மது அருந்துதல் குறித்த இறைவனின் எச்சரிக்கை: –
“(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்; “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது.” (அல்குர்ஆன் 2: 219)
மது அருந்துதல் ஷைத்தானின் அருவக்கத்தக்க செயலாகும்: –
ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் – அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா? (அல்-குர்ஆன் 5:90-91)
மது அருந்துபவர் மற்றும் மதுவுடன் தொடர்புடையவர்கள் அல்லாஹ் மற்றும் நபி (ஸல்) அவர்களால் சபிக்கப்பட்டவராவர்: –
மது அருந்துபவர், அதனை அருந்தச் செய்பவர், வாங்குபவர், விற்பவர், தயாரிப்பாளர், சுமப்பவர், இதன் மூலம் கிடைத்த வருவாயை சாப்பிடுபவர்கள் அனைவரையும் நபி (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள். (ஆதாரங்கள் : அபூதாவுத், திர்மிதி, இப்னுமாஜா)
மேற்கூறப்பட்ட ஹதீஸ் அஹ்மத், இப்னு ஹிப்பான் மற்றும் ஹாகிம் ஆகிய கிரதங்களில் இடம்பெறும் போது “அல்லாஹ் சபிக்கிறான்” என்று வந்துள்ளது.
மது அருந்துபவன் சுவனம் புக மாட்டான்: –
மதுவில் மூழ்கி இருப்பவனும், பெற்றோரைத் துன்புறுத்துபவனும், தன் மனைவியின் மீது வீண்பழி சுமத்துபவனும் சுவனம் புகமாட்டான்” (ஹாகிம்)
“தொடர்ந்து மது அருந்துபவர், ஓடிப் போன அடிமை, தம் குடும்பத்தார்கள் செய்யும் தீய செயல்களைக் கண்டு திருப்தியடைந்தவர் ஆகிய இந்த மூவருக்கும் அல்லாஹ் சுவர்க்கத்தைத் தடை செய்திருக்கிறான்”
மது அருந்துபவர்களுக்கு மறுமையில் புகட்டப்படும் பானம்: –
“போதைப் பொருளை அருந்துபவர்களுக்கு “தீனத்துல் கப்பால்” எனும் பானத்தை புகட்டுவதாக அல்லாஹ் முடிவு செய்துள்ளான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், “தீனத்துல் கப்பால் என்றால் என்னவென்று” கேட்டனர். அது ‘நரகவாசிகளின் வேர்வை’ அல்லது ‘நரகவாதிகளிடம் பிழிந்தெடுக்கப்பட்ட பானம்’ என பதிலளித்தார்கள். அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி), ஆதாரம் : முஸ்லிம்.
மதுபோதையில் மரணித்தவன் சிலை வணங்கியைப் போலவனாவான்: –
நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: மதுபோதையில் மூழ்கியவன் இறந்துவிட்டால் சிலை வணங்கியைப் போன்று -மறுமையில்- அல்லாஹ்வை சந்திப்பான். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), ஆதாரம் : அஹமத்
போதை தரும் அனைத்துமே மதுவைச் சேர்ந்ததாகும்: –
நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: போதை தரும் அனைத்தும் மதுவாகும். போதை தரும் அனைத்தும் ஹராமாகும். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), ஆதாரம் : முஸ்லிம்
வெவ்வேறு பெயர்களில் புழங்கும் மது வகைகள் பற்றிய எச்சரிக்கைகள்: –
‘என்னுடைய சமுதாயத்தில் சிலர் நிச்சயம் மது அருந்துவார்கள். ஆனால் அதற்கு வேறு பெயரைக் கூறிக் கொள்வார்கள்’ அறிவிப்பவர் : அபூமாலிக் அல்-அஷ்அரி (ரலி), ஆதாரம் : இப்னுமாஜா
‘விபச்சாரம் பெருகும், மது அருந்தும் பழக்கம் பரவலாகும்’ (ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)
மது அருந்தியவனுக்கு தண்டனை: –
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் மது அருந்தியவனைப் பார்த்து, “அவனை அடியுங்கள்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்பொழுது எங்களில் சிலர் செருப்பாலும், ஆடைகளினாலும் கரத்தாலும் அவனை அடித்தனர்.” (ஆதாரம் : புகாரி)
மது அருந்திய நிலையில்:-
மது அருந்தி போதையடைந்தவனின் நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அவன் அவ்வாறே இறந்துவிட்டால் நரகில் நுழைவான். தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். மீண்டும் மது அருந்தினால் அவனுடைய நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அவன் அவ்வாறே இறந்துவிட்டால் நரகில் நுழைவான். தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். மீண்டும் மது அருந்தினால் அவனுடைய நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அவன் அவ்வாறே இறந்துவிட்டால் நரகில் நுழைவான். தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். மீண்டும் அருந்தினால் மறுமை நாளில் ரத்கத்துல் கப்பால் எனும் பானத்தை அல்லாஹ் அவனுக்கு புகட்டுவது கடமையாகிவிட்டது என்று நபி(ஸல்)அவர்கள் கூறியபோது, நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்களே! ரத்கத்துல் கப்பால் என்றால் என்ன? என்று கேட்டனர். அதற்கவர்கள், நரகவாசிகளிடம் பிழிந்தெடுக்கப்பட்ட பானம் என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) நூல்: இப்னுமாஜா)
சுவனத்தென்றல்.காம்