இவ்வுலக வாழ்க்கைக்கு இன்றியமையாதது பொருளாதாரம். “அருளில்லார்க்கு அவ்வுலகில்லை, பொருளில்லார்க்கு இவ்வுலகில்லை” என்ற முதுமொழி இதை உணர்த்தும் படைத்த இறைவன் மனிதனுக்கென்று அருளிய அருள் மார்க்கம் இவ்வுலகில் மனிதனுக்குரிய பங்கையும் தெளிவுபடுத்தி கூறியுள்ளது. மறுஉலக பேருகளை இவ்வுலகிலேயே உழைத்துப்பெற வேண்டும் என்று விதித்திருக்கிறான் அல்லாஹ். உலக இன்பங்களை துறந்து காடு சென்று கடுந்தவம் செய்வது கொண்டே ‘முக்தி’ பெறமுடியும் என்ற கட்டாய விதியை இறைவன் விதிக்கவில்லை.
இவ்வுலக இன்பங்களை வரையறைக்குட்பட்டு முறையாக அனுபவித்துக்கொண்டே மறுமைப் பேறுகளையும் பெறும் வழியை இஸ்லாம் போதிக்கிறது. மறு உலகப் பேறுகளை நிறைவாகப் பெறுவதற்கு முறையான வழிகாட்டுதலையும் தெளிவாகத் தருகிறது இஸ்லாமிய மார்க்கம். இரண்டும் பின்னிப் பிணைந்த ஓர் உன்னத நிலையைத்தான் இஸ்லாம் போதிக்கிறது.
ஆனால் ஷைத்தான் அதற்கு மாறாக ஒன்று இவ்வுலக பேறுகளையே சதமாகக்கொண்டு மறு உலகத்திற்கு வேண்டிய சாதனங்களைத் தேடுவதில் குறை செய்யவைக்கிறான். அல்லது மறு உலகப் பேறுகளைத் தேடுவதையே முழுக் குறிக்கோளாகக் கொண்டிருப்பது போன்ற மயக்கத்தை உண்டாக்குகிறான். அல்லாஹ் விதிக்காததை (துறவறம்) மனிதர்களாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவைக்கிறான். அதையும் முழுமையாக நிறைவேற்ற முடியாமல் தோல்வியுற்று இம்மை, மறுமை இரண்டையும் நஷ்டப்படுத்தி நரகில் விழ வழி வகுக்கிறான். இப்படி ஒன்றில் இம்மையை மட்டும், அல்லது மறுமையை மட்டும் தேர்ந்தெடுத்து அதனால் தோல்வியுற்று வழிகெட்டு நரகில் விழும் கூட்டம் ஏராளம்.
ஆனால் இம்மையை வரையரைக்குட்பட்டு நிறைவாக அனுபவிக்கவும் மறுமையை நிறைவாகப் பெறவும் அழகிய வழிமுறைகளைத் தருகிறான் படைத்த இறைவன்.
உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான். அல்குர்ஆன் 67:2
”நிச்சயமாக உங்கள் செல்வமும், உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச்) சோதனையாக இருக்கின்றன நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு” அல்குர்ஆன் 8:28
ஈமான் கொண்டவர்களே! உங்கள் செல்வமும், உங்களுடைய மக்களும், அல்லாஹ்வின் நினைப்பை விட்டும் உங்களைப் பராமுகமாக்கிவிட வேண்டாம் எவர் இவ்வாறு செய்கிறாரோ நிச்சயமாக அவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள். அல்குர்ஆன் 63:9
இவ்வளவு தெளிவாகச் சொல்லப்பட்டும் ஷைத்தான் மனிதனுக்கு பொருள் செல்வத்திலும் மக்கள் செல்வத்திலும் மயக்கத்தைக் கொடுத்து அவனை வழி தவறச் செல்கிறான். ஆனால் இந்த பொருட்செல்வமும் மக்கள் செல்வமும் மறுமையில் உதவிடப்போவதில்லை என்பதை அறுதியிட்டு உறுதியாக அல்லாஹ் இறைவாக்குகளில் கடுமையாக எச்சரிக்கிறான்.
”அந்நாளில் செல்வமும், பிள்ளைகளும் (யாதொரு) பயனுமளிக்க மாட்டா. “அல்குர்ஆன் 26:88
இன்னும் உங்களுடைய செல்வங்களோ, உங்களுடைய மக்களோ உங்களை நம்மளவில் நெருங்கி வைக்க கூடியவர்கள் அல்லர். ஆனால் எவர் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல் செய்கின்றாரோ அத்தகையோர்க்கு, அவர்கள் செய்ததற்கு இரட்டிப்பு நற்கூலி உண்டு; மேலும் அவர்கள் (சவனபதியின்) உன்னதமான மாளிகைகளில் நிம்மதியுடன் இருப்பார்கள். அல்குர்ஆன் 34:37
அன்புச் சகோதர சகோதரிகளே! இறைவனின் கடுமையான எச்சரிக்கைக்குப் பின்னும் பொருட்செல்வத்திலும் மக்கட் செல்வத்திலும் வரம்பு மீறி பேராசை கொண்டிருப்பவர்கள் அவை காரணமாக தங்கள் ஐங்கால தொழுகைகளை மற்றும் அமல்களை வீணாக்கிக் கொண்டிருப்பவர்கள் ஜகாத்தை முறைப்படி கணக்கிட்டுக் கொடுக்காமல் சேமித்து வைப்பவர்கள் நிச்சயமாகத் தங்களை முஸ்லிம்கள் என்று சொல்லிக்கொள்ள வெட்கப்படவேண்டும். ஜகாத்தை முறைப்படி கணக்கிட்டு உரியவர்களுக்கு சேர்க்காதவர்கள் படிப்பினை பெறாதவர்கள் பரிதாபத்திற்குரியவர்களே.
இன்றைய நமது முஸ்லிம் சமுதாயத்தின் பெரும் செல்வந்தர்களெல்லாம் அல்லாஹ்வின் இந்த எச்சரிக்கைகளை மறந்து பொருளைத் தேடுவதையே தங்களின் முழு நேரப் பணியாகக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தங்கள் தொழுகை மற்றும் நல்ல அமல்களை அனைத்தும் காணாமல் போய்விடுகின்றன.
பல லட்சங்கள் சேர்ந்தால் அதை கோடியாகவும் கோடிகள் சேர்ந்தால் அதை பல நூறு கோடிகளாக்கவும் கங்கணம் கட்டிக்கொண்டு இரவு பகல் பாராது அயராது பாடுபடுகிறார்களேயல்லாமல் அசலான மறுமையை மறந்து விடுகிறார்கள். என்றும் இவ்வுலகிலேயே நிலைத்திருப்பதுபோல் தப்புக்கணக்கு போடுகிறார்கள். இவர்கள் எத்தனை ஆயிரம் கோடிக்கு அதிபதியாக இருந்தாலும் இவர்கள் அனுபவிப்பது என்னவோ மிகமிகக் குறைவுதான். ஒரு சாதாரண நடுத்தர மனிதன் சாப்பிடுவது, குடிப்பது சுகிப்பது போன்றவற்றைக்கூட இவர்கள் அனுபவிக்க முடியாமல் இவர்களை அல்லாஹ் ஆக்கிவிடுகிறான். முறைப்படி இவ்வுல இன்பங்களை அனுபவிப்பதையும் இழந்து விடுகிறார்கள். மறுமை பேறுகளையும் தங்களின் செயல்களினால் இழந்து விடுகிறார்கள்.
சாதாரன அறிவு படைத்த ஒரு மனிதனாலும் இப்படிப்பட்ட ஏமாளியாக இருக்க முடியுமா? ஆனால் ஷைத்தான் சொத்துக்கள் மீதும், பிள்ளைகள் மீதும் பேராசையை உண்டாக்கி இவ்வாறு செயல்பட வைக்கிறான். உண்மையில் இவர்களுடையது என்று சொல்லிக் கொண்டிருக்கும் சொத்துக்கள் இவர்களுடையது அல்ல. அவற்றிற்குரிய ‘ஜகாத்’ ஆக, அதற்கு மேலும் சதக்காவாக இவர்கள் வாரி வழங்கிச் செல்வதே இவர்களின் சொத்தாக மறுமையில் பலன் தரும் என்பதை புரிந்து செயல்படுவார்களா? ஷைத்தானின் மாயையை விட்டு விடுபடுபவார்களா? அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
{ 2 comments… read them below or add one }
THATS TRUE
6:49. ஆனால் எவர் நம் திருவசனங்களைப் பொய்ப்பிக்கிறார்களோ அவர்களை அவர்கள் செய்து வரும் பாவங்களின் காரணமாக வேதனைப் பிடித்துக் கொள்ளும்.
20:124. “எவன் என்னுடைய உபதேசத்தைப் புறக்கணிக்கிறானோ, நிச்சயமாக அவனுக்கு நெருக்கடியான வாழ்க்கையே இருக்கும்; மேலும், நாம் அவனை கியாம நாளில் குருடனாவே எழுப்புவோம்” என்று கூறினான்.