மனிதர்கள் சிந்திக்கின்றனரா?

in பொதுவானவை

‘மனிதன் சிந்திக்கக்கூடியவன்’ இது நியதி. ஆனால் எல்லோரும் சிந்திக்கின்றனரா? இது விடை காண முடியாத வினா!

  இறைப்படைப்புகள் ஒவ்வொன்றிலிருந்தும் பாடம் பெறக்கூடியவனே. சிந்தனைவாதி! இந்த அடிப்படையில் எல்லாம் வல்ல அல்லாஹ், மனித இனத்தவராகிய நம்மைப் பார்த்து சில வினாக்கள் தொடுக்கின்றான்.

    நாமே உங்களைப் படைத்தோம். எனவே, (நாம் கூறுவதை) நீங்கள் உண்மையென்று நம்ப வேண்டாமா? (கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா? அதை நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம் படைக்கின்றோமா? (இப்பூமியில்) விதைப்பதை நீங்கள் கவனித்தீர்களா? அதனை நீங்கள் முளைக்கச் செய்கின்றீர்களா? அல்லது நாம் முளைக்கச் செய்கின்றோமா? அன்றியும், நீங்கள் குடிக்கும் நிரைக் கவனித்தீர்களா? மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்குகிறோமா? நீங்கள் மூட்டும் நெருப்பை கவனித்தீர்களா? அதன் மரத்தை நீங்கள் உண்டாக்கினீர்களா? அல்லது நாம் உண்டு பண்ணுகிறோமா? (56:57-72)

    மரம் செடி கொடிகள் நீர் தீ புழு பூச்சிகள் பறவைகள் விலங்கினங்கள், மனிதர்கள் முதலிய அத்தனைப் படைப்பினங்களிலும் நமக்குப் போதனைகள் உண்டு. படைப்பினங்கள் அனைத்திலும் அழகிய படைப்பாக மனிதனையே படைத்திருப்பதாக அல்லாஹ் அருள்மறையில் தெளிவாக்கியுள்ளான்.

 திடமாக, நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம். (95:4)

    இவ்வாறு தெளிவாக அறிக்கை விட்ட அல்லாஹ், அடுத்தடுத்த வசனங்களில் அவனுடைய நடத்தை காரணமாக ஏற்படுகின்ற விளைவுகளையும் எச்சரிக்கை அறிவுரைகளையும் கூறுகின்றான்.

   பின்னர் (அவன் செயல்களின் காரணமாக) அவனைத் தாழ்ந்தவர்களில், மிக்க தாழ்ந்தவனாக்கினோம். எவர்கள் ஈமான் கொண்டு )ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களைத் தவிர  (நல்லவர்களான) அவர்களுக்கு என்றும் முடிவில்லாத நற்கூலியுண்டு. (95:6)

    நற்கருமங்களை செய்தவர்களுக்குக் கிடைக்கக் கூடிய நற்கூலியைப் பற்றித் தெளிவாக்கிய எல்லாம் வல்ல அல்லாஹ், மனிதர்களுக்குரிய பொறுப்புணர்வுகளைப் பற்றியும் தெளிவாக்குகிறான்.

    நிச்சயமாக வானங்களையும், பூமியையும், மலைகளையும் (நம் கட்டளைகளான) அமானிதத்தை சமந்து கொள்ளுமாறு எடுத்துக்காட்டினோம், அப்போது அதைச் சுமந்து கொள்வதிலிருந்து அவை விலகிக்கொண்டன, இன்னும் அதைச் சுமப்பதிலிருந்து அவை பயந்தன, (ஆனால்) மனிதனோ அதனைச்சுமந்து கொண்டான், நிச்சயமாக அவன் (அமானிதத்தை நிறைவேற்றும் விஷயத்தில்) பெரும் அநியாயக்காரனாக (அதன் கடமையை) அறியாதவனாக இருக்கின்றான். (33:72)

   (அத்தகைய அமானிதத்தை ஏற்றுக்கொண்டு அதற்க்கு மாறாக நடக்கும்) முனாஃபிக்கான (வேஷதாரிகளான) ஆண்;களையும்; முனாஃபிக்கான பெண்களையும்; முஷ்ரிக்கான (இணைவைப்பவர்களான) ஆண்களையும், முஷ்ரிக்கான பெண்களையும் நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வான்; (ஆனால் இவ்வமானிதத்தை மதித்து நடக்கும்) முஃமினான (விசுவாசிகளான) ஆண்களையும், முஃமினான பெண்களையும் (அவர்கள் தவ்பாவை ஏற்று) மன்னிக்கின்றான். அல்லாஹ் மிக மன்னப்பவன்; மிக்க அன்புடையவன். (33:73)

   அல்லாஹ் நம்மீது விதித்த பொறுப்பு மகத்தானது. 1.அல்லாஹ் விதித்த கட்டளைகளுக்குச் சற்றும் மாறுபடாமல் உலகில் வாழ்வது, 2.எக்காரணம் கொண்டும் அவனுக்கு எவ்விதத்திலும் யாதொரு தன்மையிலும் இணை வைக்காமல் வாழ்வது. இவ்விரண்டிலுமே அவனுடைய பொறுப்புகள் நம்மீது சுமத்தப்படுகின்றன. அமானிதத்தை எவ்விதம் மோசடி செய்யாமல் காப்பாற்ற வேண்டுமோ வாக்குறுதியை எவ்வாறு மீறாமல் நடந்து மனிதத் தன்மையோடு வாழ வேண்டுமோ, அவ்வாறே அல்லாஹ் நம்மீது சுமத்திய பொறுப்புகளுக்குப் பங்கம் விளைவிக்காமல் வாழ்ந்து சிறக்க வேண்டும். இதுவே மனித நியதியாகும். இத்தகைய மனிதர்களையே அல்லாஹ் அருள்கொண்டு நோக்குவதாக தன் திருமறையில் அறிவிக்கின்றான். அவன் அருளுக்குப் பாத்திரமானவர்களாக நாம் நடக்க வேண்டும். அப்போதுதான் வெற்றிபெற்ற மனிதர்களாக நாம் திகழ இயலும்.

   இறைவனைப்பற்றி மனிதனின் வாக்குமூலம்:
உம் இறைவன் ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவர்களுடைய சந்ததிகளை வெளியாக்கி, அவர்களைத் தங்களுக்கே சாட்சியாக வைத்து ”நான் உங்களுடைய இறைவன் அல்லவா?”” என்று கேட்டதற்கு, அவர்கள் ”மெய் தான். நாங்கள் சாட்சி கூறுகிறோம்”” என்று கூறியதை (அவர்களுக்கு) நினைவூட்டுவீராக (ஏனெனில் இது நினைவூட்டப்படாததனால்) நிச்சயமாக இதனை (மறந்து) விட்டுப் பராமுகமாக இருந்து விட்டோம் என்று மறுமை நாளில் நீங்கள் (யாருமே) சொல்லாதிருக்கவும். (7:172)

   அல்லது, ”இணைவைத்தவர்கள் எல்லாம் எங்களுக்கு முன் இருந்த எங்கள் மூதாதையர்களே நாங்களோ அவர்களுக்குப் பின் வந்த (அவர்களுடைய) சந்ததிகள் அந்த வழிகெட்டோரின் செயலுக்காக நீ எங்களை அழித்து விடலாமா?” என்று கூறாதிருக்கவுமே! (இதனை நினைவூட்டுகிறோம் என்று நபியே! நீர் கூறுவீராக.) அவர்கள் (பாவங்களிலிருந்து) விடுபட்டு (நம்மிடம்) திரும்புவதற்காக நாம் (நம்) வசனங்களை இவ்வாறு விளக்கிக் கூறுகின்றோம். (7:173,174)

    சமுதாயத்தினர்கள்! இவ்வாறாக திருமறை தெளிவாக்கிய பின்னரும் கூட நம்முள் பலர் பாராமுகமானவர்களாக உள்ளோம். நம்முடைய செயலற்ற தன்மைகளுக்கு காரணம் கூறி தப்பிவிடலாம் என்று இனியும் எள்ளளவும் எண்ணாதீர்கள்! நம்மை நாமே ஏமாற்றி கொள்ளலாமே தவிர, படைத்தவனை ஏமாற்றி விட்டதாக எண்ணாதீர். இறும்பூது எய்தாதீர்! மறுமை உண்டு! அல்லாஹ்விடம் நாம் பதில் கூறியே தீர வேண்டும். எல்லாம் வல்ல இறைவன் நம்முடைய பாவங்களைப் பொறுத்தருளப் போதுமானவன்!

புலவர் செ. ஜ·பர் அலி பி. லிட்

{ 1 comment… read it below or add one }

MUHAMMED AZEEZ June 20, 2012 at 6:29 pm

FALLOW TO THE ISLAM, PEOPLE STUDY WELL QURAN $ HADEES

Reply

Leave a Comment

Previous post:

Next post: