பாலியல் வன்கொடுமை

Post image for பாலியல் வன்கொடுமை

in அழிவுப் பாதை

இன்றைய அறிவியல் உலகில் மேல்நாட்டுக் கலாச்சாரத்தில் மூழ்கி இரண்டு கால் மனிதன் இரண்டு கால் மிருகமாக மாறி வருகிறான். இன்னும் நேரடியாகச் சொல்வதாக இருந்தால் மிருகங்களை விட கேடுகெட்ட நிலைக்கு இன்று மனிதன் ஆளாகியுள்ளான்.

உதாரணமாக இன்று இந்தியாவையே ஆட்டிப் படைக்கும் பருவம் அடையாச் சிறுமிகளிடமும் வன் புணர்ச்சியில் ஈடுபடும் துன்மார்க்கர்களை எடுத்துக் கொள்வோம். அவர்கள் விஷயத்தில் எப்படிப்பட்ட மாறுபட்ட மனிதக் கருத்துக்களைப் பார்க்கிறோம். கொலையாளிக்குக் கூட மரண தண்டனை கொடுக்கக்கூடாது என்பவர்களும் இந்த துன்மார்க்கர்களுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் எனக் கூப்பாடு போடுகின்றனர். இந்த விஷயத்தில் கூட மக்களிடையே மாறுபட்டக் கருத்துக்களைப் பார்க்கிறோம். இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் மனிதர்களிடையே மாறுபட்டக் கருத்துக்கள் ஏற்படுவது மனித இயல்பு.

அதிகமான மக்களின் கருத்து எதுவோ அதன்படி செயல்படுவதுதான் சரி என்ற ஜனநாயக சிந்தனையும் வழிகேடு; அவர்கள் வெறும் யூகங்களையும், கற்பனைகளையும் கொண்டு நேரான வழியை கோணல் வழிகளாக ஆக்கிவிடுவார்கள் என்று இறைவன் குர்ஆனின் 6:116 இறைவாக்கில் எச்சரிக்கிறான்.

இன்று நேற்றல்ல; ஆதிகாலம் தொட்டு சகல தீமைகளுக்கும் ஆணிவேர் மனித அறிவை மயக்கி அவனை மிருகமாக்குவது போதை தரும் மதுபானங்களே. நேர்மையான மனசாட்சியுள்ளவனும் குடித்துப் போதை தலைக்கேறிவிட்டால் கொலை, கற்பழிப்பு, திருடு என சகல பாவங்களையும் செய்யத் துணிந்து விடுவான். இது பற்றிய ஒரு கதையே உண்டு.

ஒரு நடுத்தர மனிதனிடம் ஒரு பெண்ணுடன் இணைந்து அவளது கற்பை சூரையாடு என்று சொல்லப்பட்டது; அவன் மறுத்துவிட்டான். ஒரு சிறுவனைக் காட்டி அவனைக் கொலை செய் என்று சொல்லப்பட்டது; அதற்கும் மறுத்துவிட்டான். அடுத்து ஒரு கிளாஸ் மதுவைக் கொடுத்துக் குடி என்று சொல்லப்பட்டது. இதில் என்ன தவறு ஏற்படப் போகிறது என்று எண்ணி அதை வாங்கிக் குடித்து விட்டான். விளைவு போதை தலைக்கேறி காமவெறி முற்றி அப்பெண்ணை கற்பழிக்க முற்பட்டான். வெறியில் அதைத் தடுத்த சிறுவனையும் கொலை செய்துவிட்டு அப்பெண்ணைக் கற்பழித்து விட்டுக் கொலையும் செய்து விட்டு தப்பி ஓடிவிட்டான் என்பதே அக்கதை.

இப்போது சிந்தியுங்கள். மதுவை விட கெடுதி இப்பாரினில் உண்டா? இதோ படைத்த இறைவனே கூறுகிறான். மது, சூதாட்டம் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்(தூதரே!) கூறும். அவ்விரண்டிலும் பெரும் தீங்கும், மனிதர்களுக்கு (சிறிது) பலன்களும் உள்ளன. அவ்விரண்டிலுள்ள பலனை விட தீங்கு அதிகம். (2:219) (மேலும் பார்க்க: 5:90,91) அரசே டாஸ்மாக் கடைகள் நடத்தி நாட்டில் மது ஆறாக ஓட வைத்திருக்கிறது. இன்று நாட்டில் நடக்கும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கற்பழித்துக் கொலை இன்னும் இவை போல் பஞ்சமா பாவங்கள், சாலை விபத்துகள் அனைத்துக்கும் குடிப்பழக்கமும், சினிமா காமக் காட்சிகளுமே முழுக் காரணமாக இருக்கின்றன.

இன்று மதுப்பழக்கமில்லாத மந்திரிகளோ, எம்.பி.க்களோ, எம்.எல்.ஏக்களோ, எம்.சி.க்களோ இருந்தால் அது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். காவல் துறையினரே போதையில்தான் மிதக்கின்றனர். இந்த நிலையில் நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழியுமா? சீர்படுமா? சொல்லுங்கள். நாட்டையும், நாட்டு மக்களையும் கெடுத்துக் குட்டி சுவராக்கும் இம்மதுவையும், காமக் காட்சிகள் நிறைந்த சினிமாவையும் நாட்டை விட்டே துரத்த அரசுகள் முன்வருகின்றனவா? இல்லையே! காரணம் அனைத்துத் துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

இன்று மக்கள் உணர்ச்சிவசப்பட்டு எங்கும் ஆர்ப்பாட்டம், போராட்டங்களில் ஈடுபடக் கார ணமான சிறுமிகளை வன்புணர்ச்சிக்கு ஆளாக்கிக் கொடுமைப் படுத்துவதை எடுத்துக் கொள்ளுங்கள். பருவ மங்கைகளின் அரை நிர்வாணம், முக்கால் நிர்வாணம் இவற்றைப் பார்த்து ஆண்கள் காமக் கிளர்ச்சி அடைகிறார்கள் என்றால் அதில் பொருள் இருக்கிறது. ஆனால் பால்மணம் மாறாத சிறுமிகளைப் பார்த்து காமக் கிளச்சி ஏற்படுமா? ஏற்படுகிறதே என்ன காரணம்? அப்படி ஈடுபடுகிறவர்களைப் பிடித்துப் பரிசோதித்துப் பாருங்கள். முழு போதையிலேயே இருப்பார்கள். போதையில் மதி மயங்கியே அந்த ஈனச் செயலில் ஈடுபடுகிறார்கள்.

இந்த நிலையில் மக்களைப் போதையில் தடுமாறச் செய்யும் மதுவையும் லஞ்சத்தையும் நாட்டை விட்டு அப்புறப்படுத்தி நாட்டையும், மக்களையும், சுத்தப்படுத்துவதை விட்டு, அதைக் கண்டு கொள்ளாமல், இவர்களும் போதைக்கும் லஞ்சத்திற்கும் அடிமையாக இருந்து கொண்டு, சிறுமிகளிடம் வன்புணர்ச்சியில் ஈடுபடுகிறவர்களுக்கு இப்படித் தண்டனை கொடுக்க வேண்டும், அப்படித் தண்டனை கொடுக்க வேண்டும், மரணத் தண்டனை அளிக்க வேண்டும் என்றெல்லாம் பிதற்றுவது தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் ஈனச் செயலே. ஆயினும் ஜனநாயக ஆட்சி முறையில் இப்படியெல்லாம் அறிவுக்குப் பொருந்தாத கருத்துக்களைச் சொல்லி மக்களின் வாக்குச் சீட்டில் குறி வைப்பது அரசியல் வியாபாரிகளின் வாடிக்கை!

Leave a Comment

Previous post:

Next post: