பிறையைக் கண்களால் மட்டுமே பார்க்க வேண்டும் என்போரின் இரட்டை நிலை!

in சந்திர நாட்காட்டி

இஸ்லாம் மட்டும்தான் விஞ்ஞானத்திற்கு முரண்படாத மார்க்கம் என்று சொல்லிக் கொண்டே முஸ்லிம்களில் மிக அதிகமானோர் விஞ்ஞானம் கூறும் மிகத் துல்லியமான சந்திரக் கணக்கீட்டை மறுத்துக் கொண்டு, பிறையைப் புறக்கண்களால் பார்த்துத்தான் மாதத்தைத் தீர்மானிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால் இவர்கள் சூரியனை மட்டும் கணக்கிட்டு அதன் அடிப்படையில் தங்களது வணக்க வழிபாடுகளை அமைத்துக் கொள்கின்றனர். சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் பாரபட்சம் காட்டும் இத்தகையவர்களின் நட வடிக்கை சரிதானா என்பதை குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் பார்ப்போம்.

“”சூரியனும், சந்திரனும் கணக்கின்படி இயங்குகின்றன”. குர்ஆன் : 55:5

“”தொடர்ந்து இயங்கும் நிலையில் சூரியனையும், சந்திரனையும் உங்களுக்கு பயன்படச் செய்தான்”. குர்ஆன் : 14:33

மேற்கண்ட வசனங்களில் சூரியனையும், சந்திர னையும் நாம் பயன்பெறுவதற்காக கணக்கிடும் வகையில் படைத்திருப்பதாக அல்லாஹ் கூறும் போது நாங்கள் சூரியனை மட்டுமே கணக்கிடுவோம். சந்திரனைக் கணக்கிட மாட்டோம், துல்லியமாகச் சந்திர ஓட்டத்தைக் கணக்கிட்டுச் சொன்னாலும் ஏற்கமாட்டோம் என்று சொல்வது …

(அல்லஹ்வின்) நூலில் ஒரு பகுதியை ஏற்று மறு பகுதியை மறுக்கிறீர்களா? இவ்வாறு செய்பவனுக்கு இவ்வுலக வாழ்க்கையில் இழிவைத் தவிர வேறு கூலி இல்லை. கியாமத் நாளில் கடுமையான வேதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். நீங்கள் செய்வதை அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை’. (குர்ஆன்: 2:85) என்ற இந்த வசனத்தின் அடிப்படையில் சூரியக் கணக்கை மட்டும் எடுத்துக்கொண்டு சந்திரக் கணக்கை மறுப்பது தவறு என்பதை சந்திரக் கணக் கீட்டு விஷயத்தில் பாரபட்சம் காட்டுபவர்கள் உணரவேண்டும்.

சூரியனை மட்டும் கணக்கிட்டு வணக்க வழிபாடுகளை அமைத்துக் கொள்கிறீர்கள். சந்திரன் விஷயத்தில் மட்டும் ஏன் கணக்கீட்டை மறுக்கிறீர்கள் என்ற கேள்விக்கு P.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் செய்தி ஆசிரியராகவும், ஷம்சுல்ளுஹா அவர்கள் நிர்வாக ஆசிரியராகவும், K.M ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்கள் வெளியீட்டாளராகவும், N.ஹாமித் பக்ரீ மன்பஈ, J.S .ரிஃபாயி,S.S.U .சைஃபுல்லாஹ் ஹாஜா, M.I.சுலைமான், M.S.சுலைமான் ஆகியோர் ஆசிரியர் குழுவில் இருந்து அல்முபீன் 1999 நவம்பர் & டிசம்பர் இதழில் வெளியிட்ட பிறை-ஓர் ஆய்வு என்னும் ஆக்கத்தில் சூரியன் சந்திரனுக்கு இடையே பாரபட்சம் ஏன் என்ற தலைப்பில் எழுதிய விஷயத்தைப் பாருங்கள். தங்கள் வாதத்தை நிலைநாட்ட மற்றொரு தவறான வாதத்தையும் இவர்கள் எடுத்து வைக்கிறார்கள்.

சூரியனின் உதயம், மறைவு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் தொழுகை நேரங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இன்றைக்கு சூரியன் மறைந்து விட்டதா என்று அடிவானத்தைப் பார்த்து விட்டு மஃரிபு தொழுவதில்லை. ஏற்கனவே 6 மணி 10 நிமிடத்துக்கு மறையும் என்று கணிக்கப்பட்டிருந்தால் அந்த நேரத்தில் மஃரிபு தொழுது வருகிறோம். சூரியன் உச்சியிலிருந்து சாய்வதையும், ஒரு பொருளின் நிழல் அப்பொருளின் அளவுக்கு வளர்வதையும், சுப்ஹு நேரத்தையும் நேரில் பார்த்து யாரும் முடிவு செய்வதில்லை. வானியல் நிபுணர்களின் கணிப்பை அடிப்படையாக கொண்டுதான் தீர்மானிக்கிறோம்.

சூரியனின் கணிப்பை ஏற்றுக் கொள்ளும்போது சந்திரன் விஷயத்தில் மட்டும் கணிப்பை மறுப்பது ஏன்? பிறை விஷயத்தில் கண்ணால் பார்த்து தான் தீர்மானிக்க வேண்டும் என்று சொல்பவர்கள் கணக்கீட்டைக் கணிப்பு என்று கூறி வருகின்றனர். (இங்கே நாம் கணிப்பு என்று எழுதியுள்ளது, அவர்கள் புத்தகத்தில் உள்ளதை அப்படியே தந்துள்ளோம். மற்றபடி கணக்கீட்டுக்கும் கணிப்புக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் உள்ளது. உதாரணத்தற்கு ஒரு ஆட்டை பார்த்து இது இத்தனை கிலோ உள்ளது என்று சொல்வது கணிப்பு ஆகும். அதே ஆட்டை அறுத்து அதன் கறியை எடுத்து எடை போட்டு பின்னர் இது இத்தனை கிலோ என்று சொல்வது கணக்கீடு ஆகும். நாம் கணக்கீட்டுக்கும் கணிப்புக்கும் உள்ள வித்தியாசத்தை பலமுறை எடுத்துக் கூறியும் திரும்ப திரும்ப கணிப்பு என்றே சொல்லியும், எழுதியும் வருகின்றனர் என்பதை தெரியப்படுத்துகிறோம்) சூரியனின் ஓட்டத்தைச் சரியாகக் கணிக்கத் தெரிந்த வானியல் நிபுணர்களுக்கு சந்திரன் இயக்கம் பற்றி கணிக்கத் தெரியாதா? என்றெல்லாம் கேள்விக்கு மேல் கேள்விகளை எழுப்புகின்றனர். காலத்தைக் காட்டுவதற்காக அல்லாஹ் நமக்குத் தந்துள்ள இரண்டு சாதனங்களுக்கிடையே ஏன் பாரபட்சம் கட்டுகிறீர்கள்? எனவும் கேட்கின்றனர். சூரியன் விஷயத்தில் இவர்கள் சுட்டிக் காட்டியபடிதான் நாம் நடந்து கொள்கிறோம் என்பது உண்மைதான். ஏன் அப்படி நடந்து கொள்கிறோம் என்றால் சந்திரனுக்குக் கூறிய நிபந்தனைகளை நபி(ஸல்) அவர்கள் சூரியனுக்குக் கூறவில்லை என்பது தான் காரணம் என்று எழுதினார்கள்.

பிறகு 2007ல் பிறை ஓர் விளக்கம் என்ற பெயரில் P.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் ஒரு புத்தகத்தை வெளியிட்டார். அதில் பக்கம் 113ல் கூறுகிறார். சூரியன் மறைந்தவுடன் மஃரிபு தொழ வேண்டும் என்பதுதான் நபி(ஸல்) அவர்களது கட்டளையாகும். சூரியன் மறைந்தது என்பதை எப்படி தீர்மானிக்க வேண்டும் என்பது குறித்து நபி(ஸல்) அவர்கள் எந்த உத்தரவையும் இடவில்லை. மேகமூட்டமான நாட்களில் சூரியன் தென்படாத பல சந்தர்ப்பங்கள் நபி(ஸல்) அவர்களது காலத்தில் வந்ததுண்டு. அது போன்ற நாட்களில் சூரியன் மறைவதைக் கண்டால் மஃரிபு தொழுங்கள் இல்லாவிட்டால் அஸர் நேரம் என்றே கருதி கொள்ளுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறவில்லை. அதுபோல் சூரியன் மறைவதைக் கண்ணால் கண்ட பின்தான் நோன்பு துறக்க வேண்டும் என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறவில்லை. நபி(ஸல்) அவர்கள் காலத்தில் அவர்கள் துஆ செய்தவுடன் மழை பெய்ய ஆரம்பித்து ஆறு நாட்கள் நாங்கள் சூரியனையே பார்க்கவில்லை என்று புகாரீயில் ஹதீஸ் உள்ளது (பார்க்க புகாரி 1013, 1014) ஆறு நாட்களும் சூரியனையோ, அது உதிப்பதையோ, மறைவதையோ பார்க்க முடியவில்லை. இந்த ஆறு நாட்களும் கணித்துத்தான் தொழுதிருக்க முடியும். அநேகமாக சூரியன் மறைந்திருக்கும் என்று கருதும் நேரத்தில்தான் மஃரிபு தொழுதிருக்க முடியும். மேகம் சூரியனை மறைத்தது போல் சந்திரனையும் மறைக்கிறது. சந்திரன் மறைக்கப்படும்போது எப்படியாவது கணித்துக் கொள்ளுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறவில்லை. பிறை தெரியாததால் மேகத்தின் உள்ளே பிறை இருந்தாலும் அது முப்பதாம் நாள்தான். முதல் நாள் அல்ல என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டனர். சூரியனை மேகம் மறைத்த போது கணித்த நபி(ஸல்) அவர்கள் சந்திரனை மேகம் மறைத்த போது கணிக்கக் கூடாது. அது முப்பதாம் நாள்தான் என்று தெளிவாகப் பிரகட னம் செய்து விட்டனர். எனவே தொழுகைக்கும் நோன்புக்கும் ஒரே மாதிரியான அளவுகோல் இருக்க வேண்டிய அவசியமில்லை.

வானியல் கணிப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறுபவர்கள் சுப்ஹு வரை தகவலை எதிர்பார்க்க வேண்டும் என்று கூறுவது ஏன்? கணிப்பை ஏற்று செயல்பட வேண்டியதுதானே? வானியல் மூலம் 1000 வருடங்களுக்கு பிறகுள்ள பிறையையும் கணித்து விடலாம் அல்லவா? என்றும் எழுதியுள்ளார்.

1. சூரியன் மறைவதைப் பார்த்துவிட்டு நபி(ஸல்) அவர்கள் மஃரிபு தொழச் சொல்லவில்லை. 2. சூரியன் மறைவதைப் பார்த்து நோன்பு துறக்க வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் சொல்லவில்லை. 3. சந்திரனுக்குக் கூறியதைப் போன்று நபி(ஸல்) அவர்கள் சூரியனுக்குச் சட்டம் சொல்லவில்லை: இதுதான் P.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் அளித்த பதிலின் சாராம்சம்.

இந்தப் பதில் சரிதானா என்பதைப் பார்ப்போம்: நபி(ஸல்) அவர்களது காலத்தில் சூரியனை பார்த்துத்தான் தொழுகையை நிறைவேற்றினார்கள் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: லுஹ்ர் தொழுகையின் நேரம் சூரியன் உச்சி சாய்ந்ததிலிருந்து ஒரு மனிதனின் நிழல் அவனது உயரம் அளவுக்கு(ச் சமமாக) ஆகி அஸ்ர் நேரத்திற்கு முன்பு வரை உள்ளது. அஸ்ர் தொழுகையின் நேரம் சூரியன் பொன்னிறமாவதற்கு முன்பு வரை உள்ளது. மஃரிபு தொழுகையின் நேரம் செம்மேகம் மறைவதற்கு முன்பு வரை உள்ளது. இஷா தொழுகையின் நேரம் நள்ளிரவு வரை உள்ளது. சுப்ஹு தொழுகையின் நேரம் வைகறை நேரம் ஆரம்பமானதிலிருந்து சூரியன் உதயமாகும் வரை உள்ளது. அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரழி) நூல்: முஸ்லிம் : 1075 மேலும் பார்க்க: முஸ்லிம் 1071,1072,1078,1079, 1080, 1094 புகாரி:550, 554, திர்மிதி : 140, 147, 150 நஸாயி 492, 498, 500, 504, 520 அபூதாவூது 334, 343 இன்னும் இது போன்ற பல நூற்களில் நபி(ஸல்) அவர்களது காலத்தில் சூரியனைப் பார்த்துதான் தொழுகையை நிறைவேற்றி உள்ளார்கள் என்ற செய்தியைப் பார்க்க முடிகிறது. இவ்வளவு ஆதாரங்களையும் கண்டு கொள்ளாமல் மனமுரண்டாக நபி(ஸல்) அவர்கள் சூரியனை பார்த்துத் தொழச் சொல்லவில்லை என்று கூறுகிறார்.

ஒரு வேளை நபி(ஸல்) அவர்களின் கட்டளை இருந்தால் மட்டுமே ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்படிப்பட்டக் கட்டளைகள் ஏதும் சூரிய விஷயத்தில் இல்லை என்று கூறுவாரோ? அப்படியென்றால், நபி(ஸல்) அவர்கள் தொழுகையை ஆரம்பித்தது முதல் ஸலாம் கொடுக்கும் வரை உள்ள ஹதீஸ்கள் அனைத்தையும் எடுத்துப் பார்த்தால் அந்த ஹதீஸ்களில் கட்டளைகள் ஏதும் இருக்காது. நபியின் நடைமுறைகள் மட்டுமே அந்த ஹதீஸ்களில் இருக்கும். இத்தகைய ஹதீஸ்களின் மூலமாகத்தான் நாம் நபிவழிகளில் தொழுது வருகிறோம். இன்னும் ஏராளமான விஷயங்களில் நபியின் செயல்முறையில் அடிப்படையிலேயே நடந்து கொள்ள வேண்டும் என்றும் கூறி வருகிறோம். அப்படியிருக்கையில் சூரியனைப் பார்த்துத் தொழுத நபியின் நடைமுறைகளைக் கைவிட்டது, பிறையைக் கண்ணால் பார்த்துதான் மாதத்தைத் தீர்மானிக்க வேண்டும் என்போர்கள் கருத்துப்படி தவறில்லையா?

அடுத்து புகாரியில் 1014 வரும் ஹதீஸைக் கொண்டு சூரியனைப் பார்க்காமல் தொழலாம் என்று சட்டம் சொல்கிறார். மழை பெய்த ஆறு நாட்களில் கணித்துத் தொழுத நபி(ஸல்) அவர்கள் சூரியன் தெரிய ஆரம்பித்த பிறகும் மழை பெய்த நாட்களில் தொழுததைப் போன்றுதான் தொழுதிருப்பார்களா அல்லது வழமையாகச் சூரிய ஓட்டத்தைப் பார்த்துத் தொழுததைப் போன்று தொழுதிருப்பார்களா? பொதுவாக மழை, குளிர் இன்னும் இதுபோன்ற இடர்பாடுகள் ஏற்படும்போது கடை பிடித்தச் சட்டத்தை இடர்பாடுகள் நீங்கிய பிறகும் அச்சட்டத்தைத் தொடர்ந்து கடைபிடிக்கக் கூடாது. உதாரணத்திற்கு ஒரு ஹதீஃதை பார்ப்போம்.

நாஃபிஉ(ரஹ்) அவர்கள் கூறியதாவது : குளிரும் காற்றும் நிறைந்த ஓர் இரவில் இப்னு உமர்(ரழி) அவர்கள் தொழுகை அறிவிப்பு செய்தார்கள். பிறகு ஓர் அறிவிப்பு (உங்கள்) இருப்பிடங்களிலேயே நீங்கள் தொழுது கொள்ளுங்கள். (அலா! ஸல்லூ ஃபிர்ரிஹால்) என்று அறிவிப்புச் செய்தார்கள். பின்னர் (கடும்) குளிரும் மழையுமுள்ள இரவுகளில் ஓர் அறிவிப்பு (உங்கள்) இருப்பிடங்களிலேயே தொழுது கொள்ளுங்கள் என்று அறிவிக்குமாறு தொழுகை அறிவிப்பாளருக்கு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கட்டளையிடுவார்கள் என்று இப்னு உமர்(ரழி) அவர்கள் கூறினார்கள். நூல்: புகாரி: 666

கடும் குளிர் மற்றும் மழைக்கால நேரங்களில் வீட்டில் தொழுதவர்கள் இந்த தடைகள் நீங்கிய பிறகும் பள்ளிக்கு வராமல் எப்போதுமே வீட்டில் தொழுதால் அது எப்படி தவறாகுமோ, அதைப் போன்றே சூரியன் தென்படாத காலங்களில் கணித்து தொழுதவர்கள் சூரியன் தெரிய ஆரம்பித்த பிறகும் கணித்துத் தொழுவது தவறில்லையா?

மேலும் நபி(ஸல்) அவர்களுடன் இருபது நாட்கள் தங்கி மார்க்கத்தைக் கற்றுக் கொண்ட மாலிக் பின் அல்ஹுவைரிஸ்(ரழி) அவர்களிடம் இன்ன தொழுகையை இன்ன நேரத்தில் தொழுங்கள். இன்ன தொழுகையை இன்ன நேரத்தில் தொழுங்கள் என்று கூறி அவர்களது ஊருக்கு அனுப்பி வைத்தார்கள். நூல்: புகாரி 685

மாலிக்பின் அல்ஹுவைரிஸ்(ரழி அவர்கள் தனது ஊருக்குச் சென்று மக்களுக்குத் தொழுகை அட்டவணை போட்டுக் கொடுத்து தொழுகை நேரங்களை இப்படி அறிந்து கொள்ளுங்கள் என்று கூறியிருப்பார்களா? அல்லது சூரிய ஓட்டத்தைப் பார்த்து இன்ன நேரத்தில் இன்ன தொழுகையைத் தொழுங்கள் என்று கூறியிருப்பார்களா?

பிறையைக் கண்களால் பார்த்துத்தான் நோன்பை ஆரம்பிக்க வேண்டும் என்று கூறுபவர்கள் அவர்கள் கூறுவதில் உண்மையாளர்களாக இருந்தால் என்னை எவ்வாறு தொழப் பார்த்தீர்களோ அவ்வாறே தொழுங்கள் என்ற ஹதீஸின் அடிப்படையில் நபி (ஸல்) அவர்கள் சூரிய ஓட்டத்தை அறிந்து தொழுபவராகவும், சூரியன் தென்படாத காலங்களில் கணித்து தொழுபவராகவுமே பார்த்துள்ளோம். ஆகவே, நாங்களும் அப்படித்தான் தொழுவோம் என்று கூறி தங்களது தொழுகை அட்டவணைகளை தூக்கி எறிய வேண்டுமே செய்வார்களா?

பிறை விஷயத்தை எடுத்துக் கொண்டு, நூறு சதவீதம் நபியின் வார்த்தையை அப்படியே ஏற்றுக் கட்டுப்பட்டு நடப்பவர்களைப் போன்று தங்களைக் காட்டிக் கொள்பவர்களின் இரட்டை நிலையை புரிந்து கொள்ள மற்றொரு ஹதீஸை பாருங்கள்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: வெப்பம் கடுமையாகிவிட்டால் வெப்பம் தணிந்த பின் தொழுங்கள். நூல்: புகாரி 553 முஸ்லிம் 1082 திர்மிதி 145

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் வெப்பமான காலங்களில் வெப்பம் தணிகின்ற நேரத்தில் (லுஹர் தொழுகையை) தொழுவார்கள். குளிர் காலத்தில் (லுஹர் தொழுகையை) துரிதப்படுத்துவார்கள். நுல்: நஸாயி 495

பிறையைக் கண்ணால்தான் பார்க்க வேண்டும் என்று அடம் பிடிப்பவர்கள் வெயில் காலத்தில் லுஹரை தாமதமாகவும் குளிர்காலத்தில் லுஹரை முற்படுத்தியுமா தொழுகிறார்கள்? எல்லாக் காலத்திற்கும் ஒரே நேரத்தைத் தீர்மானித்துக் கொண்டு தொழுது வருகிறார்கள். அதைவிடக் கடுமையான வஹீயான 27:22ல் கூறுவது போல் மெலிந்த ஒட்டகத்தில் அன்று ஹஜ்ஜுக்குச் சென்றது போல் இன்றும் செல்லாமல், விமானத்தில் செல்கிறார்கள். இந்தச் செயல்கள் தவறாகத் தெரியவில்லையா? ஆனால், துல்லியக் கணக்கீட்டு முறையில் நோன்பை ஆரம்பித்தால் அது தவறு என்கிறார்கள். இது என்ன நிலைபாடோ? பிறையைக் கண்ணால் பார்க்க வேண்டும் என்று வஹீ மூலம் நபி(ஸல்) அவர்கள் இட்டக் கட்டளையை நாம் கணக்கீடு மூலம் மாற்றுவதாகக் கூறுபவர்கள் வஹீ மூலம் தொழுகை நேரங்களை சூரிய ஓட்டத்தை வைத்து தீர்மானித்த நபியின் கட்டளையை (பார்க்க நஸாயீ 498) சப்தம் இல்லாமல் கை விட்டது ஏன்?

உண்மையை மறைத்தல்: சூரியன் மறைவதைப் பார்த்துவிட்டு நோன்பு துறக்க வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறவில்லை. ஆகவே முன்கூட்டியே நோன்பு துறக்கும் நேரத்தை கணித்து அதன் அடிப்படையில் செயல் படலாம் என்றும் கூறுகிறார். இவர்கள் ஹதீஃதில் உள்ள விஷயத்தை இல்லை என்று கூறி அப்பாவி மக்களை நம்ப வைக்கிறார்கள். மக்களும் அவர்கள் கூறுவதை உண்மையென நம்பி அப்படியே செயல்படுகிறார்கள். நோன்பை துறக்கும்போது சூரியன் மறைவதை நபி(ஸல்) பார்த்தார்களா? இல்லையா? நபமொழியைப் பாருங்கள் :

அப்துல்லாஹ் பின் அபி அவ்ஃபா(ரழி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம். சூரியன் மறைந்ததும் ஒரு மனிதரிடம் (ஒட்டகத்திலிருந்து) “இறங்கி நமக்காக மாவு கரைப்பீராக!’ என்றார்கள். அதற்கு அவர், “அல்லாஹ்வின் தூதரே! மாலை நேரம் (முழுமையாக) முடியட்டுமே’ என்றார். நபி(ஸல்) அவர்கள் இறங்கி நமக்காக மாவு கரைப்பீராக! என்றார்கள். அதற்கு அவர், “பகல் இன்னும் எஞ்சியிருக்கிறதே” என்றார். நபி(ஸல்) அவர்கள் இறங்கி நமக்காக மாவு கரைப்பீராக! என்றார்கள். அவர் இறங்கி மாவு கரைத்தார். பின்னர் நீங்கள் இங்கிருந்து (கிழக்கிலிருந்து) இரவு முன்னோக்கி வருவதைப் பார்த்தால் நோன்பாளி நோன்பு துறக்க வேண்டும் என்று தமது விரலால் கிழக்கே சுட்டிக் காட்டிக் கூறினார்கள். நூல்கள்: புகாரி: 1956 முஸ்லிம்: 2008

சூரியன் மறைவதைப் பார்த்துதான் நபி(ஸல்) அவர்கள் நோன்பைத் துறந்தார்கள் என்ற ஹதீஃத் இருக்க இந்த ஹதீஃதையெல்லாம் மறைத்துக் கொண்டு நபி(ஸல்) அவர்கள் சூரியனைப் பார்த்து நோன்பு துறக்கச் சொல்லவில்லை என்பவர்களை நாம் என்னவென்று சொல்வது? மேலும் பிறை பார்த்து நோன்பு வையுங்கள் என்ற ஹதீஸில் உள்ள பார்த்து என்ற அதே வாசகம் தான் இந்த ஹதீஸிலும் உள்ளது. இதையெல்லாம் மறைத்துக் கொண்டுதான் பிறை பார்த்து நோன்பு வையுங்கள் என்று கூறிக்கொண்டே சூரியனைப் பார்த்து நோன்பு துறக்காமல் கடிகாரத்தைப் பார்த்து நோன்பு துறந்து கொண்டு இரட்டை நிலையை மேற்கொள்கிறார்கள் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும். சூரியனுக்கு ஒரு சட்டம் சந்திரனுக்கு ஒரு சட்டம் என்ற அடிப்படையில் செயல்படுவது அல்லாஹ்வின் நூலில் உள்ள ஒரு பகுதியை ஏற்றுக்கொண்டு மறு பகுதியை நிராகரிப்பது போன்றதாகும். எனவே, இத்தகையவர்கள் நாங்கள் எடுத்து வைக்கும் ஆதாரங்களை கோபப்படாமல் நிதானமாகப் படித்து உண்மையை உணர வேண்டும்.

“”மனிதர்களே! உங்கள் ரப்பிடமிருந்து உங்களுக்கு உண்மை வந்து விட்டது. நேர்வழி நடப்பவர் தனக்காகவே நேர்வழி நடக்கிறார். வழிகெடுபவர் தனக்கு எதிராகவே வழிகெடுகிறார். நான் உங்கள் மீது பொறுப்பாளன் அல்லன்” என்று (நபியே!) கூறுவீராக!

எஸ்.முஹம்மது ஸலீம், தொடர்புக்கு : 9842696165

அந்நஜாத்

Leave a Comment

Previous post:

Next post: