மனுதர்மம்

in பகுத்தறிவுவாதம்

ஒரே தந்தைக்கும், தாய்க்கும் பிறந்த மக்களை ஜாதியின் பெயரால் கூறு போட்டுப் பிரித்து ஏற்றத்தாழ்வை கற்பிப்பதை மனு தர்மம் என்றும் பொதுவாகக் கூறப்பட்டு வருகிறது. முன்னொரு காலத்தில் மனு என்ற பெயரை உடையவர் இந்தக் கொள்கையை நிலை நாட்டியதால் இதற்கு மனுதர்மம், மனுநீதி என பெயர் வழங்கலாயிற்கு என்று கூறுவோரும் உண்டு. எது எப்படியோ இது மனிதனால் உருவாக்கப்பட்ட சுய நலத்துடன் கூடிய ஒரு நியதியாகும்- கொள்கையாகும்.

ஆனால் இங்கு நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட விஷயம் இன்று உலகின் அனைத்து நாடுகளிலும், அனைத்து மக்களாலும், அனைத்து மதங்களாலும் கடைபிடிக்கப்படும் கொள்கை கோட்பாடுகள் மனு தர்மத்தின் அடிப்படையில், மனு நீதியின் அடிப்படையில் கற்பனை செய்யப்பட்டவையே என்ற பேருண்மையை விவரிப்பதாகும்.

உதாரணமாக இன்று நாம் கடை பிடித்து வரும் இந்திய அரசியல் சாசனம் யாரால் உருவாக்கப்பட்டது? இந்தியா சுதந்திரமடையும் போது அன்று ஆதிக்க சக்தியினராக இருந்தவர்களால் சரி கண்டு உருவாக்கப்பட்டது தான் இந்திய அரசியல் சாசனம். இந்தியா சுதந்திரமடைவதற்கு முன்னர் ஆங்கிலேயே ஆதிக்கச் சக்தியினரால் உருவாக்கப்பட்ட சட்டதிட்டங்களே நம் தாய்நாடான இந்தியாவை ஆட்டிப் படைத்தன. இப்படி இன்று உலகில் காணப்படும் அனைத்து நாடுகளும், அந்தந்த நாடுகளில் ஆதிக்கம் செலுத்தும் மனிதர்களால் உருவாக்கப்பட்ட சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டே அந்தந்த அனைத்து நாடுகளிலுமுள்ள மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆக ஆட்சியாளர்களின் மனிதக் கற்பனையில் உருவான சட்ட திட்டங்களே – அதாவது மனு தர்மமே- மனு நீதியே அனைத்துலக மக்களையும் ஆட்டிப்படைக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, அரசியலின் பெயரால் மனிதக் கற்பனைகளைக் கொண்டு உருவான அரசியல் சாசனம் என்ற பெயரால் மக்களை ஆட்டிப் படைப்பது போல், இன்னொரு பக்கம் ஆன்மீகத்தின் பெயரால் மதவாதிகளிடையே ஆதிக்கம் செலுத்தும் மத குருமார்களின் கற்பனையில் உருவான மதச் சட்டங்களும் மக்களை காவு கொள்கின்றன, அரசியல், ஆத்திகம் இவற்றின் நிலை இதுவென்றால் அடுத்து நாத்திகத்தின் பெயராலும் மனிதக் கற்பனையில் உருவான மனிதக் கருத்துக்களே கோலோச்சுகின்றன.

அரசியலின் பெயரால் ஆட்சியாளர்களின் மனிதக் கற்பனைகள், ஆத்திகம் – மதத்தின் பெயரால் இந்து, பெளத்தம், யூதம், கிறிஸ்தவம், முஸ்லிம் மதவாதிகளின் மனிதக் கற்பனைகள், நாத்திகத்தின் பெயரால், டார்வின், மார்க்ஸ், இங்கர்சால், பெரியார், அண்ணா, கலைஞர், போன்றோரின் மனிதக்கற்பனைகள் என அனைத்துத்துறைகளிலும் மனிதக் கற்பனைகளே- மனு தர்மமே, மனு நீதியே கோலோட்சுகின்றன.

மனிதக் கற்பனையில் உருவான ஒரு சட்டம் என்றால், நிச்சயமாக அது அந்தச் சட்டத்தை உருவாக்கிய மனிதனுக்குச் சாதகமாகவே இருக்கும். சமீபகால உச்சநீதிமன்றத் தீர்ப்புகளே இந்த எமது கருத்து நூற்றுக்கு நூறு உண்மை என்பதை நிலைநாட்டப் போதுமானதாக இருக்கிறது. மேலும் நமது இந்திய நாட்டை வெள்ளையன் ஆளும்போது சட்டங்கள் அவனுக்குச் சாதகமாகவே இருந்தன. இன்று ஜனநாயகத்தின் பெயரால் நமது நாட்டை நாமே ஆண்டாலும், ஆதிக்க மேல் ஜாதியினருக்கு சாதகமாகத்தான் நமது இந்திய நாட்டுச் சட்டங்கள் இருக்கின்றன என்பதை யாராலும் மறுக்க முடியாது.

ஆன மனிதனே மனிதனுக்குரிய சட்ட திட்டங்களை வகுத்துக் கொண்டால் அது நேர்மையான – நீதியாக ஒரு போதும் இருக்காது என்பதற்கு இதை விட வேறு ஆதாரங்கள் தேவையா? ஒரு அதி நுட்பக் கருவியை யார் கண்டுபிடிக்கிறார்களோ அவரே அதை இயக்கும் முறையை தெளிவு படுத்த வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியுமா? இருக்க முடியாது. மனிதன் இதுவரை படைத்த கருவிகளை எல்லாம் விட அதி நுட்பமானது மனிதக் கருவி. இந்த மனிதன் தன்னைத்தானே உருவாக்கிக் கொள்ளவில்லை. மனிதனை மீறிய ஒரு மாபெரும் சக்தியே மனிதனை உருவாக்கியுள்ளது. எனவே அந்த மாபெரும் சக்தியே மனிதனுக்குரிய சட்டதிட்டங்களை வகுத்துத் தர வேண்டும்.

அந்த வாழ்க்கை நெறியே நீதியாகவும், நியாயமாகவும், தர்மமாகவும் இருக்க முடியும். இந்த அடிப்படை உண்மைகளை பகுத்தறிந்து உணராதவன் தன்னை பகுத்தறிவுவாதி என்று சொல்லிக் கொள்வதில் பொருளே இல்லை. உண்மையில் அவன் ஐயறிவு மிருகத்தை ஒத்தவனாக மட்டுமே இருக்க முடியும். மனிதனையும், மற்றும் படைப்புகளையும் படைத்த அந்த மாபெரும் சக்தியை எனக்குக் காட்டுங்கள்; அதைப் பார்த்தால் தான் நான் ஏற்றுக் கொள்வேன் என்பது தான் போலி பகுத்தறிவு வாதியின் வாதம், கேவலம் பல நிபந்தனைகளுக்கு உட்பட்ட அற்பமான பார்வையை உடைய தன்னுடைய கண்ணின் பார்வையில் கட்டுப்படும் ஒன்று எப்படி ஒரு மாபெரும் சக்தியாக இருக்க முடியும்? என்ற அற்பமான பகுத்தறிவும் இல்லாதவன் மட்டுமே இந்த வாதத்தை வைக்க முடியும்.

ஒரு மதிப்புக்குரிய மனிதன் இன்னொரு மனிதனைச் சந்தித்து, நாளை நமது வீட்டில் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறேன்; அவசியம் வந்து கலந்து கொள்ளுங்கள் என்று அழைப்பு விடுக்கிறார். அழைப்பு விடப்பட்ட மனிதன் நாளை நடக்க இருக்கும் விருந்தின் அம்சம் எதையும் இன்று தன் கண்ணால் பார்க்க முடியாது; விருந்தளிப்பவரின் வீட்டுக்குப் போய் தன் கண்ணால் பார்த்தாலும் விருந்தின் அம்சம் எதையும் பார்க்க முடியாது. ஆயினும் தன் அறிவை முறையாகப் பயன்படுத்தி அழைப்பு விடுபவர் ஒரு கண்ணியமான மனிதர், ஏமாற்றுபவர் அல்ல; நிச்சயமாக அவர் சொல்படி நாளை விருந்து உண்டு என்று பரிபூரணமாக நம்பி அடுத்த நாள் அவர் வீட்டுக்குப் போய் பார்த்தால் விருந்து தடபுடலாக நடந்து கொண்டிருப்பதை அப்போது தான் பார்க்க முடியும்.

ஆனால் இதே போல், ஒரு ஐயறிவு மிருகத்திடம் உனக்கு ஒரு உயர்தரமான உணவு இங்கே வீட்டினுள் வைத்திருக்கிறேன்; வந்து சாப்பிடு என்று கூவி கூவி அழைத்தாலும் அந்த மிருகம் வருமா? நிச்சயமாக அந்த அழைப்பை ஏற்காது. வரவே வராது. அதே சமயம் அந்த உணவை கையிலே எடுத்து அதன் கண்ணிலே காட்டினால் உடனே விழுந்தடித்து ஓடோடி வரும். ஐயறிவு மிருகத்தின் நிலை இதுதான். மனிதனைப் படைத்த மாபெரும் சக்தியை எனது கண்ணால் கண்டே ஏற்பேன் என்று வாதிப்பவனும் இந்த ஐயறிவு மிருகத்தின் நிலையிலேயே இருக்கிறான் என்பதை முறையாகப் பகுகத்தறிகிறவர்கள் மறுக்க முடியுமா?

சர்வத்தையுயம் படைத்துப் பரிபாலிக்கும் அந்த மாபெரும் சக்தியை நாத்திகர்கள் விதண்டவாதமாகவே மறுக்கிறார்கள். காரணம் அவர்கள் கண்ணால் பாாக்க முடியாத அவர்களின் உயிர். காற்று, மின்சாரம் இன்னும் இவை போல் பலவற்றைத் தங்களினன் கண்ணால் பார்க்க முடியாவிட்டாலும் அவற்றின் செயல்பாடுகளால் ஏற்பவர்கள், அண்ட சராசரத்தின் அனைத்து கோள்களின் செயல்பாடுகள், வானத்தின் கீழுள்ள அனைத்துப் படைப்புகள், அவற்றின் இயக்கங்கள் மூலம் அவற்றை இயக்கும் அந்த மாபெரும் சக்தியை உணராமல் மறுக்கிறார்கள் என்றால் அது விதண்டாவாதம் தானே?

ஒரு மரத்தலிருந்து தானாக ஒரு படகு உருவாகி அது ஆற்றுக்குத் தானாக வந்து மக்களை இக்கரையிலிருந்து அக்கரைக்குக் கொண்டு சேர்த்தது என்று யாராவது சொன்னால் அதை ஏற்க மறுக்கும் நாத்திகர்கள், அப்படிச் சொல்கிறவனை வடிகட்டிய மூடன் என்று சொல்கிறவர்கள், வானவெளியில் காணப்படும் அனைத்து கோள்களும் சூரியன், பூமி, சந்திரன் முதல் கொண்டு அனைத்தும் தானாக இயங்குகின்றன. பூமியில் காணப்படும் அனைத்தும் தானாகவே உருவாகின என்று சொல்கிறார்கள் என்றால் அவர்களை எந்தப் பட்டியலில் சேர்ப்பது? அவர்களை உண்மையான பகுத்தறிவாளர்களாக ஏற்க முடியுமா?

இந்த பகுத்தறிவுவாத நாத்திகர்களுக்கு இப்படிப்பட்ட மயக்கம் ஏற்பட ஒரு நியாயமான காரணம் இருக்கிறது. இன்று உலகில் காணப்படும் அனைத்து மதங்களிலும் இஸ்லாம் உட்பட கடவுள்களின் பெயரால் மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் மத குருமார்கள் புகுந்து கொண்டு தங்களின் மனிதக் கற்பனைக் கருத்துக்களை மனுதர்மத்தை – மனுநீதியை மதச் சட்டமாக்கி மக்களை ஏமாற்றி, அவர்களிடையே ஏற்றத்தாழ்வை உண்டாக்கி (இதுவே பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் ஜாதியாக உருவாகிறது) கடவுளின் பெயரால் மக்களை சுரண்டி வாழ்வதைப் பார்த்து வருந்தும் சுய சிந்தனையாளர்களே நாத்திக பகுத்தறிவாளர்களாக மாறுகிறார்கள். இந்திய நீதி மன்றங்களில் “முஹம்மடன் லா” என்ற பெயரில் இஸ்லாத்தின் பெயரால் அமுல் படுத்தப்படும் சட்டங்கள், உண்மையில் முஸ்லிம் மதப் புரோகிதர்களின் கற்பனையில் உருவான மனுதர்மமே – மனுநீதியே அல்லாமல் இறைவனின் இறுதி வழிகாட்டல் நெறிநூல் சொல்லும் இறைச் சட்டங்கள் அல்ல.

அரபு நாடுகள், முஸ்லிம் நாடுகள் என்று பெருமையாகப் பேசிக் கொள்ளும் அந்த முஸ்லிம் நாடுகளிலும், அரசியல், மதச் சட்டங்களாக இருப்பவற்றில் மிகப் பெரும்பாலானவை மனிதக் கற்பனையில் உருவான மனிதச் சட்டங்களே – மனு தர்மமே – மனு நீதியையேயாகும்.

சுருக்கமாகச் சொன்னால் இன்று உலகில் காணப்படும் அனைத்து நாடுகளும், அவற்றிலுள்ள ஆத்திகர்கள், நாத்திகர்கள் அனைவரும் மனிதக் கற்பனையில் உருவான மனிதச் சட்டங்களை – மனு தர்மத்தை – மனு நீதியையே நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதன் காரணமாகவே நாட்டுக்கு நாடு மோதல், மதத்திற்கு மதம் மோதல், மொழிக்கு மொழி மோதல், நிறத்திற்கு நிறம் மோதல், மாநிலத்திற்கு மாநிலம் மோதல், பிரதேசததிற்கு பிரதேசம் மோதல் என மோதல்களே உலகை ஆட்டிப் படைக்கின்றன.

உலகையே சீரழிக்கும் ஆபாச அசிங்கக் காட்சிகள், வன்முறைகள் நிறைந்த சினிமாத்துறை, மது, சூது, விபச்சாரம் இவை அனைத்தும் ஆட்சியாளர்களாலேயே போற்றி வளர்க்கப்படுகின்றன. இன்று நீக்கமறக் காணப்படும், தினசரி மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் தீவிரவாதச் செயல்கள், குண்டுவெடிப்புகள் , அழிவு நாசம் அத்தனைக்கும் இன்றைய சினிமா துறையே முழு முதல் காரணம் என்பதை ஆட்சியாளர்கள் உணருகின்றார்களா? இல்லையே! அரசுகளும் மக்களின் பலகீனத்தை, சரீர இச்சையை, காமத்தைப் பயன்படுத்தி காசு சேர்ப்பதில் குறியாக இருக்கின்றனவே அல்லாமல், மக்களின் நலவாழ்வில் அக்கறைச் செலுத்தும் ஆட்சியாளர்கள் இன்று உண்டா? மக்கள் எக்கேடு கெட்டாலும் தாங்களும், தங்களின் குடும்பமும் பல தலைமுறைக்குச் சொத்து சேர்த்து சொகுசாக வாழ வேண்டும் என்பதே ஆட்சியாளர்களின் குறிக்கோளாக இருக்கிறது. இவை அனைத்தும் மனுதர்மம் -மனுநீதியின் விளைவே. இன்று முஸ்லிம்கள் நடைமுறைப் படுத்திக் கொண்டிருக்கும் இஸ்லாத்தின் மீது நாத்திக பகுத்தறிவாளர்களுக்கு நல்லெண்ணம் இல்லை. காரணம் இன்று முஸ்லிம்களும் இறைவன் இறக்கியருளிய தூய இஸ்லாமிய வாழ்க்கை நெறியை நடைமுறைப்படுத்தவில்லை. முஸ்லிம்கள் நம்பிக்கை வைத்துள்ள முஸ்லிம் மத குருமார்கள் – மதப் புரோகிதர்களின் கற்பனையில் உருவான மனிதச் சட்டங்களையே – மனுதர்மத்தையே – மனுநீதியையே இஸ்லாத்தின் பெயரால் நடைமுறைப்படுத்துகிறார்கள். எனவே முஸ்லிம்களிடையேயும் மூட நம்பிக்கைகள், மூடச் சடங்குகள் , சம்பிரதாயங்கள், தர்கா அடிப்படையில துணைக் கடவுள்கள், அவற்றிற்கு கத்தம்பாத்திஹா, கந்தூரி, வஸீலா என இறைவனுக்கு இணை வைக்கும் மூடச் சடங்குகள் மலிந்து காணப்படுகின்றன.

இவற்றைப் பார்த்து சிந்திக்கும் நாத்திகப் பகுத்தறிவாளர்கள் இஸ்லாம் உட்பட அனைத்து மதங்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள், மக்களை ஏமாற்றிப் பிழைக்க ஒரு சாராரின் கற்பனையில் உதித்தவை கடவுள் நம்பிக்கை என முடிவுக்கு வந்து விடுகின்றனர். ஆக கடவுள் என்பதே இல்லாத ஒன்றைக் கற்பனை செய்து மக்களை ஏமாற்றுவதாகும் என முடிவுக்கு வந்து கடவுளை மற, மனிதனை நினை, கடவுளை கற்பிப்பவன் காட்டு மிராண்டி, கடவுளை வணங்குகிறவன் முட்டாள் என்கின்றனர். அதே சமயம் பெரியார், அண்ணா சிலைகளை செதுக்கி அவற்றிற்கு மாலை மரியாதை செய்து அவர்களை வணங்கி வருவதை உணர்கிறவர்களாக இல்லை. இல்லை நாங்கள் அவர்களுக்கு மரியாதை தான் செய்கிறோம் என சப்பைக் கட்டு கட்டுவார்கள். இன்றைய இந்த மரியாதைதான் நாளை வணக்கமாக மாறுகிறது; சமீபத்தில் சிறு பான்மையினருக்கு இட ஒதுக்கீட்டை சட்டமாக்கி பேசிய கலைஞர், ஒரு சிலரின் பெயரைக் குறிப்பிட்டு, அவர்களின் சமாதிகளை நோக்கி வணங்குவோம் என கைகூப்பிய காட்சியை தொலைக்காட்சியில் பார்த்தவர்கள் இந்த எமது கூற்றை மறுக்க மாட்டார்கள். இன்று காணப்படும் பெரும் பாலான சாமி சிலைகள் இப்படி மரியாதை என்ற பெயரால் ஆரம்பித்துதான் இன்று சிலை வணக்ககமாக ஆகியுள்ளது என்பதை நாத்திகர்கள் உணர்வதாக இல்லை. ஆக மனிதக்கற்பனைகள், அவை ஆட்சியாளர் தரப்பிலிருந்து வந்தாலும், ஆத்திகர் தரப்பிலிருந்து வந்தாலும், நாத்திகர் தரப்பிலிருந்து வந்தாலும் அவை அனைத்தும் மனிதக் கற்பபனைகளே, மனு தர்மமே, மனு நீதியே! அவை மனித சமுதாயத்தை வழிகேட்டில், அழிவுப் பாதையில் இட்டுச் செல்லும் என்பதே மறுக்க முடியாத உண்மையாகும்.

அப்படியானால் மனிதனின் செயல்பாடுகள் எந்த அடிப்படையில் இருக்க வேண்டும்? மனிதனைப் படைத்த அந்த ஓரிறைவனின் வழிகாட்டல்படியே இருக்க வேண்டும். அவன் மனிதக் கற்பனைகளில் உருவான பொய்க் கடவுள்களின் பட்டியலில் உள்ளவன் அல்ல. அண்டசராசரங்கள் அனைத்தையும் படைத்த ஒரே இறைவன்; அவனல்லாது வேறு இறைவனோ, கடவுளோ இல்லவே இல்லை,

தூய இஸ்லாத்தை ஏற்கும் ஒருவர் மொழியும் உறுதி மொழியின் ஆரம்ப உறுதிப்பாடு என்ன தெரியுமா? அது அரபியில் “லா இலாஹ்” என்பதாகும். அதைத் தமிழில் புரோகித மத குருமார்கள் “வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை” என தவறாக மொழி பெயர்ப்பார்கள். இந்த உறுதி மொழியில் ஆரம்பத்தில் காணும் “லா” என்பதே இல்லை என்பதாகும். “இலாஹ்” என்பது தெய்வம் – கடவுள் – இறைவன் என்பதாகும். “அதாவது கடவுளே இல்லை” என்பதாகும். அதாவது இன்று நாத்திகர்கள் கொண்டிருக்கும் கொள்கை தூய இஸ்லாத்தை ஏற்பவர் கூறும் உறுதி மொழியின் முதல் பாதியாகும். அதன் அடுத்த பாதியான “இல்லல்லாஹ்” – அரபியில் அல்லாஹ் என்று சொல்லும் ஒரேயொரு இறைவனைத் தவிர என்பதே அதன் பொருளாகும்.

உலகில் தோன்றிய பல்லாயிரக்கணக்கான இறைத் தூதர்கள், மக்களுக்குப் போதித்தது அகிலத்தையும் படைத்த ஓரிறைவனைத்தவிர வேறு தெய்வமே இல்லை என்பதேயாகும். ஆனால் தூய வாழ்க்கை நெறியை மதமாக்கி – அதைப் பிழைப்பாக்கி, வயிறு வளர்க்கும் அனைத்துத் தரப்பு மத குருமார்களின் கற்பனையில் உண்டானவை தான் பல வடிவங்களிலுள்ள பொய்க் கடவுள்கள்; ஓரிறைவனை நெருங்கச் செய்யும்,அந்த இறைவனிடம் பரிந்து பேசுவதாக கற்பனை செய்துள்ள துணைக் கடவுள்கள். இந்த புரோகிதர்களின் கற்பனை கடவுள்களை ஒழிக்க முற்பட்ட நாத்திக சகோதரர்கள் உண்மையான ஒரே ஒரு கடவுளையும் மறுப்பது அவர்களின் அறியாமையாகும். பகுத்தறிவை முறையாகப் பயன்படுத்தாமல், ஐயறிவுக்குள் கட்டுண்டவர்கள் அவர்கள்.

மனிதனைப் படைத்த இறைவன் அவனுக்குரிய வாழ்க்கை நெறி முறைகளைக் காலத்திற்குக் காலம் தனது தூதர்கள் மூலம் கொடுத்துக் கொண்டே இருந்தான். ஆனால் முன்னர் கொடுக்கப்பட்ட வழிகாட்டல் அறிவிப்புகள் முழுமையாகாமல் தற்காலிகமானவையாக இருந்ததால், அவை உடனுக்குடன் பதிந்து பாதுகாக்கப்படவில்லை. இறைவன் அவ்வாறு கட்டளையிடவில்லை. எனவே அவை அனைத்தும் அந்த இறை தூதர்களுக்குப் பின்னால், இந்தப் புரோகிதர்களின் கரம் பட்டு மாசடைந்து அவற்றின் தூய நிலையை இழந்து விட்டன. அவை இறக்கப்பட்ட மூலமொழிகளும் நடைமுறையில் இல்லாமல் அழிந்து போயின். மேலும் இந்திய அரசாலேயே முன்னர் வெளிவிடப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டது போல், இறைவனும் முன்னைய வழிகாட்டல் நூல்களை செல்லாமல் ஆக்கி, உலகம் அழியும் வரை முழுமை பெற்ற இறுதி வழிகாட்டல் நூல் இதுதான் என அனைத்துலக மக்களுக்குமாக “அல்குர்ஆனை” நெறிநூலாக ஆக்கித் தந்துள்ளான். அல்குர்ஆன் முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல; அனைத்துலக மக்களுக்கும் சொந்தமானது அல்குர்ஆன். புரோகிதர்கள் சொல்வது போல் அல்குர்ஆன் வேதமோ, நடைமுறைச் சாத்தியமில்லா வேதாந்தமோ அல்ல; மாறாக அது நேர்வழி காட்டல் நூல் ஆகும். அது கடந்த சுமார் 1450 ஆண்டுகளாக புரோகிதர்களின் கரம்பட்டு மாசுபடாமல், அதன் தூயநிலை ஒரு புள்ளி அளவேணும் மாறுபடாமல் இன்று வரை பாதுகாக்கப்பட்டு வருகிறது. அது இறக்கியருளப்பட்ட அரபி மொழியும் இன்று வரை செத்த மொழியாகாமல், அதிகமான மக்கள் பேசும் மொழியாக இருந்து வருகிறது.

முன்னைய இறைதூதர்களுக்கு அருளப்பட்ட நெறிநூல்கள் மனிதக்கரம் பட்டதால் மனுதர்மம் – மனுநீதி ஆனது போல், இறுதி வழிகாட்டல் நுால் மனிதக்கரம் படாத நிலையில், அன்று போல் இன்றும் வாழ்க்கை நெறி நூலாகவே இருந்து வருகிறது; உலகம் அழியும் வரை பாதுகாத்து வரப்படும். இது அந்த ஒரே இறைவனது உறுதி மொழியாகும். இறைவனால் இறக்கியருளப்பட்ட எண்ணற்ற வழிகாட்டல் நூல்களில் மனிதக் கரம்பட்டு மாசுபட்டு, வேதமாகி, வேதாந்தமாகி, மனுதர்மமாகி, மனுநீதியாகி மக்களை மனிதக் கற்பனைகள் கொண்டு வழி கெடுக்காமல் நேர்வழி காட்டும் நெறிநூல் அல்குர்ஆன் மட்டுமே.

இது காலம் வரை ஒரே இறைவனால் இறக்கியருளப்பட்ட நெறிநூல்களிலேயே தங்களின் கைவரிசையைக்காட்டி, அவற்றை மனு தர்மமாக – மனு நீதியாக ஆக்கிய புரோகித வர்க்கத்தினர், இறுதி வழிகாட்டல் நூல் அல்குர்ஆனில் தங்கள் கைவரிசையைக் காட்ட முடியாமல் திகைத்தனர். மாற்று வழிக்காக அலைமோதினர். இறுதியில், அல்குர்ஆனுக்கு செயல் விளக்கமாக இருக்கும் இறுதித் தூதரின் நடைமுறைகள் (ஹதீஸ்கள்) உடனுக்குடன் பதிந்து பாதுகாக்கப்படாததால், அவற்றில் தங்களின் கைவரிசையைத் காட்டத் துணிந்தனர். அந்த நடைமுறைகள் அல்குர்ஆன் வசனங்களைப் போல் சுமார் 6000 மட்டுமே உள்ள நிலையில் பல லட்சக்கணக்கான பொய் ஹதீஸ்களை இட்டுக்கட்டி தங்களின் புரோகிதப் பிழைப்புக்கு மாற்று வழி கண்டனர்.

ஆயினும் இறையச்சமுடைய நல்லடியார்கள், அவை அனைத்தையும் ஆய்வு செய்து அந்தப் பொய் ஹதீஸ்களையும் அடையாளம் காட்டினர். பின்னர் அல்குர்ஆனுக்கு விரிவுரை (தப்ஸீர்) ஹதீஸுக்கு விரிவுரை என்ற பெயரால் தங்கள் கற்பனைக் கதைகளைப் புகுத்தி மனுதர்மத்தை, மனுநீதியை தூய இஸ்லாமிய மார்க்கத்திலும் நுழைத்து விட்டனர். அவையே இன்று இஸ்லாத்தின் பெயரால் முஸ்லிம்களால் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இந்த வழிகேட்டைப் பார்த்துத்தான் நாத்திகப் பகுத்தறிவாளர்கள் தூய இஸ்லாத்தையும் மனுதர்மத்தை, மனு நீதியை போதிக்கும் இதர மதங்களோடு இணைத்துப் பேசுகின்றனர். ஒரே இறைவன் கொடுத்த, அமைதி நிறைந்த சாந்தியை நிலைநாட்டும் தூய வாழ்க்கை நெறியை கண்டறிய தவறி விட்டனர்.

முன்னர் விவரித்தது போல், இறையருளிய வழிகாட்டு நெறிநூல் போதனைகளில் அல்குர்ஆனைத் தவிர இதரவை அனைத்தும் கலப்படமாகி மாசுபட்டு மனுதர்மமாக, மனு நீதியாக ஆகிவிட்டன. இறைவனும் அவற்றை ரத்து செய்து செல்லாதவை ஆக்கிவிட்டான்.இன்று மனித வர்க்கத்திற்கு வழிகாட்டக் கூடிய நெறிநூல் அல்குர்ஆன் மட்டுமே. அதில் மனிதக் கருத்துக்களே இல்லை. எனவே ஆதிக்க சக்திகள் தங்கள் நலனுக்கு ஏற்றவாறு மனிதக் கருத்துக்களைப் புகுத்தும் வாய்ப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. அல்குர்ஆனில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ அது தான் நேர்வழி. அதற்கு மேல் விளக்கம் – சுய விளக்கம் கொடுக்கும் அதிகாரம் உலகில் எந்த ஆலிமுக்கும் – அறிஞனுக்கும் இல்லை. இருப்பதை உள்ளபடி எடுத்துச் சொல்வதே அனைவரது கடமையாகும். அதில் செயல்படுத்த வேண்டிய முஹ்க்கமாத் வசனங்களுக்கு இரண்டாவது பொருளுக்கு இடமே இல்லை. ஆனால் உலக ஆதாயத்தைக் குறிக்கோளாகக் கொண்ட மவ்லவி புரோகிதர்கள் விதவிதமான மேல் விளக்கங்களைப் கொடுத்து மனுதர்மமாக்கி மக்களை வழிகெடுப்பார்கள்.

அல்குர்ஆனில் அற்பமான மனித அறிவுக்கு எட்டாத மறைவான விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் முறையான பகுத்தறிவுக்குப் பொருத்தமற்ற விஷயங்களைப் பார்க்க முடியாது. அல்குர்ஆனைப் படித்துப் பார்த்த நாத்திகப் பகுத்தறிவாளர்களில் சிலர் அதில் அறிவுக்குப் பொருந்தாத விஷயங்கள் இருப்பதாக வாதிடலாம். மனு தர்மத்தை இஸ்லாத்தில் புகுத்தி மதமாக்கிய முஸ்லிம் மதப் புரோகிதர்கள் கூறுவதுதான் அல்குர்ஆனில் இருக்கிறது என்ற தவறான கண்ணோட்டத்துடன் நாத்திகர்கள் அல்குர்ஆனை அணுகுவதால் இந்தத் தப்பெண்ணம் ஏற்படுகிறது. அல்குர்ஆனை முறையாக நடுநிலையோடு உள்வாங்கி சிந்தித்து அவர்கள் சொல்லுவதில்லை. நுனிப்புல் மேய்ந்துவிட்டு சொல்லும் கருத்தே அது. காரணத்தை ஒரு உதாரணம் மூலம் விளங்கலாம்.

ஒரு பாத்திரம் நிறைய சாராயம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அப்பாத்திரத்தில் தூய்மையான பாலை ஊற்றினால் அப்பாத்திரம் அப்பாலை கொள்ளுமா? கொள்ளாது; அது வழிந்து வெளியேறிவிடும். உள்ளே சென்றதும் சாராயத்துடன் கலப்படமாகி சாராயமாகத்தான் இருக்கும். பாலாக ஒரு போதும் இருக்காது. இதுபோல் இந்த நாத்திகர்களின் உள்ளத்தில் கடவுள் மறுப்புக் கொள்கை நிறைந்து போயிருக்கும் நிலையில், புரோகிதர்கள் கற்பனை செய்துள்ள பொய்க் கடவுள்களை விட்டு வேறுபட்டுள்ள உண்மையான, அனைத்தையும் படைத்த ஒரே ஒரு இறைவனை ஏற்கும் நிலையில் நாத்திகர்களின் உள்ளம் எப்படி இருக்கும்?

ஆத்திரத்தோடு அணுகினால் சரியும் தவறாகப்படும். அனுதாபத்தோடு அணுகினால் தவறும் சரியாக்கப்படும். இது இயற்கை நிலை. கடவுள் மறுப்பக் கொள்கை வெறியோடு – ஆத்திரத்தோடு அல்குர்ஆனை படிப்பவர்களுக்கு அதில் தவறுகள் இருப்பதாகவே படும். இது அவர்களின் அணுகு முறையிலுள்ள கோளாறே அல்லாமல் அல்குர்ஆனிலுள்ள கோளாறு அல்ல. மனிதக் கரங்களால் செதுக்கப்பட்டு மனிதக் கற்பனையால் கடவுளாக மதித்து வணங்குகின்றவர். பெரிய அறிவாளியாக இருந்தாலும், அது வெறும் சிலைதான்; கடவுள் அல்ல என்று கூறினால் அதை ஏற்றுக் கொள்கிறாரா? இல்லையே! காரணம் அந்தச் சிலை கடவுள் தான் என்ற எண்ணம் அவரது உள்ளத்தில் நிறைந்திருப்பதால், அதற்கு மாற்றமான கருத்து அவரது உள்ளத்தின் உள்ளே செல்வதாக இல்லை. இது இயற்கை நிலை.

அந்த ஒரே இறைவன் தனது தூதர்களாக மெத்தபடித்த மேதைகளைத் தேர்ந்தெடுக்கவில்லை. மாறாக ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த படிப்பறிவற்ற சாதாரணமாக இருந்தவர்களையே தூதர்களாகத் தேர்ந்தெடுத்தான். காரணம் அவர்களின் உள்ளங்கள் காலியாக இருந்ததால் இறையறிவிப்புகளை அப்படி ஏற்று, அவற்றில் கூடுதல் குறைவு செய்யாமல் அப்படியே மக்களிடம் எடுத்துச் சொல்லும் எதார்த்த நிலையைப் பெற்றிருந்ததுதான்.

எனவே நாத்திகப் பகுத்திறிவாளர்கள் தங்களின் உள்ளங்களில் நிறைந்து காணப்படும் ஓரிறை மறுப்புக் கொள்கையை அல்குர்ஆனை படிக்கும் போதாவது அகற்றி விட்டு, அல்குர்ஆனை நடுநிலையோடு படித்துப் பார்ப்பார்களேயானால் அதிலுள்ள மறுக்க முடியாத உண்மைகள் தெரிய வரும்.

ஒரு முன்மாதிரி : டாக்டர் மாரிஸ் புகைல் என்பவர் ஒரு கிறிஸ்தவ திரியேகத்துவக் கொள்கை அவரது உள்ளத்தில் நிறைந்து காணப்பட்டது. ஆயினும் பைபிளை ஆராய்ந்ததுடன் அல்குர்ஆனையும் ஆராய்ந்தார். பைபிளில் காணப்படும் விஞ்ஞானத்திற்கு முரண்பட்ட அனைத்து விஷயங்களையும் பட்டியலிட்டதோடு, அது போல் விஞ்ஞானத்திற்கு முரண்பட்ட ஒரு விஷயம் கூட அல்குர்ஆனில் இல்லை என்பதைக் கண்டறிந்து ஆச்சரியப்பட்டார். யேசுவுக்கு (ஈசா) அருளப்பட்ட இன்ஜீல் (பைபிள்) மனிதக் கரம்பட்டு மாசுபட்டுவிட்டதால், அதில் அன்றைய மூட நம்பிக்கைகள் அனைத்தும் நுழைக்கப்பட்டு மனுதர்மமாகி விட்டது. ஆயினும் அல்குர்ஆன் இறக்கப்பட்ட காலகட்டத்தில் விஞ்ஞானம் பற்றி பல மூட நம்பிக்கைகள் மக்களிடையே காணப்பட்டாலும், அவற்றை அல்குர்ஆனில் நுழைத்து அதை மாசுபடுத்தி – மனு தர்மமாக்க வழி இல்லாமல் போய்விட்டது.

அல்குர்ஆன் இறைவனால் அருளப்பட்டதுடன், அது அந்த இறைவனால் மனிதக்கரம்பட்டு மனுதர்மம் ஆகாமல் பாதுகாக்கப்பட்டதால், அதிலுள்ள பல விஞ்ஞான உண்மைகளை இன்று மனிதன் கண்டு பிடித்து வெளியிடுகிறான். அல்குர்ஆன் அந்த ஒரே இறைவனின் கலாம் – சொல்; விஞ்ஞானம் அந்த ஒரே இறைவனின் ஃபிஅல் – செயல். எனவே இறைவனின் சொல்லும் – செயலும் ஒரு போதும் முரண்படாது என்ற பேருண்மையைக் கண்டறிந்து இஸ்லாத்தைத் தழுவினார்.

அவர் ஆங்கிலத்தில் எழுதிய “THE BIBLEE THE QURAN AND SCIENCE” என்ற நூல் தமிழில் “விஞ்ஞான ஒளியில் பைபிளும் குர்ஆனும்” என்றும் வந்துள்ளது. அதைப் படித்துப் பார்ப்பவர்கள் 1450 ஆண்டுகளுக்கு முன்னர் மனித அறிவுக்கே எட்டாத விஞ்ஞான உண்மைகளை வெளிப்படுத்துவதாக இருந்தால், அது ஒரே இறைவனால் அருளப்பட்டதாக மட்டுமே இருக்க முடியும் என்ற உண்மையை விளங்கிக் கொள்ள முடியும்.

கோபதாபமோ, விருப்பு வெறுப்போ, ஆத்திரமோ, அனுதாபமோ இல்லாமல் நடுநிலையோடு அல்குர்ஆனைப் படித்து அதிலுள்ள கருத்துக்களை உய்த்து உணர்கிறவர்கள், அது மனித அறிவு கொண்டு எழுதப்பட்டதல்ல; மனிதனைப் படைத்த ஒரே இறைவனால் இறக்கியருளப்பட்ட, மனித வாழ்க்கை நெறிநூல் என்பதை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். அவர்களே பாக்கியசாலிகள்.

இன்று நடைமுறையில் இருக்குகம் ஜனநாயகமோ, கம்யூனிஸமோ, இதர எந்த சித்தாந்தமோ, கொள்கையாக இருந்தாலும் அவை அனைத்தும் மனிதக் கற்பனையில் உதித்தவையே. மனுதர்மத்திற்கு உட்பட்டவையே. அவை பக்க சார்புள்ளவையாகத் தான் இருக்க முடியும். நடுநிலையோடு மனித சமுதாயம் முழுமைக்கும் நீதி வழங்குவதற்காக ஒரு போதும் இருக்க முடியாது. மனிதனையும், மற்ற அனைத்துப் படைப்புகளையும் படைத்து நிர்வகித்து வரும் அந்த ஒரே இறைவன் மனித சமுதாயத்திற்கு அமைதியையம், சாந்தியையும் பெற்றுத் தரும் வாழ்க்கை நெறியை விவரமாக விளக்கும் அல்குர்ஆனைப் பற்றிப் பிடித்து, அதிலுள்ளவற்றை உள்ளது உள்ளபடி எடுத்து நடப்பதால் மட்டுமே உலகில் நீதி நிலைநாட்டப்படும்.

மதப் புரோகிதர்கள் பின்னால் சென்று அவர்கள் தங்களின் சுயநலனுக்காக இறைவனின் பெயரால் கற்பனை செய்துள்ள மனுதர்ம அடிப்படையிலான கொள்கைகளை ஏற்று செயல்படும் ஹிந்து, பெளத்த, யூத, கிறிஸ்தவ, முஸ்லிம் சகோதரர்களே, மனிதக் கற்பனையில் உருவானபொய்க் கடவுள்களைக் காரணம் காட்டி, அனைத்தையும் படைத்த ஒரே இறைவனையும் மறுத்து, டார்வின், ரஸ்ஸல், பெரியார், அண்ணா, கலைஞர் போன்றவர்களின் மனிதக் கருத்துக்ககளான மனுதர்ம அடிப்படையிலான கொள்கைகளை ஏற்று செயல்படும் நாத்திக சகோதரர்களே, நீங்கள் இரு சாரரும் அழிவுப்பாதையில் வழிகேட்டில் சென்று கொண்டிருக்கிறீர்கள் என்பதை மெய்யாக அறிந்து கொள்ளுங்கள். மனித வெற்றிக்கு, ஈடேற்றத்திற்கு மனிதனே சட்டங்கள் அமைத்து அதன்படி நடந்து கரை காண முடியவே முடியாது. அனைத்துலகையும், மனிதனையும், மற்றும் படைப்புகளையும் படைத்த இணை, துணை இல்லாத, எவ்வித தேவையும் இல்லாத அந்த ஒரேயொரு இறைவனின் இறுதி வழிகாட்டல் நூல் அல்குர்ஆனை ஏற்று அதில் உள்ளதை உள்ளபடி சுயவிளக்கமோ, மேல் விளக்கமோ இல்லாமல் நடைமுறைப்படுத்துவது கொண்டு மட்டுமே இவ்வுலகம் இழந்துவிட்ட அமைதி, சாந்தி, சமாதானம் இவற்றை மீண்டும் நிலை நாட்ட முடியும் என்பதை உணர முன் வாருங்கள்.

உலகில் தோன்றிய பல்லாயிரக்கணக்கான இறைதூதர்கள், மக்களுக்குப் போதித்தது அககிலத்தையும் படைத்த ஓரிறைவனைத் தவிர வேறு தெய்வம் இல்லை என்பதேயாகும். ஆனால் தூய வாழ்க்கை நெறியை மதமதாக்கி – அதைப் பிழைப்பாக்கி, வயிறு வளர்க்கும் அனைத்து தரப்பு மத குருமார்களின் கற்பனையில் உண்டானவைதான் பல வடிவங்களிலுள்ள பொய்க் கடவுள்கள். ஓரிறைவனை நெருங்கச் செய்வதாகவும், அந்த இறைவனிடம் பரிந்து பேசுவதாகவும் கற்பனை செய்துள்ள துணைக் கடவுள்கள். இந்த புரோகிதர்களின் கற்பனை கடவுள்களை ஒழிக்க முற்பட்ட நாத்திக சகோதரர்கள் உண்மையான ஒரே ஒரு கடவுளையும் மறுப்பது அவர்களின் அறியாமையாகும். பகுத்திறிவை முறையாகப் பயன்படுத்தாமல், ஐயறிவுக்குள் கட்டுண்டவர்கள் அவர்கள்.

மனிதனைப் படைத்த இறைவன் அவனுக்குரிய வாழ்க்கை நெறி முறைகளைக் காலத்திற்குக் காலம் தனது தூதர்கள் மூலம் கொடுத்துக் கொண்டே இருந்தான். ஆனால் முன்னர் கொடுக்கப்பட்ட வழிகாட்டல் அறிவிப்பகள் முழுமையாகாமல் தற்காலிகமானவையாக இருந்ததால் அவை உடனுக்குடன் பதிந்து பாதுகாக்கப்படவில்லை. இறைவன் அவ்வாறு கட்டளையிடவில்லை, எனவே அவை அனைத்தும் அந்த இறைத் தூதர்களுக்குப் பின்னால், இந்தப் புரோகிதர்களின் கரம்பட்டு மாசடைந்து அவற்றின் தூய நிலையை இழந்து விட்டன. அவை இறக்கப்பட்ட மூல மொழிகளும் நடைமுறையில் இல்லாமல் அழிந்து விட்டன. மேலும் இந்திய அரசாலேயே முன்னர் வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டது போல், இறைவனும் முன்னைய வழி காட்டல் நூல்களையெல்லாம் ஆக்கி, உலகம் அழியும் வரை இறுதி வழிகாட்டல் நூல் இதுதான் என அனைத்துலக மக்களுக்குமாக “அல்குர்ஆனை” நெறிநூலாக ஆக்கித்தந்துள்ளான். புரோகிதர்கள் சொல்வது போல் அல்குர்ஆன் வேதமோ, நடைமுறைச் சாத்தியமில்லா வேதாந்தமோ அல்ல; மாறாக அது நேர்வழி காட்டல் நூலே ஆகும்.

மனிதச் சட்டங்கள் மனிதனை மனிதனாக வாழ வைக்காது மிருகமாகவே வாழ வைக்கும். மனிதனைப் படைத்த இறைவன் வகுத்தளித்த சட்டமே மனிதனை மனிதனாக வாழ வைக்கும் என்பதை உலக மக்கள் அனைவரும் உணர்ந்தால் மட்டுமே உலகம் உய்ய வழி பிறக்கும்.

{ 7 comments… read them below or add one }

ABU EASA December 29, 2015 at 9:34 pm

Maa Sha’a Allah! Well Explained

Reply

S BILAL AHMED January 1, 2016 at 12:50 pm

MASHA ALLAH !!!!!!!!!!!!!!!!!!
arumaiyaana katturai …………… naathigavaadhigalin ariyaamaiyai azhagiya udharanagaludanum madha purogidhargalin suyanala attulingalaiyum ……………… velichcham pottu kaatti ulladhu

Reply

ரமேஷ் March 9, 2016 at 4:38 pm

Thank you for kindly good information.

Reply

chandra kumar April 8, 2016 at 2:19 am

அல்குர்ஆன் இறைவனால் அருளப்பட்டது என்பதற்கு என்ன ஆதாரம்? முகமது மட்டுமே இறைவனால் அனுப்பட்டவரா? மற்றவர்கள் பொய்யர்களா? இயேசுவும் ஒரே நபி தானே? அவரை ஏற்பதில் என்ன பிரச்சினை?அவர் வாக்குகள் மட்டும் பொய் முகமது வாக்குகள் மட்டும் மெய்யா?

Reply

Siraj May 12, 2016 at 4:35 pm

Dear Mr.Ramesh

Yes Jesus pease be upon him also prophet. and He is not muslim who muslim not accepeted Jesus as prophet of God

Jeasus name has been mentioned in Holy quran more than 24 times as he is prophet of Goad Almighty. But Mohammed pease be upon him at only two times !!!!

Reply

Siraj May 12, 2016 at 4:29 pm

Masha Allah , Jazakallkeir

Reply

மின் நூலகம் June 8, 2018 at 3:29 am

Good article. It is best to add the view of Hindus who supports and oppose.

Reply

Leave a Comment

Previous post:

Next post: