மார்க்கத்தை பிழைப்பாக மாற்றிக் கொள்ளும் புரோகிதரர்கள்!

in சமூகம்

இறைவன் எந்த நோக்கத்திற்காக மனிதனைப் படைத்திருக்கிறானோ அந்த நோக்கம் நிறைவேற மனிதன் மனிதனாக வாழவேண்டும். அப்போதுதான் மனிதன் இவ்வுலகிலும் மறு உலகிலும் வெற்றிப் பாதையை அடையமுடியும். ஆயினும் மனிதன் அந்த வெற்றிப் பாதையில் நடைபோட ஷைத்தான் தடையாக இருக்கிறான். அவனது சபதம் எப்படியும் மனித வர்க்கத்தை எரியும் கொடும் நரகில் கொண்டு தள்ளுவதே. எந்த மனிதனின் காரணமாக தனக்கு நரக தண்டனை கிடைத்ததோ அந்த மனிதனையும் நரகத்தில் கொண்டு சேர்த்துவிட வேண்டும் என்று அல்லும் பகலும் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிறான் ஷைத்தான்.

    இவ்வுலக வாழ்க்கை சோதனை வாழ்க்கையாக இருப்பதால் பரிட்சையின் நிமித்தம் அல்லாஹ் மனிதனுக்கு அவனது விருப்பங்களை நிறைவு செய்து கொள்ள இரண்டு வழிகளைக் கொடுத்துள்ளான். ஒரு வழி அவனை சுவர்க்கத்தில் கொண்டு சேர்க்கும். இரண்டாவது வழி அவனை நரகில் கொண்டு சேர்க்கும். மனிதனின் படைப்பில் அடிப்படையில் அவனுக்கு இயற்கையான பல உணர்வுகள் இருக்கின்றன. பசி உணர்வு, காம உணர்வு, இன உணர்வு, மொழி உணர்வு, பிரதேச உணர்வு, தேச உணர்வு என்றெல்லாம் அந்த உணர்வுகள் பரிணமிக்கின்றன. ஷைத்தான் இந்த உணர்வுகளை வெறியாகத் தூண்டிவிட்டு மனிதனை மனித நிலையிலிருந்து மிருக நிலைக்கு மாற்றி விடுகிறான்.

    ஷைத்தானின் இந்த முயற்சிக்கு மனித இனத்திலிருந்தே சிலர் துணை போகிறார்கள். அவர்கள் மறுமையை மறந்து இவ்வுலக சுகத்தில் மயங்கி தறி கெட்டுச் செல்கிறார்கள். இவர்களில் முன்னணியில் நிற்பவர்கள் மதப்புரோகிதரர்கள், அரசியல்வாதிகள். இறைவனை நெருங்கச் செய்வதாக கூறிக்கொள்ளும் புரோகிதரர்கள் அவர்கள் உண்டு கொழுப்பதற்கும், உலக சுகங்களை அடைவதற்கும் சேவையைப் பிழைப்பாக மாற்றிக் கொள்கிறார்கள். எனவே அவர்கள் மக்களின் உணர்வுகளை வெறியாகத் தூண்டிவிட்டு வேடிக்கைப் பார்க்கிறார்கள்; உலக ஆதாயம் அடைகிறார்கள்.

    இதே போல் அரசியல்வாதிகளும் ஆட்சியில் அமரும் ஆசையில் மக்களின் வாக்குச் சீட்டைக் குறியாகக் கொண்டு இன, மொழி பிரதேச உணர்வுகளை தூண்டி விடுகின்றனர். உணர்வுகள் மிதமாக இருக்கும்போது மனித வர்க்கம் பலன் பெறுகிறது. அவை வெறிகளாக மாறும்போது மனிதனே மனிதனை வெட்டிச் சாய்க்கும், மனித இரத்தத்தை ஆறாக ஓடச் செய்யும் நிலை ஏற்படுகிறது.

    புரோகிதரர்களும், அரசியல்வாதிகளும் தங்களின் அற்ப சுகங்களை தியாகம் செய்து மக்களின் நல்வாழ்வுக்கு துணை செய்வார்கள் என்று எதிர்பார்ப்பது குதிரைக் கொம்பாகும். எனவே மக்களே அவர்களின் கெடுதிகளைப் புரிந்து அவர்களை ஓரம் கட்டவேண்டும். ஆனால் கைசேதம் கசாப்புக் கடைக்காரர் பின்னால் செல்லும் ஆடுகளைப்போல், மக்கள் வெள்ளமும் இந்த புரோகிதரர்களின் பின்னாலும் அரசியல்வாதிகளின் பின்னாலும் செல்லுவது அதிகரித்தே வருகிறது. காரணம் மக்களிடையே போதிய சுய சிந்தனை இல்லை.

    மக்களின் இந்த நிலையை மாற்றிட ஒவ்வொருவரும் அல்லாஹ்வின் பொருத்தம் நாடி அவனது போதனைகளை கடைப்பிடிப்பதின் மூலம்தான் இவர்களிடமிருந்து இந்த மனித சமுதாயம் விடுபட முடியும். எனவே அன்பார்ந்த சகோதர சகோதரிகளே இந்த சுயநல வாதிகளான அரசியல் தலைவர்களையும் மதப்புரோகிதரர்களையும் நம்பிச் செயல்படுவதைக் கைவிடுங்கள். உங்களை ஏமாற்றி அவர்கள் ஆதாயம் அடைவதில் இந்த இருசாரரும் கூட்டுள்ளவர்கள்தான். இந்த நிலை மாற வேண்டுமானால் மக்கள் இந்த அரசியல் தலைவர்கள் பின்னாலும், மதப்புரோகிதரர்கள் பின்னாலும் கண்ணை மூடிக்கொண்டு குருட்டுத் தனமாகச் செல்வதைக் கைவிட வேண்டும். ஒவ்வோரு ஆணும், பெண்ணும் சுய சிந்தனையாளர்களாக மாற வேண்டும்.

 
7:3   اتَّبِعُوا مَا أُنزِلَ إِلَيْكُم مِّن رَّبِّكُمْ وَلَا تَتَّبِعُوا مِن دُونِهِ أَوْلِيَاءَ ۗ قَلِيلًا مَّا تَذَكَّرُونَ
7:3. (மனிதர்களே!) உங்கள் இறைவனிடமிருந்து, உங்களுக்கு இறக்கப்பட்டதைப் பின்பற்றுங்கள்; அவனையன்றி (வேறெவரையும்) பாதுகாவலர்(களாக்கி கொண்டு அவர்)களை பின்பற்றாதீர்கள்; நீங்கள் சொற்பமாகவே நல்லுணர்வு பெறுகிறீர்கள்.

 

 

Leave a Comment

Previous post:

Next post: