பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் 1000 வருடங்களுக்கு முன்பே தெளிவாக அடையாளம் காட்டப்பட்டிருந்தும், இன்றளவும் அவை மக்களால் நிராகரிக்கப்படாமல் போனதற்கு காரணம் என்ன? முஸ்லிம் என்று சொல்லிக் கொள்பவர்களில் பெரும்பாலோர் அவைகளை மர்க்கமாக அங்கீகரிக்க என்ன காரணம்? மக்கள் மனங்களில் அவை ஆழமாக வேரூன்றியது எதனால் என்பதைக் காண்போம்.
பழமையை நீண்ட காலமாக நடைமுறையில் இருப்பதை விரும்பக் கூடியதாகவே மக்களின் மனப்பான்மை அமைந்துள்ளது. ஷைத்தான் உண்மைக்கு முரணானதை மக்கள் மனங்களில் விதைத்து விடுகிறான். மக்களும் அவற்றில் மூழ்கிவிடுகிறார்கள். காலங்கள் சில கடந்தபின் “அவர்கள் செய்யும் காரியங்கள் எவ்வளவு தவறானவை” என்று எவ்வளவு ஆதாரங்களுடன் தெளிவாக எடுத்துக் காட்டினாலும், அந்தத் தவறான வழியிலிருந்து விடுபட்டு நல்வழியை நாட அவர்கள் விரும்புவதேயில்லை. தாங்கள் இவ்வளவு காலம் செய்ததே நேர்வழி என்று எண்ணி அதனைத் தொடர்ந்து செய்யவே விரும்புகின்றனர்.
கடந்த காலங்களில் இறைவனின் செய்தியை மக்களுக்கு அறிவித்த நபிமார்களைப் புறக்கணித்ததற்கும் இந்த மனப்பான்மையே காரணமாக அமைந்திருந்ததது. இன்றும் குர்ஆன் ஹதீதுகளை எடுத்துச் சொல்லும்போது அதே மனப்பான்மைத்தான் அவர்களை குர்ஆன், ஹதீஸ்களைப் புறக்கணிக்கச் செய்து கொண்டிருக்கின்றது. தங்கள் தவறிலேயே அவர்களை நிலைத்திருக்கச் செய்து விடுகின்றது.
உதாரணமாக ‘ பராஅத்’ விஷேச அமல்கள் பற்றிய பற்றிய ஹதீஸ்கள் இட்டுக் கட்டப்பட்டதும், பலவீன மானதாகும் என்று அன்றே ஹதீஸ் கலை வல்லுநர்கள் அடையாளம் காட்டி இருந்தும் அதனை அவர்கள் விடுவதற்குத் தயாராக இல்லை. தங்கள் செயலை எப்படியும் நியாயப்படுத்தியே தீருவது என்ற எண்ணத்தை அவர்கள் பெற்றிருப்பதை நாம் காணமுடிகின்றது. இந்த மனப்பான்மை மக்கள் மனங்களில் ஆழமாக வேரூன்றியுள்ளதால், பலவீனமான இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் அடையாளம் காட்டப் பட்டிருந்தும் அவர்கள் இன்றளவும் அவற்றை நிராகரிக்க முன் வருவதில்லை.
மக்களின் இந்த மனப்பான்மையைப் புரிந்து கொண்ட மார்க்கத்தை வயிற்றுப் பிழைப்பாகக் கொண்ட போலி அறிஞர்கள் அந்த மனப்பான்மையை மேலும் வளர்த்தனர். ‘கோயபல்ஸ்’ தத்துவப்படி அந்தப் பொய்களையே மக்கள் மத்தியில் திரும்பச் திரும்பச் சொல்லி அதை ஊண்மை என்று நம்ப வைத்தனர். வணக்கம் என்ற பெயரால் நன்மை தானே மறுமையில் நன்மையை மிக அதிகமாக அடைந்து கொள்ளலாம் என்ற தவறான எண்ணத்தின் அடிப்படையில் பாமர மக்களிடையே இந்த பலவீனமான இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் முக்கிய இடத்தைப் பெற்றன. இஸ்லாத்திற்கு குர்ஆன் ஹதீஸுக்கு முற்றிலும் முரணான சூபிஸ கொள்கையை இஸ்லாத்தின் பெயரால் மக்கள் மத்தியில் நுழைத்ததால் பலவீனமான இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் நன்றாக மக்கள் மத்தியில் ஆழமாக பதிந்திட இதுவும் ஒரு காரணமாகிறது.
ஒருபுறம் அல்லாஹ்வுக்கு அஞ்சிய அறிஞர்கள் போலி ஹதீஸ்களை அடையாளம் காட்டிக் கொண்டிருக்க மறுபுறம் இந்த போலி அறிஞர்கள் அவைகளை மக்கள் மத்தியில் பரவச் செய்து கொண்டிருந்தனர். மக்கள் விருப்பத்தை நிறைவு செய்யும் விதமாக இந்தப் போலிகளின் போலி ஹதீஸ்கள் அமைந்திருந்ததால் உண்மை அறிஞர்கள் புறக்கணிக்கப்பட்டனர். இவர்கள் தான் மக்கள் மத்தியில் மதிப்பைப் பெற முடிந்தது. அன்றும் இன்றும் இதே நிலைதான்.
மக்கள் மனோ இச்சைப்படி நடந்தால் தான் அவர்களால் தங்கள் ஆட்சிக்கு ஆபத்து இல்லையென்று எண்ணிய முஸ்லிம் மன்னர்களும் இதற்கு ஒரு வகையில் காரணமானார்கள். மார்க்கத்தின் பெயரால் எவ்வளவு அனாச்சராங்கள் நடந்தாலும் நபி(ஸல்) அவர்கள் பெயரால் எவ்வளவு பொய்கள் கூறப்பட்டாலும் அதனை அவர்கள் கண்டு கொள்ளாமலிருந்தனர். அதற்கு எதிராக முயற்சியை மேற்கொண்டால் மக்கள் செல்வாக்கைப் பெற்றிருந்த போலி அறிஞர்களின் எதிர்ப்பையும் பெரும்பான்மை மக்களின் எதிர்ப்பையும் சந்திக்க நேரிடும் என்ற அச்சத்தின் காரணமாக இதற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காதிருந்தனர்.
உலக ஆதாயத்தையே நோக்கமாக கொண்ட போலி அறிஞர்களுக்கு பதவி அதிகாரங்களை வழங்கினர். அந்த அதிகாரத்தின் துணைக்கொண்டு இந்த போலி அறிஞர்கள் நன்றாகவே இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை மக்கள் மனங்களில் ஆழமாகப் பதியச் செய்தனர். தீமைகளில் ஒருவருகொருவர் துணை போனார்கள். இவையே பொய்கள் மக்கள் மனங்களில் மெய்யெனத் தோன்றியதற்கான காரணங்களாகும்.
நல்லாட்சி நடத்திய நாற்பெரும் கலீபாக்கள் கலத்தில் இதுபோன்ற பொய்கள் காணப்பட்டபோது உடனுக்குடன் அவற்றுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். அனாச்சாரங்கள் தலைதூக்க அவர்கள் இடம் தரவே இல்லை. அதனால் மார்க்கம் கலப்படமில்லாமல் பாதுகாப்பாக இருந்தது.
ஹதீஸ்கள் என்றால் இஸ்லாமிய வழக்கில் நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் மட்டுமேயாகும். இன்று மக்களிடையே காணப்படும் ஹதீஸ்கள் தெளிவாகத் தரம் பிரிக்கப்பட்டு அதாரப்பூர்வமான ஹதீஸ்கள் பலவீனமான ஹதீஸ்கள் இட்டுக் கட்டப்பட்ட ஹதீஸ்கள் என சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவாக அடையாளம் காட்டப்பட்டு விட்டன.
மக்களின் அறியாமையையும், முன்னோர்களின் கண் மூடிப் பின்பற்றலும் தவறான பழக்கத்தையும் தங்களுக்கு சாதகமாகப் பயனபடுத்தி போலிகள் தங்கள் அற்ப உலக ஆதாயத்திற்காக அடையாளம் காட்டப்பட்ட, இட்டுக்கட்டப்பட்ட, பலவீனமான ஹதீஸ்களை நன்கு தெரிந்து கொண்டே மக்களிடையே பரப்பி வருகின்றனர். எனவே மறுமையில் அல்லாஹ்வின் பொருத்தத்தையும் உயர் பதவிகளையும் அடைய விரும்பும் உண்மை முஸ்லிம்கள் இட்டுக்கட்டப்பட்ட, பலவீனமான ஹதீஸ்களை விட்டு, ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மட்டும் எடுத்து நடக்க அன்புடன் அழைக்கிறோம்.
நபிவழி தொகுப்பு வரலாறு