நாம் இன்று ஒரு மோசமான சூழ்நிலைக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். இஸ்லாமிய குழுக்களிடையே காணப்படும் பிரிவினை வாதத்தால் முஸ்லிம் உம்மாவை கூறுபோடும் அவல நிலைதான் அது. இஸ்லாத்தின் வளர்ச்சிக்காக பாடுபடும் பல குழுக்களின் முயற்சிகளால் நன்மைகள் சில ஏற்பட்டிருப்பினும், இக்குழுக்களால் முஸ்லிம்களிடையே ஒற்றுமையின்மைக்கான விதை தூவப்பட்டுள்ளது. முஸ்லிம்களிடம் ஜக்கியமற்ற தன்மை நிலவுவதை அல்லாஹ் விரும்பவில்லை. அவன் இதனை தனது குர்ஆனில் இவ்வாறு கண்டிக்கிறான்.
مِنَ الَّذِينَ فَرَّقُوا دِينَهُمْ وَكَانُوا شِيَعًا كُلُّ حِزْبٍ بِمَا لَدَيْهِمْ فَرِحُونَ எவர்கள் தங்கள் மார்க்கத்தில் பிரிவினைகளை உண்டாக்கி (பல) பிரிவுகளாகப் பிரிந்து விட்டனரோ; (அவர்களில் ஆகி விட வேண்டாம். அவ்வாறு பிரிந்த) ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்களிடமிருப்பதக் கொண்டே மகிழ்வடைகிறார்கள். (30:32)
மிகச் சாதாரண அளவில் தானும் முஸ்லிம்களுக்கிடையில் ஜக்கியமினை நிலவுவதற்கு எதிராக ரசூலுல்லாஹ்(ஸல்) அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
ஒரு முறை ரசூலுல்லாஹ்(ஸல்) அவர்கள் போருக்காக தனது தோழர்களுடன் சென்றிருந்த போது முஹாஜிரீன்களில் ஒருவர், அன்சாரிகளில் ஒருவரை வேடிக்கைக்காக முதுகில் தட்டினார். இச்செயல் அந்த அன்சாரிக்கு ஆத்திரத்தை மூட்டியது. அவர் ‘ஓ’ அன்சாரிகளே! எனக் கூவினார். இதையடுத்து அந்த முஹாஜிர் ‘ஓ’ முஹாஜிர்களே! என சப்தமிட்டார். இதை செவியுற்று வெழியே வந்த நபி(ஸல்) அவர்கள் “ஏன் ஜாஹிலியத்தின் அழைப்புகளை விடுக்கிறீர்கள்!” எனக் கேட்டார்கள்.”அவர்களுக்கிடையில் என்ன தகராறு?” என வினவினர். அப்போது அங்கு நடந்த விஷயம் கூறப்பட்டது. அப்போது அவர்கள் ‘இந்த மோசமான விஷயத்தை விட்டுவிடுங்கள்’ என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)
இந்த இரு மனிதர்களும் முஹாஜிர்களையும் அன்சாரிகளையும் தமது உதவிக்காக அழைத்ததை இவ்விதமாகவே நபி(ஸல்) அவர்கள் கண்டித்தார்கள். இரு குழுவினரின் பெயர்களும் குர்ஆனிலும், சுன்னாவிலும் குறிப்பிடப்பட்டிருந்த போதும் நபி(ஸல்) அவர்கள் இவர்களின் செயலைக் கண்டிக்கத் தவறவில்லை. ஏனெனில் இவர்களின் அழைப்பில் பிரிவினைவாதம் மேலோங்கியதே காரணம்.
ஆனால் நாம் இன்று ஜமாஅத்துகளாகவும் ஹிஸ்புகளாகவும், ஹரகா(இயக்கங்கள்)களாகவும் பிரிந்து போயுள்ளோம். “இது எமது இயக்கம்” “எமது தலைவர்” எனும்போது இயக்க அங்கத்துவமானது நமது விசுவாசத்தை விட பலம் மிக்கதாக இருக்கிறது.
ஆகவே உண்மையான இஸ்லாமிய சகோதரத்துவத்தை அழிக்கும் பிரிவினைவாதத்தை இல்லாதொழிக்க ஒன்றிணையுமாறு நாம் முஸ்லிம்களுக்கு வேண்டுகோள் விடுகிறோம். அல்லாஹ்வை பயப்படுவதைவிட இயக்கங்கள், பிரிவுகளின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடப்பது ஆரோக்கியமானதல்ல.
பிரிவினை என்ற பாவத்துக்குள் வீழ்ந்தவர்களுக்கு நாம் தரும் அறிவுரை: உங்கள் தலைவர்களின் கூற்றைக் கொண்டு குர்ஆன் சுன்னாவை அளக்காமல் குர்ஆன் சுன்னாவைக் கொண்டு உங்கள் தலைவர்களின் வார்த்தைகளை அளந்து கொள்ளுங்கள்.
“யாரொருவர் ஒரு பிரிவின் கீழ் இருந்து அதற்காகப் போராடி அதன் நிமித்தமாகவே கோபமுற்று அதற்காக அழைப்பு விடுத்து அதற்கு உதவி செய்துவரும் வேளையில் கொல்லப்படுகிறாரோ அவர் ஜாஹிலியாவிலேயே மரணக்கிறார்” என நபி(ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள். (நூல்: சுனன் நஸயீ)
அல்ஹிதாயா மாத இதழ் மே-2000