ருகூவும் ஸுஜூதும் தொழுகை முறை

in தொழுகை

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
திருகுர்ஆனின் தோற்றுவாயை (அல்ஹம்து ஸுராவை) ஓதாதவருக்குத் தொழுகை கூடாது. இதை உபாதா பின் ஸாமித்(ரழி) அறிவிக்கிறார்கள். (புகாரி (ர.அ.) : 756)

அபூஹுரைரா(ரழி) கூறியதாவது :
நபி(ஸல்) அவர்கள் பள்ளிக்கு வந்தார்கள். ஒரு மனிதரும் (அந்த நேரத்தில்) பள்ளிக்கு வந்து தொழலானார். (தொழுது முடித்ததும்) நபி(ஸல்) அவர்களுக்கு அவர் ஸலாம் கூறினார். நபி(ஸல்) அவர்கள் பதில் ஸலாம் கூறினார்கள். பின்பு திரும்பவும் நீர் தொழுவீராக? நீர் தொழவே இல்லை என்றும் கூறினார்கள்.

அந்த மனிதர் முன்பு தொழுதது போலவே மீண்டும் தொழுது விட்டு வந்து நபி(ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறினார். திரும்பவும் தொழுவீராக! நீர் தொழவே இல்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இவ்வாறு மூன்று தடவை நடந்தது. அதன் பிறகு அந்த மனிதர் சத்திய மார்க்கத்துடன் உங்களை அனுப்பியுள்ள இறைவன் மீது ஆணையாக இவ்வாறு தொழுவதைத் தவிர வேறு எதையும் நான் அறிந்திருக்கவில்லை! எனவே எனக்குக் கற்றுத் தாருங்கள்! என்று கேட்டார்.

நீர் தொழுகைக்காக நின்றதும் தக்பீர் கூறுவீராக! பின்னர் குர்ஆனில் உமக்குத் தெரிந்தவற்றை ஓதுவீராக! பின்னர் அமைதியாக ருகூவு செய்வீராக! பின்னர் ருகூவிலிருந்து எழுந்து சரியான நிலைக்கு வருவீராக! பின்னர் நிதான மாக ஸஜ்தா செய்வீராக! ஸஜ்தாவிலிருந்து எழுந்து நிதானமாக உட்காருவீராக! இவ்வாறே உமது எல்லாத் தொழுகைகளிலும் செய்து வருவீராக! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி (ர.அ.): 757,793)

அபூகதாதா(ரழி) கூறியதாவது :
நபி(ஸல்) அவர்கள் லுஹர் தொழுகையின் முதலிரண்டு ரகாஅத்களில் அல்ஹம்து அத்தியாயத்தையும் துணை அத்தியாயங்கள் இரண்டையும் ஓதுவார்கள். பிந்திய இரண்டு ரகாஅத்களில் அல்ஹம்து அத்தியாயத்தை ஓதுவார்கள். ஒரு சில வசனங்களை எங்களுக்குக் கேட்குமளவுக்கும் ஓதுவார்கள். இரண்டாவது ரகாஅத்தை விட முதல் ரகாஅத்தில் நீளமாக ஓதுவார்கள். இவ்வாறே அஸரிலும் ஸுபுஹிலும் செய்வார்கள்.  (புகாரி (ர.அ.) : 776)

அபூஹுரைரா(ரழி) கூறியதாவது :
நபி(ஸல்) அவர்கள் தொழுகையைத் துவக்கும்போது தக்பீர் கூறுவார்கள். ருகூவு செய்யும் போதும் தக்பீர் கூறுவார்கள். ருகூவிலிருந்து முதுகை நிமிர்த்தும்போது ஸமிஅல்லாஹுலி மன்ஹமிதா என்று கூறுவார்கள். பின்பு நிலைக்கு வந்து ரப்பனா லகல் ஹம்து மற்றோர் அறிவிப்பில் வலகல் ஹம்து என்பார்கள். பின்பு (ஸஜ்தாவுக்காகக்) குனியும் போதும் தக்பீர் கூறுவார்கள். பின்பு தலையை (ஸஜ்தாவிலிருந்து) உயர்த்தும் போதும் தக்பீர் கூறுவார்கள். பின்பு (இரண்டாவது) ஸஜ்தா செய்யும் போதும் தக்பீர் கூறுவார்கள். பின்பு அதிலிருந்து தலையை உயர்த்தும் போதும் தக்பீர் கூறுவார்கள். இவ்வாறே தொழுகையின் எல்லா ரகாஅத்துகளிலும் செய்வார்கள். இரண்டாம் ரகாஅத்திலிருந்து எழும் போதும் தக்பீர் கூறுவார்கள். (புகாரி (ர.அ.) : 789)

ஸைத் இப்னு வஹ்பு கூறியதாவது :
ருகூவையும் ஸுஜூதையும் பூரணமாகச் செய்யாத ஒரு மனிதரை ஹுதைஃபா(ரழி) கண்டனர். அப்போது அவர்கள் நீர் தொழவே இல்லை. இந்த நிலையிலேயே நீர் மரணித்து விட்டால் முஹம்மது(ஸல்) அவர்களின் மார்க்கத்தில் மரணித்தவராக மாட்டீர் என்றார்கள். (புகாரி (ர.அ.) : 791)

பரா(ரழி) கூறியதாவது :
நபி(ஸல்) அவர்களின் ருகூவும் அவர்களது ஸஜ்தாவும் இரு ஸஜ்தாக்களுக்கிடையிலான இடைவெளியும் ருகூவிலிருந்து நிமிர்தலும், நிற்றல், உட்கார்தல் நீங்கலாக அனைத்தும் ஏறத்தாழ சம அளவில் அமைந்திருந்தன. (புகாரி (ர.அ.) : 792)

ஸாபித் கூறியதாவது :
அனஸ்(ரழி) எங்களுக்கு நபி(ஸல்) அவர்கள் தொழுதது போல் தொழுது கட்டினார்கள். அத்தொழுகையில் ருகூவிலிருந்து தம் தலையை உயர்த்தியதும் மறந்து விட்டார்களோ என்று நாங்கள் பேசிக்கொள்ளும் அளவுக்கு நிற்பார்கள். (புகாரி (ர.அ.): 800)

பராவு பின் ஆஸிப்(ரழி) கூறியதாவது :
நபி(ஸல்) அவர்களின் ருகூவும் ஸுஜூதும் ருகூவிலிருந்து எழுந்து நிற்கும் நேரமும் இரண்டு ஸஜ்தாக்களுக்கு இடைப்பட்ட நேரமும் ஏறக்குறைய ஒரே அளவாக இருந்தன. (புகாரி (ர.அ.) : 801)

அபூகிலாபா கூறியதாவது :
நபி(ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது என்பதை மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரழி) எங்களுக்குத் தொழுது காட்டினார்கள். இவ்வாறு அவர்கள் செய்து காட்டியது எந்தத் தொழுகையின் நேரமாகவும் இருக்கவில்லை. அவர்கள் நின்றார்கள். நன்கு நின்றார்கள். பின்னர் ருகூவு செய்தார்கள். நன்கு ருகூவு செய்தார்கள். பின்னர் தம் தலையை உயர்த்திச் சிறிது நேரம் மவுனமாக நின்றார்கள்.

பின் நமது பெரியார் அபூபுரைத் தொழுவது போலவே மாலிக் பின் அல்ஹுவைரிஸ் தொழுது காட்டினார்கள். இந்த அபூபுரைத் தொழும்போது (இரண்டாம்) ஸஜ்தாவிலிருந்து தலையை உயர்த்திச் சற்று நேரம் உட்கார்ந்து விட்டு (இரண்டாம் ரக்அத்துக்காக) எழக்கூடியவராக இருந்தார் என்று அய்யூப் குறிப்பிடுகிறார். (புகாரி (ர.அ.) : 802)

கள், சாராயம் குடிப்பதிலும், விபச்சாரம் செய்வதிலும், திருடுவதிலும், நீங்கள் என்ன கருத்துக் கொள்கிறீர்கள் என்று நபி(ஸல்) வினவினார்கள். இவற்றிற்கான தண்டனைகள் (பற்றிய வசனங்கள்) அருளப்படுவதற்கு முன்னர், அல்லாஹ்வும் அவனது தூதரும் தாம் மிக அறிந்தவர்கள் என்று மக்கள் கூறினர். அவை தீய செயல்களாகும். அன்றி அவற்றிற்குத் தண்டனைகளும் உண்டு. மேலும் எவன் தன் தொழுகையைத் திருடுகின்றானோ அவனே மிகத் தீய திருடனாவான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினர். யாரசூலல்லாஹ் அவன் எவ்விதம் தன் தொழுகையைத் திருடுகிறான் என்று மக்கள் கேட்டனர். அதன் ருகூவுகளையும், ஸுஜூதுகளையும் அவன் பூரணமாகச் செய்ய மாட்டான் என்று நபி(ஸல்) கூறினர்.
நுஹ்மான் இப்னு முர்ரா, முஅத்தா, அல்ஹதீஃத் : 2852

மேற்கண்ட ஹதீஃத்களை மீண்டும் மீண்டும் படித்து உணர்ந்து கட்டாயக் கடமையான ஐங்காலத் தொழுகைகளை அல்லாஹ் ஏற்கும் நிலையில் தொழ வைக்க முன் வருவார்களாக.

இப்னு ஹத்தாது

Leave a Comment

Previous post:

Next post: