நம் மனம் திருந்தினால்….

in பொதுவானவை

நாம் முஸ்லிம்களாக பிறந்தும் அதன் அருமைப் பெருமையை உணராமல் வாழ்ந்து இருக்கிறோம். கடந்த காலங்களில் அறிந்தும் அறியாமலும் செய்த தவறுகளோ மிக அதிகம். பொன்னான நேரத்தை வீணாக்கினோம். மனம் போன போக்கில் வாழ்ந்து வந்தோம். அல்லாஹ்வை மறந்து ஷைத்தானின் அடிச்சுவடியைப் பின்பற்றினோம்.

ஆனால் இன்று நாம் தொழுகிறோம், நோன்பு வைக்கிறோம் இன்னும் குர்ஆன் ஹதீஸ்களை படிக்கிறோம். ஆனால் இவைகளை ஒருகாலத்தில் ஏறெடுத்தும் பார்த்ததில்லை. நாம் இன்று திருந்தி வாழ்ந்தாலும் ஏனோ நாம் கடந்து வந்த பாதையை எண்ணிப்பார்த்தால் உள்ளம் நடுங்குகிறது. எப்படி எப்படியெல்லாம் நம் வாழ்க்கையில் நடந்து விட்டது. இப்படி நம் வாழ்க்கையில் எதுவும் நடக்காமலிருந்தால் நல்லாயிருக்குமே. ஆனால் நடந்துவிட்டதே என்று வேதனைப்படுகிறோம்.

இறைவன் நம் பாவங்களை மன்னிப்பானா? மன்னிக்கமாட்டானா? மன்னித்து நம்மை சுவர்க்கத்தில் நுழையவைப்பானா? அல்லது நரகில் தள்ளுவானா? போன்ற கவலைகள் நம் உள்ளத்தில் தேங்கியுள்ளது. நம்மில் எழும் இக்கேள்விகளுக்கெல்லாம் எல்லாம் வல்ல இறைவன் தன் இறுதி வேதத்தில் இவ்வாறு பதில் கூறுகிறான்.

7:153. ஆனால் தீய செயல்கள் செய்து கொண்டிருந்தோர் (மனந்திருந்தி), தவ்பா செய்து (பாவங்களிலிருந்து விலகி உண்மையாக) நம்பிக்கை கொண்டால் நிச்சயமாக அதன்பின் உம்முடைய இறைவன் மன்னிப்பவனாகவும், மிக்க கிருபை செய்பவனாகவுமிருக்கின்றான்.

நபி(ஸல்) அவர்களின் காலத்தில் அன்றைய அரபு மக்கள் அனாச்சாரங்களில் ஈடுபட்டிருந்தனர். என்பதை யாவரும் அறிவர். கொலை கொள்ளை, குடி, விபச்சாரம் போன்ற எல்லா பாவங்களையும் செய்தும் வந்தனர். அப்படிப்பட்டவர்கள் தாங்கள் திருந்தி உண்மையான இஸ்லாத்தின் பக்கம் வந்த பின் அவர்களைப்பற்றி அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்.

25:68. அன்றியும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு நாயனைப் பிரார்த்திக்கமாட்டார்கள்; இன்னும், அல்லாஹ்வினால் விலக்கப்பட்ட எந்த மனிதரையும் அவர்கள் நியாயமின்றிக் கொல்லமாட்டார்கள், விபசாரமும் செய்யமாட்டார்கள் ஆகவே, எவர் இவற்றைச் செய்கிறாரோ, அவர் தண்டனை அடைய நோிடும்.

25:69. கியாம நாளில் அவருடைய வேதனை இரட்டிப்பாக்கப்படும்; இன்னும் அதில் இழிவாக்கப்பட்டவராக என்றென்றும் தங்கிவிடுவர்.

25:70.ஆனால் (அவர்களில் எவர்) தவ்பா செய்து ஈமான் கொண்டு, ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கிறார்களோ அவர்களுடைய பாவங்களை அல்லாஹ் நன்மையாக மாற்றிவிடுவான். மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கிருபையுடையோனாகவும் இருக்கின்றான்.

இவ்வசனத்தை அறிந்த அன்றைய அரபு மக்களில் ஒரு சிலர் ரசூல் (ஸல்) அவர்களிடம் வந்து தாங்கள் இஸ்லாத்தில் இணைவதற்குமுன் கொலை கொள்ளை விபச்சாரங்களில் அதிகமாக ஈடுபட்டிருந்ததாகவும் மேற்படி வசனப்படி இறையடியாளர்களாக முடியுமா? அதற்கு ஏதும் பரிகாரமுள்ளதா? எங்களூக்கு அல்லாஹ்வின் அருளும் மன்னிப்பும் கிடைக்குமா? என வினவினார்கள். அதற்கு பதிலாக அல்லாஹ் அருளிய இறைவசனத்தை நபி(ஸல்) அவர்கள் ஓதி காட்டினார்கள்.

39:53 என் அடியாளர்களே! எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்து கொண்டபோதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் நம்பிக்கை இழந்து விடவேண்டாம். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன், மிக்க கருணையுடைவன் என்று நபியே நீர் கூறுவீராக.

மேலும் அல்லாஹ் தன் அடியார்களின் பாவங்களை மன்னிக்கக்கூடியவன் என்பதை அல்குர்ஆனில் நூற்றுக்கணக்கான வசனங்கள் நமக்கு நினைவூட்டுகின்றன.

9:104 நிச்சயமாக அல்லாஹ் தன் அடியாளர்களிடமிருந்து தவ்பாவை – மன்னிப்பு கோருதலை ஒப்புக் கொள்கிறான் என்பதையும், தர்மங்களை அங்கீகரிக்கிறான் என்பதையும் அவர்கள் அறியவில்லையா? மெய்யாகவே அல்லாஹ் தவ்பாவை ஏற்று அருள்புரிபவன்.

3:89. எனினும், இதன்பிறகு (இவர்களில்) எவரேனும் (தம் பாவங்களை உணர்ந்து) மன்னிப்புக் கோாித் தங்களைச் சீர்திருத்திக் கொள்வார்களானால், (மன்னிப்புக்கிடைக்கக்கூடும்) நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்போனாகவும், அளப்பருங் கருணையுள்ளவனாகவும் இருக்கின்றான்.

4:110. எவரேனும் ஒரு தீமையைச் செய்துவிட்டு, அல்லது தமக்குத் தாமே அநியாயம் செய்து பின்னர் அவர்(மனப்பூர்வமாக) அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்பாரானால் அவர் அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும் மிக்க கருணை உடையவனாகவும் காண்பார்.

{ 1 comment… read it below or add one }

NISAR AHAMED July 21, 2018 at 1:16 pm

அருமையான பதிவு.
ஜஸாகல்லாஹு கைரா (அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக) 

Reply

Leave a Comment

Previous post:

Next post: