இவ்வுலகில் படிப்பு பதவி வியாபாரம் விவசாயம் இவற்றில் நமது கவனக்குறைவால் அறியாமையால் தோல்வி நஷ்டம் ஏற்பட்டால் இத்தோல்வி நஷ்டத்தைப் படிப்பினையாக வைத்து இரண்டாவது முறையோ அல்லது பலமுறை முயற்சி செய்து தோல்வியை வெற்றியாக மாற்றலாம். நஷ்டத்தை லாபமாக ஆக்கும் சந்தர்ப்பங்கள் பல உண்டு. ஆனால் நாம் நம்பும் மறுமையைப் பொறுத்தமட்டில் இரண்டாவது சந்தர்ப்பம் அறவே இல்லை. ஒரே முயற்சியில் வெற்றி பெற்றேயாக வேண்டும். இல்லை என்றால் மாற்ற முடியாத மீட்க முடியாத நஷ்டமாக அது நம்மை நரகில் கொண்டு சேர்த்துவிடும். இதை மனதில் பதித்துக் கொள்வோம்.
இறைவன் எதை ஏவி இருக்கிறானோ அதைதான் நாம் செய்யவேண்டும். நமது முன்னோர்கள் செய்தார்கள் என்பதற்காக ஒன்றைச் செய்து அதைக்கொண்டு மோட்சம் அடையலாம் என்று மனப்பால் குடிக்கக்கூடாது. பரிட்சையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அரை குறையாக எழுதினாலும் மார்க் உண்டு. கேட்கப்படாத கேள்விகளுக்கு எவ்வளவு திறமையாக எழுதினாலும் கிடைப்பது பூஜ்யம்தான். அதுபோல் இறைவனால் ஏவப்படாததைச் செய்வதால் சுவர்க்கம் கிடைக்காது. இதையும் மனதில் பதித்துகொள்வோம்.
உலகத்தில் முன்னோர்களின் அறிஞர்களின் அனுபவம் ஆற்றல் நமக்கு பயன்படலாம். காரணம் அனுபவம் ஆற்றலை லாப நஷ்டமாக உலகிலேயே சந்தித்து அடைகிறார்கள். கண்கூடாகப் பார்க்கிறார்கள். ஆனால் மறுமை விஷயத்தில் மனிதனின் ஆற்றல் அறிவு செல்லாது. இதில் இறைவன் எதைச் சொல்கிறானோ அதைப் அப்படியே ஏற்றுச் செயல்படுவதே அறிவுடமையாகும்.
மனிதன் தனது அறிவு ஆற்றல் அனுபவத்தைக் கொண்டு செயல்படுவதும் கூடாது. அதை மற்றவர்களுக்கு போதிக்கவும் கூடாது. உலக விஞ்ஞான விஷயத்தில் முன்னோர்களைப் பின்பற்றுவது முன்னேற்றத்தை தரலாம். ஆனால் மார்க்க விஷயத்தில் பின்னேற்றத்தையும் தோல்வியைத்தான் அது தரும்.
ஆனால் முன்னோர்கள் செய்தது சரியாகத்தான் இருக்கும். முன்னோர்கள் காரணம் இல்லாமல் எதையும் செய்திருக்கமாட்டார்கள் என்று கூறுபவர்கள் கூற்றில் உண்மையில்லை. முன்னோர்களின் அடிச்சுவட்டை அப்படியே பின்பற்றக்கூடியவர்கள் அதை இவ்வுலகில் முதலில் செய்து காட்டவேண்டுமல்லவா? முன்னோர்கள் ஏழைகளாக இருந்தால் இவர்களும் ஏழைகளாக இருக்க ஆசைப்பட வேண்டுமல்லவா?
அவர்கள் குடிசையில் வாழ்ந்திருந்தால் இவர்களும் குடிசையில் வாழ ஆசைப்படவேண்டுமல்லவா? அவர்கள் கூழை குடித்து கந்தையை கட்டியிருந்தால் இவர்கள் கூழை குடித்து கந்தை கட்ட வேண்டுமல்லவா? இவை எல்லாம் இழிவு இவையெல்லாம் விட்டு சுகமாக வாழவேண்டுமென்று அல்லாவா அல்லும் பகலும் பாடுபடுகிறார்கள். அப்படியானால் இவர்கள் மத விஷயத்தில் மட்டும் முன்னோர்களை பின்பற்றுகிறோம் என்று சொல்வது சரியா?
ஏழைகளாக இருப்பதைவிட குடிசையில் வாழ்வதைவிட கூழை குடித்து கந்தையைக் கட்டுவதைவிட மிகப்பெரும் இழிவு இறைவன் கொடுத்த மார்க்கத்தை விட்டு மனிதன் படைத்த மதங்களைப் பின்பற்றுவது இழிவு மாதிரமல்ல, மறுமையில் மாபெறும் நஷ்டத்தையும் துன்பத்தையும் தரக்கூடியது என்பதை உணர்ந்து கொண்டால் அவர்களால் அவ்வாறு சொல்ல முடியாது.
இவ்வுலகின் சாதாரணத் துன்பங்களை விட்டு விடுதலைப்பெற பெரும் முயற்சி எடுக்கும் மனிதன் மறுமையின் மாபெரும் துன்பங்களை உணர்ந்திருந்தால் புரிந்திருந்தால் அதை விட்டும் விடுதலை பெற முயற்சிக்காமல் இருக்க முடியுமா? சொர்க்கத்திற்கு போனாலும் நரகத்திற்கு போனாலும் முன்னோர்களைப் பின்பற்றியே நடப்போம் என்று சொல்லமுடியுமா?
சாத்தான் மனிதர்களைப் பல வழிகளில் முயற்சி செய்து நரகப்படுகுழியில் தள்ளுகிறான். முதலில் இறைவனை மறுக்கும் நாஸ்திகனாக்கப் பார்க்கிறான். அதில் அவன் தோல்வி கண்டால் மனிதன் இறைவனை ஏற்றுக்கொண்டால் இறைவனுக்கு இணைவைத்து அதன் மூலம் நரகில் விழச்செய்கிறான். இதற்காக அவன் பயன்படுத்தும் உபாயம் முன்னோர்களின், அரிஞர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றி நடக்கவேண்டும் என்ற ஒரு பக்தி உணர்வை உண்டாக்குவதாகும். இதில் பெரும்பாலோர் சிக்கிவிடுகிறார்கள். முன்னைய அறிஞர்களைப் பின்பற்றுகிறோம் என்று சொல்லியே மக்களில் பெரும்பாலோர் வழி கெட்டுப் போகிறார்கள்.
கடந்த கால சரித்திரத்தை உற்று நோக்கினால் இஸ்லாத்தை மிகவும் கடுமையாக எதிர்த்த அபூலஹப், அபூஜஹீல் இன்னும் இவர்கள் போன்ற வழிகேடர்கள் இறைவனால் சபிக்கப்பட்டவர்கள், இறை தண்டனைக்கு ஆளானவர்கள் என்ன கூறினார்கள்? நமது அறிஞர்கள் நமது முன்னோர்கள் முட்டாள்களா? மார்க்கம் தெரியாதவர்களா? நீ புதிதாதகச் சொல்ல வந்துவிட்டாயோ! அவர்களைவிட நீ மிகவும் அறிந்துவிட்டாயோ? அவர்கள் எல்லாம் வழி தவறியவர்களா? நரகவாதிகளா? என்று அடுக்கிக்கொண்டே போய் மக்களை வழி கெடுத்தார்கள்.
இறுதிவேதம் அல்குர்ஆனில் கூற்று இதனை உறுதிபடுத்துகிறது
2:170. மேலும், ”அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் ”அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்” என்று கூறுகிறார்கள்;. என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா?
7:28. (நம்பிக்கையில்லாத) அவர்கள் ஒரு மானக்கேடான காாியத்தைச் செய்து விட்டால், ”எங்கள் மூதாதையர்களை இதன் மீதே கண்டோம்; இன்னும் அல்லாஹ் எங்களை அதைக்கொண்டே ஏவினான்” என்று சொல்கிறார்கள். ”(அப்படியல்ல!) நிச்சயமாக அல்லாஹ் மானக்கேடான செயல்களைச் செய்யக் கட்டளையிடமாட்டான் நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கூறுகிறீர்களா?” என்று (நபியே!) நீர் கேட்பீராக.
31:21. ”அல்லாஹ் இறக்கி வைத்த (வேதத்)தை நீங்கள் பின்பற்றுங்கள்” என அவர்களுக்குச் சொல்லப்பட்டால், அவர்கள் ”(அப்படியல்ல)! நாங்கள் எங்களுடைய மூதாதையவர்களை எதில் கண்டோமோ, அதைத் தான் நாங்கள் பின்பற்றுவோம்” என்று கூறுகிறார்கள். அவர்களை ஷைத்தான் கொழுந்து விட்டொியும் (நரக) நெருப்பின் வேதனையின் பக்கம் அழைத்தாலுமா (பின்பற்றுவர்?)
ஆகவே இறுதி வேதத்தின் உண்மையான நிலையை உணர்ந்து இறைவனின் முன்னோர்களின் அடிச்சுவட்டை கைவிட்டு உண்மையான மார்க்கத்தின் பால் திரும்பாறு இஸ்லாம் உலக மக்களை அழைத்துக் கொண்டேயிருக்கிறது.
{ 1 comment… read it below or add one }
அருமையான விளக்கம்.