மனிதனுடைய ஆன்மா உலக ஆசாபாசங்களுக்கும் தன்னல இச்சைகளுக்கும் வசப்படுகிறது. மறுமையை தங்களின் இறுதி இலக்காகக் கொள்ளாத மக்களுக்கு மார்க்க நெறிமுறைகள் பற்றிய அறிவு இல்லாமை காரணமாக அவர்கள் என்றும் குறையாத இந்த ஆசாபாசங்களையும் இச்சைகளையுமே திருப்திப்படுத்த வானாள் முழுவதும் முயல்வார்கள். இறைவன் இத்தகையவர்களை கீழ் வருமாறு சித்தரிக்கின்றான்.
நான் அவனுக்கு ஏராளமான செல்வத்தைக் கொடுத்தேன்; எப்பொழுதும் அவனுடன இருக்கக்கூடிய ஆண் மக்களையும் கொடுத்தேன்; அவனுக்கு எல்லாவற்றையும் எளிதாக்கி வைத்தேன். ஆனாலும் இன்னும் அதிகமாக வேண்டுமென்று விரும்புகிறான். (74:12-15)
மார்க்க அறிவுரைகளைப் பேணி வாழாத சமுதாயத்தில் மக்கள் சொத்துக்களையும் செல்வத்தையும் பெருக்க வேண்டுமென்றும் ஒவ்வொருவரும் தாமே சிறந்த செல்வந்தனாக இருக்க வேண்டுமென்றும், தாமே வெற்றியாளனாக விளங்க வேண்டுமென்றும், எல்லோரையும் மிகவும் நேசிக்கப்படுபவனாகவும் பாராட்டப்படுபவனாகவும் வாழ வேண்டுமென்று விரும்புவர். மற்றவர்கள் நல்லவற்றையும் அழகானவற்றையும் உடையவர்களாக இருப்பதைச் சகித்துக் கொள்ள அவர்களால் முடியாது. மற்றவர்கள் மீது பொறாமைக் கொண்டு அவர்களிடமுள்ளவற்றைத் தாம் பெறுவதற்குப் பாடுபடுவார்கள். மற்றவர்களின் இழப்பைக் கண்டு உவகைக் கொள்வார்கள். தவறான இந்த மனப்போக்கு மனிதனை தாழ்ந்த நிலைக்குத் தள்ளுகிறது.
மார்க்க ஒழுக்க நெறிகளைப் பற்றி அறியாதவர்களுக்கு இந்த நிலையே இன்றியமையாதத் தனிச் சிறப்புடையதாகத் தோன்றும். ஆனால் இது மனிதனை இடர்ப்பாடான மன அழுத்தமிக்க வாழ்க்கையில் அமிழ்த்தி அவனுடைய ஆன்மாவிற்கு கேடு விளைவிக்கக் கூடியதாகும். இதனால்தான் இறை நம்பிக்கையற்றவர்கள் உண்மையான அமைதியும் மகிழ்ச்சியும் பெறுவதில்லை. நியாயமானவையாகத் தோன்றினாலும் கூட மனிதனின் ஆசாபாசங்களுக்கும் இச்சைகளுக்கும் முடிவே காண முடியாது. மனிதன் கால வரையறையற்ற மறுமை வாழ்வில் ஓர் அங்கமாகவே படைக்கப்பட்டிருக்கின்றான். இம்மை வாழ்க்கை, மனிதனுடைய ஆசாபாசங்களையும் இச்சைகளையும் திருப்திப்படுத்த முடியாதபடி குறைபாடுகளுடன் தேவைக்குக் குறைவான வகையிலேயே வடிவமைக்கப்பெற்ற ஒரு சோதனைக் களமே ஆகும்.
மார்க்கப் பண்புகளை அறியாததன் காரணமாக, சோதனையின் இன்றியமையாதக் கூறாகிய இந்த இரகசியத்தைக் காண முடியாத மக்கள் இவ்வுலகில் தங்களுடைய ஆசாபாசங்களை நிறைவு செய்ய உழைக்கின்றார்கள். தொடர்ந்து வெறுப்படைந்து அதிருப்திக்கு உள்ளாகிறார்கள். உண்மையான மனநிறைவை என்றும் பெறாதவர்களாகிய இவர்களின் வாழ்க்கை ஒரு பயங்கர கனவாக மாறி விடுகிறது. வளமையிலும் வறுமையையே அனுபவிக்கிறார்கள். ஏற்கனவே பெற்றிருப்பதைக் கொண்டு திருப்தியடையாமல், எப்பொழுதும் பெறமுடியாதவற்றைப் பற்றிய கவலையால் அவதியுறுகின்றார்கள் இந்த ஆன்ம வேதனை, ஒருவகையில், நிரந்தரமான கடுத்துன்பத்தின் ஆரம்பமே ஆகும்.
மார்க்கம் மனிதனை யாவற்றையும் பகிர்ந்தளிக்குமாறு ஏவுகிறது. இறை நம்பிக்கையாளர்கள் ஆகிய ஆண்களும் பெண்களும் ஒருவருக்கொருவர் துணைவர்களாவர். (9:71) மனிதன் இறைவனின் படைப்பு என ஏற்றுக் கொள்ளும் மனிதர்கள் ஒருவரை ஒருவர் மதித்து மரியாதையுடனும் அன்புடனும் நடந்து கொள்வார்கள். இத்தகையதொரு சமுதாயத்தில், சமூக அநீதி, சச்சரவு மற்றும் குழப்பம் பற்றிய பேச்சுக்கே இடம் இருக்காது. நபி முஹம்மது(ஸல்) அவர்கள், “பெரும் செல்வ வளமல்ல உண்மையில் சொத்து; மன நிறைவே சொத்தாகும்” என்று கூறி இறை நம்பிக்கையாளர்களின் அமைதி அவர்களின் இதயங்களிலேயே இருப்பதாக விளக்குகிறார்கள்.
மார்க்கக் கோட்பாடுகளைப் பேணாத ஒருவர் பொறாமை கொள்ளாமல் இருப்பதற்குரிய காரணம் எதுவும் இல்லை; ஏனெனில் அவருடைய பகுத்தறிவுக்கேற்ப அந்த உணர்வைத் தவிர்ப்பதற்கு எவ்விதத் தூண்டுதலும் இல்லை. போட்டியே மக்களைப் பொறாமை, தன்னலம் மற்றும் தீவிர உணர்ச்சிக்கு ஆளாக்குகிறது. ஓர் இளம் பெண் தன்னை விட நவநாகரீகமாகவும் அழகாகவும் தோன்றும் மற்றொரு பெண்ணிடம் பொறாமை கொள்கிறாள். இதே போல ஒரு வாலிபன் தன்னைவிடப் பொதுமக்களின் பாராட்டைப் பெறும் தன் நண்பன் மீது பொறாமை கொள்கிறான். இந்த உணர்வுக்கு வயது, பாலியல், தொழில் அல்லது தகைமை (அந்தஸ்து) என்ற வேறுபாடே கிடையாது.
சமுதாயத்தில் எல்லாப் பிரிவினரும் ஏதாவது ஒரு வகை பொறாமைக்கு ஆளாகிறார்கள். மற்றவரின் உடைமையைக் கண்டு பொறாமைப்படுகிறார்கள். செல்வாக்கு மிக்க வட்டாரத்தில் வாழ விரும்புவது, புகழ் பெற்ற கோடைகால வசிப்பிடங்களுக்குச் சென்று கோடையைக் கழித்தல், புத்தம் புதிய கார், வெளிநாடுகளுக்குப் பயணம் ஆகியவை மற்றவர்கள் மீது பொறாமை கொள்வதற்குக் காரணமாகின்றன. மற்றவர்களின் சாதனைகள் அல்லது உடைமைகளைக் கண்டு மகிழ்ச்சியடைய முடியாத அளவிற்குச் சிலர் பேராவல்களுக்கு அடிமையாகி விடுகின்றனர். குறிப்பாக வணிக் துறையில் மனித ஆன்மாவிற்கு போட்டி மனப்பான்மை விளைவித்த ஊறுகள் அப்பட்டமானவை. வணிகத் துறையில் செல்வாக்கு மிக்க தகைமையை (அந்தஸ்தை) எய்த எழும் வேட்கையும் அதனால் விளையும் பொறாமையும் அன்றாட வாழ்வியலில் சாதாரண நிகழ்வுகளாகிவிட்டன.
ஆனால் குர்ஆன், இறை நம்பிக்கையாளர்கள், தன்னல விருப்பங்களற்ற தூய வாழ்க்கையையே மேற்கொள்வதாகக் கூறுகிறது. இறை நம்பிக்கையாளர்கள் தங்கள் சகோதரர்கள் பெற்ற வெற்றியை அல்லது அவர்களின் உடைமைகளைக் கண்டு மன நிறைவு அடைவார்கள்.
அவர்களுக்குக் கொடுக்கப்படுவதைப் பற்றி (இறை நம்பிக்கையாளர்கள்) தங்கள் இதயங்களில் எவ்வித அவாவும் கொள்வதில்லை; தாங்கள் வறுமை நிலையில் இருந்தாலும் தங்களுக்கு வேண்டுமென்று நினைப்பதில்லை; இவ்விதம் பேராவலிலிருந்து தங்களைக் காத்துக் கொள்பவர்கள் தாம் வெற்றி பெற்றவர்கள் ஆவர்.
இவர்களுக்குப் பின் வந்தவர்கள், எங்கள் இறைவா! எங்களையும் எங்களுக்கு முன் இறை நம்பிக்கை கொண்ட எங்கள் சகோதரர்களையும் மன்னித்தருள்வாயாக! இறை நம்பிக்கையாளர் மீது எங்கள் இதயங்களின் குரோதத்தை உண்டுபண்ணிவிடாதே. இறைவா! நீ கருணையாளன், இறக்கமுடையோன்! (59:9,10)
இறைவனின் ஆணைப்படி நபி முஹம்மத்(ஸல்) அவர்கள் இறை நம்பிக்கையாளர்களுக்கு பொறாமையைத் தவிர்க்கும்படியும், அது நல்ல செயல்களை, தீ விறகை(எரித்து) விழுங்கிவிடுவது போல் விழுங்கி விடும் என்று ஆலோசனை வழங்கினார்கள்.
மக்கள் தன்னல பேரவாவிற்கு ஆளாகிவிடுகிறார்கள். நீங்கள் நற்செயல் புரிந்து (தீமையிலிருந்து) பாதுகாத்துக் கொண்டால் இறைவன் நீங்கள் செய்வதை அறிந்து கொள்வான். (4:128)
மூலம் : ஹாருன்யஹ்பா
தமிழில் : H. அப்துஸ் ஸமது, இன்ஜினியர்
{ 1 comment… read it below or add one }
Please read this msg.
Thanks
Ariff