மனிதனால்…. பூமியை பிளந்து விட முடியாது. மலையின் உச்சிக்கு உயர்ந்து விடவும் முடியாது. – அல் குர்ஆன்.17:37
– எஸ்.ஹலரத் அலி, திருச்சி-7
அல்லாஹ்….மனிதனுக்கு கொடுத்த பல ஆற்றல்களைக் கொண்டு அவன் தன்னை வளப்படுத்திக்கொண்டே வருகிறான். மனிதனின் அறிவாற்றலானது நீர்,நிலம்,ஆகாயம் என்று முப்புறமும் முன்னேறிக்கொண்டே வருகிறது. மண்ணில் விரைந்து செல்லவும், விண்ணில் விரைந்து பறக்கவும், நீரைக் கிழித்துச் செல்லவும் ஆற்றல் பெற்று விட்டான். ஆயினும் இந்த ஆற்றல் இருப்பதை எண்ணி மனிதனே! நீ பெருமையுடன் நடக்க வேண்டாம். உனது அற்ப ஆற்றல்களைக் கொண்டு மலையுச்சிக்கு உன்னால் உயர்ந்து விடவோ….அல்லது பூமியை பிளந்து இறங்கி விடவோ உன்னால் முடியாது என்பது இறைவாக்கு.
வானத்தில் ஏறி சந்திர மண்டலத்தில் வாசம் செய்த மனிதனுக்கு பூமியின் கீழே செல்வதற்கும் மலைகளின் உச்சியில் வாசம் செய்வதும் கடினமாக உள்ளது. இதன் காரணம் எளிமையானது. பூமியின் எல்லையை தாண்டி விண்வெளிக்குச் செல்ல சக்தியை கொடுத்த இறைவன் பூமிக்கு கீழே செல்ல சக்தியை அளிக்கவில்லை.
மனு, ஜின் கூட்டத்தார்களே! வானங்கள், பூமி ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெருவீர்களாயின், (அவ்வாறே) செல்லுங்கள்; ஆனால் (வல்லமையும் நம்) அதிகாரமும் இல்லாமல் நீங்கள் கடக்க முடியாது. – அல் குர்ஆன்.55:33.
மனிதன் தனது பல்வேறு பயன்பாட்டிற்காக பூமியை பிளந்து குடைந்து கொண்டு இருக்கின்றான் பூமி தன் மடியில் மறைத்து வைத்திருக்கும் பொக்கிஷங்களை மனிதன் அகழ்ந்து எடுத்துக் கொண்டு இருக்கிறான். ஏராளமான தாது வளங்களை தோண்டி எடுத்து வருகின்றான். அத்துடன் இயற்கை எரிவாயு, பெட்ரோலியப் பொருள்களையும், ஆழ் துளை குழாய் கிணறுகளை அமைத்து நீரையும் எடுத்து வருகின்றான். பூமியின் மேற்புறம் எவ்வளவு தான் துளைத்து ஆழமாக பிளந்து சென்றாலும் அவனால் அற்ப ஆழமே செல்ல முடிகிறது. அதற்கு மேல் செல்ல அவனது அற்ப அறிவில் வழியில்லை.
பூமியின் எல்லையைத் தாண்டி… பல லட்சக்கணக்கான மைல்களை கடந்து செல்ல ஆற்றல் பெற்ற மனிதனால்…. பூமியின் மேல் புறத்தில் சுமார் 12 கி.மீ ( 40,230 அடி) ஆழம் மட்டுமே துளையிட முடிகிறது. (Kola Super deep Borehole-Russia) அதற்கு மேல் அவனால் செல்ல முடியவில்லை.அதற்கான காரணம் ஒன்றுதான். வானத்தில் மேலேறிச் செல்ல ஆற்றல் வழங்கிய இறைவன்…. மனிதனுக்கு பூமியை பிளந்து செல்லும் ஆற்றலை வழங்கவில்லை. இதையே அல் குர்ஆன் 17:37 நமக்கு கூறுகிறது.
விண்வெளியில் லட்சக்கணக்கான மைல்கள் பிரயாணம் செய்து சந்திரனிலும், செவ்வாயிலும் குடியேற ஆசைப்படும் மனிதனால்.. இமயமலையின் உச்சி எவரெஸ்ட் சிகரத்தில் நிரந்தரமாக குடியிருக்க இயலவில்லை. மனிதனுக்கு வழங்கப்பட்ட அறிவாற்றாலைக் கொண்டு மலையின் உச்சியையோ பூமியின் ஆழத்தையோ ஒரு போதும் அடைந்து விட முடியாது என்று 1400 வருடங்களுக்கு முன்பே அல்லாஹ் தெளிவுபடுத்தி விட்டான். உலகத்திலேயே உயரமான எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தவர்கள் சிலரே. அதில் அதிக பட்சம் 15 நிமிடங்கள் ஆக்சிஜன் சிலிண்டர் இன்றி இருக்க முடியும். அதற்கு மேல் மரணமே.
இது போன்றே ரஷ்யாவின் கோலா தீபகற்பத்தில் ஒன்பது அங்குல விட்டத்திற்கு ஆழ் துளை கிணறு தோண்டினார்கள். தொடர்ந்து இருபது வருடம் தோண்டியும் அதன் ஆழம் 12 K.M, க்கு மேல் துளைக்க முடியவில்லை.அதிக வெப்பநிலையின் காரணமாக வேலை பாதியில் நிறுத்தப்பட்டது. மனிதனின் அறிவாற்றல் சக்தி எல்லாம் அதற்கு மேல் செல்லமுடியவில்லை. ஆயினும் இந்த ஆழ்துளை துரப்பண கிணறு மூலம் பல அறிவியல் உண்மைகள் அறிய முடிந்தது. பொதுவாக பூமியின் ஆழத்தில் சில கிமீ ஆழம் வரையே நீர் ஊற்று இருக்கும் என்று கருதப்பட்டது. ஆனால் 12 KM ஆழத்திற்கு அப்பாலும் நீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
.
வானத்திலிருந்து நாம் திட்டமான அளவில் மழை நீரை இறக்கி, அப்பால் அதனை பூமியில் தங்க வைக்கின்றோம்; நிச்சயமாக அதனை போக்கி விடவும் நாம் சக்தியுடையோம். – அல் குர்ஆன்.23:18.
அல்லாஹ் விரும்பிய ஆழத்தில் நீரை தங்க வைக்கின்றான். என்ற அறிவியல் உண்மை இதன் மூலம் தெரிய வந்தது. மேலும் உலர்ந்த கருங்கல் பாறையில் நீர் இருக்க வாய்ப்பில்லை என்ற நம்பிக்கை தவறானது என்று தெரியவந்தது, பாறைகளிலிருந்தும் நீர் வெளிப்பட்டது. இதையே அல்லாஹ் கூறுகின்றான்.
“…அவை கற்பாறைகளைப் போல் அல்லது அவைகளைவிடக் கடினமானவைகளாக இருக்கின்றன. ஏனென்றால் கற்பாறைகளிலும் தொடர்ந்து தானாகவே ஊற்றுகள் உதித்தோடிக் கொண்டிருப்பவைகளும் நிச்சயமாக உண்டு”. – அல் குர்ஆன்.2;74.
பூமியில் உள்ள உயரமான மலைகளில் ஏறும்போது, சுவாசிக்கும் காற்றான ஆக்சிஜன் அளவு மிகக்குறைவாகவே இருக்கும் மேலும் கடுங்குளிர் பனிப்பொழிவு நிலவும். மூச்சு விடுவதற்கு மிகச்சிரமமாக இருக்கும். உயரமான மலையில் ஏறுபவர்களின் உள்ளம் சுருங்குவதை அல்லாஹ் சொல்லிக்காட்டுகின்றான்
“ வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான்.”-6:125.
உயரமான மலைகளில் ஏறுபவர்களின் இதயம் மட்டுமல்ல விண்வெளிக்கு ராக்கெட்டில் செல்லும் வீரர்களின் இதயமும் சுருங்குவதாக இன்றைய ஆய்வுகள் கூறுகின்றன.
https://brightside.me/wonder-curiosities/13-curious-things-that-will-happen-to-your-body-in-space-413110/
பூமியில் இதயத்தின் அமைப்பு… விண்வெளியில் சுருங்கிய நிலை.
மனிதனுக்கு கொடுக்கப்பட்ட அறிவாற்றல் மிக அற்பமான ஒன்று. மனிதனால் பூமியில் மிகச்சிறிய உயிரினத்தையோ தாவரத்தையோ படைக்க முடியாது. இன்றைய நவீன மனிதனுக்கு வழங்கப்பட்ட அறிவாற்றலின் சாதனைகள் எல்லாம் ஒரு சோதனைக்காகவே கொடுக்கப்பட்டுள்ளதாக அல் குர்ஆன் கூறுகிறதே தவிர பெருமை அடிப்பதற்கு அல்ல.
நம்மிடமிருந்து அவனுக்கு ஒரு பாக்கியத்தைக் கொடுத்தோமானால், அவன், இது எனக்குக் கொடுக்கப்பட்டதெல்லாம், என் அறிவின் காரணமாகத்தான்!” என்று கூறுகிறான். அப்படியல்ல! இது ஒரு சோதனையே – ஆனால் அவர்களில் பெரும்பாலோர் இதை அறியமாட்டார்கள். – அல் குர்ஆ.ன். 39:49.