உண்மை முஸ்லிம் நயவஞ்சகம், ஏமாற்றுதல், வஞ்சப் புகழ்ச்சி போன்ற தன்மைகளை விட்டும் விலகியிருப்பார். அவரது மார்க்க போதனை இத்தகைய ஆபத்திலிருந்து அவரைப் பாதுகாக்கும். அதிகமான மக்கள் வஞ்சப் புகழ்ச்சியில் சிக்கிக் கொண்டு தங்களை அறியாமலேயே நயவஞ்சகம் என்ற அழிவில் வீழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்களிடம் பனூ ஆமிர் என்ற கூட்டத்தினர் புகழ்ச்சியாகக் கூறினர்: ”நீங்கள் எங்களது தலைவர்.” உடனே நபி (ஸல்) அவர்கள் ”தலைவன் அல்லாஹ் மட்டுமே” என்று கூறினார்கள். அக்கூட்டத்தினர், ”நீங்கள் எங்களில் மிகவும் சிறப்புக்குரியவர், மகத்தான அந்தஸ்துடையவர்” என்று கூறியபோது நபி (ஸல்) அவர்கள் ”உங்களது இந்த வார்த்தைகளை முழுமையாகவோ, அதன் ஒரு பகுதியையோ கூறிக் கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் ஷைத்தானுக்கு துணை போகாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் என்னை எந்த அந்தஸ்தில் படைத்துள்ளானோ அதைவிட மேலாக நீங்கள் என்னை உயர்த்துவதை நான் விரும்பவில்லை. நான் முஹம்மது இப்னு அப்துல்லாஹ், அல்லாஹ்வின் அடியாரும், அவனது தூதருமாவேன்” என்று கூறினார்கள். (ஹயாத்துஸ் ஸஹாபா)
நபி (ஸல்) அவர்கள்தான் முஸ்லிம்களின் தலைவர், அவர்களில் சிறப்பானவர் என்பது சந்தேகத்துக்கிடமின்றி இருந்தாலும் புகழ்வதை அனுமதித்தால் மக்கள் வரம்பு மீறிச் சென்று புகழுக்குத் தகுதியற்றவர்களை மேன்மைக்குரியவர், தலைவர் என்றெல்லாம் புகழ்ந்து விடுவார்கள் என்பதால்தான், தன்னைப் புகழ்ந்தவர்களை தடுத்தார்கள். மேலும், இம்மாதிரியான புகழ்ச்சிக்கு இடமளித்தால் அது மக்களை நயவஞ்சகத்தனம் என்ற அழிவின்பால் சேர்த்துவிடும். இவ்வாறு புகழ்வது பரிசுத்தமான இஸ்லாமின் அடிப்படைக்கு முரண்பட்டதாகும்.
புகழ்பாடுவது, புகழ்பவனை நயவஞ்சகத் தன்மையை நோக்கி இழுத்துச் சென்றுவிடும். அவ்வாறே புகழப்படுபவனை பெருமைக்கு ஆளாக்கிவிடும் என்பதால்தான் நபி (ஸல்) அவர்கள் தங்களது தோழர்கள் மனிதர்களின் முகத்துக்கு எதிரே புகழ்வதை தடுப்பவர்களாக இருந்தார்கள்.
அபூ பக்ரா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்களின் சமூகத்தில் ஒரு மனிதர் இன்னொரு மனிதரை அவரது முகத்துக்கு முன்னால் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள் ”நீர் நாசமடைவீராக! உமது தோழரின் கழுத்தை அறுத்து விட்டீர். உமது தோழரின் கழுத்தை அறுத்து விட்டீர்” என மூன்றுமுறை கூறினார்கள். பிறகு, ”எவரேனும் தனது சகோதரரை அவசியம் புகழ்வதாக இருந்தால் அவரைப் பற்றி இவ்வாறு கருதுகிறேன். அல்லாஹ்வே அவருக்குப் போதுமானவன் என்று (மட்டும்) அவர் சொல்லட்டும். அதுவும் அவர் அவ்வாறு இருப்பதாகக் கருதினால் மட்டுமே அதைக் கூறவேண்டும். அல்லாஹ்வுக்கு முன் யாரையும் தூய்மையானவர் என்று (எவரும்) கூறவேண்டாம்” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
கண்டிப்பாக புகழவேண்டிய நிலை ஏற்பட்டால் அந்தப் புகழ், புகழப்படுபவனுக்கு உண்மையில் பொருந்தக்கூடியதாக இருக்க வேண்டும். வரம்பு மீறாமல் கூடுதல் குறைவின்றி நடுநிலையுடன் அமைய வேண்டும். அதன்மூலமே சமூகத்தை பொய், நயவஞ்சகம், ஏமாற்றுதல், முகஸ்துதி போன்ற இழி குணங்களிலிருந்து தூய்மைப்படுத்த முடியும்.
ரஜா (ரஹ்) அவர்கள் மிஹஜன் (ரழி) அவர்களின் வாயிலாக அறிவிப்பதாவது: நபி (ஸல்) அவர்களும் மிஹஜனும் மஸ்ஜிதில் இருந்தபோது தொழுது ருகூவு, ஸுஜூது செய்து கொண்டிருந்த ஒரு மனிதரைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், அவர் குறித்து இவர் யார்? என வினவினார்கள். மிஹஜன் (ரழி) அவரை அதிகம் புகழ ஆரம்பித்து ”இவர் இப்படி, இப்படி சிறப்புக்குரியவர்” என்றார். நபி (ஸல்) அவர்கள் ”போதும். நிறுத்திக்கொள்! அவர் கேட்கும்படி கூறாதே. அவரை அழித்து விடுவாய்” என்று கூறினார்கள். (அல் அதபுல் முஃப்ரத்)
முஸ்னத் அஹமத் கிரந்தத்தின் ஓர் அறிவிப்பில் கூறப்படுவதாவது: ”அல்லாஹ்வின் தூதரே! இம்மனிதர் மதீனா வாசிகளில் மிக அழகியவர் என்றோ மதீனாவாசிகளில் மிக அதிகமாகத் தொழுபவர்” என்றோ கூறியபோது நபி (ஸல்) அவர்கள் ”அவர் கேட்கும்படி புகழாதே. அவரை நீ அழித்துவிடுவாய்” என இரண்டு அல்லது மூன்றுமுறை கூறிவிட்டு நீங்கள் (எல்லா விஷயங்களிலும்) இலகுவானதையே நாடப்பட்ட சமுதாயத்தினர்.” என்றும் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘ஒருவரின் முன்னிலையில் அவரைப் புகழ்வது அழிவை ஏற்படுத்தும்’ என்று கூறினார்கள். ஏனெனில் அவ்வாறு தன்னை புகழ்வதைக் கேட்கும்போது மனித மனம் அதை மிகவும் விரும்பும். அதைக் கேட்பவர் அகந்தையும், ஆணவமும் கொண்டு மக்களிடமிருந்து தனது முகத்தை திருப்பிக் கொள்வார்.
புகழ்பவர்களில் சிலர் ஏமாற்றுபவர்களாகவும், பொய்யர்களாகவும், நயவஞ்சகர்களாகவும் இருப்பதால் மீண்டும் மீண்டும் புகழும்போது புகழைக் கேட்பவர்கள் அதில் இன்பமடைய ஆரம்பித்து விடுகிறார்கள். அதற்குப் பின் அவர்கள் வரம்பு மீறிய புகழைத் தவிர அறிவுரையையும், விமர்சனத்தையும் விரும்பமாட்டார்கள். அப்போது அவர்களது அதிகாரத்தில் சத்தியம் வீணடிக்கப்படும், நீதம் அழிக்கப்படும், மாண்புகள் குழி தோண்டிப் புதைக்கப்படும், சமூகம் சீரழிவைச் சந்திக்கும். இவ்வாறு ஆட்சி அதிகாரங்கள் உடையவர்களை சுற்றி நின்று புகழ்பவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.
நயவஞ்சகமாகப் புகழ்பவர்கள் இஸ்லாமிய சமூகத்தில் அதிகரித்து, நயவஞ்சகமும் முகஸ்துதியும் அதிகரித்துவிடக் கூடாது என்பதால் நபி (ஸல்) அவர்கள் புகழ்பவனின் முகத்தில் மண்ணை வீசுமாறு தங்களது தோழர்களுக்கு உத்தரவிட்டார்கள்.
ஒரு மனிதர் ஆட்சியாளர்களில் ஒருவரைப் பற்றி புகழ்ந்து பேசியபோது மிக்தாத் (ரழி) அவர்கள் அம்மனிதரின் முகத்தை நோக்கி மண்ணை அள்ளி வீசிவிட்டுக் கூறினார்கள்: ”அதிகமதிகம் புகழ்பவர்களை நீங்கள் கண்டால் அவர்களது முகத்தில் மண்ணை எடுத்து வீசுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
நபித்தோழர்கள் இவ்வாறு புகழ்ப்படுவதைக் கேட்டு மிகவும் வெறுப்படைந்தார்கள். தாம் அழிந்து விடுவோம் என்ற அச்சத்தில் அந்தப் புகழ் வார்த்தைகளுக்கு தகுதியுடையவர்களாக இருந்தும் அதை வெறுத்தார்கள். மேலும் அவர்கள் இத்தகைய கீழ்த்தரமான செயல்களி லிருந்து விலகி இஸ்லாமின் தூய பண்புகளைப் பெற்றிருந்தார்கள்.
நாபிஃ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்களை ”மனிதர்களில் மிகச் சிறந்தவரே! அல்லது மனிதர்களில் மிகச் சிறந்தவரின் மகனே!” என்று அழைத்தார். இப்னு உமர் (ரழி) அவர்கள் ”நான் மனிதர்களில் சிறந்தவனுமல்ல, மிகச் சிறந்த மனிதரின் மகனுமல்ல. அல்லாஹ்வின் அடிமைகளில் ஒருவன். அல்லாஹ்வின் அருளை ஆதரவு வைக்கிறேன். அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! ஒரு மனிதனை அழிக்காதவரை நீங்கள் ஓயமாட்டீர்கள்” என்று கூறினார்கள். (ஹயாத்துஸ் ஸஹாபா)
இது நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கு அடிபணிந்து அந்தரங்கத்திலும் பகிரங்கத்திலும் அவர்களது வழிமுறையை முழுமையாக பின்பற்றிய பிரபல நபித்தோழரின் விவேகமான பதிலாகும். நயவஞ்சகத் தன்மையை வெற்றி கொள்வதற்கென நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த நேர்வழியைப் பின்பற்றிய நபித்தோழர்கள் இது விஷயத்தில் மிகக் கவனமாக இருந்தார்கள். அவர்கள் அல்லாஹ்வின் திருப்திக்காக மனத்தூய்மையுடன் செய்யப்படும் அமல்களுக்கும், நயவஞ்சகத்தனத்துடன் செய்யப்படும் செயல்களுக்கு மிடையே உள்ள வேறுபாட்டைத் தெளிவாக அறிந்திருந்தார்கள்.
இப்னு உமர் (ரழி) அவர்களிடம் சிலர்: ”அதிகாரத்தில் உள்ளவர்களிடம் நாங்கள் செல்லும்போது அவர்களிடமிருந்து வெளியேறிய பின் எதைக் கூறுவோமோ அதற்கு மாற்றமாக அவர்களிடம் பேசுகிறோம்” என்றார்கள். இப்னு உமர் (ரழி) அவர்கள் ”நாங்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இதை நயவஞ்சகத்தனம் எனக் கருதினோம்” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)
{ 1 comment… read it below or add one }
All the people should learn about this article and follow the in their life, Allah will accept our dua.