நபிக்குப் பின்னால் நபிவழி

Post image for நபிக்குப் பின்னால் நபிவழி

in இஸ்லாம்

நபி அவர்கள் உலகில் வாழ்ந்த காலத்தில் அவர்களைப் பின்பற்றுவது எவ்வாறு நபித்தோழர்கள் மீது கடமையாக இருந்ததோ, அவ்வாறே அவர்களின் மரனத்திற்குப் பின்னரும் அவர்களைப் பின்பற்றுவது நபித்தோழகள் மீதும், மற்ற ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும் என்பதை பல இறை வசனங்கள் வலியுறுத்துகின்றன. நபி அவர்களின் தூது அவர்களின் மரணத்தோடு முடிந்து விட்டதல்ல. காரணம், அவர்கள் இறைத்தூதர்களில் இறுதியாக வந்தவர்கள். அவர்களுக்குப்பின் நபி கிடையாது. எனவே அவர்களுடைய வழிமுறை இறுதி நாள் வரை பின்பற்ற வேண்டிய ஒன்றாகும்.

நபி அவர்களுடை கண்ணுக்கு மறைவாக நபித்தோழர்கள் இருக்கும்போது அவர்களுக்கு ஏதாவது மார்க்கப் பிரச்னைகள் எழுந்து விட்டால் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பதையும் நபி அவர்கள் போதித்துக் கொடுத்துள்ளார்கள் என்பதை நம்மால் அறிய முடியும்.

நபி அவர்களுக்குப் பின்னரும் நபி வழியையே பின்பற்றி ஆகவேண்டும் என்பதை இது வலியுறுத்துகிறது. இன்னும் ஏராளமான நபி மொழிகள் நபி அவர்களுக்குப்பின் நபிமொழியைப் பின்பற்றுவதின் அவசியத்தை அறிவிக்கின்றன.

அல்லாஹ்வின் வேதம் என்னும் குர்ஆன், என் வழிமுறை என்னும் சுன்னத், இவ்விரண்டையும் நான் விட்டுச் செல்கிறேன். இவ்விரண்டையும் நீங்கள் பற்றிப் பிடித்திருக்கும் காலமெல்லாம் வழி தவறவே மாட்டீர்கள் என நபி அவர்கள் கூறினார்கள். நூல்: முஅத்தா

மற்றொரு ஹதீஸில் “மறுப்பவனைத்தவிர என்னுடைய உம்மத்தினர் முழுவதும் சுவர்க்கம் செல்வார்கள்” என்று நபி அவர்கள் சொன்னபோது “மறுப்பவர் யார் யாரசூலல்லாஹ்” என்று கேட்டார்கள். அப்போது யார் எனக்கு வழிபட்டார்களோ அவர்கள் சுவர்க்கம் செல்வர். யார் எனக்கு மாறு செய்தார்களோ அவர்கள் நரகம் செல்வர் என நபி அவர்கள் பதில் கூறினார்கள். நூல்: புகாரி

இர்பான் பின் சாரியா என்ற நபித்தோழர் கூறுகிறார்கள். ஒரு நாள் நபி அவர்கள் சுப்ஹு தொழுகையை நிறைவேற்றி விட்டு ஒரு சிறப்பான பிரசங்கம் நிகழ்த்தினார்கள். அதைக்கேட்டு கண்கள் நீர் சொரிந்தன; உள்ளங்கள் உருகின; அப்போது யாரசூலல்லாஹ் இது விடை பெறுபவரின் பிரசங்கம் போன்றல்லவா இருக்கிறது. எனவே எங்களுக்கு இறுதி உபதேசம் செய்யுங்கள் என்று நபித்தோழர்கள் சொன்னார்கள். அப்போது நபி கருப்பு இனத்தைச் சார்ந்த ஒருவர் உங்களுக்கு தலைவராக வந்தாலும் அவருக்கு நீங்கள் வழிபடுங்கள். உங்களில் எனக்குப் பிறகு யார் வாழ்கிறார்களோ அவர்கள் சமுதாயத்தில் அதிக கருத்து வேறுபாடுகளைப் பார்ப்பார்கள். அப்போது என்னுடைய வழிமுறையையும் எனது வழி முறையை தங்கள் கடைவாய்ப் பற்களால் கவ்விப் பிடித்து நேர்வழி சென்ற கலீபாக்கள் வழி முறையையும் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள், “மார்க்கத்தில் புதிதாக எதையும் உண்டு பண்ணுவதை விட்டும் உங்களை நான் எச்சரிக்கிறேன். நிச்சயமாக மார்க்கத்தில் புதிதாக உண்டுபண்ணப்படுபவை யாவும் வழிகேடுகளாகும்” என நபி அவர்கள் கூறினார்கள். நூல்கள்: அபூதாவூது, அஹ்மத்

நேர்வழி சென்ற கலீபாக்கள் என்போர் நபி அவர்களுடைய வழிமுறைக்கு மாற்றமாக நடந்ததாகவோ, மார்க்கத்தில் இல்லாத புதிதாக எதையும் உண்டுபண்ணியதாகவோ வரலாற்றில் நம்மால் காணமுடியாது. மேலும் வணக்க வழிபாடுகள் எப்படிச் செய்யவேண்டும் என்ற எல்லா முறைகளையும் நபி அவர்கள் கூறியே சென்றுள்ளார்கள். அதில் அவர்கள் எந்த குறையும் வைக்கவில்லை என நம்புவது அவசியமாகும்.

இது போன்ற ஹதீஸ்களின் காரணமாகத்தான் நபிவழியை மக்களுக்கு எடுத்துச் சொல்வதில் நபித்தோழர்கள் பெரிதும் ஆர்வம் காட்டினார்கள். அது நபி அவர்கள் தங்கள் மீது விட்டுச் சென்ற அமானிதம் என்று கூட எண்ணினார்கள். நபி வழியை மக்களுக்கு எடுத்துச் சொல்கின்றவர்களை நபி பெரிதும் பாராட்டினார்கள்.

என்னுடைய பேச்சைக்கேட்டு அதைக் கேட்டது போன்று பிறருக்கும் எடுத்துச் சொல்லக் கூடியவருக்கு அல்லாஹ் கருணை புரிவானாக! எனது செய்தி எத்தி வைக்கப்படுகின்ற எத்தனையோ பேர்கள் அதை என்னிடமிருந்து கேட்பவரைவிட அதிகம் சிந்திக்கக் கூடியவர்களாக இருப்பார்கள் என நபி அவர்கள் கூறினார்கள். நூல்கள்: அபூதவூது, திர்மிதி

“என்னிடமிருந்து ஒரு செய்தியை நீங்கள் தெரிந்திருந்தாலும் அதையும் பிறருக்கு சொல்லி விடுங்கள்” என நபி அவர்கள் கூறினார்கள். நூல்: புகாரி

நபிவழியைத் தெரிந்திருப்பதில் நபித்தோழர்களின் நிலை
நபி அவர்களின் எல்லா சொல் செயல்களையும் தெரிந்திருப்பதில் எல்லா நபித்தோழர்களும் ஒரே அந்தஸ்தில் இருக்கவில்லை. நபித்தோழர்கள் சிலர் நாட்டுப்புறத்தில் உள்ளவர்களாகவும் சிலர் கிராமப்புறத்தில் உள்ளவர்களாகவும், வேறி சிலர் வியாபாரிகளாகவும் வேறு சிலர் தொளிலாளிகளாகவும் இப்படி வேறுபட்ட நிலையில் உள்ளவர்களாக இருந்ததினால் நபி அவர்களின் எல்லா சொல் செயல்களையும் எல்லா சஹாபாக்களாலும் அறிந்திருக்க முடியவில்லை. நபி அவர்களின் போதனை நேரங்களில் எல்லா நபித்தோழர்களும் ஒன்று கூடியிருந்த சந்தர்ப்பங்கள் மிகக் குறைந்தவையே. பெருநாள், வெள்ளிக்கிழமை மற்றும் வேறு சில சந்தர்ப்பங்களிலேயே எல்லா நபித்தோழர்களும் ஒன்று சேரும் வாய்ப்பு கிடைத்தது. எனவே இஸ்லாத்தில் முதன் முதலாக இணைந்தவர்களே நபி வழியை அதிகம் அறிந்தவர்களாக இருந்தனர். அபூபக்கர், உமர், உதுமான், அலி, அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரழி) போன்றவர்களும், நபி அவர்களுடன் அதிகமாக இருக்கும் சந்தர்ப்பங்களைப் பெற்ற அபூஹுரைரா(ரழி), அப்துல்லாஹ் பின் அம்ர்ஆஸ்(ரழி) போன்றவர்களும் நபிவழியை அதிகம் தெரிந்திருந்தனர். இது போன்றுதான் இல்லற வாழ்க்கையில் நபிவழி எப்படி இருந்தது என்பதைப்பற்றி அதிகமாக நபி அவர்களின் துணைவியர் அறிந்திருந்தனர். ஆக நபிவழியை தெரிந்திருப்பதில் எல்லோரும் ஒரே நிலையில் இல்லாமல் ஏற்றத் தாழ்வுடையவர்களாகவே இருந்தனர்.
தொடரும்…

S.கமாலுத்தீன் மதனி

Leave a Comment

Previous post:

Next post: