மனிதரில் ஏன் இத்தனை நிறங்கள்?

Post image for மனிதரில் ஏன் இத்தனை நிறங்கள்?

in அறிவியல்

எஸ்.ஹலரத் அலி. திருச்சி-7. (+91 9965361068).

வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும், உங்களுடைய மொழிகளும், நிறங்களும் வேறுபட்டிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும். இதில் அறிவுடையோருக்கு நிச்சயமாக பல அத்தாட்சிகளிருக்கின்றன.
– அல்குர்ஆன்.30:22.

மற்றொரு வசனத்தில், “ இவ்வாறே,மனிதர்கள், விலங்குகள், கால் நடைகள் ஆகியவற்றின் நிறங்களும் பலவிதமாய் உள்ளன. உண்மையில் அல்லாஹ்வின் அடிமைகளில் ஞானமுடையோர் மட்டுமே அவனுக்கு அஞ்சுகிறார்கள்….. – அல்குர்ஆன்.35:28.

அல்லாஹ்வுடைய படைப்புகள் அனைத்தும் பல நிறங்களில் உள்ளன. இந்த நிற வேறுபாடு ஏன் எதற்கு என்பதற்கு அல்லாஹ் கூறும் காரணம், இது ஒரு அத்தாட்சியாக, அவனது சான்றுகளில் ஒன்றாக இருப்பதாகக் கூறி, சிந்திக்கச் சொல்லுகின்றான். மனிதன் ஆதியில் கருப்பான களிமண்ணிலிருந்தே படைக்கப்பட்டான். ஆதி மனிதனின் நிறம் கருப்பு என்பதே ஆய்வாளர்களின் முடிவு.

ஓசை தரக்கூடிய கருப்பான களிமண்ணால் மனிதனை நிச்சயமாக நாமே படைத்தோம். – அல்குர்ஆன். 15:26
.

ஒரு ஹதீஸில் உலகத்திலுள்ள பல நிறங்களுடைய மண்ணைக் கொண்டு வந்து ஆதம் (அலை) அவர்களைப் படைத்தாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ் ஆதமை பூமி முழுவதும் திரட்டப்பட்ட மண்ணின் ஒரு கையளவிலிருந்து படைத்தான்.  எனவே ஆதமின் மக்கள் பூமியின் நிறம் மற்றும் தன்மைக்கு ஏற்றவாறு அமைகின்றனர். அவர்களில் சிலர் கருப்பாகவும், அவர்களில் சிலர் வெள்ளையாகவும், அவர்களில் சிலர் சிவப்பாகவும், சிலர் இரண்டும் கலந்து உள்ளனர். அவர்களில் சிலர் கெட்ட குணமுடையோராகவும், சிலர் மென்மையான குணமுடையோராகவும், சிலர் கடின சித்த முடையோராகவும், சிலர் நடு நிலையிலும் உள்ளனர்.
அறிவிப்பவர்: அபூ மூஸா (ரலி) நூல்; அஹ்மத்.

அறிவியல் ரீதியாக கருப்பு என்பது ஒரு நிறமல்ல. எல்லா நிறங்களின் கூட்டுக்கலவையே கருப்பு நிறமாகிறது. கருப்பு நிற களிமண் சத்தில் படைக்கப்பட்ட ஆதம் (அலை) அவர்களின் உடல் அணுக்களில் (Genes) அவர் சந்ததிகளுக்கான எல்லா நிறங்களும் உள்ளடக்கப்பட்டே படைக்கப்பட்டிருக்கிறார்கள். மனிதர்களின் வாழ்விடச் சூழலின் காரணமாக தோலின் நிறம் மாறுகிறது. ஆதம் (அலை) அவர்களின் உடல் நிறம் கருப்பாகத்தான் இருக்கும் என்று நாம் குறிப்பாக சொல்ல முடியாது. காரணம் அவர் படைக்கப்பட்ட களிமண்ணைக் குறிப்பிடும் போது…

சுட்ட மண் பாண்டங்களைத் போல் (தட்டினால்) சப்தமுண்டாகும் களிமண்ணிலிருந்து  அவன் (ஆதி) மனிதனைப் படைத்தான். – அல் குர்ஆன். 55;14.

மண் பாண்டங்களை உருவாக்கும் குயவர்கள் களிமண்ணை குழைத்து பானைகளாக்கி நெருப்பில் சுட்ட பின்பு அதன் நிறம் சென்னிறமாகி விடுகிறது. வீடுகட்டும் செங்கல்லும் இவ்வாறே செம்மை நிறம் பெறுகிறது. ஆதம் என்னும் ஹுப்ரு சொல்லுக்கு சிவப்பு செம்மை மண் என்ற பொருளுமுண்டு.ஆகவே ஆதம் (அலை) அவர்கள் சிவந்த நிறத்திலும் இருக்கலாம். அல்லாஹ் அறிந்தவன். மேலும் அவர்கள் பல நிற மண்ணிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Skin Colour Map (Indigenous People) | GRID-Arendalஇந்தியர்களாகிய நாம் மாநிறத்தில் இருக்கிறோம். ஆங்கிலேயர்கள் வெளிர் வெள்ளை நிறத்தில் இருக்கிறார்கள், ஆப்பிரிக்க மக்கள் கருப்பு நிறத்திலிருக்கிறார்கள். மனிதர்களின் நிறம் வேறுபடுவதற்கு பல்வேறு காரணிகள் சொல்லப்படுகின்றன. நம் மூதாதைகளின் மரபணுக்களும் ஒரு காரணமாக இருக்கலாம். நம் தோலில் மெலனின் என்ற நிறமி உள்ளது. இதுதான் நிறத்திற்கு காரணமாகிறது. பொதுவாக மனிதர்களைப் பொருத்தவரை அவர்கள் வாழும் நிலப்பகுதிகளைப் பொறுத்து நிறம் வேறுபடுகிறது

.பூமியின் வெப்ப மண்டலப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கருப்பாகவும், குளிர் நிலப்பகுதிகளைச் சேர்ந்தவர்கள் வெண்மையாகவும் உள்ளனர். அவ்வாறே பனிப் பிரதேசத்தில் வாழும் மிருகங்களான புலி,கரடியும் வெண்மை நிறத்திலேயே இருக்கின்றன. வெப்ப மண்டலத்தை சேர்ந்த தமிழகத்தின் பூர்வ குடிகள் கருப்பு நிறம் கொண்டவர்களாகவே இருக்க முடியும். அந்த அடிப்படையில் தமிழர்களின் நிறம் கருப்புதான்.

Our skin color is determined by a pigment called melanin, and while everyone has melanin (both fair and dark-skinned people), it comes in different forms and ratios. The two forms of melanin are called eumelanin and pheomelanin. Eumelanin comes in primarily brown and black hues, while pheomelanin appears as red and yellow hues. It is produced by a specialized group of cells called melanocytes.

அறிவியல் ரீதியாக, மனிதர்களின் தோலின் நிறத்தை நிர்ணயிப்பது தோலின் மேலுள்ள “மெலனின்” என்ற நிறமிகள் (Pigment) தான். மெலனின் அதிகம் உள்ளவர்கள் கருப்பாகவும் மெலனின் குறைவாக உள்ளவர்கள், வெளுப்பாகவும் இருப்பார்கள், தோலின் கீழ் அடுக்கிலுள்ள “மெலனோசைட்” ( Melanocytes) என்னும் செல்கள்தான் மெலனினை உற்பத்தி செய்கிறது.

ஆப்பிரிக்கா கண்டத்தில் தோன்றிய ஆதி மனிதர்கள், ஐம்பதினாயிரம் வருடங்களுக்கு முன்பு ஐரோப்பிய நிலப்பரப்புகளுக்கு இடம்பெயர்ந்த போது கருப்பு நிறம் கொண்டவர்களாகவே இருந்தனர். பின்பு தோராயமாக எட்டாயிரம் வருடங்களுக்கு முன்புவரை அவர்கள் கருப்பு நிறம் கொண்டவர்களாகவே வாழ்ந்ததாகவும் பின்பு வெப்பம் குறைவு குளிர் அதிகம் காரணமாக நிறம் வெளுக்கத்துவங்கி வெண்மையாக மாறியதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஆதி குடிகலான இங்கிலாந்து மக்களின் நிறம் கருப்பு என்றும், அவர்களின் விழிகள் நீல நிறத்தில் இருந்ததாக ஒரு ஆய்வு சொல்கிறது.1903 ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட பிரிட்டனின் பழைமையான எலும்புக் கூடான, செட்டர் இன மனிதனின் எலும்புக் கூட்டை டிஎன்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்தியது லண்டன் நேச்சுரல் ஹிஸ்டரி அருங்காட்சியகம். பின் லண்டன் பல்கலைகழக கல்லூரி ஆய்வாளர்கள் இதனை மரபணு பகுப்பாய்வுக்கு உட்படுத்தி அதன் முக வடிவத்தை மீட்டெடுத்தார்கள்.

கற்கால பிரித்தானியர்கள் கருமையான சுருண்ட முடிகளைக் கொண்டிருந்தனர்.. அவர்களின் விழி நீல நிறத்திலும், தோல் கருப்பு நிறத்திலும் இருந்திருக்கிறது. இப்போது இருக்கும் வெளிர் நிறம், மத்திய கிழக்கிலிருந்து பிரிட்டனுக்கு 6000 ஆண்டுகளுக்கு முன் புலம்பெயர்ந்த மக்களினால் வந்திருக்கலாம். எப்படி விவசாயிகள் வெளிர் நிறமாக பரிமாணம் அடைந்தார்கள் என்று யாருக்கும் தெரியாது. வைட்டமின் டி குறைபாட்டினால் அவர்கள் வெள்ளை நிறத்திற்கு மாறியிருக்கலாம். – பால் ரின்கன் – 08 பிப்ரவரி.2018, bbc.com.

ஒரு மனிதனின் நிறத்தை வைத்து அவனைப் அடிமைப்படுத்தும் அவலம் அன்றும் இன்றும் தொடரவே செய்கிறது. இன்றைய வெள்ளையர்கள் சுமார் பத்தாயிரம் வருடங்களுக்கு முன்பு வரை நாகரீகம் இல்லா காட்டுமிராண்டியாய், வேட்டை சமூகமாக வாழ்ந்தவர்களே! இவர்களுக்கு விவசாயத்தை கற்றுக் கொடுத்தவர்கள் ஆப்பிரிக்க மத்திய கிழக்கிலிருந்து வந்த கருப்பு மனிதர்கள்தான்.

இன்றைய வெள்ளை மனிதனுக்கும் கருப்பு மனிதனுக்கும் மூதாதையர் ஒருவரே! மனிதக் குழுக்கள் இடம்பெயர்ந்து பல்வேறு தட்ப வெப்பச் சூழல் நிலைகளில் வாழ்ந்து வந்ததும் அவர்களுக்குள்ளேயே பலதலைமுறைகளாக இனப்பெருக்கம் நடை பெற்றதுமே நிறம் நிலை பெறக் காரணமாயிற்று. ஆகவே இருவரும் ஒரு தாய் தந்தையிலிருந்து பிறந்தவர்களே என்ற குர்ஆனின் கருத்தை இன்றைய நவீன தொல்லியல் மற்றம் மரபியல் ஆய்வாளர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். நிறத்தின் காரணமாக வேறுபாடு கற்பிக்க முடியாது நிறம் என்பது இயற்கையின் தகவமைப்பு (ADAPTATION) என்ற நிலையில், கருப்பு நிறம் கொண்டவன் தாழ்ந்தவனாகவும், வெள்ளை நிறம் கொண்டவன் உயர்ந்தவனாகவும் எப்படி மாறினான்?

வெள்ளை மனிதர்கள் வசிக்கும் ஐரோப்பிய நாடுகள், வளர்ந்த நாடுகளாக இருப்பதற்கும், கருப்பின மக்கள் வசிக்கும் ஆப்பிரிக்க நாடுகள் வளர்ச்சியில் பின் தங்கியிருப்பதற்கும், மனிதர்களின் நிறம் எவ்விதத்திலும் காரணம் இல்லை. பல்வேறு வரலாற்று நிகழ்வுகளின் அடிப்படையில் வெள்ளையர்களின் வளர்ச்சி சாத்தியமாயிற்று. இதனை நிறத்துடன் பொருத்தி, வெள்ளை நிறம் கொண்டவர்கள் அறிவும் ஆற்றலும் பெற்றவர்கள் என்ற கருத்தியல் திட்டமிட்டு நிலை நிறுத்தப்பட்ட ஒன்றாகும். மனிதர்களின் நிற வேறுபாட்டை இஸ்லாம் முற்றாக வெறுக்கிறது.

.இந்த உண்மையை அல் குர்ஆன் தெளிவாகக் விளக்குகிறது.

மனிதர்களே! உங்களை ஓர் ஆன்மாவிலிருந்து படைத்த உங்களின் இறைவனுக்கு நீங்கள் அஞ்சுங்கள்.மேலும், அதே ஆன்மாவிலிருந்து அதனுடைய துணையை அவன் உண்டாக்கினான். மேலும், அவை இரண்டின் மூலம் உலகில் அதிகமான ஆண்களையும், பெண்களையும் பரவச் செய்தான்…. – அல் குர்ஆன்.4:1, 49:13.

இதைத்தான் நபி (ஸல்)அவர்கள் தனது இறுதி ஹஜ்ஜான “ஹஜ்ஜதுல் விதா”  பேருரையில் தெளிவாகக் கூறினார்கள்.

“மானிடரே! நிச்சயமாக உங்களை ஒரே ஆண் ஒரே பெணணிலிருந்துதான் இறைவன் படைத்தான். மனித சமுதாயம் அனைத்தும் ஆதமுடைய சந்ததிகளே! ஆதமோ மண்ணிலிருந்து படைக்கப்பட்டவர். எனவே பிறப்பு,செல்வம் ஆகியவற்றால் எவரும் உயர்ந்தவரோ தாழ்ந்தவரோ இல்லை ஒரு அரபி, அரபியல்லாதவனை விட உயர்ந்தவன் அல்லன். அரபி அல்லாத ஒருவன் அரபியனை விட உயர்ந்தவன் அல்லன். ஒரு வெள்ளையன் கருப்பனை விட உயர்ந்தவனல்லன், ஒரு கருப்பன் வெள்ளையனை விட உயர்ந்தவனல்ல. மனிதர்களுக்குள்ள உயர்வெல்லாம் அவனுடைய இறை பக்தியை பொறுத்தே அமைகிறது.”

மக்களே! எல்லா மனிதர்களும் இரண்டே பிரிவினராக பிரிகிறார்கள். ஒருவர் நல்லவர். இறையச்சமுள்ளவர். அவரே இறைவனின் பார்வையில் கண்ணியமிக்கவர். மற்றொருவர் தீயவர், அவன் அல்லாஹ்வின் பார்வையில் தீயவன். துர்பாக்கியவான். அவன் அல்லாஹ்வின் பார்வையில் இழிவுக்குரியவன். மனிதர்கள் அனைவரும் ஆதமின் மக்களே ஆவார். அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களை மண்ணிலிருந்து படைத்தான். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
திர்மிதீ, பைஹகி.

தோலின் நிறத்தைக்கொண்டு மனிதர்களை பாகுபடுத்துவதை இஸ்லாம் முற்றாக நிராகரிக்கிறது. நிற வேறுபாட்டை தன் காலில் போட்டு மிதிக்கிறது. எந்தளவு என்றால்…

உலர்ந்த திராட்சை போன்ற (சுருங்கிய) தலையுடைய அபிசீனிய கருப்பு நிற அடிமையொருவர் உங்களுக்கு தலைவராக்க ஆக்கப்பட்டாலும், அவரின் சொல்லைக் கேளுங்கள்.; அவருக்கு கீழ்ப்படியுங்கள். என்று நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். – புஹாரி.7142.

கருப்பு நிறமுடைய மனிதர்களிடத்தில் அதிகளவில் மெலனின் என்னும் நிறமி அணுக்கள் இருப்பதால்,இவர்களை சூரிய ஒளியில் இருந்து வரும் புற ஊதாக்கதிர்கள் தாக்குவதில்லை. வெள்ளைத்தோல் மனிதர்களிடத்தில் மெலனின் நிறமிகள் குறைவாக இருப்பதால் இவர்கள் சூரிய புற ஊதாக்கதிர்களால் பாதிக்கப்படுகின்றனர். இது போலவே பறவைகளிலும் கருப்பு நிறமுடைய பறவைகளின் இறக்கைகள், சூரிய ஒளியை அதிகமாக கிரகித்துக் கொண்டு வெப்பமடைவதால் அவை வானில் எளிதாக பறப்பதற்கு உதவுவதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. கருப்பு நிறத்துக்கு ஒளியை உட்கிரகிக்கும் ஆற்றல் உள்ளது. ஏனெனில் அனைத்து நிறங்களின் கலவையே கருப்பு!

Dark feathers may help birds fly more efficiently. They heat up the animals’ wings and the surrounding air, which might help increase airflow over the wing.

Read more: https://www.newscientist.com/article/2210970-dark-feathers-give-birds-hot-wings-that-may-save-energy-during-flight/#ixzz5uxIXGT8M

மனிதர்கள் பல நிறங்களில் இருப்பதுபோல அவர்கள் பேசும் மொழியும் வேறுபடுகிறது. மனிதர்கள் வாழும்காலம் குறைவு. ஆனால் அவர்கள் பேசும் மொழி தொன்று தொட்டு வருகிறது. மொழியை நாம் உருவாக்கவில்லை, ஆனால் பயன்படுத்துகிறோம். மனித உறவுகள் வலுப்பட பேச்சு உதவுகிறது. உறவை வலுப்படுத்த உதவும் கருவியே மொழி,

மொழி எப்படித் தோன்றியது, இயற்கையாக தோன்றியது என்றால் உலக மக்கள் அனைவரும் ஒரே மொழியைத்தான் பேசிக்கொண்டிருக்க வேண்டும். மக்கள் பிறக்கும் விதம் ஒன்று போல் இருந்தாலும் மனிதன் பேசும் பேச்சில் மொழியில் மட்டும் ஒற்றுமை இல்லை. இடத்திற்கு இடம், இனத்திற்கு இனம் வேறுபடுகிறது, காரணம்…

மொழி மக்களின் அடையாளம், ஓர் இனத்தவரைக் குறிக்கும் குறியீடு. மனிதரை இணைக்கும் உறவுக் சங்கிலி. மொழிக்கும் வளர்ச்சி உண்டு, மாற்றம் உண்டு, வீழ்ச்சியும் உண்டு. உலக மனிதர்கள் அனைவருக்கும் ஒன்றுபோலவே உடலமைப்புகள், உடலுறுப்புகள் இருக்கின்றன. உதாரணமாக,அனைத்து மனிதர்களுக்கும் மூளை பொதுவாகவே உள்ளது, பேசுவதற்கான நாக்கும் பொதுவாகவே உள்ளது சொற்களை மொழிவதற்கு உதவும் உதரவிதானம் என்று சொல்லப்படும் Vocal chords எல்லாமே ஒன்றாகவே உள்ளது. ஆயினும் ஒவ்வொரு பிரதேச மனிதனும் வெவ்வேறு மொழியில் பேசுகின்றான்.

இதைத்தான் இறைவன் தனது அத்தாட்சி என்றும், தன் வல்லமைக்கு சான்றாகவும் கூறுகின்றான்.

வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும், உங்களுடைய மொழிகளும், நிறங்களும் வேறுபட்டிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும். இதில் அறிவுடையோருக்கு நிச்சயமாக பல அத்தாட்சிகளிருக்கின்றன.
– அல்குர்ஆன்.30:22.

சிந்திக்கக் கூடிய அறிவுள்ள மனிதனுக்கு, இதில் நிச்சயமாக பல அத்தாட்சிகள் உள்ளதாகக் கூறி ஆய்வு செய்யச் சொல்கிறான். மனிதன் விந்துத் துளியிலிருந்தே குழந்தைகள் உருவாகிப் பிறக்கின்றன. ஒரே துளி நீர்தான் ஆயினும் பிறக்கும் குழந்தைகள் நிறம் ஒன்று போல இருப்பதில்லை. ஒரு தாய் தந்தைக்கு பிறக்கும் குழந்தைகள் அனைத்தும் ஒரே நிறத்தில், பிறப்பதில்லை. கருப்பு,சிவப்பு,வெளுப்பு இரண்டும் கலந்த மாநிறம் என்று பல நிறங்களில் பிறக்கின்றன.

இதற்குக் காரணம்.,அக்குழந்தையின் மரபுவழி முன்னோர்கள் எவரேனும் அந்தநிறத்தில் இருந்திருப்பார்கள். (Skin colour genes) மரபியல் ஜீன்கள் வழி வழியாக அடுத்த தலை முறைக்கு நிற ஜீன்களை கடத்தும் போது, இப்படியான தாய் தந்தைக்கு இல்லாத புது நிறத்தில் குழந்தை பிறப்பதுண்டு. இன்றைய நவீன மரபியல் ஆய்வுகள் இதை நிரூபிக்கின்றன.

பிறக்கும் குழந்தையின் நிற வேறுபாட்டிற்கு காரணமாகும் மரபியல் அறிவியலை 1400 ஆண்டுகளுக்கு முன்பே நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தி விட்டார்கள்.

ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “இறைத்தூதர் அவர்களே! (வெள்ளை நிறமுடைய) எனக்குக் கருப்பு நிறத்தில் ஒரு மகன் பிறந்துள்ளான்! (அவன் எப்படி எனக்குப் பிறந்தவனாக இருக்க முடியும்?) என்று கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள், “உன்னிடம் ஒட்டகம் ஏதேனும் உள்ளதா?” என்று கேட்டார்கள்.அதற்கவர், “ஆம்!” என்றார். நபி (ஸல்) அவர்கள், “அதன் நிறம் என்ன? “ என்று கேட்டார்கள். அவர், “சிவப்பு” என்று பதிலளித்தார்.

நபி (ஸல்) அவர்கள், “உன் ஒட்டகங்களிடையே சாம்பல் நிற ஒட்டகம் உள்ளதா?” என்று கேட்டார்கள். அவர், “ஆம்!” என்றார். நபி (ஸல்) அவர்கள், “(தன்னுடைய தாயிடம் இல்லாத) நிறம் அதற்கு மட்டும் எப்படி வந்தது?” என்று கேட்டார்கள்.அதற்கவர், “ அதன் (தந்தையான) ஆண் ஒட்டகத்தின் பரம்பரையிலிருந்து வந்திருக்கலாம்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், “ உன்னுடைய இந்த மகனும் உன் பரம்பரையிலுள்ள (மூதாதையாரின்) நிறத்தினைக் கொண்டிருக்கக் கூடும்” என்று கூறினார்கள்.
– அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) – புஹாரி.5305.

இவ்வாறே மனிதர்களிலும், ஊர்வனவற்றிலும், கால் நடைகளிலும், பல நிறங்கள் இருக்கின்றன; நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார்களில் அவனுக்கு அஞ்சுவோரெல்லாம் அறிஞர்கள்தான். நிச்சயமாக, அல்லாஹ் யாவரையும் மிகைத்தவன்;மிக மன்னிப்பவன். — அல்குர்ஆன். 35:28.

{ 2 comments… read them below or add one }

Mohamed Farook May 22, 2020 at 5:49 pm

👍

Reply

Mohamed Farook May 22, 2020 at 5:52 pm

Kindly post hadeedh number

Reply

Leave a Comment

Previous post:

Next post: