ரமழானை வரவேற்கும் ஷஃபான்

Post image for ரமழானை வரவேற்கும் ஷஃபான்

in நோன்பு,ஜகாத்

நபி ஸல் அவர்களால் கண்ணியப்படுத்தப்பட்ட மாதாம் ஷஃபான் மாதமாகும். இந்த மாதத்தில் உபரியான நோன்புகளை நோற்றார்கள். அதன் சிறப்பினையும் எடுத்துரைத்தார்கள்.  ஆயிரம் மாதங்களைவிட சிறப்புமிக்க “லைலத்துல்கத்ர்” இரவைக்கொண்ட தொடரும் ரமழான் மாதத்தை வரவேற்கும் வழிமுறைகளை வகுத்தளித்தார்கள்.  ஷஃபான் மாதத்தின் சிறப்புகளை கூறினார்களேயன்றி அம்மாதத்தின் ஒரு குறிப்பிட்ட நாளுக்கோ இரவுக்கோ மகிமையிருப்பதாக கூறவில்லை. அதற்கான உண்மையான ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் இல்லை. ஷஃபே பராஅத் அரபி சொல்லல்ல இது உருது சொல்லாகும்.

அடுத்து ஷஃபான் பிறை 15ன் இரவைப்பற்றி “நிஸ்ஃப் ஷஃபான்” என இப்னு மாஜ்ஜாவில் வரும் நான்கு ஹதீஸ்களும் திர்மிதியில் இடம்பெற்றுள்ள ஹதீஸும் இவ்விரு நூல்களிலிருந்து அறிவிப்பாளர் வரிசையின்றி மிஷ்காத் ஹதீஸும் ஆதாரப்பூர்வமானவையல்ல. எனவே உண்மையான ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் வெளிச்சத்தில் காண்போம்.

உஸாமா பிப் ஜைது (ரலி) அறிவிக்கிறார்கள்.
ரமழானைத்தவிர வேறு எந்த மாதத்தில் நபி(ஸல்) அவர்கள் அதிகமாக நோன்பு வைத்தார்கள் என்பதை அறிய ஆசைப்பட்டேன். ஷஃபான் மாதத்தில் அம்மாதத்தின் சிறப்பை விளக்கும் விதமாக நோன்பு வைத்தார்கள் என்பதை அறிந்தேன். ஷஃபான் மாதத்தின் சிறப்பை குறிப்பிட்ட நபி (ஸல்) அவர்கள் இம்மாதத்தில் அனைவரின் செயல்(அமல்)கள் அல்லாஹ்விடம் சமர்ப்பிக்கப்படுகின்றன. எனது செயல்கள் நான் நோன்பு வைத்த நிலையில் சமர்ப்பிக்கப்படுவதை ஆசிக்கிறேன் (எனவே நோன்பு வைக்கிறேன்) எனக்கூறினார்கள். (ஆதாரம்: அபூதாவூத் நஸயீ, அஹ்மத்)

இதனை உண்மைப்படுத்தும் விதமாக நபி (ஸல்) அவர்களின் அன்பு மனைவி உம்மு சலமா(ரலி) தெரிவிக்கிறார்கள்.

ஷஃபான், ரமழான் என்ற இரு மாதங்களைத்தவிர வேறு இரு மாதங்களில் தொடர்ந்து நோன்பு வைத்ததை நான் கண்டதேயில்லை. (ஆதாரம்: ஆபூதாவூத், நஸயீ)

உஸாமதிப்னு ஸைத் (ரலி) அவர்கள் நபியவர்களிடம்: அல்லாஹ்வின் தூதரே! ஷஃபானை போன்று வேறொரு மாதத்தில் நீங்கள் நோன்பு நோற்பதை நான் காணவில்லை என்று கூறிய போது நபியவர்கள்: மனிதர்கள் ரஜப் ரமழான் ஆகிய இரு மாதங்களுக்கு மத்தியிலுள்ள ஒரு மாதம் விஷயத்தில் பாராமுகமாக இருக்கின்றனர். அது எப்படிப்பட்ட மாதம் எனில் அகிலத்தாரின் அதிபதியாகிய அல்லாஹ்வின்பால் வணக்க வழிபாடுகள் உயர்த்தப்படக்கூடிய மாதமாகும். எனது வணக்க வழிபாடுகள் நான் நோன்பாளியாக இருக்கும் நிலையில் உயர்த்தப்பட வேண்டுமென விரும்புகிறேன் என கூறினார்கள். (ஆதாரம்: நஸயீ அஹ்மத்)

மேற்கண்ட நபிமொழிகள் மூலம் ஷஃபான் மாதத்தில் நமது அமல்கள் அல்லாஹ்விடம் சமர்ப்பிக்கப்படுவதாக அறிகிறோம்.  நபி (ஸல்) அவர்கள் தனது அமல்கள் நோன்பு வைத்த நிலையில் சமர்ப்பிக்கப்படுவதை விரும்பியுள்ளார்கள். அதற்காக நோன்பு வைத்துள்ளார்கள். மேலும் இம்மாதத்தில் ஒரு குறிப்பிட்ட பகலையோ இரவையோ சிறப்பித்து நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளதற்கு நம்பகமான ஹதீஸ்கள் இல்லையென்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளிக்கிழமை (மட்டும் சிறப்பான நாளென) நோன்பு வைக்கவேண்டாம். (அப்படி வெள்ளியன்று நோன்பு வைக்க நாடினால்) அதற்கு முந்திய பிந்திய (சனிக்கிழமை) நாளிலும் நோன்பு வைக்கவும். (அபூஹுரைரா ரலி நூல்: முஸ்லிம், அஹமத்)

மேற்படி நபிமொழியை நபி (ஸல்) அவர்கள் தனது வாழ்வில் செயல்படுத்தியுள்ளதை கீழ்காணும் நிகழ்ச்சி உண்மைப்படுத்துகிறது.

நபி (ஸல்) மனவியரில் ஒருவரான ஜுவைரியா ரலி அவர்கள் ஒரு வெள்ளிக்கிழமை (சிறப்பென) நோன்பு வைத்திருந்தார்கள். இதனையறிந்த நபி (ஸல்) அவர்களுக்கும் அவர்களது மனைவிக்கும் நடந்த உரையாடலைப் பாரீர்.

நபி(ஸல்):       நீ நேற்று (வியாழன்) நோன்பு நோற்றாயா?

ஜுவைரியா (ரலி):  இல்லை

நபி(ஸல்):   நாளை (சனிக்கிழமை) நோன்பு வைக்கும் நாட்டமுண்டா?

ஜுவைரியா (ரலி): இல்லை

நபி(ஸல்):   அப்படியானால் இன்றைய நோன்பை விட்டு விடுவாயாக!
(அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) நூல்: நஸயீ, முஸ்னத் அஹ்மத்)

ஒரு குறிப்பிட்ட நாளுக்கோ பகலுக்கோ இரவுக்கோ அல்லாஹ்வும் அவனது தூதரும் முக்கியத்துவம் கொடுத்திருந்தாலேயொழிய நாமாக கொடுக்க நமக்கு உரிமையில்லை.

அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை; ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். (அல்குர்ஆன் 33:36)

தொடர் நோன்பு வைத்து வந்த அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களை, அவ்விதம் வைக்க வேண்டாம்; மாதத்தில் மூன்று நாட்கள் வை, அது முழு மாதம் வைப்பதற்குச் சமம் என அறிவுரை கூறினார்கள். (ஆதாரம்: புகாரி முஸ்லிம்)

மாதா மாதம் மூன்று நோன்புகள் வைப்பது நபி (ஸல்) அவர்களின் அழகிய வழிமுறையாகும். (அறிவிப்பு: இப்னு மஸ்வூது ரலி நூல்: அபூதவூத் நஸயீ

எந்தெந்த நாட்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த நபி (ஸல்) அவர்கள் அம்மாதத்தின் பிறை 13,14,15 வைப்பதே மிகைத்து காணப்படுகிறது.

இவ்விதம் மாதா மாதம் நோன்புகளை வைப்பதற்கு வழிகாட்டித்தந்த நபி (ஸல்) அவர்கள் ஷஃபான் மாதத்தின் மத்தியில் (பிறை 15ல்) நோன்பு வைக்காதீர்கள் என தடுக்கவும் செய்தார்கள்.  (ஆனால் வழக்கமாக மாதா மாதம் அந்நாட்களில் நோன்பு வைப்பவர்களைத் தவிர)  ஆதாரம்: அபூஹுரைரா (ரலி) நூல்: அபூதாவூத், தாரமி, இப்னுமாஜ்ஜா, அஹமத்.

இந்த உண்மையான நபிமொழிக்கு மாற்றமாகவே இன்று நம்மிடையே பலர் “ஷபே பராஅத்” என்ற பெயரில் பிறை 15ல் நோன்பு வைக்கிறார்கள்.

ரமழானின் ஆரம்பத்தை அறிந்துகொள்ள ஷஃபான் முதல் பிறையிலிருந்து கணக்கிடுங்கள் என நபி (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: திர்மிதி, அஹ்மத்.

‘ரமளானுக்காக ஷஃபான் பிறையைக் கணக்கிட்டு வாருங்கள்’ என்று நபி (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள். (திர்மிதி)

‘ரமளானுக்கு முதல் நாளும், அதற்கு முதல் நாளும் உங்களில் எவரும் நோன்பு நோற்கக் கூடாது. அந்நாட்களில் வழக்கமாக நோற்கும் நோன்பு அமைந்தாலே தவிர! அவ்வாறு அமைந்தால் அந்நாட்களில் நோன்பு நோற்கலாம்!’ (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி, திர்மிதி)

ஷஃபான் மாதத்தை நபி (ஸல்) அவர்கள் சிறப்பித்ததுபோல் நாமும் சிறப்பித்து நபி (ஸல்) அவர்கள் அங்கீகரிக்காத காட்டித்தராத வழியிலோ பலஹீனமான இட்டுக்கட்டப்பட்ட கதைகளின் அடிப்படையிலோ மார்க்கத்தில் புதுமைகளை (பித்அத்) புகுத்தாமல் நபி வழி வாழும் உம்மத்தாக (சமுதாயமாக) அல்லாஹ் நம்மை ஆக்கி வைப்பானாக! ஆமீன்.

பேராசிரியர் முஹம்மது அலி திருச்சி

{ 6 comments… read them below or add one }

abdul hameed June 22, 2012 at 1:18 pm

masha allah… fabulous info… jazakallah

Reply

imran June 23, 2012 at 3:21 am

shaabaanil thodarchiyaaga nonbu vaikka venduma allathu vittu vittu vaikkalaama…..

Reply

Muhammad Abdullah J June 28, 2012 at 5:54 pm

Assalamualaikum. Masha Allah acceptable Explanation….

Reply

mohamed rifan July 4, 2012 at 11:04 pm

i like it

Reply

Chand basha.H July 8, 2012 at 1:50 am

I can’t accept this because naam nonbu vaippadhu iraivanin arule naadi than thavira verai edhuhum illai thadukkappatta natkal ex eid perunaalgal thavira verai natkalil nonbu vaipathil endha thavarum illai endru ninaikkiren.

Reply

yasmin ashrafali July 9, 2012 at 8:20 pm

it’s real, that’s right, that is sunnah. alhamthu lillah

Reply

Leave a Comment

Previous post:

Next post: