நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சுவனபதியின் பக்கமும் விரைந்து செல்லுங்கள்; அதன் அகலம் வானங்கள், பூமியைப் போலுள்ளது; அது பயபக்தியுடையோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது. அல்குர்ஆன் 3:133
இவ்வுலகில் வாழ்கின்ற நல்லடியார்கள் சுவனபதியை அடைவதற்காக பெரும் முயற்சி எடுக்கின்றனர். மார்க்க வழிபாடுகளுக்கு சம்பந்தமே இல்லாமல் வாழ்ந்து வருபவர்களின் உள்ளத்திலும் இந்த சுவனபதியை அடைய வேண்டும் என்ற ஆசையோடு வாழ்வதை நாம் காண முடிகிறது. உயர்வான இச்சுவனபதி வாழ்க்கையை அது ஒரு பிளாட்பார சரக்கு போன்று சாதாரணமாக எண்ணி வாழ்பவர்களை நாம் அதிகமாக காண முடிகிறது. இந்த உயர்வான வாழ்க்கையை அடைய வேண்டுமென்றால் அதற்காக நம்மை தயார் செய்ய வேண்டும்.
சுவர்க்க வாழ்வு
என்னுடைய நல்லடியார்களுக்கு எந்தத் கண்ணும் கண்டிராத, எந்தக் காதும் செவியுறாத, எந்த மனிதனின் உள்ளத்திலும் தோன்றிடாதவை எல்லாம் நான் தயாரித்து வைத்துள்ளேன் என்று அல்லாஹ் கூறியதாக நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
‘ஆகவே, அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிற்கு கூலியாக அவர்களுக்கு (தயாரித்து) மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கண்களின் குளிர்ச்சியை எந்தவொரு ஆத்மாவும் அறியாது’ என்ற 32:17 வசனத்தையும் ஓதினார்கள். (அபூஹுரைரா (ரழி), புகாரி,முஸ்லிம், திர்மிதி)
நோய், மரணம், முதுமை, பீடைகள் இல்லாத வாழ்வு
சுவர்க்கத்திற்குறியவர்கள் சுவர்க்கத்தின் உள்ளே புகுந்துவிட்டால், “நீங்கள் ஆரோக்கியத்தோடு வாழ்வதையே உங்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் எப்போதும் இனி நோயுறமாட்டீர்கள். நீங்கள் நிரந்தரமாக ஜீவித்திருப்பதையே உங்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே நீங்கள் எப்போதும் மரணிக்கவே மாட்டீர்கள்; நீங்கள் இளமையாக இருப்பீர்கள் என்பதை உங்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் எப்போதும் இனி முதுமையை அடையமாட்டீர்கள். நீங்கள் பாக்கியங்கள் பெற்று சுகமாக வாழ்வதையே உங்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் எப்போதும் இனி பீடை பிடித்தவர்களாக ஆக மாட்டீர்கள்; என்று அழைப்பாளர் ஒருவர் அழைத்துக் கூறுவார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா (ரழி), திர்மிதி)
சுவர்க்க வாயில்கள்
நிச்சயமாக சுவர்க்கத்திற்கு எட்டு வாயில்கள் உண்டு. எவர் தொழுகையாளியாக இருந்தாரோ அவர் தொழுகை வாயினிலிருந்து அழைக்கப்படுவார். எவர் நோன்பாளியாக இருந்தாரோ அவர் நோன்புடைய வாயினிலிருந்து அழைக்கப்படுவார். எவர் தர்மம் செய்பவராக இருந்தாரோ அவர் தர்மத்துடைய வாயினிலிருந்து அழைக்கப்படுவார் என்று கூறியதும், ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே! இந்த எட்டு வாயில்களிலிருந்தும் எவராவது அழைக்கப்படுவாரா? என்று அபூபக்கர்(ரழி) கேட்டார்கள்; ‘ஆம்’ அவர்களில் நீரும் இருக்க ஆசிக்கின்றேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹ்லுப்னு ஸஅத்(ரழி) புகாரி, முஸ்லிம், அஹ்மத், இப்னு மாஜ்ஜா)
“நான் நபிமார்களை பின்பற்றுவோர்களை அதிகமாகக் கொண்டவன்; சுவர்க்க வாசலை தட்டுவோரில் நானே முதன்மையானவன்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
சுவர்க்கவாசிகளின் இதயங்கள்
பாவங்கள், விரோதங்கள், பொறாமைகள் போன்ற அனைத்து கெட்டவைகளும் நீங்கிய இதயங்களாக இருப்பார்கள்.
“விசுவாசங்கொண்டு, நற்காரியங்கள் செய்து சுவர்க்கத்தில் நுழைந்துவிட்ட அவர்களின் நெஞ்சங்களிலிருந்து குரோதத்தை நாம் நீக்கி விடுவோம்” என்ற இறை வசனத்தின்படி பரிசுத்தமான நெஞ்சங்கள் கொண்டவர்களாக இருப்பார்கள். அல்குர்ஆன் 7:43, 15:47
சுவர்க்கம் புகும் முதல் கூட்டத்தின் நிலை
சுவர்க்கம் புகும் முதல் கூட்டத்தினர் பவுர்ணமி இரவில் உள்ள முழு நிலவு போன்று இருப்பார்கள். அவர்களுக்கு அடுத்தவர்கள் வானத்தில் ஒளிவீசிக் கொண்டிருக்கும் நட்சத்திரம் போன்று இருப்பார்கள். அதற்கு பின்னால் அங்கே பல படித்தரங்கள் உண்டு. மலம் கழிக்கமாட்டார்கள். சிறுநீர் கழிக்கமாட்டார்கள். மூக்குச்சளி சிந்த மாட்டார்கள்; எச்சில் துப்பமாட்டார்கள்; அவர்களுக்கு சீப்பு தங்கத்தினால் ஆனதாகும். அவர்களின் வியர்வை கஸ்தூரி மணமாகும். அவர்களுடைய குணங்கள் ஒரே மனிதருக்குள்ள குணத்தைப் போன்று (ஒரே) நிலையில் இருக்கும். அவர்களுடைய பிதா ஆதமுடைய உடல், உயரம் போன்று அறுபது முழத்தில் இருப்பார்கள். அவர்களுக்கிடையே கோபதாபங்களோ, குரோதங்களோ இருக்காது காலை, மாலை நேரங்களில் அல்லாஹ்வை போற்றி புகழ்ந்து கொண்டிருப்பார்கள். (அபூஹுரைரா (ரழி), புகாரி, முஸ்லிம், திர்மிதி
சுவர்க்கவாசிகளின் வரவேற்பு வார்த்தை
அச்(சுவனத்தில்) வீண் வார்த்தைகளையோ, பொய்யையோ செவியுறமாட்டார்கள்; ‘ஸலாமுன்’ (உங்கள் மீது சாந்தி உண்டாவதாக) என்ற வார்த்தையை தவிர அதில் அவர்களுடைய முகமன் வார்த்தை ‘ஸலாமுன்’ என்பதாகும். அல்குர்ஆன் 78:35, 10:10
சுவர்க்கத்து தோட்டங்கள், ஆறுகள், நீரூற்றுகள்
அல்லாஹ்வை பயந்து வாழ்ந்த நல்லடியார்கள் தோட்டங்களிலும், நீரூற்றுகளிலும் இருப்பார்கள். ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவர்க்கத்தில் இருப்பார்கள் என்று அல்லாஹ் பல இடங்களில் கூறுகிறான்.
பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள சுவர்க்கத்தின் உதாரணமாவது; அதில் மாறுபடாத தெளிந்த நீரைக் கொண்ட ஆறுகளும், தன் சுவை மாறாத பாலாறுகளும், அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மது ரச ஆறுகளும், தெளிவான தேன் ஆறுகளும் இருக்கின்றன; இன்னும், அதில் அவர்களுக்கு எல்லா விதமான கனிவகைகளும் தங்கள் இறைவனின் மன்னிப்பும் உண்டு. அல்குர்ஆன் 47:15
சுவனத்தில் இறைவனைக் காணும் பாக்கியம்
சுவர்க்கவாசிகள் சுவர்க்கம் புகுந்துவிடுவார்களானால் உங்களுக்கு இன்னும் அதிகமான ஒன்றை நீங்கள் நாடுகிறீர்களா என்று அல்லாஹ் கேட்பான். இரட்சகனே! நீ எங்களின் முகங்களை வென்மையாக்கவில்லையா? நீ எங்களை சுவர்க்கத்தில் நுழைவித்து நரகத்தைவிட்டும் எங்களை நீ காப்பாற்றவில்லையா? (இதைவிட வேறு எங்களுக்கு என்ன வேண்டும்) என்று சொல்வார்கள். திரை அகற்றப்படும் தங்கள் இரட்சகனை காண்பதைவிட வேறொரு பிரியமான பொருளை அவர்கள் கொடுக்கப்பட மாட்டார்கள் என்று ரஸூலுல்லாஹ் கூறினார்கள். (ஸுஹைபு (ரழி), முஸ்லிம், திர்மிதி)
மறுமையில் பவுர்ணமி இரவன்று சந்திரனை நீங்கள் பார்ப்பதைப் போன்று நீங்கள் உங்கள் இரட்சகனை பார்ப்பீர்கள் என்று அல்லாஹ்வின் திருத்தூதர் சொன்னார்கள். ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி)
அல்லாஹ் நம்மை சுவர்க்கத்து வாசிகளாகவும் அவனைக் கண்டு மனமகிழ்வு பெருவோரிலும் ஆக்கி அருள் செய்வானாக! ஆமீன்.
அப்துஸ்ஸமது மதனி
{ 1 comment… read it below or add one }
அல்லாஹ் நம்மை சுவர்க்கத்து வாசிகளாகவும் அவனைக் கண்டு மனமகிழ்வு பெருவோரிலும் ஆக்கி அருள் செய்வானாக! ஆமீன்.