ஞான சூனியம்

in படிப்பினை

அருளாளன் அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்

சூனிய வாதம்: (Nihilism)

அல்லாஹ் தன் திருமறையில்,
“என்னுடைய இறைவனே இறந்தவர்கள் எழுப்பப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக! என்று இப்லீஸ் கூறினான்.

நிச்சயமாக! நீ  அவகாசம் அளிக்கப்பட்டோரில் ஒருவனாவாய், அதற்கு இப்லீஸ்; என் இறைவனே! என்னை நீ வழிகேட்டில் விட்டு விட்டதால் நான் இவ்வுலகில் (வழிகேட்டை தரும் அனைத்தையும்) அவர்களுக்கு அழகாகத் தோன்றும்படி செய்து (அதன்மூலமாக) அவர்கள் அனைவரையும் வழிகெடுத்து விடுவேன்.”  அல் குர்ஆன்.15:36-39.

சபிக்கப்பட்ட ஷைத்தான் அல்லாஹ்விடம் வரம் வாங்கி நம்மை வழி கெடுக்கின்றான். நல்ல எண்ணம் அல்லாஹ் புறத்திலிருந்து வருகிறது. கெட்ட எண்ணம் ஷைத்தான் புறத்திலிருந்து வருகிறது.நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்,

நல்ல கனவு அல்லாஹ்வின் புறத்திலிருந்து வருகிறது. கெட்ட கனவு ஷைத்தான் புறத்திலிருந்து வருகிறது.    அறிவிப்பாளர்: கதாதா (ரழி). புகாரி.

இவ்வாறு தன்னாலான சகல யுக்திகளையும் பயன்படுத்தி மனிதர்களது செயல்களை வீணாக்கி அவர்களுக்கு அல்லாஹ்வின் அருள் கிடைக்காதிருக்க ஷைத்தான் அயராது பாடுபடுவான். இதனையே நபி (ஸல்) அவர்களின் பின்வரும் நபிமொழி குறிப்பிடுகின்றது. “‘உங்களில் ஒவ்வொருவரும் ஜின்களில் ஒரு கூட்டாளனும் மலக்குகளில் ஒரு கூட்டாளனும் இணைக்கப்படாமல் இல்லை’ என்று நபியவர்கள் கூறியபோது ‘உங்களுக்குமா’ என்று கேட்கப்பட ‘ஆம் எனக்கும்தான். எனினும், நிச்சயமாக இறைவன் அவனுக்கு எதிராக எனக்கு உதவி செய்துவிட்டான். இதற்கு அவன் கட்டுப்பட்டுவிட்டான். எனவே, அவன் எனக்கு நல்லவற்றை மாத்திரமே ஏவுவான்’ என்று பதிலுரைத்தனர்” [நூல்: ஸஹீஹுல் ஜாமிஃ – 5800]

 ஷைத்தான் மனிதனது எண்ணம், சொல், செயல் என்ற அனைத்து விடயங்களையும் பாழ்படுத்தி வீணாக்கிவிடவே முயற்சி செய்கின்றான்.    நம் மனதுக்குள் ஆதிக்கம் செலுத்தும் சக்தியை ஷைத்தானுக்கு அல்லாஹ் அளித்திருக்கிறான்.

அல்லாஹ்வைப்போல் சூனியக்காரனும் செயல்படுவான் என்று நம்புவது இணைவைத்தல் என்று பீ.ஜெ. சொல்கிறார்.அல்லாஹ்வைப் போல் ஷைத்தானும் மனதில் பல தாக்கத்தை ஏற்ப்படுத்துவான் என்ற நம்பிக்கையை இணைவைத்தல் என்று சொல்லுவாரா? அல்லது இறைவனின் நாட்டம் என்று சொல்லுவாரா?

ஸாமிரி என்பவன் சூனியத்தின் மூலமாக காளைக்கன்றை செய்து முஸ்லிம் சமூதாயத்தை வழி கெடுகின்றான். மூஸா (அலை) அவர்கள், நீ ஏன் இவ்வாறு செய்தாய் என்று கேட்டதற்கு, “என் மனம் இவ்வாறு செய்ய தூண்டியது! என்றான்.”    அல் குர்ஆன்.20:95-97.

இணைவைக்கும் காரியத்தை செய்ய ஸாமிரின் மனதை தூண்டியது அல்லாஹ்தான் என்று பீ.ஜே. விளக்கம் கொடுத்தார்.

“அல்லாஹ்வின் நாட்டமின்றி சூனியம் செய்ய முடியாது”. –அல் குர்ஆன். 2:102.

இந்த வசனத்தை ஆதாரமாகக் கொண்டு அல்லாஹ் நாடினால்தான் சூனியக்காரன் சூனியம் செய்வான் என்று சொன்னதற்கு, சூனியம் என்ற கெட்ட இணைவைக்கும் செயலை அல்லாஹ் நாட மாட்டான். அவ்வாறு சொல்வது அறிவீனமானது என்று பீ.ஜே. விளக்கம் கொடுத்தார்.ஆனால் ஸாமிரி விசயத்தில் இணை வைக்கும் செயலை அல்லாஹ்தான் மனதில் தூண்டினான் என்கிறார்.

சூனியக்காரன் சூனியம் செய்ய அல்லாஹ் நாடினால்தான் முடியும் என்ற வாதம் அறிவில்லாத வாதம் என்றால் அல்லாஹ்தான் ஸாமிரியை இணைவைக்க தூண்டினான் என்ற பீ.ஜே. வாதம் அறிவுப்பூர்வமான வாதமாகுமா? இணை வைக்க ஷைத்தான் தான் தூண்டுவான் என்பது அனைவரும் அறிந்த விஷயம். அந்த அடிப்படையில் ஸாமிரியையும் அந்த மூஸா (அலை) அவர்களின் முஸ்லிம் சமுதாயத்தையும் சூனியத்தைக்கொண்டு இணை வைக்க தூண்டியது ஷைத்தானே!

ஷைத்தான்தான் சூனியத்தைக் கற்றுக் கொடுத்தான் என்ற அல் குர்ஆன். 2:102 இறைவசனமே இதற்கு சான்றாக இருக்கிறது.

நபிமார்கள் அற்புதம் நிகழ்த்தியதை அல்லாஹ்தான் நிகழ்த்தினான் என்று நம்புவது போல் சூனியக்காரன் சூனியம் நிகழ்த்துவதை ஷைத்தான்தான் நிகழ்த்தினான் என்று நம்பினால் அந்த நம்பிக்கை இணை வைத்தல் ஆகாது.

ஜோதிட, சூனிய மெய்யும் பொய்யும்:
ஜோதிடர்கள் சிலவேளைகளில் ஒன்றை பற்றி அறிவிக்க அது உண்மையாகி விடுகிறதே! அது எப்படி என்று அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கேட்டபோது, “ வானவர்கள் மேகத்தில் இறங்கி விண்ணில் தீர்மானிக்கப்பட்ட விஷயத்தைப் பற்றி பேசிக்கொள்கிறார்கள். ஷைத்தான்கள் அதை திருட்டுத்தனமாக ஒட்டுக் கேட்டு ஜோதிடர்களுக்கு (உள்ளுதிப்பாக) அறிவித்து விடுகின்றன. ஜோதிடர்கள் அந்த ஒரு உண்மையுடன் நூறு பொய்களை புனைந்து கூறுவார்கள்.”என்று அல்லாஹ்வின் தூதர் கூறினார்கள்.    அறிவிப்பவர்:ஆயிஷா(ரலி). புகாரி.

‘ஒருவன் குறிகாரனிடம் சென்று அவன் கூறுவதை உண்மை என்று நம்பினால் முஹம்மதுக்கு அருளப்பட்ட இஸ்லாத்தை விட்டும் அவர் நீங்கி விட்டார்.” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினர்.    அறிவிப்பவர்.அபூஹுரைரா(ரலி). அபூதாவூத்.

மறைவான விஷயம் அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரியும். சில குறிப்பிட்ட விஷயம் ஜோசியக்காரனுக்கு தெரிகிறது. அவன் அல்லாஹ்வைப்போல் செயல்படுவான் என்று சொல்ல முடியாது. இதில் செயல்படுவது வழி கெடுக்க அனுமதி வழங்கப்பட்ட ஷைத்தானே! இதுபோல் சூனிய விசயத்தில் சூனியக்காரன் அல்லாஹ்வைப்போல் செயல்படுகிறான் என்று சொல்ல முடியாது. செயல்படுவது ஷைத்தான் தான்.

ஷைத்தான் ஒட்டுக்கேட்ட அந்த மறைவான விஷயம் ஜோதிடக்காரனுக்கு தெரியும் என்றும், ஜோதிடக்கலை என்ற ஒன்று இருக்கிறது என்று நம்பினால் அவன் காபிர் ஆகிறானா? அது போல ஷைத்தான் மன ரீதியான சில பாதிப்புகளை ஏற்ப்படுத்துகிறான். அல்லாஹ்வைப்போல் மனரீதியான தாக்கத்தை சூனியக்காரன் செய்யவில்லை; ஷைத்தான் தான் செய்கிறான் என்று நம்பினால் அவன் இணை வைத்தவனாகிறானா? அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதரும் சொன்ன அடிப்படையில் ஜோசியத்தையும், சூனியத்தையும் நம்புகிறவன் மார்க்கத்தை நிராகரித்தவனாகவோ, இணை வைத்தவனாகவோ ஆக மாட்டான்.

(மனிதர்களுக்கு ஷைத்தான் மனரீதியாக மட்டுமல்ல உடல் ரீதியாகவும் சில பாதிப்புகளை செய்ய முடியும் என்று ஐயுபு (அலை) அவர்கள் கூறுவதிலிருந்து அறிய முடிகிறது.

“மேலும் நம்முடைய அடியார் ஐய்யுபை நினைவு கூர்க! அவர் தம் இறைவனுடன் “ நிச்சயமாக ஷைத்தான் எனக்குத் துன்பத்தையும், வேதனையையும் கொடுத்து விட்டான்.” குர்ஆன்.38:41.)

“ஜோதிடரிடம் சென்று ஜோசியம் கேட்டால் அவன் காபிராகிவிடுவான்.அதுபோல் சூனியக்காரனிடம் சென்று சூனியம் வைக்கச் சொன்னால் அவர் சொர்க்கம் செல்ல மாட்டார்.’   அறிவிப்பவர்: அபூ தர்தா (ரலி)-அபூதாவுத்.

இன்று தனக்கும் தன் இயக்க தோழர்களுக்கும்  சூனியம் வைக்க சொல்லி 50 லட்சம் பரிசளிக்க ஒப்பந்தம் போடுகிறவர் தவ்ஹீது பேசும் தலைவர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். தவ்ஹீத் பேசுவதால் அல்லாஹ் சொர்க்கத்தை கொடுத்துவிடுவானா?

சூனியம் என்ற கலை இருக்கிறது அது கண்கட்டு வித்தை. மேஜிக் என்று பீ.ஜே. சொல்வதைப்போல் ஜோதிடம் என்று ஒன்று இருக்கிறது. மனிதன் முகத்தைப் பார்த்து சொல்லக்கூடிய சைக்காலஜி கலை என்று சொல்ல முடியாது. ஷைத்தானிடமிருந்து வந்த உண்மையும் ஜோதிடன் சொன்ன பொய்யும் கலந்ததுதான் ஜோதிடம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதுபோல ஷைத்தானைக்கொண்டு மனதில் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய சூனியம் என்ற கலை இருக்கிறது.

சூனியக்காரர்கள் கையை எடுப்பேன், காலை முடக்குவேன், தற்கொலை செய்ய வைப்பேன், உயிரை வாங்குவேன் என்று பொய் பித்தலாட்டம் செய்வதால் சூனியத்தில் பொய்யும் கலந்திருக்கிறது.அதனால் அல்லாஹ்வும்,அவனுடைய தூதரும் சொன்ன சூனியத்தை இல்லை என்று மறுக்கக்கூடாது. கடவுளின் பெயரால் பல பித்தலாட்டங்களும், அயோக்கியத்தனங்களும் நடப்பதால் நாத்திகவாதிகள் கடவுள் இல்லை என்று சொல்வது எப்படி அறிவீனமான வாதமோ, அதேபோல சூனியத்திலும் பொய் பித்தலாட்டம் நடப்பதால் சூனியமே இல்லை என்று சொல்வது அறிவீனமான வாதமாகும்.

ஷைத்தான் நிராகரிப்பாளன், ஷைத்தானை பின்பற்றுபவர்கள் நிராகரிப்பாளர்கள் ஷைத்தானால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது என்று நம்புபவர்களும் நிராகரிப்பாளர்கள். அதுபோல் சூனியக்காரன் நிராகரிப்பாளன், சூனியத்தில் ஈடுபடுபவர்கள் நிராகரிப்பாளர்கள் சூனியத்தால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது என்று நம்புபவர்களும் நிராகரிப்பவர்களே!

ஜோசியக்காரனும், சூனியக்காரனும், ஷைத்தானின் உதவி கொண்டு இன்று செயலாற்ற முடியுமா? முடியாதா? என்பது இங்கு பிரச்சினை இல்லை. அல்லாஹ்வும் அவனது தூதரும் சொன்ன விளக்கத்தின் அடிப்படையில் சூனியத்தையும் ஜோசியத்தையும் நம்புகிறோமா? நம்ப மறுக்கிறோமா? என்பதுதான் பிரச்சினை?

மறதியா? மன நோயா?
சூனியத்தின் மூலமாக கணவன் மனைவியிடையே பிரிவினை ஏற்படுத்த முடியும் என்று திருமறை கூறுகிறது.  அல் குர்ஆன்.2:102.

அல்லாஹ்வின் தூதர் கூறினார்கள், “ இப்லீஸ் தன் சிம்மாசனத்தை (கடல்) நீரின் மீது அமைக்கிறான். பிறகு தனது பட்டாளங்களை (மக்களிடையே) அனுப்புகிறான்.அவர்களில் மிகப்பெரும் குழப்பத்தை ஏற்ப்படுத்துகின்ற (ஷைத்தான்)வன்  எவனோ அவனே இப்லீசிடம் மிக நெருங்கிய அந்தஸ்து அடைகிறான். அவனிடம் ஷைத்தானில் உள்ள ஒருவன் திரும்பி வந்து நான் இன்னின்னவாறு செய்தேன் என்று கூறுவான். பிறகு அவர்களில் மற்றொருவன் வந்து நான் கணவன் மனைவி இடையே பிரிவை ஏற்படுத்தாமல் அவனை விட்டு வைக்கவில்லை என்று கூறுவான். அப்போது அவனை அருகில் அழைத்து வரச் செய்து நீதான் சரி(யானா ஆள்) என்று இப்லீஸ் பாராட்டுவான்.    அறிவிப்பவர்:ஜாபிர் (ரலி), நூல்; முஸ்லிம்.

கணவன் மனைவியிடையே பிரிவினை ஏற்படுத்துவது பெரிய வேலை என்று ஷைத்தான் சொல்கிறான். சூனியத்தின் மூலமாக கணவன் மனைவிக்கிடையே பிரிவினை ஏற்படுத்த முடியும் என்ற 2:102  திருமறை வசனத்திற்கு விளக்கமாக, கணவன் மனைவிக்கிடையே பிரிவினை ஏற்படுத்துவது பெரிய வேலை இல்லை என்று பீ.ஜே. சொல்கிறார். நாம் யார் சொல்வதை சரி காண்பது?  வழி கெடுக்கும் ஷைத்தான் சொல்வதையா? அல்லது பீ.ஜே.சொல்வதையா?

நபி (ஸல்) அவர்கள் சூனியத்தின் பாதிப்பால் செய்யாததை செய்ததாக சொன்னார்கள். அப்படி சொல்லியிருந்தால் அது மன நோய் என்று பீ.ஜே. சொல்கிறார். நபி (ஸல்) அவர்கள் ஒருமுறை நான்கு ரக்அத் தொழுகையில் இரண்டு ரக்அத்தோடு ஸலாம் கொடுத்தார்கள். தொழாத இரண்டு ரக் அத்தை தொழுததாக சொன்னார்கள். செய்யாத ஒரு செயலை செய்ததாக சொன்னது மறதியா? அல்லது மன நோயா?

நபி (ஸல்) அவர்கள் தங்கள் மனைவியிடம் செல்லாமலே சென்றதாக நினைத்தார்கள். இதை மன நோய் என்கிறார் பீ.ஜே. நபி (ஸல்) அவர்கள் மனைவியிடம் சென்று விட்டு, செல்லவில்லை என்று நினைத்து தொழ வைக்க தயாரானார்கள். இதை மறதி என்று பீ.ஜே.சொல்கிறார். இரண்டிற்கும் என்ன வேறுபாடு? பீ.ஜே.விடம் ஏன் இந்த முரண்பாடு. மறதி என்பது உள்ளத்தின் குறைபாடு. மனநோய் என்பது இல்லாததை இருப்பதாகக் கூறுவது என்று பீ.ஜே.புது விளக்கம் கொடுக்கிறார்.

தினசரி நாளிதழ் போடும் ஒருவர், ஒரு வீட்டுக்கு போடாமலே சென்று விட்டு சிறுது நேரம் சென்று யோசித்தால் போட்டது போன்றே தோன்றும். செய்யாத செயலை செய்ததாகக் கருதும் இந்த நபரின் செயலை மறதி என்பதா? அல்லது மனநோய் என்பதா? நல்ல மன நிலையில் உள்ளவர்களை மன நோயாளி என்று சொல்வது பீ.ஜே.யின் வழக்கம். இது போன்றே நல்ல மன நிலையில் இருந்த நபி (ஸல்) அவர்களை மனநோயாளியாகப் பார்க்கிறார்.

கிழ்ர் (அலை) அவர்களைச் சந்திக்க பயணத்தில் இருந்த மூஸா (அலை) தங்கள் காலை உணவான மீனை தன் பணியாளிடம் கேட்டார்கள்.அதற்கு அவர், “ நிச்சயமாக நான் மீனை மறந்து விட்டேன். மேலும் அதை (உங்களிடம்) சொல்வதை ஷைத்தானையன்றி (வேறு எவனும்) என்னை மறக்கடிக்கவில்லை.” என்று பணியாள் கூறினார்.”  -அல் குர்ஆன்.18:63.

லைலத்துக் கத்ரின் நாளை அல்லாஹ் அறிவித்துக்கொடுத்தான். உங்கள் நபி மறந்துவிட்டார், ஆயிரம் மாதங்களை விட மேலான நன்மையை பெற்றுத்தரக்கூடிய ஒரு நாளை நினைவில் வைக்காமல் உங்களுடைய நபி அலட்சியமாக இருந்திருக்கின்றார் என்றால் வஹியின் மற்ற விசயங்களில் எவ்வளவு அலட்சியம் காட்டியிருப்பார். குர்ஆன் இறக்கப்பட்ட நாளையே மறந்தவருக்கு குர்ஆனில் இறக்கப்பட்ட மற்ற விசயங்களை மறந்திருக்க மாட்டாரா? என்று முஸ்லிம் அல்லாதவர்கள் சந்தேகத்தை எழுப்பினால்,பீ.ஜே. அந்த ஹதீஸை நிராகரிப்பாரா? அல்லது இது அல்லாஹ்வின் நாட்டம் என்பாரா?

“இஸ்லாம் ஓர் இனிய மார்க்கத்”திற்க்காக சத்திய மார்க்கத்தை வளைக்க கூடாது. சூனியத்தினால் மன ரீதியாக பிரம்மையான பாதிப்புகளை ஏற்படுத்த முடியும் என்றும், அதுவும் அல்லாஹ் நாடினால்தான் நடக்கும் என்றே குர்ஆனும் ஹதீதுகளும் சொல்கிறது. இதைத்தவிர கையை எடுக்கவோ,காலை முடக்கவோ, உயிரை வாங்கவோ சூனியத்தால் முடியும் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. அல்லாஹ் அறிந்தவன்!

அல்லாஹ் சொல்லாத(கை எடுத்தால்,கால் முடக்கம், உயிர் எடுத்தல்)  ஒன்றை இருப்பதாக சொல்லி சூனிய வெளியில் வாள்(ய்) வீச்சு நடத்தி கூட்டம் சேர்த்து கோஷம் போடுவதால் மறுமையில் வெற்றி கிட்டுமா?

ஞானசூனியம்
பீ.ஜே. சொல்லக்கூடிய மார்க்க கருத்தில் 90 சதவிகிதக் கருத்து சரியானது என்று ஏற்றுக்கொள்கிறோம் 10 சதவிகித கருத்துதான் தவறானது என்று மறுக்கிறோம். அதில் சூனியமும் ஒன்று. ஆனால் பீ.ஜே. யை பின்பற்றுபவர்கள் அவரின் ஆய்விலிருந்து வெளிவரும் அத்தனை கருத்துக்களையும் நூற்றுக்கு நூறு சரியென்று பின்பற்றுகிறார்கள். இந்த சிந்தனை நேர்வழியா? அல்லது வழிகேடா? என்று அவரை தக்லீது செய்பவர்கள் சிந்திக்கவேண்டும்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். பெருமை என்பது சத்தியத்தை மறுப்பதும்; பிறரை இழிவாக கருதுவதும். பீ. ஜே.யை பின்பற்றுபவர்கள், யாரும் அவருடன் விவாதம் செய்து வெற்றி பெற முடியாது என்று கருதுவதும் மாற்றுக்கருத்து சொல்பவர்களை இழிவாக பார்க்கும் நிலையே இன்றுள்ளது. சொல்லக்கூடிய கருத்து சத்தியமா என்று பார்க்காமல் அது பீ.ஜே.தரப்பிலிருந்து வருகிறதா அல்லது பீ.ஜே.தரப்பல்லாத மற்றவர்களிடமிருந்து வருகிறதா என்று பார்ப்பதும், பீ.ஜே.யுடன் விவாதம் செய்து பெரிய ஆளாகப் பார்க்கிறார் என்றுக் கூறிக்கொண்டு பீ.ஜே.யை பெரிய ஆளாக்கி பெருமை அடிக்கும் கூட்டமே அங்குள்ளது.

ஆட்டு மந்தையை வழி நடத்திச் செல்லும் மேய்ப்பனுக்கு நல்ல மேய்ப்பன் என்ற பெருமை வந்து சேரலாம்.மேய்ப்பனின் வழி காட்டுதலின்படி கூட்டத்தோடு கூட்டமாய் சுய சிந்தனை இல்லாமல் செல்லும் மந்தை ஆட்டு (மண்டை ஆட்டும்) கூட்டத்திற்கு என்ன பெருமை. அல்லாஹ் கூறுகிறான்.

ஒரு (ஆடு,மாடு மேய்ப்பவ)னின் கூப்பாட்டையும், கூச்சலையும் தவிர வேறெதையும் கேட்டு, அறிய இயலாதவை (கால்நடை) போன்றவர்கள்.-அல் குர்ஆன்.2:171.

தன் அறிவிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அல்லாஹ்வின் கட்டளைக்கு கீழ்படிந்த இப்ராஹீம் (அலை) அவர்களை அல்லாஹ் தன் உற்ற தோழன் என்று கூறிப் பெருமைப் படுத்துகின்றான். அல்லாஹ்வின் கட்டளைக்கு கீழ்ப் படியாமல் தன் அறிவைக்கொண்டு பெருமையடித்த இப்லீசை ஷைத்தான்,எதிரி என்று சிறுமைப்படுத்தினான். தன் பிரிய மகன் இஸ்மாயிலை அறுத்து பலிகொடுக்க அல்லாஹ் கட்டளை இட்டதும், அறிவுபூர்வமாக சிந்திக்காமல் அல்லாஹ்வின் கட்டளைக்கு கட்டுப்பட்ட இப்ராஹீம் (அலை) அவர்கள் ஞானமுடையவர். நெருப்பால் படைக்கப்பட்ட நான் உயர்ந்தவன் என்று அறிவுபூர்வமான வாதம் வைத்து அல்லாஹ்வின் கட்டளையை நிராகரித்த இப்லீஸ் ஒரு ஞானசூன்யம். அன்புச் சகோதரர்களே! இனி எவ்வழியை பின்பற்றப் போகிறீர்கள்?

இப்லீசின் ஞான சூனிய வழியா? அல்லது இப்ராஹிம்(அலை) அவர்கள் காட்டித்தந்த ஞான மார்க்க வழியா? சிந்தியுங்கள் மரணம் வருவதற்குள் செயல்படுங்கள்.

“எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை அதிலிருந்து தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெரும் கொடையாளியாவாய்! “   -அல் குர்ஆன்.3:8.

 ராஸிக். திருச்சி-8.

{ 4 comments… read them below or add one }

Sithik Basha September 27, 2014 at 3:05 pm

Excellent Article, but the followers of PJ will never change their mind. Their Egoism rules their mind.

Reply

azar October 1, 2014 at 10:15 am

மாஷா அல்லாஹ். நல்ல விளக்கம்.

Reply

haja sirajudeen October 1, 2014 at 9:49 pm

பி ஜேவை யாரும் பின் பற்றவில்லை… மாறாக குர்ஆன் ஹதிஸையே பின் பற்றுகின்றனர்… விமர்சனம் செய்வதை விட்டுவிட்டு மாற்றுமத தாவாவை செய்யுங்கள் நன்மை கிடைக்கும்

Reply

Mohamed Nalim October 2, 2014 at 5:33 pm

சூனியம் சம்பந்தமாக குரான் ஹதீஸ் இரண்டுக்கும் இடையில் முரண்பாடுகள் இல்லை என்ற கருத்து மேலோங்கியபோது அதிலிருந்து தனது ஆதரவாளர்களை திசைத்ருப்ப பொதுமக்களின் அறிவீனமான நம்பிக்கைகளை முன்வைத்து சூனியம் செய்ய தெரியாத ஒருவனுடன் ஒப்பந்தம் செய்து PJ ஆடும் நாடகம் இன்னும் தொடரும்…………..

Reply

Leave a Comment

Previous post:

Next post: