பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அல் குர்ஆன் வழியில் அறிவியல்……….
அல்லாஹ் இப்பூவுலகில் மனிதனையும், இன்னும் ஏராளமான ஜீவராசிகளையும் படைத்து பரவ விட்டுள்ளான். இவ்வுயிரினங்கள் தங்கள் முழு ஆற்றலை பயன்படுத்தி பயனடைவதற்காக ஐம்புலன்களையும் கொடுத்துள்ளான். தன் படைப்பினங்களில் சிறந்ததாக மனிதனை படைத்து அவனுக்கு ஆறாவது புலன் என்னும் பகுத்தறிவு பண்பையும் கொடுத்துள்ளான்.
பார்த்தல்,கேட்டல்,சுவைத்தல்,முகர்தல்,தொடுதல் என்ற ஐந்து புலன்களிலும் எது மனிதனுக்கு மிக அவசியமானது என்ற கேள்வியை எவரிடம் கேட்டாலும், குறிப்பாக குருடராக இருப்பதா? அல்லது செவிடராக இருப்பதா? என்று இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்கச்சொன்னால், அனைவரும் பார்வையுடையவராக இருக்கவே விரும்புவர். குருட்டுத்தன்மையை எவரும் விரும்பார். செவிடனானலும் பரவாயில்லை என்றே கூறுவார்கள்.
அமெரிக்க பிரௌன் பல்கலைகழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் SETH HOROWITZ அவர்கள் எழுதிய “THE UNIVERSAL SENSE: HOW HEARING SHAPE THE MIND” என்ற ஆய்வு நூல் கடந்த மாதம் வெளியாகி அறிஞர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதில் என்ன கூறுகிறார் என்றால் மனிதனின் பார்வை புலனை விட செவிப்புலனே மிக மிக முக்கியமானது. அதன் செயல்பாடுகள் பார்வைத் திறனை விட பல மடங்கு சிறப்பிற்குரியது என்று அறிவியல் ரீதியாக ஏராளமான சான்றுகளை காட்டி நிரூபிக்கிறார். பார்வையை விட செவி ஒரு மனிதனுக்கு மிக மிக முக்கியம் என்று ஆய்வு செய்து கூறுகிறார். எந்தளவு என்றால், தான் செவிடனாக இருப்பதை விட குருடனாக இருப்பதையே விரும்புவதாக கூறுகிறார்.
இந்த அறிவியல் செய்தி உண்மைதானா என்று, அன்று இறங்கிய அல்குர்ஆன், ஹதீஸ் ஒளியில் ஆய்வு செய்யும் பொழுது, உண்மை நம்மை ஆச்சரியமூட்டுகிறது. ஆம்! அல்லாஹ் பார்வையை காட்டிலும் செவிக்கு முதன்மை ஸ்தானம் கொடுத்துள்ளான் என்று அறியலாம்.
அல்குர்ஆனில் குறைந்தது 20 இடங்களுக்கு மேல் செவியையும் பார்வையையும் குறித்து கூறுகிறான். நமது அறிவின்படி பார்வையைத்தான் அல்லாஹ் முதலில் சொல்லுவான் என்று நினைப்போம். படைத்த ரப்புல் ஆலமீன் முதலில் செவிக்கு முதல் இடம் கொடுக்கின்றான்.
இன்னும் அல்லாஹ் விரும்பினால் இவர்களுடைய கேள்விப்புலனையும், பார்வைகளையும் போக்கிவிடுவான். – அல்குர்ஆன்.2:20
அல்லாஹ் உங்கள் கேள்விப்புலனையும், பார்வைகளையும் எடுத்துவிட்டு உங்கள் உள்ளங்களில் முத்திரை வைத்து விட்டால்….. -அல்குர்ஆன். 6:46.
உங்கள் செவிக்கும், பார்வைக்கும் உரிமையாளன் யார்? – – அல்குர்ஆன்.10:31
உங்களுக்கு செவிகளையும், கண்களையும், அறிவையும் கொடுத்தவன் அவன்தான். –16:78
நிச்சயமாக காது, கண், உள்ளம் ஆகிய இவை ஒவ்வொன்றுமே மறுமையில் கேள்வி கேட்கப்படும். -அல்குர்ஆன் .17:36.
அவன் தான் உங்களுக்கு செவி, பார்வை, உள்ளம் ஆகியவைகளை கொடுத்தான். -23:78
தன்னுடைய ரூஹை அதில் புகுத்தி, உங்களுக்கு காதுகள், கண்கள், உள்ளம் ஆகியவற்றையும் அவனே அமைக்கிறான். –அல்குர்ஆன்.32:9
அச்சமயம் (பாவம் செய்த) அவர்களுக்கு விரோதமாக அவர்களுடைய செவிகளும், அவர்களுடைய கண்களும், அவர்களுடைய தோல்களும், அவைகள் செய்தவைகள் பற்றி சாட்சி கூறும். -அல்குர்ஆன்.41:20,22
(இந்த குர்ஆன்) எவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லையோ, அவர்களுடைய காதுகளுக்கு செவிடாகவும், அவர்களுடைய பார்வையை போக்க கூடியதாகவும் இருக்கிறது. –அல்குர்ஆன்.41:44
(அவனது பாவத்தின் காரணமாக) அல்லாஹ் அவனை தவறான வழியில் விட்டு, அவனுடைய செவியின் மீதும், உள்ளத்தின் மீதும் முத்திரையிட்டு விட்டான். அவனது பார்வையின் மீதும் திரையை அமைத்து விட்டான். -அல்குர்ஆன். 45:23
நீங்கள் செவிடனை கேட்கும்படி செய்துவிடுவீர்களா? அல்லது குருடனை நேரான வழியில் செலுத்தி விடுவீர்களா? -அல்குர்ஆன். 43:40.
நாம் அவர்களுக்கு செவியையும் கண்களையும் கொடுத்தோம், சிந்திக்கக் கூடிய உள்ளத்தையும் கொடுத்தோம். -அல்குர்ஆன்.46:26.
பூமியில் விஷமம் செய்து இரத்த பந்தத்தை துண்டித்துவிடப் பார்க்கிறீர்களா? இத்தகையவர்களை அல்லாஹ் சபித்து அவர்களை செவிடர்களாக்கி, அவர்களுடைய பார்வையை போக்கி குருடர்களாக்கி விட்டான். -அல்குர்ஆன். 47:23
( நபியே) நீங்கள் கூறுங்கள் அவன்தான் உங்களைப் படைத்து உங்களுக்கு செவியையும், கண்களையும் கொடுத்தவன். –அல் குர்ஆன்.67:23
ஓர் இந்திரியத் துளியைக் கொண்டு நிச்சயமாக நாம் தான் மனிதனைப் படைத்தோம். அவனை சோதிப்பதற்காகவே செவியுடைவர்களாகவும், பார்வையுடையவர்களாகவும் ….-அல் குர்ஆன்.76:2
இதுபோல் ஏராளமான வசனங்களில் அல்லாஹ் காதுக்கு முதல் இடம் கொடுத்துவிட்டு இரண்டாவதாகத்தான் கண்களைப்பற்றிக் கூறுகிறான். ஐம்புலன்களையும் படைத்தளித்த அல்லாஹ்விற்கே அதன் சிறப்பும் முக்கியத்துவமும் முழுமையாகத்தெரியும்.
நமது பார்வையில் கண்ணின் தேவை முதலிடத்தில் இருந்தாலும் அனைத்தும் அறிந்த நுண்ணறிவாளன் அல்லாஹ் காதுக்கே முன்னுரிமை கொடுக்கின்றான்.இதைவிடப்பெரிய ஆச்சரியம் என்ன தெரியுமா? படைத்த மனிதனின் புலன்களில் செவிக்கு முக்கியத்துவம் கொடுத்த அல்லாஹ், தன்னைப்பற்றிக் கூறும்போதும் செவியையே முன் நிறுத்துவது சிந்திக்கத்தக்கது. செவியின் உயர் அந்தஸ்தை அறிந்து கொள்ள இதுவே போதுமானது.
குர்ஆனில் 48 வசனங்களில் 49 இடங்களில் “அல்லாஹ் அனைத்தையும் செவியுறுவோனும், அறிபவனுமாயிருக்கிறான்.” என்று கூறுகிறான். அதில் 8 இடங்களில் “அல்லாஹ் அனைத்தையும் செவியுறுவோனும், பார்ப்பவனாகவும் இருக்கிறான்.” என்று கூறுகின்றான். எல்லா வசனங்களிலும் அல்லாஹ் தன்னை செவியுறுவோன் என்று செவிக்கு முதல் இடம் கொடுத்துள்ளான். அதன் உண்மைக்காரணம் நம் அற்ப அறிவுக்கு எட்டாத ஒன்று. அல்லாஹ் கூறுவதை அப்படியே சொல்வதுதான் நமது கடமை.
அதேசமயம், இவ்வுலகில் நற்செய்தியை செவியுராமல் குர் ஆன் வசனங்களை காதில் வாங்காமல் செவிடர்கள் போல் வாழ்ந்து நரகம் செல்லும் நிராகரிப்பவர்களை குறிப்பிடும்போது கண்ணுக்கே முதலிடம் கொடுத்து, செவியை இரண்டாவதாக குறிப்பிடுகிறான். காரணம் அவர்கள் குர்ஆன் வசனத்தை காதில் வாங்க மறுத்து கண்ணில் காணும் பொய் தெய்வங்களை பார்த்து ஏமாந்ததால், அவர்களைப் பார்த்து,
“அவர்களுக்கு கண்களுமுண்டு, எனினும் அவற்றைக்கொண்டு (அல்லாஹ்வின் அத்தாட்சிகளை)பார்க்கமாட்டார்கள். அவர்களுக்கு செவிகளுமுண்டு, எனினும் இவற்றைக்கொண்டு நல்லுபதேசங்களுக்கு செவி சாய்க்க மாட்டார்கள். இவர்கள் மிருகங்களைப்போல அல்லது அவற்றை விட வழி கேட்டவர்கள்.” –அல் குர் ஆன்.7:179,25:44.
இதுபோல் உயிர் இல்லா போலித்தெய்வங்களை குறிப்பிடும்பொழுதும் கண்களை முதலிலும்,செவியை இரண்டாவதாகவும் குறிப்பிடுகிறான்.
“இனைவைப்பவர்களே! நீங்கள் வணங்கும் (சிலைகளுக்கு) கண்கள் இருக்கின்றனவா அவைகளைக்கொண்டு பார்க்கின்றனவா? அவைகளுக்கு காதுகள் இருக்கின்றனவா? அவைகளைக்கொண்டு கேட்கின்றனவா?” –அல்குர்ஆன். 7:195.
இப்ராஹீம்(அலை)அவர்கள், “ என் தந்தையே! யாதொன்றையும் பார்க்கவும்,கேட்கவும் யாதொரு தீங்கை தடைசெய்யவும் சக்தியற்ற தெய்வங்களை ஏன் வணங்குகிறீர்கள்? “—அல்குர்ஆன்.19:42.
அடுத்து இப்ராஹீம்(அலை) அவர்கள் கேட்ட முதல் கேள்வி,
“ அவைகளை நீங்கள் அழைத்தால் உங்களுக்கு செவி கொடுக்கின்றனவா? “—அல்குர்ஆன்.26:72.
பொதுவாக கண் பார்த்தல் என்பது காட்சிகளை பதிவு செய்து மூளைக்கு அனுப்பிவைப்பதோடு முடிந்துவிடும் ஒருவழி தொடர்புதான். ஆனால் செவியானது பேசுபவரின் ஒலியை வாங்கி மூளைக்கு அனுப்பி, அக்கேள்விக்குரிய பதிலை நாவின் மூலம் சொல்ல வைக்கும் இருவழி தொடர்பாக உள்ளது.மக்களிடையே பல மொழிகளை படைத்து (அல் குர்ஆன்.30:22) செவியால் கேட்டு உள்ளத்தால் சிந்தித்து நாவால் பேசும் பெரும் பாக்கியத்தை மனிதர்களுக்கு மட்டுமே அல்லாஹ் கொடுத்துள்ளான்.
செவிக்கு அல்லாஹ் கொடுத்த மற்றொரு சிறப்பு.!
இவ்வுலகில் உள்ள மனு,ஜின், எவருமே அல்லாஹ்வை நேரில் பார்க்க முடியாது. அந்த ஆற்றல் நமது கண்களுக்கு கிடையாது. “பார்வைகள் அவனை அடைய முடியாது..” -அல் குர்ஆன். 6:103. என்றே அல்லாஹ் கூறுகிறான். நபிமார்களுக்குக்கூட அல்லாஹ்வை கண்ணால் காணும் பேறு கிட்டவில்லை. மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வை பார்க்க விரும்பியபோது “ அம் மலையைப் பார் அது அவ்விடத்தில் இருந்தால் என்னை காணலாம் என்றான். ஆனால் மலை சுக்குநூறாக நொறுங்கி விட்டது. அல்குர்ஆன். 7:143
அதேசமயம் அல்லாஹ்வின் பேச்சை கேட்கும் பாக்கியத்தை மூஸா(அலை) அவர்களின் செவிக்கு கொடுத்தான். “கலீமுல்லாஹ்” என்று அவரை சிறப்பித்து கூறுகிறான். எல்லா நபிமார்களுக்கும் அல்லாஹ்வின் வஹி இறங்கியதே செவி வழியாகத்தான், அதை உள்ளத்தில் ஏற்றி ஈமானை அதிகப்படித்தி உயர்ந்தார்கள். கண்ணால் கண்டால்தான் விசுவாசிப்பேன் என்று கூறியவர்கள்,அற்புதங்களை கண்டபின்னும் நம்பாமல் காபிர்களாக நரகம் போனார்கள்.
“ நாங்கள் அல்லாஹ்வை கண்கூடாக காணும் வரையில் உங்களை நம்பமாட்டோம் “ -அல்குர்ஆன்.2:55
“அல்லாஹ்வையும் மலக்குகளையும் நம் முன் கொண்டுவந்தாலன்றி நம்பிக்கை….”…-அல்குர்ஆன்.17:92
இன்று உலகில் பெருவாரியான இணைவைப்பவர்கள்,இந்து,கிறிஸ்துவ புத்த, ஜைன மதங்களில் உள்ள சிலைகளையும் சிலுவைகளையும் கண்ணால் கண்டு வணங்கி வழிபட்டு வழிகெட்டார்கள். இன்றும் புதியதாய் மதம் மாறிய கிறிஸ்துவர்களை காரணம் கேட்டால், அவர்கள் சொல்லும் பதில் இதுதான். “ இயேசு எனக்கு தரிசனம் தந்தார். “ சாட்சி அளித்தார் “ ஷைத்தானின் காட்சிக்கு சாட்சியாளர்களாக மாறியதற்கு கண்ணால் கண்டதே காரணம். ஆனால் அல்லாஹ் கூறுகிறான்,
“(நபியே!) நீங்கள் நம்முடைய அடியார்களுக்கு நற்செய்தி சொல்லுங்கள், அவர்கள் எத்தகையவர்கள் என்றால் பேச்சை செவியுற்று அதில் மிக அழகியதை பின்பற்றி நடக்கின்றவர்கள். இத்தகையவர்களையே அல்லாஹ் நேரான பாதையில் செலுத்துகின்றான். இவர்கள்தாம் உண்மையில் அறிவுடையவர்கள் ஆவார்கள்.” –அல்குர்ஆன். 39:18.
இந்த நல்லடியார்களைப்பற்றி அல்லாஹ் ஹதீஸ் குத்ஸியில் கூறுவதாக நபி(ஸல்) அவர்கள்,
“நபிலான வணக்கங்கள் செய்வதன் மூலம் என்னிடம் நெருங்குவதில் என் அடியான் தொடர்ந்திருப்பான். இதனால் அவனை நான் பிரியம் கொள்வேன். அவனை நான் பிரியம் கொண்டு விட்டால், அவன் கேட்கும் அவனது செவியாகவும்,அவன் பார்க்கும் பார்வையாகவும்,அவன் பிடிக்கும் கையாகவும், அவன் நடக்கும் காலாகவும் நான் ஆவேன்.” -அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி). – புகாரி.
இந்த ஹதீஸ் குத்ஸியிலும் அல்லாஹ் செவிப்புலனிற்க்கே முன்னுரிமை கொடுத்திருப்பது கவனிக்கத்தக்கது.நபி(ஸல்) அவர்களின் துவாவிலும் செவிச்சிறப்பை காணலாம்.
“யா அல்லாஹ்! என்னை கடன் தொல்லை மற்றும் வறுமையிலிருந்தும் நீக்குவாயாக! எனது கேட்கும் திறனையும்,பார்க்கும் திறனையும் உன் வழியில் அதிகப்படுத்துவாயாக!”
அறிவிப்பவர்: யஹ்யா இபின் ஸாத் (ரலி) – மு அத்தா.
செவிப்புலன் ஏன் சிறப்பு பெறுகிறது, என்று ஆய்வு செய்தால் ஓர் உண்மை விளங்கும். பொதுவாக கண்களால் பார்க்கும் சக்தியை அல்லாஹ் எல்லா ஜீவராசிகளுக்கும் கொடுத்துள்ளான். ஆனால் செவி ஒன்றுதான் ஐந்தறிவு என்ற மிருக நிலையில் உள்ளவனை செவியால் மொழிகளைக்கேட்டு உள்ளத்துள் அனுப்பி நன்மை தீமைகளை பிரித்தறிந்து சுவனம் செல்லும் நேர்வழிக்கு துணையாக உள்ளது.
அறிவியல் ரீதியாகவே செவிப்புலனிற்கு பார்வையை விட அதி முக்கியத்துவம் உள்ளதை அறியலாம்.
அல்லாஹ் மனிதனை (காய்ந்தால் “கன்” “கன்”) என்று சப்தம் கொடுக்கக்கூடிய பிசுபிசுப்பான களிமண்ணால் படைத்திருக்கிறான். செவித்திறனுக்கு ஆதாரமான ஒலி அலைகளை எழுப்பும் (சப்தமிடும்) களிமண் நிலையிலேயே மனிதனை அல்லாஹ் படைத்திருக்கிறான்.
கரு வளர்ச்சி நிலையில் கர்ப்பத்தில் 13 வது வாரத்தில் செவி உருவாக ஆரம்பித்து 20 வது வாரத்தில் முழு வளர்ச்சி பெற்றுவிடுகிறது. கர்ப்பத்திலேயே கேட்கும் திறனை அடைந்துவிடுகிறது. தாயின் இதயத்துடிப்பு, இரத்த ஓட்டத்தின் ஒலிகளை சிசு கேட்கிறது. வெளி உலகில் தாய் பேசும் குரலையும் இசையையும் கர்ப்பத்திலுள்ள சிசு கேட்பதாக நவீன ஆய்வுகள் கூறுகின்றன.
அதேசமயம் பார்வைப்புலனான கண்கள் சிசு வளர்ச்சியின் 26 வது வாரத்திலேயே உருவாக ஆரம்பிக்கிறது.
இன்றைய நவீன அறிவியல் உண்மைகளை ஆயிரத்து நாநூறு ஆண்டுகளுக்குமுன்பே அல்லாஹ் கூறிவிட்டான்.நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்,
“கர்ப்பத்தில் இந்திரியம் சேர்ந்த நாற்பதாம் நாளுக்கு பிறகு, அல்லாஹ் மலக்கை அனுப்பி உருவத்தை கொடுக்கின்றான். பிறகு செவிப்புலனையும், பார்க்கும் புலனையும், தோல்,சதை, எலும்பையும் வளரச்செயகிறான். “ அறிவிப்பவர் :அப்துல்லாஹ் இப்ன் மஸ்வூத்(ரலி) –நூல்: முஸ்லிம்.
ஆக கண்ணுக்கு முன் உருவாகும் உறுப்பு செவிப்புலனே!
ஒளியின் வேகம்,ஒலியின் வேகத்தைவிட பலமடங்கு அதிகம். ஆனாலும் நமது செவியானது பார்வை ஒளி அலைகளை விட அதிகளவில் சுமார் மூன்று லட்சம் ஒலி அலைகளை மூளைக்கு அனுப்புகிறது.மூளையானது பார்வை ஒளி அலைகளைவிட ஓசை ஒலி அலைகளை ஆயிரக்கணக்கான மடங்கு அதி வேகத்தில் இனம் பிரித்து அடையாளம் காட்டுகிறது.
அல்லாஹ்வின் தூதர் அன்று கூறிய உண்மைகளை இன்றைய அறிவியல் உலகம் மெய்ப்பித்து வருகிறது. ஆக செவிபுலனே பார்வையைவிட எதிலும் முன் நிற்கிறது. மேலும் குழந்தை மண்ணில் பிறந்தவுடன் செயல்படும் முதல் உறுப்பு செவிதான். ஆம்! வெளி உலக சூழலை கேட்டு அதன் தாக்கத்தினால் குழந்தை கத்துகிறது. ஷைத்தான் கிள்ளி விடுவதாக நபி(ஸல்) கூறியிருக்கிறார்கள். குழந்தை கண்கள் திறந்து வெளி உலகைப்பார்ப்பது பின்புதான் கர்ப்பத்திலே செயல்பட்ட செவியானது குழந்தை பிறந்த பின்னர் இருபத்திநான்கு மணி நேரமும் தொடர்ந்து செயல் படுகிறது. தூங்கினாலும் காது விழிப்பாகவே இருக்கிறது. இரைச்சல் இருக்கும் இடத்தில் தூக்கம் வருவதில்லை. அலாரம் அடித்ததும் காது நம்மை விழிக்க வைக்கிறது. தூக்கத்திற்கும் செவிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
ஆனால் கண்கள் தொடர்ந்து செயல்படுவதில்லை. நாம் கண்ணை மூடி தூங்கிவிட்டால் அது செயல்படாது. சிலர் தூங்கும்போது கண்திறந்த நிலையில் இருந்தாலும் காட்சிகள் காணமாட்டா. மேலும் பார்ப்பதற்கு ஒளி வேண்டும் விழித்திருந்தாலும் இருட்டில் கண்ணால் காண முடியாது. குகைவாசிகளைப்பற்றி அல்லாஹ் கூறும்போது அவர்கள் முன்னூறு வருடங்களுக்குமேல் உறங்கியதாகவும்,.அப்படி உறங்குவதற்கு காது மடலை தட்டிக்கொடுத்ததாகவும் கூறுகின்றான். அதே சமயம் அவர்கள் கண் திறந்தநிலையில் உள்ளது. ஆனால் பார்வை செயல்படவில்லை.விழித்திருக்கும் செவியை மட்டும் தட்டிக்கொடுத்து அல்லாஹ் அமைதிப்படுத்துகின்றான். தூக்கத்தில் விழித்து அழும் குழந்தைகளை தாய்மார்கள் தட்டிக்கொடுத்து உறங்கவைப்பதை அனைவரும் அறிவோம்.
.”அக்குகையில் பலவருடங்கள் (நித்திரை) செய்யும்படி அவர்களுடைய காதுகளை தட்டிக்கொடுத்தோம்.”-அல்குர்ஆன்.18:11.
(அக்குகையிலுள்ள) அவர்கள் நித்திரை செய்துகொண்டிருந்தபோதிலும் அவர்கள் விழித்துக்கொண்டிருப்பதாகவே நீங்கள் எண்ணுவீர்கள்.” -அல்குர்ஆன்.18:18.
பிறந்த குழந்தை கண் விழித்து உலகத்தைப்பார்ப்பது அதிசயமோ அற்புதமோ அல்ல.ஆனால் பிறந்த குழந்தை, பேசுகிறவர்கள் பேச்சை செவியில் கேட்டு அதற்க்கு பதில் சொல்வதுதான் அற்புதம்.
மரியம் (அலை) அவர்கள் குழந்தையைப் பெற்று சுமந்து வந்தபோது மக்கள் அவரை நிந்தித்தனர்.அவர் குழந்தையிடம் பேசும்படி ஜாடை செய்தார். அதற்கவர்கள்.
“மடியிருக்ககூடிய குழந்தையிடம் நாங்கள் எவ்வாறு பேசுவோம்.” என்று கூறினார்கள். (இதனை செவியுற்ற அக்குழந்தை அவர்களை நோக்கிக்) கூறியதாவது: “நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடிமை அவன் எனக்கு வேதத்தைக்கொடுத்து நபியாகவும் என்னை ஆக்குவான்…….” -அல்குர்ஆன்.19:30.
ஈசா(அலை) அவர்கள் குழந்தையாக இருக்கும்போதே அவர்கள் செவியையும் பேச்சையும் அல்லாஹ் அற்புதமாக்கிவிட்டான்.
மண்ணறையிலும் செயல்படும் செவிப்புலன்கள்
மனிதன் இறந்து அவன் உயிர் உடலைவிட்டு பிரிந்து மேலே செல்லும் காட்சியை கடைசியாக பார்க்கும் உறுப்பு கண்கள்தான். ஆகவேதான் கண்கள் நிலைகுத்தி நிற்கின்றன என்று இறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினர். –அறிவிப்பவர்: உம்மு சலமா(ரலி). நூல்:முஸ்லிம்.
ஆனாலும்,ஜனாஸாவை தோளில் வைத்து தூக்கி செல்லும்போது, “அந்த ஜனாஸா நல்லறங்கள் புரிந்ததாக இருக்குமானால், என்னை விரைந்து கொண்டு செல்லுங்கள் என்று கூறும். அது நல்லறங்கள் புரியாததாக இருக்குமானால், கைசேதமே! என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள், என்று கூறும். இவ்வாறு கூறப்படும் சப்தத்தை மனிதனைத்தவிர அனைத்தும் செவியுறும்.மனிதன் அதை செவியுற்றால் மயங்கி விழுந்துவிடுவான்.” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினர். அறிவிப்பவர்:அபு சயீத் அல்குத்ரீ (ரலி) -புகாரி.
நபி(ஸல்) அவர்கள் கூறினர், “ஓர் அடியானது உடலைக் கப்ரில் அடக்கம் செய்துவிட்டு அவனுடைய தோழர்கள் திரும்பும்போது அவர்களின் செருப்பின் ஓசையை மய்யத் செவியுறும்….அவன் நிராகரிப்பவனாகவோ, நயவஞ்சகனாகவோ இருந்தால், இரும்பாலான சுத்தியால் இரண்டு காதுகளுக்குமிடையே ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்கள், ஜின்கள் தவிர மற்ற அனைத்தும் செவியேற்கும் அளவிற்கு அவன் கத்துவான்.” அறிவிப்பவர்: அனஸ் (ரலி) -புகாரி.
இறந்த உடல் தூக்கி செல்லும்போதும் அவன் பேசுகிறான். உடலை குழியில் வைத்து மண்ணைப்போட்டு மூடிய பிறகும் நடந்து செல்லும் காலடி ஓசையை அவன் செவி கேட்கிறது. அந்த கப்ரில் நடக்கும் வேதனை ஓலங்களை வெளியில் உள்ள மிருகங்கள் செவியுருகின்றன.
“பர்ஸாக்” என்னும் மறைவான நிலையிலும் செவிப்புலனானது மண்ணுக்கு உள்ளேயும் வெளியேயும் தொடர்பு சாதனமாக உள்ளது. இறந்த உடல் பேசுவதை கேட்கும் சக்தியை மனிதனை தவிர்த்த ஜீவராசிகளுக்கு அல்லாஹ் கொடுத்துள்ளான்.
மண்ணில் நடமாடும் மலக்குகளையும், ஜின் ஷைத்தான்களையும் பார்க்கக்கூடிய ஆற்றல மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் அல்லாஹ் கொடுத்துள்ளான்.
“சேவல் கூவுவதை கேட்டால் அது மலக்கை பார்த்துவிட்டது, கழுதை கத்துவதை கேட்டால் அது ஜின்னை பார்த்துவிட்டது”. என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :அபூ ஹுரைரா(ரலி௦). நூல்: புகாரி.
இருப்பினும் மண்ணுக்கு மேல் நடப்பவைகளையே ஜீவராசிகளின் கண்கள் பார்க்கின்றன. ஆனால் மண்ணுக்கு கீழே நடக்கும் சப்தங்களை அறியும் ஆற்றலை செவிப்புலனிற்கே அல்லாஹ் கொடுத்துள்ளான்.
20 HZ ஹெர்ட்ஸ் க்கு குறைந்த ஒலியலைகளை (Infrasonic) இன்ப்ரா சோனிக் என்றும் 20,000 ஹெர்ட்ஸ் க்கு மேல் உள்ள அதிர்வெண் ஒலியலைகளை (Ultrasonic) அல்ட்ரா சோனிக் என்றும் அழைக்கிறார்கள். மனிதர்களுக்கு கேட்கக்கூடிய ஒலி அளவு 20 Hz – 20,000 Hz .Frequency. இதற்க்கு மேலோ அல்லது கீழோ நம்மால் செவியேற்க்க முடியாது. சில மிருகங்கள் குறைந்த அதிர்வெண் ஒலிகளையும் செவியுற முடியும்.
உதாரணமாக யானைகள் மிகக்குறைந்த அதிர்வெண் ஒலியலைகளை 5 Hz—12,000 Hz கேட்கமுடியும். புறாவால் மிக மிக குறைந்த 1 Hz ஒலியலைகளையும் கேட்க முடியும். நாய் 50—45,000 Hz, பூனை 45—65,000 Hz அதிர்வெண் ஒலியலைகளை கேட்க முடியும்.
நிலநடுக்கம்,சுனாமி போன்ற பேரழிவு ஏற்படுவதற்கு முன்பு பூமிக்கு கீழ் உள்ள தட்டு நகரும் (Tectonic plate movement) மெல்லிய அதிர்வு (5 Hz—20Hz) அலைகளை மனிதர்களால் உணர்ந்து கொள்ள முடியாது. நவீன கருவிகளாலும் முன் அறிவிக்க முடியாது. பூகம்பம் நடந்த பின்னர் தான் அதன் தாக்கத்தை ரிக்டர் கருவி மூலம் அறியமுடியும்.
ஆனால் மற்ற ஜீவராசிகளுக்கு, பூமிக்கு கீழ் ஏற்படும் மாற்றங்களை முன்னரே உணரக்கூடிய செவியுணர்வை அல்லாஹ் கொடுத்துள்ளான். கடந்த சுனாமியின் போது ஏராளமான மக்கள் ஆபத்து வருவதை அறியாது இறந்தனர். இலங்கை, அந்தமான், இந்தோனேசிய கடலோர காடுகளில் வசிக்கும் மிருகங்கள், பறவைகள் ஒன்று கூட இறக்கவில்லை. காரணம் சுனாமி வருவதை அறிந்து அவை அனைத்தும் மேட்டுப்பாங்கான இடங்களுக்கு ஓடி விட்டன.
“நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மிருகங்களிளெல்லாம் மிக கெட்ட மிருகங்கள் நிராகரிப்பவர்கள்தாம்.”
“நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் கால் நடைகளில் மிகக்கேவலமானவை (எவைஎன்றால் சத்தியத்தை) அறிந்து கொள்ள முடியாத செவிடர்களும் ஊமையர்களும்தான். –அல் குர்ஆன்.8:55,8:22
மனிதனாக பிறந்தவன் நேர்வழியை புறக்கணித்து நிராகரிப்பவனாகி மிருக வாழ்க்கை வாழ்கிறான். அந்நிலையிலேயே மரணிக்கிறான். கப்ரில் மலக்குகள் வேதனை செய்யும்பொழுது அவன் எழுப்பும் மிருக ஓலங்களின் அதிர்வெண் ஒலியலைகள், (Frequency) சக மிருகங்கள் கேட்டு உணரும் வகையில் இருப்பதால் அவைகள் செவியுருகின்றன. மனிதர்களால் செவியேற்க இயலாத பூமித்தட்டு நகர்வுகளின் மெல்லிய பூகம்ப சப்தத்தை மிருகங்கள் கேட்பதுபோல் மண்ணறையில் நடக்கும் மனித மிருகங்களின் வேதனைக் குரல்களையும் மண்ணுக்குமேல் உள்ள விலங்குகள் செவியுகின்றன. நல்லடியார்களுக்கு வேதனை இல்லை,அவர்கள் ஆழ்ந்து உறங்குகிறார்கள். அல்லாஹ் அறிந்தவன்!
இரண்டு கண்கள் ஒரே செவி
அனைவருக்கும் இரண்டு கண்கள், இரண்டு காதுகள் உள்ளன. அல்லாஹ் குர் ஆனில் கண்ணைப்பற்றி குறிப்பிடும்போது பன்மையில் கண்கள் என்கிறான். ஆனால் காதைப்பற்றி கூறும்போது காதுகள் என்று பன்மையில் கூறாமல் காது,செவி என்று ஒருமையிலேயே அழைக்கிறான்.
“அல்லாஹ் உங்களுடைய செவிப்புலனையும், பார்வைகளையும் பறித்துவிட்டு ……” அல்குர்ஆன்.6:46
“அவர்களுக்கு செவிப்புலனையும், பார்வைகளையும், உள்ளத்தையும் கொடுத்தோம்.”அல்குர்ஆன்.46:26.
இரண்டு காதுகள் இருப்பதால் இரு வெவ்வேறு ஒலிகளை கேட்பதற்காக அல்ல. ஒலி எங்கிருந்து வருகிறது என்று மூளை கணித்து அதன்பக்கம் கவனம் செலுத்தவே இரு காதுகள்.
இரு காதுகளிலும் ஒலி அலைகள் நுழைந்தாலும், எந்தப்பக்கம் உள்ள காது ஒலிக்கு அருகில் உள்ளதோ, அது முதலில் ஒலி அலைகளை மூளைக்கு அனுப்பும். மறு பக்கம் உள்ள காது அடுத்ததாக அனுப்பும். இரு காதுகளில் இருந்து வந்த ஒலியின் முன் பின் நேரத்தை மூளை கணக்கிட்டு, ஒலி வந்த திசையை நோக்கி திரும்ப கட்டளையிடும். ஆக ஒலி வரும் இடத்தை மூளை அறிந்து கட்டளை இடைவே இரு காதுகள்.
ஆனால் நமது இரு கண்களும் ஒரே நேரத்தில் பல காட்சிகளை தொடர்ச்சியாக பார்த்துக்கொண்டிருக்க முடியும். உதாரணமாக, ஒரு பொதுக்கூட்டத்தில் ஒருவர் பேசுவதை இரண்டு காதுகளும் கூர்ந்து கேட்டுக்கொண்டிருக்கும். அதே நேரத்தில் அவரது அலைபாயும் கண்கள் அக்கூட்டத்திற்கு வந்திருந்தவர்களை நோட்டமிடும். அலைபாயும் கண்கள் (Saccades) வினாடிக்கு 30-70 தடவை பல காட்சிகளை படம் பிடித்துக்கொண்டிருக்கும். கண்களை பன்மையாகவும்,செவியை ஒருமையாகவும் குர் ஆன் குறிப்பிடுவதற்கு இதை விட வேறு பல காரணங்களும் இருக்கலாம். அல்லாஹ் அறிந்தவன்!
களிமண்-கர்ப்பம்-உலகம்-மண்ணறை –மஹ்ஷர்-சுவனம்-நரகம்
காய்ந்தால் சப்தமிடும் களிமண்ணில் உருவான மனிதன், பெண்ணின் கர்ப்ப அறையில் சிசுவிலே செவியேற்று, மண்ணுலகில் பிறந்தபின்பு இறக்கும்வரை செயல்புரிந்து, இறந்த பின்பும் மண்ணறையில் செவியேற்று, இறுதி நாள் மஹ்ஷர் வரை காத்திருந்து சூர் ஊதப்பட்டதும் கபுராளிகளை எழுப்பி விடுவதும்,இறுதியில் நிரந்தர தங்குமிடம்வரை சென்று செயல்படுவதும் செவிப்புலனே!
“சூர்” ஊதப்பட்டால் உடனே அவர்கள் சமாதிகளிளிருந்து வெளிப்பட்டுத் தங்கள் இறைவனிடம் விரைவாக வருவார்கள். அன்றி “ எங்களுடைய துக்கமே! எங்களை நித்திரையில் இருந்து எழுப்பியவர் யார்? என்று கேட்பார்கள்.” -அல்குர்ஆன்.36:51,52.
“நீங்கள் செவிமடுத்து கேளுங்கள் (சமாதிகளின்)சமீபத்திலிருந்து (கொண்டு) மரணித்தவர்களே! எழும்புங்கள் என்று அழைப்பவர் அழைக்கும் நாளில் பெரும் சப்தத்தை அவர்கள் மெய்யாகவே கேட்பார்கள். அதுதான் சமாதியிலிருந்து வெளிப்படும் நாள்.” -அல்குர்ஆன்.50:42
உயிப்பித்தல் நிகழ்ச்சியை அல்லாஹ் ஓர் உதாரணம் மூலம் இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு காட்டுகிறான். “ நான்கு பறவைகளைப் பிடித்து பழக்கி, பின்னர் அவைகளை துண்டு துண்டாக்கி அவற்றில் ஒவ்வொரு பாகத்தை ஒவ்வொரு மலையின் மீதும் வைத்து விட்டு பின்பு அவைகளை நீங்கள் கூப்பிடுங்கள்.அவை உங்களிடம் பறந்து வந்து சேரும்.” -அல்குர்ஆன். 2:260.
நன்கு பழக்கிய பறவைகளை மாமிச துண்டாக்கி நான்கு மலையில் வைத்து அழைத்தபோது அவை செவி ஏற்று பறந்து வந்ததுபோல், மண்ணறை மனிதர்களும் சூர் ஒலி செவியேற்று எழும்புகின்றனர்.
மஹ்ஷரை நோக்கி நடக்கும்போது அணைத்து சப்தங்களும் அடங்கி விடுகின்றன. ஆனால் அவர்கள் காலடி ஓசை மட்டும் கேட்கின்றது..
“அந்நாளில் அழைப்பவனின் சப்தத்தையே பின்பற்றி செல்வார்கள். அதில் தவறு ஏற்படாது. ரஹ்மானுக்குப்பயந்து எல்லா சப்தங்களும் தணிந்து விடும். (மெதுவான அவர்களின்) காலடி சப்தத்தை தவிர (வேறு எதனையும்) நீங்கள் கேட்க மாட்டீர்கள்.” அல்குர்ஆன்.20:108
மஹ்ஷர் மைதானத்திற்கு அவர்கள், செவிப்புலன் சப்தத்தை பின்பற்றியே செல்வார்கள். “அதில் தவறு ஒன்றும் ஏற்படாது” என்றும் அல்லாஹ் கூறுகிறான். மறுமை நாளில் அநேகரை குருடனாக எழுப்புவதாக அல்லாஹ் கூறுகிறான். உலகில் பார்வை உள்ளவனாக இருந்தேனே என்று கேட்பார்கள், அதற்கு அல்லாஹ்,
“இவ்வாறே நம் வசனங்கள் உம்மிடம் வந்தன, (குருடனைப்போல் உன் காரியங்கள் இருந்தன) நீ அவைகளை மறந்து விட்டாய்.அவ்வாறே இன்றைய தினம் நீயும் மறக்கப்பட்டு விட்டாய்!” என்று கூறுவான். அல் குஆன். 20:106.
அல்லாஹ் இவர்களின் பார்வைப்புலனை பறித்தாலும் செவிப்புலனை எடுப்பதில்லை.காரணம், நரகத்தின் சப்தத்தை பாவிகளான நரகவாசிகள் கேட்பதற்கே!
“எவர்கள் விசாரணை காலத்தை பொய்யாக்குகிறார்களோ, அவர்களுக்கு கடுமையான பற்றி எரியும் நரகத்தைதான் நாம் தயார்படுத்தி வைத்திருக்கின்றோம். அது இவர்களை கண்ட மாத்திரத்தில் சப்தமிட்டு ஆர்ப்பரிப்பதை இவர்கள் வெகு தூரத்திலிருந்தே செவிமடுத்துக்கொள்வார்கள்.” -அல் குர்ஆன்.25:12.
சுவனவாசிகளான நல்லடியார்களும் சுபசோபன நற்செய்தியை சுவனத்தில் கேட்பார்கள்.
(அந்நாளில்) “இறை அச்சமுடையவர்களுக்கு சுவனபதி மிக்க சமீபமாக கொண்டு வரப்படும்.” -50:31
“ பூமியில் நீங்கள் செய்துகொண்டிருந்த (நன்மையான) காரியங்களின் காரணமாகவே இந்த சுவனபதிக்கு நீங்கள் வாரிசாக ஆக்கப்பட்டுள்ளீர்கள்.” என்ற சப்தத்தை அவர்கள் கேட்பார்கள்.” –அல் குர்ஆன். 7:43.
செல்போன் ஷைத்தான்
அன்புச்சகோதர,சகோதரிகளே! அல்லாஹ் அளித்த மிகச்சிறப்பு வாய்ந்த செவிச்செல்வத்தை நாம் எப்படி பயன் படுத்துகிறோம்? சற்று சிந்திப்போமா! பகல் பொழுது முழுவதும் வீணாய்ப்போன ஒலி,ஒளி சினிமாப்பாடல்களே நம் காதை அடைக்கிறது. எப் எம் ரேடியோக்கள் காதை தின்று தீர்க்கின்றன. மிச்ச சொச்ச நேரத்தில் பாழாய்ப்போன செல்போன் வெட்டி அரட்டையில் காதை மந்தமாக்கி வருகின்றோம்.
“ஒரு ஆணும் பெண்ணும் தனித்திருக்கும்போது மூன்றாவதாக அங்கு ஷைத்தான் இருக்கின்றான்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆம்! இன்று ஆணும், பெண்ணும், இளைஞனும், இளைஞியும் மாணவனும் மாணவியும் ஓரிடத்தில் ஒன்றாக இல்லாமல் தனித்தனியாகவே இருக்கின்றனர். மூன்றாவதான செல்போன் ஷைத்தான் இவர்களை ஒன்றிணைத்து பின்னி பிணைத்து விடுகிறான்.
விடிய விடிய பேசுகிறார்கள், பேசுகிறார்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஆம்! பேசக்கூடாததை பேசியே நாசமாய் போகிறார்கள். இவர்கள் வாயும் காதும் விபச்சாரம் செய்யவிட்டு ஷைத்தான் வேடிக்கை பார்த்து வாடிக்கை பிடிக்கின்றான். இவர்கள் ஒரு கட்டத்தில் தனிமையில் சந்திக்க வாய்ப்பு கிட்டும்போது இன உறுப்பு விபச்சாரத்தை உண்மையாக்கி விடும். செல் ஷைத்தான் நரகிற்கு செல்ல வைத்து விடுவான்.
இன்னும் சில சகோதரர்களுக்கு, இரவில் படுக்கும்போது ஹெட்போன் காதில் வைத்து பாட்டு கேட்டால்தான் உறக்கம் வரும். பெரும்பாலோர், நடு இரவுவரை தொல்லை காட்சியை பார்த்துவிட்டுத்தான் படுப்பார்கள். பஜ்ரு தொழுகைக்கு எழ விடாமல் ஷைத்தான் காதை தட்டிக்கொடுத்து தூங்கச்செய்வான்.
நபி(ஸல்)அவர்களிடம், ஒருவர் விடியும் வரை தூங்கிகிக்கொண்டே இருக்கிறார். தொழுகைக்கு எழுவதில்லை என்று கூறப்பட்டது. அதற்க்கு நபி(ஸல்) அவர்கள், “ ஷைத்தான் அவர் காதில் சிறுநீர் கழித்து விட்டான்.” என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ்(ரலி) நூல்: புகாரி.
அருட்பெரும் செல்வமான செவிச்செல்வத்தை ஷைத்தான் சிறுநீர் கழிக்கும் கழிப்பறையாக்கிய பிறகு அதில் ஏதேனும் நற்செய்திகள் நுழைய முடியுமா? இறுதியில் அந்த காது நரகின் ஆர்ப்பரிக்கும் இரைச்லையே கேட்கும். அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!
நாம் கருவறையில் சிசுவாக இருந்தபோது செவியுற்ற நமது காதுகள், ஒலிமயமான இவ்வுலகில் உரையாட துணை நின்றது. மண்ணறையிலிருந்து மஹ்ஷர் வரை உதவப்போகிறது. இன்ஷா அல்லாஹ்! சுவனத்தின் சுபசோபன நற்செய்தியை கேட்பதற்கு நாம் நல் அமல் செய்வோம்! நற்செய்தியை கேட்போம்!
“அவனுடைய வசனங்களுக்கு செவி சாய்க்கும் மக்களுக்கு நிச்சயமாய் இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. “ —அல்குர்ஆன். 11:67
எஸ்.ஹலரத் அலி –ஜித்தா
{ 3 comments… read them below or add one }
masha allah very nice and important concept for nowadays yungsters expecting meny more hadeese like this
ALHAMDULILLAH,THIS ARTICLE VERY USEFUL TO ME AND ITS GIVEN TO ME A DIFFERENT TYPES OF THOUGHTS.JAZAKALLAH KHAIRAN..
Alhamdulillah ! This Article is very big, But each and every line has it’s own value. Very very useful to everyone, especially youngsters. There are so many things in Quran we were not able to think deeply & understand Allah’s words (Allahu Akbar – He only knows each and every thing). It makes me to think deeply on every verse in Quran. Jazakallahu hairen.