முன்மாதிரி முஸ்லிம்

in நற்குணம்,முன்மாதிரி முஸ்லிம்

 விழிப்புணர்வுள்ள இறைநம்பிக்கையாளர்

    முஸ்லிமிடம் இஸ்லாம் விரும்பும் முதல் பண்பு அவர் அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்ப ஈமான் கொண்டு, அவனுடன் உறுதியான உறவைக் கொண்டிருத்தலாகும். அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைத்து, அவனை சதாவும் நினைவு கூர்ந்து காரணங்களைக் கையாள்வதுடன், அல்லாஹ்விடம் உதவியும் தேடவேண்டும். அவன் எவ்வளவுதான் உழைத்தாலும் தனது உள்ளத்தின் ஆழத்தில் அல்லாஹ்வின் உதவி, உபகாரத்தின்பால் அனைத்து நிலையிலும் தேவையாகிறோம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

    உண்மை முஸ்லிமின் இதயம் விழித்திருக்கும். அவரது அறிவுக்கண் திறந்திருக்கும். உலகில் அல்லாஹ்வின் படைப்பினங்களிலுள்ள நுட்பங்களின்பால் அவர் தனது சிந்தனையைச் செலுத்துவார். இதனால் மறைந்திருக்கும் மகத்தான அல்லாஹ்வின் உதவிதான்  இப்பிரபஞ்ச இயக்கத்தையும், மனிதர்களின் அனைத்து பிரச்சனைகளையும் எளிதாக்குகிறது என்று உறுதி கொள்வார். இதனால்தான் அல்லாஹ்வை எல்லா நிலையிலும் நினைவுகூற வேண்டியவராக இருக்கிறார். அவர் அல்லாஹ்வின் மகத்தான ஆற்றலை வாழ்வின் அனைத்து சந்தர்ப்பங்களிலும் உணர்கிறார். இது அவரது ஈமானைப் பலப்படுத்துகிறது, அவன் மீதே நம்பிக்கை கொள்ள காரணமாக அமைகிறது.

    வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும், இரவு பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
    இத்தகையோர் (தங்கள்) நிலையிலும், இருப்பிலும், படுக்கையிலும் அல்லாஹ்வையே நினைத்து, வானங்களையும் பூமியையும் அவன் படைத்திருப்பதைச் சிந்தித்து எங்கள் இறைவனே! நீ இவற்றை வீணுக்காகப் படைத்துவிடவில்லை. நீ மிகத் தூயவன். (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களை நீ காப்பாற்றுவாயாக… (அல்குர்அன் 3:190,191)

    இரட்சகனின் கட்டளைக்கு அடிபணிவார்

    உண்மை முஸ்லிம் தனது அனைத்து சந்தர்ப்பங்களிலும் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்டு, அவனைப் பணிந்து அஞ்சி நடக்கிறார். தனது விருப்பத்திற்கு மாறாக இருப்பினும் அவர் அல்லாஹ்வின் கட்டளைக்கு முற்றிலும் அடிபணிந்து, எந்நிலையிலும் அல்லாஹ்வின் வரம்புகளை மீறமாட்டார். மேலும் அவரது விருப்பத்திற்கு மாற்றமாக இருப்பினும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலையே ஏற்பார். அல்லாஹ், அவனது தூதரின் வழிகாட்டுதலிலுள்ள சிறிய, பெரிய ஒவ்வொரு விஷயத்தையும் எந்தவித பாகுபாடுமின்றி பின்பற்றுவார்.

    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நான் கொண்டு வந்ததற்கேற்ப தனது மனோ இச்சையை மாற்றிக் கொள்ளாதவரை உங்களில் ஒருவரும் விசுவாசியாக மாட்டார்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

     ஆனால் உம் இறைவன் மீதும் சத்தியமாக, அவர்கள் தங்களுக்குள் எற்பட்ட சச்சரவில் உம்மை நீதிபதியாக அங்கீகரித்து நீர் செய்யும் தீர்ப்பைத் தங்கள் மனதில் எத்தகைய அதிருப்தியுமின்றி அங்கீகரித்து முற்றிலும் வழிப்படாத வரையில் அவர்கள் உண்மை விசுவாசிகளாக மாட்டார்கள். (அல்குர்அன் 4:65)

     ஈமான் என்பது அல்லாஹ் மற்றும் அவனது தூதரின் கட்டளைகளை முழுமையாக எற்று பூரணமாக அடிபணிவதாகும். இந்த இரண்டுமின்றி ஈமானும் இல்லை, இஸ்லாமும் இல்லை. உண்மை முஸ்லிமின் வாழ்வில் அல்லாஹ்வின் நேர்வழியைப் புறக்கணிப்பதும், அவனது தூதருக்கு மாறு செய்வதும் இருக்க முடியாது. இது தனி முஸ்லிமிடமும், அவருக்குக் கட்டுப்பட்ட அவரது குடும்பத்தினர் வாழ்விலும் காணப்படும் சிறப்புத் தன்மையாகும்.

    தன் அதிகாரத்தின் கீழ் உள்ளவர்களிடம் தனது பொறுப்பை அறிவார்

    ஒரு முஸ்லிமின் அதிகாரத்தில் உள்ள குடும்ப உறுப்பினர்களிடம் அல்லாஹ் இன்னும் அவனது தூதரின் கட்டளைகளில் அலட்சியம் மற்றும் குறைபாடுகள் ஏற்பட்டால், அதற்கு அந்த முஸ்லிம் பொறுப்பாளியாகி இறைவனால் விசாரிக்கப்படுவார்.

    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நீங்கள் அனைவரும் பொறுப்பாளர்களே! நீங்கள் அனைவரும் உங்களின் பொறுப்பின் கீழ் உள்ளவர்களைப்பற்றி விசாரிக்கப்படுவீர்கள்.” (ஸஹீஹுல் புகாரி)

    தனது பொறுப்பை உணர்ந்திருக்கும் முஸ்லிம் தனது குடும்ப உறுப்பினர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளில் வரம்பு மீறுவதைச் சகித்துக்கொள்ள மாட்டார். அவரால் இது விஷயத்தில் பொறுமை காக்கவே முடியாது. அது எத்தகு விளைவுகளை எற்படுத்தினாலும் சரியே. அந்த தவறை அகற்றுவதில் தீவிரமாக இருப்பார்; கடமையில் அலட்சியம் செய்யமாட்டார். தனது ஈமானில் பலவீனம் கொண்ட, ஆண்மையற்ற கோழை மட்டுமே தனது அதிகாரத்தில் உள்ளவர்களின் வரம்புமீறலை சகித்துக்கொள்ள முடியும்.

    அல்லாஹ் விதித்ததை பொருந்திக் கொள்வார்

    உண்மை முஸ்லிம் தனக்கு அல்லாஹ் விதித்ததை மகிழ்வுடன் ஏற்றுப் பொருந்திக் கொள்வார். அவரது பார்வை நபி (ஸல்) அவர்களின் பொன்மொழியில் நிலைகொள்ளும்.

    நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “முஸ்லிமின் அனைத்து விஷயங்களும் ஆச்சரியமானதுதான். அவரது அனைத்து விஷயங்களும் நன்மையானதே. அவருக்கு மகிழ்ச்சி எற்பட்டால் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறார். அது அவருக்கு நன்மையாக அமைகிறது. அவருக்கு துன்பம் எற்பட்டால் பொறுமையை மேற்கொள்கிறார். அதுவும் அவருக்கு நன்மையாக அமைகிறது.” (ஸஹீஹுல் புகாரி)

    இதற்குக் காரணம், முஸ்லிம் அல்லாஹ் விதித்த விதியை ஈமான் கொள்வது ஈமானின் முக்கியமான பகுதி என்பதை உறுதி கொண்டிருப்பதுதான். அவருக்கு எது கிடைக்க வேண்டுமென்ற விதி இருக்கிறதோ அது அவரை விட்டுத் தவறிவிடாது. எனெனில், அது அல்லாஹ்வால் தீர்மானிக்கப்பட்டது; அதை எதிர்கொள்வதை தவிர்த்திட முடியாது. அல்லாஹ் விதித்ததை பொருந்திக் கொள்பவர் அல்லாஹ்வின் புறத்திலிருந்து மகத்தான நற்கூலியைப் பெற்றுக்கொள்கிறார். அல்லாஹ்விடம் ஈடேற்றமடைந்த, அடிபணிந்த மூமின்களின் பட்டியலில் இடம் பெறுவார்.

     இவ்வாறாக அவரது அனைத்து விஷயங்களும் நன்மையாகவே அமைகிறது. மகிழ்ச்சியில் உபகாரியான, மகத்துவமிக்க அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறார். துன்பத்தில் அல்லாஹ்வின் அணைக்கு அடிபணிந்து பொறுமையைக் கைக்கொள்கிறார். அல்லாஹ் விதித்ததை ஏற்று திருப்தி கொள்கிறார். இந்த இரு நிலைகளும் அவருக்கு மிக்க நன்மையானவையே. அல்லாஹ்வையே எதிர்நோக்குவார்

    சில சந்தர்ப்பங்களில் இறையச்சமும் பணிவும் அறிவாற்றலும் நிறைந்த மூஃமினுக்கு மறதியின் நிழல்கள் அவரது இதயத்தை மூடிக்கொள்ளும். அதனால் அவரது பாதங்கள் தடுமாறும், அல்லது இறையச்சமும் அறிவாற்றலும் நிறைந்த மூஃமினுக்கு சற்றும் பொருத்தமற்ற குறைகள் எதேனும் ஏற்படும். எனினும், அவர் வெகு சீக்கிரத்தில் தனது மறதியிலிருந்து மீண்டு, தடுமாற்றத்தை சரி செய்து, நிகழ்ந்த தவறுக்கு அல்லாஹ்விடம் மன்னிப்பைப் பெற்றுக் கொள்வார். அஞ்சி மன்னிப்பு கோரியவராக அபயமளிக்கும் தனது இரட்சகனின் பாதுகாப்பின் நிழலில் எதுங்கிக் கொள்வார்.

    நிச்சயமாக எவர்கள் (அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறார்களோ அவர்களுள் ஷைத்தானுடைய (தவறான) எண்ணம் உசலாடினால் அவர்கள் (அல்லாஹ்வை) நினைக்கிறார்கள். அது சமயம் அவர்களுடைய (அறிவுக்) கண் திறந்து விழிப்படைந்து விடுகிறார்கள். (அல்குர்அன் 7:201)

    அல்லாஹ்வின் நேசமும் அவனது அச்சமும் நிரம்பிய இதயத்தில் மறதி நீடிக்காது. அவனது ஏவலையும் நேர்வழியையும் புறக்கணிக்கும் இதயங்களில்தான் மறதி நீடிக்கும். அல்லாஹ்வுக்கு அடிபணிதல், மன்னிப்புக் கோருதல் மற்றும் தவறுகளுக்கு பச்சாதாபப்படுவதற்காக எல்லா நிலைகளிலும் உண்மை முஸ்லிமின் இதயம் விரியத்திறந்திருக்கும்.

    அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை இலட்சியமாகக் கொள்வார்

    முஸ்லிம், தனது செயல்கள் அனைத்திலும் அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை தேடவேண்டும். அவரது ஒவ்வொரு அடியும் அவனது திருப்தியை நோக்கியே எடுத்து வைக்கப்பட வேண்டும். மனிதர்களின் திருப்தியை நோக்கமாகக் கொள்ளக்கூடாது. அல்லாஹ்வின் நேர்வழியில் செல்லும்போது சில சமயங்களில் மனிதர்களின் கோபத்திற்கு இலக்காக நேரிட்டாலும் சரியே.

    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எவர் மனிதர்களின் கோபத்திலும் அல்லாஹ்வின் திருப்தியைத் தேர்ந்தெடுக்கிறாரோ அவருக்கு மனிதர்களால் ஏற்படும் ஆபத்திலிருந்து பாதுகாக்க அல்லாஹ் போதுமானவன். எவர் அல்லாஹ்வின் கோபத்திலும் மனிதர்களின் திருப்தியைத் தேர்ந்தெடுக்கிறாரோ அவரை அல்லாஹ் மனிதர்களின்பால் சாட்டிவிடுகிறான்.” (ஸூனனுத் திர்மிதி)

     இந்நிலையில், முஸ்லிம் தனது செயல்களை அல்லாஹ்வின் திருப்தி எனும் தராசில் நிறுத்துப் பார்க்கிறார். அல்லாஹ்வின் திருப்தியின் தட்டு கனமானால் அதை ஏற்று திருப்தியடைகிறார். தராசின் தட்டு மறுபக்கம் சாய்ந்தால் அதை அலட்சியப்படுத்தி விடுகிறார். இவ்வாறே அவரது நேர்வழியின் அளவுகோல்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.

     அவரது பார்வையில் நேரிய, நடுநிலையான பாதை தென்படுகிறது. எனவே அவர் பலவீனமான, பரிகாசத்திற்குரிய முரண்பாடுகளில் வீழ்ந்துவிட மாட்டார். ஒரு விஷயத்தில் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு, மற்றொரு விஷயத்தில் முரண்படுதல்; சில நேரங்களில் ஹலாலாக ஆக்கிக் கொண்டதை மற்றொரு நேரத்தில் ஹராமாக்கிக் கொள்வது போன்ற செயல்கள் முஸ்லிமிடம் எற்படாது. ஏனெனில், அவர் தெளிவான பாதையைத் தேர்ந்தெடுத்து உறுதியான கொள்கையைக் கொண்டுள்ளவராவார். எனவே அவரிடம் இவ்வாறான முரண்பாடுகளுக்கு இடமில்லை.

    சிலர் மஸ்ஜிதுகளில் இறையச்சத்துடன் தொழுவார்கள். ஆனால் அவர்களை கடைவீதியில் வட்டி வாங்குபவர்களாக காணமுடிகிறது. அல்லது குடும்பம், கடைவீதி, கல்விக் கூடங்கள், சங்கங்கள் இவற்றில் எதிலுமே அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்ற மாட்டார்கள். இதற்குக் காரணம் இம்மார்க்கத்தைப் பற்றிய அவர்களின் அறியாமையே.

     அவர்கள் ஒவ்வொரு செயலையும் தங்களது திருப்தியின் தராசைக் கொண்டு அளவிடுகிறார்கள். இதனால்தான் அவர்கள் முஸ்லிம்களிடையே காணப்பட்டாலும் பெயரைத் தவிர இஸ்லாமில் அவர்களுக்கு எந்தப் பங்குமிருப்பதில்லை. இது தற்காலத்தில் முஸ்லிம்களை எதிர்நோக்கியுள்ள மாபெரும் சோதனையாகும்.

    கடமையான மற்றும் உபரியான வணக்கங்களை நிறைவேற்றுவார்

    உண்மை முஸ்லிம், இஸ்லாமின் அனைத்து கடமைகளையும் அலட்சியம், மறதி மற்றும் குறைபாடுகள் எதுவுமின்றி பூரணமாக அழகிய முறையில் நிறைவேற்றவேண்டும். அவர் ஐந்து நேரத் தொழுகைகளை அதற்குரிய நேரத்தில் நிறை வேற்றுவார். எனெனில், தொழுகை மார்க்கத்தின் தூணாகும்; அமல்களில் மிக உன்னதமானதாகும். அதை நிறைவேற்றுபவர் மார்க்கத்தை நிலை நாட்டுகிறார். அதை வீணடிப்பவர் மார்க்கத்தைத் தகர்த்தவராவார்.

     இப்னு மஸ்வூது(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் நபி(ஸல்) அவர்களிடம், “அமல்களில் சிறந்தது எது?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “தொழுகை, அது உரிய நேரத்தில் (நிறைவேற்றுவது)” என்று கூறினார்கள். “”பிறகு என்ன?” என்றேன். நபி (ஸல்) அவர்கள், “பெற்றோருக்கு உபகாரம் செய்தல்” என்று கூறினார்கள். “பிறகு என்ன?” என்றேன். “அல்லாஹ்வின் பாதையில் போரிடுதல்” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

     தொழுகை சிறப்படையக் காரணம் அது அடியானுக்கும் அவனது இரட்சகனுக்குமிடையே தொடர்பை எற்படுத்துகிறது. தொழுபவர் உலகின் அனைத்து ஈடுபாடுகளிலிருந்தும் தன்னை துண்டித்துக் கொள்கிறார். தனக்குரிய அனைத்தையும் இறைவனிடம் சமர்ப்பிக்கிறார். தொழுகையின் மூலம் நேர்வழியையும் உதவியையும் பெற்றுக் கொள்கிறார். நேர்வழியின் மீது உறுதியாக நிலைத்திருப்பதை அல்லாஹ்விடம் வேண்டுகிறார்.

    தொழுகை, சிறப்பான முக்கியத்துவம் வாய்ந்த அமலாக இருப்பதில் வியப்பொன்றுமில்லை. அது முஸ்லிம் தனது மறுமை பயணத்திற்காக இறையச்சம் என்ற கட்டுச் சாதத்தைத் தயார் செய்வதற்குரிய செழிப்பு மிக்க வழியாகும். அது தூய்மையான மதுரமான நீரூற்றாகும். அந்தத் தூய்மையான நீரால் முஸ்லிம் தனது பாவங்களைக் கழுவிக் கொள்கிறார்.

    அபூஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டேன்: “உங்களில் ஒருவரது வீட்டு வாசலில் ஆறு ஒடிக்கொண்டிருந்து, அதில் ஒவ்வொரு நாளும் ஐந்துமுறை அவர் குளிப்பாரானால் அவரது உடலில் எதேனும் அழுக்குகள் இருக்குமா? நீங்கள் இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். “எந்த அழுக்கும் (அவர் மீது) இருக்காது” என நபித்தோழர்கள் கூறினர். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அதுதான் ஐந்து நேரத் தொழுகைக்கு உதாரணமாகும். அதைக்கொண்டு அனைத்து பாவங்களையும் அல்லாஹ் அகற்றி விடுகிறான்.” (ஸஹீஹுல் புகாரி)

    நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “ஐந்து நேரத் தொழுகையை தொழுபவர், உங்களில் ஒருவரின் வீட்டு வாசலில் ஒடும் அழமான ஆற்றில் ஒவ்வொரு நாளும் ஐந்துமுறை குளிப்பவரைப் போன்றவராவார்.” (ஸஹீஹ் முஸ்லிம்)

    இப்னு மஸ்வூது (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு மனிதர் ஒரு பெண்ணை முத்தமிட்டுவிட்டார். அவர் நபி (ஸல்) அவர்களிடம் அதைக் கூறினார். அப்போது அல்லாஹ் பின்வரும் வசனத்தை இறக்கிவைத்தான்:

    பகலின் இரு முனைகளாகிய காலை, மாலைகளிலும் இரவின் நிலைகளிலும் நீங்கள் (தவறாது) தொழுது வாருங்கள்! நிச்சயமாக நன்மைகள் பாவங்களைப் போக்கிவிடும். (இறைவனை) நினைவு கூர்வோருக்கு இது ஒரு நல்லுபதேசமாகும். (அல்குர்அன் 11:115)

    “”அம்மனிதர் (இந்த வசனம்) எனக்கு மட்டுமா?” என்றார். நபி (ஸல்) அவர்கள், “எனது உம்மத்தினர் அனைவருக்கும் (பொருந்தும்)” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

    அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “பெரும்பாவங்கள் நிகழாதவரை ஐந்து நேரத் தொழுகைகள் அவைகளுக்கு மத்தியில் நிகழும் பாவங்களுக்குப் பரிகாரமாகும். அதுபோன்றே ஒரு ஜுமுஅவிலிருந்து மறு ஜுமுஅவரை” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

    உஸ்மான் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்: “”எந்தவொரு முஸ்லிம் அவருக்கு பர்ளான தொழுகை கடமையாகும்போது அழகிய முறையில் உளூச்செய்து உள்ளச்சத்துடன் அதன் ருகூவுகளைப் பேணித் தொழுவாரானால் அது பெரும்பாவங்களைத் தவிர அவர் செய்த அனைத்துப் பாவங்களுக்கும் பரிகாரமாகும். இது எல்லா காலத்திற்கும் உரியதாகும்.” (ஸஹீஹ் முஸ்லிம்)

    தொழுகையின் முக்கியத்துவம் மற்றும் அதன் சிறப்புகளை விவரிக்கும் நபிமொழிகளும், சம்பவங்களும், தொழுபவர்கள் அடைந்து கொள்ளும் நன்மைகளும் ஏராளம். அவை அனைத்தையும் குறிப்பிட இங்கே பக்கங்கள் போதாது. முடிந்தளவு இறையில்லம் செல்ல வாய்ப்பு கிடைத்தால் முதல் ஜமாஅத்தை அடைந்துகொள்ள இறையச்சமுடைய முஸ்லிம் பேராவல் கொள்ளவேண்டும்.

அஷ்ஷைக் முஹம்மது அலீ அல்ஹாஷிமி தமிழில் கா.ஹுஷைன் கனி, அ. உமர் ஷரீஃப்.
வெளியீடு தாருல் ஹுதா. சென்னை

{ 4 comments… read them below or add one }

Muhammd Ibrahim Kaleel October 3, 2011 at 3:58 pm

Assalamu Alaikum. varah..
How are you..? and dawah.. this is kaleel from Qatar.
Masha Allah This is very useful topic.. and Its realy Great work..
This Topic was good and No words…. Keep It Up..

Jasakallahu Khairen..
Massalam..

Brother In Islam
Muhammed Ibrahim Kaleel.
Qatar.

Reply

rajakumar January 6, 2014 at 11:14 pm

முஸ்லிம்கள் ஏன் தமிழில் பெயர் வைக்க தயங்குகிறார்கள். உதரணமாக முகம்மது தமிழ், கயல்விழி பாத்திமா அப்படி பெயர் வைக்கலாமே

Reply

ABDUL AZEEZ February 3, 2014 at 5:58 pm

ராஜ்குமார் அஸ்ஸலாமு அலைக்கும்.பெயர் ஒரு உணர்த்துவதர்க்கான சொல்லாடல்
குறிப்பாக ஏய் என்று அழைத்தால் பலர் திரும்புவார்கள்.அதே நேரத்தில் பெயர் சொல்லி அழைத்தால்
சம்பன்தப்பட்டவர் மட்டும் நமக்கு பதில் அளிக்க கூடும்.இதில் மொழிகளை இனைக்க அவசியம் என்ன ?
மா சலாம்.
அப்துல் அஜீஸ்

Reply

ABDUL AZEEZ February 3, 2014 at 5:56 pm

ராஜ்குமார் அஸ்ஸலாமு அலைக்கும்.பெயர் ஒரு உணர்த்துவதர்க்கான சொல்லாடல்
குறிப்பாக ஏய் என்று அழைத்தால் பலர் திரும்புவார்கள்.அதே நேரத்தில் பெயர் சொல்லி அழைத்தால்
சம்பன்தப்பட்டவர் மட்டும் நமக்கு பதில் அளிக்க கூடும்.இதில் மொழிகளை இனைக்க அவசியம் என்ன ?
மா சலாம்.
அப்துல் அஜீஸ்

Reply

Leave a Comment

Previous post:

Next post: