மனித குலத்தை ஒரு சுயநல சிறுபான்மைப் பிரிவினராகிய மதகுருமார்கள் மற்றும் அரசியல் குருமார்கள் எண்ணற்ற மதங்களாக, ஜாதிகளாக, இசங்களாக, இயக்கங்களாக, பிரிவுகளாகப் பிரித்து, அற்ப உலகியல் ஆதாயங்களை அடைந்து வருகிறார்கள். மதங்களை விட்டும், ஜாதிகளை விட்டும் மனித குலத்தைத் தூய்மைப்படுத்துகிறோம் என்று முழக்கமிட்டுச் செயல்படுகிறவர்களும் உலகியல் பட்டம், பதவி, பேர் புகழ், அற்ப உலகியல் ஆதாயங்கள் இவற்றைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதாலும், தங்களின் அற்பமான அறிவையே எல்லையாகக் கொண்டு செயல் படுவதாலும் அவர்களாலும் மத வேற்றுமைகளையோ, ஜாதிப் பிரிவுகளையோ ஒழிக்க முடியவில்லை.
உண்மையை உரத்துச் சொல்வதாக இருந்தால் மதவேற்றுமைகளையும், ஜாதிப் பிரிவுகளையும் ஒழித்துச் சமத்துவச் சமுதாயம் அமைய அயராது உழைத்து மறைந்த மார்க்சு, ஏங்கல்ஸ், லெனின், சிங்காரவேலர், புலே, பெரியார், அம்பேத்கர், லோகியா மட்டுமல்ல, இன்று சமத்துவ சமுதாயம் அமையவும், இன இழிவு நீங்கவும் அயராது பாடுபடுகிறவர்கள் போல் லட்சோப லட்சம் அறிஞர்கள் உழைத்தாலும், அவர்களைப் போல் கோடிக்கணக்கான அறிஞர்கள் யுக முடிவு வரை அயராது உழைத்தாலும் மத வேற்றுமைகளையோ, ஜாதிப் பித்தையோ ஒழிக்க முடியவே முடியாது.
அகிலங்கள் அனைத்தையும் படைத்து நிர்வகிக்கும் இணை, துணை இல்லாத தன்னந்தனியனான முக்காலமும் அறிந்த ஏகன் இறைவனின் முழுமை பெற்ற அறிவுடன், மனித குலத்தில் பிறந்த இப்படிப்பட்ட அனைவரின் அறிவையும் ஒன்று சேர்த்து ஒப்பிட்டாலும், அது கடலில் ஒரு ஊசியை முக்கி எடுத்தால், அந்த ஊசியில் ஒட்டிக் கொண்டிருக்கும் நீரை விட மிகமிக அற்பமானதே. அப்படிப்பட்ட அற்பமான அறிவை உடையவர்கள் இறைச் சட்டங்களை மிகைக்க முடியுமா? ஒருபோதும் முடியாது. அது வீண் முயற்சியே! மனிதர்கள் இயற்றும் நியதிகள் மனுநீதியாக இருக்குமே அல்லாமல் இறை நீதியாக ஒருபோதும் ஆகா.
இந்த உண்மையை, இந்த அறிஞர்கள் அனைவரும் ஜாதிப் பித்தை ஒழித்துச் சமத்துவச் சமுதாயம் உருவாக பலநூறு ஆண்டுகள் அயராது உழைத்தும் இன்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் ஜாதி வெறியால் உருளும் பல்லாயிரம் தலைகளும், தீக்கிரையாகும் ஆயிரக்கணக்கான வீடுகளும், விரயமாகும் கோடிக்கணக்கான பணமும் உறுதிப்படுத்தி வருகின்றன. நடுநிலைச் சிந்தனையாளர்கள் இதை மறுக்க முடியுமா? ஒருபோதும் முடியாது! ஆக ஜாதிகளை ஒழித்து, இன இழிவை நீக்கி மனித சமுதாயத்தைக் காக்க இப்பேரறிஞர்களால் முடியவில்லை என்பதே நிதர்சன உண்மையாகும். ஆம்! இவர்களின் முயற்சி வீண் முயற்சி!.
அதே சமயம் சில பல தலைமுறைகளுக்கு முன்னால் இன இழிவால் கூனிக் குறுகி, நாயிலும் கேடாக வாழ்ந்து வதைப்பட்டுக் கொண்டிருந்த, பள்ளு, பறை, சக்கிலி என இழித்துரைக்கப்பட்ட சமூகத்திலிருந்து வெளியேறி இஸ்லாத்தைத் தழுவியவர்களின் வாரிசுகள்தான் இன்று இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் 98 சதவிகித முஸ்லிம்கள். அவர்கள் இஸ்லாத்தின் சிறப்பை மேன்மையை விளங்கி முஸ்லிமாகவில்லை. இன இழிவிலிருந்து விடுபட பெயரளவில் முஸ்லிம்கள் ஆனார்கள். அதாவது மதம் மாறினார்களே அல்லாமல் மனம் மாறவில்லை. அங்கு இந்து மதகுருமார்களின் தவறான போதனைகளால் மூட நம்பிக்கைகள், மூடச்சடங்கு சம்பிரதாயங்களில் மூழ்கி இருந்தது போல், இங்கும் முஸ்லிம்கள் மத குருமார்களின் தவறான போதனைகளால் மூட நம்பிக்கைகள், மூடச்சடங்கு சம்பிரதாயங்கள் இவற்றில் மூழ்கி இருக்கிறார்கள்.
இன இழிவை விட்டு விடுபட அம்பேத்கர், பெரியார் போன்றோர் இஸ்லாத்தைத் தழுவ முற்பட்டபோது, அவர்களின் ஆதரவாளர்கள், முஸ்லிம்களிடையேயும், ஹிந்துக்களிடையே காணப்படும் மூட நம்பிக்கைகள், மூடச் சடங்கு சம்பிரதாயங்கள் அனைத்தும் அப்படியே காணப்படுகின்றன என்று கூறியே அவர்களைப் பின்வாங்கச் செய்தனர். அதற்கு மாறாக ஓர் உண்மையை அவர்கள் காணத் தவறிவிட்டனர். அல்லது அவர்கள் தங்கள் அற்ப இவ்வுலக ஆதாயங்களைக் குறியாகக் கொண்டு அதைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டனர். அதாவது மதம் மாறிய முஸ்லிம்களிடம் ஹிந்துக்களிடம் காணப்படும் மூட நம்பிக்கைகள், மூடச் சடங்கு சம்பிரதாயங்கள் காணப்பட்டாலும் அவர்களிடம் பல ஆயிரம் வருடங்கள் நீங்காது ஒட்டிக் கொண்டிருந்த இன இழிவு இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விட்டது என்பதுதான் அந்தப் பேருண்மையாகும்.
அந்தந்த இறைத் தூதர்களுக்குப் பின்னால் அந்தந்த சமூகங்களில் திருட்டுத்தனமாகப் புகுந்து கொண்டு இஸ்லாம் என்ற தூய வாழ்க்கைக்குரிய நேர்வழியைக் கோணல் வழிகளாக்கி அதாவது ஹிந்து, யூத, கிறித்தவம் போன்ற பல மதங்களாக ஆக்கி மக்களை வழிகெடுத்து வயிறு வளர்க்கும் மற்ற மதங்களின் மதகுருமார்களைப் போல், இறுதித் தூதருக்குப் பின்னால் திருட்டுத்தனமாக இறுதிச் சமூகமான முஸ்லிம் சமுதாயத்தினுள்ளும் புகுந்து கொண்டுள்ள முஸ்லிம் மதகுருமார்களும் தங்களின் கற்பனைகளைப் புகுத்தி தூய இஸ்லாமிய சட்டங்களை திரித்து வளைத்து மற்ற மதங்களின் மதகுருமார்கள் போல் வயிறு வளர்த்து வருகிறார்கள்.
இந்த உண்மையை இறைவன் கொடுத்த முழுமை பெற்ற இறைவனால் பாதுகாக்கப்பட்டு வரும் இறுதி வாழ்க்கை நெறிநூல் அல்குர்ஆனின் எண்ணற்ற வசனங்கள் உறுதிப்படுத்துகின்றன. தங்களின் திருட்டுத் தனம் அம்பலப்பட்டுப் போய்விடுமோ என்ற அச்சத்தில்தான் குர்ஆனைப் பொருள் அறிந்து படிக்க விடாமல் தடுத்து வருகிறார்கள். இந்த அவர்களின் துர்ச்செயலே அவர்களின் அற்பப் புத்தியையும், திருட்டுத்தனத்தையும் அம்பலப்படுத்துகிறது. எனவே இம்மதகுருமார்கள் போதிப்பது தான் இஸ்லாமிய மார்க்கம் என்று ஏமாற வேண்டாம் என அயராது பாடுபடும் அறிஞர்களைக் கேட்டுக் கொள்கிறோம். மேலும் மதகுருமார்கள் போதிக்கும் முஸ்லிம் மதச்சடங்குகளைக் காட்டி, தூய இஸ்லாத்தைத் தழுவ விரும்பும் மக்களைத் தடுக்க வேண்டாம் என்றும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இன்னொரு உண்மையையும் உரக்கச் சொல்லித்தான் ஆக வேண்டும். எப்படி மதகுருமார்கள் கடவுளின் பெயரைச் சொல்லியே மக்களை ஏமாற்றி வஞ்சித்து வயிறு வளர்க்கிறார்களோ, அதேபோல் அரசியலின் பெயரால் மக்களை ஏமாற்றி வஞ்சித்து வயிறு வளர்க்கும் அரசியல் மதகுருமார்களும் நாட்டில் பெருத்துப் போய்தான் இருக்கிறார்கள். தங்களின் அற்ப உலகியல் ஆதாயங்களுக்காக, பதவி சுகங்களுக்காகப் பெரும்பான்மை மக்களை பலி கொடுக்கும் அற்பர்களாகவே இன்றைய அரசியல்வாதிகள் பவனி வருகிறார்கள்.
எந்தத் திட்டத்தைச் சொன்னாலும் நிறைவேற்றினாலும் அதனால் தங்களுக்கு எந்த அளவு ஆதாயம் கிடைக்கும் என்று பார்க்கிறார்களே அல்லாமல், மக்கள் நலனின் கடுகளவும் அக்கறை காட்டுவதாக இல்லை. அன்று அற்பப் புத்தியுள்ள சில மன்னர்கள் அந்நியனுக்கு வணிகத்திற்கென்று இடம் கொடுத்தார்கள். அவன் நாட்டையே அடிமைப்படுத்தி நம் நாட்டு வளங்களைக் கொள்ளை அடித்துச் சென்றான். அதேபோல் இன்றைய சுயநல ஆட்சியாளர்கள், அதே வணிகத்தின் பெயரால் அந்நியனுக்கு இடம் கொடுத்து மக்களைப் பலி கொடுத்து அவர்கள் ஆதாயம் அடைய முற்படுகிறார்கள்.
மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கென்றே மத்திய, மாநில அரசுகள் என்ற நிலை போய், மத்திய, மாநில அரசுகளே பிரச்சினைக்குரியவையாகி விட்டன. ஜனநாயகம் என்றால் அது குறுக்கு வழியில் செல்வந்தர்களை மேலும் மேலும் செல்வந்தர்களாக ஆக்குவது. ஏழைகளை மேலும் மேலும் ஏழைகளாகவே ஆக்குவது என்ற ஏமாற்றுச் சிந்தாந்தமாகும். ஜனநாயக ஆட்சி முறையைக் கடைபிடிக்கும் நாட்டு மக்களின் அவல நிலை இதை உறுதிப்படுத்துகிறது. அதற்கு மாறாக மார்க்சு, ஏங்கல்ஸ் கற்பித்த கம்யூனிச சிந்தாந்தம் நியாயமான கடும் உழைப்பில் செல்வந்தனாகும் செல்வந்தனையும் ஏழையாக்கி, ஏழை என்ற நிலையில் சமத்துவச் சமுதாயம் காண்பதாகும். இதுவும் ஒரு ஏமாற்றுச் சிந்தாந்தமே!
மனிதனைப் படைத்த இறைவன் அளித்துள்ள மிகமிக உயரிய வழிகாட்டலைத் துறந்து, மனிதன் தனது மனோ இச்சைப்படி கற்பனை செய்து கொண்டவையே எண்ணற்ற மதங்கள், ஜனநாயக ஆட்சி முறை, கம்யூனிச ஆட்சி, மன்னராட்சி முறை இவை அனைத்துமாகும். இவை ஒருபோதும் மனித குலத்திற்கு ஈடேற்றத்தையோ, சமநிலைச் சமுதாயத்தையோ தரவே தரா. எனவே மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்கும் அனைத்து மதங்களின் மதகுருமார்கள் புறக்கணிக்கப்பட வேண்டும். சுய நல ஆட்சியாளர்கள் புறக்கணிக்கப்பட வேண்டும். இறைவன் கொடுத்த இறையாட்சி நிலை நாட்டப்பட வேண்டும். இந்த இறையாட்சி 1434 வருடங்களுக்கு முன்னர் நடைமுறைப் படுத்தப்பட்டு மக்கள் ஜாதிகளற்றச் சமநிலைச் சமுதாயமாக வாழ்ந்ததும் வரலாறு கூறும் உண்மையாகும்.
தமிழகத்தில் பகுத்தறிவாளர்கள், சுய மரியாதைக்காரர்கள் என மார்தட்டிக் கொண்டு கட்சிகள், அமைப்புகள் நடத்துகிறவர்கள் மதங்களை ஒழிப்பதற்கும், ஜாதிப் பேயை விரட்டுவதற்கும் படாத பாடுபடுவதாகவும், அயராது உழைப்பதாகவும் பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள். அதே சமயம் அவர்களும் மூட நம்பிக்கைகளை வளர்ப்பதற்கும், ஜாதி வேற்றுமையை நிலைப்படுத்துவதற்கும் முற்படுகிறார்கள் என்பது ஊரறிந்த உண்மையாகும்.
கடவுளின் பெயரால் எண்ணற்றப் பொய்க் கடவுள்களைக் கற்பனை செய்து, மூட நம்பிக் கைகளையும், மூடச்சடங்கு சம்பிரதாயங்களையும் வளர்த்து மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்கும் மதகுருமார்களை மக்களுக்கு அடையாளம் காட்டி அவர்களின் முகத்திரையைக் கிழித்து, அவர்களைப் புறக்கணிக்கச் செய்து அவர்கள் கற்பனை செய்துள்ள கோடிக்கணக்கான பொய்க் கடவுள்களை ஒழிப்பதற்கு மாறாக அகிலங்களையும், அவற்றிலுள்ள அனைத்தையும், மனிதனையும் படைத்து உணவளித்து நிர்வகித்து வரும் தன்னந்தனியனான, மனைவி மக்கள் இல்லாத, எத்தேவையுமில்லாத ஒரே இறைவனை மறுக்கும் இவர்கள் பகுத்தறிவாளர்களாக இருக்க முடியுமா?
ஆம்! இவர்கள் பகுத்தறிவாளர்கள் அல்ல என்பதை இவர்களின் அறிவற்ற செயல்பாடுகளே பறைசாற்றுகின்றன. கல்லில் செதுக்கப்பட்ட பொய்க் கடவுளான சிலைகளை செருப்பால் அடிக்கத் துணிந்தவர்கள், இன்று இவர்கள் வழிகாட்டிகளாகக் கொண்டுள்ளவர்களின் சிலைகளை நாடு முழுவதும் வடித்து அவற்றிற்கு மாலை மரியாதை செய்வது எதைக் காட்டுகிறது? அவற்றை இதய தெய்வம் என வணங்கி வழிபடுகிறவர்கள் பகுத்தறிவாளர்களா? இன்றே இந்த நிலை என்றால், இன்னும் ஓராயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் இவர்கள் கல்லில் சிலை செய்து மாலை மரியாதை செய்யும் இவையும் கோடிக்கணக்கான பொய்த் தெய்வங்களில் ஐக்கிய மாகிவிடும் என்பதில் ஐயமுண்டா? இப்போது சொல்லுங்கள் இவர்களும் மூட நம்பிக்கைகளையும், மூடச் சடங்கு சம்பிரதாயங்களை வளர்க்கிறார்களா? ஒழிக்கிறார்களா?
அன்று பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து விட்ட நல்லவர்களுக்குச் சிலை செய்து மாலை மரியாதை செய்ய ஆரம்பித்ததுதான் இன்று பொய்த் தெய்வங்களாக வணங்கி வழிபாடு செய்வதற்குரியவையாக ஆகிவிட்டன என்பதை உணர முடியாதவர்கள் பகுத்தறிவாளர்களா? இல்லை இவர்களும் மதவாதிகளே! அதேபோல் இன்று அரசியல் நடத்தும் ஒவ்வொரு அரசியல்வாதியும், தனது ஜாதி மக்களை ஒன்று திரட்டி ஆதாயம் அடையவும், பேர் புகழ், பட்டம், பதவி அடையும் தீய நோக்கத்துடனும் தான் செயல்படுகிறார்கள். தன் ஜாதி மக்கள் தன்னைத் தங்களின் தலைவனாக ஏற்க எப்படிப் பட்டத் தந்திரங்களைக் கையாள வேண்டுமோ அப்படிப்பட்டத் தந்திரங்களையே கையாளுகின்றனர். இன இழிவிற்கு ஆளாகி தினசரி அல்லல்படும், இழிவு படுத்தப்படும், உயிர், பொருள் நட்டத்திற்கு ஆளாகும் தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்களின் நிலையும் இதுவே. முழுக்க முழுக்க சுயநலமே!
இவர்கள் ஜாதிகள் ஒழிக்கப்படுவதை விரும்பவில்லை. ஜாதிகள் ஒழிந்தால் இவர்கள் தலைவர்களாக இருக்க முடியாதே! ஜாதிகள் ஒழிய வேண்டும் என்று இவர்கள் வெற்று முழக்கமிடுகிறார்களே அல்லாமல், ஜாதி ஒழிய விரும்புவதில்லை. அதனால் தான் நேரடியாக குர்ஆன் மொழி பெயர்ப்புகளைப் படித்து விளங்கி ஓறிறைக் கொள்கையில் உறுதி கொண்டு இஸ்லாத்தைத் தழுவ முற்படுகிறவர்களையும் தாழ்த்தப்பட்டு இழிவுபடுத்தப்படுகிறவர்களின் தலைவர்கள் தடுத்து வருகிறார்கள். காரணம் அவர்களின் தலைமைத்தனம் பறி போய்விடும் என்ற அச்சமே!
ஜாதி விட்டு ஜாதி மணமுடிப்பதை இத் தலைவர்களும், ஊடகங்களும் கலப்புத் திருமணம் எனச் செய்திகள் பரப்புகின்றனர். மனிதனுக்கும் மாட்டுக்குமா திருமணம் நடைபெறுகிறது? கலப்புத் திருமணம் என்று செய்தி பரப்ப? இல்லையே! மனித குலத்தில் ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் திருமணம் நடைபெறுவதை எந்த அடிப்படையில் கலப்புத் திருமணம் எனப் பறைசாற்றுகிறார்கள். இது எதைக் காட்டுகிறது. ஆம்! இவர்கள் ஜாதி வேற்றுமையை நிலைநாட்டவே விரும்புகிறார்கள். ஜாதிகள் ஒழிய விரும்பவில்லை.
ஜாதிகள் ஒழிய வேண்டுமா? ஜாதிப் பித்துத் தொலைய வேண்டுமா? ஜாதிகள் இருந்த இடம் தெரியாமல் போக வேண்டுமா? அதற்குரிய ஒரே வழி அது இறைவன் மனித குலத்திற்கென்று கொடுத்தருளியுள்ள தூய இஸ்லாத்தைத் தழுவது மட்டுமே. அதைத் தவிர்த்து நிச்சயமாக வேறு வழியே இல்லை. இதை பெரியார் அவர்களும் “”இன இழிவு ஒழிய இஸ்லாமே நன் மருந்து” என ஒப்புக் கொண்டிருக்கிறார். மேலும் பள்ளர், பறையர், சக்கிலி என இழிவு படுத்தப்பட்டதைத் தாங்க முடியாமல் மனம் மாறாமல் மதம் மாறிய கோடிக்கணக்கான முஸ்லிம்களும் இதை உண்மைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
காலஞ்சென்ற தாழை மு.கருணாநிதி இஸ்லாத்தைத் தழுவ முற்பட்டதைத் தடுத்து நிறுத்தியத் தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்களையும் சிலர் அறிவர். முரசொலி அடியார், அப்துல்லாஹ் அடியாராக இஸ்லாத்தை ஏற்றத்தையும் பெரியார் தாசன் இறைதாசன் என அப்துல்லாஹ்வாக இஸ்லாத்தை ஏற்றதையும் தடுக்க முற்பட்டத் தலைவர்களையும் சிலர் அறிவர்.
ஜாதி வேற்றுமையை-ஜாதிப் பித்தை முற்றாக ஒழிக்கப் பாடுபடுவதாகப் பறைசாற்றும் தாழ்த்தப் பட்ட மக்களின் அனுதாபிகளும், தலைவர்களுமான டாக்டர் கலைஞர், திரு.வீரமணி, திரு.தொல் திருமாவளவன், டாக்டர் கிருஷ்ணசாமி, பெரியவர் நல்லக்கண்ணு, திரு.தா. பாண்டியன், திரு.எஸ்.ராஜா, திரு.ஜி.ராமகிருஷ்ணன், திரு.வைக்கோ, திரு. நெடுமாறன் மேலும் இவர்கள் போன்ற தலைவர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள், ஏகன் இறைவன் மனித குலத்திற்கென்றே இறுதியாகக் கொடுத்தருளியுள்ள தூய வாழ்க்கை நெறிநூலான அல்குர்ஆன் சொல்லும் இஸ்லாமிய மார்க்கத்தைத் தழுவ முற்படுவதைத் தடுக்காமல், ஆர்வப்படுத்தினால், அந்த மக்களோடு பல்லாயிரம் வருடங்களாக ஒட்டிக் கொண்டிருக்கும் ஜாதிப் பித்து இருந்த இடம் தெரியாமல் ஒழிந்துவிடும். அவர்கள் சுதந்திர சம அந்தஸ்துள்ளவர்களாக மாறி விடுவார்கள். இது நிச்சயத்திலும் நிச்சயம்!
இத்தலைவர்கள் அழிந்துபடும் அற்பமான இவ்வுலகின் பதவி சுகம், சொத்து சுகம், பேர் புகழ் சுகம் இவற்றைக் கருத்தில் கொள்ளாமல், இன இழிவால் நாயை விடக் கேவலமாக கருதப்படும் மக்களின் ஈருலக ஈடேற்றத்தைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட முன்வந்தால் அது மாபெரும் புரட்சியை ஏற்படுத்தும். தமிழகம் மட்டுமல்ல, இந்தியா மட்டுமல்ல, உலகமே வியந்துப் போற்றும் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். மனிதக் குலத்தைப் பீடித்திருக்கும் அனைத்துப் பீடைகளும் அகல வழி பிறக்கும்.
புரோகித முல்லாக்களின் வசீகர வலையில் சிக்காமல் குர்ஆனை நேரடியாகத் தங்கள் மொழிகளில் படித்து விளங்குகிறவர்கள் சாரை சாரையாக இஸ்லாத்தைத் தழுவுகின்றனர். அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் தூய இஸ்லாம் வேகமாகப் பரவுகிறது. அதைக் கண்டு பொறுக்க முடியாமல், யூத, கிறித்தவ மதகுருமார்கள், குர்ஆனின் மீதும், இறுதி இறைத் தூதர் மீதும் புழுதிவாரி இறைத்துத் தங்கள் அரிப்பைத் தீர்த்து வருகின்றனர்.
மீண்டும் உறுதியாகச் சொல்கிறோம்:
உண்மையில் தங்களின் அற்ப உலகியல் ஆதாயங்களை விடத் தங்களை நம்பியுள்ள தாழ்த்தப்பட்டு இழிவுபடுத்தப்படும் பெரும்பான்மை மக்களின் நலனில் அக்கறை உள்ள தலைவர்கள் இஸ்லாத்தை ஏற்று தங்களை நம்பியுள்ள மக்களையும் தூய இஸ்லாத்தில் இணையச் செய்வதே இன இழிவு நீங்கி ஈடேற்றம் பெற உள்ள ஒரே வழியாகும். தாழ்த்தப் பட்ட மக்களின் தலைவர்கள் உணர்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம். இறைவன் அருள் புரிவானாக.
அபூ அப்தில்லாஹ்