சோதனை

in பொதுவானவை

சோதனையின் போது நாம் கடைப்பிடிக்க

சோதனையின் போது நாம் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள்!

பெரும்பான்மையான முஸ்லிம்களிடம் “சோதனை என்பது மனதிற்கு வெறுப்பான காரியங்களில் மட்டுமே உண்டாகும்” எனும் தவறான சிந்தனை வெகுவாகப் பரவியுள்ளது. நிச்சயமாக அல்லாஹ் எமது அனைத்துக் காரியங்களிலும் (நன்மையிலும், தீமையிலும்) எம்மைச் சோதிக்கவே செய்கிறான். காரியங்களைப் பொருத்தமட்டில் மனிதனுடைய பார்வையில்தான் அவற்றில் நல்லது கெட்டது என்ற பாகுபாடு உள்ளதே தவிர‌ யதார்தத்தில் அனைத்துக் காரியங்களுமே நல்லவையாகத்தான் உள்ளன.

இது குறித்து அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: இறைநம்பிக்கையாளரின் நிலையைக்கண்டு நான் வியப்படைகிறேன். அவரது (வாழ்வின்) அனைத்து அம்சங்களும் (அவருக்கு) நன்மையாகவே அமையும். இறை நம்பிக்கையாளருக்கு அல்லாமல் வேறெவருக்கும் இ(ந்தப் பாக்கியமான)து கிட்டுவதில்லை. அவருக்கு ஏதேனும் மகிழ்ச்சி ஏற்பட்டால், அவர் நன்றி செலுத்துகிறார். அது அவருக்கு நன்மையாக அமைகிறது. அவருக்கு ஏதேனும் துயரம் நேர்ந்தால், அவர் பொறுமை காக்கிறார். அதுவும் அவருக்கு நன்மையாக அமைந்துவிடுகிறது.
இதை ஸுஹைப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்: முஸ்லிம் 5726

உயர்வுமிக்க அல்லாஹ் கூறுகிறான்: ஒவ்வோர் உயிரினமும் மரணத்தைச் சுவைத்தே தீரும். மேலும், நல்ல, கெட்ட நிலைமைகளைத் தந்து நாம் உங்களைச் சோதித்துக் கொண்டிருக்கின்றோம். பிறகு நீங்கள் நம்மிடமே திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள். (அல்குர்ஆன் 21:35)

நிச்சயமாக அல்லாஹ், நாம் நேசிக்கும் விடயத்திலும், நாம் வெறுக்கும் விடயத்திலும் நம்மைச் சோதனைக்கு உள்ளாக்குவான். நம்மில் யாரும் மறைவான அறிவு ஞானம் வழங்கப் பெற்றவர்கள் அல்ல. நமக்கு மறைவான ஞானம் இருந்திருந்தால் நாம் எந்தச் சோதனையிலும் வீழ்ந்திருக்க மாட்டோம். நமக்கு ஏற்படும் சோதனையின் முடிவுகளை நாம் முன்கூட்டியே அறியும் ஆற்றலுள்ளவர்களாக இருந்திருந்தால் எவ்வித கலக்கமுமில்லாமல் நாம் அமைதி காத்திருப்போம். ஆதலால் அல்லாஹ் சோதனை எனும் அம்சத்தையும், அதன் முடிவுகளையும் தன் வசமே வைத்துள்ளான்.

நோயில் வீழ்ந்த ஒரு அடியான் நோயிலிருந்து குணமடைந்து விட்டால் தன்னை விட்டும் சோதனை அகன்று விட்டதென எண்ணுகிறான். ஆனால் சோதனை என்பது தொடர்ச்சியாக இருந்து கொண்டேயிருக்கும் எனும் யதார்த்தத்தை அவன் புரிந்து கொள்வதில்லை. கஷ்டத்திலும் இலகுவிலும், ஆரோக்கியத்திலும் நோயிலும், வறுமையிலும் செல்வத்திலும், சோதனை இருந்து கொண்டேயிருக்கும். அல்லாஹ் உமக்கு நோயைத் தந்தால் அதில் உம‌து பொறுமையைச் சோதிக்கிறான். அந்த நோயின் மூலம் உன‌து பாவங்களை அவன் மன்னித்து, அந்தஸ்த்துக்களை அவன் உயர்தக் கூடும். இவ்வாறே உனது ஆரோக்கியத்திலும் அல்லாஹ் சோதனையை வைத்துள்ளான். நாளை மறுமை நாளில் உமது தேக ஆரோக்கியம் குறித்து அல்லாஹ் விசாரிப்பான். அந்த விசாரணையே ஒரு சோதனைதான்!

அல்லாஹ் உமக்கு வறுமையைத் தந்தால் அதன் மூலம் அவன் உன்னைச் சோதிக்கிறான். உமது கூலியை அதிகப்படுத்துவான். அல்லாஹ் உமக்குச் செல்வத்தைத் தந்தால் அந்த செல்வம் குறித்தும், அதை நீர் எந்த வழியில் சம்பாதித்தாய் என்றும், அதை எவ்வாறு செலவழித்தாய் என்றும் அல்லாஹ் விசாரிப்பான். அந்த விசாரணையே ஒரு சோதனைதான்!

இன்னும் சொல்லப்போனால் உமது மனைவியும், பிள்ளைகளும் கூட உமக்குச் சோதனைதான்! இவர்களில் யாரையாவது நீ இழந்து அதற்காகப் பொறுமை செய்தால் அதற்காக அல்லாஹ் உமக்கு நற்கூலியை வழங்குகிறான். நீர் உயிர் வாழும் போது இவர்களில் யாரையும் இழக்கவில்லையென்றால் அப்போது அவர்கள் உமக்குச் சோதனையாக ஆகி விடுவார்கள். அல்லாஹ் கூறுகிறான்: (மனிதர்களில்) அழகிய செயலுடையவர்கள் யார் என்று அவர்களைச் சோதிப்பதற்காக, நிச்சயமாக பூமியிலுள்ளவற்றை அதற்கு அலங்காரமாக நாம் ஆக்கினோம். (அல்குர்ஆன் 18:07) இன்னும் அல்லாஹ் சொல்கிறான்: செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களேயாகும்; என்றும் நிலைத்து நிற்கக் கூடிய நற்கருமங்களே உம்முடைய இறைவனிடத்தில் நன்மைப் பலனுடையவையாகவும், (அவனிடத்தில்) நம்பிக்கையுடன் ஆதரவு வைக்கத்தக்கவையாகவும் இருக்கின்றன. (அல்குர்ஆன் 18: 46)

மேற்கண்ட முதல் வசனத்தில் அலங்காரத்தை சோதனையாக ஆக்கியதாக அல்லாஹ் கூறுகிறான். இரண்டாம் வசனத்தில் இவ்வுலக அலங்காரத்தின் பட்டியலில் செல்வத்தையும், பிள்ளைகளையும் சேர்த்துள்ளான். இவ்வாறே கஷ்டத்திலும், இலகுவிலும், செல்வத்திலும், வறுமையிலும், ஆரோக்கியத்திலும், நோயிலும் அல்லாஹ் சோதிப்பான். சிலர் எண்ணுவது போல் அல்லாஹ் மனதிற்கு வெறுப்பான விடயங்களில் மட்டும் மனிதர்களைச் சோதிப்பதில்லை. மனிதர்களின் மனங்கள் விரும்பும் விடயங்களிலும் அல்லாஹ் அடியார்களைச் சோதிக்கிறான்.

இறை விசுவாசிகளைச் சோதிப்பது என்பது இறை நியதி என்றால் அச்சோதனையின் போது நாம் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகள் என்ன? என்பதை சற்று விரிவாகப் பார்ப்போம்.

01. சோதனையின் போது பொறுமையைக் கடைப்பிடித்தல்

உமக்குச் சோதனை ஏற்பட்டால் நீர் அழகிய முறையில் பொறுமை செய்யப் பழகிக் கொள்ள வேண்டும். உமது பொறுமைக்கான கூலியை அல்லாஹ்விடம் மட்டுமே எதிர்பார்க்க வேண்டும். அல்லாஹ் அடியார்களுக்கு அநீதி இழைப்பவன் அல்ல என்பதை உறுதியாக நம்ப வேண்டும். உமக்குக் கஷ்டம் ஏற்படும் பொழுதுகளில் கூட அதற்காக கூலிகளைப் பதிவு செய்வது அல்லாஹ் உமக்குச் செய்திருக்கும் பெரும் கிருபையாகும். உம்மைச் சோதிப்பது அல்லாஹ்வின் விதியில் இருந்தால் நீர் என்னதான் செய்ய முடியும்? ஆக சோதனையின் போது பொறுமை செய்வதுதான் முதல் தீர்வும், அதிக நன்மையைப் பெற்றுத் தரும் அம்சமும் என்பதை நினைவிற் கொள்! அல்லாஹ் கூறுகிறான்: (நபியே!) நீங்கள் கூறுங்கள்: “நம்பிக்கை கொண்ட (என்) அடியார்களே! உங்கள் இறைவனுக்கு நீங்கள் பயந்து கொள்ளுங்கள். இம்மையில் நன்மை செய்தவர்களுக்கு (மறுமையில்) நன்மைதான் கிடைக்கும். அல்லாஹ்வுடைய பூமி மிக விசாலமானது. நிச்சயமாக பொறுமையாளர்களுக்கு அவர்களுடைய கூலி கணக்கின்றியே (அதிகமாக) கொடுக்கப்படும். (அல்குர்ஆன் 39:10)

02. சோதனையின் போது உறுதியைக் கைக் கொள்ளல்

சோதனைகளைக் கண்டு நாம் ஒரு போதும் கலக்கமடையக் கூடாது. சோதனையின் போது நாம் உறுதியைப் பற்றிப் பிடிப்பது அவசியமாகும். நமக்குச் சோதனை வரும் போது “நாம் அல்லாஹ்வால் சோதிக்கப்படுகிறோம். நமக்கு வந்திருக்கும் சோதனை நம்மையும், நமது ஈமானையும் பரீட்சிக்க‌ வந்த சோதனை. இந்தச் சோதனையின் மூலம் அல்லாஹ் நமது பாவங்களை மன்னித்து, அந்தஸ்துக்களை உயர்த்துவான். இதற்காக நமக்குக் கூலியும் உண்டு” எனும் நம்பிக்கையை நாம் ஆணித்தரமாக மனதில் பதிய வைக்க வேண்டும்.

சோதனை ஏற்படும் போது இறை நினைவுடன் இருக்கும் இறை விசுவாசிகளுடன் நாம் அதிக தொடர்புகளை ஏற்படுத்த வேண்டும். நமக்குச் சோதனை ஏற்பட்டு நாம் உறுதியுடன் இருக்கும் போது நமது உறுதியைக் குழைக்கும் விதமாக நடந்து கொள்ளும் நயவஞ்சகர்களுடனும், கொள்கை கெட்டவர்களுடனும் நாம் சகவாசம் கொள்ளக் கூடாது. அவர்கள் நமது ஈமானையும், உறுதியையும் கெடுத்து, நம்மைக் கலக்கமடையச் செய்து விடுவார்கள். அல்லாஹ் கூறுகிறான்: (நபியே!) எவர்கள் கஷ்டங்களைச் சகித்துத் தங்கள் இறைவனின் திருமுகத்தையே நாடி அவனையே காலையிலும், மாலையிலும் (பிரார்த்தனை செய்து) அழைத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களுடன் உங்களையும் நீங்கள் ஆக்கிக் கொள்ளுங்கள். இவ்வுலக அலங்காரத்தை நீங்கள் விரும்பி அத்தகைய (நல்ல)வர்களை விட்டு உங்கள் கண்களைத் திருப்பி விடாதீர்கள். அன்றி, தன் சரீர இச்சையைப் பின்பற்றியதன் காரணமாக எவனுடைய உள்ளத்தை நம்மைத் தியானிப்பதிலிருந்து நாம் திருப்பி விட்டோமோ அவனுக்கும் நீங்கள் கட்டுப்படாதீர்கள். அவனுடைய காரியம் எல்லை கடந்து விட்டது. (அல்குர்ஆன் 18:28)

03. சோதனையின் போது திக்ர் செய்தல்

ஒரு மனிதனுக்குச் சோதனை ஏற்பட்டால் அவன் மன நிம்மதியை இழந்து விடுவான். அதுவே அவனுக்கு மனக் கலக்கத்தை ஏற்படுத்தப் போதுமானதாகும். இந்நிலையில் மன அமைதிக்கு ஒரே தீர்வு அல்லாஹ்வை நினைவு கூறும் திக்ர் மாத்திரமே! அல்லாஹ் கூறுகிறான்: (நேர் வழி பெறும்) அவர்கள் எத்தகையோரென்றால், அவர்கள் தாம் (முற்றிலும்) ஈமான் கொண்டவர்கள்; மேலும், அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன; அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க! (அல்குர்ஆன் 13:28)

நீர் சோதனையில் சிக்கித் தவிக்கும் போது திக்ர் செய்து மன நிம்மதியைப் பெறுவதை விட சிறந்த ஒரு வழி இல்லை!

04. சோதனையின் போது பிரார்த்தனை செய்தல்

பிரார்த்தனை பலமான ஓர் ஆயுதமாகும். பிரார்த்தனை செய்வது நபிமார்களின் வழிமுறையாகும். ஒரு அடியான் அல்லாஹ்விடம் அவன் விரும்பிய நேரத்தில், அவன் விரும்பும் விடயத்தை தாராளமாகக் கேட்க அனைத்து வாசல்களையும் அல்லாஹ் திறந்து வைத்துள்ளான். துஆ எனும் பிரார்த்தனை ஓர் வணக்கமாகும். அது அனைத்து நலவுகளின் திறவுகோலும், அனைத்துத் தீமைகளின் பூட்டுமாகும். பிரார்த்தனை மூலம் பல நன்மைகளைப் பெறவும் முடியும். பல தீமைகளைத் தடுக்கவும் முடியும். அல்லாஹ் ஏற்படுத்திய களா கத்ர் எனும் விதியில் கூட‌ மாற்றத்தைக் கொண்டு வர சக்தி பெற்ற ஒரு வணக்கமென்றால் அது துஆ எனும் பிரார்த்தனை மட்டுமே! அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் கூறினார்கள்: “பிரார்த்தனை மட்டுமே களா கத்ரை மாற்றும்” நூல்: முஸ்னத் அஹ்மத் 22466

நமக்குச் சோதனை ஏற்படும் பொழுதுகளில் “யாஅல்லாஹ் எனக்கு ஏற்பட்ட இச்சோதனை என்னை விட்டும் நீக்கி விடுவாயாக!” என்றோ, “யாஅல்லாஹ் எனது சோதனையின் அளவைக் குறைத்து விடுவாயாக!” என்றோ, “யாஅல்லாஹ் எனது சோதனைக்கான கூலியை எனக்கு நிறைவாகத் தருவாயாக!” என்றோ நாம் பிரார்த்திக்கலாம். இன்னும் சொல்லப்போனால் “சோதனையின் போது கலக்கமடையாத உறுதியையும், சீர்குலையாத‌ ஈமானையும் எனக்குத் தருவாயாக!” என்றும் கேட்கலாம்.

ஒரு முஃமினுக்கு ஆயுதமேந்திய குப்பார்களால் ஒரு சோதனை ஏற்பட்டு அதை எதிர்கொள்ள அவனிடம் ஆயுதமில்லை என்றாலும் கூட அவன் துஆ எனும் ஆயுதத்தைக் கைவிடக் கூடாது. ஏனெனில் துஆ எனும் ஆயுதம் ஏகே 47 விட, ஆர்.பீ.ஜியை விட, எல்.எம்.ஜியை விட‌ சக்தி வாய்ந்தது. துஆ எனும் வணக்கத்தில் ஈமானிய சாட்சியும், உண்மையான தவக்குலும் உண்டு. பிரார்த்தனைதான் அனைத்து நலவுகளின் ஆரம்பமாகும். அதன் மூலம் மன்னிப்பையும், ரிஸ்க்கையும், அனைத்து நலவுகளையும் பெற முடியும்.

இன்ஷாஅல்லாஹ் அடுத்த தொடரில் “சோதனையைத் தாங்கிக் கொள்வதால் ஏற்படும் நன்மைகளையும், தாங்காமல் விடுவதால் ஏற்படும் கெடுதிகளையும்” பார்வையிடுவோம்.

-மெளலவி ஸஹ்றான் பின் ஹாஷிம்,

{ 1 comment… read it below or add one }

MOHAMED MUSTHAFA December 1, 2017 at 11:05 am

Arumai Ennudaiya EEmaan Boostable aanathu pondru unarkiren.

Reply

Leave a Comment

Previous post:

Next post: