பேச்சின் ஒழுங்குகள்

Post image for பேச்சின் ஒழுங்குகள்

in நற்குணம்

 ஒருவனுடைய பண்புகளை அவனுடைய நடை, உடை, பாவனைகள் படம் பிடித்துக் காட்டுவதைப் போல் பல நேரங்களில் அவனது பேச்சுக்களும் படம் பிடித்துக் காட்டுகின்றன. அவனை நல்லவனாகவும் கொடியவனாகவும் மென்மையானவனாகவும் கடுமை காட்டுபவனாகவும் பிரதிபலிக்கச் செய்யும் சக்தி அவன் பேசும் பேச்சுக்கு உண்டு.

சில வேளைகளில் நாம் விளையாட்டாக சில வார்த்தைகளைக் கூறி விடுகிறோம். நாம் கூறிய பொருளை உண்மையில் நம் உள்ளத்தில் மனப்பூர்வமாக ஒத்துக் கொள்ளாமல் கேலிக்காக கூறிய போதிலும் கேட்பவர் அதை விபரீதமாக விளங்கிக் கொள்கிறார்.

நாம் நல்லவராக இருந்தாலும் நம்முடைய பேச்சு நம்மைத் தீயவனாக சித்தரித்து விடுகிறது. வார்த்தையை விட்டவர் ‘நான் ஒரு பேச்சிற்காகத் தான் சொன்னேன்’ என்று எவ்வளவு சமாளிப்புகளைக் கூறினாலும் மனதில் பதிந்த காயம் மறையாத வடுவாகப் பதிந்து விடுகிறது.

விளையாட்டு வார்த்தைகள் பல விபரீதங்களை விதைத்து விடுகின்றன. கடுமையான வார்த்தைகள் கலகத்தை உண்டு பண்ணுகின்றன. கனிவான வார்த்தைகள் கல் நெஞ்சம் கொண்டோரையும் கனிய வைத்து விடுகிறது. இது போன்று ஏராளமான இன்பங்களும் துன்பங்களும் நம் பேச்சின் பயனாக வந்தமைகின்றன.

மேற்கண்ட விஷயங்கள் அனைத்தையும் அன்றாட வாழ்வில் நாம் கண்கூடாகக் கண்டு வருகிறோம். அல்லாஹ்வை நம்பியவன், நம்பாதவன் ஆகிய இருவரும் முறையான பேச்சின் அவசியத்தை உணர்ந்து கொள்வதற்கு இந்நிகழ்வுகளே போதுமானதாகும்.

ஆனால் மனிதன் தனக்கு வழங்கப்பட்ட அறிவை முறைகேடாகப் பயன்படுத்துவான் என்பதால், ஆன்மீக ரீதியில் இஸ்லாம் அவனுக்கு இதை உணர்த்துகின்றது. அழகிய பேச்சுகளை மட்டுமே பேசும் படி இஸ்லாம் வலியுறுத்துகின்றது. பயனில்லாத பேச்சுக்களப் பேச வேண்டாம் என்று தடை விதிக்கின்றது.

நல்ல வார்த்தைகளை நவில வேண்டும்

நல்ல வார்த்தைகளால் பல நன்மைகள் நிகழும். மனம் ஒடிந்தவரிடம் ஆறுதலான வார்த்தைகளைக் கூறுவது அவருடைய காயத்திற்குக் களிம்பு தடவியதைப் போன்று இருக்கும். வேலையில் ஈடுபட்டு பரபரப்புடன் வருபவர்களிடம் கூறப்படும் நல்ல வார்த்தை அவர்களை சீரான நிலைக்குக் கொண்டு வரும். தவறு செய்தவர்களிடம் நல்ல வார்த்தைகளைக் கூறினால் அவர்கள் புனிதர்களாக மாறுவதற்கு வாய்ப்பாக அமையும்.

இது போன்ற ஏராளமான நன்மைகளை, நல்ல வார்த்தைகளின் மூலம் சமுதாயம் அடைகின்றது. இதனால் இஸ்லாம் நல்ல பேச்சுக்களைப் பேசும் படி ஆர்வமூட்டுகிறது. நற்காரியங்கள் அல்லாஹ்விடம் செல்வதைப் போல் நல்ல வார்த்தைகளும் அவனிடம் செல்கின்றன.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! நேர்மையான சொல்லையே கூறுங்கள்! அல்குர்ஆன் (33:70)

யாரேனும் கண்ணியத்தை நாடினால் கண்ணியம் யாவும் அல்லாஹ்வுக்கே உரியது. தூய சொற்கள் அவனிடமே மேலேறிச் செல்லும். நல்லறம் அதை உயர்த்தும். தீய காரியங்களில் சூழ்ச்சி செய்வோருக்குக் கடுமையான வேதனை உண்டு. அவர்களின் சூழ்ச்சி தான் அழியும். அல்குர்ஆன் (35:10)

ஒருவன் தன்னுடைய செல்வத்தை தர்மம் செய்வதற்கு நிகரானது அவன் பேசுகின்ற நல்ல வார்த்தைகள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்கள் தமது மூட்டுக்கள் ஒவ்வொன்றுக்காகவும் சூரியன் உதிக்கின்ற ஒவ்வொரு நாளிலும் தர்மம் செய்வது அவர்களின் மீது கடமையாகும். இருவருக்கிடையே நீதி செலுத்துவதும் தர்மமாகும். ஒருவர் தன் வாகனத்தின் மீது ஏறி அமர (அவருக்கு) உதுவுவதும் தர்மமாகும். அல்லது அவரது பயணச் சுமைகளை அதில் ஏற்றி விடுவதும் தர்மமாகும். நல்ல (இனிய) சொல்லும் தர்மமாகும். ஒருவர் தொழுகைக்குச் செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் தர்மமாகும். தீங்கு தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதும் ஒரு தர்மமேயாகும். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (2989)

நம்முடைய முக்கிய குறிக்கோளாக இருக்கின்ற சொர்க்கத்தை நாம் அடைவதற்குரிய வழிகளில் ஒன்று நல்ல பேச்சுக்களைப் பேசுவதாகும். ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் சொர்க்கம் செல்வதற்கான வழியைக் காட்டும்படி கேட்ட போது, அழகிய முறையில் பேசும்படி அவருக்குக் கட்டளையிட்டார்கள்.

நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ”அல்லாஹ்வின் தூதரே! உங்களை நான் கண்டால் எனது உள்ளம் மகிழ்சியடைகிறது. எனது கண் குளிர்ச்சியடைகிறது. எனக்கு அனைத்து பொருட்களைப் பற்றியும் சொல்லுங்கள்” என்றேன். அதற்கு அவர்கள் ”அனைத்தும் நீரிலிருந்து படைக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்கள். ”எந்த காரியத்தை நான் செய்தால் சொர்க்கத்திற்குச் செல்வேனோ அப்படிப்பட்ட ஒரு காரியத்தை எனக்கு கற்றுக் கொடுங்கள்” என்று கூறினேன். ”சலாத்தைப் பரப்பு. நல்ல பேச்சைப் பேசு. உறவுகளை இணைத்து வாழ். மக்கள் உறங்கும் போது இரவில் நின்று வணங்கு. சாந்தியுடன் சொர்க்கத்தில் நுழைவாய்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: அஹ்மத் (9996)

நல்ல பேச்சுக்கள் சொர்க்கத்தை மாத்திரம் பெற்றுத் தராது. கடும் வேதனையான நரக நெருப்பிலிருந்து காக்கும் கேடயமாகவும் பயன்படும். நல்ல பேச்சுக்களைப் பேசியாவது நரகத்தை விட்டும் உங்களை காத்துக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டைத் தர்மம் செய்தேனும் நரகத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதுவும் இல்லையானால் இனிய சொல்லைக் கொண்டாவது (காப்பாற்றிக் கொள்ளுங்கள்).

அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் (ரலி), நூல்: புகாரி (6023)

இஸ்லாம் சகுனம் பார்ப்பதைத் தடை செய்கிறது. மனிதன் துற்சகுனம் பார்ப்பதால் அவனுடைய அடுத்தக்கட்ட காரியங்களைச் செயல்படுத்தாமல் தள்ளிப் போடுகிறான். அவனுடைய முன்னேற்றத்திற்கு சகுனம் பார்த்தல் முட்டுக்கட்டையாக அமைகிறது. ஆனால் ஒரு நல்ல காரியத்திற்காகச் செல்லும் போது நல்ல வார்த்தையைச் செவியுற்றால் அந்தக் காரியத்தை பின் தள்ளாமல் பூரணப்படுத்துவதற்கு இந்த நல்ல வார்த்தைகள் தூண்டுகோலாக அமைகிறன. மனிதனின் முன்னேற்றத்திற்கு அவனது ஆசையை அதிகப்படுத்தக் கூடியதாக நல்ல வார்த்தைகள் இருப்பதால் இஸ்லாம் இதை மாத்திரம் அனுமதிக்கிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”பறவை சகுனம் என்பது கிடையாது. சகுனங்களில் சிறந்தது நற்குறியே ஆகும்” என்று சொன்னார்கள். மக்கள், ”நற்குறி என்பதென்ன?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ”அது நீங்கள் செவியுறும் நல்ல (இனிய) சொல்லாகும்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)., நூல்: புகாரி (5754)

தீய பேச்சுக்களைப் பொதுவாக எங்கும் பேசக்கூடாது. குறிப்பாக மக்கள் நடமாடும் இடங்களில் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்துவது மிக மோசமான செயலாகும். ஆனால் இந்த ஒழுக்கத்திற்கு மாற்றமாக பொது வீதிகளில் சண்டைத் தகராறுகள் ஏற்படும் போது கேட்பதற்குக் காது கூசுகின்ற அளவிற்குப் பயங்கரமான வார்த்தைகள் வீசி எறியப்படுகின்றன.

சந்தோஷத்திற்காக தெருக்களில் கூடியிருக்கும் இளைஞர்களிடத்திலும் இது போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் உண்டு. இதனால் பாதிக்கப்படுவது பொது மக்கள் தான். இதைக் கருத்தில் கொண்டு தெருக்களில் அமர்ந்திருப்போர் நல்லதையே பேச வேண்டும். இல்லாவிட்டால் அமரக்கூடாது என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது.

நாங்கள் வீட்டின் முற்றத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து, ”பாதையில் அமைந்துள்ள இடங்களில் என்ன செய்கிறீர்கள்? பாதையோரங்களில் அமைந்துள்ள இடங்களில் (அமர்வதை விட்டும்) தவிர்ந்து கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். ”தவறு செய்வதற்காக நாங்கள் உட்காரவில்லை. பேசிக் கொண்டும் கருத்துக்களைத் தெரிவித்துக் கொண்டும் அமர்ந்துள்ளோம்” என்று கூறினோம். அதற்கு அவர்கள், ”அப்படியானால் அதற்குரிய உரிமையைக் கொடுத்து விடுங்கள். பார்வையைத் தாழ்த்துவதும் சலாமிற்குப் பதிலுரைப்பதும் அழகிய முறையில் பேசுவதும் (அதற்குரிய உரிமையாகும்)” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூதல்ஹா (ரலி), நூல்: முஸ்லி­ம் (4020)

இஸ்லாம் காட்டும் பேச்சின் ஒழுங்கு முறைகளை கடைபிடித்து இம்மை மறுமை நன்மைகளை பெறுவோமாக!……………………….

by இளையான்குடி தக்வா டிரஸ்ட்

{ 5 comments… read them below or add one }

Mihar Mansoor July 17, 2011 at 11:40 pm

For timing very good article

Reply

manikandan March 26, 2012 at 2:56 pm

nanraga ullathu

Reply

Nisar Ahamed July 25, 2015 at 9:08 am

இக்காலத்திற்கு மிகவும் பொருத்தமான அருமையான பதிவு.நன்றி

Reply

முஹம்மது அலீம் August 7, 2015 at 1:35 am

அல்ஹம்துலில்லாஹ்… மிக சிறந்த பதிவு. இன்று பொது மக்களைவிட இமாம்கள் அதிகம் பேண வேண்டிய கட்டாயம் உள்ளது. பொத்தாம் பொதுவாக அனைத்து இமாம்களையும் சொல்லவில்லை. மாறாக மார்க்கத்தில் விளையாடும் சகாபாக்களை வசை பாடும் இமாம்களையே குறிப்பிடுகின்றேன்.
நன்றி

Reply

nasir December 5, 2015 at 3:01 am

title is excellent, our ummath needs some more articles in different topics.
jazakumullah khiaran

Reply

Leave a Comment

Previous post:

Next post: