நல்லவர்களுக்கு ஏற்படும் சோதனை

Post image for நல்லவர்களுக்கு ஏற்படும் சோதனை

in படிப்பினை

وَمِنْ النَّاسِ مَنْ يَعْبُدُ اللَّهَ عَلَى حَرْفٍ فَإِنْ أَصَابَهُ خَيْرٌ اطْمَأَنَّ بِهِ وَإِنْ أَصَابَتْهُ فِتْنَةٌ انقَلَبَ عَلَى وَجْهِهِ خَسِرَ الدُّنْيَا وَالْآخِرَةَ ذَلِكَ هُوَ الْخُسْرَانُ الْمُبِينُ

இன்னும் மனிதர்களில் (ஓர் உறுதியும் இல்லாமல்) ஓரத்தில் நின்று கொண்டு அல்லாஹ்வை வணங்குகிறவனும் இருக்கிறான் – அவனுக்கு ஒரு நன்மை ஏற்படுமாயின் அதைக் கொண்டு அவன் திருப்தியடைந்து கொள்கிறான். ஆனால் அவனுக்கு ஒரு சோதனை ஏற்படுமாயின், அவன் (தன் முகத்தை) அல்லாஹ்வை விட்டும் திருப்பிக் கொள்கிறான். இத்தகையவன் இம்மையிலும் மறுமையிலும் நஷ்டமடைகிறான் – இதுதான் தெளிவான நஷ்டமாகும். (அல்குர்ஆன் 22:11)

மேற்கூறிய அல்லாஹ்வின் வசனத்திலிருந்து நாம் பெறவேண்டிய படிப்பினை யாதெனில், அல்லாஹ் இந்த உலக வாழ்கையைச் சோதனைக் களமாக ஆக்கியிருக்கின்றான். இந்த உலகத்தில் வாழும் மக்களை நல்லவர்கள், கெட்டவர்கள் எனத் தரம் பிரித்துப் பார்க்க அனைவரையும் தன் சோதனைக்கு உட்படுத்துகின்றான். இச்சோதனைகளில், கடைசிவரை அவன் கட்டளைக்கு மாறு செய்யாமல் யார் பொறுமை கொள்கிறார்களோ அவர்களுக்கு நல்லடியார்கள் என சான்று பகர்ந்து மறுமையில் சொர்க்கத்தில் நுழையச்செய்வான்.

மனிதர்களில் பலர் இறை வணக்கத்தை சரியான முறையில் நிறைவேற்றுபவர்களாகவும், நல் அமல்கள் புரிபவர்களாகவும், தனிமையிலும் அல்லாஹ்வை அஞ்சக் கூடியவர்களாகவும் இருக்கலாம். இது போன்ற சூழலில் தமக்கு ஒரு இடர் வந்தால் அதைத் தாங்கிக் கொள்ளாமல் அல்லாஹ்வின் மீது அதிருப்தி காட்டுவது போல, தான் செய்து கொண்டிருக்கும் நல்ல செயல்களிலிருந்து பின்வாங்கி விடுகிறார்கள். இவர்கள் மனதில் ஷைத்தான் மிக எளிதில் ஊடுருவி மறுமையில் அவரை நரகத்தில் தள்ளிவிட அனைத்து ஏற்பாடுகளையும் செய்கிறான்.

அல்லாஹ் சிலர்களுக்கு மரணத்தை விதித்துச் சோதிக்கின்றான். சிலருக்கு செல்வங்களை பெருக்கியும் சிலருக்குச் செல்வங்களைக் குறைத்தும், சிலருக்கு நோயைக் கொண்டும், சிலருக்கு தாம் எதிர்பார்த்த விளைவுக்கு மாற்றமான முடிவைக் கொண்டும், சிலருக்கு உடலில் குறைபாடுகளுடனும் படைத்தும் பலவாறு சோதிக்கின்றான்.

சோதனைகள் எல்லோருக்கும் பொதுவானவையே
ஆதம்(அலை) முதல் முஹம்மது(ஸல்) வரை நபிமார்களும் இன்னும் இறைநேசர்களும் அல்லாஹ்வின் சோதனைக்கு ஆளானவர்களே. அல்லாஹ் தன் திருமறையில் பல்வேறு நபிமார்களிகன் வரலாறுகளைக் கூறுகின்றான். அதில் எல்லா நபிமார்களும் சோதனைக்குட்படுத்தப் பட்டுள்ளனர் என்பதை தெளிவாக அறிய முடிகிறது. தூதுத்துவத்தைச் சொல்ல வந்த நபிமார்களை, அல்லாஹ் சொல்லெண்ணாத் துன்பங்களுக்கும், இன்னல்களுக்கும் இடர்படுத்திச் சோதித்தான். எனினும் அவர்கள் அல்லாஹ்வின் மீது திடமான நம்பிக்கையை வைத்திருந்தனர். தங்களுக்குக் கொடுக்கப்பட்ட தூதுத்துவப் பணியை செம்மையென நிறைவேற்றினார்கள்.

أَمْ حَسِبْتُمْ أَنْ تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا يَأْتِكُمْ مَثَلُ الَّذِينَ خَلَوْا مِنْ قَبْلِكُمْ مَسَّتْهُمْ الْبَأْسَاءُ وَالضَّرَّاءُ وَزُلْزِلُوا حَتَّى يَقُولَ الرَّسُولُ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ مَتَى نَصْرُ اللَّهِ أَلَا إِنَّ نَصْرَ اللَّهِ قَرِيبٌ

உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பீடித்தன. “அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்” என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைகழிக்கப்பட்டார்கள். “நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது” (என்று நாம் ஆறுதல் கூறினோம்) (அல்குர்ஆன் 2:214)

செல்வமும் சோதனையே

إِنَّمَا أَمْوَالُكُمْ وَأَوْلَادُكُمْ فِتْنَةٌ وَاللَّهُ عِنْدَهُ أَجْرٌ عَظِيمٌ

உங்கள் பொருள்களும் உங்கள் மக்களும் (உங்களுக்குச்) சோதனைதான். ஆனால் அல்லாஹ்விடமே மகத்தான (நற்) கூலியிருக்கிறது. (அல்குர்ஆன் 64:15)

இந்த உலகத்தில் மனிதன் மிகவும் விரும்பக் கூடியதாக செல்வமும், குழந்தைகளும் இருக்கின்றன. அல்லாஹ் இவ்விரண்டையும் மனிதனுக்கு சோதனை என்று அறிவிக்கின்றான். அல்லாஹ் ஒருவருக்கு அளவுக்கு அதிகமான செல்வத்தைக் கொடுத்துள்ளான் எனில் அவர் அதைக்கொண்டு சோதிக்கப்படுகிறார் என்பதே உண்மை.

கடன் கேட்டு வருபவனுக்கு கடன் தர வலியுருத்துகிறது இஸ்லாம். இன்னும் இஸ்லாத்தின் கடமைகளில் ஒன்றாக ஜகாத்தை சரியாக நிறைவேற்றச் சொல்கிறது இஸ்லாம். நடைமுறையில் பலர் அல்லாஹ் கொடுத்துள்ள செல்வங்களையெல்லாம் தன் சொந்த முயற்சியிலும் தன் அறிவு மற்றும் உழைப்பாலும் பெற்றவை என எண்ணிக் கொள்கிறார்கள். இன்னும் சிலர் வட்டித் தொழிலில் மூழ்கிவிடுகிறார்கள். அல்லாஹ் இவர்களுக்கு அதிகமான பொருட்செல்வத்தைக் கொடுத்து சோதிக்கவில்லையெனில் இது போன்ற தவறுகள் செய்ய வாய்ப்புகள் இல்லையென்று உணர்ந்து கொள்ளுங்கள்.

فَإِذَا مَسَّ الْإِنْسَانَ ضُرٌّ دَعَانَا ثُمَّ إِذَا خَوَّلْنَاهُ نِعْمَةً مِنَّا قَالَ إِنَّمَا أُوتِيتُهُ عَلَى عِلْمٍ بَلْ هِيَ فِتْنَةٌ وَلَكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ

மனிதனை ஏதேனும் ஒரு துன்பம் தீண்டுமானால் அவன் நம்மையே (பிரார்த்தித்து) அழைக்கிறான். பிறகு, நம்மிடமிருந்து அவனுக்கு ஒரு பாக்கியத்தைக் கொடுத்தோமானால், அவன் “இது எனக்குக் கொடுக்கப்பட்டதெல்லாம், என் அறிவின் காரணமாகத்தான்!” என்று கூறுகின்றான். அப்படியல்ல! இது ஒரு சோதனையே – ஆனால் அவர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள். (அல்குர்ஆன் 39:49)

குழந்தைகளும் சோதனையே

لِلَّهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ يَخْلُقُ مَا يَشَاءُ يَهَبُ لِمَنْ يَشَاءُ إِنَاثًا وَيَهَبُ لِمَنْ يَشَاءُ الذُّكُورَ. أَوْ يُزَوِّجُهُمْ ذُكْرَانًا وَإِنَاثًا وَيَجْعَلُ مَنْ يَشَاءُ عَقِيمًا إِنَّهُ عَلِيمٌ قَدِيرٌ

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. ஆகவே தான் விரும்பியவற்றை அவன் படைக்கின்றான். தான் விரும்புவோருக்குப் பெண் மக்களை அளிக்கிறான் மற்றும் தான் விரும்புவோருக்கு ஆண் மக்களை அளிக்கின்றான். அல்லது அவர்களுக்கு அவன் ஆண்மக்களையும், பெண் மக்களையும் சேர்த்துக் கொடுக்கின்றான். அன்றியும் தான் விரும்பியோரை மலடாகவும் ஆக்குகிறான் – நிச்சயமாக, அவன் மிக அறிந்தவன் பேராற்றலுடையவன். (அல்குர்ஆன் 42:49-50)

ஆகவே இறைவன் நமக்கு கொடுத்த குழந்தைச் செல்வங்களின் மகத்துவத்தை எண்ணி சந்தோசப்படவேண்டும். அவ்வாறல்லாமல், அதனை பாரமாகவோ அல்லது பெண்குழந்தைகள் கிடைத்ததை துக்கமாகவோ கருதக்கூடாது.

வியாபாரத்திலும் சோதனை

اللَّهُ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَشَاءُ وَيَقْدِرُ وَفَرِحُوا بِالْحَيَاةِ الدُّنْيَا وَمَا الْحَيَاةُ الدُّنْيَا فِي الْآخِرَةِ إِلَّا مَتَاعٌ

அல்லாஹ் தான் நாடியவருக்கு வாழ்வாதாரத்தை விசாலமாக்குகிறான் (தான் நாடியவருக்கு) அளவிட்டுக் கொடுக்கின்றான். எனினும் அவர்கள் இவ்வுலக வாழ்க்கையில் மகிழ்ச்சியடைகிறார்கள் – இவ்வுலக வாழ்க்கையோ மறுமைக்கு ஒப்பிடாமல் மிகவும் அற்பமேயன்றி வேறில்லை. (அல்குர்ஆன் 13:26)

இறை வழியில் அதிக நாட்டம் கொண்ட மக்களாக இருப்பினும் அவன் நாடினால் வியாபாரத்திலும் தன் செல்வங்களிலும் சற்று சரிவை ஏற்படுத்தி அல்லாஹ் சோதனையைத் தருவான். நல்லடியார்கள் இதை அல்லாஹ் ஏற்படுத்திய விதியின் மேல் மனப்பூர்வமான நம்பிக்கைக் கொண்டு அவனிடமே உதவியையும் நாடவேண்டும்.

மரணத்தைக் கொண்டு சோதனை
அல்லாஹ் கூறுகிறான். உலகில் என் அடியானின் நேசத்துக்குரிய ஒருவரை நான் கைப்பற்றி, அதன் மீது என் அடியான் பொறுமை கொண்டு நற்கூலியை ஆதரவு வைத்தால், அவனுக்கு சுவர்க்கத்தைத் தவிர வேறெதுவும் இல்லை, என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)

குழந்தைகள் பிறந்து மகிழ்ச்சியில் இருக்கும் பெற்றோர்களிடத்திலிருந்து குழந்தைகளை இறக்கச் செய்து சோதிக்கின்றான். சிலருக்கு குழந்தைகளை உயிரோடு விட்டுவிட்டு தாயின் உயிரை எடுத்துக்கொள்கிறான். இதன்மூலம் குழந்தைகளை அனாதையாக விட்டுவிடுகிறானா அல்லது மனைவி இழந்த துக்கத்தில் தன் நேரான வாழ்க்கையை மாற்றிக்கொண்டுவிடுகிறானா அல்லது குழந்தைகளை கவனிப்பாரற்று விட்டுவிடுகிறானா என்று கணவனை சோதிக்கின்றான்.

சிலர் தான் விரும்பக்கூடிய ஒருவரின் உயிரை அல்லாஹ் கைப்பற்றிவிட்டால் அவனுக்கு ஏற்பட்ட துக்கத்தில் அல்லாஹ்வையே மறந்துவிடுகிறனர். இதிலும் சில பெண்கள் ஓலமிட்டு அழுவதும் அல்லாஹ்வுடன் தர்க்கம் செய்வது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதும் போன்ற நிகழ்வுகளை காணமுடிகிறது. ஆனால் இவர்கள், அல்லாஹ் இதன் மூலம் தங்களை சோதிக்கின்றான் என விளங்கிவிட்டால் இத்தவறுகளிலிருந்தும் நாம் நம்மை விடுவித்துக் கொள்ளலாம்.

قُلْ لَنْ يُصِيبَنَا إِلَّا مَا كَتَبَ اللَّهُ لَنَا هُوَ مَوْلَانَا وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلْ الْمُؤْمِنُونَ

“ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது. அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்” என்று (நபியே!) நீர் கூறும். முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக! (அல்குர்ஆன் 9:51)

நோயைக் கொண்டு சோதனை
நான் நபி(ஸல்) அவர்களிடம் பிளேக் நோயைப் பற்றிக் கேட்டேன். அதற்கவர்கள், அது அல்லாஹ், தான் நாடுவோர் மீது இறக்கி வைக்கும் வேதனையாகும். (எனினும்) மூஃமின்களுக்கு அதனை அல்லாஹ் ரஹ்மத்தாக ஆக்கிவிட்டான். யார் பிளேக் ஏற்பட்ட ஊரில் அல்லாஹ் (விதியில்) எழுதியிருந்தாலே தவிர, அது தம்மைத் தொடாது என்று உறுதி பூண்டு நற்கூலியை ஆதரவு வைத்தவராக பொறுமை கொண்டு இருப்பாரோ அவருக்கு “ஷஹீது” என்னும் புனித தியாகியின் நற்கூலி கிடைக்கும் எனக் கூறினார்கள். ஆதாரம்: புகாரி அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி)

நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்பொழுது அவர்கள் காய்ச்சலாக இருந்தார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! தாங்களுமா காய்ச்சலால் தாக்கப்படுகிறீர்கள்?” என்று வினவினேன். அதற்கவர்கள், “ஆம் உங்களில் இருவர் காய்ச்சலால் பீடிக்கப்படுமளவு நான் காய்ச்சலால் பீடிக்கப்படுகிறேனே” என்று கூறினார்கள். அதற்கு நான், அப்பொழுது தங்களுக்கு இரு நற்கூலிகள் உள்ளன எனக் கூறினேன். அதற்கு நபியவர்கள், “ஆம் அது போன்றே நோவினை வந்தடையும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் – அது முள் குத்துவதாலோ அல்லது அதற்கு மேலுள்ள பொருள்களினாலோ (இருப்பினும் சரியே) அல்லாஹ் அவை கொண்டு அவர் தீமைகளை அழித்தே தவிர வேறில்லை. மரத்திலிருந்து இலைகள் உதிர்வது போல் அவர் பாவங்கள் அவரை விட்டு நீக்கப்படும்” என்று கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம் – அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூது(ரலி)

உடல் குறைபாடுகள்
நபி(ஸல்) அவர்கள் கூறத் தாம் செவிமடுத்ததாக அனஸ்(ரலி) அறிவிக்கிறார்: நிச்சயமாக அல்லாஹ் கூறுகிறான், என் அடியானின் இரு கண்களை (போக்கிவிடுவது) கொண்டு அவனை நான் சோதித்து, அவன் அதன் மீது பொறுமை கொள்வானேயானால், அவ்விரு கண்களுக்குப் பகரமாக நான் அவனுக்குச் சுவர்க்கத்தை வழங்குவேன். (புகாரி : அனஸ்(ரலி))

ஒரு முஸ்லிமை வந்தடையும் கஷ்டம், நோய், கவலை, நோவினை, துக்கம் – அவரது காலில் குத்திவிடம் முள்ளின் வேதனை வரை- அவை அனைத்தைக் கொண்டும் அவர் பிழைகளை அல்லாஹ் அழித்தே தவிர வேறில்லை. (புகாரி, முஸ்லிம் : அபூஸயீது, அபூஹுரைரா(ரலி))

அன்பு சகோதரர்களே! அல்லாஹ் இவ்வுலகில் மனிதனுக்குக் கொடுத்ததிருக்கும் செல்வங்கள், மனைவி, குழந்தைகள், ஆரோக்கியம், கல்வி, அதிகாரம், பதவி மற்றும் பொறுப்புக்கள், நோய், உடல் குறைபாடுகள், மற்றும் மரணம் எல்லாம் சோதனைகளே தவிர வேறில்லை. எனினும் அவன் நல்லடியார்களுக்கும் இதைக்கொண்டு அதிகமாக சோதிப்பான். சோதனைக் காலங்களை அல்லாஹ் மனிதர்களிடத்தில் மாறி மாறி வரச்செய்வது அவன் நியதிக்குட்பட்டதாகும். அவ்வாறு உங்களுக்குச் சோதனைகள் வந்து சேரும் போது பொறுமையைக் கடைபிடியுங்கள். அவன் விதித்த விதியின் மீது அதிருப்தியடையாமல் அவன் மீதே நம்பிக்கையை வையுங்கள். நாம் அனைவரும் அவன் பக்கமே மீள்பவர்களாக இருக்கிறோம்.

மாலிக் MSc, Jeddah

{ 1 comment… read it below or add one }

M.M.A.NATHARSHAH DUBAI March 28, 2013 at 8:02 pm

TRUE INFORMATION THANK YOU

Reply

Leave a Comment

Previous post:

Next post: