முஃதஸிலாக்கள் – ஓர் விளக்கம்

Post image for முஃதஸிலாக்கள் – ஓர் விளக்கம்

in பிரிவும் பிளவும்

முஃதஸிலாக்கள் என்று அடையாளப்படுத்தப்பட்ட ஒரு வழிகெட்ட கூட்டம் இஸ்லாமிய வரலாற்றில் தோன்றியது. குர்ஆனுக்கும், ஹதீஸிற்கும் மனம் போன போக்கில் விளக்கம் என்ற பெயரில் குதர்க்கமான அர்த்தங்களைக் கற்பித்தனர். தமது அறிவுக்கு முரண்பட்ட பல அம்சங்களை நிராகரித்தனர். ஏராளமான ஹதீஸ்களை நிராகரித்தனர் அல்லது மாற்று விளக்கமளித்தனர். அந்தக் காலத்தில் வாழ்ந்த சில கலீபாக்கள் இவர்களினால் கவரப்பட்ட போது ஆட்சி அதிகாரத்துடன் தமது கருத்தை நிலைநாட்டியதுடன் மாற்றுக் கருத்துடைய அறிஞர்கள் மீது வன்முறைகளையும் கட்டவிழ்த்துவிட்டனர். இன்று தம்மை முஃதஸிலாக்கள் என்று அழைத்துக் கொள்ளக் கூடிய யாரும் உலகில் இல்லை. அப்படி யாரும் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளப் போவதுமில்லை.

ஏனெனில், அந்தப் பெயர் வழிகெட்ட பிரிவுகளின் பெயரில் ஆழமாக இடம்பெற்றுவிட்டது. ஏற்கனவே இருந்த முஃதஸிலாக்கள் கூட தம்மை முஃதஸிலாக்கள் என்று அழைத்துக் கொள்ளவில்லை. அவர்கள் தம்மை ‘அஹ்லுத் தவ்ஹீத் வல் அத்ல்” என்றே அழைத்துக் கொண்டனர். எனவே, இன்றும் கூட தவ்ஹீத்வாதிகள் என்ற பெயரில், இஸ்லாமிய அமைப்புக்கள் என்ற பெயரில் முஃதஸிலாக்களின் எச்ச சொச்சங்கள் சமூகத்திற்குள் ஊடுருவியுள்ளது.

முஃதஸிலாக்கள் என்ற பெயரில் எந்த அமைப்பும் உலகில் இல்லையென்றாலும் முஃதஸிலாக்களின் பாணியில் குர்ஆன், ஸுன்னாவை அணுகும் வழிகெட்ட அடிப்படையில் இயங்கும் இஸ்லாமிய அமைப்புக்கள் இருக்கவே செய்கின்றன. எனவே, முஃதஸிலாக்கள் என்பது அழிந்து போன அமைப்பு அல்ல. சிந்தனா ரீதியில் வாழ்ந்து, வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு அமைப்பாகும். இந்த வழிகெட்ட அமைப்பின் தாக்கம் இஸ்லாமிய சிந்தனையாளர்கள், நவீனகால அறிஞர்கள் என அடையாளம் காணப்பட்ட பலரிடமும் உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். எனவே, முஃதஸிலாக்களின் வழிகேட்டு வலையில் இருந்து நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள அவர்கள் பற்றிய ஒரு தெளிவை ஏற்படுத்திக் கொள்வது அவசியமாகும். இந்த அடிப்படையில் முஃதஸிலாக்கள் பற்றிய இத்தொடர் முன்வைக்கப்படுகின்றது.

முஃதஸிலா பெயர் விளக்கம்:

‘இஃதஸல” என்றால் பிரிந்து சென்றான், விலகிச் சென்றான், ஒதுங்கினான் என்று அர்த்தம் செய்யலாம்.

‘என்னை நீங்கள் நம்பிக்கை கொள்ள வில்லையானால் என்னை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள் (எனவும் மூஸா கூறினார்.)” (44:21)
மேற்படி வசனத்தில் விலகிச் செல்லுங்கள் என்பதற்கு ‘பஃதஸிலூன்” என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இஸ்லாமிய வரலாற்றில் முஃதஸிலாக்கள் என்ற பதம் ஹிஜ்ரி இரண்டாம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் தோன்றிய இஸ்லாமிய அகீதாவை ஆய்வு செய்யும் விடயத்தில் பகுத்தறிவுக்கு கூடிய முக்கியத்துவம் கொடுக்கப்படும் அமைப்புக்குச் சொல்லக்கூடிய பெயராகும். இவர்கள் ஹஸனுல் பஸரி (ரஹ்) அவர்களது மஜ்லிஸில் இருந்து பிரிந்து சென்ற வாஸில் பின் அதாவின் குழுவினர் என அறியப்பட்டார்கள்.
(அல் பர்க் பைனல் பிரக்: 20, அல் மினல் வன்னிகல்: 1ஃ50, வபயாத் லில் அஃயான்: 2ஃ71, அத்தஃரீ பாத் லில் ஜுர்ஜானி: 238)

பெயருக்கான காரணம்:

முஃதஸிலா என்ற பெயர் இவர்களே தங்களுக்குச் சூட்டிக் கொண்ட பெயர் அல்ல. அஹ்லுஸ் ஸுன்னா அறிஞர்கள் இவர்களை இழிவுபடுத்துவதற்காகவும் அடையாளப்படுத்துவதற்காகவும் இவர்களுக்கு இட்ட பெயரே இதுவாகும். இவர்கள் இஸ்லாமிய உம்மத்திலிருந்து சிந்தனா ரீதியில் பிரிந்து சென்றுவிட்டனர் என்று அடையாளப்படுத்தும் விதமாகவே இந்தப் பெயரைப் பயன்படுத்தினர். இந்தப் பெயர் இவர்களுக்குச் சொல்லப்படுவதற்கு பின்வரும் சம்பவம் காரணமாக இருந்தது என்பது பிரபலமான கருத்தாகும்.

இமாம் ஹஸனுல் பஸரி(ரஹ்) அவர்கள் ஒரு சபையில் இருந்தார்கள். அப்போது ஒருவர் வந்து, ‘இமாமவர்களே! இப்போது ஒரு கூட்டம் தோன்றியுள்ளது. அவர்கள் பெரும் பாவம் செய்பவர்களைக் காபிர்கள் என்று கூறுகின்றனர். பெரும் பாவம் செய்வது அவர்களின் பார்வையில் குப்ர் ஆகும். பெரும் பாவம் செய்தவன் இஸ்லாத்தை விட்டும் வெளியேறிவிட்டான் என்பது அவர்களது நிலைப்பாடு. இவர்கள் கவாரிஜ்கள்.

மற்றுமொரு கூட்டம் பெரும்பாவம் செய்பவருக்கும் மன்னிப்பு உண்டு என்று கூறுகின்றனர். அவர்களது பார்வையில் ஈமான் என்பது நம்பிக்கை மட்டுமே, செயல் கிடையாது. ஈமானுடன் பெரும் பாவம் செய்வதால் ஈமானுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்கின்றனர். குப்ருடன் நன்மை செய்தால் எப்படி எந்த நன்மையும் இல்லையோ அவ்வாறே ஈமானுடன் பாவம் செய்வதால் எந்தத் தீங்கும் இல்லை என்று கூறுகின்றனர். இவர்கள் முர்ஜிய்யாக்கள். இந்தக் கொள்கை பற்றி நீங்கள் எங்களுக்கு என்ன கூறுகின்றீர்கள்” என்று கேட்டார்.

இதற்கு இமாமவர்கள் பதிலளிப்பதற்கு முன்னர் அந்த சபையில் இருந்த வாஸில் பின் அதாஃ (ஹி. 80-131) என்பவன் பெரும் பாவம் செய்பவனை முழுமையான முஃமின் என்றும் நான் சொல்லவும் மாட்டேன், காபிர் என்று முழுமையாகக் கூறவும் மாட்டேன். எனினும், ஈமான்-குப்ர் என்ற இரண்டிற்கும் இடைப்பட்ட ஒரு நிலையில் இருக்கின்றான். அவன் முஃமினும் இல்லை காபிரும் இல்லை.
(மன்ஸிலதுன் பைனல் மன்ஸிலதைன்)

இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் இருக்கின்றான் என்று கூறிவிட்டு ஹஸன் பஸரியின் மஜ்லிஸை விட்டும் ஒதுங்கி மஸ்ஜிதில் ஒரு ஓரத்தில் போய் அமர்ந்து கொண்டான். அம்ர் இப்னு உபைத் என்ற அவனது நண்பனும் அவனுடன் இணைந்து கொண்டான். இந்த சந்தர்ப்பத்தில்தான் இமாம் ஹஸனுல் பஸரி(ரஹ்) அவர்கள் ‘இஃதஸலனா வாஸில்…” ‘வாஸில் எம்மை விட்டும் ஒதுங்கிவிட்டார்” என்றார்கள். அதுவே அவர்களை அடையாளப்படுத்தும் பெயராக மாறிவிட்டது என இமாம் ஸஹ்ருஸ்த்தானி(ரஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
(அல் மினல் வன்னிகல்: 1ஃ52)

குறித்த இந்த சம்பவம் தொடர்பிலும் சில கருத்து வேறுபாடுகள் உள்ளன. நவீன கால முஃதஸிலா ஏஜென்டுகள் இந்த நிகழ்ச்சியை வைத்து இமாம் ஹஸனுல் பஸரியையே குறை கூற ஆரம்பித்துள்ளனர். வாஸில் தவறான கருத்தைக் கூறியிருந்தால் அவனுடன் விவாதித்து உண்மையை அவனுக்கு உணர்த்தியிருக்க வேண்டும். அதை விட்டு விட்டு பட்டம் கூறி அவனை ஒதுக்கியது தவறு என்ற அடிப்படையில் விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர். ‘தானாடாவிட்டாலும் தசை ஆடும்” என்பார்கள். தமது முன்னோர் குறை கூறப்படும் போது உள்ளம் கொதி கொதிக்கின்றது போலும்!

இந்த நிகழ்ச்சியில் இமாம் ஹஸனுல் பஸரியிடம்தான் கேள்வி கேட்கப்பட்டது. அவர்தான் பதில் சொல்ல வேண்டும். இடையில் பாய்ந்து பதில் சொன்னது வாஸிலின் தவறாகும். பதிலைக் கூட அவர் குர்ஆன், ஹதீஸில் இருந்து கூறவில்லை. தனது கருத்தாகவே முன்வைக்கின்றார். கருத்தைச் சொன்னாலும் அடுத்தவர்களுடைய கருத்து என்ன? இதற்கு அவர்கள் சொல்லும் விளக்கம் என்ன? என்றெல்லாம் அவன் பார்க்கவில்லை. தானாகவே ஒதுங்கிச் சென்றுவிட்டான்.

எனது கருத்து இதுதான். இதற்கு மாற்றமான கருத்துடன் இணைந்திருக்க முடியாது என்று ஒதுங்கிச் சென்றது அவன்தான். அவனை ஹஸனுல் பஸரி(ரஹ்) ஒதுக்கவில்லை. இன்றைய முஃதஸிலா குஞ்சுகளும் ஏதேனும் ஒரு முரண்பாட்டை உருவாக்கி அதைச் சாட்டாக வைத்து ஒதுங்கிச் செல்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பதை அவதானிக்கும் போது இது இரத்தத்துடன் இரத்தமாக ஊறிப்போன குளமோ என்று ஐயப்படவேண்டியுள்ளது.

முஃதஸிலாக்களின் பெயர்கள்:

முஃதஸிலாக்களுக்குப் பல பெயர்கள் இருக்கின்றன. முஃதஸிலாக்களுக்கு பிற முஸ்லிம்கள் வைத்த பெயர்கள் உள்ளன. அவ்வாறே அவர்கள் தமக்குத் தாமே சூட்டிக் கொண்ட பெயர்களும் உள்ளன.

பிறர் சூட்டிய பெயர்கள்:

1. முஃதஸிலாக்கள்:

இந்தப் பெயர் தோன்றிய காரணம் குறித்து முன்னர் பார்த்தோம்.

2. ஜஹ்மிய்யாக்கள்:

ஜஹ்ம் இப்னு ஸப்வான் என்ற ஒரு வழிகேடன் இருந்தான். இவனது பல கொள்கைகளை முஃதஸிலாக்கள் ஏற்றுக் கொண்டு அதைப் பிரச்சாரம் செய்தனர். குர்ஆன் படைக்கப்பட்டது போன்ற கொள்கைகளை உருவாக்கினான். அல்லாஹ்வின் ஸிபத்துக்களுக்கு மாற்று விளக்கம் அளிக்கும் இவனது வழிகெட்ட சிந்தனைப் போக்கின் தாக்கம் இன்று தம்மை அஹ்லுஸ் சுன்னா என அழைத்துக் கொள்ளும் பல அமைப்புக்களிடமும் இருக்கின்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

ஜஹ்மிய்யாக்கள் என்போர் முஃதஸிலாக்களை விட விசாலமான வழிகேட்டை உடையவர்கள். எனவேதான் இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள்,

என்று குறிப்பிடுகின்றார்கள். அதாவது, எல்லா முஃதஸிலாக்காரனும் ஜஹ்மிய்தான். ஆனால், எல்லா ஜஹ்மிய்யும் முஃதஸிலா அல்ல. (மின்ஹாஜுஸ் சுன்னா: 1ஃ256)

இந்த அடிப்படையில் முஃதஸிலாக்கள் ஜஹ்மிய்யாக்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

‘அல்லாஹ் அர்ஷின்மீதானான்” என்ற குர்ஆன் வசனத்திற்கு அர்ஷின் மீது தன் அதிகாரத்தை நிலைநாட்டினான் என்று மாற்றுவிளக்கமளித்தவன் இந்த ‘ஜஹ்ம்”தான். இவன் இந்தக் கருத்தை ஜஹ்த் இப்னு திர்ஹம் என்பவனிடமிருந்து எடுத்தான். ஜஹ்ம் பின்னர் அதை பிரச்சாரம் செய்ததால் இது போன்ற கருத்துக்கள் இவனுடன் இணைக்கப்பட்டு இவர்கள் ஜஹ்மிய்யாக்கள் எனப்பட்டனர்.

இந்த சிந்தனை யூதர்களிடமிருந்து வந்ததாகும். இது குறித்து இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள். அதை இப்படிக் கூறலாம்.

ஜஹ்ம் இப்னு ஸப்வான்

அல் ஜஃத் இப்னு திர்ஹம்

அபான் இப்னு ஸம்ஆன்

தாலூத் (ஸபீத் இப்னு அஃலம் என்ற நபியவர்களுக்கு சூனியம் செய்த யூதனின் சகோதரியின் மகன்.)

லபீத் இப்னுல் அஹ்ஷம் எனும் நபிக்கு சூனியம் செய்த யூதன்.

(மஜ்மூஃ பதாவா: 5ஃ20)

இந்த அடிப்படையில் ஜஹ்மிய்யா சிந்தனையும் முஃதஸிலாப் போக்கும் யூத அடிப்படையில் உருவான வழிகேடுகளாகும்.

03. கதரிய்யாக்கள்:

நன்மையோ, தீமையோ அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கின்றது என்பது ஈமானின் அடிப்படையாகும். முஃதஸிலாக்கள் அல்லாஹ் தீமையை நாடமாட்டான் என்று வாதிடுகின்றனர். இவ்வாறே மனிதனின் செயல்களை மனிதன்தான் படைத்துக் கொள்கின்றான். மனிதனது செயல்களுக்கும் ‘கத்ரு”க்கு மிடையில் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறுகின்றனர். இதனால் இவர்கள் கதரிய்யாக்கள் என அழைக்கப்பட்டனர்.

இதனை முஃதஸிலாக்கள் மறுக்கின்றனர். நன்மை, தீமை அனைத்தும் அல்லாஹ்வின் கத்ர் படி நடக்கின்றது என்று கூறுவபவர்களுக்குத்தான் கதரிய்யா என்ற பெயர் பொருத்தமானது என்று கூறுகின்றனர்.

இது குறித்து இமாம் இப்னு குதைபா(ரஹ்) அவர்கள் கூறும் போது,

‘முஃதஸிலாக்கள், (அல்லாஹ்வின் நாட்டப்படி அனைத்தும் நடப்பதில்லை எனக் கூறி) அல்லாஹ்வின் கத்ரை இல்லை என்கின்றனர். (மனிதன் தனது செயல்களைத் தானே படைத்துக் கொள்கின்றான் என்று கூறுவதன் மூலம்) கத்ரை தம்மோடு இணைத்துக் கொள்கின்றனர். எனவே, அவர்கள்தான் கத்ரிய்யாக்கள் என்று கூற வேண்டும். ஏனெனில், தன்னிடம் ஒன்று இருப்பதாக வாதிடக்கூடியவன்தான் அந்தப் பெயரைக் கூறி அழைக்கத் தகுதியானவனாவான்” என்று கூறுகின்றார்கள்.
(தஃவீலு முஹ்தலபுல் ஹதீத்: 98,
தாரீகுல் ஜஹ்மிய்யா வல் முஃதஸிலா: 54)

4. இந்த உம்மத்தின் மஜூஸிகள்:
மஜூஸிகள் நல்லதைப் படைக்க ஒரு கடவுளும், தீயதைப் படைக்க இன்னொரு கடவுளும் இருப்பதாக நம்புகின்றனர். முஃதஸிலாக்களும் நன்மையை அல்லாஹ் படைப்பதாகவும், தீமையை மனிதன் படைப்பதாகவும் நம்புகின்றனர். இதன் மூலம் இரண்டு படைப்பாளர்கள் இருப்பதாக நம்புகின்றனர். இது தெளிவான குப்ராகும். நபியவர்களுக்கு சூனியம் செய்யப்பட்ட ஹதீஸை மறுக்கும் போது இன்றைய முஃதஸிலாக்கள் இந்த வாதத்தை முன்வைக்கின்றனர்.

நபிக்கு சூனியம் பலிக்கும் என்பது நல்லதா, கெட்டதா? கெட்டது! அல்லாஹ் கெட்டதை நாடுவானா? அல்லாஹ்வையும் சூனியத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியதாகக் கூறப்போகின்றீர்களா? என்று கேட்கின்றனர்.

ஷைத்தான் நல்லவனா, கெட்டவனா? கெட்டவன். கெட்டவனை அல்லாஹ் படைப்பானா? அவனுக்கு நீண்ட ஆயுளை அல்லாஹ் கொடுப்பானா? அவனுக்குப் பல்வேறுபட்ட ஆற்றல்களை அல்லாஹ் வழங்குவானா? ஷைத்தான் செய்யும் எல்லாத் தீமைகளிலும் அல்லாஹ் பங்காளியாக இருப்பானா? என்று கேட்டால், ஷைத்தானைப் படைத்தது வேறு இறைவன் என்று நம்ப வேண்டும். இந்த தெளிவான குப்ரைத்தான் இன்றைய முஃதஸிலாக்களும் மகத்தான வாதமாக முன்வைத்து வருகின்றனர்.

முஃதஸிலாக்களிடம் மஜூஸிகளின் இந்தத் தாக்கம் இருப்பதால், இந்த உம்மத்தில் உள்ள மஜூஸிகள் என அழைக்கப்பட்டனர்.

5. அல் வஈதிய்யா:
முஃதஸிலாக்களின் ஐந்து அடிப்படைகளில் அல் வஃத் வல் வஈத் வாக்கும் எச்சரிக்கையும் என்பது ஒன்றாகும். அல்லாஹ் தனது வாக்கிலும் எச்சரிக்கையிலும் உண்மையானவன். தவ்பாவுக்குப் பின்னர்தான் அல்லாஹ் பாவங்களை மன்னிப்பான் என்று இவர்கள் கூறி வந்தனர்.
(அல் இன்திஸார்: 126)

எனவே, இவர்கள் வஃதிய்யாக்கள் எச்சரிப்போர் என அழைக்கப்பட்டனர்.

6. முஅத்திலாக்கள்:
முஃதஸிலாக்கள் அல்லாஹ்வின் பண்புகளை மறுத்த காரணத்தினால் ‘முஅத்திலாக்கள்” – மறுப்பவர்கள் என்றும் அழைக்கப்பட்டனர்.

இவ்வாறு இவர்கள் பல பெயர் கொண்டு அழைக்கப்படுவதன் மூலமே இவர்களின் வழிகேடுகள் சமூகத்தில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதை யூகிக்க முடிகின்றது.

 

ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி,
நன்றி qurankalvi.com

Leave a Comment

Previous post:

Next post: