நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்,” எனது உம்மத் எழுபத்தி மூன்று பிரிவுகளாக பிரியும், அதில் ஒன்று மட்டுமே சுவனம் செல்லும். மீதி எழுபத்திரெண்டு கூட்டமும் நரகிற்கு செல்லும்.வெற்றி பெரும் அந்த ஒரு கூட்டம், இன்றைய தினம் நானும் எனது தோழர்களும் எப்படி இருக்கிறோமோ அப்படி இருப்பவர்கள்” -அபூ தாவூத்.திர்மிதீ.
இந்த இலக்கண வரையரைப்படி அன்று நபித் தோழர்கள் மத்தியில் பிரிவினை இயக்கமோ, ஜமாத்தோ இருந்ததில்லை. அனைவரும் முஸ்லிம் என்ற பெயரிலேயே ஒரே ஜமாஅத் ஆக ஒற்றுமையாக இருந்தார்கள். இன்று துர்பார்க்கியமாக ஏராளமான இயக்கங்கள், ஜமாத்துகள், அமைப்புகள் அல்லாஹ்வின் பெயரால் முஸ்லிம்களை தங்கள் இயக்கத்தை நோக்கி அழைக்கின்றனர்.
இந்த இயக்கங்களில், தவ்ஹீது பேரில் மக்களை அழைக்கும் ஒரு இயக்கத்தின் தலைமை முன்னோடி மெளலவிகள் மீது தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. அந்த நபர்களும் இயக்கத்தால் வெளியேற்றப்படுகின்றனர். இறுதியில் இயக்க நிறுவனர் மீதே குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இது ஒரு தொடர் கதையாக நிகழக்காரணம் என்ன?
வைக்கப்படும் பாலியல் குற்றச்சாட்டு உண்மையா பொய்யா என்பது பற்றி ஆராய்வது நமது நோக்கம் அல்ல. ஒரு தனிப்பட்ட தவ்ஹீது இயக்கத்தின் நிர்வாகிகள் தொடர்ந்து பாலியல் பழியில் வீழ்வது ஏன்? அதற்கான காரணம் என்ன என்று ஆராய்வதே நமது கட்டுரையின் நோக்கம். முதலிலேயே பார்த்து விட்டோம் நபித் தோழர்கள் பல ஜமாத்துகளாக பிரிந்ததில்லை. பிரிவினை இயக்கத்திற்கு இஸ்லாத்தில் இடமில்லை.
ஆக, இன்று,தக்லீது…தப்லீக்கு…தரீக்கா…தவ்ஹீது லேபிளில் இயங்கும் இயக்கங்களுக்கு இஸ்லாத்தில் இடமில்லை. எல்லா இயக்கங்களும் ஹராமான இயக்கங்களே! சுன்னத் ஜமாஅத் முஸ்லிம்கள் ஷிர்க் செய்கிறார்கள், நபிவழிப்படி தொழுவதில்லை என்று கூறி “தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்’’ என்ற ஒரு இயக்கம் ஆரம்பத்தில் AQH – JAQH –TMMK –என்ற இயக்கங்களில் பயணித்து பின்பு பிரிந்து தனிப்பெயரிட்டு, இளைஞர்களின் ஏகோபித்த ஆதரவில் வளர்ந்தது. ஏகத்துவ கோஷத்தை எழுப்பியே முஸ்லிம்களை கவர்ந்தது.
இன்று இந்த இயக்க மெளலவிமார்கள், பாலியல் குற்றச்சாட்டு என்ற படுகுழியில் ஏன் தள்ளப்படுகிறார்கள் என்று சிந்திக்கும்போது ஒரு உண்மை தெளிவாகிறது. இஸ்லாமிய வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட இயக்கங்கள் இஸ்லாம் கூறும் குர்ஆன், ஹதிஸ் படி செயல்படாமல், வழிகெட்ட கவாரிஜ்கள் வழியில் செல்வதே இதற்கு ஒரே காரணம். ஒன்றுபட்ட நபித் தோழர்களிடையே பிரிவினை ஏற்படுத்தி “அஹ்லே தவ்ஹீத்”என்ற தனி ஜமாத்தை முதன் முதலில் உண்டாக்கியவர்கள் கவாரிஜ்கள். இவர்கள் வழியில் சென்று தவ்ஹீத் பெயரில் தனி இயக்கம், தனிப்பள்ளி கட்டியவர் ததஜ மெளலவி.பிஜே உலவி..
இஸ்லாம் ஆண்களுக்கு ஜிகாத் என்னும் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவதை கடமையாக்கியுள்ளது. அதேசமயம் ஹஜ், செய்வதே பெண்களின் ஜிகாத் என்று தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால் வழிகெட்ட கவாரிஜ்கள், ஆண்களுக்கும்,பெண்களுக்கும் ஜிகாத் கடமையாகும் என்று கூறி பெண்களையும் களத்துக்கு கொண்டு வந்து நிறுத்தினர். இவர்களே முதன் முதலில் உதுமான்(ரலி) அவர்களின் கிலாபத் ஆட்சிக்கு எதிராக ஆண், பெண்களை திரட்டி போராட்டம் நடத்தியவர்கள்.
இந்த வழிகெட்ட கவாரிஜ்களின் வழிமுறையை பின்பற்றியே தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத்தும் ஒவ்வொரு ஆர்ப்பாட்டம்,போராட்டம், மாநாடு என்று அனைத்து இயக்க நிகழ்வுகளுக்கும் ஆணையும், பெண்ணையும் ஒன்றாக களத்தில் இறக்கி விட்டு பித்னாவுக்கு விதை போட்டனர். அடுத்து இவர்கள் பெண்களுக்கு செய்த மாபெரும் துரோகம், இயல்பாக வெட்க உணர்வும் நாணமும் கொண்ட பெண்களின் தங்கள் முகத்தை மூடும் சுய உரிமையை பறித்து, ஆண்களின் மத்தியில் அவர்களது அழகை ஹலாலாக காட்சிப்படுத்தியது. பெண்கள் முகத்தை மறைப்பது ஹராம் என்று தீர்ப்பளித்து பித்னாவின் வாசலைத் திறந்து விட்டனர்.
நபி(ஸல்) அவர்கள் சமுதாயத்தில் பல சமுக பெண்கள் கலந்திருந்தனர். குறைஷி என்னும் உயர் கோத்திரப் பெண்கள், நாகரிகம் தெரியாத காட்டரபி பெண்கள், கிராமப்புற பெண்கள்,அடிமைப்பெண்கள், அன்றாட கூலி வேலை செய்யும் ஏழைப் பெண்கள்., இந்த அத்துணை பெண்களும் அவரவர்களின் வெட்க உணர்வுக்குத் தக்கவாறு ஹிசாபை பேணினர்.
நபியவர்களின் மனைவி அன்னை ஆயிஷா (ரலி) அவர்களைப் போன்ற கண்ணியமான பெண்கள் பிற ஆடவர்களுக்கு முன் முகத்திரை அணிந்திருந்தனர். எந்தளவு என்றால் இஹ்ராம் நிலையில் முகத்தை மறைக்க கூடாத நிலையிலும் தங்கள் முகத்தை மறைத்தே இருந்தனர் என்று கீழ் வரும் ஹதீஸ் மூலம் அறியலாம்.
பெண்களாகிய நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இஹ்ராம் அணிந்த நிலையில் இருந்தபோது,ஒட்டகத்தில் பயணிப்பவர்கள் எங்களை கடந்து சென்று கொண்டிருந்தார்கள். அவர்கள் எங்கள் அருகில் வரும்போது தலையில் உள்ள முக்காட்டை முகத்தின் மீது போட்டுக் கொள்வோம். அவர்கள் எங்களை கடந்து சென்று விட்டால் முக்காட்டை அகற்றிக்கொள்வோம்.
அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா (ரலி). அபூ தாவூத். 1562.
இதுபோல் இஹ்ராம் நிலையில் காபத்துல்லாவில் தவாபு செய்யும் போது, எதிர் வரும் ஆண்களின் பார்வையிலிருந்து தவிர்க்க தங்கள் கையிலிருக்கும் விசிறியை கொண்டும் முகத்தை மறைத்துக்கொள்வார்கள் என்ற ஹதீசும் உள்ளது. அதே சமயம் கருப்பின பணிப்பெண்கள், அடிமைப்பெண்கள் கிராமப்புற வாசிகள், போன்றவர்கள் முகத்தை மறைக்காமல் திறந்த நிலையிலேயும் அன்றைய சமுகத்தில் இருந்துள்ளனர்.
நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கி இருங்கள்; ஜாஹிலியா காலத்தில் தங்கள் அழகை வெளிக்காட்டியது போன்று நீங்கள் வெளிக்காட்டவேண்டாம். அல் குர்ஆன்.33:33.
தபரூஜ் என்ற சொல்லுக்கு சுற்றிதிரிதல் என்பது பொருளல்ல.. அழகு, அழங்காரத்தை வெளிக்காட்டுவது என்பதாகும். பெண்களின் முகம்தான் அழகின் முதல் படி, முக அழகைப் பார்த்தே பெண்களை ஆண்கள் விரும்புகிறார்கள். ஆகவே தான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், பெண்கள் நான்கு விடயத்திற்காக மண முடிக்கப்படுகிறார்கள்; அவற்றுள் ஒன்று அழகுக்காக. ஆண்களை ஈர்க்கும் அழகை வசீகரத்தை அல்லாஹ் பெண்களின் முகத்தில் வைத்துள்ளான். அதை தனது நெறி நூலிலும் எடுத்துக் காட்டுகிறான்.
(நபியே!) பிற பெண்களின் அழகு உம்மை எத்துனை ஈர்த்தாலும் உம் மனைவியற்கு பகரமாக அவர்களை மாற்றிக்கொள்வதற்கு உமக்கு அனுமதியில்லை. அல் குர்ஆன்.33:52.
இந்த வசனத்தில் பெண்களின் அழகு ஆண்களை ஈர்க்கும் என்று படைத்த இறைவன் திட்டவட்டமாக கூறுகிறான். ஒரு பெண் பேரழகியாக இருந்தாலும்,அவள் தான் முகத்தை மூடிக்கொண்டால் எவரையும் ஈர்க்கமுடியாது. ஒரு பெண் முகத்தை மறைத்துக்கொண்டால் அழகியும், அழகற்றவளும், குமரியும்,கிழவியும் ஒன்றுதான்.
பெண்கள் முகத்தை முடிக்கொள்வதால் சமுகத்தில் தவறான நடவடிக்கையில் சில பெண்கள் இறங்குகிறார்களாம். அதற்காக முகத்தை கட்டாயம் திறக்க வேண்டுமாம். ஒரு சமுதாயத்தில் பத்து சதவீத பெண்கள் குற்றவாளிகளாகவே எல்லா காலத்திலும் இருப்பார்கள். இவர்கள் செய்யும் கள்ளத்தனம் முகத்தை மூடினாலும் நடக்கும், திறந்தாலும் நடக்கும்.இந்த பத்து சதம், ஈமானில் சோரம்போன பெண்களை காரணம் காட்டி தொண்ணுறு சதவீத பெண்களின் வெட்கத்தன்மைக்கு விடை கொடுத்து, கண்ணியத்தை காற்றில் விடும் கட்டாய முகம் திறக்கும் கட்டை பஞ்சாயத்து தீர்ப்பு நியாயமா?
முஸ்லிம் பெண்கள் முகத்தை கட்டாயம் மறைக்கத்தான் வேண்டும் என்று இஸ்லாம் கூறவில்லை. ஆனால் கவாரிஜ் வழி கேடர்களின் நடைமுறையை பின்பற்றும் தவ்ஹீது இயக்கதாரிகள், “பெண்கள் முகத்தை மூடுவது கூடாத காரியம், ஹராமான செயல் முகத்தை திறந்துதான் வைக்கவேண்டும் என்பதை கொள்கையாக வைத்துக்கொண்டனர். ஆண்கள் தலை திறந்தும், பெண்கள் முகம் திறந்தும் இருக்கவேண்டும் என்பது இவர்களின் எழுதப்படாத சட்டம்.
ஆணும் பெண்ணும் போராட்ட களத்தில் ஒன்று கலப்பதற்காக, முகம் பார்த்து ஒருவரை ஒருவர் அறிந்து இப்லிஷின் பித்னா தூண்டிளில் சிக்க வழி ஏற்படுத்துகிறார்கள். இவர்கள் நடத்தும் பெண் மதராசாக்கள்,அநாதை இல்லங்கள், புதிதாக இஸ்லாத்தை தழுவிய பெண்கள் பள்ளி போன்றவற்றின் பொறுப்புதாரி ஆண் நிர்வாகிகள், அங்குள்ள பெண் உஸ்தாது, மாணவிகளிடம் சரளமாக கலந்து பழகும் அளவிற்கு சுதந்திரம் இருப்பதால் பாலியல் குற்றச்சாட்டுப் பஞ்சுகள் எரிந்து புகையாக வருவதை பார்க்க முடிகிறது.
அடுத்து இவர்களின் பித்னா, மர்கஸ் பள்ளிகளில் அரங்கேறியது. பெண்களும் வந்து தொழும் அளவிற்கு விஷேசமான இடவசதி செய்து கொடுத்துள்ளார்கள். பெண்களை பள்ளிக்குள் கொண்டு வர வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் இடுப்பளவு துப்பட்டா துணியை தடுப்பாக குறுக்கே கட்டி, இருவரும் ஒருவரையொருவர் பார்ப்பதற்கு வசதி செய்துள்ளார்கள்.பெண்களைப் பார்த்தபடியே பயான் செய்ய, இளவட்ட இமாமுக்கு ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து உணர்ச்சிகரமான பயான் உரையை உறுதி செய்துள்ளார்கள்..
ஸஹீகான ஹதீஸ்களை தூக்கி எறிந்துவிட்டு, நபி(ஸல்) அவர்களின் சுன்னாக்களை மர்கஸ்ஸில் உயிர்ப்பிக்கிறார்களாம். பெண்கள் பள்ளியில் தொழ அனுமதி கேட்டால் அனுமதியுங்கள்; தடுக்காதீர்கள். என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளது உண்மைதான். அதேசமயம், உம்மு ஹுமைத் (ரலி) என்னும் சஹாபிய பெண்மணி நபியவர்களுடன் பள்ளியில் தொழ விரும்பியபோது,
நீ என்னுடன் தொழ விரும்புகிறாய் என்பதை நான் அறிவேன்; எனினும் உமது அறையில் (பைத்தீ) தொழுவது உமது வீட்டில் (ஹுஜ்ரத்கீ) தொழுவதை விடச் சிறந்ததாகும். மேலும் உமது வீட்டில் தொழுவது நீ வசிக்கும் பகுதியில் (தாரீகி) தொழுவதை விடவும்; நீ வசிக்கும் பகுதியில் தொழுவது உமது கோத்திரப் பள்ளியில் தொழுவதை விடவும், உமது கோத்திரப்பள்ளியில் தொழுவது எனது பள்ளியில் (மஸ்ஜிதுன்னபவி) தொழுவதைவிடவும் சிறந்தது. என்று நபி(ஸல்) அவர்கள் கூறினர்.
எனவே அப்பெண்மணி தன் உள் வீட்டின் மூலையில் தொழுகையிடத்தை அமைத்து அதிலேயே தனது மரணம் வரை தொழுது வந்தார்கள். — Al banna,-Fath.vol.5,2:1337.
பெண் வீட்டின் முற்றத்தில் தொழுவதை விட வீட்டினுள் தொழுவது சிறந்தது.வீட்டினுள் அவள் தொழுவதை விட வீட்டின் உள் அறையில் தொழுவது சிறந்ததாகும்.என்று நபி (ஸல்) அவர்கள் கூறினர். -அறிவிப்பவர்: –இப்னு மஸ்வூத்.(ரலி).;அபூ தாவூத்.483.
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “இன்று பெண்கள் உருவாக்கியுள்ள (அலங்கார உத்திகள் போன்று) வற்றை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பார்த்திருப்பார்களேயானால் பனு இஸ்ராயீல் சமுதாயப் பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்லக் கூடாதென தடுக்கப் பட்டதைப் போன்று இவர்களையும் தடுத்திருப்பார்கள். முஸ்லிம்.76.
உமர் (ரலி) அவர்களின் மனைவியரில் ஒருவர் (ஆத்திகா) எனும் ஒருவர் ஸுபுஹ்,இஷா ஆகிய தொழுகைகளைப் பள்ளியில் ஜமாத்தில் தொழச் செல்வர் அவரிடம் (உங்கள் கணவர்) உமர் (ரலி) அவர்கள்,இவ்வாறு செல்வதை வெறுக்கிறார்கள்;ரோஷப்படுகிறார்கள் என்று தாங்கள் அறிந்திருந்தும் நீங்கள் ஏன் பள்ளிக்கு செல்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது, அதற்கு அவர்,( என்னை பள்ளிக்கு செல்ல வேண்டாமென்று கூறவிடாமல்) “அவரை எது தடுக்கிறது?” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், “ பெண்கள் பள்ளிக்கு செல்வதை தடுக்காதீர்கள்!” என்று கூறியதே தடுக்கிறது என்று பதில் வந்தது. இப்னு உமர் (ரலி), புஹாரி.900.
உமர் (ரலி) அவர்கள் ஆட்சியில் பெண்கள் பள்ளியில் ஜமாஅத்தாக தொழுவதை ஆரம்பத்தில் அனுமதித்தாலும் பிற்பாடு அதை தடை செய்து, பெண்கள் வீட்டினுள் தொழுவதே சிறந்தது என்று சுன்னாவை வலியுறுத்தினார்கள். இதை அன்றிருந்த நபித்தோழர்கள் எவரும் ஆட்சேபிக்கவில்லை. -அல் அயினி – உம்தத்துல்காரீ 3/228.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் நபித்தோழர்கள் வாழ்ந்த அந்த சிறந்த சமுதாயத்தின் காலத்திலேயே, பெண்கள் பள்ளிக்கு தொழ வருவதில் உள்ள பிரச்சினைகளை அன்னை ஆயிஷா (ரலி) அவர்களும், உமர் (ரலி) அவர்களும் தெளிவு படுத்துகிறார்கள். இன்றைய நவீன பித்னா உலகின் நிலையை நாம் சொல்ல வேண்டியதில்லை.
பெண்கள் முகத்தை மூடுவது ஹராம் என்று தீர்ப்பளித்து.. ஆணையும் பெண்ணையும் நேருக்கு நேர் சந்திக்க, ஆர்பாட்ட, போராட்ட களம் அமைத்து கண்ணியம் சிதைத்தல்.மர்கஸ் பள்ளியில் முறையான மறைவான தடுப்பு இன்றி ஒருவரை ஒருவர் சந்திக்க.. வகை செய்து சுன்னாவை சிதைத்து பித்னாவுக்கு கடை விரிக்கின்றனர்.
எஸ்.ஹலரத் அலி. திருச்சி- 7
{ 3 comments… read them below or add one }
நீங்கள் என்ன தான் செய்தாலும் அல்லாஹ்வின் மார்க்கத்தை ஊதி அணைக்க முடியாது அலி சகோதர
Good Analysis
புஹாரி ;- 1838. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
‘இறைத்தூதர் அவர்களே! இஹ்ராம் அணிந்திருக்கும்போது எந்த ஆடைகளை நாங்கள் அணிய வேண்டுமென்று நீங்கள் கட்டளையிடுகிறீர்கள்?’ என்று ஒருவர் எழுந்துகேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘நீங்கள் சட்டைகளையும், கால் சட்டைகளையும், தலைப் பாகைகளையும், தொப்பிகளையும் அணியாதீர்கள்! ஒருவரிடம் செருப்புகள் இல்லையென்றால், அவர் காலுறைகளை (அவற்றின் மேலிருந்து) கரண்டைக்குக் கீழுள்ள பகுதிவரை கத்தரித்துக் கொள்ளட்டும்! குங்குமப் பூச்சாயம், வர்ஸ் எனும் செடியின் சாயம் தோய்ந்த எதனையும் அணியாதீர்கள்! இஹ்ராம் அணிந்த பெண் முகத்திரை அணியக் கூடாது; அவள் கையுறைகளையும் அணியக் கூடாது!’ என்று பதிலளித்தார்கள்.
Volume :2 Book :28
. மற்ற நேரங்களில் பெண்கள் முக திரை அணிந்து உள்ளதால் தான் ஹஜ் செய்யும் போது முக திரை அணிய வேண்டாம் என கடைசி ஞானியும் , கடைசி வாழ்வியல் சட்டங்களை கொண்டு வந்த இறை தூதர் ஆன மொஹமட் ( ஸல் ) கூறியுள்ளார்கள் . முக திரை தேவை இல்லை என நினைத்து இருந்தால் சாதாரண நாட்களிலும் பெண்களை முக திரை அணிய வேண்டாம் என சொல்லி இருப்பார்கள் . இதை படிக்கும் தவ்ஹீட் ஜமாஅத் அன்பர்கள் தங்கள் தலைமையிடம் கேட்கட்டும் . பதில் சொல்லட்டும் . நபி காலத்தில் பெண்கள் முக திரை அணிந்து உள்ளதை பற்றி 10 கும் மேற்பட்ட ஹதீஸ் கள் உள்ளன . எல்லாம் பொய்யா ?