ஜிஹாத்தின் பெயரால் நடத்தப்படும் சகோதரப் படுகொலைகள்

in அழிவுப் பாதை

ஜிஹாத்தின் பெயரால் நடத்தப்படும் சகோதரப் படுகொலைகள் – இஸ்லாம் சொல்லாத போராட்டங்கள்
“ஜிஹாத்” எனும் இறைவழியில் செய்யும் அறப்போர் பற்றி மௌலானா மௌதூதி முதல் ஷேய்ஹ் அன்வர் அல்-அவ்லாக்கி வரை பலரும் பேசியுள்ளனர். அதன் உள்ளடக்கங்கள், வரையறைகள், நோக்கங்கள், தெளிவுகள் என பல கோணங்களிலும் பல அறிஞர்களாலும் இவை பேசப்பட்டுள்ளன. ஆனால் அதே ஜிஹாத் எனும் அறப்போரின் பெயரை தங்கள் அரசியல், இராணுவ இலக்குகளை அடைந்து கொள்ள பல மாபியாக்களும் பயன்படுத்துவது கவலையளிக்கும் விடயமாகும். ஆப்கானில் ரஷ்ய ஆக்கிரமிப்பு இராணுவத்திற்கு எதிராக நடந்த போரில் இதே ஜிஹாத்தின் பெயரால் பல சகோதரப் படுகொலைகள் தாராளமாக நடத்தப்பட்டிருந்தன. காஷ்மீரும் இதற்கு விதிவிலக்கல்ல. பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.யின் மேஷனரியாக பல குழுக்கள் உயிர் படுகொலைகளை நிகழ்த்தியுள்ளனர். அந்த தொடர்ச்சியில் சிரியாவிலும் சகோதரப் படுகொலைகள் ஏராளம் தாராளமாகவே நிகழ்த்தப்பட்டு வருகின்றன.

பஸர் அல்-அஸாத்தின் கொலைகார இராணுவத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்திய போராளிகள் தங்களிற்குள் பரஸ்பர சகோதர படுகொலைகளை நிகழ்த்தியதை எப்படி ஜிஹாத் என்ற பெயர் கொண்டு அழைப்பது? சிறு கருத்து முரண்பாடு ஒன்றே போதும் ஒருவரை கொலை செய்ய. இதில் ஜெய்ஸ் அல் முஜாஹிரீன், அஹ்ரால் அல் ஷாம், எப்.எஸ்.ஏ. போன்றவை வகை தொகையில்லாமல் சகோதரப் படுகொலைகளை நிகழ்த்தியுள்ளன.

சிரிய அரசிற்கு எதிராக போராட வந்த போராளிகளில் கருத்து முரண்பட்ட போராளிகள், போராட்டத்தில் இருந்து விலக முற்பட்ட போராளிகள் என பலரயும் இவர்கள் போட்டுத் தள்ளியுள்ளனர். போராளிகள் அவர்களின் மனைவியர் குழந்தைகள் போன்றவர்களைக் கூட இவர்கள் கொலை செய்துள்ளனர். யுத்தம் எல்லாவற்றையும் மன்னிக்கும் என்ற பொது விதி இவர்களை இதையெல்லாம் செய்ய வைக்கிறது. ஆனால் இதையெல்லாம் ஜிஹாத் மன்னிக்காது. இறைவனும் மன்னிக்க மாட்டான்.

எப்.எஸ்.ஏ.யில் போராடிய ஒரு போராளி ஜபாஃஹ் அல் நுஸ்ராவில் இணைய முற்பட்ட போது அந்த போராளியை தலை கீழாக தொங்கவிட்டு அவர் மனைவியை நிர்வாணமாக்கி பின்னர் இருவரையும் கொலை செய்தது எப்.எஸ்.ஏ.யின் அலிபோ பிராந்திய தலைமை. இது போலவே அஹ்ரார் அல் ஷாமில் இருந்து விலகி தங்கள் குடும்பத்துடன் ஜபாஃஹ் அல் நுஸ்ராவின் தளத்தை நோக்கி சென்று கொண்டிருந்த 03 போராளிகளின் குடும்பங்களை பிடித்து ஒரு வாகனத்தினுள் அடைத்து குண்டு வைத்து கொலை செய்தது அந்த இயக்கம். போராளிகளுக்கே இப்படியென்றால் பொது மக்களை இவர்கள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள்?

இட்லிப்பில் ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகளை சுற்றி வளைத்து சுட்டுத் தள்ளியது ஜபாஃஹ் அல் நுஸ்ராவின் கிழக்கு பிராந்திய தலைமை. தலைமைத்துவங்களுக்கிடையிலான கருத்தியல் முரண்பாடுகளிற்கு பகரமாக போராளிகளை பழிவாங்கும் கொடூர மனப்பான்மை பல இடங்களில் நிருபணமாகியுள்ளன. இதையும் அவர்கள் ஜிஹாத்தின் பெயராலேயே செய்துள்ளார்கள்.

மோசூல் வீழ்ந்த போது ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள் பல ஷியா மிலீஷியாக்களை கைது செய்து மரண தண்டனைக்குட்படுத்தினர். அவர்கள் தொடர்பான குற்றங்களை லப்-டொப்பில் ஏலவே பதிவு செய்து அவர்கள் அடையாள அட்டைகளை சரிபார்க்கும் பொது கைது செய்து மினி கோர்ட் மூலம் இன்ஸ்டன்ட் பத்வாக்களை வழங்கி இந்த தண்டனையை நிறைவேற்றினார்கள். இப்போது சில உண்மைகள் புலனாகியுள்ளன. கொல்லப்பட்ட ஷியாக்களில் சுமார் 27 பேர் எதற்கும் சம்மந்தம் இல்லாத சாதாரண பிரஜைகள். அவர்களின் உறவினர்கள், சகபாடிகள் ஐ.எஸ்.ஐ.எஸ் இற்கு எதிராக சண்டையிட்டதை அடிப்படையாக வைத்துக்கொண்டு அவர்களுடன் இவர்கள் நிற்கும் புகைப்படங்களை அடிப்படையாக வைத்துக்கொண்டு இந்த அநியாயகரமான மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டிருந்தன. இங்கேயும் யுத்தம் எல்லாவற்றையும் மன்னிக்கும் என்ற விதியே கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. அப்படியானால் இஸ்லாமிய அரசின் விதி எங்கே போயிற்று?

அநியாயமாக கொல்லப்பட்ட ஷியாக்களின் குடும்பங்களிற்கு ஐ.எஸ்.ஐ.எஸ். வருத்தம் தெரிவித்திருந்தது. இவர்களை கொல்ல உத்தரவிட்ட கொமாண்டரும், கொலை செய்த முஜாஹித்தும் ஏதோ ஒரு களமுனையில் ஜிஹாத்தின் பெயரில் சண்டையிட்டுக்கொண்டிருப்பார்கள். அல்லது வீரமரணம் அடைந்திருப்பார்கள். ஐ.எஸ். என்பதற்காக அது செய்த அநியாயகரமான கொலைகளை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.

சிரியாவில் மட்டுமல்ல, காஸாவில் இஸ்ரேல் தாக்குதல் நடாத்திய போது ஹமாஸ் தன் தளபதிகள் சிலரை இழந்தது. அவர்களின் குடும்பங்கள் அநியாயமாக இஸ்ரேலிய குண்டுகளால் அழிக்கப்பட்டன. மேற்படி தாக்குதல்களிற்கு இன்போர்மர்களாக செயற்பட்டவர்கள் என சிலரை பிடித்து மரண தண்டனை விதித்து அவர்களது பிரேதங்களை மோட்டார் சைக்கிளில் கட்டி விதிகளில் இழுத்துச் சென்றது ஹமாஸ். அதில் இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டவர்கள். இப்போது ஹமாஸ் அதற்கு மன்னிப்பு கோரியுள்ளது. இதுவும் ஜிஹாத்தின் பெயரால் செய்யப்பட்ட வன்கொலையாகும்.

முனாபிக்குகளின் பட்டியல் தன் கைவசம் இருந்தும் நபி (ஸல்) யாரையும் தட்டவில்லை. மண்டையில் இரகசியமாகவோ, பரகசியமாகவோ போடச் சொல்லி பணிக்கவும் இல்லை. (நிரூபணமான சில குற்றவாளிகளை தவிர) அவர்களை வலமும் இடமும் வைத்துக்கொண்டு தான் யுத்தங்களை எதிர்நோக்கினார். குலாபாஉ ராஷிதாவின் முடிவிற்கு பின் முஸ்லிம்கள் மத்தியில் பரஸ்பர படுகொலைகள் வரலாறாகிப் போய்விட்டன. அது இன்றும் தொடர்கிறது.

இந்த உண்மை நிலைகள் உணரப்படாமல் ஜிஹாதை ஆதரிப்பதும், அதனை நிகழ்த்துபவர்களின் செயல்களிற்கு நியாயம் கற்பிப்பதும் தவறு. எமது இலக்கு எவ்வளவு தூய்மையானதோ அது போலவே அதனை அடையும் பாதையும் தூய்மையானதாக இருத்தல் அவசியம். இந்த உண்மைகளை புரிந்த நிலையில் உலகில் நடக்கும் குளோபல் ஜிஹாதை நாம் நோக்குதல் அவசியமாகும்.

khaibarthalam

{ 1 comment… read it below or add one }

Shariff Ahamed. April 7, 2019 at 5:09 am

Alhamdulillah. Very good topic and very excellent explanation.

Reply

Leave a Comment

Previous post:

Next post: