“ வானத்திலிருந்து ஒரு துண்டை எறிந்து……”

in அறிவியல்

அல் குர்ஆன் வழியில் அறிவியல்..

அல்லாஹ் தன் அருள்மறை குர் ஆனில், மனிதர்கள் நேர்வழி பெறுவதற்காக ஏராளமான வசனங்களை இறக்கி அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றான். ஆனால் பெரும்பான்மையான மனிதர்கள் அவ்வசனங்களை வெறும் கதை, கற்பனை என்று  அலட்சியப்படுத்தி மனோ இச்சையை பின்பற்றி வாழ்கிறார்கள்.

முன் சென்ற சமுதாயங்கள் இறைக்கட்டளையை புறக்கணித்ததன் காரணமாக பல்வேறு வழிகளில் அவர்கள் அழித்தொழிக்கப்பட்டர்கள். கடும் புயல். பூகம்பம், பெருவெள்ளம், கொடும் சுழல்காற்று, கல் மாரி என அல்லாஹ்வின் வேதனை அவர்களை பிடித்தது.

இன்றைய நவீன அறிவியலை கையில் வைத்துள்ள மனிதன் தன்னைக் காக்க பல்வேறு அறிவியல் நுட்பங்களை கையாளுகிறான். ஆனால் இறைவனின் கட்டளை வந்துவிடும் போது அவனால் ஒன்றும் செய்யமுடியாமல் கை சேதப்படுகிறான். கடந்த பிப்ரவரி 15  வெள்ளிக்கிழமை ரஷ்யாவில் நிகழ்ந்த ஒரு சம்பவம் உலக மக்களையும் அறிவியல் சமுதாயத்தையும் அச்சமடைய செய்தது.

கடந்த நூறு வருடங்களில் மனித சமூதாயம் பார்த்திராத ஒரு மாபெரும் சம்பவம். வானிலிருந்து வந்து வீழ்ந்த ஒரு விண்கல் துண்டு அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்தது. பூமிப் பந்தின் தலைக்கு மேலே லட்சக்கணக்கான மலைகள், பாறைகள், கற்கள் படு வேகத்தில் சுழன்று திரிகின்றன. இவைகளை ஆஸ்டிராய்ட் (Asteroid) குறுங்கோள் அல்லது முரண்கோள் என்று அழைக்கப்படுகிறது.

குறிப்பாக வியாழன் கோளுக்கும் செவ்வாய் கோளுக்கும் இடையில் இவை பெரும் கூட்டமாக வளையமாக (Asteroid  Belt) சூழ்ந்து மிதக்கின்றன. பூமிக்கு அருகில் சுற்றிவரும் சிறிய விண்கற்களின் எண்ணிக்கை ஐந்து லட்சத்திற்கும் அதிகம். இவற்றுள் சுமார் 1% அளவே இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நாஸாவின் நியோ திட்ட விஞ்ஞானிகள் ( NEO-NASA-  Near Earth Object Observation Program ) பூமிக்கருகே வரும் முரண்கோள்களை தொடர்ந்து கண்காணித்து எச்சரிக்கை செய்து வருகின்றனர்.

இப்படி அவர்கள் கண்டுபிடித்து முன் அறிவித்ததுதான் ஆஸ்ட்ராய்ட் 2012 DA14. இவ் விண்கல் துண்டானது சுமார் 150 அடி அகலமும் 130,000 மெட்ரிக் டன் எடையும் உள்ளது. வினாடிக்கு 8 கி. மீ வேகத்தில் 17200  மைல் நெருக்கத்தில் பூமியைக் பிப்ரவரி 15 ல் கடக்கும் என்று அறிவித்தனர். அகில உலக விஞ்ஞானிகளும் இந்த விண்கல் வரும் தெற்கு வடக்கு பாதையை உற்று கவனித்தனர். யாரும் எதிர் பாராத நிலையில் அதே பிப்ரவரி 15 ல் காலை 9:20 மணியளவில் மத்திய ரஷ்யாவின் செல்யாபின்ஸ்க் நகரில் 56 அடி குறுக்களவும் 10,000 மெட்ரிக் டன் எடை நிறைந்த அடையாளம் காணாத புதிய  விண்கல் (Meteor) ஒன்று  வடக்கு தெற்காக பயணம் செய்து வெடித்துச் சிதறியது. இதன் வேகம் மணிக்கு 40,000 மைல்  (64,374  கி.மீ). நமது நவீன அறிவியல் இது வருவதை முன் அறிவிக்க முடியவில்லை.

இது நேரடியாக பூமியை தாக்கியிருந்தால் நகரமே அழிந்திருக்கும். ஆனால் வானிலேயே 15-25 கி.மீ  உயரத்தில் வெடித்து சிதறிய துண்டுகள்தான் நெருப்புப்பிழம்பாக பூமியை தொட்டன. இவ்வெடிப்பினால் ஏற்ப்பட்ட அதிர்ச்சி அலைகளின் தாக்குதலால் 4500 கட்டிடங்களின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறி 1500 மக்களுக்குமேல் காயமடைந்தனர். ஹிரோஷிமாவில் போடப்பட்ட அணு குண்டைப்போல் 30 மடங்கு சக்தியை இவ்வெடிப்பு வெளியிட்டது.

 படைத்த இறைவனை மறந்து, கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று வாழும் மனித இனத்திற்கு ஒரு எச்சரிக்கை மணிதான் வானத்திலிருந்து வந்த துண்டுச் செய்தி. அல்லாஹ் கூறுகிறான்.

“ நாம் விரும்பினால் அவர்களைப் பூமிக்குள் சொருகி விடுவோம், அல்லது வானத்திலிருந்து ஒரு துண்டை (Meteor) அவர்கள் மேல் எறிந்து (அவர்களை) அழித்து விடுவோம்.”  –அல்குர்ஆன். 34:9

மற்றொரு வசனத்தில் மக்களுக்கு  அல்லாஹ் விடுக்கும் எச்சரிக்கை,

“ அவன் உங்களை பூமியில் ஒரு புறத்தில் புதையும்படி செய்துவிட மாட்டான் என்றோ,அல்லது உங்கள் மீது கல்மாரியை ( Meteorites ) அனுப்ப மாட்டான் என்றோ அச்சம் தீர்ந்து இருக்கிறீர்களா?”   –அல் குர்ஆன்.17:68.

அல்லாஹ்வின் வேதனை பூகம்பமாக வந்து பூமியில் மனிதர்கள் புதையுண்டு போகும் சம்பவங்கள் உலகெங்கும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. ஆனாலும் மனிதன் திருந்தவில்லை. மற்றொரு அடையாளமான,  வானிலிருந்து நெருப்புக்கற்கள் வீழ்ச்சி  லூத் (அலை) மக்களின் ஓரினப் புணர்ச்சியாளர்களை அழிப்பதற்காக இறக்கினான்.

“சுடப்பட்ட கற்களை மழைபோல் பொழிய வைத்தோம்” –அல் குர்ஆன்.11:82.

இன்றைய நவீன நாகரிக உலகில் ஓரினப் புணர்ச்சியாளர்கள் கூட்டம் பெருக ஆரம்பித்துள்ளது. இன்றைய ஜனநாயக அரசுகள் இச்சமூகத் தீமையை சட்டபூர்வமாக்கிவிட்டனர். ஆகவே இனி அல்லாஹ்வின் வேதனையை இவர்கள் சுவைப்பதற்காக இனி  வானிலிருந்து தீக்கற்க்களை தொடர்ந்து எதிர்ப்பார்க்கலாம்.

“ அவனுடைய வேதனை உங்களுக்கு இரவிலோ பகலிலோ வந்துவிடுமானால்—(அதைத் தடுத்துவிட முடியுமா? என்பதை) கவனித்தீர்களா? குற்றவாளிகள் எதை அவசரமாகத் தேடுகிறார்கள்?”

“அது வந்ததன் பின்னரா அதை நீங்கள் நம்புவீர்கள்?இதோ! நீங்கள் எது வர வேண்டும் என்று அவசரப்பட்டுக் கொண்டிருந்தீர்களோ அது வந்து விட்டது”   —அல்குர்ஆன்.10:50,51.

பூமியில் மனித இனம் படைக்கப்பட்டு சில லட்சம் வருடங்கள் தான் ஆகின்றன. மனிதன் இப்பூமிக்கு வருவதற்கு முன்பு இவ்வுலகை ஆண்ட உயிரினங்கள் டைனாசராஸ் எனும் இராட்சத விலங்குகள். இன்று இவைகள் இல்லை. ஆனால் உலகெங்கும் கண்டெடுக்கப்பட்ட இம்மிருகங்களின் எலும்புகள், முன்பு இவை இவ்வுலகில் உலவின என்பதற்கு சான்றாய் விளங்குகின்றன. இவை எப்படி அழிந்தன?

அல்லாஹ் கூறுகிறான்,
“ பூமியில் நீங்கள் பிரயாணம் செய்து,அல்லாஹ் எவ்வாறு (முந்திய) படைப்பைத் துவங்கிப் பின்னர் பிந்திய படைப்பை எவ்வாறு உண்டு பண்ணுகிறான் என்பதைப் பாருங்கள்.”   –அல் குர்ஆன்.29:20

மனிதனுக்கு முன்பு படைக்கப்பட்ட டைனாசராஸ் அழிந்தது எப்படி?

எழுபதுகளில் மெக்சிகோவிலுள்ள யுகடான் தீபகற்ப பகுதியில் பெட்ரோலியம் தேடுதல் ஆய்வு நடத்திய கிளென் பென் பீல்ட் (Glen Pen Field) எனும் ஆய்வாளர், சீஷாலூப் (Chicxulub) என்னும் இடத்தில் 180  கி.மீ  விட்டமுடைய பெரும் பள்ளம்  ஒன்றைக் கண்டு ஆய்வுகள் மேற்கொண்டார்.

வானிலிருந்து வந்து வீழ்ந்த ஒரு விண் கல் (Asteroid)  ஏற்பபடுத்திய தாக்கமே அப்பள்ளம் என்று அறிவித்தார். சுமார் 65 மில்லியன் வருடங்களுக்கு முன்பு 10  கி.மீ  அகலம் கொண்ட விண்கல் துண்டு ஒன்று மணிக்கு  50,000  கி.மீ  வேகத்தில் பூமியில் மோதியது. விழுந்த அதிர்ச்சியில் உருவான பள்ளத்திலிருந்து உடைந்து  சிதறிய பாறைத் துண்டுகள் வானுயரத்திற்க்கு வீசி எறியப்பட்டன.  அவை மீண்டும் வளி மண்டலத்தில் நுழைந்து மோதல் அழுத்தத்தால் (ram pressure) எரிகற்களாக விழுந்து எங்கும் தீயை பற்றவைத்தன. விண்கல் விழுந்த ஒரே இடத்தில் 2,000,00 அணுகுண்டுகள் வெடித்தது போன்ற தாக்கத்தை ஏற்ப்படுத்தியது. உலகம் முழுவதும் நில நடுக்கம் ஏற்ப்பட்டது. பல ஆயிரம் மீட்டர் உயரமான மெகா சுனாமி அலைகள் எழுந்தன. கரீபிய கடற்க்கரை 600  கி.மீ  நிலத்திற்குள் வந்தது.

10 கி.மீ அகலமுடைய கல்  விழுந்த இடத்தை சுற்றி 2000 கி.மீ தூரத்திலிருந்த அத்தனை உயிர்களும் அழிந்துபட்டன. விண்கல் மோதலில் ஏற்பபட்ட புழுதியும், எரி மலை வெடித்ததால் எழும்பிய சாம்பலும் வளி மண்டலத்தை மூடியது. அவை பூமியின் மீது பெரும் குடையை கவிழ்த்தியது போன்று மூடியது. எனவே சூரிய ஒளிக் கதிர்கள் தடுக்கப்பட்டு பூமி குளிர்ந்தது.

இந்நிலை ஏறத்தாள பத்து ஆணடுகள் தொடந்தபோது, அன்று இருந்த பருவநிலை மாற்றத்திற்கும், பஞ்சத்திற்க்கும் ஈடு கொடுக்க முடியாமல் டைனாசராஸ் இனம் முற்றாக அழிந்தன. முந்தைய படைப்பான டைனாசரசை அழிக்க காரணம் பிந்திய படைப்பான மனிதன் வாழ்வதற்கு உகந்த சூழலை பூமியில் ஏற்படுத்தவே.

கடந்த ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் 1908  ஜூன் 30  காலை 7:14 மணியளவில்  இதே ரஷ்யாவின்  சைபீரியா  துங்குஷ்கா (Tunguska) காட்டுப்பகுதியில் 130 அடி  (40 மீட்டர்) விட்டமுடைய ஒரு விண்கல் விழுந்து சுமார் 80 மில்லியன் மரங்கள் எரிந்து அழிந்தன. சுமார் 750  சதுர மைல் பரப்பளவு தரை மட்டமானது.

இவ்விண்கல் வானில் 5-10 மைல் உயரத்திலேயே வெடித்து சிதறியதால் பெரும் பள்ளம் ஏற்படவில்லை.ஆனால் இதன் அதிர்ச்சி அலைகள் பெரும் தாக்கத்தை ஏற்ப்படுத்தியது. இதன் சக்தி ஹிரோஷிமாவில் போடப்பட்ட அணுகுண்டைப்போல் 1000 மடங்கு என ஆய்வுகள் கூறுகின்றன.

50,000 வருடங்களுக்கு முன்னால் அமெரிக்காவின் அரிசோனா பாலைவனப்பகுதியில் வீழ்ந்த ஒரு விண்கல் சுமார் 4000 அடி விட்டமும்   570 அடி ஆழமுடைய பெரும் பள்ளத்தை ஏற்படுத்தியது.

 மேலோகத்திலிருந்து வரும் தாக்குதலை தடுப்பதற்காக பூலோக மனிதன் பெரும் முயற்சி எடுக்கின்றான். உடனடியாக 5 மில்லியன் டாலர் செலவில் அதி சக்தி வாய்ந்த 8 டெலஸ்கோப் பொருத்திய வானோக்கு கருவியை (ATLAS—Atlas Terrestrial Impact Alert System ) தயாரித்து, இதனை ஹவாய் தீவுகளில் நிறுவி வானத்தை கண்காணிக்கப் போவதாக நாஸா அறிவித்துள்ளது. நியூயார்க் நகரில் ஒரு சிறு தீக்குச்சியை பற்றவைத்தாலும் அதை சான்பிரான்சிஸ்கோ நகரிலிருந்து பார்க்கும் அளவு மிக நுட்பமான கருவி என்று கூறுகிறார்கள்.

அல்லாஹ்வின் கட்டளை வந்து விட்டால் அதை எந்தக்கருவியும் தடுக்க முடியாது.அல்லாஹ் கூறுகிறான்.

“நம்முடைய கட்டளை (நிறைவேறுவது) கண் மூடி விழிப்பது போன்ற ஒன்றே அன்றி வேறில்லை.

(நிராகரிப்போரே!) உங்களில் எத்தனையோ வகுப்பார்களை நாம் நிச்சயமாக அழித்திருக்கின்றோம். எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா?      -அல் குர்ஆன். 54:50,51.

எஸ்.ஹலரத் அலி-ஜித்தா.

{ 8 comments… read them below or add one }

Azeezullah March 6, 2013 at 11:18 pm

Masha Allah, Very Fantastic article. Very much useful, Zajakallahu Khair Wa Li Ahlik.

Reply

ismailcwi March 14, 2013 at 4:03 am

பாய் இந்த தலைப்பு மிகவும் பயனுள்ள தலைப்பு. இனியும் மக்கள் இதை கொண்டு அச்சம் கொல்லவில்லையெனில் நிச்சயமாக அவர்களுக்கு கேடுதான்

Reply

Najeera Siraj March 14, 2013 at 8:54 pm

Masha Allah. Padaipinangalai padaipadum azhipadum avanandri veru oruvarum illai

Reply

hasin April 5, 2013 at 7:51 pm

masha allah !!!
i found this much interesting and beneficial….

Reply

rizana April 9, 2013 at 12:21 am

allah is great

Reply

rifath ahamed August 21, 2014 at 8:25 pm

allahu akbar

Reply

M.M.A.NATHARSHAH DUBAI August 26, 2014 at 2:48 pm

alhamthilillahirabbilalameen allah akbar

Reply

farooq akhtar ahmed October 29, 2016 at 10:39 pm

ALLAHU AKBAR KABEERA, WALHAMDHU LILLAHI KADHEERA ,SUBHANALLLAHI WABIHAMDHIHI BUKRATHAN WA ASEEELA.

Reply

Leave a Comment

Previous post:

Next post: