வணக்கமும் உதவிதேடலும்

in இணைவைத்தல்

திருக்குர்ஆனின் போதனைப்படி இறைவனுக்குச் செய்யவேண்டிய வணக்கம் மூவகைப்படும். அவையாவன:-
(1) அவனுக்குரிய உயர்ந்த இலட்சணங்களைக் காட்டும் பெயர்களைக் கொண்டு நாவால் புகழ்தல்
(2) அவன் சன்னியதில் உள்ளச்சத்துடன் கைகட்டித் தலைகுனிந்து நெற்றியைப் பூமியில் வைத்து (ஸுஜுது செய்து) தன் சரீர உறுப்புகளைக் கொண்டு தன்னைத் தாழ்வுப்படுத்தி, அவனை மகத்துவப் படுத்துதல்.
(3) தன் உடலையும், பொருளையும் மற்றும் தான் நேசிக்கும் எல்லா வஸ்துக்களையும் அவனுக்காகத் தியாகம் செய்தல்.

இம்முன்றில் முதல் வகை வணக்கம் ஆண்டவனுடைய மகத்துவத்தையும், அவன் நமக்குக் கொடுத்திருக்கும் பாக்கியங்களையும் நினைத்து ரஹ்மான், ரஹீம், ரப்பில் ஆலமீன் என்ற அவனது திருநாமங்களை- அம்மொழிகளின் கருத்துகளை மனதில் கொண்டு மொழிவதால் நிறைவேறுகிறது.

தொழுகையின் மூலம் இரண்டாவது வகை வணக்கம் நிறைவேறுகிறது.
மூன்றாவது வகை வணக்கம், உடலைத் தியாகம் செய்யும் நோன்பின் மூலமாகவும், பொருளை தியாகம் செய்யும் ஜக்காத்தின் மூலமாயும், ஆண்டவனுக்காகப் போர்புரியும் ஜிஹாதின் மூலமாக நிறைவேறுகிறது. அம் மூவகை வணக்கங்களும் அவனுக்காகவே செய்யப்படுபவை. அதனை உத்தேசித்துதான், “உன்னையே நாங்கள் வணங்குகிறோம்” எனத் திட்டப்படுத்திக் கூறுமாறு நமக்கு இறைவன் கற்பிக்கிறான், அடியான் தான் மட்டும் தன் நன்மைக்காகச் செய்யும் வணக்கத்தை விட தன்னைப் போன்ற மற்றைய சகோதரர்களையும் அவ்வணக்கத்தில் சேர்த்துக் கொண்டு செய்வது விசேஷமென்பதைக் காட்டவே, நாங்கள் என்று பண்மையாகக் கூறும்படி சைகை காட்டியுள்ளான்.

‘உன்னையே நாங்கள் வணங்குகிறோம் மேலும் உன்னிடமே உதவி தேடுகிறோம்’
என்ற இவ்வாக்கியங்களின் மூலமாக இறைவன் தன்னையே வணங்கும் படியும், தன்னிடமே உதவ, வேண்டும்படியும் கற்பிக்கிறான். வணக்கத்திற்குத் தகுதியாவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லையென்பதும், இலாபத்தையோ, நஷ்டத்தையோ உண்டாக்கும் சக்தி அவனுக்கேயல்லாமல் வேறு யாருக்கும் இல்லையென்று நம்புவுதும் இஸ்லாத்தின் மூலக் கொள்கைகளாகும். இம்மூலக் கொள்கைகளுக்கு மாறாக அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியானாவர் உண்டு என்று நம்புவதும் அவர்களுக்கு வணக்கம் செய்வதும், அவனைத்தவிர வேறு யாருக்கும் லாப நஷ்டத்தையோ உண்டாக்கும்
சக்தியுண்டென்று நம்புவதும் இஸ்லாத்தில் ஷிர்க் (இணை வைத்தல்) என்னும் மன்னிக்க முடியாத குற்றமாகும். நபியோ, ரசூலே, வலீயோ, யாருக்காயினும் லாப நஷ்டத்தையுண்டாக்கும் சக்தியுண்டென்று நம்புவதும், அவர்களிடம் உதவி தேடுவதும் பெரும் குற்றமே. இவைப் போலவே நட்சத்திரங்களுக்கோ லாப நஷ்டத்தை உண்டாக்கும் தன்மையுண்டென்று நம்புவதும் கடுமையான குற்றமாகும்.

ஒவ்வொருவரும் தமது முதல் பெருந்தேவைகள் வரை எல்லாத் தேவைகளையும் நிறைவேற்றும்படி அல்லாஹ்விடத்தில் மட்டுமே கேட்க வேண்டும் என்பதைக் காட்டுவதற்காக நபி (ஸல்) அவாகள்.

“செருப்பின் வார் அறுந்து போனால் அதையும் அல்லாஹ்விடமே கேட்பாயாக” என நபி (ஸல்) அவர்கள் கூறி இருக்கிறார்கள். (திர்மிதி)

அப்துல்லாஹ்வின் அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது ஒரு தினம் நான் நபி (ஸல்) அவாகளைப் பின் தொடாந்து சென்றேன். அப்பொழுது அவர்கள் (உன்னை நோக்கி) “சிறுவனே! அல்லாஹ்வின் கடமைகளைப் பேணிக் கொள்! அவன் உன்னைப் பாதுகாப்பான். நீ வேண்டுதல் புரிந்தால், இறைவனிடமே வேண்டுதல் புரிந்துகொள்! நீ உதவி கோருவதாக இருந்தாலும், இறைவனிடமே உதவி கோரிக்கொள். திட்டமாக (உலகில்) சகல கூட்டத்தினரும் உனக்கு ஒரு வஸ்துவின் மூலம் நன்மை செய்ய ஒன்று கூடினாலும் அல்லாஹ் விதித்த ஒன்றையன்றி வேறெதைக் கொண்டும் அவர்கள் உனக்கு நன்மை செய்துவிட முடியாது. இன்னும், உனக்குத் தீங்கிழைக்க அவர்கள் அனைவரும் ஒன்று கூடிக் கொண்டாலும், அல்லாஹ் உன் மீது விதித்த ஒன்றைக் கொண்டல்லாது எந்தத் தீங்கையும் அவர்கள் உனக்கு செயதுவிட முடியாது ” என்று கூறினார்கள். (அல்ஹதீது. நூல்: திர்மிதி. அறிவிப்பாளர்: அஹ்மத்)

வருங்காலத்தில் நடக்கக் கூடிய விஷயங்களை அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் தெரிந்து கொள்ள முடியாது. இது அல்லாஹ்விற்கு மட்டுமே சொந்தமாகியுள்ள இலட்சணம், ஜோஸியத்தின் மூலமோ, குறிகாரரின் மூலமாகவோ பின்னால் நடைபெறப் போகும் காரியங்களைத் தெரிந்து கொள்ள முடியும் என்று நம்புவது ஷிர்க்க்காகும். இதைக் குறித்தே நபி (ஸல்) அவர்கள்.

“(எதிர்காலத்தைப் பற்றி) குறிகாரன் சொல்வதை ஒருவன் நம்புவானேயானால் அவனுடைய நாற்பது இரவுத் தொழுகைகள் (இறைவனால்) அங்கிகரிக்கப்படமாட்டா.” என அருளியிருக்கிறார்கள்.

நாட்களாலும், நட்சத்திரங்களாலும் காரியங்கள் நடைபெறுகின்றன என்பதை நம்புவது பெரும் குற்றம் என்பதை நபி (ஸல்) அவர்கள் எடுத்துரைக்கையில்

“அல்லாஹ்வின் அருளால் மழை பெய்தது என்று சொன்னவன் விசுவாசியென்றும், இன்னன்ன நட்சத்திரங்களால் தான் மழை பொழிந்தது என்று சொன்னவன் ஆண்டவனுக்கு மாறு செய்தவன் (காபிர்)” என்றும் அருளியிருக்கிறார்கள். (சுருக்கம்: புகாரி,முஸ்லிம்)

அதனால் நாள் நட்சத்திரம் சகுனம் பார்ப்பதும் குறி கேட்பதும் இஸ்லாத்தில் கண்டிப்பாக விலக்கப்பட்டிருப்பதுடன் இந்த அத்தியாயத்தின் 4வது வாக்கியத்தின் இரண்டாவது பகுதிக்கு முற்ற முற்ற முரணானதுமாகும்.

உதவி தேடுதலின் உண்மைப் பொருள்:

சிலர் இறைவனின் சிருஷ்டிகளை அவன் வெளியாகும் துறையென்று நம்பி வணங்குகின்றனர். முஸ்லிம்களிற் சிலருங்கூட பெரிய மகான்களின் சின்னங்களென சிலவற்றை வைத்துக் கொண்டு செய்யத் தகாத சில செய்கைகளை அவற்றின் பெயரால் செய்கின்றனர்; முத்தமிடுகின்றனர். சிலர் அவாகள் சமாதி கொண்டிருக்கும் இடங்களில் வாசற்படிகளைத் தொட்டுத் தடவிக்கொள்வதுடன் கஃபாவை வலஞ்சுற்றுவது போன்று சமாதியைச் சுற்றி அதை ஒரு வணக்கமாகவும் கருதுகின்றனர்.

சமாதி கொண்டிருக்கும் மகான்களுக்கும் வலிமார்களுக்கும் இறைவனுக்கு இருந்து வருகிற சக்திகள் போன்று இருப்பதாக எண்ணிக்கொண்டு இறைவனிடம் கையேந்தி உதவியருள வேண்டுவது போல வேண்டுகின்றனர். இவை யாவும் சந்தேகமின்றி தவறானவையும் இணைவைக்கும் தன்மையில் சேர்ப்பனவாகவும் இருக்கின்றன. இது பற்ற ிநபி (ஸல்) அவர்கள் கண்டித்துக் கூறுகையில், “எனக்குப் பின்னர் தனது கப்ரை, (மண்ணரையை ) தொழும் இடமாக – ஸுஜுது செய்யும் இடமாக – ஆக்கிக் கொள்ளாதீர்கள்” (புகாரி, முஸ்லிம்) என்றுரைத்திருப்பது கவனிக்கத்தக்கதாகும்.

அல்லாஹ்வைத் தவிர்த்து வேறு யாரையும் வணங்குவது ஹராம் என்னும் கொடிய குற்றமாகும். அவனைத் தவிர்த்து வேறெவருக்கும் ஸுஜுது செய்வதோ ருகூஉ செய்வதோ கூடாத செய்கைகளாகும். அவ்வாறு செய்தோர் இணவைக்கும் பெரும் குற்றத்தை செய்தவராவார் என்பது இதன் மூலம் நிரூபணமாகிறது.

ஒரு சமயம நபி (ஸல்) அவர்களிடம் அவர்களது தோழர்கள் “தங்களுக்கு நாங்கள் ஸுஜுது செய்ய விரும்புகிறோம்” என்று கேட்டுக் கொண்டார்கள். இதனைப நபி (ஸல்) அவர்கள் மிகவும் கண்டிப்புடன் தடுத்து விட்டார்கள். (அல்ஹதீது. ஆதார நூல் :மிஷ்காத்)

இஸ்லாமிய சட்டங்கள்
இதுவுமின்றி அல்லாஹ்விற்கன்றி பிறரின் பெயரால் நோன்பு நோற்பது தர்மம் கொடுப்பதும் கூடாத செய்கைகளாகும். இறைவனின் திருவீடாக திரு கஃபாவைத் தவிர்த்து வேறு எதனையும் (தவாப்) சுற்றுவதும் தகாது ஹஜ்ஜு செய்வதற்காக ஒரு குறிப்பிட்ட (இஹ்ராம்) உடை அணிவது போல் அணிந்து கொண்டு, அதை வணக்கமெனக் கருதிக்கொண்டு ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு செல்லக்கூடாது. அல்லாஹ்வின் பெயரால் அல்லாமல் வேறு ஒருவரின் பெயர் கூறி உயிர் பிராணிகளைப் பலியிடுதலும் கூடாது. இவ்வாறே இறைவனைத் தவிர்த்து வேறு ஒருவரிடம் (துஆ) பிரார்த்தனை புரிவதும், அவரைச் சர்வ தேவைகளையும் நிறைவேற்றி சக துன்பங்களையும் அகற்றுபவர் என்று நினைப்பதும் கொடிய பாபங்களாகும் என இஸ்லாமிய சட்ட ஆதார நூல்கள் அறிவிக்கின்றன.

 

 

திருக்குர்ஆன் விரிவுரையாளர்: E.M. அப்துர் ரஹ்மான், (நூரிய்யி, பாஜில் பாகவி)

Leave a Comment

Previous post:

Next post: