா அம்மையாரையும், மகன் நபி இஸ்மாயீல் (அலை) அவர்களையும் பாலைவனத்தில் தகிக்கும் சுடுமணலில் தன்னந்தனியாக விட்டுப் பிரிந்த சோதனை.  புகார,ி அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்

அல்லாஹ்வின் உத்தரவிற்கு கட்டுப்பட்டு தம் அருமை மைந்தரான நபி இஸ்மாயீல்(அலை) அவர்களை அறுத்து பலியிட துணிந்த சோதனை. அல்குர்ஆன் 37:02,03

    ஆக வாழ்நாளில் பல அடுக்கடுக்கான சோதனைகளை சந்தித்தும்கூட மனம் தளராமல் எல்லாம் வல்ல இறைவனிடமே பிரார்த்தனை செய்து பொறுமையுடன் துன்பங்களை சகித்து கொண்டிருந்ததினால் சோதனைகளெல்லாம் சாதனையாக மாறிய சாகஸ வரலாற்றை குர்ஆனில் காணலாம். கிட்டத்தட்ட 5000 வருடங்களுக்கு முன்பாக நடந்த சில நிகழ்ச்சிகளை குர்ஆன் நமக்கு படம் பிடித்து காட்டுகிறது. அந்த பாலைவன சுடுமணலில் அன்னை ஹாஜிரா அவர்கள் ஒவ்வொரு மலைக்குன்றின் அடிவாரத்தில் தண்ணீரை தேடி ஓடிய அந்த நிகழ்ச்சியை நாம் நினைவு படுத்தி கொள்வதற்காகத்தான் இப்போது புனித ஹஜ் பயணம் மேற்கொண்ட ஹாஜிகள் சபா, மர்வா என்ற மலைக்குன்றுகளிடையே ஓடிவருவதை அல்லாஹ் கடமையாக்கி வைத்திருக்கிறான். அன்றைய தினம் அன்னை ஹாஜிராவும் அவர்தம் புதல்வர் நபி இஸ்மாயீல் (அலை) அவர்களும் தாகத்தை தீர்த்து கொள்ள உதவிய அந்த தண்ணீர் தடாகம் தான் இன்றளவும் ஜம் ஜம் என்ற பெயரில் ஹாஜிகளுக்கு தாகம் தீர்க்கும் தண்ணீராக விளங்குகிறது.

நபி இபுறாஹீம் (அலை) அவர்கள் தம் புதல்வரை அல்லாஹ்வின் உத்தரவிற்கு கட்டுப்பட்டு பலியிட துணிந்தபோது, எல்லாம் வல்ல இறைவன் ஒரு ஆட்டை அனுப்பி நபி இஸ்மாயீல் (அலை) அவர்களுக்கு பகரமாக குர்பானீ கொடுக்க செய்ததுடன், இனி மறுமை நாள் வரை வாழும் வசதியுள்ள முஸ்லிம்கள், குர்பானீ கொடுக்கும் பழக்கத்தையும் கடமையாக்கி வைத்தான்.

எல்லாவற்றிற்கும் மேலாக நமது உயிரினும் இனிய நபி (ஸல்) அவர்களை நபி இபுறாஹீமின் மார்க்கத்தையே பின்பற்றுங்கள் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான். அல்குர் ஆன் 3:95

நபி இபுறாஹீம் (அலை) அவர்களது செயலை பின்வரும் காலத்தவரும் (மறுமை நாள் வரை) நினைவு கூறுவதை அல்லாஹ் விரும்புகிறான். அல்குர்ஆன் 37:108

அன்பு சகோதர சகோதரிகளே, ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டத்தின் உயரிய காரணங்களையும் தத்துவார்த்தங்களையும் ஓரளவு சுருக்கமாக புரிந்து கொண்டோம். இன்னும் அதிக விளக்கத்திற்கு திருக்குர் ஆனையும் ஹதீஸ் நூல்களையும் பார்வையிடும்படி கேட்டு கொள்கிறோம்.

நபி இபுறாஹீம் (அலை) அவர்களது வாழ்வில் ஆரம்பம் முதல் முடிவு வரை ஏற்பட்ட துன்பங்களுக்கும் சோதனைகளுக்கும் நமக்கு ஒரு மகத்தான படிப்பினை இருக்கிறது. அதுதான் எத்தகைய கடும் சோதனை ஏற்பட்டாலும் அல்லாஹ்வை பிரார்த்தித்து பொறுமையுடன் ஐவேளை தொழுகையையும் மேற்கொண்டால் நிச்சயமாக வெற்றி பெறலாம் என்பதே அந்த படிப்பினையாகும்.

ஹஜ்ஜுப்பெருநாள் அன்று பள்ளிவாசலுக்கு சென்று பெருநாள் தொழுகை முடித்ததும் கடமை முடிந்தது என்று நினைக்காமல் ஹஜ்ஜுப் பெருநாள் சிந்தனைகளை குறிப்பாக, நபி இபுறாஹீம் (அலை) அவர்களுடைய வாழ்க்கை பாதையினை நெஞ்சில் நிறுத்தி உறவினர், நண்பர்களிடையே ஒருவருக்கொருவர் உபதேசம் செய்ய வேண்டும். வசதிமிக்கவர்கள் குர்பானீ கொடுக்க வேண்டும். இதை பற்றி விரிவாக குர்பானீ சட்டத்திட்டத்தில் காணலாம். மேலும் ஹஜ்ஜு மாதம்பிறை 9 அதாவது அரஃபா தினம் என்றழைக்கப்ப்டும் நாளில் சுன்னத்தான நோன்பு நோற்கவேண்டும். அதற்கு அரஃபா நோன்பு என்று நபி (ஸல்) அவர்கள் பெயர் சூட்டுகின்றார்கள். உடல் ஆரோக்கியம் நிறைந்த ஆண், பெண் இருபாலாரும் சுன்னத்தான இந்த நோன்பை நோற்பதற்கு முயற்சி செய்யவேண்டும். அரஃபா தினத்தன்று நோற்க வேண்டிய நோன்பு பற்றி கீழ்வரும் நபிமொழி தெளிவுபடுத்துகிறது.

அரஃபா தினத்தில் நோன்பு நோற்பது முந்தைய மற்றும் அடுத்த இரண்டு வருட பாவங்களையும் மன்னிக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  நூல்கள்: முஸ்லிம், அபூதாவுது, திர்மீதி, இப்னுமாஜா அறிவிப்பவர்:அபூகதாதா (ரலி)

(இந்த நோன்பு ஹஜ்ஜு கடமையாற்றும் ஹாஜிகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்க). அடுத்து, குர்பானீயின் சட்டத்திட்டங்களை சுருக்கமாக பார்ப்போம்.

குர்பானியின் சட்டங்கள்:
ஹஜ்ஜுப் பெருநாளன்று பிராணிகளை அறுத்துப் பலியிடுவதே குர்பானி என்று சொல்லப்படுகிறது. நபி இபுறாஹீம் (அலை) அவர்களின் தியாகத்தை முன் மாதிரியாகக் கொண்டு நபி (ஸல்) அவர்கள் இதனைச் செய்துள்ளனர். அல்லாஹ்வும் தன் திருமறையில் இதை ஒரு வணக்கமாக அங்கீகரித்துள்ளான்.

உமது இறைவனுக்காகத் தொழுது மேலும் (அவனுக்காக) அறுத்துப் பலியிடுவீராக என்று அல்லாஹ் கூறுகிறான்.அல்குர்ஆன் 108:2

ஹஜ் பெருநாள் தினத்தில் அறுத்துப் பலியிடுவதைவிடச் சிறந்த அமலை ஒருவன் செய்துவிட முடியாது. அந்தப் பிராணியிலிருந்து சிந்துகின்ற இரத்தம் அல்லாஹ்விடம் மிகவும் உயர்ந்த மதிப்பை பெற்றதாகும். அதனைச் சிறந்த முறையில் அறுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். அறிவிப்பவர்:அன்னை ஆயிஷா நூல் :திர்மீதி

தானே அறுக்க வேண்டும்:

குர்பானி யார் கொடுக்கின்றாறோ, அவர் அறுப்பதற்கு ஆட்களைத் தேடி கொண்டிராமல் தானே அறுப்பது சிறந்ததாகும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் தானே அறுத்துள்ளனர்.

நபி (ஸல்) அவர்கள் இரு கொம்புகள் உள்ள வெண்மையும், கறுப்பும் கலந்த இரண்டு ஆடுகளை குர்பானி கொடுத்தனர். பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர் என்று கூறி அவர்கள் தன் கையால் அறுத்தனர்.  அறிவிப்பவர்: அனஸ் (ரலி)நூல் :புகாரி

எப்படி அறுப்பது என்று தெரியாதவராக இருந்தால் அறுக்கின்றபோது, அந்த இடத்தில் நின்று கவனித்துக் கொண்டிருக்க வேண்டும். ஏனெனில் ஃபாத்திமா (ரலி) அவர்களை அவ்வாறு செய்யும்படி நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

குர்பானி கொடுக்க எண்ணியவர் செய்யக்கூடாதவை:

குர்பானி கொடுக்க வேண்டும் என்று எவர் நாடுகிறாறோ அவர் துல்ஹஜ் பிறை ஒன்றிலிருந்து குர்பானி கொடுக்கும் வரை பத்து நாட்களுக்கு நகங்கள், முடிகளை களையக்கூடாது.

உங்களில் யாரேனும் குர்பானி கொடுக்க விரும்பினால் அவர் துல்ஹஜ் பிறை கண்டதிலிருந்து (அறுத்து முடியும்வரை பத்து நாட்களுக்குத்) தன் நகங்களையும் முடிகளையும் களையாதிருக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உம்முஸலமா (ரலி) நூல்:முஸ்லிம்

குர்பானி கொடுக்கும் நேரம்:

பெருநாள் தொழுகையும் அதன் பின்பு ஓதப்படுகின்ற இரண்டு குத்பாக்களும் முடிவதற்கு முன்னால் குர்பானி கொடுக்கலாகாது. அதற்கு முன்பே ஒருவன் அறுத்துவிட்டால் அது ஏற்கப்படாது. இன்னொன்றை அவன் அறுத்துப்பலியிட வேண்டும். எவன் தொழுகைக்கு முன்னர் அறுக்கின்றானோ அவன் தனக்காக அறுக்கின்றான். (அது வணக்கமாகாது) எவன் தொழுகையும் இரண்டு குத்பாக்களும் முடிந்த பின் அறுக்கின்றானோ அவனே முழுமையாக வணக்கத்தை நிறைவேற்றியவனாவான். முஸ்லிம்களின் சுன்னத்தையும் அவனே செய்தவனாவான் என்று நபி (ஸல்) கூறியுள்ளார்கள். நூல்: புகாரி,முஸ்லிம்

நபி (ஸல்) அவர்களுடன் நான் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை தொழுதேன். தொழுது முடித்த பின் ஆடு ஒன்று அறுக்கப்பட்டுக்கிடப்பதை நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள். அப்போது யார் தொழுகைக்கு முன் அறுத்து விட்டாரோ, அந்த இடத்தில் வேறொன்றை (தொழுகைக்குப்பின்) அறுக்க வேண்டும் என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஜுந்துப் இப்னு சுஃப்யான் (ரலி) நூல்கள்: புகாரி,முஸ்லிம்.

குர்பானி பிராணிகள்:

ஆடு மாடு ஒட்டகம் ஆகிய மூன்றை மட்டுமே குர்பானி கொடுக்க வேண்டும் இம்மூன்றையும் அரபியில் அன்ஆம் என்று கூறுவர் (சூரதுல் ஹஜ் 22:34) இம்மூன்றைத் தவிர மற்ற எந்தப் பிராணியும் குர்பானிக்கு உரியதன்று. மாடு, ஒட்டகத்தை ஏழு பேர்கள் கூட்டாகக் கொடுக்கலாம் ஹூதைபியா உடன்படிக்கை ஏற்பட்ட வருடம் ஏழு நபர்கள் கூட்டாக ஒரு மாட்டையும், அதுபோல் ஏழு நபர்கள் கூட்டாக ஒரு ஒட்டகத்தையும், நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் குர்பானி கொடுத்தோம் என்று ஜாபர் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நூல்: முஸ்லிம்

ஒற்றைக் கண் குருடு, வியாதியுடையது, நொண்டி, கிழட்டுப் பருவம் அடைந்தது ஆகிய பிராண்ிகள் குர்பானிக்கு ஏற்றவையல்ல என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: பரா இப்னு ஆஸிப் (ரழி) நூல்கள்: அஹ்மத், அபூதாவூத், இப்னு ஹிப்பான், நஸயீ,திர்மீதி,இப்னுமாஜா

ஆண்மை நீக்கம் செய்யப்பட்ட பிராணிகளை குர்பானி கொடுக்கலாம். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் ஆண்மை நீக்கம் செய்யப்பட்ட பிராணிகளை, குர்பானி கொடுத்துள்ளதாக அபூராபிவு (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸை அஹ்மது இமாம் தனது நூலில் பதிவு செய்துள்ளார்கள்.

ஒரு குடும்பத்திற்கு ஒன்று போதும்:

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு நபர் தனக்கும் தன் குடும்பத்திற்கும் சேர்த்து ஒரு ஆட்டை குர்பானி கொடுத்துள்ளனர் என்று அபூ அய்யூப் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நூல்கள்: இப்னுமாஜா,திர்மீதி

இந்த ஹதீஸின் அடிப்படையில் தனக்கும்,தன் குடும்பத்திற்கும் சேர்த்து ஒரு ஆட்டைக் கொடுப்பது போதுமானது.

கூலியாகக் கொடுக்கக்கூடாது:

நபி (ஸல்) அவர்கள் குர்பானி கொடுக்கும் பணியை என்னிடம் ஒப்படைத்தபோது அதன் இறைச்சியையும் தோலையும் ஏழைகளுக்குக் கொடுக்கும்படியும் உரித்தவர்களுக்குக் கூலியாக இதில் எதனையும் கொடுக்கக்கூடாது என்றும் கட்டளையிட்டனர் என்று அலி (ரலி) அவர்கள் அறிவித்துள்ளனர். நூல்கள்: புகாரி,முஸ்லிம்

பங்கிடும் முறை:     

குர்பானி கொடுக்கப்பட்ட பிராணியின் இறைச்சியை நீங்களும் உண்ணுங்கள் (உறவினர்கள், ஏழைகளுக்கும்) உண்ண கொடுங்கள் சேமித்தும் வைத்துக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் நாம் அதனை உண்ணுவதும், பிறருக்கு உண்ணக் கொடுப்பதும் சுன்னத்தாகும். இவ்வளவுதான் உண்ண வேண்டும் என்று வரம்பு எதுவும் கிடையாது.அவரவர் விரும்பிய அளவு தர்மம் செய்யலாம்.

இறந்தவர்கள் சார்பாக குர்பானி கொடுப்பது:

(எனினும்) குர்பானியின் மாமிசங்களோ அவற்றின் இரத்தமோ அல்லாஹ்வை ஒருபோதும் அடைவதில்லை. ஆனால் உங்களுடைய தக்வா (பயபக்தி) தான் அவனை அடையும்.அல்குர்ஆன் 22:37

இந்த திருவசனத்தில் அல்லாஹ் குர்பானி கொடுப்பதன் மூலம் இறையச்சத்தை நாடுகிறான் என்பதை விளங்க முடிகிறது. ஆகவே இறையச்சம் என்பது உயிறுள்ளவருக்குத்தான் இருக்கும். இறந்தவர்களுக்கு இருக்காது. மேலும், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ஆதமின் மகன் இறந்து விட்டால் மூன்று விஷயத்தை தவிர மற்ற எல்லாத் தொடர்புகளூம் துண்டிக்கப்பட்டு விடுகின்றன. அவை (1) நிரந்தர தர்மம் (2) பயன் தரும் கல்வி (3) தன் பெற்றோருக்காக துஆச் செய்யும் நல்ல குழந்தை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி) நூல்:முஸ்லிம்

அடுத்து நம் இளைய வயதினரில் பெரும்பாலோர் பெருநாள் கொண்டாட்டத்தின் காரணங்களை சரிவர தெரிந்து கொள்ளாமல் இருக்கின்றனர். பெருநாட்களின் தாத்பரியம் என்ன? பெருநாட்களை எப்படி கொண்டாட வேண்டும்? போன்ற பல கேள்விகளுக்கு விடை தெரியாத காரணத்தினால் சில சகோதர சகோதரிகள் துரதிஸ்டவசமாக இஸ்லாத்திற்கு புறம்பாக உள்ள கலாச்சாரங்களை பின்பற்றும் நிலை ஏற்படுகிறது. இத்தகைய விரும்பத்தகாத பழக்க வழக்கங்களை விட்டொழித்து நமது புனிதமிக்க மார்க்கமாகிய இஸ்லாம் வழிகாட்டிய முறையில் பெருநாள் கொண்டாட்டம் அமைய வேண்டும்.

திரைப்படம், திரைப்பாடல்கள்

      வானொலி நிகழ்ச்சிகளில் பெருநாள் தினத்தன்று திரைப்படப்பாடல்களை விரும்பி கேட்பதும், மற்றும் தொலைக்காட்சி, வீடியோவில் திரைப்படங்கள் பார்ப்பதும் நம் இளையரிடையே பரவலாக காணப்படுகிற பழக்க வழக்கங்களாகும். இது நமது இஸ்லாமிய பண்பாட்டில் உள்ளது அல்ல என்பதை தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். நமது இஸ்லாத்தின் கலாச்சாரத்திற்கு மாற்றமாக நம் மனதை கெடுத்து பலவித தவறான எண்ணங்களையும் கருத்துக்களையும் போதிக்கும் திரைப்படங்களை பார்ப்பதை நாம் கைவிட வேண்டும். மேலும், நமது மனோ இச்சைகளை தூண்டி ஷைத்தானிய எண்ணங்களை நம் மனதில் பதியும் எந்த விஷயங்களும் நம் வாழ்க்கையில் பிரதிபலிக்கும் என்பதை மனோவியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள். அதன்படி நம் இளைய சமுதாயம் வாழ்க்கையில் உயர்ந்து சிறந்த மனிதர்களாக உருவாவதற்கு இந்த திரைப்படங்களும், திரைப்பாடல்களும் தடையாக இருக்கின்றன. ஒழுக்க கேட்டையும், நெறியற்ற வாழ்க்கை முறையினையும், ஆபாச வசனங்களையும் வன்முறைகளையும் தூண்டி மனிதனை வழிகேட்டிற்கு அழைத்து செல்வதில் பெரும்பாலான திரைப்படங்களும், திரைப்பாடல்களும் வழிகாட்டியாய் உள்ளன என்பதை மறந்துவிடக்கூடாது. இது விஷயத்தில் பெரியவர்களும் இளையவர்களுக்கு போதனை செய்து சீர்திருத்துவது கடமை என்பதை இங்கு நினைவுப்படுத்துகிறோம்.

 

தமிழ் முஸ்லிம் ஜமாஅத்,  சிங்கப்பூர்

Leave a Comment

Previous post:

Next post: