மனிதனின் வாழ்வுக்கு வழிகாட்டியாக சத்தியத்தையும், அசத்தியத்தையும் பிரித்தறிவிக்கும் தெள்ளத் தெளிவான ஒரு வேதமாக அல்குர்ஆனை முஸ்லிம்கள் ஏற்றிருக்கின்றனர். ஏன்? அல்குர்ஆன் மட்டுமே தன்னுடைய இமாம் என்று நம்பிக்கை கொள்வது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையுமாகும். அதாவது குர்ஆனை வழிகாட்டியாகவும் கொண்டு, அதன் போதனைப்படி நடப்பது ஒவ்வொரு முஸ்லிம்களின் கடமையாகும். அது பற்றி அல்லாஹ் குர்ஆனில் பின்வருமாறு கூறுகிறான். “உங்கள் இறைவனிடமிருந்து இறக்கி வைக்கப்பட்டுள்ளதையே பின்பற்றி நடங்கள். அவனல்லாது மற்ற எவரையும் பாதுகாவலராக ஏற்றுப் பின்பற்றாதீர்கள்.” (7:3)
அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூட தம் மனோ இச்சைப்படி மார்க்கத்தில் எதையும் செய்யவோ அல்லது கூறவோ இல்லை. அல்லாஹ்விடமிருந்து தங்களுக்கு வஹி மூலமாக அறிவிக்கப்படும் விஷயங்களை மட்டுமே மக்களுக்கு மார்க்கமாக போதித்து வந்தார்கள். நபி(ஸல்) அவர்களின் அன்றாட வாழ்க்கை முறை எப்படி இருந்தது என அன்னை ஆயிஷா(ரழி) அவர்களிடம் கேட்கப்பட்டபோது “அவர்கள் வாழ்க்கை அல்குர்ஆனாகவே இருந்ததென்று அவர்கள் கூறிய பதில் மிக முக்கியமான, யாவரும் நினைவில் கொள்ள வேண்டிய ஒன்றாகும். (கதாதா(ரழி), முஸ்லிம்)
மனிதன் இயல்புகளை நன்கு அறிந்த இறைவன், மனிதனின் இம்மை வாழ்வு சீராக, செழிப்பாக, இலகுவாக அமையவே அல்குர்ஆனை வழங்கியுள்ளான். நியாயமான ஆசைகளுக்கும் அறிவியல் முன்னேற்றத்திற்கும் தடையாக குர்ஆன் அமையவில்லை வரட்டு வேதாந்தமும், தத்துவமும் அதில் இல்லை.
“அல்குர்ஆனை நாம் விளங்குவதற்கு மிகவும் இலகுவாக்கியிருக்கின்றோம்” இதை சிந்திப்பவர்க் உண்டா? 54:17)
அல்குர்ஆனோடு தொடர்பு கொண்டால் எந்த ஒரு சாதாரண பாமரனும் அதனை மிகவும் இலகுவான முறையில் விளங்கிக் கொள்ள முடியும். அதனால்தான் அது இறக்கப்படும் பொழுது வாழ்ந்த மக்கள் எத்தகைய கல்வி அற்றவர்களாக இருந்தும் இலகுவாக விளங்கிக் கொண்டார்கள். ஆகவே கற்றவர்களுக்குத் தான் குர்ஆன் விளங்கும் என்ற கூற்று தவறானதாகும். அது புரோகித தொழில் நடத்துபவர்களால் கட்டிவிடப்பட்ட கட்டுக்கதை. அது சாதாரண மக்களுக்கு விளங்காது என்ற தவறான நம்பிக்கையை மக்களிடம் நிலவச் செய்து விட்டால்தான் அதை வைத்துப் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்க முடியும் என்பது அந்த புரோகிதர்களின் திட்டமாகும். அல்குர்ஆனை வைத்து இந்தக் கூட்டம் அல்லாஹ்வும் அவனது தூதரும் அருவருக்கும்படியான எத்தனையோ செயல்களில் ஈடுபடுகின்றது.
மரித்தவர்களின் நன்மைக்காக ஓதுவது, கழுத்து, கை போன்ற அவயங்களில் தாயத்துகளைக் கட்டுவது, குர்ஆன் ஆயத்துக்களை எழுதிக் கரைத்து மக்களைக் குடிக்க வைப்பது, மந்திரம் செய்வது பேய் விரட்டுவது, பில்லி சூனியம் செய்வது, ஃபால் கிதாபு பார்ப்பது குறி பார்ப்பது, குர்ஆன் ஆயத்துக்களை வீடுகள், கடைகள் முதலிய கட்டிடங்களில் எழுதித் தொங்க விடுவது போன்ற எத்தனையோ மூடத்தனமாக வேலைகளைச் செய்து கூறுகின்றனர். திட்டமிட்டு இந்தத் தொழிலைச் செய்துவரும் இந்தக் கூட்டம், தங்கள் தொழிலுக்கு விளம்பரமாக இருக்க வேண்டும் என்பதற்காக பல கிதாபுகளை அரபு மொழியில் எழுதி வைத்தும் உள்ளது. இத்தகையவர்கள் தான் அல்குர்ஆனை அணுக விடாது மக்களை தடுத்து வந்துள்ளனர். குர்ஆனிலுள்ளது மக்களுக்கு விளங்கி விட்டால் தங்கள் வாயில் மண் விழுந்துவிடும் என்பது இவர்களின் அச்சம். இதனால் எப்போதும் கண்ணும் கருத்துமாக இருந்து கொண்டு மக்களைப் பார்த்து, இதற்கு கலைகள் பல கற்றிருக்க வேண்டும். உட்பொருள், வெளிபொருள் (லாஹிர், பாதின்) தெரிந்திருக்க வேண்டும் என்பன போன்ற பல நிபந்தனைகளைச் சொல்லி, மக்களை, குர்ஆனை விளங்க விடாமல் தடுத்து வந்துள்ளார்கள். இன்றும் தடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
தாங்களும் விளங்காது பிறரையும் விளங்க விடாது தடுத்து வருகின்றார்கள். குர்ஆனை தாங்களே விளங்கியவர்கள் என்று மக்களிடம் கூறி வருவதும், மக்களை நம்ப வைப்பதும் பொய், வாழ்க்கையில் மக்களுக்கு ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் பரிசாரம் குர்ஆனில் இருந்தும், அதை நாடுவது கிடையாது. மற்வர்களையும் அணுக விடுவதுமில்லை. மாறாக வேறு புத்தகங்களை (கிதாபுகளை)த்தான் நாடுவார்கள். அதுவும் தங்களின் பிழைப்புக்காக மனிதர்களால் எழுதப்பட்ட கிதாபுகளையே நாடுவார்கள். மக்களின் பிரச்சனைகளுக்கு அல்லாஹ்வின் வேதமான குர்ஆனிலிருந்தோ, சிலரின் அவரின் தூதருடைய வழிமுறைகளை அறிவிக்கும் ஹதீஸ்களிலிருந்தோ தீர்வு காண்பதென்பது அவர்களுக்கு கசப்பாகவே இருக்கிறது.
இவர்களிடம் மார்க்க சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தைப் பற்றிக் கேட்டால் கிதாபு பார்க்க வேண்டுமென்றே கூறுவார்கள். குர்ஆன், ஹதீது பார்க்க வேண்டுமென்று கூறவே மாட்டார்கள். ஏன்? இவர்கள் பழக்கப்பட்டதெல்லாம் கிதாபு பார்த்துத்தான். அதனால் இவர்களின் ஃபத்வாக்கள் குர்ஆன், ஹதீஸுக்குட்பட்டிருக்கிறதா? என்று பார்ப்பதில்லை. அப்படியானால் குர்ஆனும், ஹதீஸும் எதற்கு? அது இரண்டும் வாழ்க்கைக்கு சாத்தியப்படாதவைகள் தானே! அப்படித் தான் இவர்கள் திட்டமிட்டு மக்களை நம்ப வைத்து வந்துள்ளார்கள்.
இதன் விளைவுதான் ஒன்றுபட்டு ஒரே சமூகமாக, அதுவும்” உயிரோட்டமான சமூகமாக, முழு உலகிற்கும் முன்னோடிச் சமூகமாக சுய கவுரவமும், தன்னாதிக்கமும் உள்ள சமூகமாக, முழு உலகிற்கும் அறிவு ஒளி பாய்ச்சும் சமூகமாக இருந்த சமூகம், இன்று எத்தனையோ பிரிவுகளாகப் பிரிந்து சீரழிவதைக் காண்கிறோம்.
மார்க்கத்தின் பெயரால் இத்தனைப் பிரிவுகளா? என்ன விபரீதம் மத்ஹபுகளென்றும், தரீக்காக்களென்றும் எத்தனைப் பிரிவுகள் வேண்டும்? கொள்கை ரீதியாக, செயல் ரீதியாக, அரசியல் ரீதியாக எத்தனைப் பிரிவுகள்? இத்தனை பிரிவாலும் தங்கள் தங்கள் தரப்பை நியாயப்படுத்த எத்தனை ஆதாரங்கள் வேண்டும். தங்களுக்கு ஆதாரம் காட்ட எத்தனை கிதாபுகள் (புத்தகம்) வேண்டும். அத்தனையையும் தங்கள் கைகளாலேயே மனம்போன போக்கில் எழுதி வைத்தும் கொண்டார்கள். ஒவ்வொரு பிரிவாரும் தங்கள் தங்கள் தரப்பில் தான் நியாயமும், உண்மையும் இருக்கிறது என்றெண்ணி திருப்தி அடைந்து கொண்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு பிரிவாரும் தங்களிடமுள்ளதைக் கொண்டு சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.” (23:53)
ஆனால் இவர்கள் எந்தக் குர்ஆனை தங்களுடைய வேதப்புத்தகமாக ஏற்று நம்பிக் கொண்டிருக்கினரோ, அந்த குர்ஆன் நீங்கள் அல்லாஹ்வின் கயிற்றை இறுக்கமாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். உங்கள் (மார்க்கத்தில்) பிரிந்து பல பிரிவுகளாகி விடாதீர்கள். (3:103) என்று அறிவுரை கூறுகிறது. இந்த அறிவுரை ஏன் இவர்களுக்குப் பயன் தரவில்லை? எப்படி இவர்களுக்கு இது பயன் தரப்போகின்றது? அதுதான் சாத்தியப்படாத ஒரு வெறும் வேதாந்தம் தானே என்ற ஒரு தன்மையை அதற்குக் கொடுத்து, அதை மனித வாழ்க்கையிலிருந்து ஒதுக்கி வைத்துவிட்டு, இவர்களாகவே இவர்களின் கரங்களால் மனம்போன போக்கி எழுதி வைத்துள்ள இவர்களுடைய கிதாபுகள் இவர்களை வழிநடத்திக் கொண்டிருக்கின்றனவே. குர்ஆனும், ஹதீஸும் எது வரை முஸ்லிம்களின் வழிகாட்டிகளாக இருந்தனவோ அது வரையில்தான் இஸ்லாமிய மகிமை உலகில் கொடி கட்டிப் பறந்தது.
மார்க்கத்தின் பெயரால் பிரிந்து, அப்பிரிவுக்கு தாங்களாகவே ஒரு பெயரையும் சூட்டிக்கொண்டு அதிலே திருப்தியடைவதுமல்லாமல், தங்கள் தரப்பு தான் சரியானதும், நேர்வழி பெற்றதுமான தரப்பு, தாங்கள் தான் சொர்க்கம் நுழையும் கூட்டம், சுன்னத் வல்ஜமாஅத் என்ற கூட்டமும் நாங்களே என்று, தான்தோன்றித்தனமாக தங்களுக்குப் பெயர் சூட்டிக் கொண்டு மகிழ்ச்சியடைந்து வருவதுதான் ஆச்சரியத்திலும் பெரிய ஆச்சரியம். சுன்னத் வல்ஜமாஅத் என்பதற்கு இவர்கள் கூறும் வியாக்யானம் என்னவென்பது கூடத் தெரியவில்லை. சுன்னத்து வல்ஜமாஅத் என்பவர்கள் யார்? அவர்களின் இலட்சணம் என்ன? என்பதுவும் கூட இவர்களுக்குத் தெரியாது. அதற்கு வரை இலக்கணம் கொடுக்க முழுக்க அதிகாரம் பெற்றவர்கள். அதற்கென்றே அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட அவனின் தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள்தான். அவர்களே தெளிவான வரையறையும் கொடுத்து, அதன்படி வாழ்ந்தும் காட்டிச் சென்றுள்ளார்கள். இதையெல்லாம் இருட்டடிப்புச் செய்துவிட்டு தங்கள் மனம் போன போக்கில் குருட்டுத்தனமாக நடந்துவரும் தங்களுடைய நடைமுறை வாழ்க்கைக்கும் பேர்தானா சுன்னத்து வல்ஜமாஅத்? என்ன வேடிக்கை?
ஒருமுறை நபி(ஸல்) அவர்கள், பனூ இஸ்ராயில்கள் 72 பிரிவினராகப் பிரிந்தார்கள். எனது உம்மத்துகள் 73 பிரிவினராகப் பிரிவார்கள். அவர்களின் ஒரு கூட்டத்தார் நீங்குதலாக அனைவரும் நரகத்திலிருப்பர் என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதரே அக்கூட்டம் எது? என்று சஹாபாக்கள் கேட்க, அதற்கு நபி(ஸல்) அவர்கள், நானும் எனது தோழர்களும் இருக்கும் நிலையிலுள்ளவர்கள் என்று கூறினார்கள். (அப்துல்லாஹ்வின் அம்ரு(ரலி), திர்மிதீ, அபூதாவூத், அஹ்மத்
தெளிவான இந்த ஹதீஸின் நிலை என்ன? இதற்கு வேறு விளக்கம் ஏதுமுண்டோ? அப்படி வேறு விளக்கம் இல்லை என்றால் அந்நபியின் வழி முறையை எடுத்துக் கூறும்போது “நாங்கள் எங்களின் மூதாதையர்களின் வழியில்தான் செல்வோம்” பெரியோர்கள், நாதாக்கள் சென்ற பாதையில் தான் செல்வோம், என்று வாய்க் கூசாமல் கூறுகின்றனர்.
இப்படித்தானே நபி(ஸல்) அவர்கள், அன்று அல்லாஹ்வின் வேதமான அல்குர்ஆனை எடுத்து ஓதிக்காட்டிய பொழுது அப்போதுள்ள அன்றைய மக்களும் சொன்னார்கள். அவர்களுக்கும், இவர்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? இரு சாராரும் ஒரே மாதிரியாகவே உள்ளனர். நபி(ஸல்) அவர்கள் கொண்டு வந்த வழிதான் அல்லாஹ்வின் வழி. அதுதான் இஸ்லாம் அதைத்தான் அல்லாஹ்வும் ஏற்றுக்கொள்கிறான், அதுவல்லாத வேறு எந்த வழியையும் அவன் ஏற்றுக்கொள்வதில்லை. அந்த வழி எங்கே இருக்கிறது? அது அல்குர்ஆனில் தான் இருக்கிறது. அதுதான் மனிதர்களின் நடைமுறை வாழ்க்கைக்கு சாத்தியப்படக் கூடியது. இல்லை மறுமை இரண்டுக்கும் வெற்றியை ஈட்டுத் தரக் கூடியவையாகும்.
இன்று முஸ்லிம்களுக்கு வெற்றி கிடைக்காத ஒரே காரணம் அவர்களிடத்தில் அல்குர்ஆன் கூறும் வாழ்க்கை முறை இல்லை இந்த வாழ்க்கை தங்களுக்கு சாத்தியப்படாதது என்ற எண்ணத்தோடு முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். குர்ஆன், ஹதீது கூறும் வாழ்க்கை முறையை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது: இமாம்கள் சொல்வதை அப்படியே கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுவோர் என்று மக்கள் நினைக்கும் ஒரு நிலையில் ஆலிம்களில் பலர் மக்களை இந்நிலைக்குத் தள்ளிவிட்டார்கள்.
இமாம்களோ, எங்களைப் பின்பற்றாதீர்கள் என மிகத் தெளிவாகக் கூறியது மட்டுமல்லாமல் குர்ஆனையும், ஹதீதுகளையும் மட்டுமே பின்பற்றுங்கள் என்று கூறி, தங்களின் நிலையைத் தெளிவுபடுத்தி விட்டார்கள். அல்லாஹ்வும், அவனின் தூதரும், சொன்ன சொல்லையே எடுத்துக்கொள்ள வேண்டும். அல்லாஹ்வுக்கும், அவன் சொல்லுக்கும் வழிபட்டு நடக்க வேண்டும் என்று மிகத் தெளிவான ஆதாரங்களுடன் எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கும் சொற்பமான ஒரு கூட்டத்திற்கெதிராக உலமாக்கள் என்போரில் பலர் மக்களைத் தூண்டிவிட்டு என்னென்ன தீங்குகள் செய்யவேண்டுமோ, அத்தனையும் செய்கின்றார்கள். இது ஏன்? இத்தகையவர்கள் குர்ஆனை வைத்து மக்கள் மத்தியில் புரோகிதத் தொழில் செய்து வருபவர்கள். குர்ஆன் மக்கள் விளங்கி விட்டால் தங்கள் தொழிலுக்கு ஆபத்து வந்துவிடுமென்ற அச்சமேதான் இதற்குக் காரணமாகும். குர்ஆனை தங்கள் சொந்தச் சொத்தாகக் கருதி, அதை மற்றவர்கள் விளங்கி விடுவது இவர்களுக்கு விருப்பமில்லாத ஒன்றாக இருக்கிறது.
நாங்கள் சொல்வதைத் தான் மக்கள் கேட்கவேண்டும் என்ற ஒரு அகங்கார எண்ணமும், ஆணவப்போக்கும் இவர்களிடமுள்ளது சென்ற காலங்களில் குர்ஆனை, வெறுமனே ஒரு பொருளும் விளங்காது ஓதத்தான் தூண்டினார்களே தவிர, அதை மக்கள் விளங்கிக் கொள்வதற்கு உரிய ஒரு சிறு முயற்சியும் செய்ததில்லை. மாறாக இஸ்லாத்தின் பெயரால் கட்டுக் கதைகளையும், இஸ்லாத்தின் அடிப்படையான தவ்ஹீது கொள்கைக்கு முற்றிலும் மாற்றமான வகையில் மவ்லூது, மனாகிபுகளையும், சாத்திபு, மாலைகள் போன்ற கிதாபுகளையும் மக்கள் மத்தியில் பரப்பி விட்டிருக்கிறார்கள். இத்தகைய ஆதாரமற்ற கிதாபுகளைப்பற்றி மக்கள் அறிந்த அளவு அல்குர்ஆன், ஹதீஸையும் அறிந்திருந்தால் தொடர்ந்த உலகிற்கு முஸ்லிம்கள் வழிகாட்டிகளாக இருந்திருக்க முடியும். இன்று முஸ்லிம்கள் குழப்பத்தில் உள்ளனர், தெளிவான, சரியான வழி எதுவோ, அவ்வழியில் முஸ்லிம்களை இட்டுச் செல்வது கஷ்டமான ஒரு காரியமாக இருக்கிறது.
இப்படிப்பட்ட நிலைமையில்தான், முஸ்லிம்களாகிய ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் தெளிவும், இரு உலக வெற்றியும் கிடைக்கவேண்டுமாயின், நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். நான் உங்களிடையே இரு விஷயங்களை விட்டுச் செல்கிறேன். அவ்விரண்டையும் நீங்கள் கடைபிடித்தொழுகும் காலமெல்லாம் வழிதவறி விட மாட்டீர். 1) அல்லாஹ்வின் வேதம், 2) அவனது தூதரின் வழிமுறை. (மாலிக்கிபன் அனஸ்(ரழி),முஅத்தா)
இவ்விரண்டையும் பற்றிப் பிடித்துக்கொண்டு இவ்விரண்டின் நிழலின் கீழ் வாழ வேண்டும். நிச்சயமாக நமக்கு இரு உலக வெற்றியை அல்லாஹ் தந்தருள்வான். எனவே நம் அனைவரையும் இவ்விரண்டின் நிழலின் உறுதியுடன் வாழ்ந்து வெற்றிபெற அருள்புரிவானாக! ஆமீன்.
மவ்லவி பி.எம். எஸ் (காஸிமிய்யி, இலங்கை)
{ 1 comment }
முஸ்லிம்களாகிய நாம் மிக கவனமாக இருக்கவேண்டிய காலகட்டமிது இஸ்லாத்தின் பெயரால் எண்ணற்ற பிரிவுகள், இயக்கங்கள், ஜமாத்கள். இவைகளெல்லாம் உணர்வுப்பூர்வமாக மக்களை குழப்பி மக்களை தங்கள் பக்கம் நிலைத்திருக்கச்செய்கிறார்கள். மக்களும் தங்கள்வசதிக்கேற்ப அந்தந்த பிரிவுகளில் தங்களை இணைத்துக்கொள்கிறார்கள் இந்தசெயல்கள் எதுவுமே, நாளை எவ்வகையிலும் யாருடைய உதவியும் கிடைக்காத மறுமையில் இறைவனிடம் எடுபடாது.
மஹஷர் பெருவெளியில் நமது நிலை என்ன என்று நடு நடுங்கிக்கொண்டிருக்கும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில், உலகத்தில் வாழும்பொது ஒரு தனி பிரிவாய் இயங்கிக்கொண்டு பெருமையடித்துக்கொண்டு இருந்தவர்கள் அல்லாஹ்வின் கோபப்பார்வையிலிருந்து எவ்வாறு தப்ப முடியும். அவனிடம் இந்த இயக்கத்தில் நான் இருந்தேன், அந்தஜமாஅத்தில் நான் அங்கம் வகித்தேன், இந்தபிரிவிற்கு நான் தலைவராய் இருந்தேன் என்று பேசமுடியுமா (நவூதுபில்லாஹ்) அடுத்த நொடியே கொடும் நரகில் வீசி எறிந்திடுவானே. நடுநிலை சமுதாயமாக இறைவன் நம்மை ஆக்கியுள்ளான். இஸ்லாம் என்றும் தெளிந்த நீரோடையாய் உள்ளது. இறைவன் அகில உலகிற்கு அருளிய குர்ஆனும் மிக மிக தெளிவாகவும் எளிதாயும் உள்ளது. அந்த இறைவேதத்தை சரியானமுறையில் பொருளுணர்ந்து அறிந்துக்கொள்ள முயலவேண்டும். அவ்வாறு முயற்சி செய்பவர்களுக்கு நல்வழிகாட்டுவதாய் இறைவனே உத்திரவாதம் தருகிறான். நமது இலட்சியமே நபியை பின்பற்றி ஏக இறைவன் அல்லாஹ்வின் பொருத்தத்தை பெறுவது மட்டுமாகத்தான் இருக்கவேண்டும்.
Comments on this entry are closed.