இன்று மனித குலம் அழிவின் விளிம்பில் நிற்கிறது. மனித குலத்தைச் சீரழிவில் சிக்க வைக்கும் அனைத்துச் சீர்கேடுகளும் இன்று மனிதர்களிடம் நீக்கமறக் காணப்படுகின்றன. நான்கு கால் மிருகங்களிடம் காணப்படாத ஒழுக்கக் கேடுகள் இன்று இந்த இரண்டு கால் மிருகங்களிடம் காணப்படுகின்றன. மிருகங்களில் எந்த மிருக இனமாவது ஓரினப் புணர்ச்சியில் ஈடுபடுவதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அல்லது நீங்கள் கேள்விப்பட்டாவது இருக்கிறீர்களா? இருக்கவே முடியாது.
ஐயறிவு மிருகங்களை விட இழி நிலை!
ஐயறிவுள்ள மிருக இனங்களே செய்யத் துணியாத ஒரு மிகமிக ஈனச் செயலை ஆறு அறிவு மனிதன் செய்கிறான் என்றால், அதுவும் அரசுகளும், நீதி மன்றங்களும் அது தனி மனித உரிமை(?) என்று கூறி அதைச் சட்டமாக்குகிறார்கள் என்றால், மனித இனம் மிருக இனத்தைவிட மிகவும் கேடுகெட்ட இனமாக ஆகி விட்டது என்பதில் சந்தேகமுண்டா?
ஆட்சியாளர்களும், அரசு அதிகாரிகளும், நீதியை நிலைநாட்டக் கடமைப்பட்ட நீதிபதிகளும் எந்த அளவு ஒழுக்கக் கேடுகளிலும், ஊழல்களிலும், லஞ்ச லாவண்யங்களிலும் முங்கிக் குளிக்கிறார்கள் என்பதற்கு இந்த ஒழுக்கக்கேடான ஓரினப் புணர்ச்சியை சட்டமாக்கி நடைமுறைக்குக் கொண்டு வந்ததே போதிய ஆதாரமாக இருக்கிறது. மனித இனம் இதற்கு மேலும் சீரழிவதற்கு ஒன்றுமே இல்லை என்று துணிந்து கூறிவிட முடியும். ஆக மனித இனம் அழிவின் விளிம்பில் அதாவது நரக விளிம்பில் நிற்கிறது என்பதில் அணுவளவும் சந்தேகமே இல்லை. மனிதன் மிருகத்திலும் கேடுகெட்ட ஒரு நிலைக்கு கீழ் இறங்குவதற்குக் காரணம் என்ன?
பகுத்தறிவாளர்கள் கடமை!
சிந்தித்துச் சீர்திருந்த சீர்திருத்த உண்மையான பகுத்தறிவாளர்கள் கடமைப்பட்டிருக்கிறார்களா? இல்லையா? அல்லது அவர்களும் பகுத்தறிவாளர்கள் என்று பீற்றிக்கொண்டு பகுத்தறிவான ஆறாவது அறிவைப் பறிகொடுத்துவிட்டு, ஐயறிவு மிருக வாழ்விலும் கேடுகெட்ட ஒரு வாழ்க்கையை வாழத் துணிந்து விட்டார்களா?
மனுநீதி!
மனிதன் தனக்குத்தானே சட்டம் வகுத்து அதன் படி நடப்பதால்தான் இந்த இழிநிலையை அடைந்துள்ளான். திருடனும், கொலைகாரனும் அவன் செய்த குற்றச்செயல்களுக்குச் சட்டம் இயற்றித் தீர்ப்பளித்தால், பரீட்சை எழுதியவனே, தான் எழுதியதைத் தானே திருத்தி வெற்றி தோல்வியை முடிவு செய்தால் அவை எப்படி உண்மைக்கும் நேர்மைக்கும் புறம்பானவையாக இருக்குமோ, அதை விட மிகமிக அதிகமாகவே உண்மைக்கும் நேர்மைக்கும் புறம்பாகவே மனுநீதி இருக்கும் என்பதில் சந்தேகமுண்டா?
இந்துக்களிடமுள்ள மனுநீதி!
இதற்கு இன்று இந்து மக்களிடையே அமுலில் இருக்கும் மனுநீதியே போதிய சான்றாகும். இறைவன் கொடுத்த நேர்வழி மனுநீதியாக இந்து மதப் புரோகிதர்களால் கற்பனை செய்யப்பட்டு பல்லாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டன. எனவே அதன் கெடுதியை-கோர முகத்தை இன்று திட்டமாக, தெளிவாக உணர முடிகிறது. மனிதர்களை மேல் சாதி, கீழ்சாதி, தீண்டக்கூடாத சாதி எனப் பிரித்துக் கொடுமைப்படுத்துவதைப் பார்க்க முடிகிறது. மனுநீதி என்றால் அது மனிதன் அமைத்தச் சட்டம் என்பதே பொருளாகும். இந்து மனுநீதி என்ற மனிதச் சட்டம் கற்பனை செய்யப்பட்டு பல்லாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டதால் அதன் கெடுதியை செமி பகுத்தறிவாளர்களால் பகுத்தறிய முடிகிறது.
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கிறித்தவ மதப் புரோகிதர்களால் கற்பனை செய்யப்பட்டு, இறைத் தூதர் ஈசா(அலை)வுக்கு அருளப்பட்ட இறை நீதியான இன்ஜீலில் நுழைக்கப்பட்ட மனுநீதி (பைபிள்)யின் கெடுதியை-கோரமுகத்தை பகுத்தறிவாளர்கள் உணர்கிறார்கள். சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் முஸ்லிம் மதப்புரோகிதர்கள் “பிக்ஹு’ என்ற பெயரால் கற்பனை செய்துள்ள மனு நீதியின் கெடுதியை-கோரமுகத்தை இன்று ஓரளவு பகுத்தறிவாளர்களால் உணர முடிகிறது.
சமீப கால மனுநீதிகள்!
அதற்கு மாறாக சுமார் 400 ஆண்டுகளுக்குள் மனிதக் கற்பனையில் உருவான மனுநீதிகளை இவர்களால் பகுத்தறிய முடியவில்லை. டார்வின் கற்பனையில் உதித்த மனுநீதி, காரல் மார்க்ஸ் கற்பனையில் உதித்த மனுநீதி, ஈ.வே.ரா. கற்பனையில் உதித்த மனுநீதி, அம்பேத்கர் கற்பனையில் உதித்த மனு நீதி, இப்படி இன்றைய மக்களால் பேரறிஞர்கள், சீர்திருத்தச் செம்மல்கள் என ஏற்றிப் போற்றிப் புகழப்படும் எண்ணற்றவர்களின் கற்பனையில் உருவான மனு நீதிகள், சனநாயகத்தின் பெயரால் மனிதன் கற்பனை செய்த மனுநீதி, கம்யூனிசத்தின் பெயரால் மனிதன் கற்பனை செய்த மனுநீதி, இப்படி வகை வகையான பெயர்களால் மனிதர்கள் கற்பனை செய்த மனு நீதிகள் இப்படி எண்ணற்ற மனுநீதிகளை மனிதகுலம் நடைமுறைப்படுத்தி வருகிறது.
ஆரம்ப கால மனுநீதி!
இந்துக்களிடம் நடைமுறையிலிருக்கும் மனுநீதி கற்பனை செய்யப்பட்டு பல்லாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டதால், அதன் பரிணாம வளர்ச்சி கொண்டு அதன் மெகா கெடுதிகளை மனிதன் உணர்வது போல், கிறித்தவ, முஸ்லிம் மனுநீதிகளின் கெடுதியை உணர்வது போல் மிகச் சமீபத்தில் மனித இனம் கற்பனை செய்த மேலே நாம் விவரித்துள்ள மனுநீதிகளின் கெடுதிகளை இப்போதைக்கு முழுமையாக உணர வழியில்லை. இறைவனை மறுக்கும் நாத்திகர்கள் நாடெல்லாம் நினைவு கூறுகிறோம், மரியாதை செய்கிறோம் என்ற பெயரால் நிறுவி வரும் கற்சிலைகள் உலகம் அழியாமல் இன்னும் ஓரிரு ஆயிரம் ஆண்டுகள் இருந்தால் இச்சிலைகள் அனைத்தும் தெய்வங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டு விடும். இன்று தெய்வங்களாக வணங்கப்படும் கற்சிலைகள் அனைத்தும் நினைவு கூறவும், மரியாதை செலுத்தும் நோக்கத்துடனும் செதுக்கப்பட்டவை தான்.
மதகுருமார்களின் மனுநீதி!
முஸ்லிம் மதகுருமார்கள் உட்பட அனைத்து மதகுருமார்களும் கடவுளின் பெயரைச் சொல்லி நடைமுறைப்படுத்தும் அனைத்தும் அந்தந்த மதகுருமார்களின் முன்னோர்கள் மூதாதையர்களின் கற்பனைகளில் உருவான அனைத்தும் மனுநீதிச் சட்டங்களே அல்லாமல் இறைவன் அளித்த இறைநீதிச் சட்டங்கள் அல்ல.
முஸ்லிம் நாடுகளிலும் மனுநீதி!
இன்று முஸ்லிம் நாடுகள் அனைத்திலும் நடை முறையில் கடைபிடிக்கப்படுபவை இறைவன் அளித்த இறைநீதிச் சட்டங்கள் அல்ல. அவர்களின் மூதாதையர்களின், அல்லது இன்றைய தலைவர்களின், ஆட்சியாளர்களின் கற்பனையில் உருவான மனுநீதிச் சட்டங்களே. இந்த மனுநீதிச் சட்டங்களைக் கொண்டு மனித குலம் ஒருபோதும் வெற்றி பெற முடியாது. எனவேதான் அனைத்து நாடுகளிலும் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு ஆர்ப்பாட்டம், போராட்டம், வன்முறை, தீவிரவாதம், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, குடி, விபச்சாரம், சூதாட்டம் என அனைத்து வகைத் தீமைகளும், நாட்டு வெறி, பிரதேச வெறி, இன வெறி, மொழி வெறி, மாநில வெறி, சாதி வெறி, மதவெறி என அனைத்து வகை வெறிகளும் நிறைந்து காணப்படுகின்றன. மனித குலம் அமைதி இழந்து, நிம்மதியற்ற வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் அவலநிலை.
இறைநீதி இறுதியாகக் கொடுக்கப்பட்ட குர்ஆன் மட்டுமே!
இறைவனால் இறுதியாக இறைநீதியாகக் கொடுக்கப்பட்ட அல்குர்ஆன் மட்டுமே உடனுக்குடன் பதிந்து பாதுகாக்கப்பட்டிருப்பதுடன், இறைவனாலும் பாதுகாக்கப்பட்டு வருகிறது (15:9). எனவே மனித குல நலனில் சுயநலத்தைத் துறந்து உண்மையிலேயே அக்கறை கொண்ட நல்லுள்ளங்கள், மனு நீதிகள் அனைத்தையும் முற்றிலுமாக ஒழித்துக் கட்டி இறைநீதி குர்ஆன் சட்டங்களை நடை முறைப்படுத்த முன்வந்தால் மட்டுமே மனிதகுலத்தின் அமைதி நிறைந்த வளமான வாழ்க்கைக்கு வழி ஏற்படும். அறிவுஜீவிகளே, அறிஞர் பெருமக்களே முறையாக நடுநிலையோடு சிந்தியுங்கள்.
பகுத்தறிவாளர்களே பகுத்தறிவை இழந்து நரகம் புகாதீர்கள்!
இந்தச் சந்தர்ப்பத்தில், “”சாதி அரக்கனை ஒழிக்காமல் அரசியல் சீர்திருத்தத்தையோ, பொருளாதார சீர்திருத்தத்தையோ ஒருபோதும் அடைய முடியவே முடியாது” என்று பொருளாதார மேதை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் சொன்னதையும், “”இன இழிவு நீங்க இஸ்லாமே நன்மருந்து” என்று பெரியார் ஈ.வே.ரா.சொன்னதையும் மனித குலம் நலம் நாடும் நல்லுள்ளங்கள் அவசியம் பரிசீலிக்க வேண்டுகிறோம்.
மனிதர்களின், சுயநல அரசியல்வாதிகளின், சுய நல மதகுருமார்களின் கற்பனைகளில் உருவான மனுநீதிகள் அனைத்தையும் தீவைத்துக் கொளுத்தி விட்டு, மனிதனைப் படைத்தாளும் இறைவன் கொடுத்த இறைநீதி நிறைந்த அல்குர்ஆனைப் பற்றிப் பிடித்து எவ்வித சுய விளக்கமும் இல்லாமல் அதன் வழிகாட்டலில் மனித இனம் வாழ முற்படாதவரை அதற்கு இவ்வுலகிலும் வெற்றி இல்லை; மறு உலகிலும் வெற்றி இல்லை. பகுத்தறிவாளர்களே ஆறாம் அறிவான பகுத்தறிவை இழந்து மோசம் போகாதீர்கள்; நிரந்தர நரகை அடையாதீர்கள்! எச்சரிக்கை!!
அந்நஜாத்