“அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் உங்களுக்காக(ப் படைத்து)த் தன் அதிகாரத்துக்குள் வைத்திருக்கிறான். (அவ்வாறே) விண்மீன்கள் யாவும் அவனுடைய சட்டளைக்குட்பட்டவையாகவே இருக்கின்றன. உறுதியாக இதிலும் உய்த்துணரும் மக்களுக்குப் பல நற்சான்றுகள் இருக்கின்றன” (16:12)
“அவன் தான் நீங்கள் மீன்களை(ப் பிடித்துச் சமைத்து)ப் புசிக்கவும், நீங்கள் அணிகலனாக அணியக்கூடிய பொருள்களை எடுத்துக் கொள்ளவும், கடலை(உங்களுக்கு) வசதியாக்கித்தந்தான். (பல இடங்களுக்கும் சென்று வணிகத்தின் மூலம்) இறைவனின் அருளை நீங்கள் தேடிக் கொள்ளும் பொருட்டு, (கடலில் பயணம் மேற்க்கொள்ளும் போது) கப்பல் கடலைப் பிளந்து கொண்டு செல்வதை நீங்கள் காண்கிறீர்கள். (இதற்காக இறைவனுக்கு) நீங்கள் நன்றி செலுத்திக் கொண்ருப்பீர்களாக!”
“உங்களைச் சுமந்திருக்கும் பூமி அசையாதிருப்பதற்காகப் (பெரிய) பெரிய மலைகளை அதன் மீது வைத்தான்! (உங்கள் போக்குவரத்துக்கு) நேரான வழிகளை நீங்கள் அழிவதற்க(ப் பல) வழிகளையும், ஆறுகளையும் அமைத்தான்.” (15:14,15)
இறை விசுவாசிகளே நீங்கள் இவைகளை நன்கு ஆய்ந்து பாருங்கள்! தனிப்பெரும் வல்லவன் ஒருவனுடைய அளப்பரிய ஆற்றலன்றி உலக இயற்கைகள் என்று சொல்லப்படும் படைப்பினங்கள் தோன்றி இருக்க இயலுமா? என்பதைச் சற்றே சிந்தியுங்கள்!
நிதானமாக எண்ணிப் பார்ப்பவர்க்கு இறை ஆற்றல் மிகத் தெள்ளத் தெளிவாகத் தென்படும். மனிதன் என்பவன் என்றும் பலவீனமானவன்! பலமுள்ளவன்-அனைத்தின் மீதும் ஆளுமை உள்ளவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் இலர்!
இத்தகைய வலிமை உள்ளவனையே நாம் வணக்கத்திற்கு உரியவனாக ஏற்று வணங்கி நன்றி செலுத்த வேண்டும்.
“அல்லாஹ்வே அனைத்துப் பொருள்களையும் படைத்தவன். அவனே அனைத்தின் பாதுகாவலன்.
வானங்கள், பூமியிலுள்ள (கருவூலம் முதலிய)வைகளின் திறவுகோல் அவனிடமே இருக்கின்றன. ஆகவே, அல்லாஹ்வின் வசனங்களை எவர்கள் நிராகரிக்கின்றார்களோ அவர்கள் முற்றிலும் நட்டமடைந்தவர்களே!
(நபியே!) நமக்கும், உமக்கு முன்னிருந்த ஒவ்வொரு (தூது)வருக்கும் மெய்யாகவே ‘வஹீ” மூலம் அறிவிக்கப்பெற்றது (என்னவென்றால் இறைவனுக்கு) நீங்கள் இணை வைத்தால், உங்களுடைய நன்மைகள் (யாவும்) அழிந்து, உறுதியாக நீங்கள் நட்டமடைந்தவர்களில் ஆகி விடுவீர்கள் (என்பதாகும்).
ஆகவே, நீர் அல்லாஹ்வையே வணங்கும்; அவனுக்கு நன்றி செலுத்துபவர்களில் நீரும் இருந்துவாரும்”.
இத்துணை தெள்ளத் தெளிவாக பேரிறைப் பெட்டகம் திருக்குர்ஆன் தெளிவாக்கியப் பின்பும், வல்ல அல்லாஹ்வின் ஆற்றலை உணராதவர் எப்படிப்பட்டவராக இருப்பர்? என்பதைச் சிந்தனைச் செல்வர்களே அறிந்துக் கொள்ளுங்கள்!
அழியும் இம்மையின் மீது அசைக்க இயலாத முழு நம்பிக்கை மறுமையின் மீது ஐயம்! இவர்கள் இணை வைப்பவர்கள் தாமே? ஆனால், அவர்கள் (இறை நம்பிக்கையில் அழுத்தம் இல்லாதவர்கள்) நாவால் மொழிவதெல்லாம், “நாங்கள் மறுமையை நம்புகின்றோம்; இம்மை அழியக்கூடியது என்பதை உணர்கின்றோம்” என்பதனையே!
அவர்களின் செயல்முறைகள் யாவும், இம்மையை மிகமிக நேசிப்பவர்கள் என்பதையே காட்டுகின்றன.
பெரியவர்கள் சொன்னார்கள்! முன்னோர்கள் மொழிந்தார்கள்! இமாம்கள் இயம்பினார்கள்! என்றால் உடனுக்குடன் செவி சாய்த்து செயல்படுவார்கள், குர்ஆன் கூறுகிறது! நபிமொழிகள் நவில்கின்றன! என்றால் முகம் சுளித்து நிற்பவர்களே எண்ணற்றோர்!
ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்க முன், மக்கத்து குரைஷிக் குஃப்பார்கள் தங்களின் சுயநல-சுகபோக வாழ்க்கைக்கு துயரங்கள் வந்து விடுமோ என்ற ஆதங்கத்தால் இஸ்லாத்தினை நிராகரித்தார்கள் – அதாவது, வெளிப்படையாக எதிர்த்தார்கள்.
இன்று அப்துர்ரஹ்மான், அப்தில்லாஹ் என பெயர் வைத்துக் கொண்டு குர்ஆன்-ஹதீஸை ஏற்றுக் கொண்டவர்களாக பிறரை நம்ப வைத்து, அறிந்தோ, அறியாமலோ செயலளவில் உதாசீனப்படுத்துகின்றனர். அவர்களைவிட இவர்கள் படு பயங்கரவாதிகள்!
“அல்லாஹ்வை அடிபணிகிறோம்” என்று கூறிக்கொண்டே எண்ணற்ற இணைவைத்தலில் நாளும் ஈடுபட்டு, அடிப்படை இஸ்லாத்தைத் தகர்த்து எறிந்துக் கொண்டு இருக்கின்றனர், என்னே கேவலம்! என்னே மதியீனம்!
“(நபியே!) எவன் நம்முடைய நினைவுறுத்தலைப் புறக்கணித்து இவ்வுலக வாழ்க்கையைத் தவிர, (மறுமையை) விரும்பாதிருக்கின்றானோ அவனை நீர் புறக்கணித்துவிடும்.” (53:29)
“இவர்களுடைய கல்வியறிவு இவ்வளவு தூரம்தான் செல்கின்றது! (இதற்கு மேல் செல்வதில்லை) உறுதியாக உமதிறைவன் தன்னுடைய வழியிலிருந்து தவறியவன் யாரென்பதையும் நன்கறிவான்; நேரான வழியில் செல்பவன் யார் என்பதையும் நன்கறிவான்.” (53,30)
இறை விசுவாசிகளே! உண்மையிலேயே, எம்மனிதர்கள் இறை ஆற்றலை உணர்ந்து, அச்சத்தாலும், நம்பிக்கையாலும் வல்ல நாயனுக்கு அடிபணிந்து வாழுகின்றார்களோ அவர்களே ஈடேற்றம் பெற்றவர்கள்.
எவர்கள் இறையாற்றலை அலட்சியப்படுத்தி, தங்களுடைய பகுத்தறிவின் வெளிப்பாடுகளால் பெருமையடித்தக் கொள்கின்றார்களோ, அவர்கள் உறுதியாக (இம்மையை மிகவும் விரும்புவதால்) இம்மையிலும், மறுமையிலும் கேவலத்துக்குரியவர்களாக வாழப் போகின்றவர்களே!
“ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தைச் சுவைத்தே தீரும். எனினும் உங்கள் (செயல்களுக்குரிய) கூலிகளை நீங்கள் முழுமையாக அடைவதெல்லாம், மறுமை நாளில் தான்! ஆகவே, (அந்நாளில்) எவர் (நரக) நெருப்பிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு சுவர்க்கத்தில் புகுத்தப் பெறுகின்றாரோ அவர், உறுதியாக(பெரும்) பாக்கியத்தை அடைந்து விட்டார். இவ்வுலக வாழ்க்கை, மயக்கக் கூடிய (அற்ப) இன்பத்தைத் தவிர வேறில்லை”. (3:185)
புலவர். செ. ஜஃபர் அலி, பி.லிட்.,