நீங்கள் உடலால் பேரழகனா, இல்லை பேரழகியா என்று அல்லாஹ் பார்க்க மாட்டான். மாறாக நீங்கள் உள்ளத்தால் அழகானவரா என்பதை மட்டுமே அல்லாஹ் பார்ப்பான். எனவே, நீங்கள் உங்கள் உள்ளங்களை அழகு படுத்திக்கொள்ளுங்கள்.
சமூகத்தில் நீங்கள் எந்த தரம் என்பதை அல்லாஹ் பார்க்கமாட்டான். நீங்கள் சமூகத்தில் எந்த தரத்தில் நடந்து கொண்டீர்கள் என்பதையே அல்லாஹ் பார்ப்பான். எனவே நற்பண்புகளால் உங்கள் தரத்தை உயர்த்திக்கொள்ளுங்கள்.
உங்களுக்கு எத்தனை வீடுகள், பங்களாக்கள் இருந்தன என்று அல்லாஹ் பார்க்க மாட்டான். அவைகளில் எத்தனை அனாதைகளுக்கு அடைக்கலம் தந்தீர்கள் என்றே பார்ப்பான். எனவே, உங்கள் இல்லங்களில் ஆதரவற்ற அனாதைகளுக்கு அடைக்கலம் கொடுங்கள்.
நீங்கள் என்னென்ன உணவு உண்டீர்கள் என்பதை அல்லாஹ் பட்டியல் கேட்க மாட்டான். பசியோடு வந்த எத்தனை ஏழைகளின் பசியை போக்கினீர்கள் என்றுதான் அல்லாஹ் கேட்பான். எனவே, பசித்தோருக்கு உணவளியுங்கள்.
உங்களது அலமாரி மற்றும் பீரோக்களில் நீங்கள் எத்தனை டிசைன்களில் எத்தனை ஆடைகள் அடுக்கி வைத்திருக்கிறீர்கள் என்பதை அல்லாஹ் கேட்கமாட்டான். ஆடையற்ற ஏழைகளுக்கும் அனாதைகளுக்கும் அவற்றிலிருந்து தந்து உதவினீர்களா என்று மட்டுமே கேட்பான். எனவே, ஆடையற்ற ஏழைகளுக்கும் அனாதைகளுக்கும் ஆடைகளை தந்து உதவிடுங்கள்.
நீங்கள் சினிமா தொலைக்காட்சித் தொடர்களை கண்டு எத்தனை முறை அழுதீர்கள் என்று அல்லாஹ் கேட்க மாட்டான். நீங்கள் எத்தனை முறை சமூகத்திற்காகவும் அல்லாஹ்விற்கு அஞ்சியும் அழுதீர்கள் என்றே கேட்பான். எனவே உங்கள் அழுகைகளை அர்த்தமுள்ளதாக ஆக்கிக்கொள்ளுங்கள்.
நீங்கள் எத்தனை முறை சிரித்து மகிழ்ந்தீர்கள் என்பதை அல்லாஹ் கேட்கமாட்டான். நீங்கள் பிறருக்கு உதவியதின் மூலம் எத்தனை முறை அவர்கள் சிரித்து மகிழ்ந்தார்கள் என்றே அல்லாஹ் உங்களிடம் கேட்பான். எனவே, பிறருக்கு உதவிகள் புரிந்து அவர்களை சிரிக்கவும், மகிழவும் வையுங்கள்.
சமூகத்தில் உங்களது மதிப்பெண் என்ன என்பதை அல்லாஹ் ஒருபோதும் பார்க்கமாட்டான். வீட்டில் உங்கள் மனைவியிடம், அண்டை வீட்டாரிடம் உங்கள் மதிப்பெண் என்ன என்பதையே அல்லாஹ் பார்ப்பான். எனவே மனைவியிடமும், அண்டை வீட்டாரிடமும் அழகிய முறையில் நடந்து கொள்ளுங்கள்.
நீங்கள் எத்தனை பிள்ளைகளை பெற்றீர்கள் என்பதைவிட உங்கள் பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியையும் ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தீர்களா என்பதையே அல்லாஹ் பார்ப்பான். எனவே உங்களது பிள்ளைகளுக்கு நல்ல கல்வியையும், நல்ல ஒழுக்கத்தையும் கற்றுக்கொடுங்கள்.
நீங்கள் குர்ஆனை எத்தனை முறை ஓதினீர்கள் என்பதைவிட அதிலிருந்து எத்தனை விஷயங்களை உங்கள் வாழ்வில் கடை பிடித்தீர்கள் என்பதையே அல்லாஹ் கேட்பான். எனவே, குர்ஆனை பொருளறிந்து ஓதுவதோடு அதை கடைபிடிக்கவும் செய்யுங்கள்.
நற்செயல் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை; ஆனால் நற்செயல் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல்; (தன்) பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்; இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து முறையாக ஜகாத் கொடுத்து வருதல்(இவையே நற்செயல்களாகும்). அல்குர்ஆன் 2:177
மதரஸா தாருல் இல்ம்-சிங்கப்பூர்
{ 2 comments… read them below or add one }
Assalamu Alaikum. Very good artcle by Darul Ilm. Best wshes to Mowlana.Rahmathullah Mahlar and Team
Assalamu Alaikkum. . Nice article for the people who believes in Allah. . It made me really cry when i read this.