மனிதனின் வாழ்க்கை இவ்வுலகில் தவ்ஹீதை அடிப்படையாகக் கொண்டு துவங்கியதா? அல்லது ஷிர்க்கை அடிப்படையாகக் கொண்டு துவங்கியதா? மனிதன் முதலில் ஓரிறைக் கொள்கையாளனாக இருந்து பின்னர் பல தெய்வ வழிபடு செய்பவனாக மாறினானா? அல்லது பல தெய்வ வழிபாட்டிலிருந்து ஓரிறைக் கொள்கைக்கு மாறினானா என்பதை நாம் முதலில் அறிய வேண்டும். இதற்குத் தெளிவான விளக்கத்தைத் திருகுர்ஆன் கூறுவதைப் பார்ப்போம். “மனிதர்கள் ஒரே சமுதாயமாகவே இருந்தனர்” (அல்குர்ஆன்2:213)
இந்த திருவசனத்தின்படி மனிதன் முதலில் தவ்ஹீது (ஏகத்துவம்) வாதியாகவே இருந்திருக்கிறான் என்பது தெளிவகின்றது. இதே கருத்தைத் தான் ஹதீஸும் வலியுறுத்துகிறது.”நான் அடியார்களைத் தூயவர்களாகவே படைத்தேன் ஆனால் ஷைத்தான் தவ்ஹீதை விட்டும் அவர்களைத் திசைதிருப்பி விட்டான். அவர்களுக்கு (என்னால்) அனுமதிக்கப் பட்டிருந்தவைகளை ஷைத்தான் ஹராமானது என்று காட்டிவிட்டான்” என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இயாழ் இப்னு அஹ்மது, நூல்: அஹ்மது
ஆரம்பத்தில் மனிதன் ஓரிறைக் கொள்கைவாதியாகவே இருந்தான். பின்னர்தான் பல தெய்வ வணக்க வழிபாடுகளில் மூழ்கிவிட்டான் என்பதை மேற்கூறிய இறை வசனமும் நபி மொழியும் தெளிவு படுத்துகின்றன.
ஷிர்க்கின் (இணை வைத்தல்) மூலகாரணம் என்ன?
ஆதம்(அலை) அவர்களிலிருந்து மனிதன் ஓரிறைக் கொள்கையுடையவனாகவே இருந்து வந்தான். அந்தத் தவ்ஹீதைத் பிரச்சாரம் செய்த நல்லடியர்களை அளவுக்கு அதிகமாகக் கண்ணியப்படுத்தி, கடவுள் நிலைக்கு அவர்களை உயர்த்தியதுதான் “ஷிர்க்” (இணை வைத்தால்) தோன்ற மூல காரணமாக இருந்தது. இந்த உண்மையைத் திருக்குர்ஆன் கூறுகின்றது.
“நீங்கள் உங்கள் தெய்வங்களை விட்டு விடாதீர்கள்! மேலும் ‘வத்து’ ‘சுவாவு’ ‘யஹூது’ ‘யவூக்’ ‘நஸ்றா’ ஆகிய தெய்வங்களை நீங்கள் விட்டு விடாதீர்கள்!” என்று அவர்கள் (நூஹ் நபியின் சமூகத்தினர் கூறினார்கள்) (அல்குர்ஆன் 71:23)
இந்தத் திரு வசனத்தில் கூறப்பட்ட ‘வத்து’ ‘சுவாவு’ ‘யஹூது’ ‘யவூக்’ ‘நஸ்றா’ ஆகியோர் ஆரம்ப காலத்தில் வாழ்ந்த நல்லடியார்கள் என்றும், அவர்கள் மரணமடைந்த பின்னர் அவர்களையே மக்கள் கடவுள் நிலைக்கு உயர்த்தி விட்டனர் என்றும், ஆரம்பத்தில் நினைவுச் சின்னம் எழுப்பினர்; பின்னர் அடுத்த தலை முறையினர் அவர்களையே வணங்க முற்பட்டு விட்டனர் என்றும் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் விளக்கம் தந்தனர். (நூல்: புகாரி- தப்ஸீர் பகுதி)
அன்று நூஹ் (அலை) அவர்களின் காலத்தில் வாழ்ந்த மக்கள் இணைவைக்க முற்பட்டதற்குக் காரணம் எதுவோ, அதே காரனத்தினால் தான் இன்றும் பெரும் பகுதியினர் ஷிர்க்கில் வீழ்ந்து கிடக்கின்றனர். நபி(ஸல்) தம் உம்மத்தினர் ஷிர்க்கில் விழக்கூடாது என்றூ எவ்வளவோ தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். அத்தனையையும் மீறி நல்லடியார்கள் மரணித்த பின் அவர்களின் அடக்கஸ்தலத்தில் பல தகாத செயல்களை செய்யத் துவங்கிவிட்டனர்.
எத்தனையோ பள்ளிவாசல்கள் நிர்வாகம் நடத்த போதிய பொருளாதாரம் இன்றி திணறிக் கொண்டிருக்க, கப்ருகளை நிர்வாகம் செய்யப் பொருளாதாரம் குவிந்து கொண்டிருக்கிறது. அல்லாஹ்வை வணங்க நூறு பேர் வருகின்றனர் என்றால் அவனது அடிமைகளை வணங்க ஆயிரக் கணக்கானோர் குவிந்த வண்ணமாக உள்ளனர்.
இறைவா! “என்னுடைய கப்ரை வணக்கஸ்தலமாக ஆக்கி விடாதே” என்று நபி (ஸல்) அவர்கள் துஆச் செய்துள்ளார்கள் என்றால் அது நமக்கு உணர்த்தும் பாடம் என்ன என்பதைப் எண்ணிப் பாருங்கள்! அல்லாஹ் அவர்களின் துஆவை ஏற்று அவர்களின் அடக்கஸ்தலத்தை வணங்குமிடமாக ஆக்காமல் பாதுகாத்துக் கொண்டான். ஆனால் மற்ற கப்ருகள் அந்த நிலைக்கு மாறி விட்டன!
“நாங்கள் கப்ரை வணங்கவா செய்கிறோம்?” என்று நம்மில் சிலர் கேட்கின்றனர். வணங்குவது என்றால் தொழுவது மட்டும் தான் என்று இவர்கள் எண்ணியுள்ளனர். தங்களின் தேவைகளை நிறை வேற்றும்படி பிரார்த்தனை செய்வதும் வணக்கம் என்பதை என்றுதான் உணவார்களோ? சிலைகளுக்குச் செய்யப்படுவது போல் அலங்காரங்களூம் அபிஷேகங்களும், வேறு பெயர்களில் இங்கேயும் நடக்கத்தான் செய்கின்றன. சிலைகள் முன்னே சிலர் பக்தி சிரத்தையோடு நிற்பது போலவே கப்ருகளின் முன்னிலையிலும் இவர்கள் நிற்கின்றனர். இந்நிலை உணர்ந்து தவ்ஹீத் அடிப்படையில் மக்கள் வாழ அல்லாஹ் அருள் புரிவானாக. ஆமீன்.
M. அப்துல் ஜலீல் உமரி,மதனி