ரமழான் மாதம் ஆரம்பித்துவிட்டால் ரமழான் தொடர் சொற்பொழிவு என்ற பெயரில் தமிழில் உள்ள பெரும்பாலான சேனல்களில் பேச்சாளர்களில் சிலர் ஏதாவது ஒரு தலைப்பைத் தேர்வு செய்து கொண்டு ரமழான் மாதம் முழுவதும் ஸஹர் நேரத்தில் உரையாற்றி வருவதைப் பார்க்கிறோம். இந்தச் செயல் குர்ஆன், ஹதீஃதிற்கு உட்பட்டதுதானா? என்பதைப் பார்ப்போம்.
சொர்க்கவாசிகளின் பண்பு :
(சொர்க்கவாசிகளான) அவர்கள் தமது இறைவனுக்காக ஸஜ்தா செய்தும், நின்றும் இரவைக் கழிப்பார்கள். குர்ஆன் : 25:64
(சொர்க்கவாசிகளான அவர்கள்) பொறுமையாளர்களாகவும், உண்மை பேசுவோராகவும், (அல்லாஹ்வுக்கு) கட்டுப்பட்டோராகவும் (நல் வழியில்) செலவிடுவோராகவும், ஸஹர் நேரத்தில் பாவமன்னிப்புத் தேடுவோராகவும் (இருப்பார்கள்) குர்ஆன் : 3:17
(சொர்க்கவாசிகளான அவர்கள்) ஸஹர் நேரங்களில் பாவமன்னிப்புத் தேடுவார்கள்.
குர்ஆன் 51:18
இவ்வாறு மேற்கண்ட வசனங்களில் நல்லடியார்கள் தொழுகையின் மூலமாகவும், துஆ செய்வதன் மூலமாகவும் ஸஹர் நேரத்தைக் கழிப்பார்கள் என்பதை அல்லாஹ் தெளிவுபடுத் தியுள்ளான். இதற்கு மாற்றமாக ஸஹர் நேரத்தை பயான்களில் செலவிடுவது குர்ஆனுக்கு எதிரான செயல் என்பதை முஸ்லிம்கள் உணர வேண்டும்.
முஸ்லிம்களே வாய்ப்பை நழுவவிடாதீர் :
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரவின் மூன்றிலொரு பகுதி முடியும் போது மேலோன் அல்லாஹ் கீழ் வானத்திற்கு இறங்கி வருகின்றான். ஃபஜ்ர் நேரம் வரை தொடர்ந்து அங்கேயே இருக்கின்றான். (ஃபஜ்ர் நேரம் ஆகும் வரை வானவர்) ஒருவர் அல்லாஹ்விடம் கேட்பவர் இல்லையா? (கேட்டது) அவருக்குக் கொடுக்கப்படும். பிரார்த்திப்பவர் இல்லையா? (அவரது பிரார்த்தனை) ஏற்கப்படும். உடல் நலத்தைக் கேட்கும் நோயாளி இல்லையா? (அவருக்கு) நிவாரணம் வழங்கப்படும். பாவம் செய்து விட்டுப் பாவமன்னிப்புக் கேட்பவர் இல்லையா? அவருக்கு மன்னிப்பு வழங்கப்படும் என்று கூறிக் கொண்டிருப்பார்.
அறிவிப்பாளர்:அலீ(ரழி),நூல்:அஹ்மத் 921
நம்முடைய அனைத்துத் தேவைகளையும் அல்லாஹ்விடம் கேட்கும் மிக உன்னதமான நேரம் ஸஹருடைய நேரம் என்பதை மேற் கண்ட நபிமொழி மிகத் தெளிவாக உணர்த்துகிறது. முஸ்லிம்கள் மிகப் பெரும்பாலோர் மற்ற மாதங்களில் ஸஹருடைய நேரத்தில் எழுந்திருப்பது மிகவும் அரிதான காரியமாகும். ரமழான் மாதத்திலாவது ஸஹர் நேரத்தில் எழுந்திருப்பவர்கள் மிகமிகப் பொருத்தமான அந்த நேரத்தில் தஹஜ்ஜத் தொழுகை மற்றும் துஆ செய்யும் வாய்ப்பைப் பயன்படுத்தாமல் ஸஹர் நேர பயான்களில் மூழ்குவதன் காரணமாக மிகப் பெரிய அளவில் நன்மைகளை இழந்து வருகிறார்கள். முஸ்லிம்களே ஸஹர் நேர பேச்சாளர்களின் மூலம் ஸஹர் நேரத்தில் மார்க்கத்தைக் கற்றுக் கொள்வதாக நினைத்துக் கொண்டு மிகப் பெரிய அளவில் நன்மைகளை இழந்து வருகிறீர்கள் என்பதை உணருங்கள். உண்மையில் உங்களுக்கு மார்க்கத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால் அல்லாஹ்வின் நெறி நூலான குர்ஆனை தினமும் சிறிது நேரம் ஒதுக்கி பொருள் அறிந்து படித்து வாருங்கள். சில மாதங்களிலேயே உங்களுக்கு மிகப் பெரிய அளவில் மார்க்கத்தைப் பற்றிய அறிவை அல்லாஹ் வழங்குவான். இதற்கு மாற்றமாக வணக்க வழிபாடுகள் செய்யும் நேரமான ஸஹர் நேரத்தில் மார்க்கத்தைக் கற்றுக் கொள்கிறேன் என்ற பெயரில் இனியும் ஸஹர் நேர பயான்களில் மூழ்கினால் உங்களை ஏடுகளைச் சுமக்கும் கழுதைகளாக ஆக்குவதற்கே (62:5) ஸஹர் நேர பயான்கள் உதவும் என்பதை உணர்ந்து, இனி வரும் காலங்களில் ஸஹர் நேர பயான்கள் அனைத்தையும் முற்றிலும் புறக்கணித்து ஸஹர் நேரத்தில் தொழுகை மற்றும் துஆ செய்வதன் மூலமாக உண்மையான நன்மைகளை அடையும் மக்களாக நாம் மாற வேண்டும்.
பிரிவு ஜமாஅத்துகளின் நிலை :
தங்களைத் தாங்களே சுன்னத் ஜமாஅத் என்று கூறிக் கொள்வோர் ரமழானில் இஷா தொழுகை முடிந்த சில நிமிடங்களில் தராவீஹ் தொழுகை என்ற பெயரில் படுவேகமாக குர்ஆனை ஓதி அவசர அவசரமாக ருஃகூ, ஸஜ்தா செய்து 1 மணி நேரத்திற்குள் 23 ரக்அத்தை தொழுதுவிட்டு அதன் பின்னர் தினமும் ஒரு பேச்சாளரைக் கொண்டு பயான் செய்யப்படுவதைப் பார்க்கிறோம்.
இதைப் போன்றே தங்களைத் தாங்களே ஜாக் ஜமாஅத் என்றும் தவ்ஹீத் ஜமாஅத் என்றும் கூறிக் கொள்வோரும் இஷா தொழுகை முடிந்த சில நிமிடங்களில் இரவுத் தொழுகை என்ற பெயரில் 11 ரக்அத்தை 45 நிமிடங்களுக்குள் தொழுது விட்டு அதன் பிறகு பயான் என்று சொல்லிக் கொண்டு மணிக் கணக்கில் பேசிக் கொண்டிருப்பது இன்று மத்ஹபு மற்றும் இயக்கப் பேச்சாளர்களிடம் வாடிக்கையாகி விட்டது. மணிக்கணக்கில் யார் பேசுகிறாரோ அவரை மிகப் பெரிய அறிஞர் என்று மக்கள் நினைத்துக் கொள்கின்றனர். உண்மையில் அறிஞர் என்பவர் யார்? மேலும் பேச்சாளர்கள் குறித்து நபி(ஸல்) அவர்கள் என்ன கூறியிருக்கிறார்கள் என்பதை நபி மொழிகளின் வாயிலாக பாருங்கள்.
அபூவாயில் கீக் பின் ஸலமா(ரஹ்) அவர்கள் கூறியதாவது :
எங்களுக்கு அம்மார் பின் யாஸிர்(ரழி) அவர் கள் (ஒரு வெள்ளிக்கிழமையில்) சுருக்கமாகவும், செறிவுடனும் உரை நிகழ்த்தினார்கள். அவர்கள் (மேடையிலிருந்து) இறங்கிய போது அபுல்யக்ளானே செறிவுடன் சுருக்கமாக பேசி னீர்கள்; இன்னும் சிறிது நேரம் பேசியிருந்தால் நன்றாயிருந்திருக்குமே? என்று நாங்கள் கூறினோம். அதற்கு (அம்மார்) அவர்கள் தொழுகையை நீட்டி உரையை சுருக்குவது ஒருவரது மார்க்க அறிவிற்கு அடையாளம் ஆகும். சில பயான்களில்(சிஹ்ர்) கவர்ச்சி உள்ளது என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள்.
நூல்:முஸ்லிம் 1577
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: வெட்க மும், குறைவானப் பேச்சும் ஈமானுடைய அம்சமாகும். கெட்ட வார்த்தையும், அதிகமான பேச்சும் நயவஞ்சகத்தின் அம்சமாகும்.
அறிவிப்பாளர் : அபூ உமாமா(ரழி) நூல்:திர்மிதீ 1960
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மாடு அசைப்போடுவதைப் போன்று மனிதர்களில் வலிந்து (எதுகை மோனையோடு) பேசக்கூடிய பேச்சாளன் மீது அல்லாஹ் கோபம் கொள்கிறான். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ர்பின் ஆஸ்(ரழி) நூல்: திர்மிதீ 2780
மைக் கிடைத்து அத்துடன் சிறிதளவு கூட்டத்தையும் பார்த்துவிட்டால் தனது குரலை உயர்த்தி ஆக்ரோஷமாக அல்லது மக்களின் ரசனைக்கு ஏற்றவாறு நகைச்சுவை கலந்து வார்த்தைகள் தங்கு தடையின்றி சரளமாகவும், ஆங்காங்கே அரபி கலந்தும் மிக நீண்ட உரைகளை நிகழ்த்தும் பேச்சாளர்களை மிகப் பெரிய அறிஞர்கள் என்று நினைத்து அவர்கள் சொல் வதை அப்படியே கண்மூடி ஏற்றுக் கொள்ளும் முஸ்லிம்களே மேற்கண்ட நபிமொழிகளை ஒன்றுக்குப் பலமுறைப் படித்து உண்மையை விளங்குங்கள்.
முஸ்லிம்களே நமக்கெல்லாம் முன்மாதிரியான நபி(ஸல்) அவர்கள் ஸஹாபாக்களுக்கு மத்தியில் எப்போது பார்த்தாலும் நீண்ட உரைகளை நிகழ்த்தும் பழக்கம் கொண்டவர்களாக இருந்ததில்லை என்பதை உணருங்கள். மேலும் உண்மை எது? பொய் எது? என்பதை தெளிவாக பிரித்துக் காட்டும் அல்லாஹ்வின் நூலான குர்ஆனோடு தொடர்பு வைத்துக் கொண்டு அதன் மூலமாக மார்க்கத்தைக் கற்றுக் கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அல்லாஹ் அதற்கு அருள் புரிவானாக.
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்சினால் உங்களுக்குப் பிரித்தறிவிக்கும் தெளிவை அவன் வழங்குவான்; உங்கள் தீமைகளை உங்களை விட்டு நீக்கி உங்களை மன்னிப்பான். அல்லாஹ் மகத்தான அருளுடையவன். (குர்ஆன் : 8:29)
எஸ்.முஹம்மது ஸலீம், ஈரோடு
{ 1 comment… read it below or add one }
good & useful article